உருத்திரா❤️ 38

நிலாவை வீட்டிலிருந்த மொத்தக் குடும்பமும் சேர்ந்து குட்டிக் குண்டானாக்கிவிடத் திட்டமிட்டிருந்தார்களோ என்னவோ! இரண்டு பிள்ளைகளுக்குச் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று வாயில் இடிக்காத குறையாக உணவுகளை ஊட்டிக்கொண்டே இருந்தனர்.

நிலா நொந்து போய்விட்டாள். சரி, புருஷனாவது காப்பாற்றுவான் என்று பார்த்தால் அவனோ தேனும் தினை மாவுமாகக் கொண்டுவந்து அவளை இன்னும் புஷ்டியாக்க முயற்சி செய்ய,

“விட்ருங்கடா ப்ளீஸ்! இனி சாப்பாடு வேண்டாம்!” என்று கெஞ்சவே ஆரம்பித்து விட்டாள்.

ஆனால் அவளுடைய கெஞ்சல்களுக்கு செவிசாய்க்க யாரும் தயாராக இல்லை.

விளைவு, ஐந்தாவது மாதத்திலேயே நடக்கவே சிரமப்படும் அளவுக்கு எடை அதிகரித்துவிட்டது.

அதற்குமேல் பொறுக்க முடியாத சோமசுந்தரமும் பார்வதியும் ஒருநாள் அவளுடைய ரிபோர்ட்டை பார்த்துவிட்டு திட்ட ஆரம்பித்துவிட்டனர்.

“ஒழுங்கா ஹெல்த்தியா அவளைப் பார்த்துக்கலைன்னா நாங்க கூட்டிட்டுப் போயிடுவோம்” என்று முடிவாகச் சொல்லிவிட்டனர்.

ருத்ராவின் குடும்பத்தினர் அனைவரும் முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு நின்றனர்.ருத்ரா மீட்டிங் என வெளியே போயிருக்க கேப்பில் அவன் குடும்பத்தை வைத்து செய்ய வந்துவிட்டார்கள்.

“ம்மா… விடுங்க. பாவம், அவங்களைத் திட்டாதிங்க!” என்ற நிலாவை முறைத்துப் பார்த்த பார்வதி,

“நிறைய காம்ப்ளிகேஷன்ஸ் வரும் நிலா. அவங்களுக்கு தான் புரியல, உனக்குமா புரியல? நம்ம வீட்டுக்கு கொஞ்ச நாள் வந்து இருந்துட்டுப் போ. ராம் மாமாவும் நானும் உன்னை நல்லா பார்த்துப்போம். உன் உடம்புக்கு எது தேவையோ அதை மட்டும் குடுப்போம்” என்று அக்கறையாக சொன்னார்.

அவருடைய அக்கறையான பேச்சில் நிலாவால் மறுக்க முடியவில்லை.

“சரிம்மா… வரேன்” என்று ஒத்துக்கொண்டாள்.

ருத்ராவின் குடும்பத்தினருக்கோ அவளை அனுப்ப மனமே இல்லை. ஆனால் நிலா ஆரோக்கியம் முக்கியம் என்பதால் அமைதியாக இருந்தனர்.

“பாட்டி நான் கொஞ்ச நாள் அம்மா வீட்டுல இருந்துட்டு வரேன். உங்க மேல கோவமா போகல. அதனால முகத்தை நார்மலா வைங்க!” என்று சிரித்தபடி சொல்ல, அதன்பின்தான் அபிராமியும் சாம்பவியும் சகஜமாக சிரித்தனர்.

“ருத்ரா வந்தா உன்னை விடமாட்டான் நிலா!” என்று கவலையுடன் சொன்னார் அபிராமி.

“தெரியும் அத்தை. அதனாலதான் நான் இப்பவே கிளம்புறேன். வீட்டுக்குப் போனதும் சொல்லிக்கிறேன். நீங்களும் இப்போ சொல்லாதிங்க டென்ஷனாகிடுவாரு” என்று பொறுமையாக சொல்லிவிட்டு பெற்றோருடன் கிளம்பினாள்.

மகளைச் சிரமப்படுத்தாமல் விமானத்திலேயே அழைத்துச் செல்ல, ஒன்றரை மணி நேரத்தில் நிலா வீட்டை அடைந்துவிட்டாள்.

பக்கத்து வீட்டில் இருக்கும் விமல், பேபி இருவருமே தங்கை தனியாக வந்ததை பார்த்தும் ஊரைவிட்டு ஓடிவிட்டதாக செய்தி!

ருத்ரா வந்தால் இவர்களை இருவரைதானே தூக்கிப் போட்டு விளையாடுவான். 

நீண்ட நாள் கழித்து பார்த்த நிலாவை சகுந்தலா கொஞ்சி தீர்த்துவிட்டார். ராம் அவள் பைல்களை பார்த்து அவளை முறைக்க, “நான் சொன்னேன் அப்பா அவங்க கேட்கல!” என்று பாவமாக சொன்னாள். 

“இரண்டு குழந்தைங்க இருக்காங்க நிலா. இந்த நேரத்துல உடம்பைப் பார்த்துக்கிறது ரொம்ப முக்கியம். இனிமேல் அமைதியா ரெஸ்ட் எடு. நாளையிலிருந்து வாக்கிங், எக்ஸர்சைஸ் மட்டும் இல்லாமல் வீட்டு வேலைகளையும் உங்க அம்மாக்களோட சேர்ந்து செய்யணும். சும்மா படுத்துக்கிட்டே இருக்கக்கூடாது” என்று உறுதியாகச் சொன்னார்.

“சரி அப்பா!” என்று தலையை ஆட்டினாலும், நிலாவின் மனதிற்குள் ருத்ராவைப் பற்றிய பயம் அதிகமாக இருந்தது.

புதிதாகக் கிடைத்த டெண்டர் மீட்டிங்கிற்காகப் பத்ரனோடு புதுச்சேரி சென்றிருந்தான் ருத்ரா. இரவு வீட்டுக்கு வந்ததும் தன்னைக் காணவில்லை என்றால் எவ்வளவு பெரிய கலவரம் செய்வான் என்பது அவளுக்குத் தெரிந்தும் இங்கு வந்திருந்தாள்.

சரி… அவன் வரும்போது பார்த்துக்கலாம். என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு பார்வதியுடன் நேரம் செலவழிக்க ஆரம்பித்தாள்.

இரவு ஒன்பது மணிக்கு மேல் வீடு திரும்பிய ருத்ராவும் பத்ரனும், சோர்வாக சோபாவில் அமர்ந்தனர்.

ருத்ரா கண்கள் தன்னவளை தேடியது!

“ஆரலி எங்க?” என்று கேட்டபடி சுற்றிலும் பார்த்தான். “தூங்கப் போயிருப்பாளோ?”

என்று நினைத்துக்கொண்டு வேகமாகத் தங்கள் அறைக்கு சென்றான்.

தன் குடும்பம் அப்நார்மலாக இருப்பதை கவனித்த பத்ரன் “உங்க முகமே சரியில்லயே! என்ன பண்ணிங்கனு நீங்களே சொல்லிடுங்க” என்று கேட்டான்.

அதற்குள் “ஆரலி… ஆரலி எங்க இருக்க?”

என்று குரல் கொடுத்தபடி வந்த ருத்ராவை பார்த்த குடும்பத்தினர் ஒருவரையொருவர் திரும்பிப் பார்த்தனர்.

“பாட்டி! ஆரலி எங்க?” என்று முன்னால் வந்து நின்றான்.

“அவ அப்பா, அம்மா வந்தாங்க ருத்ரா. நிலாவோட செக்கப் ரிப்போர்ட்டைப் பார்த்துட்டு அவளுடைய உடல்நிலையை நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டாங்க. எடை அதிகமாகியிருக்கு அதனால கொஞ்ச நாள் அவளை அவங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போறோம்னு கேட்டாங்க”

என்று தயக்கத்துடன் சொன்னார்.

அடுத்த நொடி ருத்ராவின் முகம் கோபத்தில் கொதித்தது.

“நீங்க ஏன் அவளை அனுப்ப சம்மதிச்சிங்க?”

“நிலாவே போறேன்னு சொல்லிட்டாப்பா!” என்றார் சாம்பவி.

“சரி நான் போய் அவளை கூட்டிட்டு வரேன். இனிமேல் ஜாக்கிரதையா பார்த்துக்கலாம். ஆரலிக்குத் தனியா டயட்டீஷியன், யோகா மாஸ்டர் எல்லாம் அரேஞ்ச் பண்றேன். அவளை அங்க விட வேண்டாம்” என்று வேகமாகப் பேசிக்கொண்டே வெளியேற முயன்றவனைத் தடுத்தார் நடராஜன்.

“ருத்ரா நில்லு! ஒரு இரண்டு நாளாவது நிலா அவங்க அம்மா, அப்பாவோட இருந்துட்டு வரட்டும். யாரும் அவங்களைத் தொந்தரவு பண்ணக்கூடாது. இது என்னோட ஆர்டர்!”

என்று அழுத்தமாகச் சொன்னார்.

அந்த தில்லை நாயகனா அவர் சொல்வதை கேட்கப்போகிறான்! 

“ம்ச்… நான் போவேன்!” என்று மீண்டும் வெளியே நடக்கத் திரும்பினான்.

“நீ போறதுக்குள்ள பேத்தியை வேற இடத்துக்கு அனுப்பிடுவேன் ருத்ரா!”

என்று மிகவும் சாதாரணமாகச் சொன்னார் நடராஜன்.

அவ்வளவுதான்! அனைவரும் அவரைத் திரும்பிப் பார்த்தனர்.

“என்ன தாத்தா? என்னை மிரட்டுறிங்களா?” என்று பற்களைக் கடித்தபடி கேட்டான் ருத்ரா.

“ ஆமாம் மிரட்டல்னு வச்சுக்கோ, அவளா உன்னைப் பார்க்கணும்னு நினைக்கிறப்போதான் உன் கண்ணுல காட்டுவேன். அதுவரைக்கும் நீ நிலாவை பார்க்க முடியாது!” என்று மிகவும் கூலாகப் பதிலளித்தவரை கண்டு பத்ரனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

“தாத்தா வில்லன் மாதிரி பேசுறிங்க?”

என்று சிரித்தபடி கேட்டான்.

அவனைத் திரும்பிப் பார்த்த நடராஜன், கையிலிருந்த தடியை கீழே வைத்துவிட்டு நிதானமாகக் கால்மேல் கால்போட்டு அமர்ந்தார்.

“ஜஸ்ட் ஏழு வருஷமா குடும்பத் தொழிலை பார்க்குறதுனால, எல்லாமே உங்களால மட்டும்தான் முடியும்னு நினைச்சிட்டிங்களா? எனக்கு ஐம்பது வருஷ எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு!”

“உன் அண்ணன் பாசத்தை காட்டி எங்களை எல்லாம் ஓரமா உட்கார வைச்சுட்டான். அதுக்காக நாங்க யாருன்னு மறந்துடாதிங்க. நீ ருத்ர அவதாரம்னா, நான் நடராஜ அவதாரம்!”

என்ற தாத்தாவை கொடூரமாக முறைத்த ருத்ரா, “வேண்டாம் தாத்தா! என்னை கோபப்படுத்தாதிங்க!” என்று கர்ஜித்தான்.

“அடப்போடா! நீ இப்போதான் வில்லன். என் வீட்டுக்காரர் ஓஜி வில்லன்டா! இல்லைன்னா இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருக்க முடியுமா?”

“அவரை எதிர்த்துப் பேசாம போய் பால்கனியில உட்கார்ந்து ‘நிலா நிலா ஓடிவா’ன்னு வானத்து நிலாவைப் பார்த்துப் பாடு. நேர்ல இருக்கிற நிலா எப்போ வரணும்னு நினைக்கிறாளோ அப்போ வரட்டும்!” என்று பேரனை மொக்கை செய்துவிட்டு கணவருடன் உள்ளே சென்றார்.

அங்கிருந்தவர்களுக்குச் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

ருத்ரா என்றால் எல்லோரையும் ஆட்டிப்படைக்கும் ஆள். ஆனால் அவனை விட பெரிய தலை நான் இருக்கிறேன் என நடராஜன் நிரூபித்துவிட்டார்.

இனி என்ன செய்யமுடியும் பாட்டி சொன்னது போல நிலா பாட்டு பாட கோவமாக தன் அறைக்கு போனான்.

அண்ணன் போனதும் சிரிக்க ஆரம்பித்த பத்ரன், தன் போனை காதில் வைத்து

“கேட்டிங்களா அண்ணி?” என்று கேட்டான்.

அந்தப் பக்கம் இருந்த நிலா மெதுவாகச் சிரித்தாள்.

“பாவம் என் ஏகரா! தாத்தா ரொம்ப மிரட்டுறாரு”

“அப்போ அவனை வரச் சொல்லவா?”

“ஐயோ வேண்டாம், வேண்டாம். கொஞ்ச நாள் ஆகட்டும். அம்மா, அப்பா என்னைப் பார்த்துக்க ஆசைப்படுறாங்க. நான் இங்க இருந்தா அவங்களுக்கும் சந்தோஷமா இருக்கு”

“ஓகே அண்ணி! நீங்க பார்த்துக்கோங்க”

என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

ருத்ரா கோபமாகக் கீழே இறங்கி வரும்போதே பத்ரன் நிலாவுக்கு போன் செய்துவிட்டான். அங்கு நடந்த அனைத்தையும் கேட்டவளுக்கு வருத்தமாக இருந்தாலும், அவனை அடக்க நடராஜன் மட்டும்தான் சரியான ஆள் என்று தோன்றியது.

அவன் தன்னைக் காணாமல் தவிப்பான் என்பது அவளுக்குத் தெரியும். ருத்ரா பற்றிய நினைவுகளோடு படுக்கையில் சாய்ந்தவள் மெல்ல உறங்கிப்போனாள்.

நான்கு நாட்கள் அம்மா, அப்பாவுடன் மிகவும் சந்தோஷமாகக் கழிந்தது நிலாவுக்கு. ருத்ராவுக்கு போன் செய்யக்கூட அவளுக்குப் பயமாக இருந்தது. அவனைப் பற்றிய நினைப்பு அவ்வப்போது வந்து மனதை ஆக்கிரமித்தாலும், அம்மாவுடன் நேரம் செலவிடுவது, அப்பாவுடன் உடற்பயிற்சி செய்வது, அண்ணன்களுடன் விளையாடிக் கொண்டிருப்பது என நாட்கள் கண்மூடி திறப்பதற்குள் ஓடிவிட்டன.

ராம் தினமும் அவள் என்னென்ன சாப்பிட வேண்டும் என்று சொல்லிவிட அதன்படியே உணவுகளைச் சாப்பிட்டு வந்தாள். வீட்டு வேலைகள் செய்வதற்கு அவளுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. சிறுவயதிலிருந்தே தோட்ட வேலைகள் செய்து வளர்ந்த உடம்பு என்பதால், மற்றவர்களைப் போல சின்னச் சின்ன வேலைகளுக்கெல்லாம் சோர்ந்துவிட மாட்டாள்.

வேண்டாம் என்று பார்வதி எத்தனையோ முறை மறுத்தும், தோட்டத்தில் வளர்ந்திருந்த களைகளைப் பிடுங்கிக் கொண்டிருந்தாள்.

சற்று மூச்சு வாங்கினாலும், பெரிதாக வெயில் இல்லாத காரணத்தால் வேலையை செய்தவள், திடீரெனத் தன் முன்னால் வந்து நின்ற உருவத்தைக் கண்டு கையில் இருந்த களைகளை அப்படியே விட்டுவிட்டு, ஒரு கையால் வயிற்றைப் பிடித்தபடி மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள்.

கண்கள் சிவக்க, முகமெல்லாம் இறுக்கத்துடன் அவளை முறைத்தபடி நின்றிருந்தான் ருத்ரா!

நெற்றியில் வடிந்த வியர்வையைத் துடைத்த நிலா, அப்போதுதான் அவனை சரியாக கவனித்தாள்.

நான்கு நாட்களில் ஒருவனால் இப்படி மாறமுடியுமா என்று வியக்கும் அளவுக்கு அவனுடைய தோற்றம் இருந்தது. ஏனோதானோவென்று அணிந்திருந்த சட்டை, ட்ரிம் செய்யப்படாத தாடி, சீவப்படாத தலைமுடி, தூக்கமில்லாமல் கண்களுக்குக் கீழே படர்ந்திருந்த கருவளையங்கள் என அவன் மொத்தமாகவே மாறியிருந்தான்.

‘ஏகரா…’ என்று அவனருகே செல்ல முயன்றவளை பார்த்தானே ஒரு பார்வை,

அவ்வளவுதான்! அவனுடைய பார்வையின் அழுத்தத்தில் முதுகுத்தண்டு சில்லிட்டுப்போக, தன்னையும் அறியாமல் ஓரடி பின்னால் நகர்ந்தாள் நிலா.

தன்னைவிட்டு அவள் எப்படி போகலாம் என்ற கோபத்தில் அன்று இரவெல்லாம் தூக்கத்தைத் தொலைத்து விழித்திருந்தான் ருத்ரா.

நிலா ஒரு போன் செய்தால் போதும், உடனே போய் தூக்கிவந்துவிடலாம் என்று காத்திருந்தவனுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஒரு மிஸ்டு கால் கூட விடவில்லை அவன் அருமை மனைவி!

நான்கு நாட்களாகத் தூக்கம் தொலைந்ததுதான் மிச்சம். அவளுடைய வாசம் இல்லாமல் கண்களை ஒரு நொடி கூட நிம்மதியாக மூட முடியவில்லை. தினமும் முத்தம் தருகிறேன் என்று பிச்சுத் தின்னும் அவள் அதரங்களின் உணவில்லாமல் துரும்பாகிப் போயிருந்தான் அவள் ஏகரா.

இனி அவளைப் பார்க்காமல் இருக்க முடியாது என்று முடிவெடுத்து, காரை எடுத்துக்கொண்டு வேகமாக அவள் வீட்டிற்கு வந்துவிட்டான்.

இங்கே பார்த்தால் அவனுடைய மனைவி ஜாலியாகத் தோட்டத்தில் புல்லைப் பிடுங்கிக் கொண்டிருந்தால் எரியுமா? எரியாதா!

‘என்னைப்பத்தி யோசிக்காம அம்மா வீட்டுலையே செட்டில் ஆகிட்டா’ என்ற கோவம் கண்களை மறைக்க அவளை முறைத்துக்கொண்டிருந்தான்.

அவன் முறைப்பதைக் கண்டு பயந்த நிலா, உடனே அக்மார்க் பொண்டாட்டி ஆயுதத்தைக் கையில் எடுத்து உதட்டைப் பிதுக்கி அழ ஆரம்பித்தாள்.

விட்டால் நெற்றிக்கண்ணைத் திறந்து எரித்துவிடுவான் ருத்ரா.

“போடா! என்னை முறைக்கிற… நான் உன்கூடப் பேசமாட்டேன்!” என்று சொல்லிவிட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தவளை, நான்கே எட்டில் நெருங்கி இடுப்போடு சேர்த்து அள்ளித் தூக்கிக்கொண்டான்.

“விடு… விடு… நான் அம்மா வீட்டுக்கு வந்துட்டேன்! நீ சந்தோஷமா சென்னையில உட்கார்ந்துக்கிட்ட!” என்று அவள் அடித்த பல்டியில் அவளை இன்னும் முறைத்தான்.

‘என்னைப் பார்த்தா எந்த ஆங்கிள்ல சந்தோஷமா இருந்த மாதிரி தெரியுது?’ என்று கேட்பதைப் போலவே இருந்தது அவனுடைய பார்வை.

“சரி… சரி… சந்தோஷமா இல்லைதான். ஆனா ஏன் என்னைத் தேடி வரலை?” என்று அவனை பார்த்துக் கேட்டாள். அதற்கு பதில் சொல்லாமல் நிலாவை தூக்கிக்கொண்டே வெளியே நின்றிருந்த காரை நோக்கி நடந்தான்.

அவளைப் பத்திரமாக முன் இருக்கையில் அமரவைத்துவிட்டு, சீட் பெல்ட்டையும் சரியாக அணிவித்தான்.

“எங்க போறோம் ஏகரா?”

‘மூச்!’ வாயின் மீது விரலை வைத்து அதட்டியவனின் விரலைத் தட்டிவிட்டாள்.

“போனை குடு. வீட்டுல சொல்லிடுறேன் என்னோட போன் உள்ள இருக்கு” என்று அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து போனை எடுத்து பார்வதிக்கு போன் செய்தாள்.

அவள் பார்வதியிடம் பேச ஆரம்பிக்க, மறுபுறம் ஏசியை ஆன் செய்து அவளுக்கு நேராகத் திருப்பிவிட்டவன், தண்ணீர் பாட்டிலையும் கையில் கொடுத்தான்.

“இதெல்லாம் நல்லா பண்ணு!” என்று முணுமுணுத்தபடி தண்ணீரைக் குடித்தாள்.

“ஹலோ…”

“அம்மா, நான் நிலா பேசுறேன்”

“நீ எப்படி ருத்ரா போன்ல? உனக்குப் பால் காய்ச்சி எடுத்துட்டு வரலாம்னு கிச்சனுக்கு வந்தேன். ருத்ரா வந்திருக்காரா? வீட்டுக்குள்ள கூட்டிட்டு வா”

“இல்லம்மா… ஏகரா வந்து என்னை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறாரு, ஆல்ரெடி நாங்க கிளம்பிட்டோம். நீங்க என்னைத் தேடுவீங்களேன்னு போன் பண்ணேன்” என்று அவள் பேசி முடிப்பதற்குள் போனைப் பிடுங்கிய ருத்ரா, “அத்தை நான் ஆரலியைக் கூட்டிட்டுப் போறேன். மாமாகிட்ட சொல்லிடுங்க” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டான்.

அங்கே மறுபுறம் இருந்த பார்வதிதான், ‘ஆங்…’ என்று முழித்தார்.

‘நல்ல பிள்ளைங்க!’ என்று முணுமுணுத்தபடி தலையில் அடித்துக்கொண்டார்.

அரைமணி நேரமாகியும் வாயைத் திறக்காமல் அமைதியாகக் காரை ஓட்டிக்கொண்டிருந்தான் ருத்ரா.

அவனுடைய முகத்தைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி வந்த நிலாவுக்கு, உண்மையிலேயே மனம் கலங்கிப்போனது.

“ரொம்பக் கோபமா இருக்காரோ? இவரை இத்தனை நாள் தவிக்க விட்டுட்டேனோ?” என்ற குற்றவுணர்வு அவளுக்குள் மெதுவாகப் பரவியது.

ருத்ராவிடம் பேசுவதற்காக எத்தனையோ முறை முயன்றும், அவனுடைய இறுக்கமான முகத்தைப் பார்த்ததும் வார்த்தைகள் வராமல் கண்கள் கலங்கிட,

திடீரென வயிற்றில் ஒரு வலி ஏற்பட்ட வலியைத் தாங்க முடியாமல், “அம்மா!”

என்று கத்தியபடி ருத்ராவின் கையை அழுத்திப் பிடித்தாள்.

அடுத்த நொடியே பதறிப்போனவன் காரைச் சாலையோரமாக நிறுத்தினான்.

“என்னாச்சு மஃபின்? வயிறு வலிக்குதா? என்ன பண்ணுது? எங்கே வலிக்குது?”

அவளுடைய வயிற்றைப் பார்த்தவன்,

“உன்னை யாரு வேலை பார்க்கச் சொன்னது? இல்ல… உன்னை நான் அங்கே விட்டிருக்கவே கூடாது!”

என்று பல்லைக் கடித்தபடி ஸ்டியரிங் வீலை ஓங்கி அடித்தான்.

“பைத்தியக்காரா! எதுக்குக் கத்துற?”

என்று அவனுடைய கன்னத்தில் பட்டென்று அடித்த நிலா, அவன் கையைப் பிடித்து மெதுவாகத் தன்னுடைய மேடிட்ட வயிற்றின் மீது வைத்தாள்.

அந்த நொடி அவனுடைய உள்ளங்கைக்குள் இரண்டு குட்டிக் கால்களின் அசைவும், மென்மையான உதையும் தெரிய, ‘ஹாய் அப்பா!’ என்று இரண்டு குழந்தைகளும் ஒரே நேரத்தில் ஹைஃபை கொடுப்பதைப் போல இருந்தது.

அவன் கண்கள் வியப்பில் விரிய “ஆரலி…” என்றான்.

“வாயை மூடு! எப்போ பார்த்தாலும் ஆரலி… ஆரலி… குழந்தைகளைப் பத்தி யோசிக்கிறியா நீ? இவங்களே பொறந்து வந்து, ஏன் அம்மாவை மட்டும் கவனிக்கிறிங்கன்னு கேட்டா என்ன செய்வ? இடியட்!”

“மஃபின்…”

“பேசாத! நாளைக்கே நீ செத்தாலும் நான் கூடவருவேன், நான் செத்தாலும் உன்னை கூட்டிட்டு போகப்போறேன் எல்லாம் சரிதான்! அதுக்காக இந்த மொமெண்ட் என்ஜாய் பண்ணாம என்னை குரங்கு குட்டி போல நெஞ்சுலயே தூக்கி கிட்டு சுத்துவியா?”

“ஆரலி…”

“குழந்தைகளுக்கு என்ன பெயர் வைக்கலாம்னு யோசிச்சியா?” இல்லையென்று தலையசைத்தான் ருத்ரா.

“அவங்களுக்கு பெட், டிரஸ், டாய்ஸ் எதையாவது வாங்கினியா?”

“இல்லை…”

“அட்லீஸ்ட் ஆண் குழந்தையா, பெண் குழந்தையானு யோசிச்சியா?” அதற்கும் இல்லை என்று தலையசைத்தான்.

“அப்போ என்னதான் டா யோசிச்ச? உனக்கு ஆரலி மட்டும் போதும்னு தெளிவா சொல்லியிருந்தா, நானே பேபி பிளானைத் தள்ளிப் போட்டிருப்பேன். நீ அவங்க மேல எந்த இன்ட்ரஸ்ட்டும் காட்ட மாட்டேங்கிற! எனக்குக் கவலையா இருக்கு”

நிலா கேட்பதும் நியாயம்தானே! அவளை வெறித்தனமாக நேசிப்பது சரி அதில் பாதிகூட பிள்ளைகளை கணக்கில் எடுக்காதவனை திட்டத்தான் முடியும்.

அவளுடைய வார்த்தைகளில் இருந்த ஆதங்கம் அவனுக்குப் புரிந்தது. மெதுவாக நிலா தோள்களில் முகத்தைப் புதைத்துக்கொண்டவன் “சாரி…” என்று முணங்கினான்.

அவனுடைய ஆறடி உயர உருவம் அவளுக்குள் அடங்கி நிலா தாய்மையை மீட்டிட, அவள் கோவம் குறைந்து போனது. 

ருத்ரா தலைமுடியைப் பிடித்து தூக்கி தன் முகத்தைப் பார்க்க வைத்தாள்.

“என்ன இது? முகம் முழுக்க அழுக்கா இருக்கு! தாடியைக்கூட ட்ரிம் பண்ணல. சொறட்டை மண்டையை சீவாம என்ன பண்ணிட்டு இருந்த? குளிச்சியா இல்லையா?” அவனுடைய கன்னங்களை கைகளால் துடைத்துவிட்டாள்.

“நீ போனதிலிருந்து நான் தூங்கவே இல்லை…” என்றான் அவளுடைய முகத்தைப் பார்த்தபடி.

அவ்வளவுதான்! அவனுடைய தூக்கமில்லாத கண்களைப் பார்த்ததும் நிலாவின் மனம் உருகிப்போனது.

“தூக்கமில்லாம இருந்துட்டு காரை இவ்வளவு தூரம் ஓட்டிட்டு வந்திருக்க, உனக்கு எவ்வளவு தைரியம்? மறுபடியும் ஆக்ஸிடென்ட் ஆகி என்னை நோகடிக்கப் பார்க்கிறியா?”

“இனி உன்னைத் தேடிவர வரமாட்டேன். ஆள் எஸ்கேப் ஆகிடுவேன். அப்புறம் சோலோவா சுத்திக்கோ!” என்று வாய் ஓயாமல் திட்டியவளின் இதழ்களைத் தன்னுடைய இதழ்களால் அணைத்துவிட்டான் ருத்ரா.

புருஷன் சண்டை போட வந்தா, நேக்கா தப்பை அவன் பக்கம் திருப்பிவிட்டு நாம முன்னாடி சண்டை போட்றணும். அதுவே சிறந்தது என்று காட்டிவிட்டாள் நிலா! 

 

“அழுக்குப்பையா… விடு!” என்று அவனிடமிருந்து விலகியவள், இடுப்பைப் பிடித்துக்கொண்டு “எனக்கு இடுப்பு வலிக்குது. பிளைட்ல போகலாம். கார்ல வேண்டாம்” என்றாள்.

அவளுடைய உடல்நிலையை நினைத்து மறுப்பு சொல்லாமல், உடனே பிளைட் புக் செய்து, பத்திரமாக மனைவியை மாலைக்குள் வீட்டிற்கு அழைத்து வந்தான்.

வீட்டிற்குள் வந்ததும் யார் அழைத்தும் நிற்காமல், அறைக்குள் போய்விட்டான்.

பின்னால் வந்த நிலாவுக்கு அவனுடைய உணர்வுகள் புரியாமல் இல்லை.

பாட்டி, அத்தை, தாத்தா என அனைவரிடமும் நலம் விசாரித்துவிட்டு மேலே தங்களுடைய அறைக்குச் சென்றாள்.

குளியலறையில் தண்ணீர் விழும் சத்தம் கேட்க, கதவைத் தட்டினாள்.

“ஏகரா…”

“என்ன வேணும்” என கதவை லேசாகத் திறந்து பதில் சொன்னவனை, தள்ளிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.

அப்புறம் என்ன? இரண்டு மணிநேரத்திற்குப் பிறகுதான் இருவரும் வெளியே வந்தனர். நிலாவின் கழுத்துப் பகுதி முழுவதும் கடித்து வைத்திருந்தான் அந்த அரக்கன்.

“இனிமேல் என்னைவிட்டு போக நினைச்சுப் பாரு!” என்ற மிரட்டல் வேறு!

அவனுடைய முகத்தில் நான்கு நாட்களாகத் தொலைந்துபோன நிம்மதி மீண்டும் திரும்பியிருந்தது.

இருவரும் சேர்ந்து சாப்பிட வருவதைக் கண்ட ருத்ராவின் வீட்டினருக்கு சந்தோசமாக மனநிறைவோடு இருந்தது.

இரவு முழுவதும் நிலாவை இறுக்கமாக அணைத்துக்கொண்டு, அவள் வாசத்தை ஆழமாகச் சுவாசித்தபடியே தூங்கிப்போனான் ருத்ரா.

ருத்ராவின் சிறுபிள்ளைத்தனமான பிடிவாதத்தைக் கண்டு சிரித்தபடி அவனுடைய நெற்றியில் முத்தமிட்டுவிட்டு உறங்கிப்போனாள் நிலாஞ்சி.

அதன்பிறகு வந்த நாட்களில் குழந்தைகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தான் ருத்ரா.

அதுவும் நிலாவுக்கு மன உளைச்சல் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான்,

குழந்தைகளுக்கான பெயர்கள், அவர்களுக்குத் தேவையான பொருட்கள், பிறந்ததும் எப்படி வளர்க்க வேண்டும் என இருவரும் சேர்ந்து நிறைய பேசினார்கள்.

அவனுடைய காதலில் எந்த மாற்றமும் இல்லை. அவன் எப்போதும் ஆரலியின் காதலன்தான்!

 

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!