Rolex 61

61

மாளிகையின் பிரம்மாண்டமான மரப் படிக்கட்டுகளின் திருப்பத்தில், அந்த வளைவான சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த தங்க நிறச் சட்டமிட்ட புகைப்படத்தின் முன்னே ரோலக்ஸ் அசையாமல் நின்றிருந்தான்.

அவனது உடலின் அத்தனை நரம்புகளும் விறைத்துப்போயின.

ஆனால், அவனது பார்வையை அதிர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றது அந்தப் புகைப்படம் மட்டும் அல்ல… அந்த புகைப்படத்திற்குச் சரியாகக் கீழே, ஒரு பிரத்யேக சின்ன மர மேடையில் வைக்கப்பட்டிருந்த அந்தப் பொருள் தான்!

அங்கே…

அந்த வெள்ளை நிறப் பிடிமானத்தில், தகதகவெனப் மின்னும் தங்க வேலைப் பாடுகளுடன், சீறிப் பாயும் ஒரு டிராகன் முகம் செதுக்கப்பட்ட அந்த அதிநவீனத் துப்பாக்கி வீற்றிருந்தது!

ஆம்! பல ஆண்டுகளுக்கு முன்பு, பாபியின் கொடூரக் கொலைக்கு நடுவே, எட்வர்ட்டின் கரங்களில் ரோலக்ஸ் கொடுத்த அதே வெள்ளை நிற டிராகன் பதித்த துப்பாக்கி!

ரோலக்ஸின் கூர்மையான கழுகு விழிகள், சுவரில் இருந்த புகைப்படத்தையும், கீழே மின்னிக் கொண்டிருந்த அந்த வெள்ளைத் துப்பாக்கியையும் மாறி மாறி ஊடுருவின.

எதற்காக புகைப்படத்திற்குக் கீழே இந்த வெள்ளைத் துப்பாக்கி வைக்கப்பட்டுள்ளது? என அவனது நெஞ்சிற்குள் ஆயிரம் இடிகள் ஒன்றாக இடித்தன. அவனது மூச்சுக் காற்று அனலாக வீசியது.

ரோலக்ஸ் மெதுவாக, மிக மெதுவாகத் தன் தலையைத் திருப்பி, தன் தோளோடு தோள் உரசி நின்று கொண்டிருந்த எட்வர்டின் பக்கம் தன் பார்வையைத் திருப்பினான். அவனது விழிகளில் விவரிக்க முடியாத சந்தேகமும், மிரட்சியும், கொடூரமான தவிப்பும் கலந்திருந்தன.

ஆனால் எட்வர்டின் முகத்தில் அதே மேன்மையான, கணிக்க முடியாத ஒரு அமைதி தவழ்ந்தது. அவர் ரோலக்ஸின் கூர்மையானப் பார்வையை எதிர்கொண்டு, அவனது தோளை இருமுறை வாஞ்சையோடு தட்டிக் கொடுத்தவர். பின்னர், அடியெடுத்து வைத்து, அந்தப் புகைப்படத்தின் அருகில் இருந்த அந்த வெள்ளை நிற டிராகன் துப்பாக்கியைக் எடுத்து அதனை ரோலக்ஸை நோக்கி நீட்டியவர்.

“இது உன்னிடமே இருக்கட்டும், ரோலக்ஸ்… இது உனக்கு மட்டுமே சொந்தமானது! என்றார்..

ரோலக்ஸ் ஒரு கணம் தயங்கினான். ஆனால், எட்வர்டின் கண்களில் தெரிந்த அந்த அசைக்க முடியாத உரிமையைக் கண்டு, வேறு வழியின்றி அந்த கனமான வெள்ளை டிராகன் துப்பாக்கியை தன் கரங்களில் வாங்கிக் கொண்டான்.

துப்பாக்கியின் கைப்பிடி, அவனது விரல்களைத் தொட்டபோது, பழைய குருதிப் பிணைப்பு அவனது நரம்புகளில் பாய்வது போல இருந்தது. இருப்பினும்… அவனது கண்கள் மட்டும் அந்தச் சுவரில் இருந்த புகைப்படத்தை விட்டு நகரவே இல்லை.

ரோலக்ஸின் அகத்தில் உதித்த புயலைப் புரிந்து கொண்ட எட்வர்ட், அவனது தோளில் தன் கரத்தைப் போட்டு அணைத்தபடியே, மாடியின் பிரதான அடுக்கில் இருந்த தன்னுடைய பிரத்யேக அறைக்கு அவனை அழைத்துச் சென்றார்.

அந்த அறை… ஒரு மன்னனின் அந்தரங்கக் கோட்டையைப் போல அகலமாகவும், பிரம்மாண்டமாகவும் இருந்தது. அறையின் நடுவே இருந்த உயர்தரத் தோல் இருக்கையில் ரோலக்ஸ் அமைதியாக அமர, அவனுக்கு எதிரே இருந்த பிரம்மாண்டமான இருக்கையில் எட்வர்ட் அமர்ந்தார்.

அருகில் இருந்த பளிங்கு மேஜையின் மீது, உயர்தர ரெட் ஒயின் பாட்டிலும், அதன் அருகே பளிங்கு கிளாஸ்களும் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.

எட்வர்ட் நிதானமாக அந்த பாட்டிலின் மூடியைத் திறந்து, ரத்தச் சிவப்பிலான ஒயினை ஒரு கிளாஸில் மெதுவாக ஊற்றினார். அதில் இரண்டு ஐஸ் கட்டிகளைப் போட்டு, அந்த கிளாஸை ரோலக்ஸை நோக்கி வாஞ்சையோடு நீட்டினார்.

“இந்தக் குளிருக்கு இது கொஞ்சம் உனக்கு இதமாக இருக்கும், ரோலக்ஸ்…” என்றார் எட்வர்ட்.

ஆனால், ரோலக்ஸ் தன் கையை லேசாக உயர்த்தி, “வேண்டாம்…” என்று மெல்லிய மறுப்பாகத் தலையசைக்க, எட்வர்ட் அவனை மேற்கொண்டு வற்புறுத்தவில்லை.

அவர் ரோலக்ஸிற்காக ஊற்றிய அந்த ஒயினையும் தன்னுடைய கிளாஸிலேயே வார்த்துக்கொண்டார். பின்னர், தன் கையிலிருந்த அந்த அடர் சிவப்பு நிற திரவத்தை ஒரே மூச்சில் தொண்டைக்குள் இறக்கி, காலியான கிளாஸை மேஜையின் மீது சத்தத்துடன் கீழே வைத்தார்.

நிமிர்ந்த எட்வர்டின் கண்கள்… அந்த அறையின் இருண்ட மூலையில், சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த மற்றொரு பிரம்மாண்டமான புகைப்படத்தின் மீது நிலைத்து நின்றன!

அடுத்த நொடி…

அதுவரை சர்வதேச நிழல் உலகத்தின் மாபெரும் சக்கரவர்த்தியாக, எப்பேர்ப்பட்ட மரணத்தையும் அசால்ட்டாகக் கடந்து செல்லும் அசைக்க முடியாத இரும்பு மனிதனாகக் கம்பீரமாக வீற்றிருந்த எட்வர்டின் கரிய விழிகளில்… தன்னையும் அறியாமல் மெதுவாகக் கண்ணீர் கசியத் தொடங்கியது!

அவரது உடலின் கம்பீரம் குலைந்து, கன்னங்களில் கண்ணீர் தாரை தாரையாக வழியத் தொடங்கியது. தன் நெஞ்சின் ஆழத்தில் அடக்கி வைத்திருந்த ஏதோ ஒரு ஆறாத ரணம், அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் எரிமலையாக வெடித்துச் சிதறியது போல இருந்தது.

அவரின் கண்ணீரை கண்ட ரோலக்ஸ் உறைந்து தான் போனான்!

உலகத்தையே தன் விரல் நுனியில் ஆட்டிப்படைக்கும் ஒரு சர்வதேச ஆயுத அசுரன்… தன் கண் முன்னே ஒரு கைவிடப்பட்ட குழந்தையைப் போல இப்படி அழுது உடைந்து போவான் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை!

ஏதோ சொல்ல முயன்ற ரோலக்ஸின் விரல்கள், அவனின் கரத்தில் லேசாக உத்தர . என்ன சொல்வது, எப்படி துயரத்தைத் தேற்றுவது என்று தெரியாமல் குழம்பி போய், அமைதியாக எட்வர்டின் கலங்கிய கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சில நொடிகள்… அந்த அறையைச் சுற்றிலும் ஒரு கனமான, உறைந்த பேரமைதி சூழ்ந்திருந்தது. காற்றில் எட்வர்டின் மெல்லிய விம்மல் சத்தம் மட்டுமே எதிரொலித்தது.

எட்வர்ட் தன் நடுங்கும் கரங்களால், கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். பின்னர், தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, தன் பார்வையை மெதுவாக ரோலக்ஸ் பக்கம் திருப்பினார்.

அவரது முகத்தில் மீண்டும் அதே மேன்மையான, ஆனால் ஒரு தீராத சோகம் கலந்த புன்னகை அரும்பியது.

“சாரி ரோலக்ஸ்…” என்ற எட்வர்டின் குரல் லேசாகக் கரகரத்தது.

“இந்த எட்வர்ட் யாருக்கும் முன்னாடியும் தன் பலவீனத்தைக் காட்டினது இல்லை. ஆனா, இந்தச் சுவரில் இருக்கிற அந்தப் பிம்பம்… என் நெஞ்சுல தினமும் ரத்தம் சொட்டச் செய்ற ஒரு ஆறாத வடுடா!” என்றார் மிக உருக்கமாக.

 

பின்னர் … “ரோலக்ஸ்…” என்றவர்… 

“இப்போ உனக்கு ஓரளவுக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்… நான் ஏன் உன்னை காப்பாத்தினேன்? உன்னை ஏன் இந்த ஸ்காட்லாந்து அழைச்சுட்டு வந்தேன்? இது எல்லாமே உனக்குத் தெளிவா விளங்கியிருக்கும்னு நினைக்கிறேன்…” என்றார் 

ரோலக்ஸ் தன் கரிய விழிகளால் அவரை உற்றுப் பார்த்து, மெதுவாக தலையசைத்தான்.

ஆனாலும்… அவனது அகத்தில் எரியும் அந்தப் பிரம்மாண்டமானக் கேள்விக் கணைகள் அடங்கவில்லை.

“ஆனாலும்…” என்று ரோலக்ஸ் தன் சைகையில் பேசத் முயற்சிக்க, தன் கையிலிருந்த காலியான ஒயின் கிளாஸை உயர்த்திய எட்வர்ட், அவனது சைகைக்கு நடுவிலேயே தடுத்தவர்,

“புரியுது ரோலக்ஸ்…” என்றார்..

“நீ என்ன கேட்க வர்றேன்னு எனக்கு நல்லாவே புரியுது! கீழே நீ பார்த்த அந்தப் பிரம்மாண்டமானத் தொழிற்சாலை… அங்கே உற்பத்தியாகும் ஆயிரக்கணக்கான அதிநவீனத் துப்பாக்கிகள், கன்வேயர் பெல்டில் வெள்ளமா ஓடுற கோடிக்கணக்கான குண்டுகள்… வெடிமருந்துகள்… இதெல்லாம் என்னோடதுதானேன்னு தானே கேட்குறே?”

ரோலக்ஸ் அமைதியாக “ஆமாம் … !” என்பது போல அவரைப் பார்த்தான்.

“ஆமா ரோலக்ஸ்!” என எட்வர்ட் அழுத்தமான குரலில் ஒப்புக் கொண்டார்.

“இங்க நடக்குறது எல்லாமே… இந்தச் சட்டத்தின் கண்களுக்கு விரோதமான தொழில் தான்! இந்த உலகத்தின் பல நாடுகளுக்குத் தெருவோர மாஃபியாக்கள் மூலமாகவும், ரகசிய அமைப்புகள் மூலமாகவும் ஏற்றுமதி செய்யப்படுற அதிநவீன ஆயுதங்கள் எல்லாமே என்னோட இந்தத் தொழிற்சாலையில இருந்துதான் போகுது!”

இடைவெளி விட்ட எட்வர்ட், தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்று, ரோலக்ஸின் பக்கத்தில் வந்தார்.

“ஆனா… ஆனா நீ நினைக்கிற மாதிரி, இங்க இருந்து தயார் செய்யப்பட்டுப் போற இந்த வெடிகுண்டுகளும் துப்பாக்கிகளும்… அப்பாவி மக்களை அழிக்கிறதுக்காக இல்லை ரோலக்ஸ்!”

எட்வர்டின் குரல் அந்த அறையின் கூரையை அதிர வைத்தது.

“அப்பாவி மக்களை அழிக்க நினைக்கிற… பல மிருகங்களை அழிப்பதற்காக மட்டுமே உருவாக்கப்படுபவை இவை!”

எட்வர்ட் சொன்ன அந்த விசித்திரமான வார்த்தைகளைக் கேட்டதும்… ரோலக்ஸின் கண்கள் புரியாதப் புதிராக பேரதிர்ச்சியோடும் விரிந்தன!

“மக்களை அழிப்பவர்களை… அழிப்பதற்கா?” ரோலக்ஸ் தன் புருவங்களை நெரித்துக் பார்த்தான்.

“ஆம்!” என அவனது தோளை இறுகப் பற்றிய எட்வர்ட்……………

“இந்த உலகம் பார்க்கிற எட்வர்ட் வேறு… இந்த சர்வதேச அரசியல் பார்க்கிற எட்வர்ட் வேறு ரோலக்ஸ் ! வெளியில் இருக்கும் அதிகார வர்க்கமும், போலிச் சட்டங்களும் அப்பாவி ஜனங்களைச் சுரண்டி, போர்களை உருவாக்கி, சொந்த நாட்டு மக்களையே கொன்று குவிக்கின்றன. அவர்களுக்கு எதிராகவும்… அவர்களை இயக்கும் ஆதி மாஃபியா கும்பலுக்கு எதிராகவும் போராடும் ரகசியப் படைகளுக்கு ஆயுதம் கொடுக்கும் ஏகபோக சக்கரவர்த்திதான் இந்த எட்வர்ட்!” என்ற எட்வர்டின் குரலில் இப்போது ஒரு அதிர்வும் கம்பீரமும் இருந்தது … 

“என் தந்தை அன்று செய்தது அதைத்தான் ரோலக்ஸ்! அவர் வெறும் கடத்தல் காரன் அல்ல… இந்த சர்வதேசக் கொடூரர்களுக்கு எதிராகத் தன் சொந்த மண்ணைக் காப்பாற்றப் போராடிய ஒரு ரகசியத் தலைவன்! ஆனால், அவரைத் துரோகத்தால் வீழ்த்தினார்கள். இன்று அதே துரோகிகளின் இன்று பல குடும்பத்தையும் தன் சொந்த மண்ணின் மக்களையும் அழிக்க துரத்துகிறார்கள்!” என்ற எட்வர்ட்டின் கண்கள் மீண்டும் சீற்றத்தால் சிவந்தன.

ரோலக்ஸ் தன் கரிய விழிகளை அகல விரித்து, எட்வர்டின் முகத்தை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது நெஞ்சிற்குள் ஏதோ ஒரு பிரளயம் வெடிப்பதற்கு ஆயத்தமாவது போன்ற உணர்வு.

எட்வர்ட் தன் கிளாஸில் இருந்த ஒயினைப் பருகிவிட்டு, ஒரு நீண்ட பெருமூச்சை வெளியிட்டார். அவனது குரல் இப்போது வெறும் மாஃபியா தலைவனின் குரலாக இல்லாமல், உலக வரலாற்றின் ஆதிப் பக்கங்களைப் புரட்டும் ஒரு தத்துவவாதியின் கம்பீரத்தோடு வெளிப்பட்டது.

“ஆமாம் ரோலக்ஸ்… உனக்கு இது எந்த அளவுக்குப் புரியும்னு எனக்குத் தெரியல… ஆனா உனக்குச் சுலபமா புரியுற மாதிரி, உன்னுடைய வழியிலேயே சொல்றேன் கேளு!”

“நீ பிறந்து வளர்ந்த இந்திய நாட்டையும், அதை ஒட்டி இருக்கிற இலங்கையையும் எடுத்துக்கோ… இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே எத்தனை தசாப்தங்களா ஏகப்பட்ட பிரச்சனைகளும், ரத்த ஆறுகளும் ஓடிக்கிட்டு இருக்குன்னு உனக்கு நல்லாவே தெரியும். அங்கே ஒடுக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட உன்னுடைய சொந்த மக்களான தமிழர்களுக்கு… அவர்களின் சுயமரியாதைக்கும் உரிமைக்கும் குரல் கொடுக்க, விடுதலைப் போராட்ட அமைப்புகளும் புரட்சிப் படைகளும் உருவானது உனக்குத் தெரியும் தானே?”

ரோலக்ஸ், “ஆமாம் !” என .. அமைதியாகத் தலையசைத்தான். 

“அதே போலத்தான் இதும் ரோலக்ஸ்! அது ஏதோ நேற்று இன்று உருவானது அல்ல… மன்னர்களின் ஆட்சி காலத்துல இருந்து, இந்த பூமிப்பந்தில் இருக்கிற ஒவ்வொரு தேசத்திலும், ஒவ்வொரு சமூகத்திலும் ஏதோ ஒரு வடிவில் இந்தப் புரட்சிப் படைகள் இயங்கிக்கிட்டுதான் இருக்கு! அரசாங்கத்தின் அடக்குமுறைக்கும், போலி அரசியலுக்கும் எதிரா நிற்கிற… பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லது செய்யணும்னு தன்னோட உயிரைப் பணயம் வைக்கிற புரட்சிப் படைகள் இந்த உலகத்துல கோடிக்கணக்கில் இருக்கு!”

எட்வர்ட் தன் அறையின் மூலையில் இருந்த ஒரு பிரம்மாண்டமான உலக வரைபடத்தின் முன் சென்று நின்றார். அதில் பல இடங்கள் சிவப்பு நிறப் புள்ளிகளால் முத்திரையிடப்பட்டிருந்தன.

வேட்டை தொடரும் ..⚓

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!