அத்தியாயம் 2

 

அத்தியாயம் – 2

அஷ்வினியோ, தனக்கு அருகில் தெரிந்த நிழல் உருவத்தைக் கண்டு மிரண்டு விழித்தாள்.

“ஆஆ!”

என்று அலறுவதற்கு முன்பே, அவளருகில் வந்தவன் தன் கையால் அவளது வாயை மூடினான்.

அந்த நெருக்கமான நிலையில், அவனது தொடுகை அவளுக்கு மிகவும் பரிச்சயமான ஒன்றாக இருக்கவே, நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டவள், அவனது முகத்தைப் பார்க்க முயன்றாள்.

அறை முழுவதும் இருள் சூழ்ந்திருந்ததால், அவளால் அவனை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. இருந்தும், அவனது உடல்மொழியும் தீண்டலும், ‘நீ அறிந்த ஒருவன்தான் நான்!’ என்று அவளுக்குச் சொல்லாமல் சொல்லின.

அவளது வாயிலிருந்து கையை எடுத்தவன், தனது புறங்கையால் அவளது கன்னத்தை மெல்ல வருடினான்.

அடுத்த நொடி, அவளது கண்களில் ஆனந்தக் கண்ணீர் இரு துளிகளாகத் திரண்டது.

“கௌதம்! நீங்களா? எதுக்கு இந்த விளையாட்டு? நான் பயந்துட்டேன்!” என்று சிணுங்கியபடியே எழுந்துகொள்ள முயன்றாள்.

ஆனால் அவனோ, அவளது கரத்தைப் பற்றித் தடுத்து மீண்டும் அமர வைத்தான்.

பின்னர் வெளியே சென்றவன், மரகதத்திடமிருந்து உணவுத் தட்டைப் பெற்றுக்கொண்டு வந்து அவளருகில் மீண்டும் அமர்ந்தான்.

“கௌதம், இப்போ எதுக்கு லைட் ஆஃப் பண்ணீங்க?” என்று கேட்ட அஷ்வினி, விளக்கைப் போடுவதற்காகச் சுவிட்ச் பாக்ஸை நோக்கி நகர்ந்தாள்.

ஆனால் அவளது கரத்தை இறுக்கமாகப் பற்றித் தடுத்து நிறுத்தினான் அவன்.

அந்த இறுக்கமான பிடியே, ‘வேண்டாம்!’ என்று அவளுக்குச் சொல்லியது.

வலியைத் தாங்க முடியாமல் மீண்டும் மெத்தையில் அமர்ந்தாள் அஷ்வினி.

அவனோ மேற்கொண்டு எதுவும் பேசாமல், தான் கொண்டுவந்திருந்த உணவை எடுத்து அவளுக்கு ஊட்டத் தொடங்கினான்.

“எதுக்கு லைட் போட வேண்டாம்னு சொல்றீங்க? ஓஹோ! நான் சாப்பிடுறது அத்தைக்குத் தெரியக் கூடாதுன்னுதான் இப்படி இருட்டுல சாப்பிட வைக்கிறீங்களா? என் மேல உங்களுக்கு எவ்வளவு பாசம்!” என்று அவளே கேள்வி கேட்டு, அவளே பதிலும் சொல்லிக்கொண்டாள்.

அவனோ சலிப்பாகத் தலையை இருபுறமும் அசைத்துவிட்டு,

“ம்ம்ம்…” என்றபடி அவளுக்கு உணவை ஊட்டினான்.

“எவ்வளவு நாள் ஆச்சு, இல்ல கௌதம்? நீங்க இப்படி எனக்கு ஊட்டி விட்டு!”

“ம்ம்ம்…”

“நீங்க முதல்ல இருந்த மாதிரி இல்லை. அதுவும் இப்போ இருக்கிற மாதிரி சுத்தமாவே இல்லை!”

அவள் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு மீண்டும் பேசத் தொடங்கினாள்.

“இப்போ எல்லாம் உங்ககிட்ட பேசுறது வேற யார்கிட்டயோ பேசுற மாதிரி ரொம்ப அந்நியமா இருக்கு. ஆனா, இப்போ அப்படி இல்லை. இனிமேல் நீங்க நம்ம ரூமுக்கு வரும்போது லைட்டை ஆஃப் பண்ணிடணும். அப்போதான் நீங்க என் கௌதம் மாதிரி இருக்கீங்க!”

என்று வெகுளியாகப் பேசிக்கொண்டே உணவைச் சாப்பிட்டாள்.

அவள் கூறிய வார்த்தைகளைக் கேட்டவனின் மனதில் என்ன ஓடியதோ தெரியவில்லை. அவளுக்குத் தொடர்ந்து உணவை ஊட்டுவதில் மட்டும் கவனமாக இருந்தான்.

அவளுக்கு முழு உணவையும் ஊட்டி முடித்தவன், மெத்தையிலிருந்து எழுந்துகொண்டான்.

அஷ்வினியோ விரைந்து வந்து அவனது கரத்தைப் பற்றினாள்.

அவளது தொடுகையை உணர்ந்தவன் அப்படியே நின்றான்.

“கௌதம், எங்க போறீங்க? எனக்குத் தூக்கம் வருது. என் கூடவே இருங்க!”

என்று அவள் அழைக்க,

“ம்ம்ம்…” என்றவன், கதவைச் சென்று தாழிட்டுவிட்டுத் திரும்பி வந்தான்.

அவள் மெத்தையின் ஒரு புறத்தில் படுத்துக்கொள்ள, அவனும் அவளருகில் சரிந்து படுத்துக்கொண்டான்.

அஷ்வினி உறங்கியதும், மெதுவாக எழுந்தவன் அறையைவிட்டு வெளியே வந்தான்.

அங்கே நின்றுகொண்டிருந்த மரகதத்தை அழைத்தான்.

அவரும் விரைந்து அவனருகில் வந்தார்.

“நாளைக்குக் காலையில நாலு மணிக்கு முகூர்த்தம். மூணரை மணிக்கே இங்கிருந்து எல்லாரும் கிளம்பிடுவாங்க,” என்றார் மரகதம்.

“ம்ம்ம்…” என்றவன், திரும்பி நின்றபடியே,

“அவளைக் கொஞ்சம் கவனமாப் பார்த்துக்கோங்க,” என்றான்.

அவனது கண்கள் ஒரு கணம் அஷ்வினியின் அறையை நோக்கிப் படிந்து மீண்டன.

“பார்த்துக்கிறேன், தம்பி. நீங்க எப்படி இருக்கீங்க?” என்று மரகதம் கேட்டார்.

அவரைப் பார்த்துப் புரியாத புன்னகை ஒன்றை உதிர்த்தவன், அங்கிருந்து சென்றான்.

அதிகாலை இரண்டு மணிக்கெல்லாம் அஷ்வினியின் அறைக்கதவு தட்டப்பட்டது.

அந்தச் சத்தத்தில் கண்விழித்தவள், அருகில் படுத்திருந்த கௌதமைத் தேடினாள்.

ஆனால் அவன் படுத்திருந்த இடம் வெறுமையாக இருந்தது.

“எங்க போனாரு?” என்று யோசித்தபடியே கண்களைக் கசக்கிக்கொண்டு எழுந்தவள், கதவைத் திறந்தாள்.

வெளியே ராதிகா நின்றிருந்தார்.

“சீக்கிரம் கிளம்பி வாம்மா. கோவிலுக்குப் போகணும்!” என்றார் அவர்.

“சரி, அத்தை. கௌதம் எங்க?” என்று அஷ்வினி கேட்டாள்.

“அவன் நேத்து வெளியே போனவன், இன்னும் வீட்டுக்கு வரல. சீக்கிரம் வந்துடுவேன்னு சொன்னான். லேட்டானால் அப்படியே கோவிலுக்கு வந்துடுறேன்னும் சொன்னான். நீ சீக்கிரம் கிளம்பி வாம்மா!”

என்றவர் அங்கிருந்து சென்றார்.

‘இன்னும் வரலையா? என்ன சொல்றாங்க இவங்க? நேத்து நைட் என் கூடத்தானே இருந்தாரு! ஒருவேளை அத்தைக்குத் தெரியாமல் பேசுறாரோ?’

என்று யோசித்தவள், அதைப் பற்றி மேற்கொண்டு சிந்திக்கும் மனநிலையில் இல்லாமல் குளியலறைக்குள் சென்றாள்.

விரைவாகத் தயாராகி வெளியே வந்தவள், ஹாலில் கௌதம் அமர்ந்திருப்பதைக் கண்டாள்.

அவனைக் கண்டதும் புன்னகை முகத்துடன் அவனருகில் சென்றாள்.

அவளைப் பார்த்தவன்,

“கல்யாணப் பொண்ணு ரெடியாகிட்டீங்க போலவே!” என்று கேலியாகக் கூறினான்.

அவளது இடையைப் பற்றித் தன்னோடு இழுத்தான்.

அவளோ வலுக்கட்டாயமாகப் புன்னகைத்தபடியே அவனது பிடியிலிருந்து விலகி நின்றாள்.

ஏனோ, இன்று அவனது அணைப்பு அவளுக்கு இனிக்கவில்லை.

அவளது மனதில் ஏதோ ஓர் இனம் புரியாத உணர்வு தோன்றியது.

அந்த நேரத்தில் பாக்கியம், ராதிகா, ராதிகாவின் கணவர் தேவராஜ் என அனைவரும் அங்கே வந்து சேர்ந்தனர்.

பின்னர் அனைவரும் அவர்களது குலதெய்வக் கோவிலை நோக்கிப் புறப்பட்டனர்.

கோவிலில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் ஏற்கெனவே செய்யப்பட்டிருந்தன.

முகூர்த்த நேரம் நெருங்கியபோது ராதிகாவின் குடும்பத்தினர் கோவிலை வந்தடைந்தனர்.

“பொண்ணும் மாப்பிள்ளையும் வந்து மணவறையில் உட்காருங்க!” என்று ஐயர் கூறினார்.

அஷ்வினியும் கௌதமும் சென்று மணவறையில் அமர்ந்தனர்.

மந்திரங்கள் ஒலிக்க, முகூர்த்த நேரமும் நெருங்கியது.

ஆனால், அன்று மட்டும் அஷ்வினியின் மனம் படபடத்துக்கொண்டே இருந்தது.

ஏதோ புதிதாகத் திருமணம் செய்துகொள்ளப் போவது போன்ற ஓர் உணர்வு அவளை ஆட்டிப்படைத்தது.

‘ஏன் இப்படி இருக்கு? என்ன நடக்கப் போகுதோ?’

அவளால் தனது மன உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

“கெட்டிமேளம்! கெட்டிமேளம்!” என்று ஐயர் கூறினார்.

தாலியைக் கையில் வாங்கிய கௌதம், அதை அஷ்வினியின் கழுத்தில் கட்டுவதற்காக உயர்த்தினான்.

ஆனால் அஷ்வினியின் மனமோ, ‘ஏதோ தவறு நடக்கப்போகிறது!’ என்று எச்சரித்துக்கொண்டே இருந்தது.

தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்களை மூடிக்கொண்டாள் அவள்.

அவளது கழுத்தில் மாங்கல்யத்தைக் கொண்டு சென்று முடிச்சிடும் நேரத்தில், திடீரெனப் பெரும் சத்தம் ஒன்று கேட்டது.

அந்தச் சத்தத்தில் கௌதமின் கைகள் அப்படியே நின்றன.

அவன் கையிலிருந்த தாலியோ அஷ்வினியின் மடியில் விழுந்தது.

அடுத்த சில நொடிகளில், அவர்கள் இருந்த இடம் முழுவதும் வெண்ணிறப் புகை சூழ்ந்தது.

அருகில் நிற்பவர்கள் யார் என்பதைக்கூட அடையாளம் காண முடியாத அளவுக்குப் புகை அடர்த்தியாகப் பரவியது.

இருமியபடியே அனைவரும் எழுந்து, காற்றில் பரவியிருந்த புகையைத் தங்கள் கைகளால் விலக்க முயன்றனர்.

அஷ்வினியோ மணவறையில் அமர்ந்தபடியே இருமிக்கொண்டிருந்தாள்.

அப்போது அவளருகில் ஒரு குரல் கேட்டது.

“இன்னும் எவ்வளவு நேரம் மேடம் இப்படியே இருக்கப்போறீங்க?”

அந்தக் குரலில் திடுக்கிட்டவள் எழுந்துகொள்ள முயன்றாள்.

அடுத்த நொடியே, ஏதோ ஒன்று தனது முகத்தை மூடுவதை உணர்ந்தாள்.

அவளால் எதையும் சிந்திக்கக்கூட முடியவில்லை.

மறுகணம், மயங்கி அப்படியே சரிந்தாள்.

புகை மூட்டத்தின் காரணமாக அனைவரும் ஆளுக்கொரு பக்கமாக அலைந்துகொண்டிருந்ததால், அஷ்வினியை யாரும் கவனிக்கவில்லை.

சிறிது நேரத்திற்குப் பிறகு புகை மூட்டம் மெல்லக் குறைந்தது.

கௌதம் நிதானமாகத் திரும்பி மணவறையைப் பார்த்தான்.

அங்கே அஷ்வினி இல்லை!

அதிர்ச்சியில் அவனது முகம் இறுகியது.

“அம்மா! அஷ்வினி எங்க?” என்று ராதிகாவிடம் ஆக்ரோஷமாகக் கேட்டான்.

“இங்கதானேடா இருந்தாள்!” என்ற ராதிகாவும் பதற்றத்துடன் சுற்றுமுற்றும் பார்த்தார்.

அப்போது கோவில் தளத்திலிருந்து சுமார் இருபது படிகள் கீழே, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரின் அருகே ஒருவன் நின்றுகொண்டிருந்தான்.

தன் தோளில் மயங்கிய நிலையில் அஷ்வினியைச் சுமந்தபடி, மேலே நின்றிருந்தவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.

அவன் வேறு யாருமல்ல.

தீரன்!

அவர்களைப் பார்த்து விசில் அடித்தான் அவன்.

அந்தச் சத்தம் வந்த திசையை நோக்கித் திரும்பிப் பார்த்தனர் கௌதமின் குடும்பத்தினர்.

தீரனின் தோளில் மயங்கிக் கிடந்த அஷ்வினியைக் கண்டதும் கௌதமின் கோபம் எல்லை கடந்தது.

“டேய்!”

என்று ஆக்ரோஷமாகக் கத்தியபடியே படிகளில் வேகமாக இறங்கினான்.

தன்னை நோக்கி வந்த கௌதமை எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் பார்த்தான் தீரன்.

அடுத்த நொடியே, துப்பாக்கியை எடுத்துக் கௌதமை நோக்கிக் குறிவைத்தான்.

துப்பாக்கியைக் கண்ட கௌதம் ஒரு கணம் அதிர்ந்து நின்றான்.

“வேண்டாம்!” என்று ராதிகா அலறினார்.

அவரைச் சலிப்பாகப் பார்த்த தீரன், துப்பாக்கியை மீண்டும் கௌதமின் தலையை நோக்கிக் குறிவைத்தான்.

ஆனால் கௌதமோ பயப்படவில்லை.

“தைரியம் இருந்தா சுடுடா!” என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அவனை நோக்கி வந்தான்.

தீரனின் உதடுகளில் குரூரமான புன்னகை ஒன்று தோன்றியது.

“உனக்கு வேணும்னா சாக ஆசையா இருக்கலாம். ஆனா எனக்கு இப்போ இந்த விளையாட்டை முடிக்க விருப்பமில்லை!”

என்றவன், வேண்டுமென்றே கௌதமின் வலது தோள்பட்டையைக் குறிவைத்துச் சுட்டான்.

“ஆஹ்!”

தோட்டா பாய்ந்த வலியில் கௌதம் தடுமாறினான்.

“குட் லக்!” என்று கேலியாகக் கூறிய தீரன், அஷ்வினியை காருக்குள் அமர வைத்துவிட்டு, தானும் ஏறிக்கொண்டான்.

பின்னர் ஓட்டுநர் இருக்கையில் இருந்த பரமனை நோக்கி,

“பரமா, வண்டியை எடு!” என்று கட்டளையிட்டான்.

மறுகணம், கார் புயல் வேகத்தில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

தோட்டா பாய்ந்த வலியில் துடித்த கௌதம், அங்கேயே மண்டியிட்டு விழுந்தான்.

அவனை நோக்கி அழுதபடியே ஓடிவந்தார் ராதிகா.

“கௌதம்! கௌதம்!” என்று கதறினார்.

தனது தாயின் கதறலைக் கேட்ட கௌதம், வலியை அடக்கிக்கொண்டு,

“ஒண்ணுமில்லைம்மா…” என்றான்.

ஆனால், அதிகப்படியான ரத்த இழப்பின் காரணமாக அவனது கண்கள் மெல்ல மூடின.

அடுத்த நொடியே, அவன் மயங்கி விழுந்தான்.

 

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!