உறங்கும் பொழுதும் விழித்திருக்கும் பொழுதும் நொடி பொழுதும் விலகாமல், ஜியாவை முழுதும் ஆக்கிரமித்த ஒரே முகம் என்றால் அது ஆஷிக்கின் முகம் தான். கிளம்பும் பொழுதும் தன்னிடம் ஒழுங்காகப் பேசவில்லை. இந்த ஒரு சின்ன விஷயத்துக்காகத் தன்னை அவன் இப்படித் தண்டிக்கிறானே என்று அவளது கண்கள் கலங்கியது.
தன்னையே சுற்றி சுற்றி வருபவன் இப்பொழுது தன்னை ஏறெடுத்து கூடப் பார்க்காமல் இருப்பது, அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அவனது இந்தத் திடீர் மாற்றம் அவளுக்குப் பயத்தைத் திணித்தது. அவன் நெருங்கி வரும்போதெல்லாம் ஜியா விலகி விலகி தான் இருந்திருக்கிறாள்.
ஆனாலும் அவனது இந்தக் கணப் பொழுது விலகலையும் அவளது மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. அவனது அருகாமையை அவளது மனம் நாடியது.
அவன் சென்ற நாளில் இருந்து நாம் அவனைப் பற்றித் தான் நினைக்கிறோம், அவன் அப்படி இல்லையே என்று நினைக்கும் பொழுது அடி வயிற்றிலிருந்து வார்த்தையால் கூற முடியாத, ஒருவித உணர்வு நெஞ்சை அடைத்தது. விட்டால், ‘ஓ’ என்று கதறி அழுதுவிடுவாள்.
ஆஷிக்கிற்கும் அப்படித் தான் ஜியா இல்லாத இடம் அவனை மிகவும் துன்பப்படுத்தியது. தன்னவளின் வாசத்திற்காக அவனது சுவாசம் ஏங்கி தவித்தது. கணப்பொழுதும் அவளது ஞாபகம். அவனது மனம் ஏனோ மிக அதிகமாக அவளுக்காக ஏங்கியது.
இப்படி நாட்கள் நொடிகளாய் கடந்திருக்க மூன்று நாட்கள் ஆன நிலையில் ஆஷிக்கின் அழைப்பை, தன் அலைபேசியின் தொடு திரையில் பார்த்தவளுக்கு, எல்லை இல்லாத மகிழ்ச்சி உள்ளுக்குள் பரவ, “ஆஷிக்!” என்று வாய் நிறைய அழைத்தவாறு ஜியா அழைப்பை அட்டென்ட் செய்ய, தனக்காகத் தன்னவள் தவித்த தவிப்பு, ‘ஆஷிக்’ என்று தனது பெயரை அவள் உச்சரித்த விதத்திலே அறிந்து கொண்டவன்,
பதில் எதுவும் பேசாமல் சிறிது நேரம் அவளது குரலை ரசித்துவிட்டு, “நாளைக்கு நீ டெல்லிக்கு வர்றதுக்கு டிக்கெட் புக் பண்ணிட்டேன். டிக்கெட்ட மெஸேஜ் பண்ணிருக்கேன். டெல்லி ஏர்போர்ட் வந்ததும் எனக்குக் கால் பண்ணு.” என்று சற்று இறுக்கமான குரலில் கூற,
“நீ எப்படி இருக்க? இன்னும் கோபமா தான் இருக்கியா? நான் அன்னைக்கு உன்னைத் தப்பா…” என்று ஆரம்பித்தவளை இடை மறித்தவன் கோபமாகப் பேச மனம் கேளாது,
“இட்ஸ் ஓகே.” என்று மற்றும் கூற,
“ஆஷிக் நீ இன்னும் என் மேல கோபமா தான் இருக்கியா?” என்று தன் மென் குரலில் கெஞ்சியவளிடம், இதற்கு மேல் பேசினால் இவ்வளவு நாள் போட்ட ட்ராமா எல்லாம் வேஸ்ட் ஆகிரும். அப்புறம் சர்ப்ரைஸ் சப்புன்னு ஆகிரும் என்று உணர்ந்து, தன் உணர்ச்சிகளை மிகவும் கஷ்டத்தோடு கட்டுப்படுத்தியவன்,
“நாளைக்குக் கிளம்புற வழிய பாரு, அப்புறம் டெல்லி ஏர்போர்ட் வந்ததும் ஃபோன் பண்ணு என்ன…” என்று அவளிடம் இருந்து பதில் வருவதற்குள் அழைப்பிற்கு முடிவு கட்டியவன்,
“என்ன வாய்ஸ்டி… இதுக்கே என்னை இவ்வளவு கிறங்கடிக்கிறியே? அப்படியே கொஞ்சி கொஞ்சி என் ஃபீலிங்ஸ தட்டி எழுப்பிட்ட. இனிமே தூக்கம் ஏது? சாரி ஹனி பண். நாளைக்கு ஈவினிங் வர தான். அதுக்கப்புறம் நான் உன்னைப் படுத்தினதுக்கு என்னை நீ வச்சு செய்.” என்றவாறு அப்படியே மெத்தை மீது இருக்கரங்களையும் பின்னந்தலைக்குக் கொடுத்தவாறு சாய்ந்து படுத்தான்.
‘உன்னோட கோபத்தைக் கூட நான் தாங்கிக்குவேன் ஆஷிக், ஆனா உன்னோட மௌனம் என்னை ரொம்ப வதைக்குது.’ என்று எண்ணியவள், ஏர்போர்ட் வந்து இறங்கியதும் ஆஷிக் சொன்னது போல அவனுக்கு அழைப்பு விடுக்க,
“நான் வந்துட்டேன் ஆஷிக்.” என்று அவள் ஆர்வமாய் கூற,
“சரி வெளியில வா, அங்க ஒரு…” என்று அவன் கூறவும்,
“நானே வீட்டுக்கு வந்திடுறேன் ஆஷிக், எனக்குத் தான் வழி தெரியுமே?” என்று முந்திக்கொள்ள,
“எனக்குத் தெரியாதா நீ வந்திருவன்னு, நான் சொல்றத செய்.” என்றவன், அவளிடம் அடையாளம் கூறி ஒரு டாக்சியில் ஏறுமாறு கூற,
”டாக்சி புடிக்க எனக்குத் தெரியாதா? அக்கறை இருந்தா வந்து கூப்பிடணும்.” என்று முணுமுணுத்ததை ரசித்தவன், அலைபேசியை ட்ரைவரிடம் கொடுக்குமாறு கூற, அவரிடம் எதோ எதோ பேசியவன் பின்பு ஜியாவிடம்,
“அவர்கிட்ட எல்லாம் சொல்லிட்டேன், அவர் ட்ராப் பண்ணிருவாரு. அவர் ட்ராப் பண்ணினதும் என்னை காண்டாக்ட் பண்ணு.” என்றவன் அழைப்பைத் துண்டிக்க ஜியாவுக்கு உள்ளுக்குள் கஷ்டமாக இருந்தது.
டாக்சி நேராக ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வந்து ஜியாவை இறக்கிவிட, “என்ன இங்க வந்திருக்கீங்க? நான் போக வேண்டிய இடம் வேற…” என்றவளிடம்,
“சார் இங்கதான் மேடம் டிராப் பண்ண சொன்னாங்க.” என்றதும் ஆஷிக்கிற்கு அழைப்பை விடுத்தவள்,
“ஆஷிக், இந்த டிரைவர் வீட்டுக்கு கூட்டிட்டு வரல…” என்று அவள் கூறுவதற்குள் மீண்டும் தடுத்தவன்,
“அவர் சரியா தான் கூட்டிட்டு வந்திருக்காரு. நீ முதல்ல உள்ள போ. பேர சொல்லி ரூம் கீ வாங்கிக்கோ. நான் லைன்ல இருக்கேன்.” என்றதும், அவனது செய்கையின் அர்த்தம் விளங்காமல் ஒருவித தடுமாற்றத்துடன், ரிசெப்ஷனில் தன் பெயரை சொல்லி விசாரிக்க கணினியில் ஆராய்ந்து பார்த்த அந்தப் பெண் ஊழியர்,
“சாரி மேடம், ஜியாங்கிற பேர்ல எந்த புக்கிங்கும் இல்லை.” என்றதும், ஜியா லைனில் இருந்த ஆஷிக்கிற்கு விஷயத்தைக் கூற,
“மிஸ்ஸஸ் ஆஷிக்னு கேளு.” என்று அழுத்தி கூறவும், அவள் சலிப்புடன், “அடிக்கடி சொல்லு ஆஷிக்.” என்று முணுமுணுக்க,
‘குத்தியாடி காட்டற என் ராட்சஷி!’ என்று தனக்குள் புன்னகைத்தவன் அவளிடம், “என்ன?” என்று கடுப்பாகக் கேட்க,
“ஒன்னும் இல்லை.” என்றவள் மேலும் தொடர்ந்து, “ஆஷிக் நீ ஹோடல்லயா இருக்க? ஏன் நாம ஹோட்டலுக்கு…” என்பதற்குள்,
“உள்ளே போ.” என்றவன் மீண்டும் அழைப்பிற்கு முற்று புள்ளி வைக்க, பொங்கி வந்த அழுகையைக் கட்டுப்படுத்தியவள் தன் அறைக்குள் அவனை எதிர்பார்த்து நுழைய, அவன் அங்கே இல்லாது போகக் கட்டுபாடு இழந்து கண்ணீர் கன்னத்தை நனைக்க, அவள் அவனுக்கு அழைப்பு விடுப்பதற்குள் அவளைத் தொடர்பு கொண்டவன்,
“உள்ள போய்டியா?” என்று கேட்கவும்,
“ஆமா நீ இங்க இல்லை, எப்போ வருவ?” என்றவளுக்கு,
“ரெஸ்ட் எடு.” என்றவன் மீண்டும் அழைப்பிற்கு விடை கொடுக்க, அவனது செயலுக்கான விடை அறியாமல் மிகவும் குழம்பினாள். அவன் இல்லாமல் அவளால் அங்கே ஒரு நிமிடம் கூட இருக்க முடியவில்லை, மிகவும் தவித்தாள். அவள் வந்த சில மணி நேரத்தில் கதவு தட்டப்பட,
“ஆஷிக் வந்துட்டியா?” என்றவாறு கண்களைத் துடைத்துக் கொண்டு ஓடி சென்று அவள் ஆர்வமாய் கதவைத் திறக்க, வாசலில் ஒரு பணிப்பெண் நிற்க அவளிடம்,
“இது யார் குடுத்தாங்க? நீங்க வேற யாருக்கோ கொடுக்க வேண்டியதை…” என்பதற்குள் அந்த பெண் ஜியாவின் கையில் அளவில் பெரிய பரிசு பார்சலை கொடுத்துவிட்டு சென்று விட, ஜியாவுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. ஆஷிக்கிற்கு அழைப்பு விடுத்து ஓய்ந்தே போய்விட்டவள், அவனிடம் இருந்து எந்தவித பதிலும் வராமல் போக மிகவும் வேதனை அடைந்தாள்.
பார்ஸலை வெறித்துப் பார்த்து கொண்டிருந்தவளுக்கு, இதெல்லாம் ஆஷிக்கின் வேலையாகத் தான் இருக்கும் என்பது புரிந்தாலும் அவன் ஏன் இப்படிச் செய்கிறான்? கோபப்பட்டதுக்காக என்னைச் சமாதானம் செய்யிறதுக்காக இப்படிப் பண்ணிட்டு இருக்கானா? என்னும் பொழுது உதட்டில் புன்னகை ஒட்டிக்கொண்டாலும், அடுத்த நொடி மனம் அவளது மகிழ்ச்சியைக் கெடுக்கும் விதமாய்,
சமாதானம் செய்யணும்னா நேரடியாக வந்து தரவேண்டியது தானே? அப்போ இன்னும் கோபமா இருக்கதுனால தானே இப்படிப் பண்றான். ஏன் ஹோட்டல்ல தங்க வச்சுருக்கான்? மனது என்று வேறு விதமான கேள்விகளை எழுப்ப, தோன்றிய புன்னகை நொடியில் மறைந்து போய் கண்கள் மீண்டும் கலங்க ஆரம்பித்தது.
பார்ஸலை பிரித்துப் பார்க்க மனம் சொன்னாலும், அவன் அங்கு இல்லாதது ஜியாவிற்கு மிகவும் சங்கடமாக இருந்தது.
‘சமீர் விஷயத்துக்கே நம்மகிட்ட இப்படி நடந்துக்குறானே, பழைய விஷயம் எல்லாம் தெரிஞ்சா கண்டிப்பா நம்மளை வெறுத்து ஒதுக்கிவிடுவான்.’ என்று என்னும் பொழுது உடல் நடுங்கியது.
ஜியாவிற்கு ஹோட்டலில் இருப்பது சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஆஷிக்கின் செயலில் இருந்த இந்தத் திடீர் மாற்றம் அவளுக்குள் எங்கே அவனை, தாம் இழந்துவிடுவமோ என்கின்ற அச்சத்தை ஏற்படுத்த,
ஒருவித நடுக்கத்துடன் அமர்ந்திருந்த பொழுது பாத்ரூமில் இருந்து சத்தம் கேட்க, என்னவாக இருக்கும் என்று ஒருவித தயக்கத்துடன் கதவைத் திறந்துகொண்டு அவள் உள்ளே செல்ல, மக் கீழே விழுந்திருந்ததைப் பார்த்து, ‘இதுதானா’ என்பது போல முகப் பாவனையோடு, அதை எடுத்து அதன் இடத்தில் மீண்டும் வைத்தவள் அங்கிருந்து கிளம்பும் நேரம்,
கதவிற்குப் பின்னால் இருந்து வந்த ஆஷிக், ஜியா சிறிதும் எதிர்பார்க்காத நேரம் அவளைப் பின்னால் இருந்து அணைக்க, அவனது இந்தத் திடீர் செய்கையில், “ஆ…” என்று கத்தியவளின் விழிகளில் கண்ணீர் கட்டி இருக்க,
ஆஷிக் நான்தான் என்பதற்குள்ளே, விழிகள் மூடியவாறு அவன் புறம் திரும்பி அவனது மார்போடு புதைந்தவாறு விசும்பினாள்.
தனது இந்தக் கண நொடி தொடுதலிலே தன்னைத் தன்னவள் அறிந்து கொண்டதில் நாடி சிலிர்த்தவன், ஏங்கி கொண்டிருந்தவளின் முதுகை மென்மையாய் வருடியவாறே, “அழாத… ஈஸிடா, நான்தான் வந்துட்டனே…” என்று ஆறுதல்படுத்த,
அழுது கொண்டே நிமிர்ந்தவள், “ஏன் என்னை விட்டு போன? இவ்வளவு நாளா ஏன் என்கிட்ட பேசல? எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? நான் தான் சாரி சொல்றேன்ல, என்கிட்ட கோபம் மட்டும் படாத ஆஷிக்.” என்று ஒவ்வொரு வரியையும் ஏங்கி ஏங்கி அழுதவாறு பாதி வார்த்தைகள் முழுங்கியவாறு சொன்னவள்,
“சாரி ஆஷிக்…” என்பதற்குள் அவளது இதழை தன் விரல்களால் மூடியவன்,
“சாரி! ஐயம் ரியலி சாரி! உன் மேல உள்ள கோபம் எனக்கு அன்னைக்கே போயிடுச்சுடா.” என்றதும் நம்பிக்கையில்லாமல் தன் விழிகள் விரிய,
“நிஜமாவா!” என்றவளின் விழிகளில், அழுந்த இதழ் பதித்தவாறு ஆமாம் என்பது போல இமை தட்டி மூடினான்.
தன்னவனது மார்பில் சாய்ந்த நொடியில் இருந்து ஜியா உலகத்தையே மறந்து விட்டாள் என்றால் மிகை இல்லை.
அதுவும் அவனுக்குத் தன் மீது எந்தக் கோபமும் இல்லை என்பதை அறிந்த பிறகு, ஜியாவின் ஆனந்த களிப்பிற்கு அளவே இல்லை. அவனது அணைப்பில் அனைத்தையும் மறந்து வேறொரு உலகில் மிதந்து கொண்டிருந்தாள்.
தன் நெஞ்சத்தில் மஞ்சம் கொண்டிருந்த தன் காதல் மனைவியின் சிகையை, மயிலிறகிலும் மென்மையாய் வருடியவன் அவளது காதோரமாய்,
“ரொம்ப மாறிட்டடி.” என்று ஆச்சரியமாய் கேட்க,
“புரியலை…” என்று குழப்பமாய் பார்த்தவளிடம்,
“ஒருவாரம் உன்கிட்ட நான் கோபமா இருந்ததும், நீ என்னை வச்சு செய்வன்னு நினைச்சேன். உன்னை எப்படிச் சமாதானம் செய்வேன்னு பயந்தேன். ஆனா நீ இப்படி என்னை ஒருவார்த்தை கூடத் திட்டாம ஏங்கி ஏங்கி அழுததும் கஷ்டமா போச்சு.
தியா விஷயத்துல எதுவும் கில்ட்டியா ஃபீல் பண்றியா?” என்றவனிடம், பதில் கூறாமல் ஜியா குற்ற உணர்வில் தலை கவிழ நிமிர்த்தியவன்,
‘என்ன?’ என்று விழிகளினாலே கேட்க,
“நம்பிருக்கணும்ல…” என்று குற்ற உணர்ச்சி தளும்ப ஜியா கேட்க,
“நம்புற மாதிரி நடக்க வேண்டியதும் என் கடமை தானே!”
“ஆஷிக்!” என்றவளை இடை மறித்தவன்,
“எல்லாத்தையும் மறந்திரு செல்லம்.” என்றவன் அவளிடம் இருந்து பதில் வராமல் போகவும்,
“ஜியா!” என்று மீண்டும் அழைத்ததில்,
“ம்ம்ம்…” என்று முனங்கியவளிடம்,
“ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன்ல?” என்று வருந்தியவனின் நெஞ்சத்தை விட்டு அகலாது இமைகளை மூடியவாறே,
“தியா விஷயத்தைப் பத்தி கேட்டா இல்லை, ஆனா…” என்று இழுத்தவளிடம், “ஆனா…” என்று கேள்வியாய் ஆஷிக் கேட்க,
“இந்த மூணு நாள் பத்தி கேட்டா ஆமா…” என்று தலையை ஆட்டியவள் பிறகு நிமிர்ந்து கணவனின் இமை நோக்கி,
“ஆனா இது புடிச்சுருக்கு.” என்று இதழ் இசைத்தவளைப் பார்த்து,
“எது?” என்று கிறக்கமாகக் கேட்க, முகம் சிவந்தவள் அவனது மார்பில் முட்டியவாறு, “இது…” என்று தலை கவிழ, கவிழ்ந்திருந்த வதனத்தை நிமிர்த்தியவன்,
“கிஃப்ட்ட ஓபன் பண்ணாமலே வச்சுருக்க?” என்று செவி மடலை உரசியவாறு கேட்க,
“நீ ஏன் தரல? நான் யாருக்கோன்னு நினைச்சேன்.” என்றவள் அவனைப் பேச விடாது மேலும்,
“இங்க இருந்து போவோமா ஆஷிக்? ஹோட்டலுக்கு ஏன் வந்திருக்கோம்? வீட்டுக்குப் போலாம்.” என்று சினுங்க,
“ஸ்டார் ஹோட்டல்டி, புடிக்கலையா?”
“ம்ஹும் இல்லை…” என்று தன் தலையை அசைத்தாள்.
“அப்போ புடிச்சுருக்குன்னு சொன்ன…” என்று தன் புருவம் உயர்த்தி கேட்க, “உன்னை மட்டும் புடிச்சுருக்கு.” என்று அவள் குழைவாகக் கூறிய மறுநொடி,
“என்னை மட்டும் புடிச்சுருக்கா?” என்றவாறு அவளை இறுக்கி அணைத்துக் கொண்டு, தன் செவ்விதழால் அவளது கன்னத்தில் பச்சை குத்தியவன், கூச்சத்தில் சிணுங்கியவளை மேலும் இறுக்கி அணைத்து,
“நான் உனக்குத் தான். முதல்ல உன் புருஷன் உன்னை இம்ப்ரெஸ் பண்ண என்ன கிஃப்ட் வாங்கிருக்கான்னு பாரு…” என்று சொல்ல,
“இம்ப்ரெஸ் ஆகலைன்னா?” என்று புருவம் சுளித்தவளை விழிகளாலே அள்ளி பருகியவன், “முதல்ல பாரு.”
“ஆகலைன்னா?” என்று வம்பிழுத்த தன் மனைவியிடம்,
“இம்ப்ரெஸ் பண்ண என்ன பண்ணணுமோ அதைப் பண்ணுவேன்.” என்று கிறக்கமாகக் கூற,
“என்ன பண்ணுவன்னு சொல்லு.” என்று மீண்டும் ஒருவித கர்வத்தோடு புருவம் உயர்த்திய தன் மனைவியின் பாதத்தில், அவள் எதிர்பார்க்காத நேரத்தில் காதலாய் தன் இதழ் கொண்டு கவி எழுதியவன்,
ஒவ்வொரு விரலாய், விட்டு விட்டு தூறும் மழையைப் போல, கணப் பொழுதில் சிவந்து போன தன் மனைவியின் வதனத்தைப் பார்த்து பார்த்து ரசித்தவாறு தன் செவ்விதழ் பதித்தான்.
என் காதலை சொல்ல வார்த்தைகள் இல்லாமல் போக
என் இதழால் சொல்ல நினைத்தேன்
என் செல்ல இதழ் ஒற்றலுக்கே
இப்படி வெட்கத்தால் என்னைத் தின்றால்
முத்தம் இடும் வேளையில்
என்னிடம் எதை விலையாய் கேட்பாய்!
“இதுக்கேவா?” என்று ஒற்றை வார்த்தையில் தன் புருவத்தை அசைத்துக் கிறக்கமாகக் கேட்டவாறே அவளை நெருங்கி வர, தன் மென் கரங்களால் தன்னவனின் மார்பைத் தள்ளியவள்,
“போதும் ஆஷிக், இதெல்லாம் நீ நல்லா தான் பண்ணுவ. சர்ப்ரைஸ் கிஃப்ட்னு வரும் பொழுது தானே உன் சொதப்பல் எல்லாம் தெரியும்.” என்று வாய்விட்டு சிரித்தவள்,
மெதுவாக அந்த பார்சலை பிரிக்க, அதுக்குள்ளே அடுக்கடுக்காக ஒவ்வொரு பெட்டியுடன் ஒவ்வொரு பொருள் இருக்க, அதை ஒவ்வொன்றையும் தன் கண்கள் விரிய பார்த்தவள் ஆச்சரியத்தில் வாயடைத்து போனாள்.
தன்னவளது திகைப்பை ரசித்தவன் மிக நெருக்கமாக அவளது அருகில் வந்து, “சீக்கிரம் ரெடி ஆகி கீழ பீச் பக்கத்துல வந்திரு, காத்துட்டு இருக்கேன்.” என்றவன், அவள் நிமிரும் நேரத்தில் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு அறையில் இருந்து வெளியேறினான்.
***
