62
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கும், போலி அரசியலுக்கும் எதிரா நிற்கிற… பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லது செய்யணும்னு தன்னோட உயிரைப் பணயம் வைக்கிற புரட்சிப் படைகள் இந்த உலகத்துல கோடிக்கணக்கில் இருக்கு!”என்ற எட்வர்ட் தன் அறையின் மூலையில் இருந்த ஒரு பிரம்மாண்டமான உலக வரைபடத்தின் முன் சென்று நின்றார்.
அதில் பல இடங்கள் சிவப்பு நிறப் புள்ளிகளால் முத்திரையிடப் பட்டிருந்தன.
“உலகத்தோட எந்தப் பக்கத்தை நீ எடுத்துக்கிட்டாலும்… அங்கே ஒரு குருதி படிந்த வரலாறு இருக்கும் ரோலக்ஸ்!”
“இதோ பார்… பாலஸ்தீனம்! அங்கே தன் பூர்வீக மண்ணை இழந்து, சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்ட மக்களின் சுதந்திரத்திற்காகப் போராடும் PLO (Palestine Liberation Organization), Hamas அமைப்புகள்!
அப்படியே ஐரோப்பா பக்கம் வா… அயர்லாந்து ! பிரிட்டிஷ் பேரரசின் ஆதிக்கத்திலிருந்து வடக்கு அயர்லாந்தை மீட்டு, தன் தாய்நாட்டோடு இணைக்க ஆயுதம் தாங்கிப் போராடிய IRA (Irish Republican Army) !
அப்படியே லத்தீன் அமெரிக்காவை நோக்கிப் பார்… மெக்சிகோ.. ! அங்கே சியாபாஸ் மாகாணத்து பழங்குடி மக்களின் நில உரிமையையும், பொருளாதாரச் சமத்துவத்தையும் காக்கக் காடுகளுக்குள் இருந்து போராடும் EZLN (Zapatista Army of National Liberation) !
ரோலக்ஸ் எட்வர்டின் விரல்கள் நகரும் திசையையும், அவர் கூறும் சர்வதேச அமைப்புகளின் பெயர்களையும் கேட்டு வியப்பின் விளிம்பிற்கே சென்றான்.
“இன்னும் இருக்கு ரோலக்ஸ்!” என்ற எட்வர்ட், “கொலம்பியா நாட்டின் ஏழை விவசாயிகள், தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் பல தசாப்தங்களாகப் போராடிய FARC (Revolutionary Armed Forces of Colombia)!
துருக்கி, சிரியா, ஈராக் எல்லைகளில் சிதறி வாழ்ந்து… தன் இனத்தின் கலாச்சாரத்தையும் சுயநிர்ணய உரிமையையும் காக்கப் போராடும் குர்திஷ் மக்களின் PKK (Kurdistan Workers’ Party) படைகள்!
ஸ்பெயின் பாஸ்க் பிராந்தியத்தின் சுதந்திரத்திற்காகப் போராடிய ETA இயக்கம்… பலிப்பைன்ஸில் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகப் போராடும் NPA (New People’s Army) !”
“இந்தப் பட்டியல் இத்தோட முடியாது ரோலக்ஸ்… இது நீண்டுகொண்டே போகும்! ஏனென்றால்… இந்த உலகம் முழுவதும் அநீதியும், அடக்குமுறையும், அதிகார வெறியும் நிறைந்து கிடக்குது!”
“இந்த உலகத்துல பிறந்த எந்த ஒரு மனுஷனும், கையில துப்பாக்கியை ஏந்திக்கிட்டு ரத்தம் சிந்தணும்னு ஆசைப்பட்டுப் பொறக்குறதே இல்லை ரோலக்ஸ்! அப்புறம் ஏன் இந்த பூமியில லட்சக்கணக்கான புரட்சியாளர்கள் உருவாகுறாங்கனு யோசிச்சுப் பார்த்திருக்கியா?”
“அதிகாரத்தில் இருக்குற அரசாங்கமும், அவங்களோட சுயநல அரசியலும்தான் ரோலக்ஸ் இந்தப் புரட்சியாளர்களைப் பெத்தெடுக்குது! எந்த ஒரு நாட்டுல சட்டமும் நீதியும் சாமானிய மக்களுக்கு மறுக்கப்பட்டு, அதிகார வர்க்கத்தின் கையா ஆகுதோ… எந்த இடத்துல சொந்த நாட்டு மக்களோட நிலமும், உரிமையும், மானமும் அரசியல்வாதிகளால் சுரண்டப்படுதோ… அங்கேதான் புரட்சி வெடிக்குது! தங்கள் குடும்பத்தைக் காப்பாத்த, தன் இனத்தோட சுயமரியாதையைக் காப்பாத்த, வேறு வழியே இல்லாமதான் ஒரு சாமானியன் தன் கையில் ஆயுதத்தை எடுக்குறான். அவன் கொடூரமானவன் இல்லை ரோலக்ஸ்… அமைதியைத் தேடி அலையும் ஒரு வேட்டை பறவை!”
எட்வர்ட் சொல்லி முடித்தபோது, இரும்பாலான ரோலக்ஸின் நெஞ்சிற்குள்ளும் ஒரு மாபெரும் பிரளயம் வெடித்து, அவனது விழிகளும் கலங்கி நின்றது !
“இப்போ உனக்குப் புரியும்னு நினைக்கிறேன்… கீழே நீ பார்த்த அந்த அதிநவீன ஆயுதத் தொழிற்சாலையில் உற்பத்தியாகும் கோடிக்கணக்கானத் தோட்டாக்களும், துப்பாக்கிகளும் எதற்காக என்று! இந்த உலகத்தில் இருக்கிற, தன் இனத்திற்காகவும் மக்களின் விடுதலைக்காகவும் போராடுகிற அந்தப் புரட்சிப் படைகளுக்குத் தேவையான பேராயுதங்கள்… இதோ இந்த எட்வர்டின் கையால், இந்தத் தொழிற்சாலையில் இருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுது!” என்ற எட்வர்ட்டின் உதடுகளில் ஒரு கணிக்க முடியாத புன்னகை அரும்பியது.
“ஆமாம்… நான் ஒரு வியாபாரி தான்! பணத்துக்காகத்தான் இந்த ஆயுதங்களை விற்கிறேன்… அதில் எந்த மாற்றமும் இல்லை! ஆனால்… இந்த வியாபாரி தப்பான நோக்கத்துக்காக இந்த ஆயுதங்களை யாருக்கும் விற்கவில்லை!”
“நான் சம்பாதிக்கும் பணம் இரண்டாம் பட்சம். ஆனால், நான் விற்கும் இந்த ஆயுதங்கள் நல்ல வழியில், சரியான கரங்களுக்குப் போய் சேர வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கேன்! இந்த ஆயுதங்கள் மூலமாக சில பேரோட உயிர்கள் போகலாம்… ஆனா, அப்படிக் கொல்லப்படுறவங்க அத்தனை பேரும் இந்த பூமிக்குத் தேவையில்லாத பாரங்கள்! அகங்கார பிசாசுகள்! பாதிக்கப்பட்ட மக்களைக் கொன்று குவிக்கும் மிருகங்கள்!”
“அந்த மிருகங்களை… இந்த பூமியின் பாரங்களை அழிப்பதற்காகவே உருவாக்கப்பட்டவை தான் இந்தத் துப்பாக்கிகள்!”
எட்வர்ட் சொல்லி முடித்த நொடி, ரோலக்ஸின் கண்கள் அதிர்ச்சியில் அகல விரிந்தன! அவனது தொண்டைக்குள் மூச்சுக்காற்று அடைத்துக்கொண்டது.
இத்தனை நாட்களாகத் தான் என்ன நினைத்துக் கொண்டிருந்தேன்?! இந்தியப் பெருங்கடலில் சரக்குகளைக் கடத்துவதும், விசாகப்பட்டினம், தமிழ்நாடு, கொல்கத்தா போன்ற கடலோரப் பகுதிகளில் தன் ஆதிக்கத்தை நிறுவுவதும், எதிரிகளைக் கொன்று குவிப்பதும்தான் நிழல் உலகத்தின் உச்சகட்ட அதிகாரம் என்று மார்தட்டிக் கொண்டிருந்தனே…
‘அடக் கடவுளே… பேரரசனாக, சர்வதேசக் கடத்தல் மன்னனாக வலம் வந்த நான் … உண்மையில் என்னத்தைச் சாதித்தோம்?’ என்ற எண்ணம் அவனது மனதிற்குள் பேரடியாக இறங்கியது!
தான் பார்த்த நிழல் உலகம் என்பது… இந்த பிரம்மாண்டமான உலகப் போர்க்களத்தின் முன் ஒரு சிறிய துளி கூட இல்லை என்பதை ரோலக்ஸ் உணர்ந்தான்.
அதே நேரத்தில்… எட்வர்ட் விவரித்த அந்தப் புரட்சிப் படைகளின் பிரம்மாண்டமும், உலகத்தின் ஒவ்வொரு மூளையிலும் நடக்கும் அந்த ரத்த வெள்ளமும் அவனது மூளையைக் குடைந்தன.
‘இவ்வளவு விஷயங்கள் இந்த உலகத்தில் நடந்து கொண்டிருக்கின்றனவா? ஒவ்வொரு நாட்டிலும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக இவ்வளவு பெரிய புரட்சிப் படைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றனவா?’
எட்வர்ட் ஒவ்வொரு நாட்டின் பெயரையும், அங்கே இயங்கும் ரகசிய ஆயுதப் படைகளின் பின்னணியையும் விவரித்து முடித்தபோது… ரோலக்ஸின் உடம்பில் இருந்த ஒவ்வோர் மயிர்களும் சிலிர்த்து, கூச்செறிந்து நின்றன!
அவனது நரம்புகளில் ஒரு புதுவிதமான பயமும், அதே சமயம் விவரிக்க முடியாத ஒரு அசுரக் கிளர்ச்சியும் பரவின.
ரோலக்ஸின் அருகே வந்த எட்வர்ட், “இதுக்கு மேல… உன்கிட்ட ஒரு விஷயத்தைச் சொல்லவா, ரோலக்ஸ்?” என்ற எட்வர்ட் அவனை அந்த அறையின் ஒரு பக்கத்தில் இருந்த பிரம்மாண்டமான பால்கனியை நோக்கி அழைத்துச் சென்றார்.
ஸ்காட்லாந்தின் உறைபனி வீசும் அந்தப் பால்கனியின் பிரெஞ்சு கதவுகளைத் திறந்ததும், வெளியே அடர்ந்த பனிமூட்டமும், சில்லிடும் குளிர்காற்றும் அவர்களை வந்தடைந்தன.
பால்கனியின் கைப்பிடிச் சுவரில் கைகளை ஊன்றி நின்று, கீழே விரிந்திருந்த மாளிகையின் பிரம்மாண்டமானப் பூங்காவை நோக்கி எட்வர்ட் தன் விரலைச் சுட்டிக்காட்டினார்.
பனிமூட்டத்திற்கு நடுவே… அந்த பூங்காவின் ஒரு மூலையில் அமைக்கப்பட்டிருந்த பளிங்கு இருக்கையில் ஒரு மனிதன் அமர்ந்திருந்தான். சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய கறுப்பு உடை அணிந்த பாதுகாவலர்கள் நின்றிருக்க, அவன் தன் கையில் இருந்த சிகரெட்டின் புகையைக் காற்றில் பறக்கவிட்டுக்கொண்டிருந்தான்.
தூரத்தில் இருந்து பார்த்தபோதே… அந்த மனிதனின் உருவமும், உடலமைப்பும் ரோலக்ஸிற்கு மிகவும் பரிச்சயமான ஒன்றாகத் தோன்றியது!
சற்றும் தாமதிக்காத ரோலக்ஸ், பால்கனியின் மையப்பகுதிக்கு வேகமாக ஓடிச் சென்று, தன் கரிய விழிகளைக் கூர்மையாக்கி அந்த மனிதனின் முகத்தை உற்றுப் பார்த்தான்.
அடுத்த நொடி, ரோலக்ஸின் மூச்சுக்காற்று தொண்டைக்குள்ளேயே அடைத்துக் கொண்டது! அவனது கண்கள் அகல விரிந்து நிலைத்து நின்றன!
அந்த மனிதன் வேறு யாருமில்லை… இந்திய நாட்டின் மத்திய டெல்லி அமைச்சர் சௌத்ரி!
ரோலக்ஸ் பேரதிர்ச்சியோடும், சந்தேகத்தோடும் எட்வர்ட்டைத் திரும்பிப் பார்த்தான். அவனது கண்கள் ‘இவன் இங்கே எப்படி… எதற்காக?!’ என்ற கேள்வியைக் கணைகளாக வீசின.
எட்வர்ட் தன் சுருட்டை பற்றவைத்து, அதன் புகையை மெதுவாக வெளிவிட்டபடித் தொடர்ந்தார், “இப்போ இவன் வந்திருக்கிறது… ஏதோ புரட்சிப் படைக்கோ, இல்ல ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்குறதுக்கோ ஆயுதம் வாங்க வந்திருக்கான்னு நீ நினைக்க வேண்டாம் ரோலக்ஸ்!”
“மக்களை அழிப்பதற்கு மட்டுமல்ல… மக்கள் தலைவர்களையும், இந்த நாட்டின் ஜனநாயகத்தையும் அடியோடு அழிக்கத்தான் இவன் என்கிட்ட இப்போ வந்திருக்கான்!”
அந்த வார்த்தையைக் கேட்டதும் ரோலக்ஸின் கண்கள் மேலும் விரிந்தன.
“ஆமாம் ரோலக்ஸ்… இவன் இப்போ என்கிட்ட வந்திருக்கிறது… பல ஆயிரம் அதிநவீன ஆயுதங்களை வாங்குவதற்குத்தான்! ஏற்கனவே இவன் என்கிட்ட இருந்து நிறைய ஆயுதங்களை வாங்கியிருக்கான். ஆனா, ஒவ்வொரு முறையும் வாங்கும் போதெல்லாம்… தன் பகுதியில் இருக்கிற ஏதோ ஒரு புரட்சிப் படைக்குத்தான் வாங்குவதாகச் சொல்லி என்கிட்ட வியாபாரம் செய்திருக்கான்! நானும் அதை நம்பித்தான் கொடுத்தேன்…”
“ஆனால்… இப்போதான் எனக்குத் தெரியவந்தது! இவன் எந்தப் புரட்சிப் படைக்கும் ஆயுதம் வாங்கவில்லை! தன் சொந்த அரசியல் சுயநலத்திற்காகவும், அதிகார வெறிக்காகவும் சட்டத்திற்குப் புறம்பாக அந்த ஆயுதங்களைப் பயன்படுத்தியிருக்கிறான்! இப்போ… ஒரு மிகப்பெரிய, கொடூரமானத் திட்டத்தோடு என் கதவைத் தட்டியிருக்கிறான்!” என்ற எட்வர்ட் ரோலக்ஸிற்கு இன்னும் அருகில் வந்தார்.
“இவன் இப்போ ஆயுதம் மட்டும் கேட்கலை ரோலக்ஸ்… ஆயுத மனிதர்களையும் என்கிட்ட கேட்கிறான்! அதாவது… ‘மனித வெடிகுண்டுகளை’!”
ரோலக்ஸின் நெஞ்சம் திடுக்கிட்டது!
“டெல்லியில் விரைவில் நடக்கவிருக்கும் மாபெரும் பிரதம மந்திரி கூட்டத்தில்… மனித வெடிகுண்டை உருவாக்கி, அங்கே வரப்போகும் லட்சக்கணக்கான மக்களையும், மூத்த அரசியல்வாதிகளையும், சாட்சாத் பிரதம மந்திரியையும் ஒரே அடியாகத் தீர்த்துக்கட்ட இவன் திட்டம் போட்டிருக்கிறான்!”
“அந்தப் பேரழிவிற்குப் பிறகு… காலி செய்யப் படும் அந்தப் பிரதம மந்திரி நாற்காலியில் இவன் அமர வேண்டும்! இவனின் இந்த பேராசைக்காக… பல ஆயிரம் அப்பாவி உயிர்கள் பலிகொடுக்கப்படப் போகின்றன!”
“நான் இவனுக்கு ஆயுதம் கொடுக்க மாட்டேன் னு மறுத்தாலும்… இவன் வேறு ஏதேனும் ரகசிய வழியில் தன் திட்டத்தைச் செயல்படுத்தப் பார்ப்பான்!”
“இதை நான் உன்கிட்ட சொல்லிட்டேன்… இனி, உன் நாடு! உன் மக்கள்! என்ன பண்ணணுமோ நீயே பண்ணிக்கோ!”என்ற எட்வர்ட் அங்கிருந்து அமைதியாக நகர்ந்து, அறைக்குள்ளே சென்று மறைந்தார்.
பால்கனியில் தனித்து நின்ற ரோலக்ஸின் மனதிற்குள் ஒரு மாபெரும் பிரளயமே வெடித்துச் சிதறியது!
தன் தாய்நாட்டின் பிரதமரையேக் கொல்லப் பார்க்கிறான் ஒரு மத்திய அமைச்சர்! அதுவும் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பலிகொடுத்து, அதிகார அரியணையைக் கைப்பற்றத் துடிக்கிறான்!
ரோலக்ஸின் கரிய விழிகளில்… ரத்த வெறியும், தாய்நாட்டைக் காக்கும் அந்த அசுரனின் சீற்றமும் ஒன்றாகக் கலந்தன. அவன் ஒரு நொடி கூட தாமதிக்க விரும்பவில்லை!
நேராக அறைக்குள் ஓடி வந்தான். எட்வர்ட்டின் பிரத்யேக ரகசியத் தொடர்புக் கருவிகளைப் பயன்படுத்தி… இந்தியாவிலிருக்கும் தன் ஆருயிர் நண்பன் பைரவனுக்கு ரகசியத் தந்தி ஒன்றை அனுப்பினான்!
“பைரவா…”
“டெல்லி அமைச்சர் சௌத்ரி ஸ்காட்லாந்திற்கு வந்திருக்கிற விஷயம் எனக்கு நல்லாவே தெரியும்!”
“அங்கே… நம்ம சந்துரு என்னை சந்திக்கவும், பார்க்கவும் அலைந்துகிட்டு இருக்கான்… என்னை வேட்டையாடத் துடிச்சுக்கிட்டு இருக்கான்னு எனக்கு நல்லாவே தெரியும்!”
“ஆனா… அதைப் பற்றியும் எனக்கு எந்தக் கவலையும் கிடையாது!”
“பைரவா… நீ உடனே புறப்பட்டுச் போய் சந்துருவைப் பார்! நான் சொல்ற இந்த விஷயத்தை அவன்கிட்ட அப்படியே செய் சொல்லு!”
“இதை நானே நேரடியாக உன்கிட்ட சொல்லி, அவன் கிட்ட சொல்லச் சொன்னதாச் சொல்லு!”
“என்னுடைய வார்த்தையாக இதை அவன்கிட்ட போய்ச் சேர்… இந்த விஷயத்தை அவன் கண்டிப்பா பண்ணியே ஆகணும்!”
“இது என் உத்தரவு… ரோலக்ஸின் கட்டளை!”
வேட்டை தொடரும் ..⚓
