‘முதல்ல இங்கிருந்து போகலாம் நிலா. அப்புறம் மத்ததை யோசிப்போம்’ என நினைத்து முடிக்கவில்லை…
“அங்க போனதும் என்கிட்டருந்து தப்பிச்சிடலாம்னு நினைக்காத மஃபின்! ஆட்களைக் காயப்படுத்துறது எனக்குப் புதுசில்ல, உன்னை தக்கவச்சுக்க எந்த எல்லைக்கும் போவேன்!” என்றவனின் அதிகாரக் குரலில் நிலாவுக்குக் கிலி பிடித்தது.
“ரொம்ப அக்ரஸிவா பிஹேவ் பண்ற ருத்ரா!”
“ஐ நோ! கிளம்பு”
அமைதியாகக் குளித்துக் கிளம்பி வெளியே வந்தாள் நிலா. சிறிது தூரம் வீட்டைவிட்டு நடந்து சாலைக்கு வர, அங்கு ஒரு கார் தயாராக இருந்தது.
காரில் ஏறியதும் போனை ஆன் செய்தவன், சரபனுக்கு அழைத்தான்.
அவர்களோ மூச்சுவாங்கக் காட்டுக்குள் சுற்றிக்கொண்டிருந்தனர்.
“ருத்ரா கால் பண்றான்!” என்று சரபன் சத்தமிட, பத்ரன் வேகமாகப் போனைப் பிடுங்கி ஆன்செய்தான்.
“இடியட் ருத்ரா! எங்க போய் தொலைஞ்ச…”
தம்பி கத்தலை கண்டுகொள்ளாமல்,
“நான் எஸ்டேட் வந்துட்டு இருக்கேன்! நீங்க ட்ரக்கிங் போனது போதும், திரும்பி வந்துடுங்க!” என்று நக்கலாகச் சொல்லிவிட்டு போனை வைக்க, பத்ரன் போனைத் தூக்கிப்போட்டு உடைத்தான்.
“ஐயோ என் போனு! டேய் நாசமா போனவனே கோவம் வந்தா உன் போனை உடைக்க வேண்டியதுதான, எங்கடா உன் அண்ணன்? என்ன சொன்னான்?”
“நாம நாய் மாதிரி இங்க சுத்துறது அவனுக்குத் தெரிஞ்சிருக்கு! கூலா ‘எஸ்டேட் வாங்க’னு சொல்லிட்டு வச்சுட்டான்”
“அதான் கூலா சொல்லிட்டான்ல வந்து தொலைங்க போவோம்” என நால்வரும் திரும்பி வந்தார்கள்.
ருத்ராவின் கார் கெஸ்ட் ஹவுஸுக்குள் நுழைந்ததும் அவளது கைகளை இறுகப் பிடித்த ருத்ரா, “ஆறு வருஷம் என் கண்ணுல மண்ணைத் தூவிட்டு ஓடி ஒளிஞ்சு இருந்துட்ட! மறுபடியும் என்னை விட்டுத் தப்பிச்சு ஓட நினைச்சா, இரக்கமே இல்லாம உன்னைக் கொன்றுவிடுவேன் ஆரலி!” என்று அடிக்குரலில் மிரட்டினான்.
எச்சில் கூட்டி விழுங்கிய நிலா தலையை ஆட்டிவிட்டு இறங்கினாள்.
அவர்களைக் கண்ட சாம்பவி “ருத்ரா வந்துட்டான்!” என்று கத்திட, மற்றவர்களும் வெளியே வந்துவிட்டனர்.
“அம்மா!” எனப் பார்வதியை ஓடிப்போய்க் கட்டிக்கொண்டாள் நிலா.
“அம்மாடி…” சோமசுந்தரம் கவலையாக மகளை மேலிருந்து கீழ்வரை பார்த்தார்.
“அப்பா நான் நல்லா இருக்கேன்!” என அப்பாவை சமாதானம் செய்தாள் நிலா.
“ருத்ரா உள்ள வா. உன்கிட்ட பேசணும்!” என்று பேரனை முறைத்துவிட்டு உள்ளே போனார் நடராஜன்.
நிலாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு தாத்தாவோடு போனான்.
“நிலா நாம வீட்டுக்கு கிளம்பலாம்டி இவங்க ஏதேதோ சொல்றாங்க, இவங்க பையன் வேற உன்னை தெரியாத இடத்துக்கு தூக்கிட்டு வந்துட்டான். எங்களுக்குப் பயமா இருக்கு!” என்று பயந்த அம்மாவைச் சமாதானம் செய்தாள் நிலாஞ்சி.
“அம்மா, அப்பா என்னால இப்போ வீட்டுக்கு வர முடியாது, ருத்ரா விட மாட்டான் என்னால உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வரதை நான் விரும்பல”
“என்னடி பேசுற? அப்போ அந்தப் பையன் கூட இருக்கப்போறியா?”
“ம்மா, உனக்கு நான் சொல்றது புரியல. அவன் ரொம்ப ஆக்ரோஷமா இருக்கான்!” என்று கண்கள் கலங்கச் சொன்னாள்.
மகனைப் பற்றி பேசுவது காதில் விழுந்தாலும், மறுத்துப் பேசாமல் நின்றார் சாம்பவி.
“அக்கா!” என்ற அலறலோடு திகள் ஓடிவந்து நிலாவை அணைத்துக்கொண்டாள்.
“அழாத திகள்! நான் நல்லா இருக்கேன். தைரியமா இருக்காம சின்னப் புள்ளை மாதிரி அழுகுற, கண்ணைத்தொட” என்று கடிந்துகொண்டாள்.
“நான் அழல அக்கா, உன்னைக் காணாமல் பயந்துட்டேன். நம்ம வீட்டுக்குப் போகலாம்!” என்று அவளை எழுப்பினாள் திகள்.
“உன் அண்ணன் வரதுக்குள்ள இவங்களை அனுப்பிடலாமா?” என்று கேட்ட சரபனை முறைத்த பத்ரன், “அடுத்த தடவை நிலாவை தூக்குனா, கண்ணிலேயே காட்ட மாட்டான் பரவாயில்லையா? வெயிட் பண்ணு ஒரு வெளிய வந்து முடிவு சொல்லுவான்!” என்றான்.
நிலாவிடம் வந்த சரபன் “அவன் கொஞ்ச நாளா மாத்திரை சாப்பிடலை நிலா, எப்படி நடந்துக்குறான்? உன்னை காயப்படுத்தலையே!”
“ரொம்ப அக்ரஸிவா இருக்காரு சார்! என்னால ஹேண்டில் பண்ண முடியல”
அவளது நிலை புரியத்தான் செய்கிறது அவனுக்கும் ருத்ரா மீது கோவம் இருக்க, பதிலுக்கு நண்பனை கேள்வி கேட்க முடியவில்லை.
“அழாதம்மா, என்ன பண்றதுனு பார்க்கலாம். ஒரு நிமிஷம்…” என்று தன் பேக்கில் வைத்திருந்த சிறிய பாக்ஸை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
“இது ருத்ராவுக்காக டாக்டர் எமர்ஜென்சிக்கு கொடுத்தது. அவனைச் சமாளிக்க முடியாத நிலை வரும்போது யூஸ் பண்ணு.
இந்த பாட்டில்ல இருக்குறதை தினமும் கொடுக்கணும். கொஞ்ச நாளா கொடுக்க முடியல இப்போ நீ கூட இருக்குறதுனால உன்கிட்ட தரேன். நீயே அவனுக்குக் கொடுத்திடு”
“ஓகே சார், பட் அவரு சாப்பிடலைனா?”
“வேற வழி இல்ல. தண்ணி, பால்ல கலந்து கொடு. இந்த இன்ஜெக்ஷனை வச்சுக்கோ!” என்று யாருக்கும் தெரியாமல் அவள் கைகளில் கொடுத்து, ஒருமுறை அழுத்திவிட்டு போனான்.
அவளுக்கு முன்பைவிட இப்போது தான் பயம் அதிகமாக வந்தது. வேகமாக அந்த பாக்ஸை பேண்ட் பையில் போட்டு மறைத்துக்கொண்டாள் நிலா.
தாத்தாவிடம் பேசிவிட்டு வந்த ருத்ரா, நிலா அருகில் போய் அமர்ந்துகொண்டான்.
அவனைப் பார்த்து திகள் முறைக்க, பத்ரன் அவளைத் தன் பக்கம் இழுத்தான்.
“விடுங்க மாமா! அக்கா முகத்தைப் பாருங்க எவ்வளவு பயந்து போயிருக்கா.
நாலு கேள்வி கேட்டுட்டு வரேன். உங்க அண்ணனுக்கு நீங்க சப்போர்ட் பண்ணாதீங்க!” மூக்குவிடைக்க சண்டை போட தயாராக நின்ற குட்டச்சியை அமுக்கி பிடித்தான் பத்ரன்.
“சிவக்குற மூக்கைக் கடிச்சு வச்சுடுவேன் குட்டச்சி! அமைதியா நில்லு, எகிறிட்டுப் போனா உன் அக்காவை இனி பார்க்கவே முடியாது. அவன்கிட்ட யோசிச்சுப் பேசு!” என்று எச்சரித்தான்.
நடராஜன் இப்போது பேச ஆரம்பித்தார்.
“சோமசுந்தரம், உங்க இரண்டு பொண்ணுங்களையும் என் பேரன்களுக்கு பெண் கேட்கிறேன். முதல்ல ருத்ரா, நிலா கல்யாணத்தை வச்சுக்கலாம்.
கொஞ்ச நாள் கழிச்சு இரண்டாவது கல்யாணம், நீங்க என்ன சொல்றீங்க?”
பேரனின் பிடிவாதத்திற்கு வேறு வழியில்லாமல் பெண் கேட்டார்.
சோமசுந்தரத்தை துளைக்கும் விழிப் பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ருத்ரா!
“அவர் என்ன சொல்லப்போறாரு தாத்தா! கல்யாணம் ஆனதுக்கப்புறம் மகளை அடிக்கடி பார்க்க முடியுமானு கவலையில இப்பவே பேசமுடியாம உட்கார்ந்திருக்காரு. மத்தபடி அங்கிள் மேரேஜுக்கு நோ சொல்ல மாட்டாரு அப்படித்தானே அங்கிள்?”
“கவலைப்படாதிங்க, நீங்க எனக்கு அத்தை, மாமாவாகப் போறீங்க. ஆரலியை எப்போ வேணுமோ அப்போ என் வீட்டுல வந்து பார்த்துக்கலாம். சரிதானே மஃபின்?” என்று நிலாவின் தோள்களில் கைபோட்டபடி கேட்டவன் தன் பிடியில் அழுத்தம் கொடுத்தான்.
“ஆமாம் அப்பா! நான் சென்னையில்தான் இருப்பேன். நீங்க எப்போ வேணுமோ என்னை வந்து பார்க்கலாம்!” என்று கண்கள் கலங்கச் சொன்னாள்.
“இதைவிட யாரும் இன்டைரக்ட்டா அவங்களை மிரட்ட முடியாது சார்” என்று முணுமுணுத்தான் விமல்.
“டேய் அவன் டைரக்ட்டா மிரட்டுறான்! ம்ம்ம் பொண்ணைப் பெத்தவங்க பாவத்தை வாங்குறான்” என்று சரபன் அதிருப்தியுடன் நண்பனைப் பார்த்தான்.
“அக்கா உனக்கு என்ன பைத்தியமா? ஏன் பயப்படுற? பிடிக்கலைனா தைரியமா சொல்லு”
“திகள் வாயை மூடு, பெரியவங்க பேசிட்டு இருக்கும்போது ஏன் கத்துற?” என்று பார்வதி சத்தமிட்டார்.
“நீங்க எங்க பேசுறிங்க? அவரு மிரட்டுறாரு, அக்காவும் பயத்துல ஓகே சொல்றா.
இங்க என்ன நடக்குது… அப்பா ஏன் அமைதியா இருக்கீங்க?”
“விழி அமைதியா இரு!” என அவள் கைகளைப் பிடித்தான் பத்ரன்.
“கைய விடு! எனக்கு மட்டும் நல்ல புருஷன், நல்ல புகுந்த வீடு கிடைச்சா போதுமா? இவர் கூட அக்கா எப்படி வாழுவா, பார்வையாலேயே அவளை மிரட்டுறாரு. போதாத குறைக்கு நிலாஞ்சியை ஆரலின்னு வேற பேர்ல கூப்பிடுறாரு
அக்கா நமக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம். பெங்களூரு போகலாம்!” என்று கெஞ்சினாள்.
திகள் பேச்சில் பத்ரனின் மனம் எவ்வளவு காயப்படும் என்பதை அவள் உணரவில்லை. அக்காவுக்காக தன் வாழ்க்கை போனாலும் சரி எனத் துணிந்து பேசினாள்.
தங்கையின் பேச்சில் எழுந்த அழுகையை அடக்கிய நிலா, “போதும் திகள் நிறுத்து! ருத்ராவைக் கல்யாணம் பண்ணிக்க எனக்குச் சம்மதம். அப்பா உங்க முடிவைச் சொல்லுங்க!” என்றாள்.
மகளை உற்றுப் பார்த்தார் சோமசுந்தரம். தந்தையின் பார்வையில் இருந்த குற்றச்சாட்டில் தலைகுனிந்தாள்.
“சரிங்க சார். உங்க விருப்பப்படியே முதல்ல இவங்க கல்யாணம் நடக்கட்டும் அடுத்து விழிக்கு பார்த்துக்கலாம்!” என்று அமைதியாகச் சொன்னார்.
“குட் நாங்க கிளம்புறோம். ஆரலி என் கூடத்தான் இருப்பா நீங்க மேரேஜுக்குத் தயாராகுங்க!” என்று அசால்ட்டாகச் சொல்லிவிட்டு எழுந்தவனை அதிர்ச்சியாகப் பார்த்தார்கள்.
சரபனுக்கு இப்போது கோபம் வந்துவிட்டது.
“மச்சான் நீ ஓவரா போற! கல்யாணம் முடிவாகிடுச்சு, நிலா அவங்க வீட்டுல இருக்கட்டும். தனியா உன்கூட இருக்குறது சரிவராது!” என்றான்.
நிலா பயத்தோடு ருத்ராவைப் பார்த்தாள்.
‘இவனைச் சமாளிக்கிறதுக்குள்ள மேலோகம் போய்டுவேன் போல!’
“நான் உங்ககிட்ட பர்மிஷன் கேட்கல, இன்ஃபார்ம் பண்றேன். ஆரலி போகலாம்!” என்று தன் கைகளை அவளை நோக்கி நீட்டினான்.
‘இவன் கூடப் போனா என் குடும்பத்தை சமாளிக்க முடியாது! போகலைனா என் குடும்பத்தையே எனக்காக அழிச்சிடுவான்’
உள்ளம் பரிதவிக்க தன் அம்மா, அப்பாவைப் பார்த்து, “சாரிம்மா, சாரிப்பா!” என்றவள் ருத்ராவின் கைகளைப் பற்றிட, அவளைத் தூக்கிக்கொண்டு வெளியே நடந்தான்.
“வெல் பிளே கேர்ள்! இன்னும் எத்தனை நாளைக்கு இந்த விளையாட்டு?” என்றவனின் புதிரான கேள்வியில், அவனை அழுத்தமாகப் பார்த்த நிலாஞ்சி “கடைசிவரை!” என்றாள்.
“உன்னால முடியுமா?”
“முடியும்! ஒருவேளை தோக்குற நிலைமை வந்தா செத்துருவேனே தவிர, தோல்வியை ஒத்துக்க மாட்டேன்!” என்றவளின் இடையை இறுக்கமாகப் பற்றியவன் “அந்த ஆப்ஷனை உனக்கு நான் கொடுக்கப்போறதில்ல மஃபின்!” என்று வில்லத்தனமாகச் சிரித்தான்.
அவனுக்குப் பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிய நிலா “சென்னை போகலாம், இங்க இருக்க வேண்டாம்!” என உத்தரவிட்டாள்.
“ஓகே போகலாம்! கார்ல போகலாமா, இல்ல பிளைட்?”
“பிளைட்ல போகலாம், டயர்டா இருக்கு. என் டிரஸ் எல்லாம் எங்க வீட்டுல இருக்கே…”
“நோ நீட், உனக்குப் புதுசா எல்லாம் நம்ம வீட்டுல ரெடியா இருக்கும்!” என்றவனை முறைத்தவளோ, “நானும் அவங்க பொண்ணுதான். என்னை மட்டும் ஏன் தூக்கிப் போடாம கூடவே வச்சுட்டுச் சுத்துற?” என்று கத்தினாள்.
“நீ என்னோட பொருள்டி! எனக்கே தெரியாம திருடிட்டுப் போனதுக்கு தண்டனை கொடுக்காம வச்சிருக்கிறதே பெருசு” என்றவன் வில்லப்பார்வையில்,
“அரக்கா! தண்டனை கொடுக்கிறேன்னு அவங்ககிட்ட போய்ப் பாரு அப்புறம் இருக்கு! இதோட உன் முட்டாள்தனத்தை நிறுத்திக்கோ ருத்ரா. அவங்க எனக்கு கடைசிவரை வேணும்!” என்றாள் முடிவாக,
“ஃபைன், நான் ஒன்னும் பண்ணல பட், நீ சமத்தா என் கூடவே இருக்கணும்” என்று அவள் இதழோடு இதழ் உரசினான்.
‘இந்தக் காதல் சைக்கோவிடம் மாட்டுவதற்கா இத்தனை வருடம் சிங்கிளாகச் சுற்றினோம்!’ என நொந்துகொண்டு பொம்மை போல அவனோடு சென்றாள்.
நிலா போனதும் திகள் தாம்தூமென்று குதித்தாள்.
“கல்யாணம் பண்ணிக்கப்போற அவளே சரின்னு ஒத்துக்கும்போது உனக்கு என்ன பிரச்சினை திகள், அமைதியா இரு!” என்று பார்வதி ஒரு அரட்டல் விட, அமைதியாக எதுவும் பேசாமல் திகள் உள்ளே போய்விட, பத்ரனோ வெறும் பார்வையாளராக இருந்தான்.
சரபன் தன் போனில் யாருக்கோ மெசேஜ் அனுப்பியவன், முகத்தில் எதையும் காட்டாமல் அமைதியாக நடராஜன் பேசுவதைக் கேட்க ஆரம்பித்தான்.
“சென்னை போனதும் நல்ல நாள் பார்க்கலாம் தம்பி! நீங்க நிலாவை பத்தி கவலைப்பட வேண்டாம். அவ எங்க பொறுப்பு!” என்று உறுதியளித்தார்.
அமைதியாக அனைவரும் சென்னை கிளம்பினர். ஒரு ஜோடி குதூகலமாகச் சென்னை போய்விட, இன்னொரு ஜோடி முகத்தைத் திருப்பிக்கொண்டு வந்தது.
வாரங்கள், நொடிகளாக கண்மூடி திறப்பதற்குள் ஓடிக்கொண்டிருந்தது. கல்யாணம் வைக்குறேனு படம் காட்றானே தவிர டேட் குறிக்க மாட்றானே என நிலா குடும்பம் குழப்பத்தோடு சுற்றுகிறது.
நிலா காலையில் சமையலறையை உருட்டிக்கொண்டிருந்தாள். மூன்று வாரங்கள், அவனோடு இருப்பதே பெரும் போராட்டமாக இருந்தது.
தன்னை இம்சை செய்யத் திட்டமிட்டே நடந்துகொள்கிறானோ என்ற சந்தேகம் அவளுக்கு! ஆபீஸ் பக்கம் போய் மாதம் நெருங்கப்போகிறது, அவளை எங்கும் விடாமல் தலையணை போலத் தூக்கிக்கொண்டு சுற்றுகிறான்.
“சும்மா இருக்க போர் அடிக்குது ருத்ரா! ஆபீஸ் போயிட்டு வரேன், நீயும் கூட வா!” என்றவளைத் தலையைத் திருப்பிப் பார்த்து, “போர் அடிக்குதா? இனி அடிக்காது!” என்றவனின் மாடுலேஷனைக் கவனிக்காமல் விட்டுவிட்டாள்.
பாவம், அடுத்த நாளே அந்த பங்களா வீட்டில் இருந்த எல்லா வேலையாட்களையும் வேலையிலிருந்து நிறுத்திவிட்டான்.
“ இனி எல்லா வேலையும் நீதான் செய்யணும். அப்போ உனக்குப் போர் அடிக்காது மஃபின்” என்றவனை,
“மனுஷனாடா நீ!” என்று பாவமாகப் பார்த்தாள்.
இரக்கமே இல்லாமல் ஒரு லிஸ்ட் கொடுத்து “இதை மதியம் சமைச்சு வை!” என்று சொல்லிவிட்டு கேம் விளையாடப் போய்விட்டான்.
‘இந்த லூசைப் பத்தித் தெரிஞ்சும் வெளியே போகவானு கேட்டேன் பாரு! என்னை சொல்லணும்!’ எனத் தினமும் தன்னையே நொந்துகொண்டு வேலை செய்கிறாள்.
‘பேசாம இவனைக் கொன்னுடலாமா?’ என்ற யோசனைகூட வரும் அளவுக்கு ருத்ரா மீது கோபம்.
ஒரு வாரம் கழித்துப் பாவம் பார்த்து வேலையாட்களை வரச் சொல்லவும், ‘இனி வாயைத் திறந்தேனா பாரு! வேலை சொல்லியே கொல்றானே’ என்று மனதிற்குள் புலம்பியவள், அவன் மடியில் ஏறிச் சமத்தாக அமர்ந்துகொண்டாள். கொஞ்சம் சீற்றம் தணிந்து புன்னகையோடு அவளை அணைத்துக்கொண்டான்.
அவள் தான் வெளியே போகக்கூடாது. ஆனால், வீட்டுக்கு வந்து நிலாவை பார்ப்பவர்களை அவன் தடுப்பதில்லை. திகள் வாரம் ஒருமுறை அக்காவை பார்த்துப் போவாள். நிலா அம்மா, அப்பாவிடம் தினமும் போனில் பேசுவாள்.
பழைய பாசமான பேச்சுகள் இல்லை, மகள் என்ற அக்கறை கொஞ்சம் ஒட்டியிருப்பதால் நலம் விசாரிக்கிறார்கள். அதை நினைத்து பல நேரம் ருத்ரா மீது ஆத்திரம் வரும். அவனைவிட்டு போக வழி இல்லையா? என்ற ஏக்கத்தில் தூங்கிப்போவாள்.
அபிராமியும் சாம்பவியும் மருமகளைப் பார்க்க வரும்போது வீடே அல்லோலப்படும். ருத்ரா அவர்களை முறைத்தாலும், இருவரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.
அன்று ருத்ரா ஆபீஸ் கிளம்பிக்கொண்டிருக்க, நிலா தோசை ஊற்றி எடுத்துவந்தாள்.
“மச்சான்!” என்று அழைத்தபடி வந்தான் சரபன். முன்பு போல ருத்ரா வீட்டுக்கு வருவதில்லை, நிலா இருப்பதால் சங்கடப்பட்டுக்கொண்டு வருவதை தவிர்த்தான்.
நிலாவை டைனிங் டேபிளில் கண்டவன், “நல்லா இருக்கியா நிலா? ருத்ரா எப்படி இருக்கான்? அவன்கிட்ட பேசி ரொம்ப நாள் ஆச்சு!” என்று அக்கறையாக விசாரித்தான்.
“நல்லா இருக்கோம் சார். உட்காருங்க ருத்ரா ரெடியாகிட்டு இருக்காரு”
“அவனுக்கு டேப்லெட் குடுக்கிறியாமா? ஏதாவது சேஞ்சஸ் தெரியுதா?”
“நீங்க கொடுத்த மாத்திரையை எதுல கலந்து கொடுத்தாலும் சாப்பிட மாட்டேங்கிறாரு! அது கலரே இல்லை. ஆனாலும் கண்டுபிடிச்சு வேண்டாம்னு சொல்றாரு.
பால்ல கலந்து வச்சிருக்கேன் இப்போ அவரு வந்ததும் குடிக்கச் சொல்றேன். என்ன ரியாக்ஷன் வருதுனு நீங்களே பாருங்க!”
“அவன் சாப்பிடலைனா நீ குடுக்காம இருக்காத! எப்படியாவது குடுத்துரு”
“டோன்ட் வொர்ரி! அன்னைக்கு சாம்பார்ல கலந்து கொடுத்த மாதிரி, ரசம், பாயசம் எதையும் விடாம தினமும் கொடுத்துருவேன்!” என்று சிரித்தவளைப் பார்த்து,
“எது பாயசமா? மாத்திரை பவர் இல்லாம போயிடப்போகுது” என்றான்.
இருவரும் பேசிக்கொண்டிருக்க, ருத்ரா ஃபார்மல் டிரஸில் தயாராகி வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தான்.
“எனக்கு சாலட் போதும் ஆரலி!”
“ஓகே, சாலட் சாப்ட்டு இந்தப் பாலை குடி!” என்று கொடுத்தாள்.
“நோ! எனக்கு மெடிசின் பால் வேண்டாம்” என்று உடனே மறுத்தான்.
“பார்த்தீங்களா?” என்று சரபனைப் பார்த்த ஆரலி, “சரி வேண்டாம்!” என்று உடனே சொல்லிட, அவனும் அமைதியாக சாப்பிட்டு முடித்தான்.
“நான் ஃபைல்ஸ் எடுத்துட்டு வரேன்!” என்று ருத்ரா உள்ளே போக, சரபன் அவளைக் கேள்வி கேட்க ஆரம்பித்தான்.
“அவன் வேண்டாம்னு சொல்றான் நீ ஓகேன்னு அசால்ட்டா சொல்ற…”
“ஏன் டென்ஷன் ஆகுறீங்க சார்? ஆல்ரெடி டேப்லெட்டை நுணுக்கி சாலட்ல தூவிட்டேன். இப்படித்தான் போகுது வாழ்க்கை, நான் என்ன பண்றது?”
அவன் மருந்துகளைச் சாப்பிடுகிறான் என்றதும் நிம்மதியான சரபன் “உனக்கு ருத்ராவைக் கல்யாணம் பண்ணிக்க முழுச் சம்மதமா நிலா?” என்று கேட்டான்.
ருத்ரா வருகிறானா என்று எட்டிப் பார்த்த நிலா,
“இல்லை சார், எனக்குப் பயமா இருக்கு! அவரைவிட்டு போனா என்னை மட்டும் இல்ல என் அம்மா, அப்பாவைக் கொன்னுடுவேன்னு சொல்லி மிரட்டி என்னைச் சம்மதிக்க வச்சிருக்காரு.
யார்கிட்டயும் உண்மையை சொல்ல முடியாம கஷ்டப்படுறேன்!” என்று கண்கள் கலங்கச் சொன்னாள்.
“என்னம்மா சொல்ற? இந்த அளவுக்குப் போயிட்டானா”
“ஆமாம் சார்!” என்றவள், காட்டுக்குள் தன்னை இரவு முழுவதும் வெளியே நிற்கவைத்ததைச் சொன்னாள்.
“நான் உயிரோட இருக்கணும், என்னால என் குடும்பம் பாதிக்கப்படக்கூடாதுனு அமைதியா இருக்கேன். அதுக்காக இவனைக் காதலிக்கிறேன்னு அர்த்தம் ஆகிடாது”
“வெளிய போக முடியல! அவன் போன்லருந்து என் அம்மா, அப்பாகிட்ட பேசுறேன். எப்படி இதிலிருந்து தப்பிக்கிறதுனு புரியல…”
அதற்குள் ருத்ரா வந்துவிட, நிலா பேச்சை நிறுத்திவிட்டாள்.
“நான் குடுத்த மெடிசின் பாக்ஸ் பத்திரம் நிலா! நாளைக்கு நான் திரும்ப வரேன், தெளிவாகப் பேசலாம்” என்று மெதுவாக சொல்லிவிட்டு காரில் போய் அமர்ந்துகொண்டான்.
“ஆரலி!” என்று அழுத்தமாக ருத்ரா அழைக்க, பயத்தில் எச்சில் விழுங்கியபடி அவனிடம் போனாள் நிலா.
அவளை இழுத்து அணைத்தவன் “உன் பேபி ஊருக்கு வந்திருக்கு போல”
அவன் பேச்சில் நக்கல் கொட்டிக்கிடந்தது.
“அவன் வந்தா உனக்கு என்ன? நீ ஏன் அவனை ஃபாலோ பண்ற ருத்ரா?”
“ஏன் உனக்குத் தெரியாதா?” என்று அவளை உறுத்து விழித்தான்.
அவன் பார்வையில் இன்னும் பயம் கவ்விக்கொண்டது நிலாவுக்கு,
“நீ என் கைக்குள்ள இருக்குற வரைக்கும் நான் வெறும் ருத்ராவா இருப்பேன். என் கைமீறி நீ போக நினைச்சா, இந்த ருத்ரா காணாம போய்டுவான் ஆரலி.
ஏகதச ருத்ராவோட கோபத்தை நீயும் உன் குடும்பமும் தாங்க முடியாம பஸ்பமாகிடுவிங்க! எனக்குத் தெரியாம இங்க எதுவும் நடக்காது! ஈவன் நீ தர டேப்லெட் முதற்கொண்டு உன்னை நம்பி சாப்பிடுறதுக்குக் காரணம்,
என் வாழ்க்கையை உன்கிட்ட ஒப்படைச்சிருக்கேன். நான் பண்ண தப்புகளுக்குப் பிராயச்சித்தமா உனக்கு ஒரு வாய்ப்பு தந்திருக்கேன்.
இதை எப்பவும் ஞாபகம் வச்சுக்கோ, மஃபின்! ஈவ்னிங் நான் சீக்கிரம் வந்துருவேன் வெளியே போகலாம். மேரேஜ், ரிசப்ஷன் டேட் ஃபிக்ஸ் பண்ணிட்டதா தாத்தா கால் பண்ணாரு. அவங்களைப் பார்த்துட்டு உனக்கு டிரஸ் ஆர்டர் கொடுத்துட்டு வரலாம்!” என்று அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டுவிட்டு கிளம்பினான்.
ருத்ரா போனதும் தளர்ந்து அமர்ந்துவிட்டாள் நிலாஞ்சி.
