திடீரென ஏதோ நினைவுக்கு வந்தவளாக, அவனுடைய தலையை தள்ளிவிட்டு எழுந்தாள்.
“என்னாச்சு மஃபின்?”
“திகள் அமெரிக்கா போறா ருத்ரா! ஏர்போர்ட் போகணும், டைம் ஆச்சு எல்லாம் உன்னாலதான்!” என பதற்றத்தில் எழுந்து தடுமாறி விழப்போனவளை, சட்டென்று கைகளில் அள்ளினான்.
“ஹேய்… ரிலாக்ஸ் ஆரலி! டைம்க்குள்ள போய்டலாம்” என்று அவளை தூக்கிக்கொண்டு குளியலறைக்குள் சென்றான்.
அடித்து பிடித்து அவசரமாக தயாராகி வந்து, விடியற்காலையில் இருவரும் ஏர்போர்ட் வந்து சேர்ந்தனர்.
“உன் தங்கச்சி கிளம்பிட்டா பத்ரன் நிலைமை என்ன?”
“அவருக்கு திகள் வேண்டாம்னு உறுதியா முடிவெடுத்துட்டாரு. என் தங்கச்சி டாக்டர் படிக்கிற பொண்ணு ருத்ரா, அவளுக்கு இங்க வரவேண்டிய அவசியமே இல்லை. இருந்தாலும் எனக்காக வந்து, என்கூடவே நின்னா”
“அவ நடிச்சது தப்பா இருந்தாலும், எதிர்பாராம காதல் வர்றது தப்பில்லை. அதை நடிப்பா பத்ரன் பார்க்குறது தப்பாயிருக்கு. அவளுக்கான வாழ்க்கை உன் தம்பி இல்லைன்னு கடவுள் எழுதிட்டாரு” என முடிவாக சொன்னாள் நிலா.
தங்களை நோக்கி வரும் திகளைக் கண்டதும் முகம் மலர்ந்த நிலா, “போதும் பத்ரன் பத்தி பேச வேண்டாம் ருத்ரா” என்று சொல்லிவிட்டு தங்கையிடம் ஓடினாள்.
கடைசி நிமிடமாவது அக்கா வருவாள் என்ற நம்பிக்கையில் காத்திருந்த திகள், நிலாவைப் பார்த்ததும் ஓடிவந்து அவளை கட்டிக்கொண்டாள்.
“அக்கா!”
“திகள்மா!” இருவரும் ஒரு நொடி இறுக்கமாக அணைத்துக்கொண்டனர்.
“பத்திரமா போயிட்டு வா. அங்கே போனதும் ஒழுங்கா சாப்பிடணும், உடம்பைப் பார்த்துக்கணும். தேவையில்லாததை யோசிச்சு அழக்கூடாது. அம்மா, அப்பாவை நான் பார்த்துக்கிறேன்” என்று தங்கைக்கு அறிவுரை சொன்னாள்.
“சரிக்கா!” என்ற திகளின் கண்கள் கலங்கின.
ருத்ராவை நிலா அருகில் ஒன்றாக பார்த்ததும் அக்காவிடம் என்னவென்று கண்களால் கேட்க, நிலா சங்கடமாக தலையைக் குனிந்துகொண்டாள்.
அதிலேயே அவள் மனநிலை புரிந்துபோனது.
திகள் நேராக ருத்ராவிடம் பேசினாள்,
“பழசை விடுங்க. இனிமேல் எதுக்காகவும் ஆரலி அழக்கூடாது ருத்ரா மாமா!” என்றவள் பேச்சைக் கேட்டதும் ருத்ராவின் முகத்தில் சிறிய புன்னகை.
“அவ பாசம் மட்டுமே காட்டத் தெரிஞ்ச குழந்தை, பத்திரமா பார்த்துக்கோங்க. அவளை பழைய மாதிரி தவிக்க விட்றாதிங்க” என கிட்டத்தட்ட ருத்ராவுக்கு உத்தரவு போட்டாள்.
ஆரலிக்காக அவள் பேசுவதால், சார் வாயை மூடிக்கொண்டு தலையை சம்மதமாக ஆட்டினார்.
“என்னோட ஆரலியை நான் எப்பவும் பத்திரமா பார்த்துப்பேன் நீ கவலைப்படாத. பழசை மறந்துட்டு உன்னோட வாழ்க்கையைப் பாரு, மூவ் ஆன் ஆகு”
“தேங்க்ஸ் மாமா!” என திகள் புன்னகையுடன் விடைபெற்றாள்.
நிலா தோள்களில் கைபோட்டபடி கொழுந்தியாவுக்கு டாட்டா காட்டுபவனை மட்டும் தெரிந்தவர்கள் பார்த்தால் ‘ஓஓ இவ்வளவு கேஷூவலானா ஆளா நீ?’ என அதிர்ந்து போவார்கள்.
தன் ஆரலிக்காக இந்த குடும்பம் செய்த உதவியை ருத்ராவும் மறக்க மாட்டான்.
திகள் சென்ற பிறகு சோமசுந்தரம், பார்வதி தம்பதிகளை எதிர்கொள்ள சற்று தயக்கமாக இருந்தது நிலாவுக்கு,
“அம்மா… அப்பா… அது வந்து… ருத்ரா…”
என்ன சொல்லி வார்த்தைகளைக் கோர்ப்பது என்று தெரியாமல் தடுமாறினாள்.
ருத்ரா உதவிக்கு வருவான் என்று பார்த்தால் அவனோ ஏர்போர்ட்டை விலைக்கு வாங்குவது போல சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனை பிடித்து இழுத்த நிலா “என்கிட்ட மட்டும் பச்சை பச்சையா பேசுற! இவங்களைச் சமாளிக்க ஏதாவது சொல்லு!” என முணுமுணுத்தபடி அவனை முறைத்தாள்.
“எனக்கு தனிஞ்சு பேசி பழக்கமில்லையே மஃபின். வேணும்னா உங்க பொண்ணை வீட்டுல கூட்டிட்டு போய் பத்திரமா வச்சுக்குறேனு சொல்லவா?”
“நீ ஒண்ணும் பேச வேண்டாம். வாயை மூடு!” என்றதும் ருத்ரா அமைதியாகிவிட்டான்.
பார்வதி மகளின் தடுமாற்றத்தை கண்டு அவராகவே வந்து நிலா கைகளைப் பற்றிக்கொண்டார்.
“எங்களுக்கு உன்னோட சந்தோஷம்தான் முக்கியம் நிலா”
“ருத்ரா உன்னை ரொம்பக் காதலிக்கிறாரு. உன்னோட உண்மையான அடையாளத்தை நேசிக்கிறாரு. இத்தனை வருஷம் உன்னைத் தேடி அலைஞ்சிருக்காரு. நீயும் மனசார அவரை ஏத்துக்கிட்டா எங்களுக்கு அதைவிட வேற என்ன சந்தோஷம் இருக்க முடியும்?” என்றவர் குரலில் இருந்த அன்பு நிலாவின் கண்களை கலங்க செய்தது.
“நாங்க கல்யாண ஏற்பாடு பண்றோம். சந்தோஷமா எங்க பொண்ணா அவர்கூட வாழப்போ!” என்ற பார்வதியை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள் நிலா.
சோமசுந்தரம் ருத்ராவிடம், “கல்யாணம் வரைக்கும் எங்க கூட நிலா இருக்கட்டும் தம்பி” என்றார்.
அவனோ மாமானாரை முறைத்துக்கொண்டிருந்தான். நிலாவுக்கோ அவனை கண்டு அலுப்பாக இருந்தது.
“நான் அவரை அனுப்பிட்டு வரேன் அம்மா. நீங்க கார்ல வெயிட் பண்ணுங்க”
என இருவரையும் அனுப்பிவிட்டு அவனை திரும்பி பார்த்தாள்.
“இந்தப் பார்வை என்னை ஒன்னும் பண்ணாது மஃபின். நீயா கிளம்புறியா? இல்ல தூக்கிட்டுப் போகட்டுமா?”
“ஒன்னு தோள்ல தூக்கிட்டுப் போகணும். இல்ல கையில ஏந்திட்டுப் போகணும். வேற எதுவும் தெரியாது! ருத்ரா ப்ளீஸ்! எனக்காக கொஞ்ச நாள் பொறுத்துக்கோ!” என கண்களைச் சுருக்கி அவள் கெஞ்சிய விதத்தில், நேரம் காலம் தெரியாமல் அவனுக்குள் மோகம் வந்து தொலைத்தது.
“நீ இல்லாம ரொம்ப கஷ்டம் ஆரலி. பாரு உடம்பு எவ்வளவு டெம்ப்ட் ஆகி நிக்குதுன்னு!” என்றவன் வெட்கம் கெட்ட பேச்சை கேட்டு இவளுக்குத்தான் வெட்கமாகிப்போனது.
“ஒரு மாசத்துக்கு மேல சலிக்காம எடுத்திருக்கடா! நேத்து நைட் முழுக்க என்ன வேலை பார்த்த? இன்னும் டெம்ப்ட் ஆகுதுனு புலம்புற, சத்தமா பேசாத இடியட்! யாராவது கேட்டா அசிங்கமாகிடும் வெட்கம் கெட்டவனே!”
இரவு, பகல் பாராமல் காதலால் அவளை தேடும் காமம் எப்போதும் சலிப்பை தராதல்லவா!
அவள் என்றும் சலிக்காத காட்டுமல்லிகை போல, நுகர்ந்தே சொர்க்கம் போய் வருவான்.
“என்னால ஆர்வத்தை அடக்க முடியலைனா அது உன்னோட தப்பு மஃபின். இன்னும் நீ எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவே இல்லை”
“ஐயோ வாயை மூடு! தெரியாம உன்கிட்ட வாயைக் கொடுத்துட்டேன்” என கலைந்திருந்த அவனுடைய சட்டையை சரிசெய்துவிட்ட நிலா, “கல்யாணம் பண்ணிட்டு வந்ததும் முழு ஒத்துழைப்பு தரேன் போதுமா? என் செல்ல ஏகரா ஒழுங்கா வீட்டுக்கு போயிட்டு வா!” என்று அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டாள்.
அவள் தன்னை ஏகரா என்று அழைத்த மகிழ்ச்சியில் அவனுடைய முகம் மலர்ந்தது.
“என்னை ஏகரான்னு சொல்லிட்ட ஆரலி! இனிமேல் எப்பவும் அப்படியே கூப்பிடு, கொஞ்ச நாள் அங்க தங்கிக்கோ அப்புறம் போறேனு காரணம் சொன்னாலும் விடமாட்டேன்” என்று கண்டிப்பாக சொன்னவனை பார்த்து சிரித்தாள் நிலா.
அவளுடைய நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டுவிட்டு காரை நோக்கி நடந்தான் ருத்ரா.
கல்யாணம் பண்ணிவைங்க என அடுத்த ரவுண்டு தாத்தா முன்னால் வந்து ருத்ரா நிற்க, அவரோ என்னடா இது? என்பது போல் பேரனை பார்த்தார்.
“இந்த தடவை தப்பு நடக்காது தாத்தா. எந்த ட்விஸ்ட்டும் டர்னும் இல்லாம டைரக்டா கல்யாணம். நம்ம பேமிலி, ஆரலி பேமிலி எல்லாரும் சேர்ந்து போய் எஸ்டேட்ல கல்யாணத்தை முடிச்சிட்டு வரலாம்” என்றான்.
அவனுடைய உற்சாகத்தைப் பார்த்து நடராஜன் சிரித்தார்.
“சரிப்பா! நீ இவ்வளவு தூரம் சொல்ற உன் விருப்பப்படியே நல்லதா நடக்கும் நான் சோமசுந்தரத்துகிட்ட பேசுறேன்”
“சரபன் கேஸ் விசாரணைக்கு வருது ருத்ரா, அதிகபட்சமா இருபது வருஷமாவது கிடைக்கும்னு வக்கீல் சொன்னாரு. அவன் பழைய கோபத்துல நம்மளை திரும்பப் பழிவாங்க நினைச்சா என்ன பண்றது?”
அவர் பேச்சை கேட்டபடி ருத்ரா சோபாவில் சாய்வாக அமர்ந்தான்.
அவனுடைய முகத்தில் இருந்த சிரிப்பு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, தன் அக்மார்க் கூர்மையான பார்வையோடு அவரிடம் பேச ஆரம்பித்தான்.
“அவனுக்கு தண்டனை ஆரலி கையால கிடைக்கணும்னு நினைச்சது உண்மைதான் தாத்தா. அவளோட ஆசைக்காக அவனை போலீஸ்கிட்ட ஒப்படைச்சாச்சு, அவனை சட்டத்துக்கு முன்னாடி நிறுத்தி, தண்டனை வாங்கிக் குடுக்குறதோட ஆரலி வேலை முடிஞ்சது”
“என்னை இத்தனை வருஷம் பைத்தியக்காரன் மாதிரி சுத்தவிட்டதுக்கு அவனை சும்மா விட்டா, நான் எப்படி ருத்ராவா இருக்க முடியும்?”
“என்னப்பா சொல்ற? அவனை என்ன செஞ்ச?”
“எனக்கு மருந்து குடுக்குறதுல ரொம்ப கவனமா இருந்தவன், நான் அவனுக்குக் குடுத்த மருந்தை கவனிக்காம போயிட்டான்” என சாதாரணமாக சொன்னா அவன் வார்த்தைகளுக்குள் ஒளிந்திருந்த வன்மம் நடராஜனுக்கு புரியவில்லை.
“இத்தனை வருஷமா அவனுக்கு ஏன் கல்யாணம் ஆகாலைனு காரணம் தெரியுமா தாத்தா?”
பேரன் பெருசா ஏதோ பண்ணிருக்கான் போலயே என்ற அதிர்ச்சியில் இல்லை என தலையை ஆட்டினார்.
“அவன் ஆண்மையை இழந்து நாலு வருஷமாச்சு. என்னை அழிக்க நினைச்சதுக்கு அவனோட குடும்ப வாழ்க்கையையே அழிச்சிட்டேன். அதைக்கூட ரொம்ப லேட்டாத்தான் கண்டுபிடிச்சான்”
“அதோட நிறுத்தல. இந்த ஒரு வருஷமா நாட்டு மருந்து, லேகியம்னு அவன் நம்பி எடுத்துக்கிற எல்லா மருந்துலயும் விஷம் கலக்க ஆரம்பிச்சுட்டேன்”
நடராஜனின் முகமோ ருத்ரா சொன்னதைகேட்டு பயத்தில் வெளிறிப்போனது. “ருத்ரா!” என்றவரிடம்,
“இன்னும் ஒன்னோ, ரெண்டோ… நிம்மதியா! ச்சே… ச்சே… நிம்மதி இல்லாம போய்ச் சேரட்டும். ஆரலிகிட்ட அவன் இறப்பை பொறுமையா சொல்லிக்கலாம்” என்ற ருத்ரா கண்களில் எந்தக் குற்றவுணர்வும் இல்லை.
“ஆரலியை பொறுத்தவரைக்கும் நான் பாவம்… நண்பனால ஏமாத்தப்பட்டவனா இருக்கிறது நல்லது. என்னை பாம்ப்பர் பண்ணி(செல்லம் கொஞ்சி) பார்த்துக்கிற அவளோட குணம் எனக்கு கடைசி வரைக்கும் வேணும்”
“என்னை பார்த்துக்கிறதுல அவளுக்கு கிடைக்குற சந்தோஷத்தை நான் ஏன் கெடுக்கணும்? சரபனோட இறப்புக்கு நான் காரணம்னு கடைசி வரைக்கும் அவளுக்கு தெரியக்கூடாது”
என்றவனுடைய குரல் அழுத்தமாக ஒலித்தது.
நடராஜன் தன் பேரனை எச்சில் வற்றிப்போன நிலையில் பார்த்தார்.
இவன் காதலுக்காக எதையும் செய்ய தயங்க மாட்டான் என்று தெரியும். ஆனால் துரோகத்துக்கு இவ்வளவு கொடூரமாகப் பழிவாங்குவான் என்று நினைக்கவில்லை.
அவனுடைய காதலுக்கும், வன்மத்துக்கும் இடையில் மிக மெல்லிய கோடுதான். ஆரலி மட்டுமே அவனை கோட்டை தாண்ட விடாமல் பிடித்து வைத்திருக்கும் பிடிப்பு.
அவளை இழந்துவிட்டால் அந்த கோட்டை கடந்து சுற்றியிருப்பவர்களை அழிக்கும் பெரும் அழிவு சக்தியாக மாறிவிடுவான் ஏகதச ருத்ரா.
“உங்க சின்ன பேரன் அறிவாளித்தனமா பண்றேன்னு லைஃபை தொலைச்சுட்டு நிக்கப்போறான்! ஆரலி தங்கச்சி அமெரிக்கா போயிட்டா” என்று தகவலாக சொல்லிவிட்டு கிளம்பினான்.
ஹாலில் பத்ரன் பாட்டியோடு சண்டை கட்டிக்கொண்டிருந்தான்.
“போதும்! நிறுத்துடா!” என மகாதேவன் மகனைப் பார்த்து எரிச்சலுடன் கத்தினார்.
“இப்போ என்ன? விஷாலி வேண்டாம்னா வேற ஒரு பெருச்சாளி, அதுக்கு என் அம்மாவை காலம் போன காலத்துல ஏன்டா டென்ஷன் ஆக்குற?”
பத்ரன் தலையில் அடித்துக்கொண்டான்.
“சீரியஸ்லி அப்பா! உங்க அம்மா பார்க்குற பொண்ணுல ஒன்னுகூட நார்மலா இருக்க மாட்டேங்குது”
“ஒருத்தி அஞ்சலி பாப்பா மாதிரி பேசிப் பேசியே என்னை ஏமாத்திட்டுப் போயிட்டா. இப்போ படத்துல வர ஹாசினி மாதிரி ஒரு லூசை என் தலைல கட்டப் பார்க்குறாங்க!”
அவன் சொன்ன விதத்தில் மகாதேவனுக்குச் சிரிப்பு வந்தாலும், அதை வெளிக்காட்டாமல் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டார்.
“இவங்க பொண்ணு பார்த்தது போதும்! இனிமேல் எனக்கு நானே பொண்ணு தேடிக்கிறேன். ஒருவேளை கிடைக்கலைனா கடைசி வரைக்கும் கல்யாணம் பண்ணிக்காம இருந்துட்டுப் போறேன் போதுமா?” என கோபமாக சொல்லிவிட்டு மாடிப்படிகளில் ஏறினான்.
அவன் போன வேகத்தைப் பார்த்த மகாதேவன், தன் தாயைத் திரும்பிப் பார்த்து “என்னம்மா இது?” என்று கேட்டு முறைத்தார்.
“உன் பையன் ஓவரா பண்றான் மகாதேவா! எங்களுக்கு திகள் மேல எந்த கோபமும் இல்ல. யாருன்னே தெரியாத ஒரு பொண்ணை மகளா, அக்காவா நினைச்சு பாதுகாத்து, அவளுக்காக கூடவே இருந்த குடும்பத்தைப் பிடிக்காம போகுமா?” என்று மகாதேவனைப் பார்த்து ஆதங்கத்துடன் கேட்டார் அபிராமி.
அவருடைய கேள்வியில் இருந்த நியாயத்தை உணர்ந்த மகாதேவன் பெருமூச்சு விட்டார். பத்ரன் பிடிவாதத்தை நினைத்துத்தான் அவருக்கும் கவலையாக இருந்தது.
“அப்புறம் ஏன்மா அவனுக்கு வேற பொண்ணு பார்த்திங்க?”
“அது நான் அரேஞ்ச் பண்ண செட்டப் மகனே!” என்று சற்றே பெருமிதத்துடன் ஆரம்பித்த அபிராமியின் குரல், அடுத்த நொடியே சலிப்பில் இறங்கியது.
“ஆனாலும் இந்த அரங்கனுக்கு திமிரு கொஞ்சமாவது குறைவா இருந்திருக்கலாம். கடைசிவரை திகள்தான் வேணும்னு அவன் வாயிலிருந்து வராது போல! அவளை உயிரா காதல் பண்ணிட்டு, இப்போ எதுக்கு இந்த பிடிவாதம்?” என்று
பெருமூச்சோடு சொல்லிவிட்டு கவலையில் ஆழ்ந்தார் அபிராமி.
ஆரலியின் கதையைக் கேட்டதிலிருந்து அபிராமிக்கும் சாம்பவிக்கும் திகள் மீது இருந்த பாசம் இன்னும் கூடிப்போனது. அவள் ஆரலிக்காகச் செய்த விஷயங்களை கேட்கும் போதெல்லாம், அவளை ஆசையோடு அணைத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் இருவருக்கும் தோன்றியது.
தவறு செய்திருந்தாலும், அதை மறைத்து வைத்திருந்தாலும், அதற்குப் பின்னால் ஒரு வலுவான காரணம் இருந்ததை அவர்கள் புரிந்துகொண்டார்கள்.
ஆனால் பத்ரன்? அவனுடைய கோபத்துக்கு முன்னால் யாருடைய நியாயமும் எடுபடவில்லை.
அவன் திகளை வேண்டாம் என்று பிடிவாதமாகச் சொல்ல இருவருக்கும் அதிர்ச்சி. இது சரிப்பட்டு வராது, ஏதாவது ஒரு நாடகத்தைப் போடுவோம் என்று ஒரு பெண்ணை ஏற்பாடு செய்து அனுப்பி வைக்க, அவளை வேண்டாம் என்று சொன்னது மட்டுமில்லாமல் திகளும் வேண்டாம் என்கிறான்.
‘இவனுக்கு அப்படி என்னதான் கோபமோ! தங்கமான பொண்ணு மனசைக் காயப்படுத்துறான்’ என்று அபிராமியால் புலம்ப மட்டுமே முடிந்தது.
தனது அறைக்குள் தனியாக அமர்ந்திருந்த பத்ரனின் உள்ளமோ எரிமலையாய்க் கொதித்துக்கொண்டிருந்தது.
தலையணையைத் தூக்கி ஒருபுறம் வீசியவன், மீண்டும் அதை எடுத்துத் தன் முதுகுக்குப் பின்னால் வைத்துக்கொண்டு கட்டிலில் சாய்ந்தான்.
“என்னை காதலிக்கிறதுக்கு முன்னாடி நடிச்சா ஓகே! அடுத்து இதுதான் நடந்ததுனு சொல்லிருக்காலம். அட்லீஸ்ட் நான் கேட்கும் போதாவாவது மாமான்னு உண்மையைச் சொல்லியிருந்தா நான் ஏன் கோவப்படப்போறேன்?”
திகளின் மீது தனக்கிருக்கும் காதலை அவனால் மறுக்க முடியாது. அவளாக உண்மையை சொல்லியிருந்தால் கோபப்பட்டிருப்பான், சண்டை போட்டிருப்பான், இல்லை கொஞ்ச நாள் பேசாமல் கூட இருந்திருப்பான்.
ஆனால் அவளை வெறுத்திருக்க மாட்டான். அவள் தன்னை ஏமாற்றியதை நினைத்து இந்த அளவுக்கு தவித்திருக்கவும் மாட்டான்.
“அப்போ காதலிச்சேன்னு சொன்னது பொய் தானே?” என்று தேவையில்லாத குப்பைகளை மனச்சட்டியில் போட்டு கிண்டிக்கொண்டிருந்தான்.
இதில் லூசு போல விஷாலி வேறு, கியூட்டாகப் பேசுகிறேன் என்று பத்ரனைக் கடுப்பாக்கிவிடவும் பாட்டி மீது கோபத்தைக் காட்டிவிட்டான்.
‘இந்த பத்ரனை கொஞ்சிக் கொஞ்சி மடக்குறது என் குட்டச்சியைத் தவிர யாருக்கும் கியூட்டா இருக்காது’ என்று அவனுடைய காதல் உள்ளம் பொறும, அவள் கொஞ்சிய நினைவு வந்ததும் அவனுடைய உதடுகள் தன்னையறியாமல் மென்மையாக வளைந்தது.
அடுத்த நொடியே முகத்தைச் சுருக்கிக்கொண்டான். ‘ச்சே என்னடா இது? கோபப்பட வேண்டிய நேரத்துல சிரிச்சிட்டு இருக்க? அதான் அவளை வேண்டாம்னு விரட்டி விட்டாச்சுல, இனி என்ன காதல் மயிரு?’ என்று மனசாட்சி வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போனது.
‘ச்சூ போ அங்குட்டு! நான் கோபமா இருக்கேன்!’ என்று கண்களை மூடி மெத்தையில் விழுந்தான். ஆனால் இமைகளுக்கு நடுவே அவனுடைய தாவணிப் புயலின் பிம்பம்தான்!
சோதிக்குறாளே! என்று தலையைத் தாங்கி அமர்ந்துவிட்டான்.
திகள் இப்படித்தான் என்று நம்பியதற்கு மாறாக, கொஞ்சமும் எதிர்பார்க்காத அவளுடைய பக்கங்களை கண்டுதானே அவனுக்கு அதிக கோபம் வந்தது.
அவள் குடும்பம் மிடில் கிளாஸ் ஃபேமிலி கிடையாது. பெரிய ஹாஸ்பிடல் குரூப் ரன் பண்ற குடும்பம். அவளும் சாதாரணமாக டிகிரி முடித்துவிட்டு டான்ஸ் கிளாஸ் போகிற பெண் கிடையாது. உலகின் தலைசிறந்த மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு மருத்துவம் படிக்கும் மாணவி.
அதுவும் திகள் போட்டிருக்கும் வெஸ்டர்ன் மேக்ஸியை பார்த்து வயிறு காந்தியது.
‘நான் மட்டும் பார்க்க வேண்டியது இடம் சார் அது! இடுப்பைக் காட்டி ஆளை மயக்கி அதே இடுப்புல முடிஞ்சுட்டா, இப்படி அரைகுறையா பார்த்தா மூச்சடைக்காதா?’ என்ற கவலை அவனுக்கு,
‘எருமைக்கடா வயசாகுது! காதல் பண்ணத் தெரியலைனா உன் அண்ணன் கிட்ட டியூஷன் போடா’ என்று மனசாட்சி பங்கமாகக் கலாய்த்துவிட்டுப் போனது.
தூக்கம் தூரப்போனதுதான் மிச்சம்!
அவளிடம் ஓடத் துடித்த கால்களையும், பேசத் துடித்த உதடுகளையும் கடினப்பட்டு அடக்கினான்.
அவனுடைய பிடிவாதத்துக்கும் காதலுக்கும் இடையே நடந்த போரில், அந்த இரவு முழுவதும் தூக்கம்தான் தோற்றுப்போனது!
“நீ காதல் கவலையில இருந்தா என்ன? செத்தா எனக்கு என்ன?” என்று கமகமவென சென்ட் அடித்துக்கொண்டு நிலாவை பார்க்க காலையிலே ஜம்மென கிளம்பிக்கொண்டிருந்தான் ருத்ரா.
சட்டையின் காலரை சரிசெய்து, தலைமுடியை விரல்களால் கோதிவிட்டவன், கண்ணாடியில் தெரிந்த தனது உருவத்தை ஒருமுறை ரசித்துப் பார்த்தான்.
முகத்தில் வழக்கமான கம்பீரம், உடையில் நேர்த்தி, நடையில் திமிர் என
இவ்வளவு நாளும் பைத்தியக்காரப் பட்டம் தனக்கு தானே சூட்டிக்கொண்டு சுற்றித்திரிந்தவன், இனி காதல் பைத்தியம் என்ற பட்டம் வாங்க அழகாகத் தயாராகி ஓடுகிறான்.
நான் பிடிவாதக்காரன் என்பதை நொடிக்கு நொடி உணர்த்தவில்லை என்றால் அவன் காதலுக்கு என்ன மரியாதை?
படிகளில் குதித்து இறங்கிவரும் மூத்த பேரனைக் கண்டு அபிராமிக்குக் கண்கள் ஆனந்தத்தில் கலங்கியது.
“ருத்ரா!” என்று கைகளை நீட்டியவரின் கைகளைப் பற்றியவன், பாட்டியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டு சாப்பிட அமர்ந்தான்.
இவ்வளவு நேரம் அவனைப் பார்த்துக்கொண்டிருந்த பத்ரன் ‘நீ எப்போ வந்த?’ என்ற பார்வையை வீசினான்.
ஆனால் ருத்ரா அவனைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.
“இந்த வீக்கெண்ட் எல்லாரும் ஃப்ரீயா?” என சாப்பிட்டுக்கொண்டே அவன் கேட்ட கேள்விக்கு, மேசையைச் சுற்றி அமர்ந்திருந்தவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.
“ஏன்பா, வெளியே போகணுமா? உனக்காக வரதுன்னா நாங்க எப்பவும் ஃப்ரீதான்!” என்றார் சாம்பவி.
அவரைப் பார்த்துச் சிரித்தவனோ,
“இல்லம்மா! எனக்கும் ஆரலிக்கும் இந்த வீக்கெண்ட் கல்யாணம் அரேஞ்ச் பண்ணலாம்னு தாத்தாகிட்ட கேட்டிருக்கேன். சோ எல்லாரும் போயிட்டு வந்துடலாம்”
என்னவோ வாக்கிங் போய்ட்டு வந்துடலாம் என்று கூப்பிடுவது போல கல்யாணத்துக்கு அழைக்கிறானே என முழித்தார் சாம்பவி. அபிராமிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
“போதும் ருத்ரா, உன் அம்மா பாவம்!”
“சீரியஸா கேட்கிறேன் பாட்டி!”
ருத்ராவின் குரல் இந்த முறை அழுத்தமாக ஒலித்தது. வெறும் விளையாட்டுப் பேசவில்லை என்பதை புரிந்துகொண்டார்கள்.
