வெற்றியின் முகத்தை நெருக்கமாக பார்த்த அனுவுக்கு, உள்ளுக்குள் குளிர் பரவியது.
அவள் லேசாக அசைந்ததில், வெற்றி கண் விழித்து விட்டான்.
நான்கு விழிகளும் ஒன்றாக கலந்தன.
“ஹேய் பூனைக் குட்டி, எழுந்திரிச்சிட்டியா டி?” தூக்க கலக்கத்தில் கேட்டான்.
அப்பொழுதுதான் சுற்றி முற்றி பார்த்தாள். அவனின் அறையில் இருப்பது தெரிந்ததும், திடுக்கிட்டு எழுந்தாள்.
“நான் எப்படி இங்கே?” என்று கேட்டவளை, ரசனையாக பார்த்தான் வெற்றி.
“நீ எப்படி இங்கே வந்தன்னு உனக்கு தெரியாதா, பூனைக் குட்டி?” காலையிலேயே உதட்டை பிதுக்கி, குறும்பாக கேட்டவனை திகைத்து பார்த்தாள் அனு.
“நீங்கதான் தூக்கிட்டு வந்திங்களா?” பயத்தில், நெஞ்சில் கை வைத்து கேட்டவளை பார்த்து, ஒற்றை கண்ணை அடித்தான் வெற்றி.
“நான் இப்போ வீட்டுக்கு போகணும், கெட்டவன் சார். என்னை விட்டுருங்க” என்று எழுந்திரிக்க முயற்சி செய்தவளின் இடையை சுற்றி, கைகளை போட்டான்.
இவளுக்கு பயப்பந்து, நெஞ்சில் இருந்து அடி வயிற்று வரை உருண்டது.
“கெட்டவன் சார், என்ன பண்றிங்க? கையை எடுங்க” என்றாள் திக்கி திணறி.
“நான் கேட்குறதுக்கு உண்மையை மட்டும் சொல்லு, உடனே கை எடுக்குறேன்” என்றான் வெற்றி.
“கேளுங்க, டக்குனு சொல்லிட்டு கிளம்புறேன். அம்மா எழுந்திரிச்சி என்னை தேடுறதுக்குள்ள நான் போகணும், இல்லனா என்ன நடக்கும்னு எனக்கு தெரியல” என்று பட படப்பாக பேசினாள் அனு.
“நான் கேட்குறதுக்கு உண்மையை சொல்லணும், பொய் சொல்றன்னு தெரிஞ்சா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்றவனின் விழிகள், அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தது.
“சொல்லுங்க” என்றவளின் குரல், வெளியே கூட வரவில்லை. உதட்டை பிரிக்காமல், வார்த்தையை வெளியிட்டாள்.
“நான் நைட் வருவேன்னு தெரிஞ்சிதான, என்னை கவுக்குறதுக்கு குட்டி டாப்ஸ் போட்டுருக்க?” என்று கேட்டான்.
“ஹய்யோ, அப்படி எல்லாம் இல்லை. இந்த ட்ரெஸ் கொஞ்சம் கம்ஃபர்டபிலா இருக்கும், அதான் போட்டிருந்தேன். அதுவும் இல்லாமல், இது ஒண்ணும் டாப்ஸ் இல்லை, டீ-ஷர்ட்” என்றாள்.
“டீ-ஷர்ட்டா, இது? நான் போடுற கை இல்லாத உள் பனியன் மாதிரி இருக்குது” என்றவனை, நிமிர்ந்து பார்க்க முடியாமல் குனிந்திருந்தாள் அனு.
“நான் வருவேன்னு தெரிஞ்சிதான, அழகா ட்ரெஸ் போட்டிருந்த? சொல்லு டி” என்றான்.
“நீங்க ஏன் எங்க வீட்டுக்குள்ள வரீங்க? அதுவும் ராத்திரி நேரம்” என்றாள்.
“ஏன் வரக்கூடாதா?” என்று புருவம் உயர்த்தி, கேட்டவனை முறைத்து பார்த்தாள் அனு.
“கண்டிப்பா வரலாம், அதுக்கு நேரம் காலம் இருக்குது. நீங்க நைட் டைம், யாருக்கும் தெரியாமல் வந்து என்னை தொல்லை பண்றிங்க” என்றாள்.
அவளின் நுனி மூக்கை பார்த்தான். லேசாக சிவக்க ஆரம்பித்திருந்தது.
“நான் வர்றது உனக்கு பிடிக்கலையா?” என்று கேட்டான்.
“அது, அது” என்று திணறியவள், “பகல்ல வாங்க, நைட் வேணாம்” என்றாள். அவனை இனிமே என் அறைக்கு வர வேண்டாம் என்று, முடிவாக அவளால் கூற முடியவில்லை.
“சரி, இனிமே நைட் வரல, காலையில வரேன். என்னோட வெளியே வரியா?” என்று கேட்டான் வெற்றி.
அவளின் இமைகள் பட படத்தது. “வெளியே எங்கே? எங்க வீட்டுல விட மாட்டாங்க, சும்மா வீட்டுக்கு வாங்க, வந்து அம்மாகிட்ட பேசிட்டு போங்க” என்றாள்.
“அம்மாகிட்ட மட்டும் பேசுனா போதுமா?” என்று ஒரு மாதிரியாக, கேட்டவனை பார்க்க முடியாமல் திரும்பி கொண்டாள்.
“ஹேய் அனு” என்று, அவளின் கன்னங்களை பற்றி, முகத்தை நிமிர்த்தினான் வெற்றி.
விழிகள் நான்கும் ஒரே நேர் கோட்டில் சந்தித்தது.
“என்னை பற்றி என்ன நினைக்கிற, அனு?” கனிவான குரலில் கேட்டான்.
இவள் சிறிது நேரம் யோசித்தாள். வெற்றி பொறுமையாக இருந்தான், அவளின் பதிலுக்கு.
அவன் பொறுமையாக இருப்பது, இதுவே முதல் முறை. அவளின் விழிகளை பார்த்துக் கொண்டு, இன்று முழுவதும் கூட அவன் பொறுமையாக இருப்பான் போலும்.
அவளின் உதடுகள் விரிந்தது. “நீங்க ரொம்ப கெட்டவன், ட்ரிங்க்ஸ் பண்ணுவீங்க, அதுக்கு ரொம்ப அடிமையாயிட்டிங்க. உங்ககிட்ட பணம் வாங்குனவங்க, நீங்க சொன்ன டைம்க்கு பணம் தரலைனா, அவங்கள தூக்கிட்டு வந்து அடிப்பீங்க. நீங்க கொடுக்கிற பணத்துக்கு, வட்டி ரொம்ப அதிகமா வாங்குவிங்க” என்று, ஒவ்வொன்றாக கூறினாள்.
அவன் எதிர்பார்த்ததைதான் அவள் கூறினாள். அதனால், அவனுக்கு வலிக்கவில்லை. மனம் புண்ணாகவுமில்லை.
“நேற்று நான் ட்ரிங்க்ஸ் பண்ணல, அனு” என்றான் வெற்றி.
இவளுக்கு ஆச்சர்யத்தில், விழிகள் இரண்டும் பெரிதாக விரிந்தது. “உண்மையாவா?” என்று கேட்டாள்.
ஏனோ அவன் ட்ரிங்க்ஸ் பண்ணல என்று கூறியதும், இவளுக்கு முதுகில் சிறகு முளைத்தது போல் இருந்தது.
“ம்ம், உண்மையா ட்ரிங்க்ஸ் பண்ணல, நான் ட்ரிங்க்ஸ் பண்ணாமல் இருந்தது இதுதான் முதல் முறை” என்றான்.
அவன் குடிக்கவில்லை என்று கூறியதும், இவளுக்கு மனதுக்குள் சந்தோஷமாக இருந்தது. ஆனால், வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
அவளின் கன்னங்களில் இருந்த அவனின் கைகள், இன்னும் இறங்கவில்லை.
“ஹேய் அனு” என்று, மறுபடியும் கனிவான குரலில் அழைத்தான்.
“நான் ரொம்ப கெட்டவன்தான், அனு. ஆனால், உன்னை பார்த்த பிறகு, எந்த தப்பும் பண்ண பிடிக்கல” என்றான்.
இவள் பயத்தில் எச்சில் விழுங்கினாள். “என்னை பார்த்த பிறகு தப்பு பண்ண பிடிக்கலைனா? எந்த மாதிரி தப்பை சொல்றிங்க” என்று, புரியாமல் கேட்டாள்.
“நீ சொன்னதை விடவும், நிறைய தப்பு பண்ணிருக்கேன், அனு” என்றவனை, திகிலாக பார்த்தாள் அனு.
“கொலை பண்ணிருக்கீங்களா?” கண்களில் பயத்தை தேக்கி, கேட்டாள். அதை தாண்டி அவளால், வேறு எதையும் யோசிக்க முடியவில்லை.
ஒருவனை கொலை செய்யும் இடத்தில் வைத்து, வெற்றியை நினைத்து பார்க்க கூட முடியவில்லை அவளால். ஆனால், இந்த கெட்டவனை அவளுக்கு பிடித்திருக்கிறது.
அவன் மறுப்பாக தலை அசைத்தான்.
“பின்ன என்ன தப்பு பண்ணீங்க?” என்று குழந்தை தனமாக, அவள் கேட்டதில், அவளின் சிவந்த உதடுகளில், பட்டும் படாமலும் முத்தம் வைத்து விலகினான் வெற்றி.
அவள் சுதாரிப்பதற்கு முன், முத்தம் கொடுத்து விட்டான்.
உடனே அவளை கைகளிலும் ஏந்திக் கொண்டான். “உன்னை யாரும் பார்க்குறதுக்கு முன்னாடி, உன் ரூம்ல விட்டுறேன்” என்றான்.
“என்ன தப்பு பண்ணீங்க” அவள் கேட்ட கேள்விக்கு, அவனால் பதில் சொல்ல முடியவில்லை. அதனால், முத்தம் கொடுத்து, அவள் யோசிப்பதை தடுத்து நிறுத்தி விட்டான்.
அவன் கொடுத்த முத்தத்தில், அவனையேதான் திகைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் அனு.
அவன் தூக்கி சென்றது கூட, அவளுக்கு உறைக்கவில்லை. அவளை கட்டிலில் படுக்க வைத்து விட்டு, அவன் வீட்டுக்கு சென்று விட்டான்.
“என்ன அனு, தூங்கலையா?” சுபத்ரா கேட்டதும், சுயநினைவு வந்தது அனுவுக்கு.
“என்னடி, சீக்கிரமா எழுந்திரிச்சிக்க?” என்று கேட்டார்.
“தூக்கம் கலஞ்சிருச்சும்மா” என்றாள்.
வெற்றி அனுவை வீட்டுக்கு தூக்கி வரும் போதே, பாதி விடிந்து விட்டது. இப்பொழுது, சூரியன் அவனின் கதிர்களை, பளிச்சென்று பூமியில் செலுத்த ஆரம்பித்தான்.
வெற்றி, அனு கூறியது போல், காலையிலேயே அவளின் முன் சென்று நின்றான்.
இப்பொழுதுதான் குளித்து முடித்து வந்தவள், புரியாமல் அவனை பார்க்க, “அக்கா, பாப்பாவை கொஞ்ச நேரம் வெளியே அழைச்சிட்டு போய்ட்டு வரேன்” என்று, சுபத்ராவிடம் கூறினான்.
“தாராளமா கூப்பிட்டு போய்ட்டு வாங்க, தம்பி” என்றார் சுபத்ரா.
“எங்கே கூப்பிட்டு போக போறீங்க? எதுக்கு கூப்பிட்றீங்க? ஒண்ணுமே கேட்காமல், உடனே கூப்பிட்டு போய்ட்டு வாங்கனு சொல்றாங்க, அம்மா” என்று தடு மாறியவள், அவனை பார்க்க, “நீ சொன்ன மாதிரி, பகல்ல வரேன் இனிமே” என்றான், அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.
சுபத்ரா நின்றிருப்பதால், அவளை விட்டு ஓரடி தள்ளி நடந்தான். இல்லையென்றால், அவளின் பாதம் தரையில் படாமல், அவளை கைகளில் அள்ளிக் கொள்ள ஆசைதான் அவனுக்கு.
காரில் ஏறியவள், அவனை ஒரு முறை பார்த்தாள். எப்பொழுதும் கருப்பு நிற உடையை மட்டுமே அணியும், அவனின் முறுக்கேறிய தேகத்தையும், கழுத்தில் தொங்கிய ருத்திராட்ச கயிற்றையும் பார்த்தாள்.
“என்கிட்ட எதாச்சி கேட்கணுமா, பூனைக் குட்டி? என்னையே பார்க்குற மாதிரி தெரியுது? நான் ரொம்ப அழகா இருக்கேனா, என்ன?” என்று, தன் கேசத்தை கோதிக் கொண்டு, கேட்கும் அவனின் தோரணை, உண்மையில் அழகாகதான் இருந்தது.
“எங்கே கூப்பிட்டு போறீங்க என்னை?” என்று கேட்டாள்.
“ரொம்ப தூரம்லாம் இல்லை, சும்மா பக்கத்துலதான்” என்றான் வெற்றி.
“எங்க அம்மா, நீங்க கேட்டதும் ஓகே சொல்லிட்டாங்க. என்கிட்ட கேட்குறதுக்கு முன்னாடியே, எங்க அம்மாகிட்ட கேட்டிங்களா?” என்று கேட்டாள்.
“ம்ம்ஹும், உங்க அம்மா என்னை நல்லவனா பார்க்குறாங்க. அதுனால, நான் கூப்பிட்டதும் உடனே உன்னை, என்னோட அனுப்பி வச்சாங்க. உனக்கு தெரிஞ்ச அளவுக்கு, உன் அம்மாவுக்கு என்னை பற்றி எதும் தெரியாதுல்ல, அவங்க ரொம்ப வெள்ளந்தி. அவங்களோட வெள்ளையான மனசுதான், உனக்கும் இருக்குது” என்றான்.
“ம்ம்” இவள், இரு பக்கமும் தலை ஆட்டி வைத்தாள்.
“இந்த நாள் முழுக்க, நீ என்னோடதான் இருக்க போற” என்றதும், அவளை அதிர்ச்சி தாக்கியது.
“எ, எங்க அம்மாக்கு தெரியுமா?” என்று கேட்டாள்.
“அப்பறமா கால் பண்ணி சொல்லுறேன்” என்றான்.
“என்னை எங்கே அழைச்சிட்டு போறீங்க? எனக்கு நிஜமா ரொம்ப பயமா இருக்குது” என்று, அழ ஆரம்பித்து விட்டாள் அனு.
“நீ அழுதா, உன்னை உடனே வீட்டுக்கு அனுப்ப மாட்டேன். ஒரு நாள்னு சொன்னது, ரெண்டு நாளா கூட மாறலாம், யாருக்கு தெரியும்?” என்று, கெட்டவன் கூறியதும், அவளின் அழுகை கொஞ்சம் குறைந்தது. கன்னங்களை தாண்டி வழிந்த, கண்ணீரை துடைத்தாள்.
“ப்ளீஸ், சீக்கிரம் என்னை வீட்டுல விட்டுருங்க, கெட்டவன்” அடி குரலில், பயத்தோடு கூறினாள்.
“பார்ப்போம், அது நீ நடந்துக்கிற விதத்துலதான் இருக்குது, பூனைக் குட்டி” என்று, கண் சிமிட்டி கூறினான்.
காருக்குள், பயத்தோடு அமர்ந்திருந்தாள் அனு. சில நேரம், இந்த கெட்டவனை தன்னையும் மீறி ரசிக்கிறாள். சில நேரம், அவனை பார்த்ததும் பயப்படுகிறாள்.
இப்பொழுது, அவனிடம் தனியாக சிக்கிக் கொண்டோமோ என்ற, பயம் அவளின் நெஞ்சை கவ்வியது.
தனக்கென்று உபயோகப்படுத்த, ஒரு கைபேசி வாங்கிக் கொள்ளவில்லையே என்று, முதன் முறை அதை நினைத்து கவலைப்பட்டாள்.
“போன் இருந்திருந்தா, கெட்டவனால எதாவது பிரச்சனை வந்தா, அப்பாக்கு கால் பண்ணி சொல்லிருக்கலாம். பிரச்சனை பண்ற கெட்டவன்கிட்டேயா போன் வாங்கி பேச முடியும்? ஹய்யோ, என்ன பண்ண போறானோ? சும்மாவே முத்தம் கொடுத்தே தொல்லை பண்ணுவான், இப்போ தனியா வேற சிக்கிட்டேன். எதாவது குடோன்க்கு கடத்திட்டு போய், கட்டி வச்சி, அய்யயோ, நினைச்சி கூட பார்க்க முடியலையே.”
கார் நின்றது கூட தெரியாமல், யோசனையிலேயே இருந்தவளின் பின்னந்தலையில், ஒரு அடியை விட்டான் கெட்டவன்.
“ஆஹ்” பின்னந்தலையை தேய்த்துக் கொண்டவள், அப்பொழுதுதான் நிமிர்ந்து பார்த்தாள்.
கெட்டவன், காருக்கு வெளியே நின்றிருந்தான்.
கடல் காற்று, அனுவின் முகத்தை தீண்டி சென்று, அவளின் நெற்றியோரம் இருந்த, குட்டி குட்டி முடிக்கற்றைகளை கலைத்து விட்டு சென்றதில், அனு கேசத்தை காதோரம் ஒதுக்கியபடி, அழகாக புன்னகைத்தாள்.
அடுத்த பதிவில் பார்ப்போம்.
இந்த எபி பிடிச்சிருந்தா குட்டி ஹார்ட் ப்ளீஸ்.
