Rolex 41

41

துறைமுகத்தின் பாழடைந்த இரும்புத் தூணில் இருந்து ரோலக்ஸின் கைகள் விலகிய போது, அங்கிருந்த காற்று மொத்தமும் உறைந்து போயிருந்தது போல் ஒரு நிசப்தம் நிலவியது. அவனது கண்கள் வெறும் கண்கள் அல்ல, அவை பாபியின் சாம்ராஜ்யத்தை எரித்துச் சாம்பலாக்கத் துடிக்கும் இரு எரிமலைகள். அவனது நெஞ்சுக்குள் அலெக்ஸின் மௌனமான அழுகுரலும், அந்த முதியவர் சொன்ன ‘நடுக்கடலில் வீசிவிட்டார்கள்’ என்ற வார்த்தைகளும் அலைகளாய் மோதி ஆக்ரோஷத்தை அதிகப்படுத்தின.

பாபி கொடுத்த அந்த வெள்ளை நிறத் துப்பாக்கியை இடுப்பிலிருந்து உருவி, அதன் மேல்பகுதியை விறுவிறுவென பின்னோக்கி இழுத்து தோட்டாக்களைத் தயார்ப்படுத்தினான் ரோலக்ஸ். அவனது அசைவுகளில் நிதானம் முழுமையாக மறைந்து, உக்கிரமான வேட்டையாடும் வேகம் மட்டுமே எஞ்சியிருந்தது. அவன் உடனடியாகத் தன் பைக்கை நோக்கிப் பாய முயன்றான். இந்த நொடியே, இந்த விநாடியே பாபியின் பங்களாவுக்குள் புகுந்து, அவனது நெஞ்சில் இந்த வெள்ளைத் துப்பாக்கியின் தோட்டாக்களை இறக்க வேண்டும் என்ற வெறி அவனது நரம்புகளைத் புடைக்கச் செய்தது.

ஆனால், அவனது முதல் அடி எடுத்து வைக்கப்படும் முன்பே, பைரவனின் இரும்புக்கரம் அவனது தோளைப் பற்றிக் கொண்டது. 

பைரவனின் முகம் வியர்வையாலும் பதற்றத்தாலும் நனைந்திருந்தது. ரோலக்ஸ் கோபத்தின் உச்சிக்குச் சென்றால் என்ன நடக்கும் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், இந்த நேரத்தில் அந்த கோபம் ரோலக்ஸையே அழித்துவிடும் என்பதையும் அவன் உணர்ந்திருந்தான். ரோலக்ஸ் தன் தோளைப் பற்றிய பைரவனின் கையை உதறித் தள்ள முயன்றான். அவனது பார்வை ‘என் வழியில் குறுக்கே நிற்காதே’ என்று பைரவனை எச்சரித்தது.

“ரோலக்ஸ்! நில்லுடா! கொஞ்சம் நான் சொல்றதைக் கேளு!” என பைரவன் உரத்த குரலில், ஆழ்ந்த தீர்க்கத்துடன் அவனது வழியை மறித்து நின்றான்.

தன் கையில் இருந்த துப்பாக்கியை பைரவனுக்கு நேராகக் காட்டிய ரோலக்ஸ், சைகையிலே கர்ஜித்தான், “நகரு பைரவா! அந்தப் பாபி  ஒரு அப்பாவிப் பையனைக் கொன்றிருக்கான். அவன் இன்னும் உயிரோடு வாழும் ஒவ்வொரு விநாடியும் இந்த ரோலக்ஸுக்கு இழப்பு, என்னை யாரும் தடுக்க முடியாது!” என கர்ஜித்தான்.

பைரவன் பின்வாங்கவில்லை. அவன் ரோலக்ஸின் கண்களை நேருக்கு நேர் பார்த்தான். அவனது குரலில் இப்போது ஒரு முதிர்ந்த ஆலோசகனின் நிதானம் இருந்தது.

“அவசரம் வேண்டாம் ரோலக்ஸ்! இப்போ நீ போனா பாபி சாவுறானோ இல்லையோ, உனக்கு ஆபத்து வர்றது நூறு சதவீதம் உறுதி. நீ பலமானவன் தான், உன்னோட வேகம் என்னன்னு எனக்குத் தெரியும். ஆனா, இப்போதைய சூழ்நிலையில அவன்கிட்ட ஆள் பலமும் பண பலமும் ரொம்ப அதிகம். அவனோட கோட்டைக்குள்ள நீ ஒத்த ஆளா புகுந்தா, சுத்தி இருக்குற நாய்ங்க உன்னை நிலைகுலைய வச்சிடும்,” என்று பைரவன் அவனது கையைப் பிடித்துத் தாழ்த்த முயன்றான்.

ரோலக்ஸ் மூச்சிரைக்க, தன் பற்களைக் கடித்தான். அவனது வலது கை துப்பாக்கியின் பிடியில் இன்னும் இறுக்கமாகவே இருந்தது.

மேலும் தொடர்ந்த பைரவன், “ரோலக்ஸ், இப்போ போய் உன்னோட வீரத்தைக் காட்டின உனக்கு எதிராத்தான் எல்லாமே முடியும். மாஃபியா உலகத்துல வீரம் மட்டும் போதாது ரோலக்ஸ், விவேகமும் வேணும். நீ இப்போ பாபியைத் தாக்கப் போய், அவன் ஒருவேளை தப்பிச்சாலோ… இல்ல நீ அவனை இப்போவே கொன்னுட்டாலோ… இரண்டுமே உனக்குத்தான் ஆபத்து. அவன் செத்தா அவனுக்குப் பின்னாடி இருக்குற பெரிய புள்ளிங்க உன்னை வேட்டையாட ஆரம்பிப்பாங்க. அவன் தப்பிச்சா, உன்னைத் தேடித் தேடி அழிப்பான். மீண்டும் அந்த தலைமறைவு வாழ்க்கை தான் வாழனும் ரோல்ஸ், அதுக்கு முன்னாடி உன் பக்கம் எல்லாமே திருப்பு … அவனுக்கு எதிரா எல்லாம் உருவாக்கு அப்பறம் உன்னுடைய போராட்டத்தை தொடரு .. அப்போ இந்த மாஃபியாவும் உன் பக்கம் இருக்கும் .” 

“அவனைப் பொறுமையா, தந்திரமா சாய்க்கிறதுதான் நல்லது. ஒரு சிங்கத்தை அதோட குகையிலேயே வச்சு அடிக்கணும்னா, முதல்ல அந்த குகையோட வழிகளை அடைக்கணும். பாபியை ஒரே அடியா வீழ்த்தக் கூடாது. அவனோட ஒவ்வொரு பலத்தையும் கொஞ்சம் கொஞ்சமா சிதைக்கணும். அவனோட ஆட்களை நம்ம பக்கம் திருப்பணும், அவனோட பணப் போக்குவரத்தை நிறுத்தணும். அவன் எப்போ தனியா நிப்பானோ, அப்போ ஒரே வெட்டு… தலை தனியா விழணும். அதுவரைக்கும் பொறுமையா இரு ரோலக்ஸ்,” என்று பைரவன் தன் தந்திரமான திட்டத்தை அடுக்கினான், அவனின் வார்த்தைகள் அந்த கடற்கரைக் காற்றில் பலமாக ஒலித்தன.

பைரவன் பேசி முடித்ததும் அங்கே நீண்ட மௌனம் நிலவியது. கடலின் அலைகள் கரையை மோதும் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. ரோலக்ஸ் அப்படியே நின்றான். அவனது கண்கள் மூடியபடி இருந்தன. அவனது நெஞ்சுக்குள் ஒரு பெரிய யுத்தம் நடந்து கொண்டிருந்தது. ஒருபுறம் அலெக்ஸின் ரத்தக் கறை படிந்த சங்கிலி அவனது கோபத்தைத் தூண்டியது, மறுபுறம் பைரவன் சொன்ன கசப்பான உண்மைகள் அவனது மூளையை வேலை செய்ய வைத்தன.

உண்மைதான், பாபி சாதாரணமாக வீழ்த்தப்பட வேண்டியவன் அல்ல. அவனைக் கொல்வது மட்டும் இலக்கல்ல, அவனது ஒட்டுமொத்த சாம்ராஜ்யத்தையும் வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். அதற்கு வீரம் மட்டும் போதாது, சூழ்ச்சியும் தந்திரமும் மிக முக்கியம்.

ரோலக்ஸ் மெதுவாகத் தன் கண்களைத் திறந்தான். அந்த கண்களில் இருந்த ஆத்திரத்தின் சிவப்பு மெல்ல மறைந்து, ஒரு ஆபத்தான, குளிர்ந்த அமைதி குடியேறியது. அவனது கைகள் நடுங்குவதை நிறுத்தின.

பைரவனை ஏறிட்டுப் பார்த்தவன், பின்னர் மெதுவாக, தன் கையில் இருந்த அந்த வெள்ளை நிறத் துப்பாக்கியின் சேஃப்டி லாக்கை  போட்டான். அதைத் தன் இடுப்பில் இருந்த உறைக்குள் பொறுமையாக உள்ளே வைத்தான். அவனது இந்த அசைவே அவன் பைரவனின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டான் என்பதைக் காட்டியது.

பைரவனின் தோளில் தன் கையை வைத்தான் ரோலக்ஸ்,  “நீ சொல்வது சரிதான் பைரவா… அவசப்பட்டு அவனோட இடத்துக்குப் போய் என் வீரத்தைக் காட்டுறதை விட, அவனோட நிழலாவே இருந்து அவனைக் கொல்றதுதான் சரி. பாபி சொகுசா வாழ்ற இந்த ஒவ்வொரு நாளும் அவனுக்கான மரணக் கயிறு பின்னப்பட்டுட்டு இருக்குன்னு அவனுக்குத் தெரியாது. அவனோட வியாபாரத்தை முதல்ல உடைப்போம். அவனுக்குத் துணையா இருக்குற அடியாட்களை ஒவ்வொன்னா காலி பண்ணுவோம். கடைசியா அவன் பயந்து நடுங்கி, தனியா நிக்கும் போது… நான் அவன் முன்னாடி போய் நிப்பேன். அவனோட சாம்ராஜ்யமே அவனுக்குச் சுடுகாடா மாறும்.” என்றவனின் சைகையில் இப்பொழுது மிகவும் நிதானமாகவும், அதே சமயம் கொடூரமான திட்டத்தைக் கொண்டதாகவும் இருந்தன.

ரோலக்ஸ் சைகை செய்து முடித்துவிட்டு, துறைமுகத்தின் எல்லையை நோக்கித் திரும்பினான். அவனது முகத்தில் ஒரு மேன்மையான, கொடூரமான புன்னகை அரும்பியது.

“நல்ல முடிவு ரோலக்ஸ். உன்னோட இந்த நிதானம்தான் பாபியோட அழிவுக்கு முதல் படி,” என்றான் பைரவன் நிம்மதியோடு.

இருவரும் அந்தப் பாழடைந்த குடோனை விட்டு வெளியேறினர். சூரியன் இப்போது உச்சி வானத்தை நோக்கி ஏறிக்கொண்டிருந்தது. ஆனால், பாபியின் சாம்ராஜ்யத்திற்கான அந்திப் பொழுது இப்போதே தொடங்கிவிட்டது என்பதை அந்த துறைமுகக் காற்று ரகசியமாக உணர்த்தியது.

ரோலக்ஸ், பைரவனின் பைக்குகள் மீண்டும் கடற்கரையோரப் பாதையில் சீறிப் பாய்ந்தன. ஆனால், குடோனுக்குச் செல்லும்போது இருந்த அவசரமும், பதற்றமும் இப்போது ரோலக்ஸின் அசைவுகளில் இல்லை. மாறாக, ஒரு தெளிவான, ஆழமான ஏரி போன்ற அமைதி அவனிடம் இருந்தது. வீட்டின் வாசலில் பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்த ரோலக்ஸை, மயூரா வாசலிலேயே எதிர்கொண்டாள்.

அவளது முகத்தில் இருந்த கவலை இன்னும் மறையவில்லை. அவனது கைகளைப் பார்த்து, அதில் ரத்தக்கறை ஏதும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகே அவளது மூச்சு சீரானது.

மயூரா அவனது முகத்தைப் பார்த்தாள். அவனது கண்களில் இருந்த அந்த உறைந்த இருள் ஏதோ ஒரு விபரீதத்தை உணர்த்தியது. அவள் அவனது கைகளைப் பற்றி, சைகையில் கேட்டாள்… “என்ன ஆச்சு ரோலக்ஸ்? அந்தப் பையன் பத்திரமா இருக்கானா? உன் முகம் ஏன் இவ்வளவு அமைதியா இருக்கு?”

ரோலக்ஸ் அவளை ஒரு சோபா நாற்காலியில் அமர வைத்தான். அவளது கைகளைத் தன் கைகளுக்குள் பொதிந்து கொண்டு, மெதுவாகத் தன் சைகை மொழியில் உண்மையைச் சொன்னான்.

“அலெக்ஸ் இனி வரமாட்டான் மயூரா… அந்தப் பாபி அவனை நேத்து ராத்திரி அடித்துக் கொலை பண்ணி கடலில் வீசிட்டான். நாம் அனுப்பிய சிக்னல் அவன் தந்தையைச் சென்றடைவதற்குள், அந்த அப்பாவி உயிரின் மூச்சை நிறுத்திட்டான் பாபி.” என்றான் 

இந்தச் செய்தியைக் கேட்டதும் மயூராவின் கண்கள் கலங்கின. அவளது உதடுகள் அதிர்ச்சியில் துடித்தன. ஒரு மௌனமான, எதற்கும் உதவாத ஒரு சின்னப் பையனை ஒரு மிருகத்தைப் போலக் கொன்றிருக்கிறார்கள் என்ற எண்ணம் அவளது இதயத்தை உடைத்தது. அவள் அழத் தொடங்கினாள். ரோலக்ஸ் அவளது கண்ணீரைத் தன் விரல்களால் துடைத்தான். அவனது விரல்களில் இருந்த சூடு இப்போது அவளுக்கு ஒரு தற்காப்பு அரணாகத் தோன்றியது.

“நான் அவனைக் கொல்லத்தான் கிளம்பினேன் மயூரா. ஆனால், பைரவன் என்னை தடுத்து நிறுத்தினான். அவன் சொன்னதுதான் சரி. இப்போ போய் என் வீரத்தைக் காட்டினா, அது அவனுக்கு நாம் தரும் எளிய மரணமாகிவிடும். அவன் சாதாரணமாகச் சாகக் கூடாது. அவனது சாம்ராஜ்யம் சிதைந்து, அவனது சொத்துக்கள் அழிந்து, அவன் ஒரு பிச்சைக்காரனைப் போலத் தெருவில் அலைந்து, மரணத்தை அவனே பிச்சையாகக் கேட்கும் நிலைக்கு அவனைக் கொண்டு வர வேண்டும். அதுவரை நான் பொறுமையாக இருப்பேன். இந்த ரோலக்ஸ் இனி ஒரு நிழல். பாபியின் மரண நிழல்.”

மயூரா அவனது வைராக்கியத்தைக் கண்டு வியந்தாள். கோபத்தை விட தந்திரம் எவ்வளவு வலிமையானது என்பதை அவனது சைகைகள் அவளுக்கு உணர்த்தின. அவள் அவனது தோள்களில் சாய்ந்து கொண்டாள்.

அன்று மாலை, ரோலக்ஸின் தங்குமிடத்தில் பைரவனும் அவனும் ஒரு பெரிய மேஜையைச் சுற்றி அமர்ந்திருந்தனர். மேஜையின் மீது பாபியின் துறைமுக வியாபாரங்கள், அவனது கடத்தல் பாதைகள், அவனுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் புள்ளிகளின் விவரங்கள் அடங்கிய வரைபடங்கள் மற்றும் ஆவணங்கள் சிதறிக் கிடந்தன.

ஒரு வரைபடத்தைச் சுட்டிக்காட்டிய பைரவன் …  “ரோலக்ஸ்… பாபியோட பிரதான பலமே அடுத்த வாரம் மலேசியாவிலிருந்து வர்ற அந்த ‘கோல்டன் ஸ்டார்’ கப்பல்தான். அதுலதான் அவனோட பல கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களும், ஆயுதங்களும் வருது. அந்தப் பொருட்கள் மட்டும் சந்தைக்குப் போயிடுச்சுன்னா, அவனோட பலம் இன்னும் பத்து மடங்கு அதிகமாகிடும். இப்போதைக்கு அவனோட பணப் புழக்கத்தை நிறுத்த அதுதான் சரியான வழி.”

ரோலக்ஸ் அந்த வரைபடத்தை உற்றுப் பார்த்தான். அவனது விரல்கள் மேஜையின் மீது ஒரு குறிப்பிட்ட தாள லயத்தில் தட்டின. அவன் தன் வெள்ளை துப்பாக்கியை எடுத்து மேஜை மீது வைத்தான். பின்னர் சைகை செய்தான்.

“அந்தக் கப்பல் துறைமுகத்துக்கு வர்றதுக்கு முன்னாடியே, நடுக் கடல்லயே அதை நாம் முடக்கணும் பைரவா. ஆனா, அதை நாம் கொள்ளையடிக்கப் போறதில்லை. பாபியோட ஆட்களே அந்தப் பொருட்களைக் கடத்திட்டதா ஒரு மாயையை உருவாக்கணும். பாபியோட வலது கையா இருக்குற குணாவுக்கும், அவனுக்கும் நடுவுல ஏற்கனவே ஒரு சின்னப் பனிப்போர் ஓடிட்டு இருக்கு. அந்த குணாதான் இந்தக் கடத்தலுக்குக் காரணம்னு பாபியை நம்ப வைக்கணும். ஒரு மாஃபியா தலைவனுக்கு அவனோட சொந்த ஆட்கள் மேலேயே சந்தேகம் வந்துட்டா, அவனோட வீழ்ச்சி அங்கேயே தொடங்கிடும்.”

பைரவன் வியப்புடன் ரோலக்ஸைப் பார்த்தான். “அற்புதம் ரோலக்ஸ்! குணாவுக்கும் பாபிக்கும் நடுவுல விரிசலை உண்டாக்கினா, பாபியோட பாதி பலம் குறைஞ்சிடும். குணாவுக்குத் தெரியாம அவனோட போன் சிக்னலையும், பேங்க் அக்கவுண்ட்டையும் நாம மாத்தி எழுதணும். அதை நான் பார்த்துக்கிறேன். நம்ம ஆளுங்க சில பேரை குணாவோட ஆட்கள் மாதிரி பாபியோட குடோன் பக்கத்துல நடமாட விடுறேன்.”

ரோலக்ஸ் தலையசைத்தான். அவனது கண்கள் அந்த வரைபடத்தில் இருந்த பாபியின் பங்களாவின் மீது நிலைத்திருந்தன.

‘பாபி… நீ சொகுசாகத் தூங்கும் இந்த ஒவ்வொரு இரவும், நீ சுவாசிக்கும் இந்த ஒவ்வொரு மூச்சும் உனக்குத் தற்காலிகமானது. அலெக்ஸின் ஆன்மா உன்னைச் சும்மா விடாது. இந்த ரோலக்ஸ் உன்னைச் சும்மா விடமாட்டான்,’ என்று தன் மனதிற்குள் சபதம் உரைத்துக் கொண்டான்.

துறைமுகப் பகுதியில் எந்த மாற்றமும் இல்லாதது போல் ஒரு தோற்றம் நிலவியது. பாபி வழக்கம் போலத் தன் பங்களாவில் மதுவிலும் மாதுவிலும் மூழ்கியிருந்தான். அலெக்ஸின் மரணம் அவனுக்கு ஒரு பெரிய விஷயமாகவே தெரியவில்லை. ஒரு பூச்சியைக் நசுக்கியதைப் போலத்தான் அவன் அதை நினைத்துக் கொண்டிருந்தான்.

ஆனால், அவனுக்குத் தெரியாமல் அவனது சாம்ராஜ்யத்தின் அடித்தளத்தில் ரோலக்ஸ் வைத்த வெடிமருந்து மெல்ல மெல்ல வேலை செய்யத் தொடங்கியிருந்தது. குணாவின் பெயரில் சில போலியான பணப் பரிவர்த்தனைகள் நடக்க தொடங்கியது. மலேசியாவிலிருந்து வர வேண்டிய ‘கோல்டன் ஸ்டார்’ கப்பலின் பாதைகள் மாற்றியமைக்கப்பட்டது.

கடற்கரையில் அமர்ந்து கடலையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த ரோலக்ஸின் மொபைலில் அந்தச் செய்தி வந்தது. அவன் அதைப் பார்த்துவிட்டு, தன் கையில் இருந்த அலெக்ஸின் அந்த துப்பாக்கியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான். அவனது முகத்தில் ஒரு குரூரமான, ஆபத்தான புன்னகை விரிந்தது.

மரணத்தின் ஆட்டம் தொடங்கிவிட்டது. ஆனால், ஆட்டத்தின் விதிகளை எழுதுவது பாபி அல்ல… ரோலக்ஸ்!

வேட்டை தொடரும் ..⚓

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!