Rolex 40

40

மறுநாள் அதிகாலைப் பொழுது. வழக்கமான இரைச்சலோடு விடிந்தாலும், ரோலக்ஸிற்கு அந்த விடியல் ஏதோ ஒருவிதமான பாரத்தை சுமந்து வந்திருந்தது. கடற்கரையோரத்து குளிர்ந்த காற்று ஜன்னல் திரைகளை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தது. ஜன்னல் வழியே நுழைந்த சூரிய ஒளி அவன் முகத்தில் பட, அவன் திடுக்கிட்டு எழுந்தான். அவனது கண்கள் இன்னும் அந்தத் தந்தி கருவியின் சிக்னல் ஒளியைத்தான் தேடிக்கொண்டிருந்தன. இரவு முழுவதும் உறக்கமில்லாமல் தவித்த அவனது கண்கள் சிவந்து, அடிவயிற்றில் ஒரு பயங்கரமான நடுக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.

அந்த மைக்ரோ-டிரான்ஸ்மிட்டரில் அவன் அனுப்பிய செய்தி, கடலுக்கு அப்பால் அலெக்ஸின் தந்தையைச் சென்றடைந்திருக்குமா? அல்லது அந்தச் செய்தி பாதையிலேயே எங்காவது சிதைந்து போயிருக்குமா? இந்த கேள்விகள் ஒரு விஷப்பாம்பைப் போல அவனது மூளையைக் கொத்திக் கொண்டிருந்தன. காலக் கணக்குகளைத் துல்லியமாகப் போடும் ரோலக்ஸின் கண்கள், முதன்முறையாக ஒரு பதற்றத்தை வெளிப்படுத்தின.

அறையில் ஏதோ ஒரு பதற்றம் நிலவ, ரோலக்ஸ் தனது உடைகளை மாற்றிக் கொண்டு, விறுவிறுவெனத் தயாராகத் தொடங்கினான். அவனது ஒவ்வொரு அசைவிலும் ஒருவிதமான அவசரம் இருந்தது. துப்பாக்கியை இடுப்பில் செருகும் போதும், கத்தியின் கூர்மையைச் சரிபார்க்கும் போதும் அவனது கைகள் வழக்கத்திற்கு மாறான வேகத்தில் இயங்கின. அவனது வேகத்தைக் கவனித்த மயூரா, அவன் அருகே வந்தவளது கண்களில் அக்கறை அலைமோதியது.

அவனைத் தடுத்து நிறுத்திய மயூரா, “என்ன ரோலக்ஸ்? இன்னும் ஏன் இந்த முகத்துல ஒரு பதற்றம்? நேத்து இரவு அந்தப் பழைய போஸ்ட்மேன் தாத்தா கிட்ட போய், அந்த சிக்னலை அனுப்பியாச்சு. நீ சொன்ன மாதிரியே அலெக்ஸ் தந்தை கிட்ட விஷயம் போயிருக்கும்னு நீதானே சொன்ன?” என்று சைகையில் கேட்டாள். அவளது கைகளின் அசைவில் நேற்றைய இரவின் நீட்சியும், அவனது திட்டத்தின் மீதான நம்பிக்கையும் கலந்திருந்தது.

அவளை ஏறிட்டு பார்த்த ரோலக்ஸ்ன் கண்களில் ஒருவிதமான இருள் படர்ந்திருந்தது. அவன் மெதுவாக மயூராவிnபக்கம் திரும்பியவன், சைகையிலே, “மயூரா, எல்லாமே சரியா தான் செய்திருக்கோம். ஆனா, என் உள்ளுணர்வு ஏதோ சரியா இல்லை. ஏதோ ஒன்று இடிக்குது, ஏதோ ஒன்று நடக்கக்கூடாதது நடந்துவிட்டது போல என் இதயம் துடிக்க்குது, ஒரு ஊமைப் பையனின் தவிப்பு, அந்தச் சிக்னல் வழியே இன்னும் என் காதுகளில் ஒலிப்பது போல இருக்கு மயூரா. அந்தத் தந்தி ஒலியின் ஒவ்வொரு புள்ளியும், கோடும் அவனது மரண பயத்தின் குரலாக எனக்குக் கேட்கிறது” என்றான்.

மயூரா அவனது தவிப்பை உணர்ந்தாள். ரோலக்ஸ் என்ற மனிதனுக்குள் இருக்கும் இந்த மென்மையான, பாதுகாக்கும் குணம் அவளுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. அவள் சமையலறைக்குச் சென்று, சூடான காப்பியை ஒரு கோப்பையில் ஊற்றி அவனிடம் நீட்டினாள். அந்தக் காப்பியின் மணம் அந்த அறையில் பரவியது. அவள் அவன் தோள்களில் கையை வைத்து, மென்மையாக அவனைப் பார்த்தாள். அவளது ஸ்பரிசம் அவனுக்கு ஒரு சிறு ஆறுதலைத் தந்தது. அந்தப் பெருங்கடலின் சுழலுக்கு நடுவே அகப்பட்டுக் கொண்டவனுக்கு, அவளது தொடுதல் ஒரு நங்கூரத்தைப் போலச் செயல்பட்டது.

“ரோலக்ஸ், நீ தேவையில்லாமல் குழம்பாதே. நீ உன்னால் முடிந்த வரை போராடிட்ட, அலெக்ஸ் தந்தை அவனைத் தேடி வர வாய்ப்பிருக்கு. நீ எதற்கும் ஒருமுறை அந்த இடத்திற்குப் போய் அவனைப் பார்த்துவிட்டு வா. அவன் பத்திரமாக இருக்கிறானா என்று தெரிந்தால், உன் மனதிற்கு ஒரு நிம்மதி கிடைக்கும்” என்றாள்.

மயூரா சொன்ன அந்த நிம்மதி என்ற வார்த்தைக்காகவே ரோலக்ஸ் ஏங்கினான். அவன் மயூராவிடம் விடைபெற்று, விறுவிறுவென வீட்டை விட்டு வெளியேறினான். அவனது பைக் ஸ்டார்ட் ஆகும் சத்தம் அந்த அதிகாலைப் பொழுதின் அமைதியைக் கிழித்தது. பைக் அந்த காலை கடல் காற்றை சீறிக் கொன்று ஒரு புயலைப் போலச் சென்றது. சாலையின் இருபுறமும் இருந்த மரங்கள் பின்னோக்கி ஓட, அவனது மனமும் நேற்று நடந்த சம்பவங்களை நோக்கி ஓடியது.

ரோலக்ஸின் பைக் துறைமுகத்தின் ஒதுக்குப்புறமான பாபியின் அந்தப் பழைய குடோனை நோக்கிப் பறந்தது. அந்த இடம் ஒரு இடுகாட்டைப் போலக் கொடூரமான அமைதியுடன் இருந்தது. எப்போதும் அடியாட்களின் சத்தமும், கடத்தல் பொருட்களின் வரத்துமாக இருக்கும் அந்தப் பகுதி, இன்று அமானுஷ்யமான மௌனத்தில் மூழ்கியிருந்தது. கடல் அலைகளின் ஓசை கூட, ஏதோ ஒரு மரண ஓலத்தைப் போல அவனுக்குத் தோன்றியது. பாபியின் ஆட்கள் நடமாட்டம் இருக்கிறதா என்று ரோலக்ஸ் சுற்றும் முற்றும் பார்த்தான். எங்கும் யாரும் இல்லை. இதுவே அவனுக்கு இன்னும் சந்தேகத்தைக் கொடுத்தது. ஒரு வேட்டைக்காரன் தன் இரையைத் தேடி வரும்போது இருக்கும் அமைதி அது.

அவன் மறைவாகத் தன் பைக்கை நிறுத்திவிட்டு, முந்தைய நாள் பாபி கொடுத்த அந்த வெள்ளை துப்பாக்கியை சரிபார்த்துக் கொண்டு, அந்தப் பழைய கட்டடத்திற்குள் மெதுவாக நுழைந்தான். சுவர்களில் இருந்த துருப்பிடித்த இரும்புத் தகடுகள் காற்றில் அசைந்து எழுப்பிய சத்தம் அவனது எச்சரிக்கை உணர்வை அதிகரித்தது.

“அலெக்ஸ்… நான் வந்துவிட்டேன். உன் தந்தை உன்னைத் தேடி வந்துவிடுவார். நீ பயப்படாதே!” என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டு அவன் அந்தப் பழைய கட்டடத்திற்குள் நுழைந்தான்.

ஆனால், உள்ளே நுழைந்த அடுத்த விநாடி ரோலக்ஸின் கண்கள் விரிந்தன. அவன் கண்ட காட்சி அவனைச் சிலையாக மாற்றியது. நேற்றுவரை அலெக்ஸ் கட்டிப்போடப்பட்டிருந்த அந்த நாற்காலி காலியாக இருந்தது. அந்த சங்கிலிகள் மட்டும் தரையில் கிடந்தன. அதுவும் சாதாரணமாகக் கிடக்கவில்லை, ஏதோ ஒரு பெரும் வன்முறை நடந்ததற்கான ஆதாரமாகச் சிதறிக் கிடந்தன. நாற்காலியின் மரக்கால்கள் உடைந்திருந்தன, சுவர்களில் கைகளின் நகக் கீறல்கள் படிந்திருந்தன.

தரையெங்கும் அடர் சிவப்பு நிறத்தில் இரத்தம் காய்ந்து கிடந்தது. அந்த இரத்தக் கறைகள் பார்ப்பதற்கே மிரட்டலாக இருந்தன. ஒரு அப்பாவி உயிரின் இறுதி மூச்சு அந்த அறையின் காற்றில் இன்னும் கலந்திருப்பது போல் ரோலக்ஸ் உணர்ந்தான்.

அவன் தரையில் மண்டியிட்டு, அந்த இரத்தத்தைத் தொட்டுப் பார்த்தான். அது இன்னும் முற்றிலும் காய்ந்திருக்கவில்லை. அது அவன் கைகளில் சூடாகப் படிந்தது. இது அலெக்ஸின் ரத்தமா? பாபியின் ஆட்கள் அவனை எங்கே கொண்டு சென்றிருப்பார்கள்? அவனது கைவிரல்களில் ஒட்டிய ரத்தம் அவனது ஆன்மாவையே உலுக்கியது.

“இல்லை! இது நடக்க வாய்ப்பில்லை!” என்று அவன் மனதிற்குள் கத்தினான்.

அலெக்ஸ் எங்கிருக்கிறான்? பாபியின் ஆட்கள் அவனை எங்கே கொண்டு சென்றார்கள்? இந்த ரத்தம் யாரினுடையது? அவனது இதயம் வேகமாகக் துடிக்கத் தொடங்கியது. நேற்று இரவு அனுப்பிய அந்த சிக்னல், ஏதோ ஒரு விபரீதத்தைத் தூண்டிவிட்டிருக்கிறதா? அவனது தலை சுழன்றது. பாபியின் கொடுங்கோன்மை இப்போது ஒரு எல்லை மீறிய வன்முறையாக மாறியிருப்பதை அவன் உணர்ந்தான்.

“அலெக்ஸ்! நீ எங்கே இருக்கிறாய்? உன்னைத் தேடித் தந்தி அனுப்பியவன், இன்று உன்னை மீட்க வருவேன்!” என்று ரோலக்ஸ் தனது உள்ளத்திற்குள் கர்ஜித்தான்.

அவன் அந்தச் சங்கிலியை எடுத்தான். அது வெறும் சங்கிலி அல்ல, அது பாபி என்ற மாஃபியாவின் கொடுங்கோன்மையின் சின்னம். ரோலக்ஸ் அந்தச் சங்கிலியை இறுக்கிப் பிடித்துக்கொண்டான். இப்போதைக்கு அவன் இலக்கு ஒன்றுதான், அலெக்ஸை மீட்டெடுக்க வேண்டும் அல்லது அந்த இடத்தையே சுடுகாடாக்க வேண்டும். அவனது நரம்புகளில் ரத்தம் உஷ்ணமாக உறைந்தது.

அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல், பைத்தியம் பிடித்தவனைப் போல ரோலக்ஸ் அந்த இடத்தை விட்டு வெளியே வந்தபோது, அவனது கண்கள் சிவந்து போயிருந்தன. அவனது மூச்சுக்காற்று ஒரு நாகப்பாம்பின் சீறலைப் போல வெளிவந்தது.

அங்கே எதிரே பைரவன் அவசரமாக வந்து கொண்டிருந்தான். ரோலக்ஸைப் பார்த்ததும் பைரவன் நின்றான். அவனது முகத்திலும் ஒருவிதமான அச்சத்தின் நிழல் படிந்திருந்தது.

“என்ன ரோலக்ஸ்? என்ன ஆச்சு? ஏன் இப்படி ஓடி வர்ற? ஏதோ விபரீதம் நடந்துடுச்சா?” என்று அவன் பதற்றத்துடன் கேட்டான்.

ரோலக்ஸ் மூச்சிறைக்க, தன் விரல்களால் அந்த குடோனைச் சுட்டிக்காட்டினான். அவன் கண்கள் கண்ணீரிலும் கோபத்திலும் சிவந்திருந்தன. அவன் சைகையில் “பைரவா… அவன் அங்கே இல்லை! அலெக்ஸ் காணாமல் போய்விட்டான். அந்த இடம் முழுவதும் இரத்தம்… எங்கும் ரத்தம்! யாரோ அவனை அடித்து இழுத்துச் சென்றிருக்கிறார்கள்!” என சொன்னான்.

பைரவனின் முகம் கறுத்துப் போனது. “இரத்தமா? அப்படியானா பாபி ஏதோ ஒரு பெரும் காரியத்தைச் செய்திருக்கான். இது சாதாரணமாக முடியாது. வா ரோலக்ஸ், இங்கேயே நின்னு புலம்பிட்டு இருந்தா அவனை மீட்க முடியாது” என அவனை இழுத்துக்கொண்டு ஓடினான்.

இருவரும் துறைமுகத்தின் மற்ற பகுதிகளுக்கு விரைந்தனர். அங்கிருந்த தொழிலாளர்களிடமும், பாபியின் ஆட்கள் என்று சந்தேகப்பட்டவர்களிடமும் துருவித் துருவி விசாரித்தனர். ரோலக்ஸ் யாரையும் பேச விடவில்லை, அவனது சைகைகளும், அவன் காட்டிய வெள்ளை துப்பாக்கியும், அவனது கண்களில் தெரிந்த அந்தத் தீவிரமும் பலரை உண்மையைச் சொல்லத் தூண்டியது. அந்தத் துறைமுகமே அவனது கோபத்திற்கு முன்னால் நடுங்கியது.

அப்போது, அந்தப் பகுதியில் வேலை செய்யும் ஒரு வயதான தொழிலாளி பயத்துடன் அவர்களைப் பார்த்தான். அவன் மெதுவாக அருகில் வந்து, தன் குரலைத் தாழ்த்திச் சொன்னான்…

“தம்பி, நேற்று இரவு அந்த மாஃபியா பாபி குடிபோதையில் இங்கு வந்தான். அவன் அலெக்ஸ் இருக்கும் இடத்திற்குச் சென்று, அவனிடம் ஏதோ ஒரு ரகசியத்தைப் பற்றிக் கேட்டான். அவனது தந்தை யார், அந்த கப்பலில் இருக்கும் பொருள் எங்கிருந்து போனது என்று அவன் சித்திரவதை செய்தான். ஆனா அந்தப் பையன் ஒரு வார்த்தை கூடப் பேசல. அவனுக்குப் பேச வராது என்பது தெரிந்தும், பாபி தன் ஆத்திரத்தின் உச்சகட்டத்திற்கு அவனை ஆளாக்கினான். குடிபோதையில் பாபி அவனைத் தன் கையாலேயே அடித்துக் கொன்றுவிட்டான்… அந்த உடலை ஒரு சாக்கில் கட்டி நடுக்கடலில் வீசிவிட்டார்கள் தம்பி…” என  முடித்தார்.

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் ரோலக்ஸ் அப்படியே ஸ்தம்பித்து நின்றான். அவனது காதுகளில் இரத்தத்தின் சத்தம் கேட்டது. உலகம் ஒரு நொடி சுழல்வதை நிறுத்தியது போல இருந்தது. அலெக்ஸ் கொல்லப்பட்டுவிட்டானா? அவன் தந்தை வருவார் என்று நம்பிக்கையோடு இருந்த அந்த ஊமை இளைஞனின் ஆசை இப்படிப் பாழாகிவிட்டதா? அவனது மௌனமான உலகத்தை ஒரு கொடூரமான மரணம் நிரப்பியிருந்தது.

பைரவன் அவன் தோளைப் பிடித்தான். ஆனால் ரோலக்ஸின் கண்கள் இப்போது வேறொரு கோணத்தில் இருந்தன. ஒரு மௌனமான இளைஞனுக்காக அவன் போட்ட திட்டம், அவன் உயிரையே பறித்திருக்கிறது என்ற உண்மை அவனது ஆன்மாவைச் சுட்டெரித்தது. அவனது இதயம் இப்போது துடிக்கவில்லை, மாறாக ஒரு கொடூரமான பழிவாங்கலுக்காகக் காத்திருந்தது.

“இல்லை…” என்று ரோலக்ஸ் மெதுவாக முணுமுணுத்தான். அவனது குரல் மரணத்தின் விளிம்பிலிருந்து வருவது போல இருந்தது. அவனது கைகள் அந்த இரும்புத் தூணில் மோதின. “இனி மௌனம் இல்லை. இது போர்!”

பாபி ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டான். ஒரு ஊமைப் பையனைக் கொன்றதன் மூலம், அவன் ரோலக்ஸ் என்ற மிருகத்தை உலகத்திற்குத் திறந்துவிட்டான். இதுவரை சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த அந்த மாஃபியா அரக்கன் இப்போது சுதந்திரமாக நடமாடத் தொடங்கிவிட்டான். இன்று அந்த துறைமுகங்களில் ரத்தம் ஆறாக ஓடப் போகிறது. பாபியின் இறுதி நாட்களை ரோலக்ஸ் தனது கைகளால் எழுதத் தொடங்கினான்.

அந்தப் பாழடைந்த துறைமுகப் பகுதியில், காற்று கூட ஏதோ ஒரு பயங்கரத்தை முன்னறிவிப்பது போலத் தணிந்து போனது. கடல் அலைகள் கரையை மோதும் சத்தம் இப்போது ஒரு போர்ப் பறையின் முழக்கமாக மாறியது. அந்தத் தொழிலாளி சொன்ன ஒவ்வொரு சொல்லும், ஒரு குண்டாக ரோலக்ஸின் நெஞ்சில் இறங்கியது. அலெக்ஸ், அவனது அப்பாவித்தனம், அவனது மௌனமான துயரம், எல்லாமே இப்போது ஒரு முடிவுக்கு வந்துவிட்டன.

ரோலக்ஸ் பைரவனைப் பார்த்தான். பைரவன் அவனது கண்களில் தெரிந்த அந்தப் பயங்கரமான அமைதியைப் பார்த்து மிரண்டு போனான். அந்த கண்களில் இப்போது கோபமில்லை, வெறும் மரணத்தின் சாம்பல் மட்டுமே இருந்தது. ரோலக்ஸ் ஒருமுறை சைகை செய்தான், “இன்று இரவு, பாபி எங்கே இருந்தாலும் அவன் தலை துண்டிக்கப்படும்.”

அவன் தன் வெள்ளை துப்பாக்கியை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான். அந்தத் துறைமுகத்தின் இருண்ட இரவில், ஒரு புதிய சாம்ராஜ்யத்தின் ரத்த விதியை எழுத அவன் தயாரானான்.

ரோலக்ஸ் போருக்கு தயாராகிவிட்டான், அப்போ பாபி நிலைமை ?  

வேட்டை தொடரும் ..⚓

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!