“நாங்க நாளைக்கு பெங்களூரு கிளம்பலாம்னு இருந்தோம். இந்த சந்தோஷமான செய்தி கேட்டு எப்படி போக முடியும். இன்னும் கொஞ்ச நாள் இங்கேயே இருந்துட்டுப் போகலாம். அவளுக்குத் தேவையானதை கூடவே இருந்து பார்த்துக்கணும்” என்று பார்வதி மகளைப் பார்த்தபடி கணவரிடம் சொல்ல,
“அதுதான் சரி!” என்று சோமசுந்தரம் தலையசைத்தார்.
அவர்கள் அன்பான வார்த்தைகளைக் கேட்ட நிலாவின் கண்கள் கலங்கின.
தன் தாயை நெருங்கி அணைத்துக்கொண்டவள்,
“தேங்க்ஸ் மா… நீங்க இங்கே இருக்கிறது எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு!” என்றாள்.
“அதுக்கென்ன, உனக்கு நாங்க இல்லாம வேற யாரு இருக்கா?” என்று பார்வதி அவளுடைய நெற்றியில் முத்தமிட்டார்.
அந்த பாசமான தருணத்தைப் பார்த்த அபிராமி மீண்டும் இடையில் புகுந்தார்.
“சரி, சரி! இப்போ எல்லாரும் உணர்ச்சிவசப்பட்டு நின்னது போதும். முதல்ல என் பேத்திக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்க. இனிமேல் அவள் தனியா இல்ல, அவளுக்குள்ள இன்னொரு உயிர் வளருது. அவளை நல்லா பார்த்துக்கணும்!”
அவர் சொன்னதை ஆமோதிப்பது போல அனைவரும் சிரித்தனர். ஆனால் அவர்கள் சிரிப்பில் மட்டும் கலந்துகொள்ள முடியாமல் சற்று ஒதுங்கி நின்ற விமலும் பேபியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
அவர்களுடைய முகத்தில் இருந்த தயக்கத்தை உணர்ந்த நிலா
“சாரி அண்ணா” என்றாள் குற்றவுணர்வுடன்,
அவள் முகத்தில் தெரிந்த வருத்தமும், கலக்கமும் இருவருடைய கோபத்தையும் குறைத்தது.
“ம்ம்ம்… நடந்ததை மாத்த முடியாது. அவரு உன்னை சுத்திச் சுத்தி வந்தப்பவே நாங்க கொஞ்சம் உஷாரா இருந்திருக்கணும். நீ அவரை பார்த்தாலே பயந்து ஓடுறதை பார்த்து, உனக்கு அவரை பிடிக்காதுன்னு நினைச்சுட்டோம். சரி விடு தாய்மாமா ஆகப்போறதுனால உன்னை மன்னிக்கிறேன்!” என்று விமல் சொன்னதும் நிலாவின் முகத்தில் அழுகையோடு சிரிப்பு வந்தது.
“போதும்! என் மஃபினை இதுக்கு மேல கேள்வி கேட்காதிங்க! சாப்ட்டு கோர்ட் கிளம்பணும். டைம் ஆச்சு போகலாம்!” என்ற ருத்ரா நிலாவோடு சாப்பிட அமர்ந்தான்.
பேச்சும், சிரிப்புமாக ருத்ரா வாரிசு வருகையை எண்ணி பூரித்துப்போயிருந்தனர் அவன் குடும்பத்தினர்.
அந்த வீட்டில் நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு புதிய மகிழ்ச்சி குடிகொண்டிருந்தது.
கோர்ட் வாசலில் கார் வந்து நின்றதும், அதிலிருந்து இறங்கிய நிலாஞ்சியின் முகம் இறுக்கமாக மாறியது. இத்தனை வருடங்களாக மனதுக்குள் அடக்கி வைத்திருந்த வலியும், கோபமும், பயமும் அந்த ஒரு நொடி அவளது முகத்தில் பிரதிபலித்தன.
தன்னை அறியாமலேயே அவளது விரல்கள் ருத்ராவின் கரத்தை இறுக்கமாகப் பற்றிக்கொண்டன.
அவளது மனநிலையைப் புரிந்துகொண்டவன், நிலா கையைத் தன் இரு கைகளுக்குள்ளும் வைத்துக்கொண்டு மெதுவாக அழுத்தினான்.
“ஆரலி…”
“ம்…”
“என்னாச்சு?”
“ஒண்ணுமில்லை ஏகரா! நான் நல்லா இருக்கேன், போகலாம்” என்று தன்னை திடப்படுத்திக்கொண்டு சொன்னவள், அவனுடன் உள்ளே நடக்கத் தொடங்கினாள். அவளது விரல்கள் மட்டும் அவனது கரத்தை விடுவதாக இல்லை.
அதேநேரம், நீதிமன்ற வளாகத்திற்குள் போலீஸாருடன் நின்றிருந்த சரபனைக் கண்டதும் அவர்களது கால்கள் ஒரு நொடி அப்படியே நின்றுவிட்டன.
அத்தனை பேரின் முகத்திலும் ஒரே நேரத்தில் வெளிப்பட்ட உணர்வு அதிர்ச்சி!
சரபன் உள்ளே இருந்தது சில நாட்கள்தான். ஆனால், அதற்குள் அவனது தோற்றம் முற்றிலும் மாறியிருந்தது. முகமெல்லாம் சோர்ந்து, கண்களுக்குக் கீழே கருவளையங்கள் படர்ந்து, கன்னங்கள் ஒட்டிப்போய், பார்க்கவே நோய்வாய்ப்பட்டவன் போல நின்றிருந்தான்.
எப்போதும் குறும்போடும், கருணை வழியும் கண்களை கொண்டவன் போல மற்றவர்களை ஏமாற்ற போட்டிருக்கும் அவன் பார்வை மறைந்து, இப்போது உறக்கம் தொலைந்த இரவுகளின் சோர்வும், உள்ளுக்குள் எரிந்துகொண்டிருந்த வன்மமும் கலந்து தெரிந்தன.
அவனைப் பார்த்ததும் நிலாவின் கால்கள் தன்னிச்சையாகத் தயங்கின.
“ஏகரா…” அவளது குரலில் இருந்த நடுக்கம் உணர்ந்து அடுத்த நொடியே அவளைத் தன் தோளோடு அணைத்துக்கொண்டான் ருத்ரா.
“அவனுக்கான தண்டனை சட்டப்படி கிடைக்குற வரை நான் பொறுமையா இருந்துருக்க மாட்டேன்னு உனக்குத் தெரியும்! அமைதியா இதைக் கடந்து வா. இனிமேல் அவனால உன்னை எதுவும் பண்ண முடியாது”
ருத்ரா வார்த்தைகள் நிலாவின் மனதுக்குள் சிறிது சிறிதாகத் தைரியத்தை நிரப்பின.
அவள் மெல்லத் தலையசைக்க, அவளது கையைப் பற்றியபடியே நீதிமன்றத்திற்குள் நுழைந்தான் ருத்ரா.
அங்கே அவர்களுக்காகக் காத்திருந்தது வெறும் வழக்கு விசாரணை மட்டுமல்ல, பல உயிர்களின் நிம்மதியை சிதைத்த ஒருவனின் குற்றங்களுக்கான இறுதித் தீர்ப்பும்கூட.
ஆரலி பாட்டியைக் கொன்றது, ஆரலியைக் கொல்ல நினைத்தது, திட்டமிட்டு ருத்ராவுக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்தது, அவனைப் பலமுறை கொலை செய்ய முயற்சித்தது, சொந்த அப்பாவைப் படுத்த படுக்கையாக்கிச் சித்ரவதை செய்தது என சரபன் செய்த குற்றங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போனது.
ஒவ்வொரு குற்றத்திற்கும் பின்னால் இருந்த ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட், சாட்சிகளின் வாக்குமூலங்கள் வாசிக்கப்பட்டன. சம்பவங்களுடன் தொடர்புடைய பைல்கள், விசாரணையில் கிடைத்த தகவல்கள் என ஒன்றன்பின் ஒன்றாக முன்வைக்கப்பட்டன.
நிலா அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தாள். அவளது மனக்கண்ணில் அம்மாச்சியின் முகம் வந்து போனது.
தன்னை அன்போடு அணைத்துக்கொண்டு தன் தலையை வருடியபடி, ஒவ்வொரு முறையும் ஆறுதல் சொன்னவர்… தன்னை மிகவும் நேசித்த உயிர் என அனைத்தும் நினைவுக்கு வந்தது.
கண்களில் நீர் கோர்க்க குனிந்து அமர்ந்திருந்தவளின், விரல்களை மெதுவாகப் பற்றிக்கொண்டான் ருத்ரா.
அந்த ஒரு தொடுதலே அவளுக்குச் சொல்லியது… ‘நான் உன்னோடு எப்போதும் இருக்கிறேன். நீ தனியாக இல்லை’
மறுபுறம், சரபன் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்காமல் அமைதியாக அமர்ந்திருந்தான். அவன் திருந்திவிட்டான் என்று நினைத்தால் அதுதான் தவறு.
அவன் மன்னிப்பும் கேட்கவில்லை,
தான் செய்த தவறுகளுக்காக வருந்துவதாக ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.
சரபன் முகத்தில் குற்ற உணர்வை விடவும், தன்னை சிக்க வைத்த ருத்ரா, ஆரலி மீது வெறுப்பே அதிகமாக தெரிந்தது.
அவன் அமைதியாக இருப்பதற்கு காரணம் மனம் மாறியில்லை, அவனது வாயைத் திறக்க முடியாதபடி எதிரே நிறுத்தியிருந்தான் ஏகதச ருத்ரா.
இத்தனை நாட்களாக மற்றவர்களின் வாழ்க்கையைத் தன் விருப்பப்படி ஆட்டிப்படைக்கலாம் என்று நினைத்தவன், இன்று தன்னுடைய வாழ்க்கை குறித்த முடிவை மற்றவர்கள் எடுப்பதை வேறுவழியின்றிப் பார்த்துக்கொண்டிருந்தான்.
இறுதியாக, நீதிபதி தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார்.
சரபன் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள், அவற்றின் ஆதாரங்கள், சாட்சியங்களின் வாக்குமூலங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அவனுக்கு இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
நிலா தன் கண்களை இறுக மூடிக்கொண்டு ‘அம்மாச்சி உங்களை கொன்னவனுக்கு தண்டனை கிடைச்சிடுச்சு!’ என்று நினைத்த நொடி கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் விழுந்தது. அவளைத் தன்னோடு அணைத்துக்கொண்டான் ருத்ரா.
இவர்கள் வெளியே வரும்போது சரபனை போலீஸார் கூட்டி சென்றனர்.
“ஒரு நிமிஷம்!” என்ற குரலில் அவனை நிறுத்தினாள் நிலா.
ருத்ரா அவளது முகத்தை பார்த்த நொடியே அவள் என்ன செய்யப்போகிறாள் என புரிந்தது.
சரபன் கண்களில் பழிவெறி மிச்சம் இருந்ததை இருவராலும் நன்றாக உணரமுடிந்தது.
ருத்ராவின் கையை அழுத்தமாகப் பிடித்திருந்த நிலா, “நீ இத்தனை வருஷமா யாரோட வாழ்க்கை நல்லா இருக்கக்கூடாதுனு பிளான் பண்ணி சீரழிக்க நினைச்சியோ அவரு நீ நினைச்சதை விட சந்தோஷமா வாழுறாரு! இன்னும் சந்தோஷமா வாழுவாரு…”
“உனக்கு ஒரு கெட்ட விஷயம் சொல்லவா? ஏகரா அப்பாவாகப்போறாரு!”
அவள் வார்த்தைகள் சரபனின் முகத்தில் எஞ்சியிருந்த அமைதியையும் குலைத்தது.
அதிர்ச்சியோடு இருவரையும் பார்த்தான். அவள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும் பெருமையும் அவனுக்குள் இன்னும் அதிகமான வெறுப்பை ஏற்படுத்தியது.
“நாங்க இரண்டு பேரும் சந்தோஷமா வாழப்போறோம். இன்னும் நிறைய குழந்தை அவருக்குப் பெத்து தர நான் இருக்கேன்” என்றவளை பார்த்து மெல்லப் புன்னகைத்தான் ருத்ரா.
“நீ எங்களை வெறுக்கலாம். எங்களைப் பழிவாங்கணும்னு நினைக்கலாம். ஆனா அதனால எங்களோட வாழ்க்கையில எந்த மாற்றமும் வரப்போறதில்லை. நாங்க சந்தோஷமா எங்க குழந்தைங்களோட வாழப்போறோம். உன்னால எங்களுக்கு இனிமேல் எந்தப் பாதிப்பும் கிடையாது”
என்று கடைசியாக அவனைப் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டாள்.
“எப்படியும் எங்க சந்தோஷத்தைப் பார்க்க நீ உயிரோட இருக்கமாட்ட, அதான் இப்பவே உன் கிட்ட சொல்றேன் கேட்டுட்டு போய் வெந்து சாகு!”
என்று சொன்னவள் கணவனைப் பார்த்து, “ஏகரா, போகலாமா?” என்று கேட்டாள்.
“போகலாமே, ஆரலி!” என அவளது கையைப் பற்றிக்கொண்டவன், “நான் வரேன் மச்சான், சந்தோஷமா செத்துப்போ டாட்டா!” என்று சிரிப்போடு அவளை அழைத்துக்கொண்டு நடந்தான் ருத்ரா.
சரபனால் அவர்களை முறைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அவனது கண்களில் எரிந்துகொண்டிருந்த வன்மம் மட்டும் இன்னும் அணையவில்லை.
சாதாரணமாக முடிந்திருக்க வேண்டிய பொறாமையை, தன்னுடைய வக்கிரமான எண்ணங்களால் வன்மமாக மாற்றிக்கொண்டவன் இன்று அனைத்தையும் இழந்து நின்றான்.
அவனது தந்தையும் அதற்கொரு காரணம்.
தன் மகனை மற்ற பிள்ளையோடு ஒப்பிட்டுப் பேசி, அவர்களது திறமைகளைச் சுட்டிக்காட்டி, சரபனுக்குள் தாழ்வு மனப்பான்மையை விதைத்தவர் அவர்தான். ஒரு குழந்தையின் திறமையை வளர்த்தெடுக்க வேண்டிய இடத்தில், மற்றவர்களைவிடக் குறைவாக இருப்பதாக உணர வைத்தார். அந்த ஒப்பீடுகள் சரபனின் மனதில் பொறாமையாகத் தொடங்கி, பின்னர் வன்மமாக வளர்ந்தன.
திறமை இல்லையென்றால் வளர்த்துக்கொள்ளலாம். தோல்வியடைந்தால் மீண்டும் முயற்சி செய்யலாம். மற்றவர்கள் வெற்றிபெறும்போது அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.
ஆனால், ஒருவன் உயர்ந்துவிட்டான் என்பதற்காக அவனை வீழ்த்த நினைப்பது என்ன நியாயம்?
இறுதியில், மற்றவர்களை அழிக்க நினைத்தவன் தன்னுடைய வாழ்க்கையையே அழித்துக்கொண்டான்.
அனைவரும் நிம்மதியாக நிலாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்ல ஒரே காமெடியாக இருந்தது.
அபிராமி ஒருபுறம், பார்வதி மறுபுறம் என ஆளாளுக்கு அவளிடம் அட்வைஸ் பண்ணிக்கொண்டிருந்தனர்.
வதி மருத்துவமனையில் பிரபல மகப்பேறு மருத்துவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருந்ததால், அனைவரும் அங்கே சென்று காத்திருந்தனர்.
நிலா மட்டும் ருத்ராவின் தோளில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தாள். அவனது விரல்கள் அவளது விரல்களுடன் பின்னிப் பிணைந்திருந்தன.
“பயமா இருக்கா, ஆரலி?”
“கொஞ்சம்…”
“எதுக்கு?”
“எல்லாம் நல்லா இருக்கணும்ல ஏகரா! நம்ம குழந்தை நல்லா இருக்கணும். அதுதான் எனக்குக் கவலையா இருக்கு.”
நிலா கவலையை புரிந்துகொண்டவன், அவளது கையில் மென்மையாக முத்தமிட்டான்.
“எல்லாம் நல்லா இருக்கும். நம்ம குழந்தையைப் பத்திரமா பார்த்துக்கலாம். நீ மட்டும் தேவையில்லாம டென்ஷன் ஆகாதே.”
“ஹ்ம்ம்…”
அந்த நேரத்தில்,
“நிலா பேஷண்ட் உள்ள வாங்க!” என்று நர்ஸ் அழைத்தாள். உடனே குடும்பமே எழுந்து நிற்க,
“நீங்க எங்க வரிங்க? நானும் ஆரலியும் மட்டும் போறோம். நீங்க எல்லாரும் இங்கேயே இருங்க!” என்று சொல்லிவிட்டு, அவர்கள் பதில் சொல்வதற்குள் நிலாவை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டான்.
“இந்தப் பையனைப் பாரேன்! நான் உள்ள வரக்கூடாதா? நான் பாட்டிதானே!”
என்று அபிராமி முகத்தைத் தூக்கிக்கொள்ள, மற்றவர்கள் சிரித்தனர்.
மருத்துவர் அவளைப் பரிசோதித்துவிட்டு, சில வழக்கமான கேள்விகளைக் கேட்டார். பின்னர் ஸ்கேன் அறைக்கு அழைத்துச் சென்றார்.
ஸ்கேன் பரிசோதனை முடிந்து மருத்துவர் திரும்பி வந்ததும், ருத்ரா முதலில் கேட்ட கேள்வியே,
“டாக்டர், ஆரலி நல்லா இருக்காளா?”
அவனுடைய முகத்தில் தெரிந்த பதற்றத்தைப் பார்த்த மருத்துவர் புன்னகைத்தார்.
“உங்க மிஸஸ் நல்லா இருக்காங்க! குழந்தையும் ஆரோக்கியமா இருக்கு,
இனி செக்கப்க்கு சரியா வரணும், நல்ல உணவு, போதுமான ஓய்வு போதும். இவங்களை ரொம்ப டென்ஷன் பண்ணாம பார்த்துக்கோங்க” என்ற டாக்டர் வார்த்தைகளைக் கேட்டதும் நிலா நிம்மதியாக மூச்சை வெளியேற்றினாள்.
ருத்ராவின் முகத்திலும் அழகான புன்னகை மலர்ந்தது.
“தேங்க்யூ, டாக்டர்!”
“நன்றி எல்லாம் வேண்டாம். அம்மாவும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கிறதுதான் முக்கியம். ஏதாவது சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேளுங்கள்”
ருத்ரா குழந்தைக்கு கேட்டானோ இல்லையோ! நிலாவை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என நிறைய கேட்டான்.
எந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும், எவ்வளவு நேரம் ஓய்வெடுக்க வேண்டும், அடுத்த பரிசோதனை எப்போது என அனைத்தையும் தெளிவாகத் தெரிந்துகொண்டான்.
இருவரும் சிரித்தபடியே அறையை விட்டு வெளியே வர, அதுவரை காத்திருந்த குடும்பத்தினர் அனைவரும் ஒரே நேரத்தில் அவர்களைச் சூழ்ந்துகொண்டார்கள்.
“என்ன சொன்னாங்க?”
“குழந்தை எப்படி இருக்கு?”
“ஸ்கேன் நல்லா வந்துச்சா?”
“நிலா, உடம்புக்கு ஏதாவது பிரச்சினை இருக்கா?”
கேள்விகள் மழையாகப் பொழிய, ருத்ரா இரண்டு கைகளையும் உயர்த்தி, “ஒரு நிமிஷம்! எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க!” என்றான்.
“பேபி நல்லா இருக்கு, ஆரலியும் நல்லா இருக்கா. டாக்டர் ரெஸ்ட் எடுக்கச் சொல்லியிருக்காங்க அவ்வளவுதான். இனிமேல் அவளை யாரும் டென்ஷன் பண்ணக்கூடாது. நான் அவளை நல்லா பார்த்துக்குவேன்”
“நீ பார்த்துக்கிட்ட வரைக்கும் போதும்! இனிமேல் நாங்க எங்க மருமகளைப் பார்த்துக்குறோம் தள்ளுடா!” என்று அபிராமி பேரனை இடித்துத் தள்ளி நிலாவை அழைத்துக்கொண்டார்.
சந்தோஷமாக அனைவரும் வீட்டுக்குக் கிளம்பினார்கள். காரில் ஏறியதிலிருந்தே தன் தோளில் சாய்ந்து தூங்கியபடி வந்த நிலாவின் மீதுதான் அவனது மொத்த கவனமும் இருந்தது.
அவளுக்காக ருத்ரா இதுவரை எதுவும் செய்ததில்லை. ஆனால் ஆரலியாக இருந்தபோதும் சரி, நிலாஞ்சியாக மாறி வந்தபோதும் சரி, அவனுக்காகப் பல கஷ்டங்களைத் தாங்கியவள் அவள்.
தன்னுடைய கோபம், பிடிவாதம், புரியாத மனநிலை என எத்தனையோ விஷயங்களைச் சகித்துக்கொண்டு அவனுக்காகவே நிற்பவள்.
காதலிக்கத் தெரியவில்லை என்று சொல்லிக்கொள்ளும் அவளுக்கா காதலிக்கத் தெரியவில்லை?
காதலின் ஆரம்பமே தாய்மை அல்லவா!
அவனிடம் மட்டுமே அவள் காதல் விரிந்துகிடக்கிறது. அதை நன்றாகத் தெரிந்திருந்தான் ருத்ரா.
இனி ஒரு நொடிக்கூட அவளை வருந்தவிடக்கூடாது எனச் சபதம் ஏற்றுக்கொண்டான். ஆரலி மட்டும் அல்ல, இப்போது அவனது உலகத்திற்குள் இன்னொரு சிறிய உயிரும் வரப்போகிறது!
இருவரும் அவன் பொறுப்பு! அந்த எண்ணமே அவனுக்குள் ஒரு புதுவிதமான உற்சாகத்தை ஏற்படுத்தியது. தூங்கும் அவளை வழக்கம் போலத் தூக்கி மடியில் வைத்துக்கொள்ள, “ஏகரா…” என்று முணங்கியபடி அவன் கழுத்துவளைவில் சுருண்டுகொண்டாள் பெண்ணவள்.
அமெரிக்கா போன மகாராஜா என்ன ஆனான்னு போய் பார்ப்போம் வாங்க!
இரவு கிளம்பி அடுத்தநாள் இரவுதான் பாஸ்டன் போய் இறங்கினான் பத்ரன்.
இடையில் நூறு கால் செய்திருப்பான் அவளுக்கு, ம்கூம்… அவள்தான் மயிராச்சே என அவனை டீலில் விட்டுவிட்டாளே!
போன் பண்ணி, “எனக்குக் கல்யாணம் வந்து சேரு”னு சொல்லி நோகடிப்பான்!
தேவையா எனக்கு? என்று தனக்குள்ளேயே முணுமுணுத்துக்கொண்டான்.
இப்போது தான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறாள் திகள்விழி.
கடந்த மூன்று வருடங்களாக அவள் இருந்த இடம்தான். படித்த கல்லூரிதான். அவளுக்குப் பழக்கமான சூழல்தான். ஆனால் இடைப்பட்ட நாட்களில் அவளுடைய வாழ்க்கையில் காதலின் சுவையை ஊட்டியவன், திடீரென வேண்டாம் என்று விலக்கி வைக்க, எத்தனை துடித்திருப்பாள்?
அவள் வீட்டில் வருத்தப்பட்டால், குடும்பமே அவளுக்காக அழும். அதனால் வந்த அழுகையைக்கூட அடக்கிக்கொண்டு கிளம்பி வந்து, இங்கு தனிமை கிடைத்ததும் இரண்டு நாட்கள் அழுது கரைந்தாள்.
அவன் நினைவு வரும் போதெல்லாம் தன்னையே வெறுத்தாள் பெண்ணவள்.
ஏற்கனவே இங்கு வந்தால் மார்டன் உடைகள்தான் அணிவாள். இங்கு வந்ததும் சேலை, தாவணியைத் தொட்டுக்கூட பார்க்கவில்லை.
ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் அவளைத் தொல்லை செய்துகொண்டிருந்தது.
அவனுக்குப் பிடித்த தன் முடி… அது கூட தேவையில்லை என பாதியாக்கிவிட்டு தான் ஓய்ந்தாள்.
முடிந்த அளவு பத்ரன் நினைவிலிருந்து தப்பித்து தன்னைக் காத்துக்கொள்ளவே பெண்ணவள் மனம் விரும்பியது.
தன்னைச் சந்தோஷமாக வைத்துக்கொள்ள அடிக்கடி நண்பர்களோடு வெளியே சென்று வருவாள்.
எவ்வளவு முட்டி மோதினாலும் இரவுகளில் அவன் நினைவுகள் சித்ரவதை செய்வதைத் தடுக்க முடியாமல் தூக்கத்தைத் தொலைத்து கிடப்பாள்.
இதுநாள் வரை ஒரு போன்கால்கூட செய்யாதவன், நேற்றிலிருந்து தொடர்ந்து போன் செய்வது மிகவும் யோசனையாக இருந்தது.
எதற்காக இப்போது போன் செய்கிறான்?
மீண்டும் ஏதாவது சொல்லி மனதை நோகடிக்கப் போகிறானா? எனப் பல கேள்விகள் அவளுக்குள் இருந்தாலும்,
அவனைப் பற்றிய சிந்தனையைத் தூர எறிந்துவிட்டு தூங்குவதற்குப் படுக்கையைச் சரிசெய்துகொண்டிருந்தவள், காலிங் பெல் அடிக்கும் சத்தத்தில் வெளியே வந்தாள்.
‘இந்த நேரம் யாரு வந்திருக்கா? டெய்சி டிரிப் முடிஞ்சதா என்ன?’
தன்னோடு ரூம் ஷேர் செய்திருக்கும் தோழிதான் டிரிப் என பாய்பிரண்டோடு வெளியே போயிருந்தவள் திரும்பி வந்துவிட்டாளோ? என்ற சந்தேகத்தில் கதவைத் திறந்தாள் திகள்விழி.
ஆனால் கதவைத் திறந்த அடுத்த நொடியே விழி முகம் மாறியது.
சத்தியமாகப் பத்ரனை இங்கு எதிர்பார்க்கவில்லை என அவள் முகமே சொன்னது.
வாசலில் நின்றிருந்த பத்ரனைக் கண்டு அவள் அதிர்ந்ததில் ஒரு அர்த்தம் இருக்கிறது!
திகளை கண்டு பத்ரனும் அல்லவா அதிர்ந்து வாயைப் பிளந்தான்.
பின்னே, இவ்வளவு நாட்களாக இழுத்துமூடிய சேலை, தாவணியில் அவன் கண்ட விழியழகி இன்று ஸ்லீவ்லெஸ் பனியன், தொடைவரை உள்ள ஷார்ட்ஸ் போட்டு கதவைத் திறந்தால் அதிர்ச்சியாகுமா இல்லையா?
என்னடி டிரஸ் இது? என்று கோபமாக வரவேண்டிய டயலாக்,
“என்ன டிரஸ்டி இது?” என்று குழைவாக வந்தது!
இவ்வளவு நேரம் அதிர்ந்து நின்ற திகள்விழி, அவன் கண்களில் தெரிந்த போதையில் சுதாரித்துத் தெளிந்தாள்.
“ஹலோ! யாரு நீங்க? எதுக்கு என் வீட்டு கதவைத் தட்டி டிஸ்டர்ப் பண்றீங்க?”
என்று அதட்டினாள்.
“குட்டச்சி!” அந்த ஒரு வார்த்தை அவளுடைய கோபத்தை இன்னும் அதிகமாக்கியது.
“சாரி சார்! இங்க குட்டச்சினு யாரும் கிடையாது. நீங்க கிளம்புங்க!” என்று சொல்லிவிட்டு கதவை அடைக்கப்போனாள்.
அவள் கதவை அடைப்பதற்குள் பத்ரன் அவளைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தான்.
“ஹேய்! என்ன பண்றீங்க?” என்று அவள் அதிர்ந்து விலகினாள்.
“இப்போ வெளியே போறீங்களா இல்ல போலீஸ்க்கு கால் பண்ணவா?”
அவளுக்கு உள்ளே நடுக்கம் இருந்தாலும் அவனைக் கண்டால் எரிச்சல்தான் வந்தது.
இவன் இஷ்டப்பட்டால் வருவான், வேண்டாம்னா துரத்திவிடுவான். குட்டச்சினு எந்த முகத்தை வச்சு என்னைத் தேடி வந்தான் என்ற எரிச்சல் அப்பட்டமாக அவள் முகத்தில் தெரிந்தது.
பத்ரன் கண்களோ அவளைத்தான் வெறித்துப் பார்த்தது!
அவன் நினைத்ததுபோல் அவள்
ஆள் மட்டும் மாறவில்லை, தன்னிடமிருந்து அதிக தூரம் விலகிப்போய்விட்டதாகத் தோன்றியது.
“என்ன பார்க்குறீங்க? நீங்க தேடுற ஆள் இங்க கிடையாது, தயவு செஞ்சு கிளம்புங்க!” என்றவள், தன்னுடைய உடைக்கு மேலே அருகிலிருந்த ஒரு ரோப்பை எடுத்து அணிந்துகொண்டாள்.
