விசாகப்பட்டினம் துறைமுகத்தின் அலைகள் ஆழத்தில் சுவரில் மோதும் சத்தத்தோடு, சந்துருவின் இல்லத்தில் உறைந்த பேரமைதி கவிழ்ந்திருந்தது.
தோளிலும் வயிற்றிலும் பாய்ந்த குண்டுகளின் வலி நெஞ்சை அடைக்க, கட்டுகளிலிருந்து குருதி லேசாகக் கசிந்து வழிய, சந்துரு எழ முயன்றான். யாழினி கண்ணீருடன் அவனை இறுகப் பற்றித் தடுக்கப் போராட, கணேஷின் எச்சரிக்கைக் குரல் அந்த அறையின் நான்கு சுவர்களையும் அதிர வைத்தது.
ஆனால், சந்துருவின் மனதில் எரிந்து கொண்டிருந்தது வெறும் சினமோ, ஒரு காவல் அதிகாரியின் கடமையோ அல்ல… அது வஞ்சமும், வழியும், விவரிக்க முடியாத ஆத்மார்த்தமானத் தவிப்பும் கலந்த ஒரு விசித்திரமான வெறி!
சந்துருவின் குரல் நரம்புகளைக் கிழித்துக் கொண்டு வெளிப்பட்டது. அவன் தன் கையில் இருந்த முழுப் பலத்தையும் திரட்டியவன், “கணேஷ்!” என கணேஷின் சட்டைப் பிடியை இறுகப் பற்றி உலுக்கினான். அவனது விழிகள் கோபத்திலும் வேதனையிலும் சிவந்து, இரத்தம் தோய்ந்தவை போலக் காட்சிளித்தன.
“உனக்கு ரோலக்ஸ் எங்கே இருக்கான்னு நல்லாவே தெரியும்டா! அவன் உயிரோடுதான் இருக்கானா… இல்ல செத்துட்டான்னு சும்மாவே பொய் சொல்றியா? உண்மையச் சொல்லு கணேஷ்! அவன் எங்கே இருக்கான்?!” என சந்துரு அவனை விரட்டாத குறையாக, பிடிவாதத்தின் உச்சத்திற்குச் சென்று கத்தினான்.
கணேஷிற்கு ரோலக்ஸ் உலகத்தின் எந்த மூலையில், எந்தப் பனிமலையில் ஒளிந்திருக்கிறான் என்ற துல்லியமான விபரம் தெரியாது. ஆனால்… தன் நண்பன் ரோலக்ஸ் இந்த பிரபஞ்சத்தில் இன்னும் உயிரோடுதான் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறான் என்ற உண்மை அவனுக்குத் தெரியும்.
ஆனாலும், தங்களுக்குள் இருந்த அந்த நிழல் உலக ரகசியக் கட்டுப்பாட்டினால், ரோலக்ஸ் பற்றி ஒரு வார்த்தை கூட அவனால் வாய் திறக்க முடியவில்லை. அவன் மௌனமாக சந்துருவின் வெறியைப் பார்த்துக்கொண்டு நின்றான்.
ஆனால் சந்துரு விடவில்லை! கணேஷின் சட்டையை மீண்டும் பிடித்து ஆவேசமாக ஆட்டினான்!
“கணேஷ்… உண்மையச் சொல்லுடா! ரோலக்ஸ் உயிரோடுதானே இருக்கான்? அவன் இருக்குறது உனக்குத் தெரியாம இருக்காது! அவனை யாராலும் அழிக்க முடியாது… அவன் இந்த நிழல் உலகத்தின் சிங்கம்! கடலின் அரசன்டா அவன்! கண்டிப்பா ஏதோ ஒரு இடத்துல அவன் உயிரோட இருக்கான்… சொல்லு கணேஷ்!”
சந்துருவின் இந்த அசாத்தியமான பிடிவாதத்தையும், அவனது கண்களில் தெரிந்த பயங்கரமான தவிப்பையும் கண்ட கணேஷ், வேறு வழியின்றி மெதுவாகத் தன் தலையை அசைத்தான்.
அந்தத் தலை அசைவு… ‘ஆம், ரோலக்ஸ் உயிரோடுதான் இருக்கிறான்’ என்ற பேருண்மையை உரக்கச் சொன்னது!
அந்த நொடி… சந்துருவின் முகத்தில் பல நாட்களுக்குப் பிறகு ஒரு விசித்திரமான, ஆழமான புன்னகை தவழ்ந்தது! வலி நிறைந்த அந்த முகத்தில் பூத்த அந்தப் புன்னகை, பார்ப்பவர்களை மிரள வைப்பதாக இருந்தது.
“ரோலக்ஸ் உயிரோடுதான் இருக்கானா…!” சந்துருவின் குரலில் பேரானந்தமும், அடக்க முடியாத ஆவேசமும் கலந்திருந்தன.
“அப்போ… நீ ஏன் இவ்வளவு நாள் என்கிட்ட மறைச்ச கணேஷ்? ரோலக்ஸ் எங்கே இருக்கான் சொல்லு? எங்கே இருக்கான் அவன்?! எனக்குத் தெரிஞ்சே ஆகணும்! இப்போவே… இந்த நொடியே நான் அவனைத் தேடிப் பிடிச்சாகணும்டா!”
கணேஷ் தன் சட்டையிலிருந்த சந்துருவின் கைகளை பலவந்தமாக விலக்கியவன், “சந்துரு! நான் சொல்றதை முதல்ல அமைதியாப் கேட்டுத் தொலை! ரோலக்ஸ் இப்போ எங்கே இருக்கான்னு எனக்குத் தெரியாது! அவன் உயிரோடு இருக்கான்ங்கிற தகவல் மட்டும்தான் எனக்கு இருக்கு. மேலும்… இந்த இரத்தம் தோய்ந்த பழைய வாழ்க்கையெல்லாம் விட்டுட்டு, அவன் இப்போ ஒரு புதுமையான வாழ்க்கையை ஆரம்பிக்கப் போயிட்டான்! உலகத்தோட ஏதோ ஒரு மூளையில அமைதியா வாழப் போயிட்டான்! இதோட அவனை விட்டுடு சந்துரு… அவனை இனிமே நீ துரத்த வேண்டாம்!” என அழுத்தமான குரலில் கணேஷ் எச்சரித்தான்
“இல்லை கணேஷ்… விட முடியாது!” சந்துரு உறுமினான்.
“என்னால அப்படி அவனை விட்டுடவே முடியாதுடா! நான் ரோலக்ஸைப் பார்த்தே தீரணும்! அவன் எனக்கு வேணும்!” என சந்துரு, கணேஷையும், தன் வழியை மறித்து நின்ற யாழினியையும் தன் கரங்களால் ஆவேசமாகத் தள்ளிவிட்டு, வாசலை நோக்கிப் பாய்ந்தான்.
ஆனால் சந்துரு வாசலை நெருங்கிய அதே விநாடியில்… வெளியே இருந்து கம்பீரமாக உள்ளே நுழைந்தான் பைரவன்!
பைரவனைக் கண்டதும் சந்துருவின் பாதங்கள் ஒரு கணம் நிலைதடுமாறி நின்றன. ஆனால், அவன் அகத்தில் கொதித்துக் கொண்டிருந்த அந்த பிடிவாதம், அவனை நிறுத்த விடவில்லை. பைரவனைக் கடந்து கதவைத் தாண்டி வெளியே செல்ல முயன்றான்.
ஆனால், பைரவனின் தடிமனான இரும்புக் கை, மின்னல் வேகத்தில் வீட்டின் நிலக்கதவைப் பற்றிப் குறுக்கே நீண்டு, சந்துருவின் பாதையை முற்றிலுமாக அடைத்தது!
கண்ணிமைக்கும் நேரத்தில், பைரவன் தன் கையைத் தட்டிவிட முயன்ற சந்துருவின் தோள்பட்டையைத் தன் அசாத்திய பலத்தால் இறுகப் பற்றினான். சந்துருவின் காயம்பட்ட உடலை அப்படியே பின்னோக்கி இழுத்து, அறைக்குள் தூக்கி எறிந்தான்!
சந்துரு நிலைதடுமாறி, அப்படியே கால்கள் இடறிச் சென்று கட்டிலின் மீது “டம்ம்ம்.. ! ” என பலமாக விழுந்தான். அவனது காயங்களிலிருந்து ரத்தம் மீண்டும் கசிந்து வெள்ளை ஆடையில் படரத் தொடங்கியது.
உள்ளே வந்த பைரவன் ஓங்கி மிதித்துக் மரக்கதவை அடைத்துப் பூட்டினான்!
சந்துரு தன் உடலின் கடும் வலியையும் பொருட்படுத்தாமல், ரோலக்ஸைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற வெறியுடன் மீண்டும் கட்டிலிலிருந்து எழ முயன்றான். ஆனால், பைரவன் தன் பிரம்மாண்ட கரங்களால் அவனது தோள்களைப் பிடித்து, அசைக்க முடியாதபடி கட்டிலிலேயே இறுக அமர வைத்தான்!
“பைரவா! ஏன் டா இப்படிப் பண்ற?!” சந்துரு திணறியபடி ஆத்திரத்துடன் கத்தினான்.
“என்ன இது?! நான் ரோலக்ஸைப் பார்த்தே ஆகணும்டா! அவன் உயிரோடு இருக்குற விஷயம் எனக்குத் தெரிஞ்சிருச்சு… கணேஷ் சொல்லிட்டான்! அவன் எங்கே இருந்தாலும் நான் தேடிப் பிடிப்பேன்! உனக்கு அவன் இருக்குற இடம் தெரியுமா? நீயும் என்கிட்ட மறைக்கிறியாடா? சொல்லு பைரவா… ரோலக்ஸ் எங்கே இருக்கான்?!” என கத்தினான்
சந்துருவின் இந்த மூர்க்கத்தனமான திமிறலையும், தவிப்பையும் பார்த்த பைரவனின் விழிகளில் கொடூரமானக் கோபம் அனலாகப் பறந்தது. அவன் சந்துருவின் முகத்திற்கு மிக அருகில் குனிந்தவன், “அப்படி என்னடா இருக்கு உனக்கு அந்த ரோலக்ஸ் கிட்ட?! ஏன்டா இப்படிப் பைத்தியம் பிடிச்ச மாதிரி தவிச்சிக்கிட்டு இருக்க?!” என ஆழமானக் குரலில் சீறய பைரவனின் குரலில் வஞ்சமும் எள்ளலும் நஞ்சாகக் கலந்திருந்தன.
“நீ அவனைப் பார்க்கணும்… அவனைப் பிடிக்கணும்னு ஏன்டா இவ்வளவு தூரம் அலைறாய்? அவன் அப்படி என்னடா உனக்கு பண்ணிட்டான்? உன் அப்பனைக் கொன்ன கொலையை அவன்கிட்ட காட்டிக் கொடுக்கப் போறியாடா?!” பைரவனின் அந்த வார்த்தை, அறையில் இருந்த யாழினியை உரைய வைத்தது.
“உன் அப்பன் எப்பேர்ப்பட்ட அயோக்கியன், எவ்வளவு பெரிய துரோகின்னு உனக்கு நல்லாவே தெரியுமடா சந்துரு! அப்புறம் என்ன புதுசா அப்பன் பாசம் பொங்கி வழிஞ்சு, இப்படி ரோலக்ஸை நாயாட்டம் துரத்திக்கிட்டு இருக்க? அப்படி என்ன பதவி வெறி உனக்கு?! அவனைக் கண்டுபிடிச்சு என்ன பண்ணப் போறாய்? அவன் உலகத்தோட ஏதோ ஒரு மூளையில அமைதியா வாழ்ந்துட்டுப் போகட்டுமேடா… அவனை ஏன்டா நிம்மதியா வாழ விடாம இப்படிப் பண்ற?!”
பைரவன் விடாப்பிடியாகக் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருக்க, சந்துரு அவன் பிடியிலிருந்து திமிறிக் கொண்டே இருந்தான். மணி கணக்கில் அந்த அறையில் பெரும் போராட்டம் நீடித்தது.
காயங்களின் வலி, ரத்தப்போக்கு, பைரவனின் இரும்புப் பிடி, மனதின் பேரழுத்தம்… இவை அனைத்தையும் தாங்கிக் கொண்டு பிடிவாதமாகப் போராடிய சந்துரு, ஒரு கட்டத்தில் தன் சரீரப் பலத்தையும் மனப் பலத்தையும் முற்றிலுமாக இழந்தான்.
திடீரென, அந்தக் கம்பீரமான, நேர்மையான காவல் அதிகாரியின் கண்கள் கலங்கின. அவனது கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாகக் கன்னங்களில் வழிந்தோடியது. சிங்கமென கர்ஜித்துக் கொண்டிருந்த சந்துரு, ஒரு சிறு குழந்தையைப் போல விக்கி விக்கி அழத் தொடங்கினான்!
“என்னை விடுங்கடா…” சந்துருவின் குரல் அடியோடு உடைந்து கதறலாக மாற… .
“தயவுசெஞ்சு என்னை விடுங்க… நான் ரோலக்ஸைப் பார்த்தே ஆகணும்டா!” என்ற அவனது கதறல் அந்த அறையின் சுவர்களில் எதிரொலித்து, அனைவரின் நெஞ்சையும் பிளந்தது.
“இன்னைக்கு நான் இந்த நிலைமையில… இப்படி ஒரு உடைஞ்ச உடம்போட, குற்ற உணர்ச்சியில செத்துக்கிட்டு இருக்கறதுக்கு முக்கிய காரணமே அந்த ரோலக்ஸ் தான் டா!” சந்துரு தன் நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறினான்.
“அதே நேரத்துல… இன்னைக்கு ரோலக்ஸ் தன் குடும்பத்தோட, தன் நிம்மதியை இழந்து உலகத்துக்கே மறைஞ்சு இந்த நிலைமையில இருக்கறதுக்கு முக்கிய காரணமும் நான் தான்டா!” என்ற சந்துருவின் இந்த வார்த்தைகள் அங்கிருந்தவர்களை அடியோடு உலுக்கின!
“நான் அவனைச் சந்திச்சே ஆகணும்டா… அவன்கிட்ட நான் பேசணும்! தயவுசெஞ்சு என்னைத் தடுக்காதீங்க… என்னை ரோலக்ஸ் கிட்ட கூட்டிட்டுப் போங்கடா!” என சந்துரு சிறுபிள்ளையைப் போலக் கரங்களைக் கூப்பி, பைரவனிடமும் கணேஷிடமும் கதறி அழுவதைப் பார்த்த பைரவன், கணேஷ், யாழினி மூவருக்கும் ஒன்றும் புரியவில்லை!
சந்துரு தன் முகத்தைக் கரங்களால் மூடிக்கொண்டு அழுது கொண்டிருந்தான்.
இத்தனை நாளாக ரோலக்ஸைப் பிடித்தே ஆக வேண்டும் என்ற ஒரு வைராக்கியத்தோடும், சட்டத்தின் கம்பீரத்தோடும் சுற்றித் திரிந்த ஒரு திமிர் பிடித்த காவல் அதிகாரி… இன்று ஏன் தன் மானத்தையும் வீரத்தையும் மறந்து, இப்படி ஒரு சிறு பிள்ளையைப் போலக் கதறி அழுகிறான்?
ஒரு நீண்ட பெருமூச்சை விட்ட பைரவன், சந்துருவின் தோளை மென்மையாகப் தொட்டான். இப்பொழுது அவனது குரலிலிருந்த கொடூரம் மறைந்து, ஒருவிதத் தீவிரமானத் தன்மை வந்தது.
“சந்துரு… நான் சொல்றதைக் கேளு. இப்போ நீ வெளியே எங்கே போனாலும் ஆபத்து. ஆனா… உனக்கு இப்போ ஒரு முக்கியமான வேலை இருக்குடா!” என்றான்
தன் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டே ஆத்திரத்துடன் நிமிர்ந்த சந்துரு, “எனக்கு எந்த வேலையும் முக்கியம் கிடையாதுடா! எந்தப் பதவியும், எந்தச் சட்டமும் எனக்கு முக்கியம் இல்லை! எனக்கு ரோலக்ஸ் எங்கே இருக்கான்னு உண்மையைச் சொல்லுங்க!” என்று மீண்டும் பிடிவாதம் பிடித்தான்.
அவன் சொல்வது எதுவும் விளங்காமல் போகவே, சந்துரு அவர்களின் பிடியிலிருந்து விடுபட்டு, மீண்டும் வாசலை நோக்கி ஓட முயன்றான்.
ஆனால், பைரவன் மீண்டும் தன் இரும்புப் போன்ற கரத்தை ஓங்கி, சந்துருவின் மார்பின் மீது வைத்தான்! அவனை ஓரடியும் முன்னால் நகர விடாமல் பின்னுக்குத் தள்ளி நிறுத்திய பைரவன், சந்துருவின் கண்களை நேருக்கு நேராக உற்றுப் பார்த்தான்.
“சந்துரு!” என்ற பைரவனின் குரல் அந்த அறையையே அதிர வைத்தது.
“உன்னை இந்த வேலையைச் செய்ய சொன்னதே ரோலக்ஸ்தான்டா!”
என அவன் சொல்லவும் அறையில் மெளனம் கவிழ்ந்தது. சந்துரு அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றான்!
“ரோலக்ஸ் சொன்னா நீ கண்டிப்பா செய்வேங்கிறதுக்காகத்தான்… ரோலக்ஸ் நேரடியாகவே உன்னுடைய அதிகாரப்பூர்வ பதவியைப் பயன்படுத்தி, இந்த வேலையை உன்னைச் செய்யச் சொன்னான்டா!” என்று பைரவன் மிக அழுத்தமாகக் கூற..
சந்துருவிற்கு எதுவும் புரியவில்லை. அவன் கண்கள் அகல விரிய, ‘என்ன சொல்ற?’ என்பது போல பைரவனை பார்த்தான்.
சந்துருவின் கலங்கிய கண்களைப் பார்த்து, மெளனமாகத் தன் தலையை ஆட்டினான், பைரவன்.
சந்துருவின் வார்த்தைகளின் பின்னணியில் இருக்கும் அந்த ரகசிய வேதனை என்ன? அவனுக்கும் ரோலக்ஸிற்கும் இடையே அப்படி என்னதான் நடந்தது?(போனஸ் அத்தியாயத்தில் இதனை பார்ப்போம்)
வேட்டை தொடரும் ..⚓
