ஐந்து வருடங்களாய் உருகி உருகி காதலித்து, விதியின் மதியால் ஆறு வருடங்களாய் பிரிந்து இன்று மீண்டும் சந்திக்கும் பொழுது கூட அவளது கண்களில், அதே காதலை பார்த்தவனுக்கு எதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. ஆறு வருடங்களின் பிரிவெல்லாம் அவனுக்கு ஒன்றுமே இல்லாதது போலத் தோன்றியது.
மெல்ல இரு கைகளில் இருந்து அவனது சட்டையைக் கழற்ற, தனது வெற்று மார்பில் ஜியாவின் மென்மையான விரல்கள் பட்டதில் அவனுக்குள் மின்சாரமே பாய, நூலளவு இடைவெளியில் அவளது மூச்சு காற்று, மேலும் தன் தேகத்தின் உஷ்ணத்தைக் கூட்ட, உணர்ச்சியின் போரில் சிக்கிக்கொண்டவன், உயிரோடு உயிர் கோர்க்காமல், சின்னச் சின்னத் தீண்டல்கள் கூடக் காதலில் இன்பம் அளிக்கும் என்பதை அன்று முதன்முதலாய் உணர்ந்தான்.
இதழின் சேர்க்கையைத் தாண்டி மனதின் சேர்க்கையின் சுகத்தை உணர்ந்தவனுக்கு இந்த நொடி மறுஜென்மமாய் தோன்றியது.
ஆஷிக் காதலில் மூழ்கிருந்த வேளையில் ஜியா, “எங்க வலிக்குது?” என்று கேட்டவாறு அவனைப் பார்க்க, அவன் தன்னையே மெய் மறந்து பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. சில நொடிகள் யோசித்தவள் சட்டென்று அவனது முதுகைத் தட்ட, எந்தவித துடிப்பும் இன்றி புன்னகையோடு,
“என்ன?” என்று ஆஷிக் கேட்டதும் அவன் வலி என்று கூறியது அனைத்தும் நடிப்பு, தன்னை ஏமாற்றுகிறான் என்பது அவளுக்கு நன்றாக புரிய,
“எங்க வலிக்குதுனு கேட்டேன்?” என்று அவள் கோபத்தில் பற்களைக் கடித்தவாறு கேட்ட பிறகே தன்னிலையை அடைந்தவன்,
“ஆமா வலிக்குது முதுகுல…” என்று வலிப்பது போல நடித்து குப்புற படுத்தான்.
“ஆஷிக் உனக்கு ரொம்ப வலி இருக்கும்னு நினைக்கிறேன், இதுக்கு இந்த மருந்தெல்லாம் கேட்காது. நான் சுடுதண்ணியால ஒத்தடம் குடுத்துட்டு, ஆயில் மசாஜ் பண்றேன் வலியெல்லாம் சரியாகிரும். நீ இப்படியே படுத்துக்கோ, நான் மசாஜ் பண்றதுக்குத் தேவையானதை எடுத்துட்டு வரேன்.” என்று அவள் சொன்னதும் உள்ளம் குளிர்ந்தவன்,
“ஓகே பேபி…” என்று கண்சிமிட்டிவிட்டு நன்றாகக் குப்புற படுத்துக்கொண்டு தனக்குள்,
‘அச்சோ என் பேபி இவ்வளவு மக்கா இருக்குதே? நான் நடிக்கிறத கூடக் கண்டுபிடிக்கத் தெரியலை. இன்னும் அப்படியே இருக்கா, நீ யாருடா ஆஷிக்காச்சே, உன் நடிப்புக்கு மயங்காதவங்க யாராவது இருப்பாங்களா என்ன?’ என்றவாறு ஆஷிக் தன் காலை ஆட்டிக்கொண்டிருக்க,
ஆஷிக்கை என்ன செய்வதென்று யோசித்த ஜியாவிற்கு ஒரு யோசனை வர, சட்டென்று தியாவிற்கு அழைப்பு விடுத்தவள் தியாவிடம், “தியா!”
“ஆமா, நீங்க யாரு?”
“ஜியா” என்றதும் கோபம் கொண்ட தியா,
“என்னடி வேணும் உனக்கு? ஏன் கால் பண்ணிருக்க?”
“உனக்கு உன் பேபி வேணும்னா, சீக்கிரமா என் வீட்டுக்கு வா.”
“ஆஷிக்கையா சொல்ற?”
“ஆமா, ஏன் உனக்கு வேற பேபி இருக்காங்களா என்ன?”
“என்னாச்சு? அவன் உன் வீட்ல என்ன பண்றான்?”
“கேள்வி கேட்காம நீயே வந்து பாரு, அவனுக்கு என்னாச்சு, இங்க என்ன பண்றான்னு?” என்றவள் தன் ஃபோனை வைத்துவிட்டு,
ஆதர்ஷ்க்கும் கால் செய்து உண்மையைக் கூற, இருவரும் அவனைக் காண ஜியாவின் வீட்டிற்கு வந்தனர்.
உள்ளே வந்த தியா வேற எதுவும் பேசாமல், “ஆஷிக் எங்கே?” என்று கேட்க,
“வாங்க” என்றவாறு அவர்களைத் தன் அறையினுள் அழைத்துச் செல்ல அங்கே ஆஷிக்,
“ஜியா எவ்ளோ நேரம்? கம் ஆன்… வலிக்குதுடா செல்லம்…” என்று கொஞ்சிக் கொண்டிருக்க,
“ஆஷிக்!” என்றவாறு தியா அவனது அருகில் சென்று, “என்னாச்சு?” என்று கேட்க ஆஷிக், தியாவைக் கண்டதும் குழப்பத்தில் இருக்க,
ஜியா, “அவருக்குக் கீழ விழுந்து முதுகு பக்கத்துல பயங்கரமான அடி. எழும்பக் கூட முடியாம கஷ்டப்படுறாரு. அதான் உன்னைக் கூப்பிட்டேன். மே பீ உன் கை பட்டா கேப்டன் சாருக்கு சீக்கிரமா குணமாகலாம்ல?” என்று கூறி ஆதர்ஷைப் பார்த்து கண்ணசைக்க பதிலுக்கு ஆதர்ஷ்,
“எஸ் ஜியா, நீ சரியா சொன்ன. ஒருவேளை தியாவால முடியலைனா நான் வேணும்னா மசாஜ் பண்றேன்.” என்றவன் ஆஷிக்கின் அருகில் சென்று,
“எங்கடா அடி?” என்று கேட்க,
சட்டென்று படுக்கையில் இருந்து எழும்பியவன் ஆதர்ஷிடம், “ஒரு அடியும் இல்லை.”
“அடி பட்டுருக்குனு ஜியா சொன்னாளேடா…”
“அதெல்லாம் ஒன்னும் இல்லை வா.” என்றவன், தன்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்த ஜியாவைப் பார்த்து முறைத்தவாறு அங்கிருந்து செல்ல, அவனைப் பின்தொடர்ந்து சென்ற தியா, ஜியாவை பார்த்து முறைக்க,
ஜியா அவளிடம், “ஹாவ் சம் கிரிப் ஆன் யுவர் பாய் ஃப்ரண்ட்.” என்று கூற தியா, ஜியாவைப் பார்த்து முறைத்தவாறே அங்கிருந்து சென்றாள்.
ஆதர்ஷ் ஜியாவிடம், “சாரி ஜியா, அவன் சின்னப் புள்ள மாதிரி எதாவது பண்ணுவான். ஆனா மனசுல எதுவும் இருக்காது. எதுவும் நினைச்சுகாத…”
“பரவாயில்ல ஆதர்ஷ், நான் இந்த ராத்திரில போய் உன்னை டிஸ்டர்ப் பண்ணிட்டேன், ஆனா எனக்கு வேற வழி தெரியலை.”
“பரவாயில்ல ஜியா, எனி டைம் ஃபார் யு.” என்றவன் அங்கிருந்து கிளம்பும் நேரத்தில் ஆஷிக் உள்ளே வர,
ஆதர்ஷ் அவனிடம், “என்னடா?” என்று கேட்க,
ஆஷிக் அவனிடம், “இப்படியேவா வர முடியும்? போ, வரேன்.” என்று கூறிவிட்டு உள்ளே வந்து தன் ஷர்ட்டை தேட பின் ஜியாவின் அருகில் வந்தவன், “நான் வேண்டாம், என் ஷர்ட் மட்டும் வேணும்.” என்றவாறு அவளது தோளில் இருந்த தன் ஷர்ட்டை எடுத்தவாறு அங்கிருந்து செல்ல, அவன் சென்றதும் ஜியா நிம்மதி பெருமூச்சு விட்டவளாய் தன் கட்டில் மீது இரு கரங்களையும் ஊன்றியவாறு, தன் கண்களை மூடி அமர்ந்திருக்க, சட்டென்று உள்ளே வந்த ஆஷிக் அவளது மூக்கில் தன் இதழைப் பதித்து,
“என்னை ஏமாத்துனல அதுக்கு…” என்று கண்சிமிட்டிவிட்டு அங்கிருந்து ஓட,
அவனது செய்கை ஜியாவிற்குப் புன்னகையை வரவழைத்தது. ஆனால் அது சில மணி துளிகளுக்கு மட்டுமே நீடித்தது. ஜியா, ஆஷிக்கின் செய்கையை நினைத்து புன்னகைக்க, மறுநொடி அவன் தனக்குச் செய்ததாய் நினைத்த துரோகம் ஞாபகத்திற்கு வர, அவளது முகத்தில் மீண்டும் கோபம் குடிகொண்டது.
***
