கடைசிவரை எந்த நாள் கல்யாணம் என்று அவளும் கேட்கவில்லை, அவனும் சொல்லவில்லை. திடீரென காலை தூக்கத்தில் இருப்பவளை எழுப்பி இன்னைக்கு கல்யாணம் என்று சொல்லும் இந்த பைத்தியத்தை என்ன செய்வது?
“இவனை யாரு கல்யாணம் பண்ணிக்கச் சொன்னது!” என்று பாத்ரூமுக்குள் இருந்தபடியே அவனை திட்டினாள் நிலா.
சிறிது நேரத்தில் குளித்துத் தயாராகி வெளியே வந்தவளின் பார்வை மெத்தையில் அழகாக வைக்கப்பட்டிருந்த பட்டுப்புடவையின் மீது விழுந்தது.
அடுத்த நொடியே அவளுடைய கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. அவளுக்குப் பிடித்த டிசம்பர் பூ நிறத்தில் அழகான பட்டுப்புடவை. அதனுடன் பொருத்தமான நகைகள், வளையல்கள் என அனைத்தும் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இதழ்களில் புன்னகை விரிய, அதை கைகளில் எடுத்தவளோ மென்மையாக புடவையை தடவினாள்.
‘ராட்சசன்! என்னை மயக்க என்னென்னவோ செய்வான்!’ என மனதுக்குள் அவனைப் பாராட்டியவள், அடுத்த நொடியே தலையை உலுக்கிக்கொண்டாள்.
‘ச்சே! பாராட்டக்கூடாது. காலையில கல்யாணம்னு சொல்லி டென்ஷன் பண்ணிட்டான்” என்று இலவசமாக ருத்ராவை திட்டிக்கொண்டும், மனதுக்குள் ரசித்துக்கொண்டும் தயாராக ஆரம்பித்தாள்.
நிலா எப்போதும் மூக்கில் அணிந்திருக்கும் ஒற்றை தங்க வளையத்திற்குப் பதிலாக, அவளுடைய புடவையின் நிறத்திற்குப் பொருத்தமாக வைரக்கள் பதித்த அழகிய மூக்குவளையத்தையும் வாங்கியிருந்தான் ருத்ரா.
அதை எடுத்துப் பார்த்தவளின் முகத்தில் மெல்லிய சிரிப்பு, அவளுக்கு பிடித்த நிறத்தில் புடவை, அவளுக்கு பிடித்தமான நகைகள் என ஆரலியின் சின்னச் சின்ன விருப்பங்களைக்கூட நினைவில் வைத்து, அவன் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் ருத்ராவின் காதல் கொட்டிக்கிடந்தது.
அவனை நினைத்தபடியே அலங்காரங்கள் முடிய, நகையை அணிந்துகொண்டு கண்ணாடி முன் நின்று தன்னைச் சரிபார்த்தவளின் பின்னால் வந்து நின்றான் ருத்ரா.
அடுத்த நொடியே அவனுடைய கைகள் அவளுடைய இடையைச் சுற்றி வளைத்தன.
கண்ணாடியில் அவனைப் பார்த்தவள் ஆச்சரியமாகத் திரும்பினாள்.
பட்டு வேஷ்டி, சட்டையில் மாப்பிள்ளைக் கெட்டப்பில் நின்றிருந்தான் அவளுடைய ஏகரா.
அவனைக் கண்டதும் முகம் முழுவதும் புன்னகை பூக்க, ஆசையாக அவனுடைய மூக்கில் முத்தமிட்டவள், “அழகா இருக்க ஏகரா!” என்று கொஞ்சலாகச் சொன்னாள்.
அவளுடைய நெற்றியில் ஆழமாக முத்தமிட்டவன், அவளை ஒரு கணம் முழுமையாக ரசித்துப் பார்த்தான்.
அவன் பார்வையில் இருந்த காதலில் நிலா கன்னங்கள் சிவந்தன.
“கிளம்பலாம். டைம் ஆச்சு!” என்றபடி அவளை அப்படியே கைகளில் தூக்கிக்கொண்டான்.
“இறக்கிவிடு ஏகரா, நான் நடந்து வருவேன்!”
“என் பொண்டாட்டியை தூக்கிட்டுப் போக எனக்கு உரிமை இல்லையா?”
“இன்னும் கல்யாணம் ஆகல சார்”
“அதான் இப்போ ஆகப்போகுதே!”என்று அவன் சொல்ல, அவனுடைய தோளில் லேசாக அடித்து சிரித்தாள்.
அவளைத் தூக்கிக்கொண்டு சில அடிகள் நடந்தவன், திடீரென்று அவனைப் பார்த்து “நான் அழகா இல்லையா ஏகரா?” என்று கேட்டாள்.
யோசனையே இல்லாம் “இல்ல” என பட்டென்று பதிலளித்தான்.
“ஆங்! என்ன சொல்ற?”
“எனக்கு பழைய ஆரலிதான் பிடிக்கும். அதுக்காக வெயிட் அதிகம் போட வேண்டாம். பட் இன்னும் கொஞ்சம் புசுபுசுன்னு இருந்தா அப்போ ஒத்துக்குவேன் நீ அழகு!” என்றவனுடைய பதிலில் நிலா முகம் அஷ்டகோணலானது.
“அடப்பாவி! அந்த வெயிட்டைக் குறைக்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?”
“கவலைப்படாத மஃபின்! நான் இருக்கேன். உன்னை மறுபடியும் கொழுக் மொழுக்குன்னு மாத்திடுறேன்”
என்று சிரித்தவனின் தோளில் முகம் புதைத்தாள் நிலா.
இப்படியே சிரித்துப் பேசியபடியே இருவரும் கோவிலுக்கு வந்து சேர்ந்தார்கள்.
கோவில் வாசலில் காலடி வைத்ததுமே நிலாவின் மனதுக்குள் இருந்த படபடப்பு அதிகரித்தது. அவள் கைகள் லேசாக நடுங்கின. ருத்ராவின் கையைப் பிடித்திருந்த விரல்கள் வியர்க்க ஆரம்பித்தது. அவள் மனம் அம்மாச்சியை நினைத்து வேதனை கொண்டது.
அவள் முகத்தைப் பார்த்தே, அவள் மனதில் ஓடிக்கொண்டிருப்பதைப் புரிந்துகொண்டான்.
“நான் இருக்கேன்டி மஃபின்! தெரிஞ்சோ தெரியாமலோ உன் அம்மாச்சி போட்ட முடிச்சை நாம வாழ்க்கையா தொடரப்போறோம். அவங்க நம்மளை பார்த்துட்டு தான் இருப்பாங்க, நீ சிரிச்சா தான் அவங்களுக்கு சந்தோசம்” என்று அவளுடைய கைகளை இன்னும் இறுக்கமாக பற்றிக்கொண்டான்.
அவனை ஆதுரமாகப் பார்த்தாள் நிலா.
எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் தன்னைத் தனியாக விட்டுவிடமாட்டான் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது.
மெல்லிய புன்னகையுடன் அவனைப் பார்த்தவளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.
மகளைக் கண்டதும் பார்வதியின் முகம் மலர்ந்தது.
“என் பொண்ணு!” என்று மகளை அணைத்துக்கொண்டவரின் கண்களில் சந்தோஷக் கண்ணீர் துளிர்த்தது.
நிலாவும் தாயைக் கட்டிக்கொண்டு சில நொடிகள் அமைதியாக நின்றாள்.
வார்த்தைகள் இல்லாத அந்த அணைப்பு அவளுக்கு இதமாக இருந்தது. மகளை விலக்கிய பார்வதி,
“உன்னைப் பார்க்க திகள் வெயிட் பண்றா!” என்று கூறியபடி போனை எடுத்து, திகளுக்கு வீடியோ கால் செய்தார்.
“திகள்மா!”
“அக்கா!” திரையில் தோன்றிய திகளின் கண்கள் நிலாவை மேலிருந்து கீழ்வரை ரசித்தன.
“கல்யாணப் பொண்ணு செம்ம அழகா இருக்க!”
“தேங்க்ஸ் பெரிய மனுஷி!”
“கல்யாணத்துக்கு வர முடியல அக்கா சாரி! அடுத்து நான் சித்தியாக்கிட்டேனு நியூஸ் சொல்லு கண்டிப்பா வந்துருவேன்!” என்ற தங்கையின் ஆர்ப்பாட்டமான பேச்சைக் கேட்டதும் நிலாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது.
“வாயாடி! அடிவாங்கப்போற!”
அக்கா, தங்கை இருவரின் பேச்சுகளை கேட்டுக்கொண்டு பக்கத்தில் நின்றிருந்த ஒருவனுக்கோ உயிர் ஆட்டம் கண்டது!
வேற யாரு திகள்விழியின் அருமை காதலன் ருத பத்ரன்.
தன் முகத்தில் இருந்த இறுக்கத்தை மறைக்க முயற்சி செய்துகொண்டிருந்த தம்பியை, ருத்ரா ஒருமுறை பார்த்துவிட்டு நமட்டுச் சிரிப்பை சிந்தினான்.
காதலிச்சாலே கதறும் நிலை என கடவுள் எழுதி வைத்திருக்க, நல்ல காதலை தன வாயால் சூனியமாக்கிக்கொண்ட தம்பியின் நிலை புரியாமலா இருக்கும்?
“திகள்மா! ஸ்டடீஸ் எப்படி போகுது? செட் ஆகிட்டியா? தூங்காம முழிச்சிருக்க ஓகே… ஆனால் எங்க இருக்க? பார்ட்டியா?” என்ற அக்காவின் கேள்வியில் சிரித்த திகள்,
“எஸ்! ஜோனோட பர்த்டே கொண்டாட்டம். வரலைன்னு சொன்னாலும் விடமாட்டேங்கிறான், நீயே பேசு!”
என்று போனைத் தன்னருகில் அமர்ந்திருந்த நண்பனிடம் கொடுத்தாள்.
அவ்வளவுதான்! நிலாவின் அருகில் நின்றிருந்த பத்ரனின் கண்கள் இன்னும் சிவந்து போனது,
போன் திரையில் தோன்றிய வெளிநாட்டு இளைஞன் நிலாவை கண்டதும் ஆர்வமாக சிரித்தான்.
“ஹாய் மூன்! கங்கிராஜுலேஷன்ஸ்! யூ லுக் சோ ஸ்டன்னிங்!” என்று தொடர்ந்து நிலாவை பார்த்துப் பேச ஆரம்பிக்க, ஆரலி காதலனுக்கு கண்கள் உறுத்த ஆரம்பித்தன.
நிலாவை நெருங்கி வந்து அவளை அணைத்தது போல அருகில் நின்றுகொண்டான்.
ருத்ரா முகத்தில் இருந்த இறுக்கத்தைப் பார்த்த நிலாவுக்கு சிரிப்பு தான் வந்தது.
“டேய் டேய் போதும்டா! ருத்ரா மாமா முறைக்குறாரு” என்று திகள் போனைப் பிடுங்கினாள்.
ஆனால் ஜோன் அத்துடன் நிறுத்தவில்லை. “பேபி! வை டோன்ட் யூ அக்செப்ட் மை ப்ரொபோசல்? ஐ வாண்ட் டு பி யுவர் ஹஸ்பண்ட்!” என்று ஒரே போடாகப் போட்டான்.
எது? புருஷனாக ஆசையா? அந்த நொடியே பத்ரனின் முகம் கோவத்தில் கொதித்ததி.
வேகமாக முன்னால் வந்து போன் ஸ்கிரீனைப் பார்க்க, திகள் உடலை இறுக்கிப்பிடித்த வெஸ்டர்ன் உடையில் ஜோனுக்கு அருகில் அமர்ந்திருந்தாள்.
“அக்கா, தங்கச்சி இரண்டு பேரையும் சைட் அடிக்கிற இடியட் ஜோன்! உனக்கு ஓவராகிடுச்சு அமைதியா உட்காரு!”
என்று திகள் சொல்லிக்கொண்டிருக்க, ஜோன் திடீரென்று தன் கையில் இருந்த மோதிரத்தைக் கழற்றி அவளுக்கு முன்னால் மண்டியிட்டான்.
“வில் யூ மேரி மீ பேபி?”
அவனுடைய கேள்வியில் திகளின் முழிக்க,
“ஜோன்…”
“யெஸ் ஆர் நோ, பேபி?”
அவள் ஏதோ சொல்ல வாயெடுக்கும் நேரம், அதற்குள் போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
நிலா ருத்ராவை பார்க்க, ருத்ரா பத்ரனை பார்த்தான்.
பத்ரனோ காலபத்ரனாக மாறி எரிந்துகொண்டிருந்தான்!
பாவம் விமலுக்கு வாய் சும்மா இருக்க மாட்டேன் என்கிறது! அவனும் செய்வான்.
“என்ன இருந்தாலும் ஜோன் சூப்பர் பையன்! டாக்டர் ஃபேமிலி, திகளுக்கு சப்போர்ட்டாவும் இருப்பாங்க. நல்ல வசதியான குடும்பம்…” என சொல்லி முடிப்பதற்குள் பத்ரனின் கை விமலின் கழுத்தைப் பற்றியிருந்தது.
அண்ணனைப் போலவே தம்பியும் அவனுடைய கழுத்தைப் பிடித்து தூக்கிவிட, “ஐயோ! கொலை, கொலை!” என்று விமல் கத்த ஆரம்பித்தான்.
“பத்ரா! அவனை விடு!” என ருத்ராவின் குரல் அழுத்தமாக வந்தது.
அண்ணனுடைய குரலைக் கேட்டதும் பத்ரன் விமலை விட்டுவிட்டான். ஆனால் அவன் கோபம் மட்டும் கொஞ்சமும் குறையவில்லை.
“நீ வேண்டாம்னு சொல்லியும், உன்னையே காதலிச்சு காத்திருக்கணும்னு அவளுக்கு அவசியம் இல்ல. திகளோட விருப்பம் என்னன்னு ஒன்னு இருக்கு அதை யோசிச்சு பாரு”
“எனக்கு யாரும் அட்வைஸ் பண்ண வேண்டாம்! உன் வாழ்க்கை நல்லபடியா அமைஞ்சிருக்கு சோ ஸ்டே அவே ஃப்ரம் மை லைஃப்!” என்று அண்ணனை முறைத்தபடி அழுத்தமாகச் சொல்லிவிட்டுச் சென்றான் பத்ரன்.
அவனுடைய கோபத்துக்குப் பின்னால் இருந்த வலியை ருத்ராவால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் என்ன செய்ய அவனாக இழுத்துவைத்த வினை தானே!
“எழுந்திரு அண்ணா! ஏன் தேவையில்லா பேச்சு பேசுறிங்க? இரண்டு எருமைகளும் மனுஷ ஜென்மமே கிடையாது!” என்று கணவனையும் அவன் தம்பியையும் திட்டியபடி விமல் எழும்பக் கைகொடுத்தாள்.
“நான் என்னம்மா பண்ணேன்? நான் சொன்னது உண்மைதானே?”
“நீ உண்மையைச் சொல்லாம இருந்தாலே பாதிப் பிரச்சனை வராது!”
என்று நிலா அதட்டியதும் விமல் வாயை மூடிக்கொண்டான்.
“நல்ல நேரம் போகுது! வாங்க!”
என்று அபிராமி சத்தமிட, அனைவரும் சன்னதியை நோக்கி நடந்தார்கள்.
கோவிலின் மணி ஒலிக்க, மந்திரங்கள் காற்றில் நிறைந்தன.
அந்தப் புனிதமான சூழலில் நிலாவின் மனதிற்குள் மீண்டும் படபடப்பு அதிகரித்தது.
அவளுடைய விரல்களைத் தன் விரல்களுக்குள் கோர்த்துக்கொண்டான் ருத்ரா.
“பயப்படாத மஃபின். நான் உன்னை நல்லா பார்த்துப்பேன்!” என்றவனை பார்த்து மெல்லச் சிரித்தாள்.
“நீ திட்டுனா கூட வாங்கிப்பேன் ஏகரா. இந்த நல்லா பார்த்துக்குறேன்னு சொல்றதுதான் பயமா இருக்கு!”
அவளுடைய பேச்சில் அவனுடைய முகத்தில் இருந்த குறும்புப் புன்னகை மறைந்து, ஆழமான காதல் வந்து அமர்ந்தது.
நிலா நெற்றியில் மென்மையாக முத்தமிட்டவன், அவளுடைய கைகளை இன்னும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டான்.
“என் காதல் இப்படித்தான் மஃபின்! நீ இல்லனா நான் என்ன ஆவேன்னு வார்த்தையால விவரிக்க முடியாது. உன்கூடவே வாழந்து, உன்கூடவே போய்டணும், அவ்வளவுதான் என் ஆசை!”
அவன் காதல் இதுதான் என தெளிவாக சொல்கிறான்.
இருவருக்கும் மாலைகள் கொடுக்கப்பட,
புன்னகையுடன் ஒருவருக்கொருவர் மாலையை அணிவித்துக்கொண்டார்கள்.
அந்த நொடி ருத்ராவின் மனதிற்குள் ஓடிய எண்ணத்தை கடவுளிடம் ஒப்பித்துக்கொண்டிருந்தான்.
எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் இவளை மட்டுமே காதலிக்க வேண்டும்!
இவளுடைய சிரிப்பு, அழுகை, கோபம் அனைத்தும் நானாக மட்டுமே இருக்க வேண்டும்!
இவளைச் சுற்றியே என் வாழ்க்கை சுழல வேண்டும்!
இந்தப் பிறவியில் மட்டுமல்ல, இனி வாழப்போகும் எல்லாப் பிறவிகளிலும் இவள் காதலை நானே பெறவேண்டும்!
என்று கடவுளையே மிரட்டிக்கொண்டு நின்றான் அந்த காதல் தீவிரவாதி!
கையிலாயத்தில் அமர்ந்திருந்த சிவனோ, ஓரமாக நின்றிருந்த மன்மதனை “இங்க வா” என்று கூப்பிட,
காமனோ திருதிருவென விழித்தபடி முன்னால் வந்தான்.
“என்னடா இவன் என்னையே மிரட்டுறான்? ஏழு வருஷம் மெண்டலா சுத்துறான்னு பாவம் பார்த்து வாழ்க்கை கொடுத்தா, ஏழு ஜென்மத்துக்கும் அந்த புள்ளையை மெண்டல் டார்ச்சர் நான் மட்டும்தான் பண்ணணும்னு டிமாண்ட் பண்றான். இவனுக்கு நீ சப்போர்ட் வேற!”
மன்மதனோ தலையைச் சொறிந்தான்.
“நான் என்ன பண்றது சார்? நான் காதல் அம்பு விடுறதுக்கு முன்னாடியே பலான காதல் பண்ணான் அதான் நம்பி சப்போர்ட் பண்ணேன். பார்த்துச் செஞ்சுவிடுங்க!”
சிவபெருமான் அவனை ஒரு பார்வை பார்க்க, மன்மதன் அமைதியாகப் பின்னால் நகர்ந்தான்.
அங்கே பூலோகத்திலோ தாலி ஏந்திய தட்டு ருத்ரா முன்பு நீட்டப்பட, அவளுடைய விரல்களை மெதுவாக விட்டுவிட்டு, தாலியை எடுத்தான் ஏகதாச ருத்ரா.
அவள் கண்களை பார்த்தபடியே நிலா கழுத்தில் தாலியைக் கட்டினான்.
நிலாவின் கண்கள் ஆனந்தத்தில் கலங்கிட, மனமோ ‘அம்மாச்சி எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு! நீ சந்தோசமா இருப்பனு நம்புறேன்” என்று நினைத்தது.
அவனைக் காதலிப்பது பற்றி தெளிவான சிந்தனை இப்போது வரை அவளுக்குக் கிடையாது. அவனுடைய காதல் அவளை நம்பச் சொல்கிறது. அவனுடைய நேசம் பிரமிப்பைத் தருகிறது. அவளுக்காக உருகியோடும் ருத்ராவின் காதல் அவளை அசைத்துப் பார்க்கிறது.
இதுபோதும் என்ற நம்பிக்கையில் துணிந்து அவனை கரம் பற்றினாள் ஆரலி என்ற நிலாஞ்சி.
இருவரையும் கண்ட பெரியவர்களின் கண்கள் ஆனந்தத்தில் கலங்கின.
வருடக்கணக்காக வேதனைகளையும் பிரிவுகளையும் அனுபவித்துச் சேர்ந்திருக்கிறார்கள். இனியாவது இருவரும் எந்தக் குறையுமின்றி நல்லபடியாக வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்தினார்கள்.
ருத்ராவும் நிலாவும் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கினார்கள்.
விமலும் பேபியும் தங்கையை அணைத்துக்கொள்ள, “பாஸ் தங்கச்சி பத்திரம்! நீங்க பண்ற வெறித்தனமான காதலை குறைச்சுக்கோங்க” என்றான் விமல்.
“ஆமாம் மாமா! நிலா பாவம். ரொம்ப டார்ச்சர் பண்ணா எங்க வீட்டுக்குக் கூட்டிட்டு போயிடுவோம்!” என்று பேபி மிரட்டினாள்.
அவ்வளவுதான்! தன் மஃபினை அணைத்துக்கொண்டு நின்ற இருவரின் சட்டைக்காலரையும் பிடித்து தூக்கிய ருத்ரா,
“வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன்னு ஆரலி பக்கம் வந்தீங்க, ஆள் அடையாளம் தெரியாம ஆக்கிடுவேன்!” என்று வேட்டியை மடித்துக்கட்டி அய்யனார் போல மிரட்டினான்.
“ஏகரா! அவங்க காமெடி பண்றாங்க ஏன் இவ்வளவு கோபம்? அவங்க பாசமா கூப்பிட்டா இரண்டு நாள் நீயும் நானும் போயிட்டு வரலாம். கோபப்படக்கூடாது!” என்று அவனுடைய கன்னத்தை பிடித்து
சமாதானப்படுத்தினாள்.
“வீட்டுக்குப் போகலாமா? எனக்கு டயர்டா இருக்கு!” என்று அவனை பார்க்க, விமல், பேபி இருவரையும் விட்டுவிட்டு அவளை தூக்கிக்கொண்டு கிளம்பினான்.
மாலை நேரமே அனைவரும் சென்னை திரும்பிவிட்டனர். நாளை சரபன் வழக்கு விசாரணை இருப்பதால் திரும்ப வேண்டிய கட்டாயம்.
நடராஜன் வீட்டு வாசலில் இருவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றார்கள்.
கீழே ஆண்களோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான் ருத்ரா.
நிலாவை அறைக்கு அழைத்துச் சென்ற சாம்பவி, மருமகளிடம் இரவு சடங்கு பற்றிப் பேச ஆரம்பித்தார்.
நிலாவுக்கோ ஒருபுறம் சங்கடம், மறுபுறம் சிரிப்பு.
அவனோடு வாழ ஆரம்பித்து இரண்டு மாதங்கள் கடந்திருக்குமே! இந்த உண்மை பெரியவர்களுக்குத் தெரிந்தால் என்ன நினைப்பார்கள் என்ற பயம் வேறு!
“நிலாமா…”
“சொல்லுங்க அத்தை!”
“உன் பீரியட் டேட் சொல்லுடா. கிட்ட வந்திருந்தா நாம முதல் ராத்திரியை கொஞ்சம் லேட்டா வச்சுக்கலாம். நீ இப்போ ரெஸ்ட் எடு!” என்ற சாம்பவியின் வார்த்தையில் திடுக்கிட்டாள் நிலாஞ்சி.
“அது வந்து அத்தை…”
“என்னடி முழிக்கிற? டேட் சொல்லு!”
என்று பார்வதியும் கேட்க, அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
“ஏன் அண்ணி அதட்டுறிங்க? வயசு பொண்ணு சங்கடப்படுறா நீங்க கொஞ்சம் வெளிய இருங்க. நான் கேட்டுக்கிறேன்!” என்று பார்வதியை வெளியே அனுப்பினார்.
அவர் வெளியே சென்றதும், சாம்பவியை அணைத்துக்கொண்ட நிலாவின் கண்கள் கலங்கின.
“அத்தை…”
“என்னடா பொண்ணே?”
“எனக்கு… பீரியட் போன மாசம் வரல!”
என்றவள் அழுகையோடு முகத்தை மறைத்துக்கொண்டாள்.
“இதுக்கு ஏன் அழற நிலா? சில நேரம் உடம்புல சூடு அதிகமானாலும் தள்ளிப்போகும். அத்தை கை வைத்தியம் பண்ணா சரியாகிடும். அதுவரைக்கும் எந்தச் சடங்கும் வேண்டாம். நல்லா ஓய்வெடு வெளிய எங்கயும் அலையாத!”
என்று வெள்ளந்தியாகச் சொன்னவரைப் பார்த்து நிலாவுக்கு இன்னும் அழுகைதான் வந்தது.
“ராகவி! இங்க வா!” என்று வேலை செய்யும் பெண்மணியை அழைத்த சாம்பவி,
“இவ இங்க வேலை செய்றா நிலா. உனக்கு என்ன வேணுமோ இவகிட்ட கேளு. ஏதாவது பொருள் வேணும்னா உடனே வாங்கிட்டு வருவா சரியா? நீ நல்லா ஓய்வெடு!” என்று அவளுடைய கன்னத்தைப் பிடித்து கொஞ்சிவிட்டு வெளியேறினார்.
அவர் சென்றதும் நிலா தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள்.
குழந்தையைப் பற்றிய நினைவு அவளுக்கு போன நிமிடம் வரை வரவில்லை, பாதுகாப்பாக சேர்ந்ததாக நினைவும் இல்லை… அப்புறம் எப்படி அஜாக்கிரதையாக இருந்தேன் என தன்னையே நொந்துகொண்டாள்.
‘நல்லவேளை இவன் பிடிவாதத்தில் உடனே கல்யாணம் செய்தோம்! இல்லையென்றால் எவ்வளவு பெரிய அசிங்கமாகப் போயிருக்கும்!’ இருக்கும் யோசனையில் அது ஒன்று தான் நிம்மதியாக இருந்தது.
‘இவனை… ஏகரா ராஸ்கல்! காதலிக்க டைம் கேட்டா கல்யாணம் பண்ணான். சரின்னு ஒத்துக்கிட்டேன். இப்போ பேபி வந்துடுச்சா? இவனை எப்போதுதான் காதலிக்கிறது? எனக்குக் காதல் பண்ண கொடுப்பனையே இல்ல போல!’
என்று தன்போக்கில் புலம்பிக்கொண்டிருந்தவளை மனசாட்சி இடைமறித்தது.
‘நிலா அறிவுகெட்டவளே! முதல்ல இது பேபியான்னு செக் பண்ணி கன்போர்ம் பண்ணு’ அதில் சற்றுத் தெளிந்தவள், சரி வீட்டிலேயே டெஸ்ட் பண்ணலாம் என்று முடிவெடுத்தாள்.
‘இன்னைக்கு நைட் வரட்டும். அவனுக்கு இருக்கு!’ என்று பற்களைக் கடித்தபடி அறைக்குள் நடந்துகொண்டிருந்தாள் நிலா.
மறுபுறம் பத்ரன் தன் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தான்.
‘யாரவன்? என் பொண்டாட்டிக்கு ப்ரபோஸ் பண்றான்!’
அவன் ஆட்கள் மூலமாகத் திகளின் போன் நம்பரை எப்போதோ கண்டுபிடித்துவிட்டான். வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக அவளுக்கு கால் செய்ய, திகள் போனை எடுக்கவில்லை.
அதில் அவனுடைய கோபம் இன்னும் அதிகரித்தது. ‘அவ்வளவு தூரம் ஆகிப்போச்சா? நான் கால் பண்ணா எடுக்கமாட்டாளா?’ என்று பற்களைக் கடித்தான்.
அதுமட்டுமா ‘யாரைக் கேட்டு ஹேர்கட் பண்ணா?’ என்று வெந்து போயிருந்தான்.
வீடியோ காலில் பார்த்தபோது அவளுடைய நீளமான கூந்தலை வெட்டி முதுகுவரை வைத்திருந்தாள்.
பொண்ணையே வேண்டாம்னு சொன்னதுக்கு அப்புறம் இவனுக்கு எதுக்கு வலிக்குது?
திகள் போனை எடுக்கவில்லை என்றதும் அவனுக்கு மனதே அடங்கவில்லை.
‘அமெரிக்கா போய் அவளை கடிச்சு வைக்குறேன்” என்று பற்களைக் கடித்து டென்ஷனாக இருந்தான்.
திகள் வேண்டுமென்றே போனை எடுக்காமல் இருக்கவில்லை.
நேற்று இரவு தாமதமாக வீட்டுக்கு போனதால் காலையில் கிளாஸூக்கு போக நேரமாகிவிட்டது. அந்த அவசரத்தில் போனை வீட்டிலேயே வைத்துவிட்டு போயிருத்தாள்.
இது தெரியாமல் திகள் கோவத்தில் போனை எடுக்க வில்லை என அமெரிக்கா கிளம்புவதற்குத் தயாராகிக்கொண்டிருந்தான் பத்ரன்.
