மலர்-30
அப்போ நமக்குள்ள ஒன்னுமே இல்லையா? இந்த ரிலேஷன்ஷிப்? ஒன்னுமே கிடையாதா ? அப்ப எதுக்குடி அப்டி விழுந்து விழுந்து என்ன ஆஸ்பத்திரில கவனிச்சுக்கிட்ட? எதுக்கு குழந்தைக்கு குச்சி மிட்டாய் காமிக்கறமாதிரி இந்த கொஞ்ச நாள் சம்பந்தம்? ஒன்னுமே இல்லாம எதுக்குடி அன்னிக்கி முத்தம் குடுத்த ? எத்தனை ஆசைகள்? எத்தனை எத்தனை கற்பனைகள்?
தாத்தாவிற்கு கூட தெரிந்து விடக் கூடாது என்று மொட்டை மாடியில் நின்று குலுங்கி குலுங்கி அழுதான். ஆனால் அது சில நிமிடங்களுக்குத்தான். ஆண் மகனாயிற்றே ? தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்டான். இனி தன் வாழ்வில் யாருக்கும் இடமில்லை. தான், பாட்டி , தாத்தா. வேறு யாரும் இல்லை. மனதில் உறுதி கொண்டான்.
உண்மைக் காதலைக் கண்டவனுக்கு அத்தனை எளிதில் அவன் உயிரை விட்டு விட முடியுமா?
முரளியிடம் அவன் அன்னை அக்காவை பற்றி பேசியபோது, “அம்மா! கொஞ்ச நாள் பிரியா விடு. அவங்க ரெண்டு பேருமே ரொம்ப விரும்பறாங்க. கொஞ்ச நாள் கழிச்சு எல்லாமே தானே சரியாகிடும். ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுட மாட்டாங்க. மாமாவால அக்காவை பிரிஞ்சு இருக்கவே முடியாது. அக்கா மட்டும் என்ன சும்மாவா ? அவங்க பிரச்சனைல நாம் தலையிட வேணாம். அவங்க ரெண்டு பேரும் சின்ன பசங்க இல்ல. நாம போய்த்தான் சமாதானப்படுத்த மூணு மாசமோ நாலு மாசமோ பாக்கலாம். சரியா வரலைன்னா நான் போய் மாமாகிட்ட பேசறேன். எதுக்கும் கவலை படாத.”
மகன் சொல்வதும் அன்னைக்கு சரியாகத்தான் பட்டது. சிறிது காலம் காத்திருந்து பாப்போம் என்று முடிவெடுத்தனர்.
காலம் யாருடைய துக்கத்திற்காகவும் நின்று போவதில்லை. அதுவேதான் இன்பத்தையும் கொடுக்கும். துன்பத்தையும் கொடுக்கும். பல பல புது புது உறவுகளையும் கொடுக்கும். ஆம்! அமிர்தாவின் வாழ்வில் இப்போதைய புது வரவு செந்தில்.
இவர்களின் வீட்டிற்கு அருகில் முதல்வர் நல திட்ட உதவிகளை வழங்க வருவதாக ஏற்பாடு. அப்போது அங்கே பல மகளிர் காவலர்களும் பந்தோபஸ்திற்கு நின்றிருந்தார்கள். அங்கே அவர்கள் மணிக்கணக்கில் நிற்க வேண்டியதாக இருந்தது. அங்கே கழிப்பிட வசதி எதுவும் இல்லாததால், விசாலம் தன் வீட்டில் வந்து உபயோகப்படுத்த அனுமதி கொடுத்திருந்தார். அனைத்தும் முடிந்து கிளம்பும்போது எஸ் ஐ வந்து நன்றி கூறினார். அப்போது முரளியும் வீட்டில் இருந்ததால் அந்த காவலரை பார்த்து,” “என்ன மேடம் நல்லா இருக்கீங்களா?
நீங்க ஏதோ ஒரு கம்பளைண்ட் குடுக்க வந்திருந்தீங்க இல்ல?
“ஆமா மேடம்! நல்லா நினைவு வச்சுருக்கீங்களே ?
அது எங்க கட்டாயம். என்ன கேசு விஷயமா வந்தீங்க? அப்புறம் உங்க கேசு என்னாச்சு?”
முரளி கோதையை அந்த மன நல காப்பகத்திற்கு அனுப்பும் முன் இவரிடம்தான் சொல்ல வந்திருந்தான்.
நடந்த விவரங்களை சுருக்கமாக சொன்னான். “அப்போ அந்தம்மா இப்ப உங்ககூடத்தான் இருக்காங்களா ? அவங்கள பாக்கலாமா ?”
“ஓ! கண்டிப்பா. வாங்க!” அழைத்து சென்று காட்டினான். கோதையை பார்த்த விதத்தில் அவர் திருப்தி அடைந்தார். நல்ல நைட்டியுடன் தலை வாரி பார்க்க நன்றாகவே இருந்தார் கோதை. அவரின் தோற்றமே அவரை இவர்கள் நல்ல விதத்திலேயே கவனித்துக் கொள்கிறார்கள் என்று காட்டியது. மாமியாரை மருமகள் பார்த்துக் கொள்கிறார் என்னும்போது வேறு என்ன வேண்டும்.
காவல் நிலையத்திற்கு நேரே வந்தவர், ஹெட் கான்ஸ்டபிளிடம் சொல்லி செந்திலை அழைத்து வந்தார்.
“உங்கம்மாவை காணுன்னு புகார் குடுத்துருந்த இல்ல?”
“ஆமாம் மேடம்!” தலை குனிந்திருந்தான். முகத்தில் அத்தனை சோகம்.
“ஒரு வேளை உங்க அம்மா கிடைச்சுட்டாங்கன்னு நான் சொன்னா ?” இப்போது கண்களில் அத்தனை மலர்ச்சி.
அவருக்கு அதே வயதில் மகன் இருப்பதால் அவரால் அவனின் உணர்வுகளை எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது.
“வா!” இவரே நேரில் அமிர்தாவின் வீடிற்கு அவனை அழைத்துச் சென்றார். அங்கே அன்னையை பார்த்தவனுக்கு கண்களில் கண்ணீர் நிற்காமல் வந்தது.
இவன் கோதை அருகே சென்று “அம்மா அம்மா என்ன விட்டுட்டு எங்கம்மா போன? ஏம்மா என்ன விட்டுட்டு போன ?” சொல்லிக் கொண்டே அருகில் சென்றான். அவளோ பயத்தில் வீல் என அழ ஆரம்பித்தாள். அதை பார்த்த அமிர்தாவுக்கும் மற்றவர்களுக்கும் இவன் அவரின் மகன் இல்லை என்றேத் தோன்றியது.
அமிர்தா அவர்களுடன் இருக்கவும் முரளி காவலரிடம் தன் சந்தேகங்களை தீர்த்துக் கொண்டிருந்தான்.
அண்ணன் அண்ணி இருந்தும் செந்தில் அநாதை இல்லத்தில் இருப்பது அமிர்தாவுக்கு பிடிக்கவில்லை. போலீசின் உதவியுடன் அவனையும் தன்னுடனேயே வைத்துக் கொண்டாள் . முதல் நாள் இரவு அவன் அன்னையை கட்டிக் கொண்டு உறங்க போனான். கை கால்களை உதைத்து அவனையும் எட்டி உதைத்து ஓவென பிழிய பிழிய அழுதாள் கோதை.
மற்றவர்கள் செந்திலை சமாதானப்படுத்த அமிர்தா கோதையை சமாதானப் படுத்தினாள் . அவரை சமாதானப்படுத்தி உறங்க வைப்பதற்கு படாதபாடுபட்டாள் .
பிறகு வந்து செந்திலின் தலையை லேசாக கோதினாள். அவனோ அன்னையின் படத்தை வைத்துக் கால்களை குறுக்கி கைகளை நடுவில் வைத்து கேவி கேவி அழுதுக் கொண்டிருந்தான்.
“செந்தில்! கண்ணா! கண்ண திறந்து பாரு. எதுக்கு இப்ப அழற ?”
“அம்மாவுக்கு என்ன ஏன் தெரியல ?”
“அவங்களுக்கு அவங்களையே தெரியல. அப்புறம் உன்ன எப்படி தெரியும்?”
“அப்ப அண்ணனை மட்டும் தெரியுதே ?”
இந்த கேள்விக்கு இவளுக்கும்தான் விடை தெரியவில்லை.
மலர்-37
கோதை எங்கே இருந்தாலும் வெளியில் ஓடி வந்து விடுவார். ஆனால் இவர்களின் வீட்டை விட்டு எங்கும் சென்றதில்லை. அதற்கு காரணம் இவர்களின் வீட்டில் கோதை ஆனந்தின் படத்தை அழகாக வரைந்து வைத்திருந்தார். இவர்கள் வந்தபோதும் அமிர்தா அந்த படத்தை அழிக்கவே கூடாது என்று சொல்லி இருந்தாள் . ஏழு வயது செல்ல மகளின் சொல்லுக்கு கட்டுப்பட்ட தந்தை வீட்டுக்காரரிடமும் கேட்டுக் கொண்டார். அன்று முதல் இவர்கள் இங்கேதான் இருக்கிறார்கள். முதலில் இருந்த குடும்பம் மிகவும் துன்பப்பட்டு சென்றதால் வீடு பல மாதங்கள் காலியாகவே இருந்தது. ராசி இல்லாத வீடு என்றே பெயர் வைத்திருந்தார்கள். அதனால் பலரும் தயங்கவும் குறைந்த வாடகையில் இவர்கள் அந்த வீடிற்கு குடி வந்தனர். அப்போது கயல் வயிற்றில் இருந்தாள் . அந்த வீட்டில் தான் நல்ல விதமாக குழந்தை பிறந்தது. அதனால் வீட்டுக்காரரும் இவர்களின் வருகையை ஒரு விதமான பாசிட்டிவாகாவே பார்க்க தொடங்கினார். அடுத்த சில வருடங்களில் அவர் மகனுடன் வெளியூருக்கு சென்றதால் இவர்களை அங்கே இருந்து காலி பண்ண சொல்லவே இல்லை. நம்பிக்கையான ஆட்கள், வீட்டை நன்றாகவே பார்த்துக்கொள்கிறார்கள். வாடகையும் முப்பதாம் தேதியே வந்து விடும். வேறு என்ன?
அந்த ஓவியத்தை தாண்டி கோதை எங்கும் நகர மாட்டார். அவருக்குத் தேவையானது அனைத்தும் அமிர்தாதான் செய்ய வேண்டும். அவள்தான் குழந்தையை போல அவரை கொஞ்சி கொஞ்சி எல்லாம் செய்வாள். அப்போதும் டயப்பர் மாற்றுவது பெரிய வேலைதான். இவளுக்கு இடுப்பு கழண்டு விடும். செவிலியராக இருப்பதாலும் இயற்கையிலேயே மிகவும் பொறுமைசாலி என்பதாலும்தான் அவளால் சமாளிக்க முடிகிறது. வேறு யாராவதாக இருந்தால் என்றோ ஓடி இருப்பார் .
செந்தில் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் . “அது வேற ஒன்னும் இல்ல. அவங்க இங்கையே இருந்து இருந்து அந்த போட்டோவையே பார்த்து பார்த்து அவங்களுக்கு அடையாளம் தெரியுது.”
“நீங்க இவ்ளோ கஷ்டப்பட்டு காரணம் யோசிச்சு எனக்கு சொல்ல வேணாம். உங்களுக்கு தெரியாத பல விஷயம் எனக்கு தெரியும். எங்கம்மாவுக்கு விபத்து நடந்து வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன். கைல சுத்தமா காசு இல்ல. இவங்களும் அழ ஆரம்பிச்சுட்டாங்க. கிடைச்சது எல்லாத்தையும் கடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. பசின்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். பக்கத்துல கடைல போய் பன்னு வாங்க போனேன். இவங்கள காணும். கஷ்டப்பட்டு தேடி பிடிச்சு கூட்டிட்டு வந்தேன். பக்கத்து வீட்டு அக்காகிட்ட சொல்லிட்டு காலைல பேப்பர் போட போவேன். அப்பவும் இவங்க ஓடி போய்டுவாங்க. எங்கையும் போக மாட்டாங்க. ஆனந்தன் அண்ணா வீட்டுக்குத்தான் போவாங்க. இவங்களுக்காகத்தான் நான் ஸ்கூல் போகறதையே நிறுத்தினேன்.
நீங்க இவங்கள காப்பகத்துல சேர்த்துருந்தப்போ அண்ணனை பாக்க போனேன். கேட்டு வாசல்லியே நிக்க வச்சுட்டாரு. அம்மாவ காணும். நான் சின்ன பையன்னு பெரியவங்க யாரையாவது கூட்டிட்டு வர சொல்லறாங்கன்னு எவ்வளவோ கெஞ்சினேன். ஆனா அவரு வரவே முடியாதுன்னுட்டாரு. அதுக்கப்புறம் அந்த எஸ் ஐ மேடம் தான் பாவப்பட்ட ஏதாவது பிரச்சனை வந்தா பார்த்துக்கலான்னு அப்போதைக்கு என்னோட புகாரை வாங்கிக்கிட்டாங்க. இவங்களுக்காக நான் இவ்ளோ கஷ்டப்பட்டாலும் அவங்களுக்கு அண்ணன்தான உசத்தி. நானும்தானே இவங்க வயத்துல பிறந்தேன். என்ன மட்டும் ஏன் இப்டி பண்ணறாங்க?”
“அப்டிலாம் இல்லடா கண்ணா. அவங்க இல்லனா என்ன? அதான் நான் இருக்கேனே? அவங்களுக்கு அவங்க புள்ளை . எனக்கு என் புள்ள. அண்ணினா யாரு? அம்மாதானே ? இனிமே நாந்தான் உனக்கு அம்மா. சரியா ?”
அவளுக்கு சற்று தள்ளியே படுத்துக் கொண்டான். மறு நாள் காலையில் கண் விழித்தபோது இவளால் இடுப்பை அசைக்க கூட முடியவில்லை. செந்திலும் கயலும் இவள் மீது காலை போட்டுக் கொண்டு ஆளுக்கு ஒரு பக்கமாக கட்டி கொண்டு உறங்கி இருந்தனர். முரளிதான் வந்து இருவரையும் நகர்த்தி விட்டான். வழக்கம்போல கயலை எழுப்பி படிக்க சொன்னவள். செந்தில் மட்டும் நன்றாக தூங்கட்டும் யாரும் எழுப்ப வேண்டாம் என்று விட்டாள் . அன்னை குடுத்த காபியை உறிஞ்சிய முரளி, “அக்கா இந்த பையனை இங்க வச்சுருக்கோமே வேற ஏதாவது பிரச்சனை வந்தா?”
“யாரால?”
“மாமனால?”
“அம்மாவே வேண்டான்னுட்டாரு. அவங்களுக்கு பொறந்த பையன பத்தி அவருக்கு என்ன ?”
“ஆமா! அவனோட அப்பாவை பத்தி இன்ஸ்பெக்ட்டர் ஏதாவது சொன்னார்களா ?” அமிர்தாதான் கேட்டாள் .
“அப்பா இல்லனு மட்டும் சொன்னாங்க, அதோட அக்கா இவன நாம் படிக்க வைக்க வேணாமா ?”
“ஆமாண்டா ஸ்கூல்ல நல்லா படிக்கற பையனாதான் இருந்திருக்கான். சர்டிபிகேட் கூட பார்த்தேன். டெந்துல கூட டிஸ்ட்ரிக்ட் பஸ்ட் வந்துருக்கான். குடும்ப சூழ்நிலை நல்லா இருந்திருந்தா ஸ்டேட் பஸ்ட் கூட வந்துருப்பான். பாவம் அவனோட படிப்பு வீணாகிட கூடாது.
“ஆனா ப்ளஸ் டூ பரிட்சை ஆரம்பிக்க போகுதே. எப்படி இவனை சேக்கறது ?”
அவன் படித்துக் கொண்டிருந்த பள்ளியிலே மீண்டும் சேர்த்துக் கொண்டார்கள்.
அமிர்தா அன்றைய இரவு அவனிடம் மீண்டும் பேசினாள் . “ஏன் செந்தில் உங்கப்பா?”
“எனக்கு அப்பா யாருன்னே தெரியாது. யாரு யாரோ வருவாங்க. அவங்க வந்ததும் அம்மா அவங்கக்கூட போகணும். போக்கறச்சே அம்மா நல்லா தான் போவாங்க. ஆனா திரும்பி வரும்போது வண்டில கொண்டு வந்து தள்ளிட்டு போவாங்க. உடம்பு முழுக்க நிறைய அடிபட்டுருக்கும். என்ன கிட்ட வராதான்னு கத்துவங்க. என்னிக்குமே நான் அவங்ககிட்ட போகவோ தொடவோ கூடாது.”
ஆனா ஸ்கூல் சர்டிபிகேட்டுல ரவிச்சந்திரன்னு போட்டுருக்கே ?”
“அம்மாதான் போட்டாங்க. அது யாருன்னுலாம் எனக்கு தெரியாது.”
அவன் சுலபத்தில் பல விஷயங்களை சொல்லி விட்டான். அதற்கு எல்லாம் அர்த்தம் அவனுக்கு தெரியுமா தெரியாதா? கோதையின் மருத்துவ குறிப்புகளுக்கு இவளுக்கு இப்போது அர்த்தம் புரிந்தது. முதலில் பரிதாபத்தினால் ஏற்பட்ட அன்பு, இப்போது இந்தக் கதையை கேட்டதற்கு பிறகு அவள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது. நம்பிக்கை என்று சொல்வதை விட, சூழ்நிலை கைதியாகி இருந்தால்?
முள் மலரும் ..
