கெட்டவன் 15

ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளின் சத்தம், அனுவின் காதுகளுக்கு மட்டும் ஓசையாகக் கேட்டது.

“என்ன, காரை விட்டு வெளியே வர மனசு இல்லையா?” வெற்றி கேட்டதுதான் தாமதம்.

கார் கதவைத் திறந்து கொண்டு, கடற்கரை மண்ணில் தன் வெண்மையான பிஞ்சுப் பாதங்களைப் புதைத்தாள் அனு.

“அனு, கால் சுடும் டி. வெறும் கால்ல இறங்காத,” அக்கறையாகக் கூறும் கெட்டவனைப் பார்த்தவள், “பீச்ல இப்படி நடக்கத்தான் ரொம்பப் பிடிக்கும்,” என்று கூறியவளின் குழந்தைத்தனம்தான் இவனைக் கவர்ந்தது.

“என்னைக் கடத்திட்டுப் போயிருவீங்கன்னு நினைச்சு ரொம்பப் பயந்துட்டேன்,” என்று முட்டை விழிகளை உருட்டிக் கூறியவளைக் கண்டதும், சிரிப்புதான் வந்தது அவனுக்கு.

“ஒரு நாள் உன்னைக் கண்டிப்பா கடத்துவேன் டி,” என்று அவளுக்குக் கேட்காமல் கூறினான்.

மணலில் கால் புதைய நடந்தவளின் அருகில், அவனும் நடந்தான்.

“அச்சோ, அழுக்குப் படப் போகுது,” என்றான் அவளின் பாதங்களைப் பார்த்து.

அவனைக் கவனிக்கும் நிலையில் அவள் இல்லை. கடற்கரை மணலில் கால் வைத்ததும், சிறு பிள்ளை போல் மாறிப் போனாள் அனு.

“அச்சோ, பீச்சுக்கு வந்தே ரொம்ப நாள் ஆச்சு. இங்கே இவ்ளோ பக்கத்துல பீச் இருக்குறது எனக்குத் தெரியவே தெரியாது, கெட்டவன் சார். ரொம்ப தேங்க்ஸ், கெட்டவன் சார், இங்கே என்னை அழைச்சிட்டு வந்ததுக்கு.”

அவள் கூறும் ஒவ்வொன்றிலும், சிறு பிள்ளைத்தனம் நிறைந்து இருந்தது.

மழையில் நனைவது போல், கைகளை விரித்து நின்றவளைக் கண்களுக்குள் நிரப்பிக் கொண்டான் வெற்றி.

வேகமாக நடந்தாள். கடல் அலையில் கால் நனைக்க அருகில் செல்வதும், அலை வந்ததும் பின்னால் ஓடி வருவதுமாக இருந்தவளைப் பார்த்து, இதழ் விரித்துச் சிரித்தான்.

குழந்தைகள் கையில் வைத்து விளையாடும் பலூன்களை ஏக்கமாகப் பார்த்து விட்டு, கெட்டவனைத் திரும்பிப் பார்த்தாள்.

அவன், வேண்டுமென்றே அவளைக் கவனிக்காதது போல், அவளின் பின்னால் மெதுவாக நடந்து வந்தான்.

அவனின் அருகில் வந்தாள். பலூன் வேண்டும் என்று அவனிடம் கேட்க ஆசைதான். ஆனால், ஒரு சிறிய தயக்கமும் வந்தது.

கேட்கலாமா? வேண்டாமா? தனக்குள்ளேயே கேள்வி கேட்டு நன்றாக யோசித்த பிறகு, “கெட்டவன் சார்,” என்று அழைத்தாள்.

கீழ் இதழைக் கடித்துச் சிரித்துக் கொண்டவன், “ம்ம், சொல்லு,” என்றான் இறுக்கமான குரலில்.

“அது… எனக்குப் பலூன் வாங்கித் தர முடியுமா? வீட்டுக்குப் போனதும் பலூனுக்கான காசை அம்மாகிட்ட கேட்டு கண்டிப்பா வாங்கிக் கொடுத்துருவேன். நீங்க ஒண்ணும் சும்மா வாங்கித் தர வேண்டாம்,” என்றாள் தீவிரமாக.

“கண்டிப்பா பலூன் வாங்கித் தரேன், பூனைக் குட்டி. ஆனால், எனக்கு நீ காசு தர வேணாம். அதுக்குப் பதிலா,” என்றவன் அவளை நெருங்கி வந்தான்.

இருவரின் இதழ்களுக்கும் இடையில், இரண்டு இன்ச் இடைவெளி மட்டுமே இருந்தது.

வெற்றி அவளின் சிவந்த இதழ்களை நோக்கிக் குனியும் நொடி, ஒரு வண்ணத்துப் பூச்சி இடையில் இருந்த இரண்டு இன்ச் இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு, சிறகடித்துப் பறந்து சென்றது.

சிறகடித்துச் செல்லும் வண்ணத்துப் பூச்சியைத் தீயாக முறைத்துப் பார்த்தான் வெற்றி.

லேசாக வெட்கப்பட்டு அனு, மறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

சின்னஞ்சிறு மழலைகள், இதய வடிவ பலூன்களைக் கையில் பிடித்துக் கொண்டு, இருவருக்கும் இடையில் ஓடி விளையாட, அவர்களுடன் சேர்ந்து அனுவும் குழந்தையாக மாறி விளையாட ஆரம்பித்து விட்டாள்.

கடற்கரை மணலில், ஓரமாக அமர்ந்து விட்டான் வெற்றி. முத்தம் கொடுக்க விடாமல் தடுத்து விட்ட வண்ணத்துப் பூச்சியை மனதுக்குள் திட்டிக் கொண்டே, அனுவை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“சுபாம்மா சொன்னது உண்மைதான். பொண்ணுங்களப் பிடிச்ச இடத்துக்கு அழைச்சிட்டுப் போனாலே, உடனே சந்தோஷமாயிராங்க. இதுனால உடம்புல இருக்குற வலியும், மனசுல இருக்குற வலியும் காணாமப் போயிரும்னு நினைக்கிறேன்,” என்று அனுவையே ரசனையாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த மாதிரி நேரத்தில், பெண்களை எப்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று, நேற்று வரை கைபேசியில் சர்ச் செய்து கொண்டிருந்தவனுக்கு, சரியான பதில் கிடைக்காமல் போக, இரவு நேரம் ரவியின் வீட்டுக்குச் சென்று விட்டான் வெற்றி.

ரவியின் தாய் தான் சுபா. வெற்றி தயங்கித் தயங்கிக் கேள்வி கேட்டதும், முதலில் கண்களைச் சுருக்கி அவனைப் பார்த்தவர், பின் அவனைப் புரிந்து கொண்டார். அவன் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்தார்.

வெற்றிக்குத் தேவையான பதில் கிடைத்ததும், காலையிலேயே அனுவை பீச்சுக்கு அழைத்து வந்து விட்டான்.

இப்பொழுது அவள் குழந்தையாய் மாறி விளையாடுவதைப் பார்த்தவன், அவளுக்குக் கடற்கரை பிடித்திருக்கிறது என்பதைக் குறித்துக் கொண்டான் மனதில்.

மதிய நேரம் நெருங்கி விட்டது. அனுவை நெருங்கினான். “அனு, பசிக்குது, சாப்பிடப் போகலாமா?” என்று கேட்டான்.

“வீட்டுக்குதான போகலாம்,” என்றவள், உடனே குழந்தைகளிடம் கை அசைத்து விடை பெற்றுக் கொண்டாள்.

“வீட்டுக்குப் போகல, அனு. உன்னைக் கடத்திட்டுப் போகப் போறேன்,” என்றவன் அவளை இழுத்துச் சென்று காரில் ஏற்றினான்.

“ஹய்யோ, என்னை விட்டுருங்க, கெட்டவன் சார்,” என்று கதறியவளின் சத்தம் அவனின் செவியில் ஏறினாலும், ரகசியமாகப் புன்னகைத்துக் கொண்டான் வெற்றி.

அவனின் கரு நீல நிறக் காரின் முன்னால், பானெட்டில் இதய வடிவிலான வண்ண வண்ண பலூன்கள் கட்டப்பட்டு, காற்றில் அங்கும் இங்கும் அசைந்துக் கொண்டிருந்தது.

காற்றிலாடும் பலூன்களைப் பார்த்து விட்டு, கார் ஓட்டும் வெற்றியைத் திரும்பிப் பார்த்தவள், “நான் பார்க்கக்கூடாதுன்னுதான், என்னை இழுத்துக் காருக்குள்ள தள்ளுனீங்களா?” என்று சரியாகக் கேட்டு விட்டாள்.

அவன் பதில் சொல்லவில்லை. மௌனமாகச் சிரித்துக் கொண்டான்.

“எனக்காகத்தான் இந்த பலூன் வாங்குனீங்களா? நான் கேட்டதும் வாங்கித் தந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ். எங்க வீட்டுக்குப் போகும் போது ஒண்ணே ஒண்ணு எடுத்துக்குறேன்,” என்றாள்.

“உனக்காக யார் வாங்குனா? ரொம்ப நாள் காருக்கு முன்னாடி பலூன் இருந்தா எப்படி இருக்கும்னு நினைச்சுப் பார்த்துருக்கேன். இப்போதான் பலூனை பானெட்டில வச்சுப் பார்க்க எனக்கு நேரம் கிடைச்சிருக்குது. நல்லா இருக்குதுல்ல,” என்று கேட்டவனை முறைத்துப் பார்த்தாள் அனு.

“இப்போவும் ஒண்ணும் கெட்டுப் போகல. பலூன் எல்லாம் உனக்கே தரேன். அதுக்குப் பதிலா எனக்கு ஒரு கிஸ் கொடு, போதும்,” என்றான்.

“எனக்கு ஒண்ணும் உங்க பலூன் வேண்டாம்,” சொல்லி விட்டுத் திரும்பி விட்டாள்.

“இன்னைக்குக் கிஸ் வாங்காமப் போயிருவேனா என்ன?” மனதுக்குள் நினைத்துக் கொண்டான் வெற்றி.

இடையில் சுபத்ராவுக்கு அழைத்து, மதிய உணவு வெளியில் வாங்கிக் கொடுப்பதாகக் கூறிவிட்டான்.

“எனக்கு வெளியே சாப்பிட்டா ஒத்துக்காது, கெட்டவன் சார். இது வரைக்கும் ஹோட்டல்ல சாப்பிட்டது இல்லை. புதுசா சாப்பிட்டா ஒத்துக்காது. ஒரு டைம் ஹோட்டல்ல சாப்பிட்டதுக்கே ஒரு நைட் முழுக்க வயிறு வலி. நீங்க என்னை எங்க வீட்டுல விட்டுருங்க. அம்மா சமைச்சிருப்பாங்க,” என்றவளைக் குறும்போடு பார்த்தான்.

“சரி, அப்போ நான்வெஜ் எதுவும் வேணாம்,” “அதுவும் அதிகமா சாப்பிட மாட்டேன்,” என்றாள்.

அவன் அதுக்கும் குறும்போடு அவளைப் பார்த்தான்.

“தப்பிக்கப் பார்க்குறியா, பூனைக் குட்டி?” என்று கேட்டான்.

“அதான் கண்டு புடிச்சிட்டீங்களே. இனிமே எங்கே தப்பிக்க?” முணு முணுத்துக் கொண்டாள் அனு.

கார் வேறு ஒரு பாதையில் சென்றதும், அனுவின் விழிகள் கலங்கியது.

“உண்மையைச் சொல்லுங்க, கெட்டவன் சார். நாம எங்கே போறோம். இது வேற ரூட் மாதிரி தெரியுது,” என்று கலக்கமாகக் கேட்டாள்.

“பரவாயில்லையே! பூனைக் குட்டிக்கு ரூட் கூட தெரியுது,” அவனின் நக்கல் இவளுக்குப் பயத்தைத்தான் தந்தது.

கார் ஒரு பெரிய வீட்டுக்குள் நுழைந்தது. காரை நிறுத்தி விட்டு முதலில் அவன் இறங்கினான். பின் அவள் இறங்குவதற்காகக் கார் கதவைத் திறந்தான்.

“குடோனுக்குத் தூக்கிட்டுப் போகாம, ஒரு பெரிய வீட்டுக்குக் கடத்திட்டு வந்துட்டாரா? அப்போதான் யாருக்கும் சந்தேகம் வராம இருக்கும்னு இப்படிப் பண்றாரோ?”

கார் சத்தம் கேட்டதும்,  ஐம்பது வயதைத் தொட்ட ஒரு பெண்மணி வெளியே வந்தார்.

அவரைப் பார்த்ததும்தான் அனுவுக்குப் பயம் போனது.

அவரின் புன்னகை, இவளுக்கு நிம்மதியைத் தந்தது.

“வாங்க,” என்று இருவரையும் பொதுவாக அழைத்தார்.

வீட்டுக்குள் நுழையும் போதே, பிரியாணியின் வாசனை மூக்கைத் துளைத்தது அவளுக்கு.

டைனிங் டேபிளில் உணவை அடுக்கிக் கொண்டிருந்தான் ரவி.

“ஓ.. இது ரவி அண்ணே வீடா? அதான் இங்கே அழைச்சிட்டு வந்துருக்காங்க. நல்ல வேலை, கடத்திட்டுப் போகல,” என்று நிம்மதியாக இருந்தாலும், பிரியாணியின் வாசத்தை மோப்பம் பிடித்ததும், பசி வயிற்றைக் கிள்ளியது அவளுக்கு.

“நான் சொன்னேன்ல சுபாம்மா. இவதான் அனு,” என்று ரவியின் தாய்க்கு அவளை அறிமுகப்படுத்தி வைத்தான் வெற்றி.

“ம்ம், பார்த்ததும் தெரிஞ்சிக்கிட்டேன் டா, வெற்றி,” என்ற சுபா, அனுவின் அருகில் வந்து, “ரொம்ப அழகா இருக்க, பாப்பா,” என்றார்.

இவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, அதனால் “ம்ம்” என்று மட்டும் கூறினாள். இந்த மாதிரி தெரிந்தவர்கள், உறவினர் வீட்டுக்கு வருவது இதுவே முதல் முறை அவளுக்கு.

“வாங்க, சாப்பிடுங்க,” என்று வெற்றியையும் அனுவையும் அமர வைத்துப் பிரியாணியை எடுத்து வைத்தார் சுபா.

“ஐயோ, கெட்டவன் முன்னாடி எப்படிப் பிரியாணியை சாப்பிடறது. கூச்சமா இருக்குதே,” என்று நினைத்தவள், அவனைப் பார்க்காமல் சாப்பிட ஆரம்பித்து விட்டாள்.

முதல் முறையாக அவள் சாப்பிடும் அழகைப் பார்க்கிறான் வெற்றி.

விரல் குவித்து அழகாக அனு சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டிருந்தவனை, சுபா லேசாகக் கண் கலங்கிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

வெற்றிக்கு ஒரு நல்ல வாழ்க்கை வேண்டும். அந்த நல்வாழ்வு இந்தப் பெண்ணால்தான் அமையப் போகிறது என்றதும், அவரின் உள்ளம் ஆனந்தக் கண்ணீர் வடித்தது.

வெற்றி இப்பொழுதெல்லாம், முன்பை விட இறுக்கமாக இல்லை. அந்தப் பெண்ணைப் பார்த்த நாளிலிருந்து, அவனின் குணத்தில் சற்று மாற்றம் தெரிகிறது என்று ரவி கூறும் பொழுது, அவரால் நம்ப முடியவில்லை. இப்பொழுது அனுவை நேரில் பார்த்ததும், அவருக்குமே அவளைப் பிடித்து விட்டது.

மாலை வரையிலும், ரவியின் வீட்டில்தான் இருந்தனர் இருவரும்.

கிளம்பும் பொழுது, அனுவுக்குச் சிறு கீற்று போல் குங்குமத்தை நெற்றியில் வைத்து அனுப்பினார் சுபா.

சிறிது நேரம் அங்கு இருந்ததால், “போய்ட்டு வரேன்,” என்று சிரித்த முகமாகக் கூறி விட்டு வந்தாள் அனு.

அவரிடம் வேறு என்ன பேச என்று அவளுக்குத் தெரியவில்லை.

புன்னகை முகமாக, அவளுக்குக் கை அசைத்தார் சுபா.

இருள் சூழத் தொடங்கி விட்டது.

அனுவின் மனதில், கெட்டவன், நல்லவன் என்ற இடத்தைக் கொஞ்சமே கொஞ்சமாகப் பிடித்திருந்தான்.

“இன்னைக்கு நாள் ரொம்பச் சீக்கிரமா போயிட்டு, அனு,” என்று கூறியவனைத் திகைப்பாகப் பார்த்தாள் அனு.

“உன்னோட இன்னும் கொஞ்ச நேரம் இருக்க ஆசை வருது. ஆனால், முடியாதே. நீயும் வீட்டுக்குப் போகணும்,” என்றான்.

சரியாக அனுவின் வீட்டின் முன்னால், காரை நிறுத்தினான்.

“ஏன், என்னோட நீங்க இன்னும் கொஞ்ச நேரம் இருக்கணும்?” புரியாமல் கேட்டாள்.

அவளின் கன்னங்களை இரு கையால் பற்றினான். அவளுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது.

“ஹேய், பூனைக் குட்டி, என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா டி?” கேட்டு விட்டான், அவன் மனதில் நினைத்ததை.

அவளின் கன்னங்கள் சில்லிட்டு விட்டது. அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

“நான் போகணும்,” என்றவள், அவனின் கைகளைத் தள்ளி விட்டு, காரில் இருந்து வேகமாக இறங்கினாள்.

“அனு,” என்று அழைத்தான்.

காருக்கு வெளியே சிலை போல் நின்றிருந்தவளை நெருங்கினான்.

“பலூன் வேணும்னு கேட்டியே?” ஒரு சிவப்பு நிற இதய வடிவ பலூனை, அவளிடம் நீட்டினான்.

அவள் வாங்கிக் கொள்ளவில்லை என்றதும், அவளின் கைகளில் திணித்தான்.

அவளின் இடையை இறுக்கமாகப் பற்றி இழுத்து, அவளின் இதழ்களைக் கவ்விக் கொண்டான்.

இரண்டு நிமிடங்கள், முத்தம் கொடுத்து விட்டு விலகியவன், “யோசிச்சுச் சொல்லு, பூனைக் குட்டி,” என்று கூறி விட்டுச் சென்று விட்டான்.

அடுத்த பதிவில் பார்ப்போம். 

இந்த எபி பிடிச்சிருந்தா குட்டி ஹார்ட் ப்ளீஸ் 

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!