ஆதர்ஷ், ரோஹித் இருவரும் இவர்களோடு இணைந்துகொள்ள, ஷாப்பிங் என்கின்ற பெயரில் இவர்கள் ஆறு பேரும் மும்பையை ஆனந்தமாக வலம்வந்து கொண்டிருந்தனர்.
இதற்கிடையில் சமீர், ஆயிஷாவின் மூலமாக அவர்கள் வெளியே வந்திருப்பதைத் தெரிந்துகொண்டு, எப்படியாவது ஜியாவிடம் பேசிவிடலாம் என்கின்ற எண்ணத்துடன் அங்கே வர, ஆஷிக் நொடி கூடப் பிரியாமல் ஜியாவுடனே இருந்ததால், சமீரால் ஜியாவிடம் தான் பேசவேண்டும் என்று நினைத்த எந்தக் காரியத்தையும் பேச முடியவில்லை.
சமீரின் அருகாமை ஜியாவுக்கு அவ்வப்போது பதற்றத்தை ஏற்படுத்தினாலும், தன் கோர நினைவுகளுக்குக் கடிவாளம் இடுவது போல, ஆஷிக்கின் அரவணைப்பு நொடிப் பொழும் நீங்காமல் அவளுக்குக் கிடைத்ததால், ஜியாவுக்குப் பெரிய கலக்கத்தை ஏற்படுத்தவில்லை.
மாலில் ஷாப்பிங், மனதிற்குப் புடித்த உணவு என்று அன்று நாள் மற்றவர்களுக்கு எப்படியோ? ஆனால் ஜியாவின் காயப்பட்ட மனதிற்கு அது பெரிதும் இதம் அளித்தது.
***
சூரிய கதிர்கள் தட்டி எழுப்ப மெதுவாய் தன் இமையைத் தட்டி தட்டி விழித்தவள், மூச்சு காற்று தன்மீது பட ஒரு சிறு பாலகன் போலத் தன்னைக் காற்று கூட நுழைய முடியாதளவிற்கு இறுக்கி பிடித்து, நிம்மதியாய் துயில் கொண்டிருந்த தன்னவனைத் தன் விழிகளாலேத் தழுவினாள். இந்த உலகம் இப்படியே செயல் இழந்து நின்றுவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவளது உள்ளம் ஏங்கியது.
“என்னால உனக்கு எவ்வளவு கஷ்டம் ஆஷிக்? இதுக்குதான் உனக்கு நான் வேண்டாம்னு எவ்வளவோ சொன்னேன்.” என்றவள் கூறும் பொழுதே கண்ணீர் கண்களை முட்டிக்கொண்டிருக்க, விழிநீர் வடியும் முன்பே துடைத்து தன்னவனின் நுதலில் தன் இதழை பதித்தவள்,
அவனது உறக்கம் கலையாமல் அங்கிருந்து நழுவிய நேரம் பார்த்து, தன் இமைகளைத் திறக்காது தூக்க கலக்கத்திலே தன்னவளின் இடையை வளைத்துப் பிடித்து, தன் மீது போட்டு மேலும் இறுக்கி அணைத்தவன்,
அவளுக்கு மட்டும் கேட்குமாறு, “பேபி டால், என்னை விட்டுட்டு எங்க போற?” என்று கிறக்கத்துடன் தன்னவளின் செவிமடலை உரசியவாறு கூற, அவனது மூச்சு காற்றும் மீசையின் குறுகுறுப்பும் போட்டிப் போட்டுக்கொண்டு, அவளது காதுமடலை தீண்டி வெட்கத்தை உண்டாக்க, இதழ் அசைத்து நாணத்தோடு குனிந்து கொண்டாள்.
அவளது முகத்தை நிமிர்த்தி தன்னுள் ஊடுருவும் இருவிழிகளையும் பார்த்து, “கண்ணை உருட்டி என்னைத் தாக்கினதெல்லாம் முன்னாடி. இப்போ இது மட்டும் வேலைக்காகாது.” என்று கண்சிமிட்டியவன், தன் காதல் ஓவியத்தை முத்தம் என்னும் தூரிகை கொண்டு தன்னவளின் செவ்விதழில் வரைந்தான்.
விருந்தினர்களின் வருகை, ரிசப்ஷனுக்காக மெஹந்தி மற்றும் அவ்வப்பொழுது தனது அன்பு கணவனின் இன்ப தொல்லைகள் என்று ஜியாவிற்கு, பொழுது கடந்து இரவு எப்பொழுது வந்ததென்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு அவள் மகிழ்ச்சியாய் இருந்தாள்.
***
அன்று இரவு ஆஷிக் தன் நண்பர்களுக்கு ஹோட்டலில் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்ததால், ஆஷிக்கின் கல்லூரி நண்பர்கள் மற்றும் அவனுடன் பணிபுரியும் சக ஊழியர்கள் என்று அனைவரும் வந்துவிட, தன்னை அழைக்க வந்த ஆதர்ஷிடம் ஜியாவிடம் கூறிவிட்டு வந்துவிடுவதாகச் சொல்லி அவளைத் தேடி தன் அறைக்கு வந்தான்.
இரவு… அதே இரவு… தன் வெளிச்சத்தைச் சூறையாடிய அதே இரவு. கனத்த மனதுடன் சூழ்ந்திருந்த காரிருளில் தான் பறிகொடுத்த எதையோ தேடுவது போல், பால்கனியில் தன் குறுக்கே இருந்த கம்பியை இறுக்கப் பிடித்தவாறே, வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அது ஒரு அழகான காட்சி. தன்னிடம் மறைந்து மறைந்து போக்குக் காட்டிக்கொண்டிருந்த தன் நிலவு காதலியை, மேகக் காதலன் துரத்த, தன்னை மையம் கொள்ளத் துடிக்கும் தன் காதலனின் பிடியில் சிக்காமல் இருக்க, நிலவு சிணுங்கியவாறே ஓடி ஒளிந்து கொண்டிருக்க, விடமாட்டேன் என்று மேகம் துரத்த, வானில் அப்படி ஒரு அற்புதமான காட்சி. எப்படிப்பட்ட மூர்க்கனும் அதைப் பார்த்தால் கவி பாடுவான், காதல் பேசுவான்.
ஜியா என்ன விதிவிலக்கா? வெறித்துப் பார்த்தவளின் விழிகள் மெல்ல அதை ரசிக்கத் தொடங்கியிருந்த நேரம், திடீர் மாற்றம் போல ஜியாவின் விழிகளில் ஒருவித பிரம்மை கருநிற மேகம். அதில் ஆங்காங்கே தெரிந்த கோரப்பற்கள். பயத்தில் நடுங்கியவாறு ஓடிக்கொண்டிருந்த நிலவை, விடமாட்டேன் என்பது போலத் துரத்துகிறது அந்தக் கரு நிற மேகம். வானமே அதிரும் அளவிற்குச் சிரிப்பொலி. இறுக்கத் தன் செவியையும் விழிகளையும் மூடி கொண்டாள். தன்னால் நம்ப முடியவில்லை. கற்பனை கூடச் செய்ய முடியாதளவிற்கு ஒரு கோரமான காட்சி. நிஜமா! கனவா! கற்பனையா! என்று விழி மலர்ந்து மீண்டும் வானத்தைப் பார்த்தாள்.
தன்னை இறுக்க அணைத்துக் கொண்ட தன் மேக காதலனிடம் இருந்து தன்னை விடுவித்து, வெட்கத்தில் சிவந்தது போல நன்கு ஒளிவீசிய நிலா, தன்னைப் பார்த்துச் சிரிப்பது போல விழிகளுக்குத் தெரிய, தன் நிலையை எண்ணி மனம் நொந்தாள்.
விழிகளை அழுந்த மூடி திறந்தவளின் மனதிற்குள் அதே கேள்விகள். சமீரைக் கண்டத்தில் இருந்து அவளது மனதிற்குள் எழுந்த அதே கேள்விகள் மீண்டும் அவளைத் துரத்தியது.
‘சமீர், ஆஷிக்கிட்ட என்ன சொல்லிருப்பான்?
யார் எல்லாம் நான் பார்க்க வேண்டாம்னு நினைச்சேனோ அவங்க எல்லாரும் ஏன் என்னை விடாம துரத்துறாங்க?
என்னோட பாஸ்ட் சம்பந்தபட்ட யாரையும் நான் சந்திக்கக் கூடாதுனு இருந்தேன். இப்போ ஒவ்வொருத்தரா என் வாழ்க்கையில வராங்க. சமீர், ஆயிஷாவதான் கல்யாணம் பண்ணிக்கணுமா என்ன?’ கண்ணீர் அவளது விழிகளில் வந்தடைய, நெஞ்சுக்குள் சொல்ல முடியாத வலி ஆட்கொண்டது.
வழிந்தோடிய விழி நீரை அவள் துடைக்கவும்,
இருக்கரங்கள் அவளைப் பின்னால் இருந்து அணைத்துக்கொள்ள, இந்த திடீர் நிகழ்வால் சட்டென்று திருப்பியவளைப் பார்த்து கண்சிமிட்டிய ஆஷிக்,
“நான்தான், என்னைத் தவிர யாருக்கு என் செல்லத்தை நெருங்குறதுக்குத் தைரியம் இருக்கு?” என்றவாறு இடையோடு சேர்த்து வளைத்து கொண்டவன்,
மின்னிக்கொண்டிருந்த நட்சத்திர கூட்டங்களின் வெளிச்சமும், விடாமல் மிளிர்ந்து கொண்டிருந்த குளிர் நிலவின் ஒளியும், தன் மனைவியின் மேல் பட்டு தன்னவளின் அழகுக்கு மேலும் அழகு சேர்த்துக் கொண்டிருக்க,
விழி அகலாது தன்னவளை விட்டு தள்ளி நின்றவன், தன் பார்வையாலே தன்னவளை ரசிக்கத் தொடங்கினான். அவனது காந்த பார்வை மின்சாரம் போல அவளது உயிர் வரை சென்று பாய்ந்ததில், தேகம் சிலிர்த்தாள்.
வீசும் குளிர் காற்று இருவருக்கும் இடையே சொல்ல முடியாத அன்யோன்யத்தை ஏற்படுத்த, அங்கே வார்த்தைகள் எல்லாம் செயல் இழக்க மெளனமாக ஊடல் அரங்கேறியது.
ரோஹித்தை பார்ட்டி ஹாலுக்கு அனுப்பிவிட்டு ஆஷிக்கை அழைத்துக் கொண்டு போக ஆதர்ஷ் வந்ததிற்கு முக்கியக் காரணமே நடாஷாதான்.
பல யோசனைக்குப் பிறகு நடாஷாவிடம் மனம் விட்டு பேசி, தன் மனதில் இருப்பதைக் கூற நினைத்தவனுக்கு, தகுந்த சந்தர்ப்பம் அமையாமல் போகவே, இன்று எப்படியும் கூறவேண்டும் என்று ஆஷிக்கின் இல்லத்திற்கு வந்த ஆதர்ஷ், நடாஷாவைத் தேடி தன் கண்களைச் சுழல விட்டான்.
தோட்டத்துப் பக்கம் அவள் செல்வதைப் பார்த்தவன், மகிழ்ச்சி ததும்ப அவள் இருக்கும் இடத்திற்குச் சென்றான்.
“நடாஷா!” என்று அழைத்தவாறே அவளை நெருங்கிவர,
தன்னை யாரோ அழைப்பது கேட்டு திரும்பி பார்த்தவளின் உள்ளம் ஆதர்ஷைக் கண்டதும் மகிழ்ச்சி கொண்டாலும், முகத்தில் அதைக் காட்டிகொள்ளாதவள் எரிச்சலுடன், “என்ன வேணும்?” என்று அழுத்தி கேட்க,
“உன்கிட்ட பேசணும்.” என்று அவன் கூறியதற்கு தன் புருவம் உயர்த்தியவள், “அதான் ஏற்கனவே எல்லாம் பேசிட்டியே, இன்னும் பேச என்ன இருக்கு?” என்று எரிச்சலோடு கேட்க,
“உன்கிட்ட சாரி சொல்றதுக்காகத்தான் வந்தேன்.” என்று சுருதி இழந்த அவனது குரலைக் கேட்டதும்,
கலங்கியவள், “ஓகே, மன்னிச்சுட்டேன்.” என்று கூறிவிட்டு தன் அலைபேசியைப் பார்த்தாள்.
கோபமுற்றவன் அவள் முன்னால் வந்து நின்று அவளது கையில் இருந்த அலைபேசியை வாங்கி, “எதுக்கு இவ்வளவு ஸீன் போடுற, அதான் சாரி சொல்லிட்டேன்ல?”
“சாரி சொல்றது ஒன்னும் உனக்குப் புதுசு இல்லையே. எல்லாம் பண்ணிட்டு பண்ணிட்டு வந்து சாரி சொல்லுவ, நான் சரி சரினு மண்டைய ஆட்டணுமா என்ன? தப்ப வெறும் ஒரு சாரியால சரி பண்ண முடியாது.” என்று கூறிவிட்டு முகத்தைத் திருப்பியவளை, தன் கரம் கொண்டு தடுக்க, தன் புருவத்தைச் சுருக்கியவாறு நடாஷா ஆதர்ஷிடம்,
“எனக்கு உன்னோட உளறலை கேட்குறதுக்குக் கொஞ்சமும் டைம் இல்லை, ஸோ ப்ளீஸ்…” என்று கூறியதும் மேலும் கோபம் கொண்ட ஆதர்ஷ்,
“ஏன் சொல்லமாட்ட? நான் ஒரு முட்டாள்டி, உன்னை மாதிரி ஒரு சிடுமூஞ்சிட்ட போய் என் ஈகோவ விட்டுட்டு பேச வந்தேன் பாரு…” என்றதும் நடாஷா,
“நான் சிடுமூஞ்சா? சார் ரொம்ப ஜாலி டைப். அப்படியே வாயத் திறந்தா தேன் வந்து காதுல பாயும். சிடுமூஞ்சி நான் இல்லை, நீதான். காசு குடுத்தாலும் சிரிக்காத நீயெல்லாம் பேசாத…” என்று பதிலுக்கு அவனை எரிச்சல்படுத்த, கோபம் தலைக்கேறிய ஆதர்ஷ் அவளைப் பிடித்துச் சுவற்றோடு சாய்க்க,
ஆதர்ஷை தள்ளிவிட்ட நடாஷா, “தொடுற வேலையெல்லாம் வச்சிக்காத. உனக்கு அந்த உரிமை கிடையாது.” என்று கூறிய மறுநொடி, அவளைத் தன் கரங்களுக்குள் இறுக்கமாகச் சிறை வைத்தவன்,
“ஏன் கூடாது? ஒரு தடவ இல்லை, நூறு தடவ தொடுவேன். உன்னைத் தொடுறதுக்கு எனக்கு முழு அதிகாரம் இருக்கு. எனக்கு மட்டும்தான் இருக்கு.” என்றவன் அவள் பதில் கூறும் முன்பே கலங்கிருந்த அவளது விழிகளைப் பார்த்து,
தன் விழிகளில் கோபம் திமிர, “ஐ லவ் யுடி!” என்று அழுத்தமாகக் கூற,
அதைக் கேட்ட பிறகு அவளது விழிகளில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓட, அவள் அவனது மார்பை தன் கரத்தால் குத்தியவாறே,
“லவ் யுவகூட முறைச்சுட்டு தான் சொல்லுவியா?” என்று தேம்பி தேம்பி அழ,
மெலிதாய் புன்னகைத்தவன், “இப்படித் தான்டி எனக்குச் சொல்ல தெரியும்.”
“சும்மா வெறுப்பேத்துனேன், அதுக்கு இவ்வளவு கோபப்படுற? பயந்துட்டேன் தெரியுமா?” என்றவாறு கோபமாய் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
பின்னால் இருந்து அணைத்தவன், “தியரில தான்டா நான் வீக், ஆனா ப்ராக்டிகல்ல நான் ரோமியோ.” என்று அவளது காதோரமாய் கிசுகிசுக்க,
“அப்புறம் ரோமியோ, வேற எதுல எல்லாம் நீங்க ஸ்ட்ராங்?” என்று ஆஷிக் நக்கலாகக் கேட்க,
ஆஷிக்கைக் கண்டதும் நடாஷா வெட்கத்தில் தான் இதோ வந்துவிடுவதாகக் கூறி அங்கிருந்து செல்ல,
ஆஷிக், ஆதர்ஷைப் பார்த்து புன்னகைத்தவாறே, “அப்புறம் பிராக்டிகல் ரோமியோ, உங்க லவ் க்ளாஸ் எல்லாம் முடிஞ்சிட்டுனா நாம கிளம்பலாமா? ரொம்ப நேரமா ரோஹித் கால் பண்றான்.” என்று கிண்டலாய் கூற,
“டேய் நல்ல ரொமான்டிக் மூட்ல இருந்தேன், அதுக்குள்ள என்னடா அவசரம்?”
“ம்ம்… என்னோட ரொமான்டிக் மொமெண்ட்டை ஃபோன் பண்ணி ரோஹித் கெடுத்தான்ல, அப்போ உன்னை மட்டும் எப்படிச் சந்தோஷமா இருக்கவிட முடியும், அதான்டா…” என்று சிரிக்க,
“என்ன ஒரு நல்ல எண்ணம்டா உனக்கு?”
“கங்கிராட்ஸ் மச்சான், அப்போ எப்போ கல்யாணம்?”
“டேய், இப்போதான் ப்ரொபோஸே பண்ணிருக்கேன்.”
“ஆனா நீ பிராக்டிகல் க்ளாஸ் பத்தி எல்லாம் பேசிட்டு இருந்ததைப் பார்த்தா, உனக்கு நாளைக்கே கல்யாணம் பண்ணி வச்சாகணும் போலயே?” என்று இருவரும் ஒருவரை ஒருவர் கேலி பேசியவாறு அங்கிருந்து காரில் வெளியேறிய நேரம், சமீரின் கார் வேகமாக உள்ளே நுழைந்தது.
***
