இப்படி அனைத்தும் நன்றாகப் போய்க் கொண்டிருக்க, ஒரு நாள் தற்கொலை முயற்சி செய்து உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், மாளவிகா என்கின்ற பெண் அக்கம் பக்கத்தினர் உதவியோடு ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து வரப்பட்டாள்.
அந்தப் பெண்ணைப் பரிசோதித்ததில் அவள் கருவுற்று இருப்பது தெரிய வர, எப்படியோ ஜியா குழந்தைக்கும் அந்தப் பெண்ணுக்கும் எந்தப் பாதிப்பும் வராமல் அவர்களது உயிரை காப்பாற்றினாள்.
நாட்கள் கடந்திருக்க அந்தப் பெண்ணைக் காண சொந்தம் என்று யாரும் வராமல் போக, பற்றா குறைக்குத் தற்கொலை முயற்சி. கர்பிணியாய் வேறு அந்தப் பெண் இருப்பதால், அவள் மீது ஜியாவிற்கு இரக்கம் வர, அந்தப் பெண்ணுக்குத் தன்னால் முடிந்த உதவி ஏதும் செய்ய முடிந்தால், செய்யலாம் என்கின்ற எண்ணத்தில் அவளை ஜியா அணுகினாள்.
அவளது உடம்பை வழக்கம் போலப் பரிசோதித்து விட்டு, “ஹலோ மாளவிகா, இப்போ எப்படி ஃபீல் பண்றீங்க?” என்று இயல்பாகக் கேட்க,
அந்தப் பெண்ணோ எந்த உணர்வும் இல்லாமல் கடமைக்கு, “ம்ம்ம்…” என்று மட்டும் லேசாகத் தன் தலையை ஆட்டினாள்.
“உங்களை யாருமே பார்க்க வரல, உங்க வீட்ல உள்ளவங்களுக்கு நீங்க இங்க இருக்கிறது தெரியுமா?” என்று கேட்க,
“எனக்கு யாரும் இல்லை.” என்றவள் மீண்டும் அமைதியாக இருந்தாள்.
“இங்க பாருங்க மாளவிகா, வாழ்க்கையில பிரச்சனை எல்லாருக்கும் வரும். அதுக்கெல்லாம் தற்கொலை ஒரு முடிவாகாது.” என்ற ஜியாவிற்கு எந்த உணர்ச்சியையும் காட்டாமல் இருந்தவள்,
ஜியா கடைசியாக, “எத்தனை பேர் குழந்தை இல்லைனு கஷ்டப்படுறாங்க. நீங்க வயித்துல ஒரு உயிரை சுமந்துட்டு இருக்குற நேரம் இப்படிப் பண்ணலாமா?” என்றதும் அந்தப் பெண்ணின் முகத்தில் விவரிக்க முடியாத அப்படி ஒரு உணர்வு. திடீரென்று கண்களில் இருந்து கண்ணீர் தாரைத் தாரையாக வடிய, ஜியா கணப் பொழுதில் அந்தப் பெண்ணின் முகத்தில் தோன்றிய மாற்றத்தை கண்டு ஒன்றும் புரியாமல் குழப்பமாக இருந்தாள்.
அந்தப் பெண் தன் கண்ணீரைத் துடைத்தவாறு ஜியாவின் கரங்களைப் பற்றிக்கொண்டு, “நிஜமாகத்தான் சொல்றீங்களா? நான் அம்மாவாகப் போறேனா?” என்றவாறு தன் வயிற்றைத் தடவியவளின் முகத்தில் ஒருவித ஆனந்தம்.
“உங்களுக்குத் தெரியாதா?” என்ற ஜியாவிடம், இல்லை என்பது போலத் தலையை அசைத்தவள்,
“என் வினித் இல்லாத இந்த உலகத்துல எப்படி வாழப் போறேன்னு தான் நான் தற்கொலைக்கு முயற்சி பண்ணேன். ஏன் என்னை காப்பாத்துனீங்கனு ரொம்பவே வருத்தப்பட்டேன். ஆனா நான் வாழ்றதுக்கு எனக்கு ஒரு அர்த்தம் கிடைச்சுருக்கு. என் வினித்தோட உயிர் இப்போ என் வயித்துல வளருது. இனிமே என் குழந்தைக்காக நான் வாழப் போறேன்.” என்றவளுக்கு ஜியா ஆறுதல் அளித்தாள்.
பிறகு அந்தப் பெண்ணின் மூலமாக அவளுக்கு ஏற்கனவே இதயத்தில் பாதிப்பு இருப்பதை அறிந்த ஜியா, அவளை முழுமையாகப் பரிசோதித்தாள்.
பரிசோதனையில் அந்தப் பெண் உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டத்தில் இருப்பது தெரிய வர, ஜியா மிகவும் வருத்தப்பட்டாள்.
மாளவிகா இப்பொழுது கருவுற்று இருப்பதால், அறுவை சிகிச்சையைத் தாங்கிக்கொள்ளும் அளவிற்கு அவரது உடல் நிலை இல்லை. அப்படி அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் பிரசவத்தின் பொழுது ஐம்பது சதவிகிதம் உயிருக்கு ஆபத்து வர வாய்ப்பு இருக்க, ஜியாவுக்கு இது மிகவும் இக்கட்டான சூழ்நிலையாக அமைந்தது. எத்தனையோ இக்கட்டான சூழ்நிலையை அவள் கையாண்டிருக்கிறாள். ஆனால் இது மற்ற அனைத்திலும் விட மிகவும் ஆபத்தான ஒன்று.
மனச்சிக்கல் இல்லாத சூழ்நிலை, நேர்த்தியான உணவு முறை, முறையான ட்ரீட்மெண்ட், ஒழுங்கான செக் அப், மருந்து, மாத்திரை இதெல்லாம் சரியாகக் கடைபிடித்தால், நிச்சயமாக இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ள முடியும்.
ஏன் இப்படிப்பட்ட பிரச்சனை கொண்ட எத்தனையோ பெண்கள், நல்லபடியாகக் குழந்தையைப் பெற்றிருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் எல்லாரும் மனதளவில் மிகவும் உறுதியாக இருப்பார்கள். அவர்களுக்கு ஆதரவாகக் கண்டிப்பாக அவர்களது குடும்பம் இருக்கும்.
இங்கே மாளவிகாவின் நிலைமை அப்படி அல்ல. கணவனை இழந்து, சொந்த பந்தங்கள் இன்றித் தனியே வாழ்கிறாள். உடலை விட மனதளவில் மிகவும் பலவீனமாக இருக்கிறாள். உடம்பு பலவீனமானால் மருந்து கொடுத்து சரி செய்யலாம், ஆனால் மனதிற்கு என்ன செய்வது? இப்படிப்பட்ட நேரத்தில் எந்தவித உணர்ச்சி சிக்கலும் இல்லாமல் இருக்க வேண்டும் ஆனால் மாளவிகா மனதளவில் மிகவும் வலுவற்று இருப்பதை ஜியா நன்கு உணர்ந்திருந்தாள்.
பொதுவாக இப்படிப்பட்ட நேரத்தில் மருத்துவ விதிபடி தாயின் உயிருக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதால், மாளவிகாவிடம் பொறுமையாக எடுத்து சொல்ல, ஆனால் மாளவிகாவோ அபார்ஷனுக்கு முற்றிலுமாய் மறுத்துவிட்டு ஜியாவிடம் தனக்குத் தன் குழந்தை வேண்டும் என்றும், தனக்கு ட்ரீட்மண்ட் அளிக்குமாறு உதவி கேட்டு கெஞ்ச, ஜியாவிற்கு அவளைப் பார்க்கும் பொழுது மிகவும் சங்கடமாக இருந்தது.
ஜியா மாளவிகாவுக்கு ட்ரீட்மென்ட் அளிக்கத் தயங்கியதற்குக் காரணமே அவரது உடல் நிலைதான்.
அவரது உடல் நிலைக்கு ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகிதான் ட்ரீட்மெண்ட் எடுக்கவேண்டும். இப்படி இங்கையே அட்மிட் ஆக வேண்டும் என்றால், ஹாஸ்பிடல் விதிபடி நோயாளிகளின் சொந்தபந்தங்களில் இருந்து, யாராவது ஒருவர் பொறுப்பெடுத்தாக வேண்டும்.
மாளவிகாவோ யாருடைய துணையும் இல்லாமல் தனியே இருக்கிறாள். மாளவிகாவைப் பார்த்து இரக்கம் கொண்ட ஜியா. மாளவிகாவிற்குத் தானே பொறுப்பெடுக்கலாம் என்று முடிவெடுக்க, ஹாஸ்பிட்டலில் ஜியாவின் முடிவுக்குப் பல பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் ஏதும் தவறு நடந்தால் ஜியாவின் மருத்துவ வாழ்க்கைக்கே கேடு வர கூடும் என்று, அவரவர்களின் அனுபவபடி அறிவுறுத்தினர்.
இதனால் மிகவும் குழப்பத்தில் இருந்த ஜியாவுக்கு, சமீர் தான் ஆதரவாய் இருந்தான்.
ஜியா எடுக்கும் எல்லா முடிவுகளிலும் பக்கபலமாக இருப்பதாக உறுதியளித்தவன், அதில் கடைசி மட்டும் உறுதியாக இருந்தான்.
சமீரின் அறிவுரையால் தெளிவடைந்த ஜியா அவனுடைய ஆதரவோடு, மாளவிகாவின் கேஸை சில நிபந்தனையோடு எடுக்க முடிவு செய்தாள்.
அதன் பேரில் மாளவிகாவிடம், “உங்க கேஸ நான் எடுத்துக்கணும்னா நான் சொல்றபடி நீங்க நடந்துக்கணும். முக்கியமா உங்க மனச ரொம்ப அமைதியா வச்சுக்கணும். நீங்க கொஞ்சம் ஸ்ட்ரெஸ் ஆனாலும், அது உங்க ஹார்ட்டை தான் பாதிக்கும். உயிருக்கு ஆபத்தாகிடும்.” என்றவள் மேலும் தொடர்ந்து,
“உங்களுக்கு ட்ரீட்மெண்ட் குடுக்குறேன். ரெண்டு வீக்ஸ்ல உங்க உடம்புல நான் எதிர்பார்க்கிற இம்ப்ரூவ்மென்ட் இருந்தா ஓகே, இல்லனா ஐயம் சாரி… ஒரு டாக்டரா நான் உங்க உயிரை தான் சூஸ் பண்ணுவேன். அதுக்கு நீங்க ஒத்துக்கணும். இதுக்கு ஓகேனா இந்த ஃபார்ம்ல சைன் பண்ணுங்க.” என்ற தன் நிபந்தனையைத் தெரிவித்த ஜியாவிடம் மாளவிகா,
“உங்கள நான் நம்புறேன், கண்டிப்பா நீங்க என்னையும் என் குழந்தையையும் காப்பாத்துவீங்க.” என்றார்.
அன்றில் இருந்து மாளவிகா, ஜியாவின் அறிவுரைப்படி நடந்துகொள்ளவார். முன்பை விட மாளவிகா உடலளவிலும் மனதளவிலும் தேர்ச்சி பெற்றிருக்க, ஜியா எதிர்பார்த்ததை விட அவரது உடம்பில் அதிக முன்னேற்றம் தெரியவே, ஜியாவுக்குள் புது நம்பிக்கையே பிறந்தது. மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். மாளவிகாவை சந்தித்ததில் இருந்து ஒருவித கவலையிலே இருந்த ஜியாவின் முகத்தில், மீண்டும் சந்தோஷத்தை கண்ட சமீரும் மகிழ்ச்சி அடைந்தான்.
அனைத்தும் நன்றாகப் போய்க்கொண்டிருக்க, ஆறு மாதங்கள் ஆன நிலையில், ஸ்கேன் ரிப்போர்ட்டில் குழந்தையிடம் வழக்கத்தை விட அதிகப்படியான வளர்ச்சி தெரிய, திடீரென்று ஏற்பட்ட இந்த மாற்றம், ஜியாவிற்கு மிகவும் குழப்பத்தை அளித்தது.
இதைப் பற்றித் தனது சீனியர் மருத்துவர்களிடம் ஆலோசனை எடுத்தவளுக்கு, தெளிவான எந்த முடிவும் கிடைக்கவில்லை. சில பேர் “இந்தக் காலக்கட்டத்தில் ஒரு சில பேருக்கு அப்படி இருப்பது இயல்பு.” என்று கூற,
சில பேர், “நீங்க இந்த கேஸ்ல ரொம்பவே அட்டாச்ட்டா இருக்கீங்க. அதான் எங்களுக்கு நார்மலா தெரியிற விஷயம் உங்களுக்கு அப்நார்மலா தோனுது. நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க, இதைப் பத்தி அதிகமா யோசிக்காதீங்க. சைக்காலஜிக்கலா நீங்க ரொம்ப அஃபக்ட் ஆகுற மாதிரி தோ னுது” என்று அவர்கள் ஜியாவை மனநலம் பாதிக்கப்பட்டவள் போலப் பார்க்க,
இன்னும் சில பேர், “நாங்க ஆரம்பிக்கும் பொழுதே இந்தக் கேஸ உங்கள அவாய்ட் பண்ண சொன்னோம். உங்க ஏஜ்ல உங்களுக்கு இந்த ரிஸ்க் தேவையா? எக்ஸ்பீரியன்ஸ் ஆன டாக்டர்ஸே இப்படிப்பட்ட கேஸ் வந்தா அவாய்ட் பண்ண தான் பார்ப்பாங்க. இது கேரியர் சம்பந்தப்பட்ட பிரச்சனையாச்சே, நீங்க கொஞ்சம் யோசிச்சுருக்கணும். ஆனா அந்த பேஷண்டுக்கு சொந்தம்னு யாரும் இல்லாதனால உங்களுக்குப் பெருசா எந்தப் பிரச்சனையும் வராது.
இருந்தாலும் நீங்க என்ன பண்ணுங்க, எதுக்கும் முன் எச்சரிக்கையா அந்தப் பொண்ணுகிட்ட அவங்களோட ஹெல்த்த காரணம் காட்டி, சப்போஸ் உயிருக்கு எதுவும் ஆனாலும் டாக்டரும் நிர்வாகமும் எந்தப் பொறுப்பும் இல்லைனு ஒரு சைன் வாங்கிருங்க. அது பெட்டரா இருக்கும்.” என்று கூற, ஜியாவுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. மனுஷனோட உயிரை விட கேரியரா முக்கியம்? ஒரு டாக்டரா இருந்துட்டு இவர்களால் எப்படி இப்படி மனுஷ தன்மையே இல்லாமே பேசமுடியுது என்று கலங்கியவள், சமீரின் துணையோடு அவனுக்குத் தெரிந்த மருத்துவரிடம் ஆலோசனை எடுத்தாள்.
ரிபோர்ட்ஸை ஆராய்ந்தவர் இதில் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று கூற, அவளும் சற்று ஆறுதல் அடைந்தாள். ஆனால் அதெல்லாம் சிறிது காலத்துக்குத் தான்.
நாளுக்கு நாள் குழந்தையின் வளர்ச்சியில் மாற்றம் தெரிய, இதற்கு மேல் சமீரையும் தொந்தரவு செய்ய விரும்பாதவள், மற்றவர்களிடம் இதைப் பற்றிப் பேசுவதும் பயன் இல்லை என்பதை உணர்ந்து, தானே இதில் உள்ளதை கண்டறிய திட்டமிட்டாள்.
அதன் பேரில் மாளவிகாவின் அனைத்து டெஸ்ட் ரிபோர்ட்ஸையும் ஒருமுறைக்குப் பலமுறை ஆராய்ந்தவளுக்கு ஒன்றும் புலப்படாமல் போக, ஒருவேளை நான் கொடுக்கும் மருந்தால் கூட இப்படி இருக்குமோ? என்று எண்ணியவள்,
ஒரு வாரத்துக்கு மாளவிகாவுக்கு வழக்கமாகக் கொடுக்கும், எந்த மருந்து மாத்திரையும் கொடுக்க வேண்டாம் என்று நர்ஸிடம் தெளிவாகக் கூறிவிட்டாள்.
நாட்கள் கடந்திருக்க ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த ஜியாவுக்கு, குழந்தையின் வளர்ச்சி முன்பை விட நாளுக்கு நாள் வழக்கத்தை விட, அதிகரித்துக் கொண்டே போவது மேலும் பதற்றத்தை தான் அதிகரித்தது.
காரணம் ஐந்து மாதங்களே கடந்திருக்கும் மாளவிகாவிற்கு எட்டு மாத குழந்தைக்கு உரிய வளர்ச்சி தெரிய, உடனே அன்று மதியமே மாளவிகாவிற்கு அனைத்து விதமான டெஸ்ட்களையும் எடுப்பதற்கு ஏற்பாடு செய்தாள்.
மாளவிகாவின் ரிப்போர்ட்டில் தனக்குச் சந்தேகம் வந்ததில் இருந்து, ஜியா முக்கால்வாசி இரவு ஹாஸ்பிடலில் தன் அறையில் தான் தங்குவாள். அப்படி இருக்க அன்று இரவு ஒரு பன்னிரெண்டு மணியளவில் ஜியா தன்னை அறியாமல் கண் அசந்திருந்த நேரம்,
நர்ஸ், “மாள… விகா…” என்று பதறிக்கொண்டு வந்தழைத்த மறுநொடி, அங்குச் சென்ற பொழுது ஜியா கண்ட காட்சி அவளது நெஞ்சை அப்படியே உலுக்கிவிட்டது.
***
