ஒரு நொடி அவனை கண்கள் கலங்க பார்த்தவள், முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல், “சாரி சார்!” என்று கூறிவிட்டு அமைதியாக வெளியே வந்தாள்.
அவளுக்குப் பின்னாலே ஓடிவந்த அவன் பி.ஏ, “மேடம் நில்லுங்க!” என்று ஒரு கடிதத்தை அவளிடம் நீட்டினான்.
“சார் உங்களை அந்த ரூம்ல உட்கார்ந்து வேலை பார்க்கச் சொன்னாங்க மேடம்”
அந்த கடிதத்தை பார்த்த நிலாவின் இதழ்கள் விரக்தியாக வளைந்தன.
“நோ நீட்! இந்த லெட்டரை உங்க சார்கிட்டயே கொடுத்துடுங்க, நான் ஏகராவை தேடி வந்தேன். இந்த கம்பெனி எம்.டி ஏகதச ருத்ராகிட்ட வேலை கேட்டு வரலை, சாரி இனி இங்க வரமாட்டேன்!”
அவ்வளவுதான் என்பது போல ஆபிஸை விட்டு வெளியேறினாள்.
அவனுடைய குணம் தெரிந்தும் புதிதாக வலிப்பது போல அழுகிறாயே முட்டாள்! என்று தன்னுடைய மனதையே திட்டியபடி சாலையோரம் நடந்தாள்.
அப்போது அவளுக்கு முன்னால் ஒரு கார் வேகமாக வந்து நின்றது.
“ஐயோ!” என பயத்தில் பின்னால் நகர்ந்தவள் தடுமாறிக் கீழே விழுந்துவிட்டாள்.
காரின் கதவை திறந்துகொண்டு இறங்கினான் ருத்ரா.
அவனைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக்கொண்ட நிலா, அவன் உதவிக்கா நீட்டிய கைகளைத் தட்டிவிட்டபடி எழ முயன்றாள். ஆனால் பேச்சே இல்லாமல் அவளைத் தூக்கி காரின் முன்சீட்டில் அமர வைத்தான்.
நிலா மறுக்கவில்லை. பிடிவாதம் பிடிக்கவும் இல்லை. அவள் சொல்வதை கேட்கப் போவதில்லை என தெரிந்த பிறகு போராடி என்ன பயன் என்று அமைதியாக ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
அவளுடைய அமைதி ருத்ராவை பொறுமையை இழக்கச் செய்தது.
நிலா கன்னத்தை பிடித்து பிடிவாதமாக தன்னைப் பார்க்க வைத்தான்.
நிலாவோ கண்களை இறுக மூடிக்கொண்டு தன்னுடைய எதிர்ப்பை காட்டினாள்.
“என்கிட்டயே பிடிவாதமா?” அவனுடைய உறுமலில் சிறிது பயம் வந்தாலும், அதை காட்டிக்கொள்ளாமல் போடா என்பது போல அமர்ந்திருந்தாள்.
“வேண்டாம் ஆரலி! என்னோட முழுக் கோபத்தையும் உன்னால தாங்க முடியாது”
“ஓஓ… இவ்வளவு நாள் நீ கம்மியா கோபத்தை காட்டிருக்க, இனிமேல்தான் முழுசா காட்டணுமா? முதல்ல கையை எடு!” என அவன் கையை உதறித் தள்ளியவள்,
“இதே மாதிரி உன் கோபம், வீராப்பு எல்லாத்தையும் காட்டிட்டே இருந்தா ஒருநாள் மொத்தமா உன்னை வெறுத்துட்டுப் போயிடுவேன் ருத்ரா!”
அவள் தெரிந்துதான் சொன்னாளோ? இல்லை கோபத்தில் வார்த்தைகளை விட்டாளோ? அந்த வார்த்தை ருத்ராவை பலமாகத் தாக்கியது.
அவனுடைய முகத்தில் இருந்த இறுக்கம் இன்னும் அதிகமானது. நம் அன்பு மற்றவர்களை தொல்லை செய்யும் போது விலகி செல்வது தானே சாலச்சிறந்தது. ஆனால் இங்கு விலகி சென்றால் அது ருத்ரா இல்லையே!
கோபம் கொப்பளிக்க அமைதியாக அமர்ந்திருந்தவன் ஒரு வார்த்தைகூட உதிர்க்கவில்லை. நிலாவின் வீடு வந்ததும் அவள் இறங்கிக்கொண்டாள்.
அடுத்த நொடி காரை உச்ச வேகத்தில் ஓட்டிக்கொண்டு புறப்பட்டான்.
அவன் கோபத்தில் காரை வேகமாக ஓட்டிச் செல்வதைக் கண்டு அதிர்ந்தாள் நிலா. ‘இவனைத் திட்டக்கூட முடியல. டார்ச்சர் பண்றான்!’ என உடனே அவனுக்கு போன் செய்தாள்.
வேண்டுமென்றே போனை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது அந்த அரைபைத்தியம்.
விடாமல் மீண்டும் மீண்டும் அழைத்துக்கொண்டே இருந்தாள்.
இறுதியில் அழைப்பை ஏற்றுவிட்டு பேசாமல் அமைதியாக இருந்தான்.
“ஹலோ!”
பதில் இல்லை…
“ஓஓ… துரை பேசமாட்டாரோ?” என கடுப்பாக கேட்டாள்.
“உயிர் போற வேகத்துல எங்க போற நீ? அந்த இத்துப்போன கேம் விளையாட அவசரமா? இல்ல என் மேல வர கோபத்தை என்கிட்ட காட்ட முடியலைனு ஓடுறியா?” என்று கத்தியவளுக்கு பதில் சொல்லாமல், அமைதியாக இருந்தான்.
“பதில் சொல்லு ஏகரா!” என்றவள் ஒரு பெருமூச்சோடு அமைதியாக பேச ஆரம்பித்தாள்
“எனக்கு கொஞ்சம் நாள் டைம் தேவைப்பட்டது. தெளிவா சொல்லணும்னா… உன்னைக் காதலிக்க எனக்கு ஆசை போதுமா?”
அவனுடைய முகத்தில் இருந்த இறுக்கம் அப்படியே இருந்தாலும், அவள் பேசுவதை கவனமாக கேட்டுக்கொண்டிருந்தான்.
“காதல் எப்படி இருக்கும்னு நான் உண்மையிலே ஃபீல் பண்ணதில்லை. அதுக்கு நேரமும் இல்லை, ஆளும் இல்லை. உன்னோட இருக்கும்போது உண்மை தெரிஞ்சிடுமோன்ற பயத்துல நீ காட்டுன காதலை அனுபவிக்க முடியல. எப்போ என்ன நடக்குமோன்னு பதற்றத்திலேயே இருந்தேன்”
“ஆனா இப்போ உன்னை பொறுமையா காதலிக்கணும்னு நினைக்கும்போது, நீ கல்யாணம் பண்ணிக்கலாம்னு பிடிவாதம் பிடிக்கிற!”
அவள் பேச்சை கேட்டு ருத்ராவின் முகத்தில் இருந்த இறுக்கம் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ந்தது.
“எனக்கு நீ வேணும் ஏகரா! காதலிக்கிறதுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணிக்கிட்டு, அப்புறம் காதலைத் தேடுறதுல எனக்கு விருப்பமில்லை. நான் உன்னை காதலிக்கணும். உண்மையா, மனசாரக் காதலிக்கணும்”
அவனிடமிருந்து பதில் வரவில்லை என்றதும், “இன்னும் பத்து நிமிஷம் தான் உனக்கு டைம்! என் வீட்டு வாசல்ல நான் நிக்கிறேன். பத்து நிமிஷத்துல நீ திரும்பி வந்தா நீ சொல்லும் போது கல்யாணம் வச்சுக்கலாம். இல்லைன்னா நான் சொல்லும்போதுதான் கல்யாணம்!”
என்று உத்தரவிட்டு அழைப்பை துண்டித்தாள் நிலா.
ருத்ரா கண்டிப்பாகப் பத்து நிமிடத்திற்குள் வரமாட்டான் என்ற நம்பிக்கையில் வாசலில் நின்றிருக்க, அவன் தண்ணி லாரியை ஓவர்டேக் பண்ணி வந்து கொண்டிருந்தான். குறுக்க கௌசிக் வந்தால் சட்னிதான்!
“ஓய்! வீட்டுக்குள்ள வராம வெளியே என்ன பண்ற?” பேபி ஸ்நாக்ஸ் சாப்பிட்டபடியே வெளியே வர, அவனுக்குப் பின்னால் விமலும் கையில் காபியுடன் வந்தான்.
“வெயிட் பண்ணுங்க, இன்னும் ஒரு நிமிஷத்துல சொல்றேன்!” என்றவள் வாட்சை பார்த்தபடி “ஒன்று… இரண்டு… மூன்று…” என்று எண்ண ஆரம்பித்தாள்.
அடுத்த நொடியே காற்றைக் கிழித்துக்கொண்டு வந்து நின்றது ருத்ராவின் கார்!
அந்த வேகத்தில் விமலின் கையிலிருந்த காஃபி கப் ஒரு பக்கம் பறக்க, பேபியின் கையிலிருந்த ஸ்நாக்ஸ் மறுபக்கம் பறந்தது.
“ஐயோ! என்னோட ஸ்நாக்ஸ்!” என்று பேபி அலறி முடிக்கவில்லை, அவன் கைலியும் காற்றில் பறக்க ஆரம்பிக்க, “ஐயையோ! கைலி பறக்குது என் மானம் போகப்போகுது” என்று பதறியபடி
ஒரு கையால் கைலியை இறுகப் பிடித்துக்கொண்டு, இன்னொரு கையால் ஸ்நாக்ஸைப் பிடிக்க முயன்றான்.
விமல் தன் கையிலிருந்த காலி கப்பை பாவமாக பாரத்தான்.
“என்னடா இது! நிம்மதியா ஒரு காஃபியைக்கூட குடிக்க விடமாட்றாங்க”
பத்து எண்ணி முடிப்பதற்குள் காரிலிருந்து இறங்கிய ருத்ரா, நிலாவை பார்த்து நக்கலாக சிரித்தபடி வந்தான்.
“பாஸ்! என்ன இது சின்னப்புள்ளத்தனமா பண்றிங்க?”
இருவரையும் கண்டுகொள்ளாமல் நிலாவை அப்படியே தூக்கி தோளில் போட்டுக்கொண்டான்.
“ஆரம்பிச்சிட்டான்!” என்று பேபி முறைக்க, “மீண்டும் மீண்டுமா?” என்று விமல் பாவமாக பார்த்தான்.
“உன் தங்கச்சிக்கு என்னை காதலிக்க ஆசையாம் சோ, தூக்கிட்டுப் போறேன் கல்யாணத்துக்கு வந்து சேருங்க!”
என்று சர்வசாதாரணமாகச் சொன்ன ருத்ராவை, “இறக்கிவிடுடா ராஸ்கல், ப்ராடு!” என நிலா அவன் முதுகில் அடித்தாள்.
அவளுடைய அடிகளைப் பொருட்படுத்தாதவன், காரில் நிலாவை அமர வைத்துவிட்டு தானும் ஏறிக்கொண்டான்.
“எங்க போறோம்? வாயைத் திறந்து பதில் சொல்லு!” என அவள் கேட்டுக்கொண்டிருக்க, அவனோ காரைக் கிளப்பியவன், “எஸ்டேட் போகலாம் மஃபின்!” என்று கண்ணடித்து சிரித்தான்.
“ருத்ரா விளையாடாத! எஸ்டேட்ல கல்யாணம் ஓகே பட், இப்பவே அங்கே போக வேண்டாம். அம்மா, அப்பா கூட இருக்கணும்”
அவளை அழுத்தமாகப் பார்த்தவன்,
“டூ லேட்! வா காதல் பண்ணுவோம். காலையிலிருந்து என்னை மூட் அவுட் பண்ணதுக்கு விதவிதமா சமாதானம் பண்ண வேண்டியிருக்கும்!” என்று அவளை வம்பிழுத்தபடியே காரை ஓட்டினான்.
“இந்த ஆளு என்ன அண்ணா, நம்ம வேட்டியை உருவாத குறையா பொண்ணைத் தூக்கிட்டுப் போறாரு!”
என கீழே சிதறிக் கிடந்த முறுக்குகளை பரிதாபமாக பார்த்தபடி கேட்டான் பேபி.
அவனுக்கு அவன் கவலை.
“உன் பஞ்சாயத்தை விடுடா, நிலாவுக்கு காதலிக்க ஆசையாம். இந்த காதலை பார்த்ததுக்கப்புறமும் தலைக்கு ஆசையப்பாரேன்” என்று விமல் தலையை பிடித்துக்கொண்டான்.
“இந்த மாதிரி நாமளும் காதலிக்கலாமா அண்ணா?” என்று அதிரடியாகக் கேட்ட தம்பியை அதிர்ச்சியுடன் பார்த்தான் விமல்.
“செத்துருவடா! பரவாயில்லையா? விபரீதமா எதையாவது பண்ணித் தொலைக்காத!” என்று அவன் தலையில் தட்டியபடி வீட்டுக்குள் அழைத்துச் சென்றான்.
பத்ரன் தன்னுடைய அறையில் ஓய்ந்து போய் அமர்ந்திருந்தான்.
சிறு வயதிலிருந்தே நேர்த்தியானவன். எதற்கும் அலட்டிக்கொள்ளாதவன், தொழிலையும் திறம்பட நடத்துபவன்,
இதுவரை அவனுடைய கவனம் சிதறியதாக அவனுக்கு நினைவில்லை.
ஆனால் இன்று? டை கழண்டு, தலைமுடி கலைந்து, சட்டையின் கைகளை மடித்தபடி ஏனோதானோவென்று அமர்ந்திருந்த அவனுடைய தோற்றமே பத்ரன் மனநிலையை சொல்லிவிடும்.
திகள் நம்பர் போனால் என்ன? அமெரிக்கா நம்பரை அவன் நினைத்தால் கண்டுபிடித்துவிட முடியும். இவ்வளவு ஏன், அமெரிக்கா என்ன வேறு உலகத்திலா இருக்கிறது? நேராகப் போய் அவளை பார்க்கலாம்.
அதையெல்லாம் செய்ய மாட்டேன் காதல் தோல்வியில் வாடிச்சாவேன் என ஈகோ பிடித்து அழுபவனை சமாதானப்படுத்துவது வீண் வேலை என அவன் குடும்பமே அவனை டீலில் விட்டுவிட்டது.
‘என்னடா இது, ஆறுதல் கூட சொல்ல மாட்டேங்கிறிங்க!” என்ற புதிய கவலையும் வரிசையில் சேர்ந்துகொண்டது.
மறுபுறம் பாஸ்டனில் திகள் கிளாஸ் போய் வர ஆரம்பித்துவிட்டாள்.
பத்ரனைப் பற்றிய நினைவு அவளுக்கு இல்லாமல் இல்லை. இருந்தாலும் முடிந்தவரை காதல் தோல்வி தன்னுடைய படிப்பைக் கெடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.
அவனை நினைக்காமல் இருக்க தன்னையே படிப்பில் மூழ்கடித்துக்கொண்டாள்.
காரில் தன்னருகே அமர்ந்து தூங்கிக்கொண்டிருந்த காட்டு மல்லிகையின் மீதுதான் ருத்ராவின் கண்கள் இருந்தன. கைகள் காரை ஓட்டிக்கொண்டிருந்தாலும் அவனுடைய கவனம் முழுவதும் அவள் மீதுதான்!
காரில் ஏறிய முதல் அரைமணி நேரம், வரவே முடியாது என்று கத்திக்கொண்டு வந்தவள், அடுத்த சில நிமிடங்களிலேயே தூங்க ஆரம்பித்துவிட்டாள்.
அவளுடைய முகத்தில் இருந்த சோர்வைக் கண்டு மெல்ல சிரித்தவன் “தூங்கு மூஞ்சி!” என்று முணுமுணுத்தான்.
இறுதியாக அவனுடைய காட்டுவீட்டின் பாதை முன்பு கார் வந்து நின்றது.
இப்போது எழுந்தால் கண்டிப்பாகக் கத்துவாள் அதற்காக இங்கு வராமல் இருக்க முடியுமா? பத்திரமாக அவளைத் தூக்கிக்கொண்டு மேடுகளில் ஏறினான்.
வீட்டை நெருங்கும் நேரத்தில் மெல்ல கண்களைத் திறந்தாள் நிலா.
சுற்றிலும் படர்ந்திருந்த இருட்டையும், அடர்ந்த மரங்களையும் பார்த்தவள் பயந்துபோய் அவனுடைய கழுத்தில் முகம் புதைத்துக்கொள்ள, “வந்தாச்சு மஃபின், பயப்படாத!”
என்றான் மென்மையாக,
அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தவளோ, “தனியா என்னை இருட்டுக்குள்ள போட்டவன் தானே நீ! இப்போ புதுசா அக்கறைப்படுற?” என்று திட்டினாள்.
இதுவரை மென்மையாக இருந்த அவனுடைய முகம் அவளுடைய வார்த்தைகளை கேட்டு இறுகிப்போனது.
“நீ பண்ணத் துணிஞ்ச காரியம் சாதாரணமானது இல்ல ஆரலி! நொடி தாமதமாகியிருந்தாலும் உன்னை இழந்திருப்பேன்!”
“சாரி… எனக்கு ரொம்ப அழுத்தமா இருந்தது. இங்கிருந்து போனா போதும்ன்ற மனநிலையில தப்பான முடிவெடுக்க நினைச்சுட்டேன்” என்றவளுடைய குரல் மெதுவான அழுகையுடன் வந்தது.
ருத்ரா அவளை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டான்.
“அழாத! நீ அழுதா எனக்கு பிடிக்காது. பழசை மறந்திடுன்னு சொல்லல, என்னை மன்னிச்சு தண்டனை குடுனு சொல்றேன் அதுவும் கூடவே வச்சு கொன்னுபோடு” என்றவன் மீது எங்கு கோவம் வர?
ருத்ரா குரலில் இருந்த தவிப்பு அவளுடைய இதயத்தைத் தொட்டது. வீட்டுக்குள் வந்ததும் இறக்கிவிட்டவனிடம், “பேசியே மயக்கிடு! இப்போ எனக்கு பசிக்குது” என்றாள்.
“பத்து நிமிஷம். நீ ஃப்ரெஷ் ஆகிட்டு வா”
அவளும் அமைதியாகத் தலையசைத்துவிட்டு அறைக்குள் சென்று தன்னைச் சுத்தப்படுத்திக்கொண்டு வெளியே வந்தாள்.
வழக்கமான தன்னுடைய ஆணழகன் கெட்டப்பில் நின்று சமையல் செய்துகொண்டிருந்த ருத்ராவை பார்த்ததும் சிரிப்பு வந்துவிட்டது!
“இந்த குளிர்லயும் சட்டை போட மட்டும் என் காதலனுக்குக் கஷ்டமா இருக்கு போல!” என்று சிரித்தபடியே பின்னாலிருந்து அவனை அணைத்துக்கொண்டாள்.
அவளுடைய கைகளில் முத்தமிட்டவனோ, “எனக்குக் குளிரல மஃபின். நீ இல்லாத தனிமையில கஷ்டப்படும்போது மழை, குளிர், பகல், ராத்திரின்னு எதையும் பார்க்காம இங்க வெளியே நின்னுட்டு இருப்பேன்.
பல நேரங்கள் ரொம்ப சலிப்பா இருக்கும், நீ திரும்பி வந்ததும் என்னை விட்டு போனதுக்கு தண்டனை தரணும்னு நினைச்சு மனசை தேத்திப்பேன்” என்றவன் முதுகில் முகம் புதைத்துக்கொண்டாள்.
அவன் காதல் என்றுமே கண்ணுக்குத் தெரியாத மேதினி ஆதார வளியைப் போன்றது! பார்க்க முடியாது ஆனால் அந்த வளி இல்லாமல் வாழ வழி இல்லையே!
“நீ குடுக்குற தண்டனையை சுகமா ஏத்துப்பேன் ஏகரா. ஆனால் இப்போ குளிருது!” என்று லேசாக நடுங்கியபடி சொன்னவளை முன்னால் இழுத்து இறுக அணைத்தான்.
“இந்த இடத்துல எனக்குப் பிடிக்கும்னு வீடு கட்டுனியா?”
தலையை மட்டும் அசைத்தவனின் இதழ்களில் நிலா இதழ்கள் இதமாய் ஊர்வலம் வர, குளிரை போக்கும் வேலையை செவ்வென செய்ய ஆரம்பித்தான்.
பசி என்றவளிடம் மேலும் முன்னேற மனமில்லாமல் அவளோடு சாப்பிட அமர்ந்தான்.
“நம்ம கல்யாணம் எஸ்டேட்ல சொன்ன, கெஸ்ட் ஹவுஸ்லயா இல்ல கோவில்லையா?”
“கோவில்ல பண்ணிக்கலாம் மஃபின். கல்யாணம் முடிஞ்சதும் சென்னையில ரிசப்ஷன் ஓகேவா? இல்லை பெங்களூரா?”
“எனக்கு இரண்டு குடும்பத்தை விட்டா வெளியே தெரிஞ்ச ஆட்கள் ரொம்பக் கம்மி சோ சென்னை ஓகேதான்!”
“சரி” சில நொடிகள் அமைதியாக இருந்தவன், “திகள் நம்ம மேரேஜுக்கு வருவாளா?” என்று கேட்டான்.
நிலா அவனை ஏன் என்பது போல பார்த்தாள்.
“என் தம்பி ரொம்ப டென்ஷன்ல சுத்துறான். அவன் வருத்தப்படுறதை பார்க்கும்போது எனக்கு கஷ்டமா இருக்கு”
“இல்லை, இப்போ தான் போய்ருக்கா! அவளுக்கு தோணும் போது வரட்டும். நான் தொல்லை பண்ணமாட்டேன்”
“சரி மஃபின்”
“அப்புறம் நாளைக்கு மலை மேல ஏறலாமா ஏகரா? ரொம்ப வருஷம் ஆச்சு!”
“நோ!” என்று மறுத்தான் உடனடியாக,
நிலா முகம் சட்டென்று சுருங்கிட பொறுக்குமா அவனுக்கு,
“மழை சீசன் ஆரலி! மண் க்ரிப்பா இருக்காது, ஆக்சிடென்ட் ஆக வாய்ப்பு அதிகம். உனக்கு நான் சொல்லிதான் தெரியணுமா? இது நீ வளர்ந்த இடம் தானே!” என்றவன் பேச்சில் சிரித்த நிலா,
“ஆமாம்! மறந்துட்டேன் பாரு. மழை சீசன் முடிஞ்சதும் போகலாம்” என்றவளுக்கு ஸ்வெட்டர் மாட்டிவிட்டு வெளியே கூட்டிவந்தான் ருத்ரா.
சிதறும் மழைத்துளிகள், வாசலில் எரிந்துகொண்டிருந்த விளக்கின் ஒளியில் மின்னியது. சுற்றிலும் அடர்ந்த மரங்கள், அவற்றின் இலைகளிலிருந்து விழுந்துகொண்டிருந்த நீர்த்துளிகள். குளிர்ந்த காற்றில் அசைந்தாடும் செடிகள் என அந்த இரவே பார்ப்பதற்கே சொக்கவைக்கும் வகையில் ரம்மியமாக இருந்தது.
அவள் இடையை சுற்றி கைபோட்டு பின்னிருந்து அணைத்துக்கொண்டான் ருத்ரா.
“நம்ம கல்யாணம் முடியிற வரை எதையும் பத்தி யோசிக்கக்கூடாது மஃபின். நீ, நான் மட்டும் இந்த வீட்டுல சந்தோஷமா இருக்கப்போறோம்”
“ஆனா இரண்டு நாள்ல…” சரபனோட கேஸ் ஹியரிங் வருவதை பற்றி அவள் சொல்ல வாயை திறப்பதற்குள் இடைமறித்தான்.
“ஹியரிங்கை தள்ளிப்போட ஏற்பாடு பண்ணியாச்சு. சோ உன்னோட குட்டி மூளையும், மனசும் என்கிட்ட மட்டுமே இருக்கணும்!” என்று உத்தரவிட்ட ருத்ரா கன்னத்தைக் கடித்தாள்.
சிரித்தபடியே அவளை இன்னும் இறுக்கமாக அணைத்துக்கொண்டான். இருவரும் தங்களுடைய தனிமையை இனிமையாக சுகித்தார்கள்.
ஃபோனை தூரமாக வைத்துவிட்டு அவன் பின்னாலே சுற்றிக்கொண்டிருந்தாள் நிலா. அவனுக்கும் பழைய ஆரலிதான் வேண்டும்.
ஏகரா என அவள் கண்கள் சுழலும் திசையில் எல்லாம் அவன் நிற்க சித்தம் கொண்டான். கல்யாண நாள் வரும்வரை அவளை இரவு, பகல் பாராமல் விதவிதமாக நாடினான். வெட்கம் கெட்டு அவன் கேட்கும் முறைகளை கூச்சம் விட்டு அள்ளி திணித்தாள் பெண்ணவள்.
ஒரு வாரத்தில் கல்யாணம் என்று காத்திருந்து இரண்டு வாரங்கள் ஓடிப்போயிருந்தன.
இந்த பதினான்கு நாட்களும் அவளைச் சுற்றியே அவனுடைய ஜீவன் விரிந்துகிடந்தது. அவளின் சிரிப்பு, கோபம், அவ்வப்போது அவள் செய்யும் சின்னச் சின்னக் குறும்புகள் என அவனுடைய ஒவ்வொரு நொடியையும் ஆக்கிரமித்திருந்தாள் ஆரலி.
அவள் இல்லாமல் ஒரு நிமிடத்தைக்கூடக் கடத்த முடியாத அளவுக்கு அவளிடம் தன்னை தொலைத்திருந்தான் ஏகதாச ருத்ரா!
எஸ்டேட் கெஸ்ட் ஹவுஸூக்கு இரு வீட்டாரும் நேற்றே வந்துவிட்டார்கள். வீட்டுக்கு வருங்கடா! என பலமுறை அழைத்தும் இருவரும் வர மறுத்துவிட்டார்கள்.
கோவிலில் எளிமையாகத் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால், மற்ற அனைவரும் அதிகாலையிலேயே எழுந்து கிளம்பிக்கொண்டிருந்தனர்.
ருத்ரா இருக்கும் வீட்டிலோ நிலா இன்னமும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
அவனை இறுக்கமாக அணைத்தபடி படுத்திருந்தவளின் கன்னத்தில் மெதுவாகத் தன்னுடைய விரல்களை ஓடவிட்டான் ருத்ரா.
அவன் விரல்கள் ஏற்படுத்திய குறுகுறுப்பில் முகத்தைச் சுருக்கியபடி மெல்ல கண்களைத் திறந்தாள்.
“உனக்கு என்ன பிரச்சனை இப்போ? நைட்டும் தூங்க விட மாட்ற, கெஞ்சி கூத்தாடி காலைல தான தூங்க ஆரம்பிச்சேன். மறுபடியும் தூங்க விடமாட்டேங்கிற, நான் பாவம் இல்லையா?”
“இல்ல மஃபின்!” என்று நமட்டு சிரிப்பு சிரித்தனை முறைத்தாள் நிலா.
“எனக்கு தூக்கம் ரொம்பப் பிடிக்கும் ஏகரா! உன் கையில மாட்டுன நாள்லருந்து எனக்குப் பிடிச்ச தூக்கமே தூரமா போயிடுச்சு!” என்று சோகமாக சொன்னவளைப் பார்த்து சத்தமாக சிரித்தான் ருத்ரா.
“நான் இருக்கும்போது தூக்கம் பிடிக்கும்னு சொல்றது தப்பு. சோ தூக்கத்தை விரட்டிட்டு என்னை பிடிச்சு வச்சுக்கோ!”
“போ! நீ வேண்டாம்” என அவனிடமிருந்து விலகி திரும்பிப் படுத்தவளை, அடுத்த நொடியே இடையோடு சேர்த்து தூக்கி தன்மீது போட்டுக்கொண்டவன் “இன்னைக்கு நம்ம கல்யாணம் மஃபின், போக வேண்டாமா?” என அவளுடைய காதருகே மெல்ல சொன்னான்.
அடுத்த நொடி அடித்துப் பிடித்து எழுந்தாள் நிலா!
“என்னது… கல்யாணமா?” என்று அவள் கத்தியதில் அறையே அதிர்ந்தது.
“பாவி! முன்னாடியே சொல்லமாட்டியா? காலையில எழுந்ததும் சொல்ற? கெஸ்ட் ஹவுஸூக்கு அம்மா, அப்பா வந்துட்டாங்களா? மணி என்ன? இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு?” என கேள்விகளை கேட்டுக்கொண்டு படுக்கையிலிருந்து இறங்கி வேகமாக பாத்ரூமுக்குள் ஓடினாள்.
அவளுடைய பதற்றத்தைக் கண்டு வயிறு வலிக்க சிரித்தான் ருத்ரா.
