அத்தியாயம் 7

அத்தியாயம் 7

 

      எப்படி இந்த உடையை போட்டுக் கொண்டு இவள் இந்த மண்டபத்தின் உள்ளே நுழைத்தாள். அது சரி மண்டபத்தின் பின்புறம் செல்லும்பொழுதே தெரியவில்லையா வரும்பொழுதும் இப்படித்தான் வந்திருப்பாள் என்று,  ஏனோ அந்த யுவதியை பார்க்க பார்க்க ஒரு வித வெறுப்பு கீர்த்தி மனதில் தோன்றுவதை அவளால் தடுக்க முடியவில்லை.

 

     இதுவரை காதால் மட்டும் கேட்ட அவளது எம் டி யின் நடவடிக்கை இன்று லைவாக காதில் கேட்க வேண்டியதாகி விட்டது. நல்லவேளை பார்க்கவில்லை பார்த்து இருந்தால் கீர்த்தி நடந்து கொள்ளும் விதமே வேற மாதிரி இருந்திருக்கும்.  இவர்களை பற்றி நினைத்துக் கொண்டே இருந்தவளுக்கு குமரனின் நினைவு அப்பொழுதுதான் வந்தது.

 

     ஐயோ இந்த மாமா எங்க போச்சு என்று அவள் திரும்பி பார்க்கும் நேரம் சரியாக குமரனும் இவளை நோக்கி சிரித்தபடியே ஓடி வந்தான். 

 

   இவள் அருகில் வந்தவனோ, “ரொம்ப நேரம் காக்க வச்சுட்டனா புள்ள.  வேண்டியவக எல்லாரும் ஒட்டுக்க வந்துட்டாக புள்ள. அவங்கள பாத்து கவனிச்சிட்டு இருந்தேன் அப்படியே நேரம் போயிடுச்சு. நீ ஏன் உள்ள போகாம இம்புட்டு நேரமும் இங்கேயே காத்திருக்கவ . ”

 

    அந்த வெல்லந்தியான பேச்சைக் கேட்டதுமே, கீர்த்தி முகத்தில் தன்னால் புன்னகை பூக்க,

 

   “ அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல மாமா. வந்தவங்கள நல்லபடியாக கவனிச்சிட்ட தான . ”

 

   “ ம்ம்”

 

    “சரி வா இங்க உட்காரு “என்று அவள் அருகில் இருந்த கதிரையை காட்ட, 

 

    “நான் தான் முன்னாடியே சொன்னேன்ல்ல புள்ள. இங்க இருந்தே விஷயத்தை சொல்லு.”

 

    அவனை பார்த்து தலையில் அடித்துக் கொண்டவளோ, அவனின் கையைப் பிடித்து இழுத்து அவளே கதிரையில் அமர வைக்க,

 

    இவனோ எழுந்து ஓட பார்க்க,

.

இப்ப மட்டும் நீ எந்திரிச்சு போன, என் கூட இனிமே நீ பேசவே கூடாது சொல்லிட்டேன். 

 

      அதைக் கேட்டதும் அவனுக்கும் ஒரு மாதிரியாக, சரி என்று அப்படியே அமர்ந்து விட்டான்.

 

    அவன் நகராமல் இருப்பதை பார்த்தவள். 

 

   ” அது ” என்று அஜீத் போல கூறிவிட்டு, “உன்னை தொடவெல்லாம் மாட்டேன். ரொம்ப சீன் போடாம, கொஞ்ச நேரம் அமைதியா இரு. அப்புறம் திரும்ப யாராவது வந்துர போறாங்க.  அதுக்குள்ள நான் விஷயத்தை சொல்லிவிடுகிறேன். ”

 

    குமரனும் கவனமாக கீர்த்தியை  என்ன விஷயம் என்பது போல் பார்க்க, 

 

     “மாமா நான் சொல்ற விஷயம் ரொம்ப ரகசியமானது. கடுகு அளவு வெளியே தெரிஞ்சாலும் பிரச்சனை பெருசாயிடும். அதனால நான் சொல்ல போறத ரொம்ப சீக்ரெட்டா வச்சுக்கிறது உன்னோட பொறுப்பு. எனக்கு இங்க ஃபிரெண்ட்ன்னு என்று சொல்லிக்க யாரும் இல்ல உன்ன தவிர, அதனால இந்த உதவி பண்ண உன்னை மட்டுமே நம்பி இவ்வளவு நேரம் வெயிட் பண்ணி இருக்கேன். அதுக்காகவாது இந்த உதவிய எனக்கு பண்ணு மாமா”

 

   “ சரி பிள்ளை என்ன விஷயமுன்னு சொன்னாத்தானே தெரியும்”

 

   “ சொல்றேன் ஆனா அதுக்கப்புறம் முடியாதுன்னு சொல்லக்கூடாது. ”

 

   குமரன் மனதில் நினைத்துக் கொண்டான். நீ கேட்டு என்னக்கி புள்ள நான் முடியாதுன்னு சொல்லிருக்கேன். என்று, ஆனால் அதை அவன் வாயை திறந்து கூறவில்லை.  

 

  .சரி என்று சுற்றி முற்றி  பார்த்தபடியே கீர்த்தி, குமரனிடம் “நாளைக்கு காலைல தாலி கட்டுறதுக்கு முன்னாடி அக்காவ இந்த மண்டபத்தை விட்டு எப்படியாவது கிளப்பி ஆகணும்.”

 

    இப்பொழுது குமரனின் முகத்திலோ அத்தனை அதிர்ச்சி, “ என்ன புள்ள சொல்லுறவ கல்யாணமே ரம்யா புள்ளக்கி தான ”

 

    “ஆமாம் மாமா ஆனா அஸ்வின் அண்ணா கல்யாணம் மட்டும் தான் நாளைக்கு நடக்கும். ரம்யா அக்கா கல்யாணம் இங்க நடக்காது மாமா”

 

     “ கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லு புள்ள ”

 

    “ அக்கா வேற யாரையோ காதலிக்கிறாளாம்”

 

   “ என்னது காதலா? அதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரிப்பட்டு வருமா.  மாமாக்கு தெரிஞ்சா சாமி ஆடி புடுமே.”

 

     “என்ன மாமா நீ. ஏன் இப்படி பேசுற இப்ப நீயே சொல்லு.நீ  ஒரு பொண்ண மனசார விரும்புற. அந்த பொண்ண விட்டுட்டு வேற பொண்ணுக்கு உன்ன கல்யாணம் பண்ணி வச்சா எப்படி இருக்கும். அந்த  கல்யாணத்தை தான் நீ பண்ணிக்குவியா? ”

 

   “பண்ணிக்க மாட்டேன் தான் புள்ள. ஆனா இதை முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல்ல ”

 

    “முன்னாடியே சொன்னா மட்டும் உங்க மாமா கல்யாணத்தை நிறுத்திடுவாரோ ”

 

   “ அது இல்ல புள்ள மாப்பிள்ளை பார்க்கும்போதே சொல்றேன். ”

 

   ” மாப்பிள பாக்கும்போதெல்லாம் அக்காவுக்கு இந்த ஃபீலிங் வரலையாம் இடையில கல்யாணத்துக்கு ஷாப்பிங் போகும்போது தான் அவங்க கூட படிச்சவரை பார்த்தாங்களாம். காலேஜ் படிக்கும் போதே அக்கா லவ் பண்ணி இருக்கா. ஆனா ஒன்சைடா அதை சொல்ற தைரியம் இவளுக்கு இல்லாம இப்புடியே இத்தனை வருஷம் கடந்துடுச்சு. 

 

    ஆனால் ரொம்ப வருஷம் கழிச்சு துணிக்கடையில் தான் பார்த்து இருக்காங்க ரெண்டு பேரும். அதுக்கப்புறம் தான் லவ் மலர்ந்து இருக்கு. இதுக்கு யாரு மேல என்ன குறை சொல்ல முடியும் மாமா. சொல்லு நீயே அக்காவை எப்படியாவது அக்கா காதலிக்கிறவர் கூட சேர்த்து வச்சிடலாம் மாமா”

 

    “ புரியாம பேசாத புள்ள அது யாரு என்னன்னு தெரியாம எப்படி, நம்ம வீட்டு புள்ளய அனுப்பி வைக்க முடியும். திடீர்னு கூட்டிட்டு போனவன் விட்டுட்டு போயிட்டானா. அந்த பிள்ளையோட கதி என்ன ஆகுமுன்னு நெனச்சு பாத்தியா. மாமா அதுக்கப்பறம் வீட்டுக்குள்ள தான் விடுமா. வீட்டுக்கும் வர முடியாம, கட்டுனவனும் விட்டு போனா அந்த புள்ள என்ன ஆகும். நாலு விஷயத்தை யோசிச்சு முடிவெடுக்கணும் புள்ள. எடுத்த எடுப்புலயே இப்படி நீ முடிவு எடுத்துட்டு வந்து சின்ன புள்ள தான்னு நிரூபிக்கிற பாத்தியா. ”

 

     “ என்னன்னு தெரியல மாமா. எனக்கு அக்கா மேல நம்பிக்கை இருக்கு. அக்கா ஒன்னும் அவ்வளவு வீக்கானவ இல்லையே. அவளுக்கு தெரியும் யார் மேல நம்பிக்கை வைக்கணும். யாரு மேல நம்பிக்கை வைக்கக் கூடாதுன்னு, அக்கா பேசுறதை பார்த்தால் ரொம்ப உறுதியாக தான் பேசுறா . அதுவும் இல்லாம அவரும் அக்காவுக்கு கல்யாணம் ஆனா ஏதோ பண்ணிக்கிற மாதிரி தான் பேசினாராம்.”

 

    “ இல்ல புள்ள இது சரிப்பட்டு வராது. மாமனையே கூப்பிட்டு என்னன்னு கேட்டுபுடுவோமா”

 

     ” ஐயோ மாமா உன் கிட்ட போய் சொன்னேன் பாரு எனக்கு ஹெல்ப் பண்ணுவேன்னு நினைச்சி. நீ ஒன்னும் பண்ணி கிழிக்க வேணாம் போ. இந்த விஷயம் யாருக்காவது தெரிஞ்சது அவ்வளவுதான். இனிமே உன் மூஞ்சிலயே நான் முழிக்க மாட்டேன். எனக்கு ஹெல்பும் பண்ண வேணாம். ஒன்னும் பண்ண வேணாம். நீ கிளம்பி போ “என்று கீர்த்தி கோபமாக எழுந்து போக பார்க்க.

 

      உடனே அவளை எப்படி நிறுத்துவது என்று தெரியாமல், குமரனோ கீர்த்தியின் கையைப் பிடிக்க, கீர்த்திக்கு எதுவும் ஃபீலாகவில்லை. ஆனால் குமரனுக்கு தான் ஷாக் அடித்தது போல, உடனே அவளிடம் இருந்து கையை எடுத்து விட்டான்.

 

    “இரு புள்ள எதுக்கு இத்தனை கோபப்படுறவ . ஆருகிட்டயும் நீ இம்முட்டு கோவப்பட்டு நான் பார்த்ததில்லை. என்கிட்ட மட்டும் தான் இந்த வீம்பு எல்லாம். ”

 

     “உரிமை இருக்கிற இடத்தில தானே மாமா கோபப்பட முடியும். ”

 

   “சரி புள்ள நீ ஒரு முடிவோட தான் இருக்கன்னு எனக்கு தெரிஞ்சிருச்சு. நான் என்ன பண்ணட்டும் அத மட்டும் சொல்லு. ”

 

     உண்மையில் கீர்த்திக்கு குமரனை நினைத்து ஆச்சரியமாக இருந்தது. பின்ன இரண்டு நிமிடத்திற்கு முன் அவன் குதித்த குதி என்ன! இப்பொழுது தான் விட்டு செல்வேன் என்று கூறியதும் எதையும் யோசிக்காமல் அவளுக்கு உதவி செய்ய நிற்பது என்ன ! கீர்த்திக்கோ பேசாமல் மாமனையே கல்யாணம் செய்து தானும் ஓடி விடுவோமா என்று தான் தோன்றியது .

 

     “ஏன் மாமா நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே ”

 

     “ என்ன புள்ள ”

 

     ” நீ என்கிட்ட ஏதாவது சொல்லாம மறைச்சிட்டு இருக்கியா” என்று கேட்டவுடனே குமரனின் முகம் மாற,

 

  ” என்ன புள்ள சொல்ற “என்று குரல் தடுமாற, ” அப்படி எதும் இல்லையே” என்று திக்கி திணறி அவன் கூறிய விதமே, அவ்வளவு அழகாக இருந்தது.

 

    அவளோ அவனை விடாமல், இல்ல மாமா என்கிட்டே ஏதாவது முக்கியமான விஷயத்தை நீ மறச்சிட்டு இருக்குற மாதிரியே எனக்கு பீல் ஆகுதே?

 

     “ம்ச். இப்ப உங்க அக்கா விஷயத்த பாப்போமா. என்ன பண்ணனும்னு சொல்லுன்னு தானே கேட்டேன். எதுக்கு தேவையில்லாம பேசுறவ . ”

 

   “தேவையில்லாமயா தேவையோட தான் மாமா பேசுறேன். சரி விடு உனக்கு இப்ப சொல்ல விருப்பம் இல்லனா . எப்பயாவது நீ சொல்லித்தான் ஆகணும் அப்ப பாத்துக்குறேன்.” என்று கடைசி வரியை கூறும்பொழுது மட்டும் அவள் அவனை நெருங்கி அவன் காதில் சென்று கூறிவிட்டு விலக,

 

      நொடியில் குமரனின் முகம் மாற, கூசிய தன் காதை நன்றாக தேய்த்து விட்டவன். அதற்கு மேல் அங்கு ஒரு நொடி கூட நிற்காமல் ஓடியே விட்டான்.

 

   அவன் ஓடுவதை பார்த்து சத்தம் போட்டு சிரித்தவள்.

 

   ” மாமா சரி நீ ரொம்ப வெட்கப்படற போல, நான் உனக்கு கால் பண்றேன். அதையாவது அட்டென்ட் பண்ணு. டைம் ரொம்ப கம்மியா தான் இருக்கு நமக்கு ” என்று கூறிய கீர்த்தியோ அவனது வெட்கத்தை ரசித்து தான் பார்த்தாள்.

 

       இவளை விட்டு அங்கு மூச்சு வாங்க ஓடியவனது முகத்திலும் அப்படி ஒரு வெட்க சிரிப்பு.

      இவர்கள் இங்கு தனியாக பேசி சிரித்துக்கொண்டிருந்ததை ஒரு ஜோடி கண்கள் ஏனென்று தெரியாமலே, ஒரு வித வன்மத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது.

 

 

 

– தொடரும்

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!