Rolex 60

60

ஸ்காட்லாந்தின் அடர்ந்த பனிமூட்டம் நிறைந்த மலைப்பாதையில், அந்த கரிய நிற சொகுசு கார் மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது.

ஜன்னலுக்கு வெளியே வீசிய கடும் பனிக்காற்று, காரின் கண்ணாடிகளில் பனித்துளிகளாக உறைந்து வழிந்தது. காரின் பின்புற இருக்கையில் அமர்ந்திருந்த ரோலக்ஸின் கண்கள், வெளியே படர்ந்திருந்த அடர்ந்த பனி மேகங்களை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தன. எட்வர்டின் ஆள் சாமர்த்தியமாகக் காரைச் செலுத்தி, மனித நடமாட்டமே இல்லாத ஒரு ரகசிய மலைப்பாதைக்குள் வாகனத்தைத் திருப்பினான்.

சுமார் அரை மணி நேரப் பயணத்திற்குப் பிறகு…

மலைகளின் வயிற்றுப் பகுதியில், அடர்ந்த பைன் மரங்களுக்கு நடுவே மறைக்கப்பட்டிருந்த ஒரு பிரம்மாண்டமான பள்ளத்தாக்கிற்குள் கார் நுழைந்தது. அங்கே, விண்ணை முட்டும் கூரையுடன், பிரம்மாண்டமான இரும்புச் சுவர்களால் சூழப்பட்ட ஒரு பழமையான தொழிற்சாலை வீற்றிருந்தது.

காரின் கதவு திறக்கப்பட்டு, ரோலக்ஸ் கம்பீரமாக வெளியே காலடி எடுத்து வைத்தான். அந்தப் பிரம்மாண்டமான கட்டிடத்தின் பிரதான மர கதவின் அருகே, கைகளில் விலையுயர்ந்த சுருட்டோடு நின்று கொண்டிருந்தார் எட்வர்ட்!

அவனைக் கண்டதும் எட்வர்டின் உதடுகளில் ஒரு கம்பீரமான, ஆழமான புன்னகை தவழ்ந்தது.

“வா… ரோலக்ஸ்! உனக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன்,” என்று கூறிய எட்வர்ட், ரோலக்ஸை அழைத்துக் கொண்டு அந்தத் தொழிற்சாலைக்குள் நுழைந்தார்.

வெளித்தோற்றத்தைப் பார்த்த ரோலக்ஸ், அது ஏதோ பழைய இரும்புத் தொழிற்சாலை போல கப்பல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் இடம் என்றுதான் நினைத்தான். ஆனால்… அந்தப் பெரிய இரும்புக் கதவுகள் தானியங்கி முறையில் திறந்து, உள்ளே அடியெடுத்து வைத்த நொடியில், அவனது ஆறாவது அறிவு திடுக்கிட்டது!

ஆம், அந்த அறைக்குள் வீசிய ரசாயன நெடியும், எஃகு இரும்புகளின் உரசலில் எழுந்த தீப்பொறிகளும், இயந்திரங்களின் இடிமுழக்க ஒலியும் அந்த அதிநவீனப் பாதாள உலகத்தையே அதிர வைத்துக் கொண்டிருக்க, ரோலக்ஸின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன!

அங்கே… ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்கள், சர்வதேசத் தரத்திலான அதிநவீனத் தானியங்கி ஆயுதங்களை வரிசையாகத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள்!

ஏதோ திருட்டுத்தனமாக, சட்டத்திற்குப் பயந்து ரகசியமாகச் செய்யப்படும் தொழில் போல அது தோன்றவில்லை. ஒரு நாட்டின் அரசாங்கமே தன் நேரடி உத்தரவின் கீழ், ராணுவத்திற்கான ஆயுதங்களைத் தயாரிக்கும் அதிநவீனத் தொழிற்சாலையைப் போல, மிகக் கச்சிதமானக் கட்டுப்பாட்டோடும் மும்முரத்தோடும் அந்த வேலைகள் நடந்து கொண்டிருந்தன!

ஜெர்மன் தொழில்நுட்பத்தில் இயங்கும் அதிநவீன CNC இயந்திரங்கள், லேசர் செதுக்கும் கருவிகள், ராட்சத இரும்பு உருக்காலைகள் என எல்லாமே அங்கே இயங்கிக் கொண்டிருந்தன. 

ரோலக்ஸிற்கு அப்பொழுதுதான் உண்மை உறைத்தது!

காலையில் எட்வர்டின் மாபெரும் கப்பலிலிருந்து இறக்கி, பெட்டி பெட்டியாகக் கொண்டு வரப்பட்ட அத்தனை சரக்குகளும்… சாதாரணப் பொருட்கள் அல்ல, உலகையே அழிக்க வல்ல அதிநவீனத் துப்பாக்கித் தளவாடங்களும் வெடிமருந்துகளுமே ஆகும்!

ரோலக்ஸின் கண்கள் வியப்பில் அகல விரிந்தன. உலகத்தின் நிழல் உலகச் சக்கரவர்த்தியாக வலம் வந்த அவனுக்கே, இந்த பிரம்மாண்டமும் அதிகார பலமும் பெரும் பிரமிப்பைத் தந்தன.

அவனது முகத்திலிருந்த அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கவனித்த எட்வர்ட், அவனது தோளில் தன் கரங்களால் மென்மையாகத் தட்டி, கம்பீரமாகச் சிரித்தார்.

“இன்னும் உள்ளே சென்று பார்க்கலாம் வா, ரோலக்ஸ்! இது வெறும் ஆரம்பம்தான்…” என்று கூறி அழைத்தார்.

ரோலக்ஸ் தன் பிரமிப்பை மனதிற்குள் அடக்கிக் கொண்டு, அவரைப் பின்தொடர, தொழிற்சாலையின் ஒவ்வொரு பிரிவிற்கும் எட்வர்ட் அவனை அழைத்துச் சென்றார்.

சுற்றிலும் பேரிரைச்சலுக்கு இடையே எட்வர்ட் சைகையிலே, “பார் ரோலக்ஸ்… இது Barrel & Chassis தயாரிக்கும் பகுதி! உலகத்தின் மிக வலிமையான டைட்டானியம் எஃகு கலவையால் இந்தத் துப்பாக்கிக் குழல்கள் செய்யப்படுது. நிமிடத்திற்கு ஐந்நூறு தோட்டாக்களைச் சுட்டாலும், இந்த இரும்பு சூடேறி வெடிக்காது!”

அங்கே, பிரம்மாண்டமான இயந்திரங்கள் உருகிய இரும்பை ஊற்றி, துப்பாக்கிக் குழல்களை மிகத் துல்லியமான மைக்ரான் அளவில் செதுக்கிக் கொண்டிருந்தன. பொறிகள் மழை போல நாலாபுறமும் சிதறின.

அடுத்ததாக, Automated Assembly பகுதிக்கு அழைத்துச் சென்றார்., “இங்கே பார்… நூற்றுக்கணக்கான மெக்கானிக்குகள், கைகளாலேயே உதிரிபாகங்களை அசெம்பிள் செய்கிறார்கள். Glock 19, Heckler & Koch MP5, Barrett M82 ஸ்னைப்பர்கள் என உலகத்தின் மிகக் கொடூரமானத் துப்பாக்கிகள் இங்கே நொடிக்கு நொடி உருவாகின்றன. ராணுவ அமைப்புகள், சர்வதேச மாஃபிக்கள், அரசாங்கத்தின் ரகசியப் படைகள் என அனைவருக்கும் ஆயுதம் சப்ளை செய்வது இந்த ஒரே இடம் தான்!”

ரோலக்ஸ் ஒவ்வொரு இயந்திரத்தின் இயக்கத்தையும், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் அசாத்தியமான வேகத்தையும் கூர்ந்து கவனித்தான்.

ஒவ்வொரு துப்பாக்கியின் ஸ்பிரிங், லாக், டிரிகர் மெக்கானிசம் என அனைத்தும் கணினி வழிகாட்டுதலுடன் கச்சிதமாகப் பொருத்தப்பட்டுக் கொண்டிருந்தன.

அடுத்து, அவர்கள் சென்ற இடம் ரோலக்ஸின் நெஞ்சையே உரைய வைத்தது!

அதுதான் Ammunition  Warheads பிரிவு! அங்கே… கோடிக்கணக்கான பித்தளைத் தோட்டாக்கள், பிரம்மாண்டமான கன்வேயர் பெல்ட்களில் வெள்ளம் போல ஓடிக் கொண்டிருந்தன. இயந்திரங்கள் அதிவேகத்தில் தோட்டாக்கள் மீது வெடிமருந்தை நிரப்பி, ஈயக் குண்டுகளைப் பொருத்தி, முத்திரையிட்டுக் கொண்டிருந்தன.

“9mm தோட்டாக்கள் முதல், ஹெலிகாப்டர்களையே சுட்டு வீழ்த்தும் .50 BMG ரகத் தோட்டாக்கள் வரை… தினமும் பத்து லட்சம் தோட்டாக்கள் இங்கே தயார் செய்யப்படுகின்றன!” என எட்வர்ட் அதனை எடுத்து காட்டினார்.

அதற்கடுத்து, பல அடுக்கு பாதுகாப்பு கதவுகளைத் தாண்டி, வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட வெடிமருந்துக் கிடங்கிற்கு அழைத்துச் சென்றார்.

அங்கே, C4 வெடிமருந்துகள், அதிநவீன கிரனைடுகள், ஏவுகணைகளுக்கான வெடிபொருட்கள் எல்லாம் பெட்டிகளில் அடுக்கப்பட்டிருந்தன.

எட்வர்ட் ரோலக்ஸின் பக்கம் திரும்பி, அவனது கண்களை ஆழமாகப் பார்த்தார், “ரோலக்ஸ்… உலகத்தில் எந்த நாட்டின் அரசாங்கமும், எந்த சட்டமும் இந்த இடத்தை நெருங்க முடியாது. ஏனென்றால், இந்தத் தொழிற்சாலையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்கள்தான்… பல நாடுகளின் அரசாங்கங்களையே தீர்மானிக்கின்றன! நீ இதுவரை பார்த்தது வெறும் தெருவோர மாஃபியாவின் துப்பாக்கிகள்… ஆனால், உலகை ஆளும் ஆதி மாஃபியாவின் நிஜமான சாம்ராஜ்யம் இதோ உன் கண் முன்னே நிற்குது!” என்றார் 

ரோலக்ஸ் அந்தப் பிரம்மாண்ட ஆயுதக் கடலை அமைதியாகப் பார்த்தான். அவனது மனதிற்குள் பல கேள்விகள் கொழுந்துவிட்டு எரிந்தன. ‘எதற்காக எட்வர்ட் தன்னை இந்த ரகசியப் பாதாள உலகத்திற்குக் அழைத்து வந்து, தன் ஆயுத சாம்ராஜ்யத்தைக் காட்டுகிறார்? உலகத்தின் எந்த மூலையிலும் நடக்கும் போர்களைத் தீர்மானிக்கும் அளவுக்கு இவ்வளவு பிரம்மாண்டமான ஆயுதக் கிடங்காக இது இருக்கிறதா? அப்படியானால்… எட்வர்டின் உண்மையான முகமும் தொழிலும் இதுதானா?’  இதன் பின்னணியில் இருக்கும் கணக்கு என்ன?’ என குழம்பினான் 

 

ரோலக்ஸின் கூர்மையான கழுகுப் பார்வை எட்வர்டின் முகத்தை ஊடுருவிப் பார்த்தது.

அந்த வயதான அசுரனின் முகத்தில் எந்தவிதமானத் தவறு செய்தவனின் பதற்றமோ, பயத்தின் நிழலோ சிறிதும் இல்லை. மாறாக, உலகையே தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் ஒரு மாபெரும் சக்கரவர்த்தியின் கம்பீரமும், நிதானமும் மட்டுமே அவரிடம் வெளிப்பட்டன.

ரோலக்ஸிற்குள் பல கேள்விகள் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கின.

‘நடுக்கடலில், மரணத்தின் பிடியில் ரத்த வெள்ளத்தில் மிதந்த என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றி, உயிர் பிச்சை போட்டு இங்கே அழைத்து வந்திருக்கிறான் எட்வர்ட். ஆனால்… எதற்காகத் தன் சாம்ராஜ்யத்தின் இந்த அதிரகசிய ஆயுதக் கிடங்கைத் தனக்குக் காட்ட வேண்டும்?’

‘இவன் சர்வதேச அளவில் கொடிகட்டிப் பறக்கும் மாபெரும் ஆயுதத் தொழிலதிபர் என்றால்… கண்டிப்பாகத் தன்னைப்பற்றி இவனுக்கு ஏற்கனவே தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அப்படியானால், இவன் இந்தியப் பெருங்கடல் பக்கம் வந்திருக்கிறானா??’

கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாக அவனது மூளையைக் குடைந்தன. ரோலக்ஸ் தன் ஆழமான, கரிய விழிகளால் எட்வர்ட்டை ஆவலுடனும் சந்தேகத்துடனும் பார்த்தான்.

ரோலக்ஸினுடைய கண்களில் தேங்கியிருந்த அந்த ஆயிரத்தெட்டு வினாக்களையும், அவனது மனவோட்டத்தையும் எட்வர்ட் மிகச் சுலபமாகக் கணித்துவிட்டார்.

அவரது முகத்தில் இருந்த அந்த மெல்லிய, கம்பீரமானப் புன்னகை மாறவே இல்லை.

எட்வர்ட் தன் சிகரெட்டின் புகையை மெதுவாகக் காற்றில் பறக்கவிட்டு, ரோலக்ஸிற்கு அருகில் வந்து, அவனது தோளைத் தன் தடிமனானக் கரத்தால் தட்டியவர்,  “உன் கண்களில் இருக்கும் கேள்விகள் எனக்குப் புரிது ரோலக்ஸ்… ‘இவன் எதற்காக நம்மை இங்கே அழைத்து வந்தான்? உன்னை இதற்கு முன்பே எனக்குத் தெரியும் என்று நினைக்கிறியா?’ என்றுதானே யோசிக்கிற?” என்ற எட்வர்ட் இடைவெளி விட்டு, அவனது கண்களை ஊடுருவிப் பார்த்தவர் ..

“ஆம் ரோலக்ஸ்… உன்னை எனக்கு இதற்கு முன்பே நன்றாகத் தெரியும்!”

அந்த வார்த்தையைக் கேட்டதும் ரோலக்ஸின் மூளை அதிவேகமாகக் கணக்குப் போட்டது.

அன்று பாபியைக் கொலை செய்த அந்த நேரத்தில்… உனக்கு அந்த வெள்ளை நிறத் துப்பாக்கியைக் கொடுத்தனே… அப்போதிருந்துதானே உனக்கு என்னை தெரியும்?’  என ரோலக்ஸ் தன் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி, தன் கூர்மையானக் கண்களாலேயே எட்வர்ட்டிடம் கேட்டான்..

ஆனால் எட்வர்ட் தன் தலையை மெதுவாக, மறுப்பாக ஆட்டினார். அவனது உதடுகளில் ஒரு மர்மச் சிரிப்பு அரும்ப…

“இல்லை ரோலக்ஸ்… அதற்கு முன்பே உன்னை எனக்கு நன்றாகத் தெரியும்!” என்ற எட்வர்ட் கூறிய அந்தப் பதில், ரோலக்ஸிற்குள் ஒரு மாபெரும் மின்சாரத்தைப் பாய்ச்சியது!

‘பாபியின் சம்பவத்திற்கு முன்பேவா? அப்படியானா… தான் நிழல் உலகத்திற்குள் காலடி வைப்பதற்கு முன்பேவா?’ என வினவினான் 

மெதுவாக முன்னே வந்த எட்வர்ட், ரோலக்ஸின் நெஞ்சின் மீது தன் கையை வைத்தவர்.  “இந்த நிழல் உலகில் நீ மாஃபியா தாதாவாக இருக்கலாம் … கடல் அரசன் என்று அஞ்சி நடுங்கலாம்… எதிரிகளின் ரத்தத்தைக் குடிக்கும் கடத்தல் சிங்கம் என்று போற்றலாம்! ஆனால்… அதற்கு மேல், இந்த முரட்டு உடம்பிற்குள்ளே, இந்த அசுரனுக்குள்ளே பூட்டிக்கிடக்கும் உன்னுடைய அந்த ஈர நெஞ்சமும் எனக்கு நன்றாகத் தெரியும் ரோலக்ஸ்!”  என்ற எட்வர்டின் உணர்ச்சிப்பூர்வமானப் பிணைப்பின் குரலாக மாறியிருந்தது.

ரோலக்ஸின் உடம்பில் இருந்த அத்தனை நரம்புகளும் ஒரு கணம் விறைத்துப் போயின! தான் உலகத்திற்குக் காட்டும் அசுர முகத்திற்குப் பின்னால்… தன் மனைவி மயூராவிற்கும், தன் பிஞ்சு மகன் சாருவிற்கும், தன் ஆருயிர் நண்பன் பைரவனுக்கும் மட்டுமே தெரிந்த தன் இதயத்தின் அந்த மென்மையான, ஈரமானப் பக்கத்தை இந்த ஸ்காட்லாந்து நாட்டின் ஆயுத அதிபர் எப்படி அறிவான்?!

எட்வர்ட் கூறிய அதிர்ச்சி தரும் வார்த்தைகளும் ரோலக்ஸின் மனதை ஆழமாக உலுக்கியிருந்தன. அவனது முகத்தில் யோசனை ரேகைகள் அடர்த்தியாகப் படர்ந்திருந்தன.

ரோலக்ஸின் முகத்தில் ஓடிய அந்த தீவிரமான யோசனைக் ரேகைகளையும், அவனது மனதிற்குள் உதித்த கேள்விகளையும் பார்த்த எட்வர்ட், தன் உதடுகளில் ஒரு மெல்லிய புன்னகையை வரவழைத்துக் கொண்டவர்.

“சரி… இந்தத் தொழிற்சாலையைப் பார்த்தது போதும், ரோலக்ஸ்! இங்கே வீசும் வெடிமருந்து நெடியும், இந்த இயந்திரங்களின் பேரிரைச்சலும் உன்னைச் சோர்வடையச் செய்திருக்கலாம். இப்போ நம்மளுடைய மாளிகைக்குப் போகலாம், வா!” என எட்வர்ட் அவனது தோளைத் தட்டி அழைத்துக்கொண்டு, அந்த ரகசியப் பாதாளத் தொழிற்சாலையிலிருந்து வெளியேறினார்.

அங்கிருந்து புறப்பட்ட அவர் தம் கரிய நிறச் சொகுசு வாகனம், ஸ்காட்லாந்தின் பனி படர்ந்த மலைப்பாதையில் அமைதியாக ஊர்ந்து சென்று, அடர்ந்த பைன் காடுகளின் நடுவே அமைந்திருந்த ஒரு பிரம்மாண்டமானத் தோட்டத்தின் நுழைவாயிலை அடைந்தது.

அங்கே… பனிமூட்டத்திற்கு இடையே கம்பீரமாக நிமிர்ந்து நின்றிருந்தது எட்வர்டின் மாபெரும் அரண்மனை மாளிகை!

அந்த மாளிகைக்குள் நுழைவதே ஒரு புதுவிதமான, பிரம்மாண்டமான அனுபவமாக இருந்தது.

வெளிப்புறத்திலிருந்து பார்க்கும்போது பழமையான ஸ்காட்டிஷ் கோட்டையைப் போலக் காட்சியளித்த அந்த மாளிகை, உள்ளே நுழையும் ஒவ்வொரு மனிதனையும் தன் அளப்பரிய ஆடம்பரத்தால் மிரள வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

பிரதான நுழைவாயிலின் பிரம்மாண்டமான இரும்புக்கதவுகள் தானியங்கியாகத் திறக்க, வாகனம் உள்ளே சென்றது. வெளிவாசலிலிருந்து மாளிகையின் பிரதான முற்றம் வரை செல்லும் பாதை முழுவதுமே, இத்தாலியிலிருந்து கொண்டுவரப்பட்ட அரிய வகை வெண்பளிங்குக் கற்களால் பதிக்கப்பட்டிருந்தது. பனித்துளிகள் விழுந்து கண்ணாடியைப் போலப் பளபளத்த அந்தப் பாதையில், காரின் சக்கரங்கள் மென்மையாக உருண்டன.

காரிலிருந்து இறங்கிய ரோலக்ஸ், தன் காலடிகளை அந்த பளிங்குத் தரையில் வைத்தான்.

சுற்றிலும் பரந்து விரிந்திருந்த பூங்காக்கள், பனிப்பாறைகளுக்கு இடையே செயற்கையாக அமைக்கப்பட்டிருந்த வெந்நீர் ஊற்றுகள், பழமையான ரோமானிய தேவதைகளின் பளிங்குச் சிலைகள் என அத்தனையும் அந்த இடத்திற்கு ஒரு விசித்திரமான ராஜகம்பீரத்தைத் தந்தன.

மாளிகையின் பிரதான ஹாலுக்குள் நுழையும் கதவுகள், தூய தேக்கு மரத்தினால் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்ட பிடிமானங்களைக் கொண்டிருந்தன.

உள்ளே அடியெடுத்து வைத்ததும்… பளிங்குத் தரையில் ரோலக்ஸின் காலடிச் சத்தம் மிதமாக எதிரொலித்தது. கூரையில் தொங்கவிடப்பட்டிருந்த பிரம்மாண்டமான கிரிஸ்டல் தொங்கு விளக்குகள், ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் ஒன்றாக ஒளிர்பவது போல மஞ்சள் நிறப் பேரொளியை வீசிக்கொண்டிருந்தன.

சுவர்களில் தொங்கிய பதினாறாம் நூற்றாண்டின் அரிய எண்ணெய் வண்ண ஓவியங்கள், விலையுயர்ந்த பாரசீகக் கம்பளங்கள், தங்கம் மற்றும் வெள்ளியினால் ஆன கைவினைப் பொருட்கள் என அந்த மாளிகையின் ஒவ்வொரு அங்குலமும் எட்வர்டின் அளவிட முடியாத அதிகாரத்தையும், அளப்பரிய செல்வத்தையும் உரக்கச் சொன்னது!

ரோலக்ஸ் தன் கரிய விழிகளால் அந்தப் பிரம்மாண்டமான ஆடம்பரத்தைக் கண்டு வியந்தான். உலகத்தின் பல நாடுகளின் நிழல் உலகத்தை ஆட்டிப்படைத்த அவனுக்கே, இந்த மாளிகையின் ராஜபோக வாழ்க்கை ஒரு கணம் பிரமிப்பை ஏற்படுத்தியது.

அதே நேரம், மாளிகையின் வரவேற்பு அறையைக் கடந்து, உள் பகுதிகளை எட்வர்ட் ரோலக்ஸிற்குச் சுற்றிக் காண்பித்துக்கொண்டே சென்றார். அவர் ரோலக்ஸின் தோளில் தன் தடிமனான கையைப் போட்டுக்கொண்டு, ஒரு தந்தையைப் போல, மிக இறுக்கமான பிணைப்போடு அவனை அணைத்தபடியே மாளிகையின் நடுவே அமைந்திருந்த பிரம்மாண்டமான மரப் படிகநோக்கி ஏறிச் சென்றார்.

“பார் ரோலக்ஸ்… இந்த மாளிகை வெறும் கல்லாலும் மரத்தாலும் கட்டப்பட்ட கட்டிடம் அல்ல. பல தசாப்தங்களாக இந்தச் நிழல் உலகத்தை ஆண்ட என் சாம்ராஜ்யத்தின் ரகசிய பீடம் இது! இனி இது உனக்கும் ஒரு பாதுகாப்பான அரண்மனை!”

என்ற எட்வர்ட் மிகுந்த நட்புணர்வுடனும் வாஞ்சையுடனும் அவனை அணைத்து அழைத்துச் சென்றபோதிலும்… ரோலக்ஸின் அசுர மூளை அமைதியாக இருக்கவில்லை!

படி ஏறிச் சென்று கொண்டிருக்கும்போதே… ரோலக்ஸின் கூர்மையானக் கண்கள் அந்த மாளிகையின் ஒவ்வொரு மூலையையும், ஒவ்வொரு கோணத்தையும் நுட்பமாக அளவெடுத்துக் கொண்டிருந்தன!

நிழல் உலகத்தின் அசுரனாக வலம் வந்தவன் அவன். எத்தனை பெரிய நண்பனாக இருந்தாலும், எப்பேர்ப்பட்ட உயிருள்ள பிணைப்பாக இருந்தாலும்… தன் எதிரில் நிற்பவனை நூறு சதவீதம் நம்புவது அவனது அகராதியிலேயே இல்லை!

‘ஒருவேளை… இந்த பிரம்மாண்டமான அணைப்பிற்கும், உபசரிப்பிற்கும் பின்னால் தனக்கு ஏதேனும் மறைமுக ஆபத்து இருக்குமோ? தன் மீது பரிவு காட்டுவது போல நடித்து, எட்வர்ட் தனக்கு எதிராக ஏதேனும் பெரிய ரகசியச் சதியைத் திட்டமிடுகிறானா?’

‘மாளிகையின் மறைமுகப் பாதைகளில் துப்பாக்கி ஏந்திய ஆட்கள் ஒளிந்திருக்கிறார்களா?’ இப்படிப்பட்ட அத்தனை எச்சரிக்கை உணர்வுகளோடும், தன் உடலின் நரம்புகளை விறைக்கச் செய்தபடி, ஒவ்வொரு படியாக அவனது கவனம் நகர்ந்து கொண்டிருந்தது.

படிக்கட்டுகள் வளைந்து, மாளிகையின் முதல் தளத்தின் பிரதான ஹாலை நோக்கி உயர்ந்தன. அந்தப் படிகளின் திருப்பத்தில், வளைவானச் சுவரின் உச்சிப் பகுதியில்… தங்க நிறச் சட்டமிட்ட பிரம்மாண்டமான ஒரு புகைப்படத் தொகுப்பு சுவற்றில் கம்பீரமாக மாட்டப்பட்டிருந்தது.

அங்கே வீசிய தொங்கும் விளக்கின் ஒளி, அந்தப் புகைப்படத்தின் மீது நேராக விழுந்து மின்னியது.

படிகளின் திருப்பத்தை அடைந்த ரோலக்ஸ், மெதுவாகத் தன் பார்வையை அந்தச் சுவரை நோக்கி உயர்த்தினான்.

அடுத்த நொடி, ரோலக்ஸின் காலடிகள் அப்படியே தரையோடு தரையாகச் சிலிர்த்து உறைந்து நின்றன! அவனது மூச்சுக்காற்று தொண்டைக்குள்ளேயே அடைத்துக் கொண்டது!

அவனது உடம்பில் இருந்த அத்தனை ரத்த நரம்புகளும் ஒரு கணம் அப்படியே செயலிழந்து போயின!

அவனது கரங்கள் காற்றில் அப்படியே ஸ்தம்பித்து நிற்க, அகல விரிந்த அவனது கூர்மையானக் கண்கள்… சுவற்றில் தொங்கவிடப்பட்டிருந்த அந்தப் பிரம்மாண்டமானப் புகைப்படத்தை ஆழமாக, நம்ப முடியாமல் உற்றுப் பார்த்தன!

அங்கே… அந்தப் புகைப்படத்தில்…….…

 

வேட்டை தொடரும் ..⚓

மர்மத்தின் கொடூரமானப் திரை விலகும் அந்த ஆபத்தான நொடி வந்துவிட்டது!

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!