காதல் 13

 

சாயங்கால வேளையில் தன் பணியில் இருந்து திரும்பிய ஆஷிக் வாஷ்ரூமிற்கு செல்லும் வழியில், தன் செல்ஃபோன் சிணுங்கியதும் அட்டென்ட் செய்தவன், 

“ஹாய்மா, என் அம்மா செல்லம் எப்படி இருக்கீங்க?” என்று கொஞ்ச,

“என்னடா ஹாய்? ஒரு நாளாவது ஃபோன் பண்ணி அம்மா எப்படி இருக்கீங்க, சாப்டீங்களானு உனக்குக் கேட்க தோனுச்சாடா? உனக்கு வேலைனு வந்துட்டா யாரையும் நினைக்கிறது இல்ல, அப்படியே உங்க அப்பா மாதிரி…” என்று கூற அதுவரை சிரித்துக் கொண்டிருந்தவன், “இப்போ எதுக்கு அந்த ஆள பத்தி பேசுறீங்க?” என்று தன் வார்த்தைகளில் அனலைத் தெறிக்கவிட,

அவர் அவனிடம், “அப்படி சொல்லாதடா, அவரு பேசிருந்தாரு நீ அவர் சொல்ற எதையுமே கேட்க மாட்டிக்கியாமே? அவர் பேச்ச கேளுடா.”

“அம்மா…!”

“டேய் நான் ஒன்னும் முழுசா அவரோட பிஸ்னஸ பார்த்துக்கச் சொல்லல, அப்போ அப்போ உனக்கு டைம் கிடைக்கும் போது அப்பாக்கு உதவியா இருனுதான்…” என்று அவர் தொடர்வதற்குள்,

“இப்போ நான் உங்ககிட்ட பேசவா இல்லை ஃபோனை கட் பண்ணவா?” என்று அவன் கூறவும், 

“டேய் வச்சுராத, உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது? நான் சொல்ல தானே செய்யுறேன், ஒரு தாய் இதுகூடச் சொல்ல கூடாதா?”

“மா எனக்கு வேலை இருக்கு.”

“எனக்கும் வேலை இருக்குடா, நானும் இங்க சும்மா இல்லை. ஆயிஷாவை பொண்ணு பார்க்க அடுத்த வாரம் வராங்க. நீ, ஆதர்ஷ், தியா மூணு பேரும் வந்துருங்க, இதைச் சொல்லதான் நான் அடிச்சேன்.”

“பொண்ணு பார்க்கவா? நான் யாரையும் வர சொல்லலையே, உங்களுக்குத் தெரிஞ்ச இடமா?”

“உங்க அப்பாவோட நண்பரோட பையன்.” என்று அவர் கூற, அதற்கு ஆஷிக்கிடம் இருந்து எந்தப் பதிலும் வராமல் இருக்க, 

“ஆஷிக் பேசுடா”

“என்ன பேசுறது? அதான் எல்லாம் முடிவு பண்ணிடீங்கள்ல, அப்புறம் ஏன் என்னை கூப்புடுறீங்க?”

“நீ வரமா எப்படி…”

“அந்த ஆளு வருவாரா?”

“உன் அப்பாவா?”

“அதான்…”

“அவர் வராம எப்படி?”

“அப்போ ஆதர்ஷும் தியாவும் வருவாங்க.”

“டேய் பொண்ணோட அண்ணன் எங்கேனு கேட்டா நான் என்ன பதில் சொல்றது?”

“அப்போ அந்த ஆள வரவேண்டாம்னு சொல்லுங்க.” என்று குறுக்கும் நெடுக்கும் நடந்தவாறு ஆஷிக் பேசிக்கொண்டிருக்க, 

அவன் பின்னால் வந்த ஜியா மேலும் தொடர முடியாமல் அவதி பட, “வழி விடு.” என்று அவள் சிடுசிடுக்க,

“பார்த்தா தெரியலை, ஃபோன் பேசிட்டு இருக்கேன்.”

“அதைத் தள்ளி இருந்து பேசலாம்ல?”

“முடியாது” என்று ஆஷிக் கூற,

ஆஷிக்கின் தாய் ஹாஜரா, “என்னடா முடியாது?” என்று கேட்க,

“ஐயோ அம்மா நீங்க இல்லை, இது வேற.” என்றவன் ஃபோனை ஹோல்டரில் போட்டுவிட்டு, 

“என்னடி எங்க போனாலும் பின்னாடியே வர?”

“நானா? நீதான் என் முன்னாடி போற?”

“ஏய், வெயிட்… நேற்று நைட் நடந்ததை வச்சு நீ ஒன்னும் என் மேல…” என்று அவன் விஷமமாய் கேட்க,

“ஷட் அப்!” என்று வார்த்தையாலே சுட்டெரித்தவள், அவனைப் பார்த்து முறைத்துவிட்டு அங்கிருந்து செல்ல, 

அவள் பின்னாலே சென்றவன் தன் தாயிடம், “ஒன்னும் இல்லைமா, என் வழியில ஒரு காட்டு வெள்ளை பூனை குறுக்க வந்திருச்சு, அதை ச்சீ போனு துரத்தி விடுறதுக்கு நேரம் ஆகிட்டு.” என்று ஜியாவிற்கு கேட்குமாறு சத்தமாகக் கூறி, 

அவளது காதில், “மியாவ்…” என்று கத்த, அவள் திரும்பி முறைக்கும் நேரம் தன் தாயிடம், 

“சொல்லுங்கமா, அந்தப் பூனையா அது லேடிஸ் வாஷ்ரூம்குள்ள போயிடுச்சு.” என்று கூறி சிரிக்கவும் ஜியா, ஆஷிக்கைக் கண்டு முறைத்தவாறே வாஷ்ரூமுக்குள் நுழைந்தாள். 

அவனது தாய் குழப்பமாய், “என்னடா சொல்ற, பூனை எப்படி லேடிஸ் வாஷ்ரூம்குள்ள போச்சு?”

“ம்ம்… அது லேடி பூனைமா… இப்போ உனக்குப் பிரச்சனை நானா இல்லை அந்தப் பூனையா?”

“நீதான்டா.”

“ம்ம் சொல்லுங்க.”

“அதான்டா, நீ வராம எப்படி இருக்குறது? ஒரு தங்கச்சி, வர்றதுக்கு என்ன?”

“இப்போ எதுக்கு ஆயிஷாவை உள்ள இழுக்கிறீங்க?”

“பின்ன என்ன, நீ வந்து ஒரு ஓரமா நிக்கப் போற… அவர்கிட்ட நீ பேசக்கூட மாட்ட. அப்புறம் என்னடா? அம்மாக்காக வேண்டாம், ஆயிஷாக்காக வாடா. நீ வரமாட்டனு சொன்னா அவ கஷ்டப்பட மாட்டாளா?”

“சரிமா, அவகிட்ட எதுவும் சொல்லாதீங்க, நான் வரேன். ஆனா ஒரு கண்டிஷன், ஆயிஷாக்கு எல்லாமே நான்தான் செய்வேன், அந்த ஆளு எதாவது சீன் போட்டாரு, அப்புறம் எனக்குக் கெட்ட கோபம் வரும்.”

“நீ முதல்ல வா, மற்றது எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்.”

“சரிமா, நீங்க உடம்ப பார்த்துக்கோங்க, வச்சிடுறேன்.” என்று தன் அழைப்பைத் துண்டித்துவிட்டு, வாஷ்ரூமிற்குள் நுழைந்த மறுநொடி, 

ஆஷிக், “எனக்குனு ஒரு ஜாப் என் விருப்பப்படி அமைஞ்சிட்டா, அந்த ஆளுகிட்ட இருந்து எனக்கும் என் குடும்பத்துக்கும் விடுதலை கிடைச்சுரும்னு நினைச்சா, எங்க போனாலும் பின்னாடியே வராரு. இந்த அம்மா வேற தங்கச்சி விஷயத்துல எதுக்கு இவரை இன்வால்வ் பண்றாங்க? என் மொத்த வாழ்க்கையும் இந்த ஆள்கூடச் சண்டை போட்டே முடிஞ்சிரும் போல? அந்த ஆள பார்க்கவே பிடிக்கல, எப்படி அவர்கூட ஒருநாள் ஸ்பென்ட் பண்ண போறேன்னு நினைச்சாலே…” என்று தன் தலையைப் பிடித்தவன் பின்பு,

“ஆஷிக் நோ நோ… டோன்’ட் கெட் ஆங்கிரி, யு ஷுட் பீ கூல் யு ஆர் டூயிங் திஸ் ஒன்லி ஃபார் யுவர் ஃபாமிலி.” என்று தன்னை ஆசுவாசப்படுத்தி, தண்ணீர் கொண்டு தன் முகத்தை நான்கைந்து முறை கழுவ, அந்த நொடி தன் தந்தை மீது அவனுக்கு இருந்த கோபம் சற்றுத் தளர்ந்தாலும், அவர் மீது உள்ள வெறுப்பு கொஞ்சம் கூடக் குறையவில்லை. 

கொஞ்ச நேரம் தன் கண்களை இறுக்க மூடிகொண்டவன் தன் குழந்தைப் பருவத்தை நினைவில் கொண்டான். அப்பொழுது ஆஷிக்கிற்கு ஒரு எட்டு வயது இருக்கும், அன்றிரவு அவனது தாய்க்கும் தந்தைக்கும் எதோ பெரிய வாக்குவாதம் நடக்க, சத்தம் கேட்டு தன் கண்களைக் கசக்கியவாறே எழுந்து வந்தவன், தன் தாயை தன் தந்தை அடிப்பதைப் பார்த்து குறுக்கே வந்து, “அப்பா, அம்மாவ அடிக்காதீங்க.” என்று சொல்ல,

குடிவெறியில் இருந்த அவர், “முளைச்சு மூணு இலை விடல, என்னையே எதிர்கிறியா உன்னை…” என்றவர், கோபத்தில் அவனைத் தள்ளிவிட, அவர் தள்ளிய வேகத்தில் டேபிளில் மோதி நெற்றியில் ரத்தம் வழிய கீழே விழுந்தான். 

ரத்த வெள்ளத்தில் கிடந்த தன் மகனை ஓடிச்சென்று தன் மடியில் ஏந்திய ஹாஜரா தன் கணவரிடம், 

“என்ன பண்ணணுமோ பண்ணுங்க, எத்தனை கல்யாணம் வேணும்னாலும் பண்ணுங்க. தயவு செஞ்சி இங்க இருந்து கிளம்புங்க.” என்றவர் கண்ணீர் மல்க ஆஷிக்கை இறுக்க அணைத்துக் கொண்டார். 

கண்களில் நீர் வழிந்தவாறு தன்னையே அறியாமல் தன் வலது நெற்றியில் கை வைத்தவனுக்கு அன்று ஏற்பட்ட அந்த வடு தட்டுப்பட இப்பொழுதும் வலித்தது.

வெளியில் உள்ள காயம் வேண்டுமானால் ஆறிருக்கலாம், ஆனால் அதனால் ஏற்பட்ட வலி இன்னும் அவனது உள்ளத்தில் ஆறாத காயமாகவேதான் இருக்கிறது. 

அன்று தன் தந்தையின் மேல் ஏற்பட்ட வருத்தம் நாளடைவில் கோபமாக உருவெடுத்து இன்று வெறுப்பாக வளர்ந்து நிற்கிறது. இந்த வெறுப்பு நீங்குமா? குறையுமா? இல்லை நீடிக்குமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். 

தன் பணியை முடித்த ஜியா ஏர்போர்ட்டில் இருக்கும் பார்க்கிங் ஏரியாவிற்கு டாக்ஸியில் செல்வதற்காக வந்தாள். 

அப்பொழுது அங்கே நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் டாக்ஸியில் அமர்வதற்காக டாக்ஸியின் கதவைத் திறந்து கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து அவருக்குத் திடீரென்று இடுப்பு வலி வர வலியில் அலறினார். 

வலியில் துடித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்த ஜியாவின் கண்களில் நீர் வழிய, மனதில் ஒருவித படபடப்பு ஏற்பட முகமெல்லாம் வியர்த்து கொட்டி கை, கால் எல்லாம் உதற ஆரம்பித்தது. 

சுற்றி இருந்த அனைவரும் ஒன்று கூடி அந்தப் பெண்ணிற்கு உதவி செய்ய, ஏர்போர்ட்டில் வேலை பார்க்கும் சிலரும் உதவிக்கு வந்தனர். அப்பொழுது அவர்களில் ஒருவர் ஜியாவைக் கண்டு, 

“அதோ அவங்க ஒரு டாக்டர், அவங்கள கூப்பிடலாம்.” என்று ஜியாவைக் கை காட்டி அழைக்க, 

வேறு வழியின்றித் தயக்கத்துடன் சென்றவளிடம் சுற்றி இருந்தவர்கள், 

“மேம் இந்தப் பொண்ணு வயிறு வலிக்குதுனு சொல்றாங்க, கொஞ்சம் என்னனு பாருங்க.” என்று கூற, தயக்கத்துடன் அந்தப் பெண்ணை நெருங்கியவள் அவளை உற்று பார்க்க, அந்தப் பெண் ஜியாவின் கரங்களைப் பற்றிக்கொண்டு, 

“மேடம் ப்ளீஸ்… என் குழந்தையைக் காப்பாத்துங்க.” என்று கண்ணீர் மல்க வலியில் துடித்தவாறே கேட்க, 

ஜியாவின் கண்முன்னே, ரத்த வெள்ளத்தில் ஒரு பெண் தன் இருக்கரங்களையும் பற்றிக்கொண்டு, “உங்களை நான் நம்புறேன்.” என்று தன் கடைசி மூச்சை இழுத்தவாறு, தன் கரத்தில் மடிந்து போன பழைய நினைவுகள் அலை போல வந்து பாய மனதிற்குள் இடி இடித்தது போல இருந்தது. 

“மேடம் ப்ளீஸ்…” என்று பலமுறை முறையிட்ட பிறகு மூடியிருந்த தன் கண்களைத் திறந்து தன்னிலைக்கு வந்தவளின் கண்களில் கண்ணீர் வழிந்தோட, பலமுறை யோசித்த பிறகு பெருமூச்சு விட்ட ஜியா,

“லேபர் பெயின் வந்திருக்கு, உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும் ஆம்புலன்ஸ்…” என்றதும் கூட்டத்தில் ஒருவர், 

“ஃபோன் பண்ணியாச்சு, இப்போ வந்திரும்.” என்று சொல்லி முடிக்கவும் ஆம்புலன்ஸ் வர, அந்தப் பெண்ணை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள். 

மருத்துவமனைக்குப் போகும் வழியெல்லாம் எப்படியாவது இந்தப் பெண்ணையும் குழந்தையும் காப்பாற்ற வேண்டும் என்கிற ஒரே சிந்தனையை மட்டும் தனக்குள் மூச்சுக்கு முன்னூறு முறை கூறிக்கொண்டாள். 

ஹாஸ்பிடல் வந்ததும் மெல்ல வீல் சேரில் அமரவைத்து வலியில் கதறிய அந்தப் பெண்ணிற்கு ஆறுதல் கூறியவாறே அழைத்துக் கொண்டு சென்று, அங்குள்ள நர்ஸிடம் ஜியா விஷயத்தைக் கூற அவர், “இப்போ தானே வலி வந்திருக்கு, அவங்கள உள்ள படுக்க வைக்கலாம். டாக்டர் மீட்டிங் போயிருக்காங்க, டூட்டி டாக்டர்ஸ் இன்னும் வரல.” என்று அலட்சியமாய் கூற, தன் பார்வையாலே அந்த நர்ஸை சுட்டெரித்தவள், 

“தண்ணி குடம் உடைஞ்சிருச்சு, அப்படினா குழந்தை எப்போ வேணும்னாலும் பிறக்கலாம், நார்மல் டெலிவரி சிட்டுவேஷன தாண்டிட்டாங்க, வேற வழியே இல்லை ஆபரேஷன் பண்ணிதான் ஆகணும்.”

“மேடம் டாக்டர் இல்லை.”

“நானும் ஒரு டாக்டர், எனக்கு சர்ஜெரி பண்ண தெரியும்.” என்று ஜியா கூற, 

“மேடம் கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க, டாக்டர் வெளியில போயிருக்காங்க எங்களால எந்த முடிவும் எடுக்க முடியாது.”

“ஒரு உயிரை விட உங்களுக்கு முடிவெடுக்கிறது பெருசா போச்ச?, நான் ஒரு டாக்டர்னு சொல்றேன், இதுக்குமேலயும் உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லன்னா உங்க டாக்டரை வர சொல்லுங்க. ஆனா அவரு வர்ற வரைக்கும் ஒரு டாக்டரா என்னால பொறுமையா இருக்க முடியாது.” என்றவள், 

“இவ்வளவு பெரிய ஹாஸ்பிடல்ல இத்தனை பேஷண்ட்ஸ் இருக்காங்க, ஆனா அவங்க எல்லாரையும் விட்டுட்டு உங்க டாக்டர் வெளியில போயிருக்காரா? என்ன ஹாஸ்பிடல் நடத்துறீங்க, இப்போ நீங்க சர்ஜரிக்கு ஏற்பாடு பண்ண போறீங்களா, இல்லை நான் உங்க மேல புகார் கொடுக்கவா?” என்றதும், அந்த நர்ஸ் வேறு வழியில்லாமல் ஆபரேஷன்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்தாள். 

ஜியா அறுவை சிகிச்சைக்காக தேவையான மருந்துக்கள் எல்லாம் இருக்கிறதா என்று பார்த்து கொண்டிருந்தாள். 

அப்பொழுது அலைபேசியில் பேசியவாறே ஆறடி உயரத்தில், திடமான உடற்கட்டுடன், நேர்த்தியான உடையில், கம்பீரமான நடையில் ஒருவன் நடந்து வர, ஹாஸ்பிடலின் வரவேற்பு அறையில் இருந்த பெண் உட்பட அங்கிருந்த ஊழியர்கள் எல்லாரும் எழுந்து அவனுக்கு மாலை வணக்கம் தெரிவிக்க, அனைவருக்கும் தன் கண்களாலே பதிலளித்தவன் கதவைத் திறந்துகொண்டு உள்ளே செல்லும் நேரம் பார்த்து, வேகமாக ஓடி வந்த அந்த நர்ஸ் நடந்த அனைத்தையும் தெரிவித்து, ஜியா இருக்கும் இடத்தையும் கூறிவிட்டு, அவன் போ என்கிறவாறு கையசைத்ததும் அங்கிருந்து சென்றாள். 

அவள் சென்றதும் ஜியாவைத் தேடி சென்றவன் கண்களில் கோபம் மிளிர ஜியா இருக்கும் அறைக்குள் செல்ல முனையும் நேரம், கண்ணாடியின் வழியே ஜியாவைப் பார்த்தான். 

அவ்வளவு நேரம் கோபமாக இருந்தவனின் கண்களில் திடீர் வானிலை மாற்றம் போல, கோபம் தணிந்து, இதழோரம் புன்னகை வழிந்தது. 

அவனது முகத்திலோ பல நாள் தேடுதலை திடீரென்று கண்டுகொண்ட மகிழ்ச்சி எட்டிப் பார்த்தது. 

ஆபரேஷனுக்குத் தேவையான அனைத்தும் தயாராக இருக்க, ஜியா ஆபரேஷன் அறைக்குள் நுழைந்து, வலியில் துடித்துக்கொண்டிருந்த பெண்ணிடம், 

“உங்க வீட்ல உள்ளவங்களுக்குத் தகவல் சொல்லிட்டேன், நீங்க கவலைப்படாதீங்க, தைரியத்தை விட்றாதீங்க.” என்று ஆறுதல் கூறிவிட்டு, மயக்க ஊசியை அந்தப் பெண்ணிற்குப் போட, அந்தப் பெண் பயத்தில் ஜியாவின் கைகளைப் பற்றிக்கொள்ள, ஜியா அந்தப் பெண்ணின் கையைப் பிடித்தவாறு, “ப்ளீஸ் நீங்க பயப்…” என்று தொடரும் முன், 

“எஸ் பயப்படாதீங்க, நாங்க இருக்கோம்.” என்று கணீர் குரல் ஒன்று கேட்க, அறுவை சிகிச்சை அறையின் கதவைத் திறந்துகொண்டு ஆப்ரேஷன் செய்யும் போது உடுத்திக்கொள்ளும் உடையையும் முகத்தில் மாஸ்க்கையும் அணிந்துகொண்டு, ஒரு ஆண்மகன் கம்பீர நடையுடன் ஜியாவின் அருகில் நெருங்கி வர வர, ஜியாவின் முகத்தில் ஒளி மறைந்து இருள் சூழ்ந்துகொண்டது. அந்த மயக்க ஊசியின் தாக்கத்தில் அந்தப் பெண் தன்னிலை மறக்க, முகத்தை மூடிக்கொண்டு வந்த அந்த நபர், “ஹலோ மிஸ் ஜியா!” என்று கூறவும், 

ஜியாவின் கைகள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது. அதை ரசித்தவன் மெல்ல ஜியாவின் அருகில் நெருங்கி வந்து, “ஐயம் டாக்டர்…” என்று கூறுவதற்குள் ஜியா படபடத்த குரலில்,

“ஜீவா…” என்று கண்களில் பயம் சூழ்ந்துகொள்ளக் கூறினாள். அதைக் கேட்டவன் சிந்திய புன்னகை அவனது கண்களில் தெரிய, 

தன்னை அறியாமலே பின்னால் சென்ற ஜியா டேபிளில் மோதி விழ போகும் நேரம் பார்த்து தன் கரம் கொண்டு அவன் பிடிக்க, முகமெல்லாம் வியர்த்துக்கொட்ட, தலை சுற்றி அவன் மேலே விழுந்தாள்.

***

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!