12.வேய்ந்தனனின் வல்லினம்

12.வல்லினம்

“மாமா… நான் அபூர்வா வந்திருக்கேன்.” என்றவளோ தயங்கியபடி அந்த பளிங்கு அறைக்குள் நுழைந்திருக்க, நிசப்தமான அவ்வறையின் பிரம்மாண்டம் பெண்ணவளின் கண்களை நிறைத்தது. 

அறைக்குள் சொர்க்கம் என்பதை கண்குளிர இன்று தான் பார்க்கிறாள் பெண். காட்சியின் பிரம்மிப்பு குறையாது உள்ளே சென்றவளது கண்கள் ருத்ரஜித்தினைத் தேடியது.

மனதை மயக்கும் அறையின் மணம்  வேறு, பெண்ணவளின் நாசிதணில் நுழைந்திருக்க, தன் கண்களை மூடி நுகர்ந்தபடி ரசித்தவளது காதோரம் ஒலித்தது அவனது குரல்.

“அபூர்வா…” என்றவனின் குரலில் சட்டென்று திரும்பியவளது கார்கூந்தல் அவனது முகத்தில் அடித்திருக்க, பெண்ணவள் மிக நெருக்கமாய் அவனைக் கண்டதில் திடுக்கிட்டு போய் பின்னோக்கி விழப்போக, அவளது மெல்லிய இடையினைத் தனது வலிய கரத்தினால் இறுகப் பற்றியிருந்தவன், அவள் விழாது தாங்கிப் பிடித்திருந்தான்.

குளித்துவிட்டு வந்திருப்பான் போல இடுப்பில் ஒற்றைத்துண்டுடன், வெற்று மார்போடு வந்து நின்றது மட்டுமல்லாது தன்னை விழாமல் தாங்கியவனைக் கண்டதுமே பெண்ணவளின் கண்கள் முழுதாக விரிய, அவளைக்கண்டு புன்னகையை உதிர்த்தான் ஆணவன். 

அவனது கரத்தின் வலிமையும், அவனது திண்ணிய மார்பிலிருந்து சொட்டு சொட்டாக வழிந்து அவள்மீதே விழுந்த நீர்த்துளிகளும் இருவருக்கும் இடையில் ஒரு ஏகாந்த சூழலை ஏற்படுத்தியிருந்தது.

“மா…மா”  பெண்ணவளின் உதடுகள் வார்த்தைகளை பிரயோகிக்க மறந்திருந்தது. ஆனால் ஆடவனோ அவளையே இமைக்காமல் பார்க்க, அபூர்வாவின் பூவிரல்கள் அவனது வலிய தோள்பட்டையை கெட்டியாக பற்றிக்கொண்டதில், அவனின் இதழ்களோ  வசீகரிக்கும் புன்சிரிப்பினை உதிர்த்த நொடி, அவனைவிட்டு விலகப்பார்த்தாள் பெண். அவளது செயலில் சிறு கோபம் துளிர்க்க பெண்ணவளின் இடையிலிருந்த தனது கரத்தின் இறுக்கத்தைக் கூட்டியிருந்தவன், பின்னோக்கி வளைந்திருந்த இலைக் கொடியாளின் மீதே  முன்னோக்கிப் படர்ந்தான்.  

அதில் பதறியவள் விலகப்பார்க்க, ருத்ரஜித்தின் மற்றொரு கரமோ பெண்ணவளது தளிர் கரங்களை வருடத் தொடங்கியது. அவனது தொடுகையும் தீண்டலும் அவளுக்குள் இனம்புரியாத உணர்வுகளைக் கொடுக்க, அவளையும் அறியாது மலர்மங்கையவளது இமைகள் மூடிக்கொண்டது.

அவளை முழுவதுமாக நெருங்கிய ருத்ரஜித், பெண்ணவளின் இதழ்களோடு தன் இதழ்களை பட்டும் படாமல் ஒற்றியெடுத்தான். அவனது செயலில் மின்சாரம் பாய்வதை உணர்ந்தவள் கண்களை பட்டென்று திறந்தாள். 

அவள் திறப்பதற்காகவே காத்திருந்தவன், புன்னகைத்துக் கொண்டே, அவளின் இதழ்களை தன் இதழ்களுக்குள் பொருத்தியிருந்தான். 

காதலின் ஆழத்தை இதழ் என்னும் தூரிகையால் அவன் வரைய, காதல் என்னும் ஓவியமாய் மாறிப்போனாள் பெண்.

“ஐ லவ் யூ பேபி.” என்றவன் மெல்ல கீழிறங்கி அவளது கழுத்து வளைவில் முகம் புதைக்க, அவன் கட்டிய மஞ்சள் தாலி அவனது உதட்டை உரசியது. இடையூறாக இருந்த மஞ்சள் தாலிக் கயிற்றை அவன் தொட்டு நகர்த்த, தன் நிலையை உணர்ந்த பெண்ணவளோ, கழுத்திலிருக்கும் மாங்கல்யத்தை அப்போது தான் காண்கிறாள்.

 கண்டநொடி அபூர்வாவின் கண்கள் அகல விரிய, அதிர்ச்சியோடு தன் வலப்பக்கமிருந்த கண்ணாடியைக் கண்டவள், தன் நெற்றியிலிருந்த குங்குமத்தை பார்த்தநொடி அதிர்ந்துதான் போனாள்.

“நமக்கு எப்போ கல்யாணம் ஆச்சு?”  அதிர்ச்சி விலகாது பெண்ணிவள் கேட்க, “பேபி இது நம்ம ஹனிமூன்.” என்ற ருத்ரஜித்தின் குரல் மீண்டும் மீண்டும் ஐந்தாறுமுறை ஒலித்த நொடி.

கண்கள் இருட்டிக்கொண்டு வர, “இல்லை….” என்று கனவில் அவனது கைகளின் மீதே மயங்கியவள், நிஜத்தில் வியர்த்து விறுவிறுக்க மெத்தையிலிருந்து அடித்துப்பிடித்து எழுந்திருந்தாள்.

அன்னிச்சையாக பெண்ணின் கரம் அவளது கழுத்தை தொட்டுப் பார்த்தது. கழுத்து வளைவில் சிறு செயினை தவிர்த்து மாங்கல்யம் இல்லாததை உணர்ந்ததும் தான் நிம்மதி அடைந்தது அபூர்வாவின் மனம்.

“அப்போ கனவா? கடவுளே என்ன மாதிரியான கனவு இது. அய்யோ அதுவும் ருத்மாமாவை போய் இப்படி நினைச்சிருக்கேனே. ச்சே” என்று தன் கனவையே அருவருத்தவள், சுவற்றில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தைக் கண்டாள். கடிகாரமோ விடியற்காலை நான்கரை என்று தெளிவாக காட்டியிருக்க, பெண்ணவளின் உறக்கமோ தொலைதூரம் ஓடிச்சென்றது.

பொதுவாகவே அபூர்வாவிற்கு கனவுகள் தோன்றும். கடைசியாக தன் தோழி வந்தனாவின் தூக்கத்தைக் கெடுத்த கனவிற்கு பிறகு இன்றே தத்ரூபமான கனவினைக் கண்டாள். நேற்று காலை மணமேடையில் ருத்ரஜித்தின் அருகே மணமகளாக அமர்ந்ததும், இன்று அவனை சந்திக்க போகிறோம், என்றவளின் எண்ணமும் கலவையாக  கனவாய் உருமாறியிருந்தது.

போனமுறை கனவிலிருந்து எழுந்தவள் காட்டிற்குள்ளே செல்ல, அப்போது தான் ருத்ரஜித்தைப் பார்த்தாள். ஆனாலும் அவனின் முகம் பார்க்காமலே பெண்ணவளை அணைத்து, மிரட்டி விட்டே அங்கிருந்து அவன் சென்றிருக்க, இன்றும் கனவு தான், ஆனால் மாறாக கனவின் நாயகனே அவனாக இருக்க, அவனைத் தேடிச் செல்பவளின் நிலை தான் என்னவாகுமோ?

புரண்டு படுத்தவளுக்கு தூக்கம் மட்டும் வராதுப் போக, தன் கனவினை நினைத்து மனம் வருந்தியபடி அமர்ந்துக் கொண்டாள். 

இங்கு பிரகல்யாவின் நிலையோ மோசமாக இருந்தது. அழுதவளுக்கு ஆறுதலாக உறக்கம் கூட வராது போக, ஒருபுறம் பசி வேறு அவளை மயக்கம் கொள்ள செய்தது. மறுபுறம் கொசுக்கடி வேறு அவளது மயக்க நிலையிலும் விடாது படுத்தி எடுக்க, மிகவும் சோர்வாக படுத்திருந்தாள்.

தண்ணீர் குடிக்க வேண்டும் போல் தோன்றிக் கொண்டேயிருக்க, அரை மயக்கத்தில் தவித்தாள் பெண். அந்நொடி அறையின் ஓரத்தில் இருந்த தண்ணீர் குவளையும் அதனருகில் இருந்த உணவு பொட்டலமும் பெண்ணவளின் சிறு விழிக்குள் தெரிய, கடினப்பட்டே தனது கண்களை முழுதாக திறந்தவள், அங்கிருந்த தண்ணீரை மட்டும் எடுத்து வாயில் சரித்துக் கொண்டாள்.

இன்னும் கொஞ்சம் நேரம் தண்ணீர் கிடைக்காமல் போயிருந்தால் கூட அவளது உடலில் உள்ள அனைத்து நீர்ச்சத்தும் வற்றிப் போயிருக்கும். தண்ணீரை தேவைக்கு அதிகமாகவே குடித்துவிட, இயற்கை உபாதைகளின் அழைப்பு வேறு பெண்ணவளை வாட்டி எடுத்தது. 

ஒன்று போனால், மற்றொன்று என ஒவ்வொரு சிறு பிரச்சினைகளும் அந்த நொடி இமயம் போல் தான் இருந்தது பிரகல்யாவிற்கு. மனதளவில் மரித்தவளுக்கு, உடலும் ஒத்துழைப்பு தராது இவ்வாறு எல்லாம் செய்ய, அவ்வறையில் உள்ள கழிவறையினைத் தேடியது பெண்ணவளின் கண்கள்.

பாவி! ராட்சசா! எதுவும் சொல்லாது இப்படி அடைத்துவிட்டு சென்றுவிட்டாயே? கொஞ்சம் கூடவா உனக்கு மனசாட்சி என்பது இல்லை? என்று மானசீகமாக ருத்ரஜித்திடம் கேள்விகள் கேட்டது அவள் மனம்.

வயிற்றைப் பிடித்துக் கொண்டவள், அவ்வறையிலிருந்த இரண்டாவது கதவினை திறக்கப் பார்த்தாள். நல்லவேளை அது திறந்தது. அதுவுமில்லாமல் அது கழிப்பறை என்பதில் அவளது முகத்தில் ஒருவகை நிம்மதி பரவியது. 

சரியாக பராமரிப்பு இல்லாமல் தூசிப்படிந்த கழிப்பறைக்கு சென்றவளுக்கு வெறும் வயிறு குமட்டிக் கொண்டு வந்தது. இருந்தும் சமாளித்தவள் ஒருவழியாக தனது காலைக்கடன்களை முடித்துவிட்டே வந்தாள். நல்லவேளையாக அங்கிருந்த தண்ணீர் தொட்டி அவளுக்கு பேரூதவியை புரிந்திருக்க, நிம்மதி பெருமூச்சொன்றை விடுத்தவள், கால்களை கழுவிவிட்டு, மீண்டும் அதே அறைக்குள் நுழைந்திருந்தாள். 

தப்பிக்கும் மார்க்கத்தை தேடியவளுக்கு, பூட்டப்பட்ட கதவே பதிலாகிப் போக, செய்வதறியாது தவித்தவள், அவ்வறையில் தென்பட்ட சிறு துவாரத்தின் அருகே சென்று, “யாராவது இருக்கீங்களா?” என்று கத்தினாள்.

இருளைக் கிழித்து வரும் நிலவொளியினைத் தவிர எதுவும் அவளுக்கு துணையாக அங்கு இல்லை என்பதை நன்கு உணர்ந்தவள், சுவற்றில் சாய்ந்தபடி கீழே பொத்தென்று சரிந்தமர்ந்தாள். தன்னிலை எண்ணி பெண்ணவளின் கண்கள் அழுகையில் கரைந்தது.

நேரங்கள் விரைந்தோட, பகலவன் மெல்ல தன் கதிர்களை பரவச்செய்திருக்க, அன்றைய பொழுது அழகாக புலர்ந்திருந்தது. காலை ஒன்பது மணி, கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிய அபூர்வா நேரடியாக சென்றது என்னவோ ருத்ரஜித் தங்கியிருக்கும் அந்த நட்சத்திர விடுதிக்குத் தான்.

மூன்று சக்கர வாகனத்திலிருந்து இறங்கியவள் அவ்விடுதியை நிமிர்ந்துப் பார்த்தாள். அதன் பின் கையிலிருக்கும் அவன் கொடுத்த மோதிரத்தையும் பார்த்தாள். “இப்போ கொடுக்கலைனா? அப்புறம் எப்பவும் கொடுக்க முடியாது அபூ.” என்று தனக்கு தானே கூறியவளது கால்கள் அழுத்தமாக முன்னேறி செல்ல, அவளின் வாழ்வை மாற்றவிருக்கும் நிகழ்வும் வருவதற்கு தயாராக இருந்தது. 

உள்ளே நுழைந்ததும் அபூர்வா நேராக சென்றது வரவேற்பு அறைக்கு தான். அங்கு ருத்ரஜித்தின் அறையைப் பற்றி கேட்க, அவ்விடம் நின்ற நளினமங்கையோ,

“மே ஐ ஃநோ யுவர் செல்ஃப் ஃபார் ஹிம் மேம்?” ஆங்கில வார்த்தைகளால் அவள் அவனுக்கு யார் என்பதை கேட்டாள் வரவேற்பு பெண்மணி.

“நான் அபூர்வா. அவங்க ரிலேசன்.” என்றாள் தன்மையாக.

“ஓகே மேம். செகெண்ட் ஃப்ளோர். ரூம் நம்பர் 008 A.”  புன்னகையோடு அவள் பதில் கூறியிருக்க, சிறு தலையசைப்புடன் கடந்து உள்ளே சென்றாள் அபூர்வா.

அடுத்த நிமிடமே அவள் வரும் தகவல் ருத்ரஜித்தை அடைந்திருக்க, அவனது இதழ்களில் அழுத்தமான புன்னகை ஒன்று படிந்து மீண்டது. 

மின்தூக்கி வாயிலாக இரண்டாம் தளத்தினை அடைந்தவள், சிவப்பு நிற உடம்பை இறுக்கிய உடையில் அபூர்வாவின் மீதே மோதியபடி சென்றாள் ஒரு நங்கை. 

ஒருநிமிடம் தடுமாறி விழச்சென்றவள், அவளைத் திரும்பி பார்க்கும் முன்பே மின்தூக்கியின் வாயிலாக அந்த நங்கை கீழே சென்றிருக்க, அவளது செயலில் அபூர்வாவிற்கோ கோபம் துளிர்த்தது.

“இடியட். ஆளப்பாரு. இப்பவும் நாலு வயசுல போட்ட கவுனைப் போட்டுட்டே சுத்த வேண்டியது. இதுல போறவங்க வரவங்க மேலயே மோத வேண்டியது.” என்று முகத்தை சுளித்தவள் அறியவில்லை அவள் ருத்ரஜித்தின் அறையிலிருந்து தான்  வருகிறாள் என்பதை.

வரவேற்பறையில் சொன்ன அறை எண்ணை தேடியவள், இறுதியாக கண்டறிய, அறையை நோக்கிச் சென்றவள் கதவினை  மென்மையாக தட்டினாள். உள்ளே எவ்வித பதிலும் வராததால், கொஞ்சம் பலமாக தட்ட, தாழிடாத கதவு அன்னிச்சையாக திறந்தது.

“மாமா… மாமா..” என்றவள் தயங்கியபடி உள்ளே நுழைந்திருந்திருந்தாள்.

பெரிய அறை தான் அது. கனவில் கண்ட இடத்தை போல் பிரம்மிப்பு நிறைந்ததாக இல்லையென்றாலும் பார்க்க அழகாகவே இருந்தது அவ்வறை. 

“மாமா” என்று அழைத்தும் பதிலே வரவில்லை.

“என்ன இவரு ரூம் கூட லாக் பண்ணாமல்? அப்படி என்ன பண்றாரு?” என்று யோசித்துக் கொண்டே உள்ளே இருக்கும் அறைக்குள் நுழைந்தாள்.

அந்த மிகப்பெரிய அறையின் மத்தியிலிருந்த கட்டிலில் நடுவே பஞ்சுப்போன்ற வெண்மையான போர்வை போர்த்தியபடி குப்புற கவிழ்ந்து படுத்திருந்தான் ருத்ரஜித். அவனைக் கண்டதும், 

“கதவுகூட அடைக்காமல் இப்படி தூங்குறாரு இந்த மனுசன்?” என்று வெளிப்படையாக புலம்பினாள்.

“மாமா. நான் அபூர்வா வந்திருக்கேன்.” என்று சத்தமாக அவள் அழைத்தும் கூட, அவனது உறக்கம் துளிக்கூட கலையவேயில்லை. 

அவனிடம் பதில் ஏதும் வராமலிருப்பதைக் கண்டவளுக்கோ, பயம் தொற்றிக்கொண்டது. எங்கு அவர் தவறான முடிவை எடுத்திருப்பாரோ என்ற எண்ணம் மடந்தையின் மனதை பயமுறுத்த, “மாமா… மாமா.” என்று அச்சம் சூழ்ந்த கண்களுடன் அவனை நெருங்கியவள், அவனது  முதுகை தொட, அவள் தொட்டநொடியே அவளது கைகளைப் பற்றி தன்புறமாக இழுத்திருந்தான் ருத்ரஜித்.

அவனது திடீர் செயலினை சுத்தமாக எதிர்பாராதவள் திடுக்கிட, அவனோ கண்களைத் திறவாமல் அவளை தன் கைவளைவிற்குள் இறுக அணைத்தவன், படபடப்பில் ஏறி இறங்கிய அவளின் மார்புக்கும் தொண்டைக் குழிக்கும் நடுவே முகம் புதைத்தான். 

அவனது அருகாமையும் தீண்டலும் அவள் கண்ட கனவினை நினைவூட்ட, “மாமா..” என்று பரிதவிப்போடு எழ முயற்சித்தவளது உதட்டின் மீதே அவன் கரம் வந்து விழுந்தது. 

“பேபி … ஏன் என்னை ஏமாத்துன?” என்று குளறியவனது உதடுகளிலிருந்து வெளிவந்த மதுவின் வாடை அனைத்தையுமே புரிய வைத்தது. 

‘ஒருவேளை அக்காவை நினைச்சு மாமா பீல் பண்ணி குடிச்சிருக்காரோ’ நினைத்தவளின் மனமோ அவனை எழுப்ப வேண்டும் என்பதில் கருத்தாக பதிந்தது.

“மாமா… மாமா.. எழுந்திருங்க. நான் அபூ.” என்றாள் பதட்டத்தோடு. 

ஆனால் அதையாவையும் கேட்காத அவனின் செவிகளோ, “எதுக்கு என்னை விட்டு போன?” என்ற கேள்வியே மீண்டும் மீண்டும் எழுந்தது. 

அபூர்வாவுக்கோ அவனது நெருக்கம், அவஸ்தையைக் கொடுக்க, அவனைத் தன்னிடமிருந்து பிரிப்பதற்காக பெரும் பாடு பட்டாள்.

ஆனால் அவனோ, அவளை மேலும் தனக்குள் அடக்கியிருக்க, அபூர்வாவுக்கோ மூச்சு முட்டியது. “உன்னோட எப்படி எல்லாம் வாழ நினைச்சேன். பிஸ்னஸ்ல நம்பர் ஒன். ஆனால் லைஃப்ல ஜீரோ. தோற்று போய் நிக்குறேன். என் மனசை உடைக்க எப்படி பேபி மனசு வந்திச்சு? உன் கழுத்துல தாலிக் கட்டுற உரிமை எனக்கு இல்லையா?” என்று பிதற்றியவனது கேள்விகள் பிரகல்யாவுக்கானது என்று நினைத்த அபூர்வாவுக்கோ அவனது நிலைக்கண்டு வருத்தம் துளிர்த்தது. ஆனால் அவன் பேபி என்று அழைக்கும் ஒரே ஜீவன் இவள் மட்டுமே என்பதை அந்நொடி அவளுக்கு தெரியாமல் போனது தான் பின்வரும் விளைவுகளுக்கு அடித்தளமாக மாறியது.

“மாமா நான் பிரகல்யா இல்லை. என்மேல இருந்து எழுந்திரிங்க மாமா.” என்றவள் அவனது வெற்று தோள்பட்டை பிடித்து உலுக்கியதில் மெல்ல தன் கண்களை திறந்தவன், “பேபி…” என்று குளறியபடி அவளது முகம் நோக்கி குனிய, அதிர்ச்சியில் அபூர்வாவின் விழிகளில் கண்ணீர் திரண்டது.

“மாமா…” என்றவள் கத்தியநொடி அவளுக்கும் அவனுக்குமிடையே இருந்த நூலளவு இடைவெளியைவிட்டு விருட்டென்று எழுந்து அமர்ந்தான் ருத்ரஜித். 

அவன் எழுந்ததும் அடித்துப்பிடித்து  கட்டிலின் மூலைக்கு சென்றவளோ, திரண்ட கண்ணீர் கன்னத்தை நனைக்க மருண்ட விழியுடன் அவனை ஏறிட்டாள். கொஞ்சம் விட்டிருந்தாலும் முத்தமிட்டிருப்பான் அல்லவா? அவன்மீது பெருமதிப்புக் கொண்டவளுக்கோ அந்த செயலை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

விருட்டென்று எழுந்தவன் தன் தலையை அழுந்தப் பற்றியபடி, “அபூர்வா நீ இங்க என்ன பண்ற?” என்று கூறியவனுக்கு, அவன் நடந்துக் கொண்டது நினைவில் வர, “ஓ சிட்.” என்று தனது கைகளை மடித்து சுவற்றில் குத்திக்கொண்டான். 

அவனது ஆக்ரோசமான அந்த செயலைக் கண்டு அபூர்வாவிற்கு தூக்கி வாரிப்போட, அவன் குத்திய வேகத்தில் கைகளிலிருந்த மோதிரத்தோடு சேர்ந்து ரத்தம் கசிய, “மாமா….” என்று பெருங்குரலெடுத்துக் கத்தினாள் பெண்.

“இல்லை அபூ. உன்கிட்ட எவ்ளோ கீழ்த்தரமா நடந்துகிட்டேன்ல. ச்சே, எல்லாம் நான் குடிச்சதுனால வந்த வினை.” என்றவன் அங்கிருந்த காலி கண்ணாடி பாட்டிலை தனது கைகள் கொண்டே உடைத்திருக்க, அவனது வெள்ளைநிற கரம் முழுவதும் செங்குருதியினால் நனைந்தது.

அதைக் கண்டு துடித்துப்போன அபூர்வாவோ, “மாமா” என்று பதறி கீழே சிதறிய கண்ணாடி சில்லையும் மதிக்காமல் மிதித்து வந்து அவனது கைகளைப் பற்றினாள்.

கீழே கடந்த கண்ணாடி சில்லொன்று பெண்ணவளது காலைப் பதம் பார்க்க, அவ்வலிக்கூட பெரிதாக உணராதவள், தனது துப்பட்டாவைக் கொண்டு ருத்ரஜித்தின் கைகளைக் கட்டிவிட்டாள். 

“அய்யோ மாமா. ரத்தம் வந்துகிட்டே இருக்கு. ஏன் இப்படி பண்ணீங்க மாமா.” என்று தேம்பிக் கொண்டே அழுதாள். 

தனக்காக அழும் ஜீவனை இரக்கத்துடன் ஏறிட்டது ருத்ரஜித்தின் பார்வை. அப்போது தான் அவளது கால்களை கவனித்தவன், “ஹேய் பேபி. கால்ல கண்ணாடி குத்திருக்கு.” என்று பதட்டத்தோடு அவளை அழைத்துச் சென்று கட்டிலின் மீது அமர வைத்தான். 

அவன் வலியைக் கூட பெரிதுப்படுத்தாமல் தனது சிறுகாயத்தைக் கண்டு துடித்த அவனது முகத்தை பார்க்கும் போதே சங்கடமாக இருந்தது அபூர்வாவுக்கு. அந்தநொடி அவன் அவ்வாறு அவளிடம் நடந்ததுக் கூட பெரிதாகத் தெரியவில்லை. வலியில் துடிக்கும் சிறு குழந்தையாகத் தான் பார்த்தாள் அபூர்வா.

இலகுவான பெண்ணின் மனதிற்கு அவனது வலியே பெரிதாகத் தெரிய, “இது சின்ன காயம் தான் மாமா. உங்க கையில நிறைய ரத்தம் வருது மாமா. வாங்க ஹாஸ்பிடல் போலாம்.” என்றாள் பதட்டத்துடன்.

“இப்போகூட என்னால நீ இவ்ளோ கஷ்டப்படுற பேபி.” என்று கண்கலங்கியவன் அவள் முன்பு மண்டியிட்டு அமர்ந்தான். அவளது தளிர் கால்களை தன் மடியில் ஏந்தியவன், ரத்தம் கசியச்செய்யும் சிறு கண்ணாடியை அவளது காலிலிருந்து பட்டும் படாமல் எடுக்க, அவளோ வலியில் “அம்மா.” என்று சன்னமாக கத்தினாள்.

அவளை ஏறிட்டவன் முகத்தில் அவளது வலியினைக் காட்டிலும் வலி மிகுந்துக் காணப்பட, “ரொம்ப வலிக்குதா அபூ?” என்று கண்கள் சிவந்து கேட்பவனை இமைமூடாமல் பார்த்தவளுக்கு, அவளையும் அறியாது கண்ணீர் சுரந்தது.

எவ்வளவு நல்ல மனிதர். அவரைப்போய் அக்கா ஏமாற்றிவிட்டாளே? என்று அவனுக்காக யோசித்தவளது மனதில் ஆழமாக இடம்பிடித்துப் போனான் ருத்ரஜித்.

“நான் அப்படி நடந்ததுக்கு சாரி பேபி. நான் வேணும்னு பண்ணலை. ஆனால் நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்னு மட்டும் புரியுது.” என்று உண்மையாக வருந்தியவனது இதழின் மீது தன் விரலை வைத்தவள் போதும் என்பது போல அவனது பேச்சினை நிறுத்தியிருந்தாள்.

“மாமா பர்ஸ்ட் எய்டு கிட் இருக்கா?” என்று கேட்க, அங்கிருந்த மேசையைக் கைக்காட்டினான் ருத்ரஜித்.

உடனே எழுந்தவள் நொண்டி சென்று, மேசையைத் திறந்து முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்தாள். பின் ருத்ரஜித் முன்பு சம்மணமிட்டு அமர்ந்தவள், அவனது கைகளை வாங்கி தனது துப்பாட்டாவை விலக்கியபடி, ரத்தத்தை பஞ்சினால் துடைத்து எடுத்தவள், டிஞ்சர் வைத்து காயத்தை சுற்றி கட்டுப்போட்டுவிட்டாள்.

“எதுக்கு மாமா இப்படி ஒரு பைத்தியக்காரத் தனம் பண்ணீங்க. ஒரு சாரி சொன்னா பத்தாதா. உங்களை இப்படி தான் காயப்படுத்திக்கணுமா?” என்றாள் ஆதங்கமாக.

“இல்லைமா. நான் எப்பவும் இப்படி இருந்தது இல்லை. ஆனால் மெண்டலி ரொம்ப வீக்கா இருக்கேன். பாரு சின்னப் பொண்ணு நீ வந்ததுக்கூட தெரியாமல், உங்கிட்ட எவ்ளோ தப்பா நடந்துகிட்டேன். இந்த தண்டனைக்கூட எனக்கு கம்மிதான்.”

“மாமா நீங்க வேணும்னு எதுவும் பண்ணலை. தெரியாமல் நடந்ததுதானே விடுங்க.”

“இல்லை ஒரு பொண்ணா, உன்னை அது எவ்ளோ தூரம் பாதிச்சிருக்கும். அதான் ரொம்ப வலிக்குது.” என்று கூறும்போதே அவனது கண்கள் சிவந்தது.

“அய்யோ மாமா. எனக்கு உங்களை பத்தி நல்லாவே தெரியுமே. நீங்க எவ்ளோ நல்லவரு, நேத்து நீங்க நினைச்சிருந்தால் என் கழுத்துல தாலிக் கட்டிருக்கலாம். ஆனால் பண்ணலையே மாமா. இதுலிருந்தே தெரிய வேண்டாம்?”

“அதே நல்லவன், இன்னைக்கு செய்த காரியம் ரொம்ப மோசமானது. இப்படி பண்ணதுக்கு உன்கழுத்துல தாலியே கட்டிருக்கலாம்.” என்று விரக்தியுடன் கூற,

“ஆமா மாமா தாலிக்கட்டிருக்கணும்.” என்று அவளை அறியாமல் பதில் கூறினாள் அபூர்வா.

அவள் பதிலைக் கேட்டு “என்ன?” என்று அவன் அதிர்ச்சியில் கேட்க, தன் நாக்கைக் கடித்தவள், “ஒன்னுமில்லையே சும்மா.” என்றாள் சமாளிப்பாக.

“நிஜமா வருத்தமில்லையே?” என்றவன் மீண்டும் அழுத்திக் கேட்க,

“இல்லை மாமா.” என்று புன்னகைத்தாள்.

“ஆமா நீ எப்படி இங்க வந்த அபூர்வா? அதுவும் காலையிலேயே?”

“அதுவந்து மாமா. மோதிரம்..” என்று வாய்வரை சொல்ல வந்தவள், “நீங்க என்ன பண்றீங்கனு பார்க்கத்தான் வந்தேன். சாரி நான் சொல்லாமல் வந்தது தான் தப்பு.” என்று மன்னிப்பாய் அவளது காதை இருகைகளால் பற்றிக்கொண்டுக் கேட்டாள்.

அவளது சிறுபிள்ளை தனத்தை வெகுவாக ரசித்தவன், ” இனிமே இப்படி தனியா வரக்கூடாது. டென் மினிட்ஸ் ஃப்ரெஸ் ஆகிட்டு வந்திடுறேன் பேபி.” என்று பெண்ணவளின் தலையை அன்பாக வருடியவன், குளியலறைக்குள் நுழைந்திருக்க, பெண்ணவளோ திருதிருவென விழித்தாள்.

“நான் ஏன் இப்போ மாத்தி சொன்னேன்.” என்று ஒருநிமிடம் யோசித்தவளுக்கு தனக்காக தன்னைக் காயப்படுத்திய ருத்ரஜித்தின் முகமும், தனக்காக அழுத அவனது விழிகளும் நினைவில் வர இனம்புரியாத உணர்வின் பிடியில் கட்டுண்டவள், 

“சரியா தான் சொல்லியிருக்கேன். இந்த மோதிரம் அவருக்கு உரிமையான என் கையில தான் இருக்கு.” என்று கூறும்போதே பெண்ணவளின் முகம் நாணத்தால் சிவந்தது. அவளது வயதுக்கான முதிர்ச்சி அவ்வளவே. பத்தொன்பது வயதுப் பாவையின் பக்குவம் இதுதான் காதல் என்று உணர்த்தியிருக்க, தான் எத்தகைய ஆபத்தில் சிக்கியிருக்கிறோம் என்பதை உணராதுப் போனாள் பாவை.

மோதிரத்தைக் கொடுக்க வந்தவள் தன் மனதை அவனிடம் ஒப்படைத்திருக்க, குளியலறையில் சவரின் முன்பு நின்றிருந்தவனின் இதழ்களில் அட்டகாசமான புன்னகை தவழ்ந்துக் கொண்டிருந்தது.

பாவையவளின் பார்வை

தடுமாறிப் போக…

தன் வலியில் துடிக்குமவனை

இதயத்தில் அவள் நிரப்ப.…

எதையும் அறியும் பக்குவமற்ற

வயதே இங்கு பிழையாகிப் 

போனதேனோ…?

தடமாறியவளின் இதயத்தை

தன்னிடமாற்றியவனின்

வெற்றிக்கு மகுடமாய்

உருவானதுதான்

பெண்ணவளின் காதலோ….?

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!