அதில் முக்கியமான வரம் அவளுடைய ருத்ரா!
ஆரலியின் காதலன் அல்லவா அவன்! அவன் அளவுக்குக் காதலைக் காட்ட முடியுமா என்ற சந்தேகம் வரும்படி காதல் செய்பவன்…
இன்னமும் ருத்ராவைக் காணும்போது அவளுக்குள் ஓரமாக ஒரு சிறு பயம் எட்டிப் பார்க்கத்தான் செய்யும். அவன் மீதான பிரமிப்பும், அவனை ரசிக்கும் பார்வையும் அவளால் மட்டும் எப்படி மாற்றிக்கொள்ள முடியும்?
“இன்னுமா நீ இந்தப் பார்வையை மாத்தாம சுத்துற?” என்று கம்பீரமாகச் சேரில் அமர்ந்து ஃபைலில் கையெழுத்திட்டுக்கொண்டிருந்த ருத்ராவின் கேள்வியில் சுயம் வந்தாள்.
“எப்படி பார்க்குறேன், ருத்ரா?” என்று எதிர்க்கேள்வி கேட்டாள் நிலா.
போர் அடிக்குது என அவனோடு ஒட்டிக்கொண்டு ஆபீஸ் வந்தவளைக் கண்டுகொள்ளாமல் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.
கன்னத்தில் கைவைத்துக்கொண்டு தன்னையே பரவசமாகப் பார்த்துக்கொண்டிருக்கும் மனைவியைக் கண்டு அவனால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.
பெருமூச்சோடு ஃபைலை மூடிய ருத்ரா, அவளை நிமிர்ந்து பார்த்தான்.
“நான் உன் புருஷன், ஆரலி! காதலாப் பார்த்தா போதும். பக்திப் பார்வை வேண்டாம்” என்றான்.
அடுத்த நொடியே வேகமாக எழுந்து அவன் மடியில் அமர்ந்துகொண்டாள் நிலா.
“சில நேரம் என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியல, ஏகரா! நீ எனக்கே எனக்குன்னு கிடைச்சிருக்கேன்னு இன்னும் என்னால நம்பவே முடியல. அதான் உன்னைப் பார்க்குறப்ப இந்தப் பார்வை பார்த்துடுறேன். நான் என்ன பண்றது?” என்று உதட்டைப் பிதுக்கிப் பாவமாகக் கேட்டாள்.
அவள் இடையில் கைகளைப் போட்டு இறுக்கமாக அணைத்துக்கொண்ட ருத்ரா, நிலாவின் கழுத்து வளைவில் முகம் புதைத்து அவளுக்கே உண்டான வாசனையை ஆழமாகச் சுவாசித்தான்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அவளுக்கு ஏகரா மீதான வியப்பு கலந்த மயக்கத்தைவிட, அவனுக்கு ஆரலி மீதான பிடிவாதம் கலந்த போதை ஆழமானது. அவளிடமிருந்து மீள வரமுடியாமல் ருத்ரா பல வருடங்களாக அவளுக்குள்ளேயே மூழ்கி மூர்ச்சையாகிறான்!
மீள விருப்பம் கொண்டால் நேசம் முடிந்துவிடும் அல்லவா!
வேண்டாம், இப்படியே பைத்தியமாக அவளுள் கரைந்து போக ஆசைகொண்டது அவன் மனம்.
ருத்ராவின் எண்ணம் புரியாமலேயே அவனை அணைத்த நிலா, மென்மையாக அவன் தலையைக் கோதினாள். அவன் மூச்சுக்காற்று அவள் மார்புப் பள்ளத்தைச் சூடாக நிரப்பியது.
அங்கேயே புதைந்து செத்துவிடும் வரம் கேட்கும் பக்தனாய், அவன்தான் அவளை யாசித்துக் கிடக்கிறான்.
“நீ பாட்டி கூடச் சேர்ந்து என்னை ரொம்பக் கோபப்படுத்துற, மஃபின்!” என்றவனின் தலையை நிமிர்த்தித் தன் முகம் பார்க்க வைத்தாள் நிலா.
“நம்ம ஃபேமிலி கூட இருக்கும்போது ரொம்ப சந்தோஷமா, நிம்மதியா இருக்கேன், ஏகரா! உன்கிட்டருந்து கிடைக்கிற காதல், பாதுகாப்பு மட்டும் போதும்னு பெருந்தன்மையா இருக்க முடியலையே!
அவங்க பாசமும் அன்பும் வேணும். இந்த ஒரு விஷயத்துல மட்டும் நான் சுயநலவாதியா இருந்துக்குறேன், கணவரே!” என்று சொன்னபடி அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்ட நிலாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
அவளுக்காக உலகத்தையே எதிர்க்கத் துணியும் அந்த முரடனின் மடியில், அவள் மட்டும் உரிமைக் காதலியாக இருந்தாள். அவனோ, தன் மனைவியின் புன்னகையை ரசித்தபடியே அவள் உச்சந்தலையில் அழுத்தமாக முத்தமிட்டான்.
நாட்கள் மெல்ல நகர ஆரம்பித்தன.
இந்தியா திரும்பியதிலிருந்து பத்ரனின் முகத்தில் தெரிந்த சோர்வையும், அமைதியையும் குடும்பத்தினர் அனைவரும் கவனிக்கவே செய்தனர். ஆனால், அவனை யாரும் தொந்தரவு செய்யவில்லை.
திகளை அவர்களே இவ்வளவு தூரம் மிஸ் செய்யும்போது, அவன் தேட மாட்டானா?
பத்ரன் வழக்கம்போல அலுவலகம் சென்று வர ஆரம்பித்திருந்தான். வேலைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாலும், திகளை மனம் அதிகம் தேடியது.
திகளின் நாட்களோ காலையிலிருந்து ஓட்டமும், படிப்புமாக பொழுது போவதே தெரியவில்லை. ஆனால் இரவு தனிமை படுக்கையில் பத்ரனின் நினைவுகள் அவளை அதிகமாக வாட்ட ஆரம்பித்தன.
அவளுக்கு இரவு என்றால் இங்கு பகல் அல்லவா! அவள் உறங்குவதற்காகப் படுக்கையில் விழும் நேரத்தில், பத்ரன் அலுவலகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருப்பான்.
அவசர அவசரமாக உடை மாற்றிக்கொண்டு, கையில் காபியுடன் அவளிடம் பேசுவான். சில நேரங்களில் அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே அவளுக்குத் தூக்கம் வந்துவிடும். மறுநாள் காலையில் எழுந்ததும் அவன் அனுப்பியிருந்த மெசேஜ் பார்த்து சிரிப்பாள்.
அதிக நேரம் பேசிக்கொள்ள முடியாவிட்டாலும், இருவரும் இந்தப் பிரிவை ஒருவருக்கொருவர் ஆறுதலாக மாற்றிக்கொண்டனர்.
நிலாவின் வயிற்றில் ருத்ராவின் வாரிசு நல்லபடியாக வளர்ந்துகொண்டிருந்தது.
செக்கப்காக மருத்துவமனைக்கு சென்றிருந்தனர். ஸ்கேன் முடிந்து மருத்துவர் அறைக்குள் அமர்ந்திருந்த நிலாஞ்சியின் முகத்தில் விரிந்த புன்னகை.
அவளுக்கு அருகில் அமர்ந்திருந்த ருத்ராவின் முகமோ அதிர்ச்சியில் இருக்க, அவன் அருகில் அமர்ந்திருந்த பாட்டியும், சாம்பவியும் துள்ளிக் குதிக்காத குறையாக டாக்டர் சொன்னதை கேட்டார்கள்.
“அம்மா… பாட்டி… இப்போ நீங்க வெளியே போகலைன்னா அவ்வளவுதான் சொல்லிட்டேன்!”
ருத்ராவின் குரல் உயர்ந்ததும் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டே அறையை விட்டு வெளியேறினர்.
“டாக்டர் ஆர் யூ சுயர்? இன்னொரு தடவை நல்லா செக் பண்ணிட்டுச் சொல்லுங்க ஏதாவது மிஸ்டேக் இருக்கப் போகுது” என்று சந்தேகமா கேட்டான்.
அவன் முகத்தில் தெரிந்த பதற்றத்தைப் பார்த்த மருத்துவர் சிரித்தார்.
“நான் உறுதியாகச் சொல்கிறேன் சார். உங்களுக்கு ட்வின் பேபீஸ் ஃபார்ம் ஆகியிருக்கு. ஃபர்ஸ்ட் ஸ்கேன்ல சரியாகத் தெரியாமல் இருந்திருக்கலாம். சில நேரங்களில் ஆரம்பத்துல ஒரு சாக் மட்டுமே தெளிவாகத் தெரியும். இப்போ ரெண்டு பேபீஸும் நல்லா தெரியுது. இதோ பாருங்க” என்று ஸ்கேன் படத்தைக் காட்டினார்.
‘ஒரு பிள்ளை வரப்போகுதுன்னு தெரிஞ்சதுல இருந்து இவளை பக்கத்துல கூட விட மாட்டேங்குறாங்க. இப்போ இரண்டு வேறயா? இனி இவளைத் தொட விடமாட்டாங்க போலயே!’ என்று மனதிற்குள் நொந்துகொண்டான்.
“ஏகரா… நமக்கு இரண்டு பாப்பா வரப்போகுது! உனக்குச் சந்தோஷம் இல்லையா?” என அவனுடைய முகத்தைப் பார்த்து கேட்டாள் நிலா.
“குழந்தைங்க வரப்போறது சந்தோஷம்தான் மஃபின் பட் உன்கூட அதிக நேரம் இருக்க முடியாம போறது எனக்கு பெரிய டென்ஷனா இருக்கு!”
ருத்ரா சொன்ன விதத்தில் இருந்த ஆதங்கத்தை உணர்ந்தவள், அவனுடைய கைகளை ஆதரவாகப் பற்றிக்கொண்டாள்.
பின்னர் மருத்துவரிடம் சில சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொண்டு அவனோடு வெளியே வந்தாள்.
“நிலா தங்கம்! எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இரண்டு குட்டிகளைச் சுமக்கப் போற இனிமேல் இன்னும் ஜாக்கிரதையாக இருக்கணும். மாடி ரூம் வேண்டாம் கீழேயே தங்கிக்கோங்க. முக்கியமா இவனை விட்டு கொஞ்சம் தள்ளியே இரு. பொசுக்குன்னு உன்னை தூக்கிட்டு ஓடிடுவான்!” என்று சிரித்துக்கொண்டே சொன்ன பாட்டி, ருத்ராவின் பக்கம் திரும்பினார்.
“ருத்ரா இனிமேல் நிலாவை மெதுவாகத்தான் தூக்கணும். முரட்டுத்தனமா நடந்துக்கக் கூடாது”
அதைக் கேட்ட ருத்ரா எரிச்சலுடன் பாட்டியைப் பார்த்தான். ‘அவ என்னோட ஆரலி! அவளை நான் வலிக்க வைப்பேனா? அவளுக்கு ஏதாவது ஆகணும்னு நினைப்பேனா?’ என்று அவனுடைய உள்ளம் கோபமாகக் கத்தியது.
எதுவும் பேசாமல் வேகமாக அங்கிருந்து கிளம்பினான். “டேய் எங்க போற? நில்லுடா!” என்று சாம்பவி அழைத்தும் காதில் வாங்கிக்கொள்ளாமல் வெளியேறிவிட்டான்.
“இவனுக்கு ஏன் தான் இவ்வளவு கோபம் வருதோ தெரியல!” என்று சலித்துக்கொண்டே வந்த சாம்பவியை பார்த்த நிலாவுக்குச் சங்கடமாக இருந்தது.
பெரியவர்கள் தன்னைப் பற்றிக் கவலைப்பட்டுப் பேசுகிறார்கள் என்பது அவளுக்குப் புரியாமல் இல்லை, ருத்ரா பிடிவாதம் தான் கவலையாக இருந்தது.
“பாட்டி நீங்க வீட்டுக்குக் கிளம்புங்க. நான் ஏகரா கூட வரேன்” என்றவளை இருவரும் வித்தியாசமாகப் பார்த்தனர்.
“அவன் கிளம்பிட்டான் நிலா நீ எப்படி அவன்கூட வருவ? உங்களுக்கு விளையாட்டு அதிகமாகிடுச்சு. இரட்டைப் பிள்ளையை சுமக்குற ஒழுங்கா எங்க கூடவே வா!” என்றார் சாம்பவி.
“இல்ல அத்தை! நான் இல்லாம அவரு போகமாட்டாரு. உங்களுக்கு நம்பிக்கை இல்லையா இப்போ அவர் வருவாரு பாருங்க”
“சரிம்மா… அவன்கூடத்தான் வரணுமா? எங்க கூட வா, அவன் வேற கோபமா இருக்கான் நாங்க பத்திரமா கூட்டிட்டுப் போறோம்” என்று பாட்டியின் அக்கறையான பேச்சைக் கேட்டவள் மறுப்பாக புன்னகைத்தாள்.
“அவர் கூட இருக்கும்போதுதான் நான் பாதுகாப்பா உணருவேன் பாட்டி. இது இப்போ வந்த உணர்வு கிடையாது ஆரம்பத்திலிருந்தே அவர்கிட்ட எனக்குக் கிடைச்ச பாதுகாப்பு இது”
“என்னைத் திட்டும்போதும், வெறுத்துத் தள்ளும்போதும் கூட அவரை நான் அந்நியமா உணர்ந்ததில்லை. ஏகரான்னா எனக்கு ரொம்ப நெருக்கமான உறவு.
பல கசப்பான சம்பவங்களை நாங்க கடந்திருந்தாலும், இழப்புகளையும் பார்த்திருந்தாலும் எதுவுமே எங்களுக்குள்ள இருக்கிற உறவை உடைக்க முடியல.
அவரை என்னால தவிக்க விட முடியாது. அதே மாதிரி அவராலயும் என்னைக் காயப்படுத்திப் பார்க்க முடியாது” என்று சிரித்தபடி சொன்னவளை சாம்பவியும் அபிராமியும் ஆச்சரியமாக பார்த்தனர்.
அந்த வார்த்தைகளில் எந்தவிதமான நடிப்பும் இல்லை, தன் கணவனின் மீதான நம்பிக்கையும், உரிமையும் மட்டுமே இருந்தது.
அவர்கள் பேசிக்கொண்டிருந்த இடத்திலிருந்து சற்று தள்ளி, கதவோரமாக நின்றுகொண்டிருந்த ருத்ராவும் அவளுடைய பேச்சை கேட்டபடி நின்றிருந்தான்.
கோபத்தில் போனவனுக்கு அவளை விட்டுச் செல்ல மனமே வரவில்லை. அவளையும் அழைத்துக்கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மீண்டும் திரும்பி வந்திருந்தான்.
ஆனால் வந்த இடத்தில் அவள் தனக்காகப் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டதும் அவனுடைய கோபம் மொத்தமாகக் கரைந்து, இதழ்கள் மெல்லிய புன்னகையில் விரிந்தன.
எதுவும் பேசாமல் அவர்களை நோக்கி வந்தவனை பார்த்த நிலா, “ஏகரா…” என்று அழைத்தபடி கையை நீட்டினாள்.
மெதுவாக அவளை தன் கைகளில் ஏந்திக்கொண்டு வெளியே நடந்தான்.
“நல்லா காதல் பண்றாங்க!” என்று சிரித்த அபிராமி, சாம்பவியை அழைத்துக்கொண்டு கிளம்பினார்.
“சார் கோபமா போன மாதிரி இருந்தது?” அவன் முகத்தைப் பார்த்து கிண்டலாக கேட்டாள் நிலா.
“கோபமாதான் இருந்தேன் பட் இப்போ கோபம் போய் காதல் வந்துடுச்சு” என்றதும் சத்தமாகச் சிரித்தாள் நிலா.
“சரியான கிறுக்கன்டா நீ! இரண்டு குழந்தை வரப்போகுதுன்னு சந்தோஷப்படாம, என்கூட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியலன்னு கோபப்பட்டு போற, உனக்குப் பேபீஸ் மேல அக்கறையே இல்ல!”
“ஆமாம்! அவங்களை கேர் பண்ண என் குடும்பம் இருக்கு. எனக்கு உன்னை மட்டும் கேர் பண்ணா போதும். ஆரலி என் கூடவே இருந்தா போதும்”என்ற காதல் கிறுக்கனை எப்படி விட்டுக்கொடுக்க முடியும்.
அவனுடைய கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள். அவனுடைய உலகத்தில் அவளுக்கு முதலிடம், இரண்டாம் இடம் என படிநிலைகள் கிடையாது. ஆரலி ஒருத்திக்கு மட்டுமே இடம், அந்த இடத்தை வேறு யாருக்கும் கொடுக்க அவன் தயாராக இல்லை.
“ஏகரா… எனக்கு ஒரு ஆசை இருக்கு.”
“என்ன மஃபின்?”
“நீ எனக்காகக் கட்டுன வீட்டுக்குப் போகணும் போல இருக்கு. அம்மாச்சிக்கிட்ட பேசணும். அவங்க மூச்சுக்காத்து இன்னமும் அங்க தான் இருக்கும். நான் சந்தோஷமா இருக்கேன் அதுவும் இரண்டு குழந்தைங்க வரப்போறாங்கன்னு அவங்ககிட்ட சொல்லணும்”
அவள் உணர்ச்சிவசப்படுவதை உணர்ந்தவன் மெதுவாக நிலா நெற்றியில் இதழ் பதித்தான்.
“கண்டிப்பா போகலாம் ஆரலி”
“நிஜமாவா? ஆனா அத்தை, பாட்டி விடமாட்டாங்களே! சும்மாவே என்னை நகர விடமாட்டாங்க, இப்போ ரெண்டு குழந்தைங்க வேற… சுத்தம்!”
என்று சலித்துக்கொண்டவளைப் பத்திரமாகக் காரில் அமரவைத்தான் ருத்ரா. அவளுக்கு சீட் பெல்ட் மாட்டிவிட்ட பிறகே தன்னுடைய இருக்கையில் அமர்ந்தான்.
“உனக்கு ஐந்தாவது மாசம் ஆரம்பிச்சதும் போகலாம் மஃபின். நான் வீட்டுல பேசுறேன் யாரும் நம்மளைத் தடுக்க மாட்டாங்க”
“ஆமா தடுக்க மாட்டாங்க. அதே நேரம் தனியா விடவும் மாட்டாங்க. நாங்களும் வரோம்னு பெட்டியோட நிப்பாங்க பாரு!”
என்று உறுதியாக சொன்னாள்.
“நோ! நீயும் நானும் மட்டும் போறோம் அங்க வேற யாருக்கும் இடமில்லை”
“இவங்களுக்கும் இடமில்லையா?”
என்று தன் வயிற்றை சுட்டிக்காட்டிக் கேட்டாள்.
“முக்கியமா இவங்களுக்கு இல்ல!”
“ஏன்?”
“ஜஸ்ட் டென் மந்த்ஸ் இவங்களை கேர் பண்ணி நீ பார்த்துக்குறதே எனக்குப் பிடிக்கல” என்றவனுடைய வாயில் பட்டென்று அடித்தாள் நிலா.
“என்ன பேசுற? நம்ம குழந்தைங்க இவங்க!”
“சோ வாட்? குழந்தைங்க பொறந்ததும் நீ அவங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. உன்னோட கவனம் முழுசும் என்மேலதான் இருக்கணும்” என்று பகிரங்கமாக மிரட்டினான்.
“சரியான சைக்கோடா நீ! ரொம்ப மிரட்டுனா இவங்களை கூட்டிட்டு நான் தனியா போயிடுவேன்!” அவளுடைய மிரட்டலைக் கேட்டவனுடைய உதடுகள் நக்கலாக வளைந்தன.
“ஏன் சிரிக்குற? ஏதாவது வில்லத்தனம் பண்ண நினைச்சா கொன்றுவேன் உன்னை!”
“அன்னைக்கு சொன்னதையே இப்பவும் சொல்றேன் மஃபின். என்னைவிட்டு நீ விலகுறன்னு தெரிஞ்ச அடுத்த நொடி உன் உயிர் இந்த உடம்புல இருக்காது. என் கூட இருக்க உனக்குப் பிடிக்கலைன்னா இந்த உலகத்துலயே நீ இருக்கக்வேண்டாம்” என்றவனுடைய குரல் அழுத்தமாக ஒலித்தது.
உயிரை உறையவைக்கும் மிரட்டலுக்கு, அவள் துளியும் அஞ்சவில்லை.
“என்னை கொன்னுட்டு நீ என்ன பண்ணப்போற அரக்கா? ஏற்கனவே நீ அரைப் பைத்தியம். நானும் இல்லாம முழுப் பைத்தியமா மாற வேண்டாம். ரெண்டு பேரும் சேர்ந்து வாழலாம் முடியலையா சேர்ந்தே மேல போகலாம்”
என்று அவனுடைய கைகளை பற்றி அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.
நிலா பேச்சில் சிரித்த ருத்ரா அவளை அள்ளித் தன் மடியில் அமரவைத்துக்கொண்டு, அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டான்.
அவன் காதல் எப்போதும் விஷம் மட்டுமே! நிலாவாக இருந்தாலும் சரி, ஆரலியாக இருந்தாலும் சரி… அவனுடைய ஆலகால விஷமான காதலை அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.
அன்றிலிருந்து நிலாவுக்கு வீட்டில் ஓவர் செல்லம் ஆரம்பமானது.
அவளைப் பார்க்க வந்த சோமசுந்தரம், பார்வதி தம்பதிகளுக்கு இரட்டிப்பு சந்தோஷம். மகளின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியையும், வயிற்றில் வளர்ந்துகொண்டிருக்கும் இரண்டு உயிர்களையும் நினைத்து மனம் நிறைந்துபோனார்கள்.
“ஆகமொத்தம் நாங்க பெங்களூரு போக முடியாது அப்படித்தான?” என்று சுகமாகச் சலித்துக்கொண்டான் விமல்.
நல்ல தூக்கத்திலிருந்த திகளுக்கு விடாமல் இந்தியாவிலிருந்து போன் போய்க்கொண்டிருந்தது. அழுகாத குறையாக “ஏன் அண்ணா தூங்கவிட மாட்டேங்குற? இரு மாமாகிட்ட சொல்றேன்!” என்று கண்களைக்கூடத் திறக்காமல் முணுமுணுத்தாள்.
“குட்டச்சி!” என்ற குரல் கேட்டதும் கண்களைத் திறந்தவள், எதிரே மொத்தக் குடும்பமும் சிரித்த முகத்துடன் அமர்ந்திருப்பதை பார்த்து குழம்பினாள்.
“என்னாச்சு? எல்லாரும் சிரிச்ச முகமா இருக்கிங்களே?” என்று கண்களைக் கசக்கியபடி கேட்டாள்.
“நம்ம வீட்டுக்கு ஒரு குழந்தை இல்லை, இரண்டு குழந்தை வரப்போகுது தங்கம்!” என்று சந்தோஷமாகச் சொன்னார் அபி.
“என்ன?” என்று அதிர்ச்சியில் கண்களை விரித்தவள்,
அடுத்த நொடியே “அக்கா… ட்வின்ஸா?” என்று கத்தினாள்.
“ஆமாம் நீ இரண்டு பேபீஸ்க்கு சித்தியாகப் போற!” என்றதும் கட்டிலில் ஏறிக் குதிக்க ஆரம்பித்துவிட்டாள்.
“எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு! இரண்டு வாண்டுங்க வரப்போகுது. அக்கா, பேபீஸ் பொறந்ததும் எங்ககிட்ட கொடுத்திடணும். நான், அபி, பவி மூணு பேரும் அவங்களை வளர்த்துக்குறோம். நீ ருத்ரா மாமாகூட ஜாலியா வெளியே போயிட்டு வா!” என்று சிரித்தாள்.
“ஆமா விழி! நாம மூணு பேரும் சேர்ந்து குழந்தைகளை அறிவாளியா வளர்க்கலாம்!” என்று பாட்டியும் தன் பங்குக்குச் சேர்த்துக்கொண்டார்.
எது அறிவாளியாவா? என்று நிலாவின் குடும்பத்தினர் அதிர்ந்து பார்த்தனர்.
“பிள்ளைங்க மேல கைவச்ச முதல் டெட்பாடி நீதான் பாட்டி! உங்க மூணு பேரு தொல்லை தாங்க முடியலன்னு நாங்க வருத்தத்துல சுத்திட்டு இருக்கோம். நீங்க உங்களைப் போலவே அடுத்த ரெண்டு பேரை ரெடி பண்ணப் பார்க்குறிங்களா? நெவர்” என்று திட்டவட்டமாக மறுத்தான் பத்ரன்.
‘என்னை ஒரு ஜீவனாவது புரிஞ்சு வச்சிருக்கே! என் இனமடா நீ!’ என்று ஹெவியாக ஃபீல் பண்ணிய ருத்ரா.
“திகள் உன் அக்கவுண்ட்ல பணம் போட்டிருக்கேன். உனக்குப் பிடிச்சதை வாங்கிக்கோ!” என்றான்.
“தாங்க்ஸ் மாமா!” என்று கத்தியவள், உடனே அக்காவிடம் பேச ஆரம்பித்துவிட்டாள்.
“ம்க்கும்… நாங்களும் உங்க கல்யாணத்துக்கு உழைச்சிருக்கோம். அஞ்சு பைசா கூடக் கண்ணுல காட்டல. உங்களை ஹனிமூனுக்கு அனுப்புறேன்னு சொன்னவளுக்கு ஐந்து லட்சமா? இதெல்லாம் அநியாயம் பாஸ்!”
என்று விமல் சண்டையை ஆரம்பித்தான்.
“நீங்க தொல்லைதானடா பண்ணிங்க! உங்களை உயிரோட விட்டிருக்கதே என் பிள்ளைங்களுக்கு தாய்மாமா வேணும்னுதான்!” என்று ருத்ரா பதிலடி கொடுக்க,
“அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. சேம் அமௌண்ட் வரலன்னா நிலாவை வளைகாப்பு முடிஞ்சதும் பெங்களூரு கூட்டிட்டுப் போயிடுவோம்!” என்று சொன்ன பேபி, நைசாக நான்கு அடி தள்ளி நின்றுகொண்டான்.
அவன் பேசியதைக் கேட்ட ருத்ரா, கையில் சிக்கிய விமலின் கழுத்தைப் பிடித்து தலைக்கு மேலே தூக்கிவிட்டான்.
“அய்யோ! உசிரை வச்சு ஊஞ்சலாடுறாடுறாரே! யாராவது காப்பாத்துங்க!” என்று விமல் கத்திட,
அவனுடைய கதறலைக் கேட்டு யாருக்கும் இரக்கமே வரவில்லை.
“சொன்னவன் அங்க நிக்குறான். நான் சும்மாதான இருந்தேன், என்னை விடுங்க பாஸ்!”
கடைசியில் போனால் போகிறதென்று பத்ரன் வந்து ருத்ராவைப் பிடித்திழுத்தான்.
“விடுடா! செத்துறப்போறான் அப்புறம் யாரு பேபீஸ்க்குக் குண்டி கழுவி விடுறது?” என்று அவன் சொன்னதுதான் தாமதம்.
தன் கழுத்தைத் தேய்த்துக்கொண்டிருந்த விமல்,
“எது குண்டி கழுவணுமா? ஹலோ சார்! ஐ ஆம் அன் இன்வெஸ்டிகேட்டர். பிள்ளைக்கு அப்பா, சித்தப்பா நீங்க இருக்கிங்க. தாய்மாமா நான் இதெல்லாம் பண்ணா நல்லாவா இருக்கும் அதனால…”
“அதனால…?” என்று ருத்ரா குரலை உயர்த்தினான்.
“என் தங்கச்சியைக் கூட்டிட்டு பெங்களூரு போறேன்!” என்று கத்தியபடி ஓடியே விட்டான் விமல்.
“தைரியமான ஆளா இருந்தா நின்னு பேசுடா!” என்று பத்ரனும் அவனைத் துரத்தினான்.
“தைரியம் முக்கியமா? உசுரு முக்கியமா? இருங்க… உங்க இரண்டு பேரு பொண்டாட்டிங்ககிட்டயும் சொல்லித்தரேன். எங்களுக்கு மட்டும்தான பயப்பட மாட்டீங்க. அவங்க மிரட்டுனா பயந்துதான ஆகணும்!”
என்று கத்திக்கொண்டே ஓடியவனை அண்ணனும் தம்பியும் சேர்ந்து துரத்திப் பிடித்து தூக்கிப்போட்டு விளையாட ஆரம்பித்தனர்.
பேபியோ சேஃபாக பாட்டியின் பின்னால் ஒளிந்துகொண்டான்.
அந்த வீட்டில் சிரிப்புக்கும் சந்தோஷத்துக்கும் குறைவில்லாமல் நாட்கள் நகர ஆரம்பித்தன.
திகளைதான் அனைவரும் அதிகமாக மிஸ் செய்தனர்.
