காதல் 58

படுக்கையெல்லாம் குருதியால் நனைந்திருக்க, வலியில் கண்கள் மேலே சொருகியவாறு முகமெல்லாம் வியர்த்துக் கொட்ட, அந்த அறையே அலறும் அளவிற்கு மாளவிகா,

“ஜியா மேடம்… ஆ… ஆ…” என்று வலியில் கதறி அழுது கொண்டிருந்தாள். 

குருதி நிற்காமல் ஓட, ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்லும் வழியிலே, ஜியாவின் கைகளை இறுக்கி பற்றிக்கொண்ட மாளவிகா,

“நீங்க எங்களைக் காப்பாத்திருவீங்கன்னு எனக்குத் தெரியும்.” என்று கூறிய ஒரு சில நிமிடத்தில் பயங்கர அலறலுடன், உடல் பாதிச் சிதைந்திருக்க இறந்த நிலையில் தன் குழந்தையைப் பெற்றெடுத்து விட்டு, அவளும் ஜியாவின் மார்பில் சாய்ந்தவாறே தன் கண்களை மூடினாள். 

“எங்களைக் காப்பாத்திருவீங்கன்னு எனக்குத் தெரியும்.” என்ற வரி ஜியாவை நிலைகுலைய செய்தது. 

“அம்மா…” என்ற அலறல் அவளது காதை இரண்டாகக் கிழித்தது. பிடித்துப் பார்த்தாள், நாடியில் துடிப்பில்லை. தன் சுவாசம் அடைத்துக்கொள்ள, குருதியில் மூழ்கி உயிரற்று கிடந்த பிஞ்சு உயிரைப் பார்த்தவாறே தேகம் விரைத்து, கண்கள் சொருகி கீழே விழுந்தாள் ஜியா. 

மறுநாள் நினைவு திரும்பி கண்விழித்து ஜியா பார்த்த பொழுது சமீர், சுஜித், ஜீவா, வருண் நால்வரும் அவள் அருகில் இருந்தனர். அவளுடன் வேலை பார்க்கும் அனைவரும் அவளுக்கு ஆறுதல் அளிப்பதற்காகப் பலவாறு வார்த்தைகளைத் தயார் செய்து, தங்களின் பங்கிற்கு ஆறுதல் அளித்தனர். 

சமீர் தன்னால் முடிந்தவரை ஜியாவுடனே இருந்தான். அந்த நிலையில் அவளைத் தனியாக விடுவதில் அவனுக்கு மனமில்லை. 

இரண்டு நாட்கள் கழிந்திருக்க அனைத்தும் சகஜ நிலைக்கு வந்துவிட, ஜியா மட்டும் அதிர்ச்சியிலே இருந்தாள். பார்க்கும் நோயாளிகளிடம் எல்லாம் மாளவிகாவின் முகம் கண்டாள். குழந்தைகள், ரத்தம் என்றாலே அலறினாள். காதில் மாளவிகாவின் கதறல் ஓயாமல் ஒலித்துக் கொண்டு இருக்க, எதிலும் அவளால் கவனம் செலுத்த முடியவில்லை. 

‘மாளவிகாவிற்கு எங்கே அநியாயம் செய்து விட்டோமோ?’ என்று சிந்தனைகள் கடிவாளம் இடாத குதிரையைப் போலத் தறிகெட்டு ஓடியது. மூச்சே நின்றுவிடும் போலத் தோன்றியது. கண்களில் நீர் திரண்டது. முகமெல்லாம் வெளிறியது. உடம்பெல்லாம் நடுநடுங்கியது. ஆழிப்பேரலையில் சிக்கியது போல நீங்கா துயரத்தில் துடித்தாள். 

அப்பொழுது, “எக்ஸ்க்யூஸ் மீ மேம்…” என்று அனுமதி வேண்டியவாறு அவளது அறைக்குள் வந்த நர்ஸ், ஜியாவின் வெட வெடத்த முகத்தைப் பார்த்து, 

“மேம் நான் வேணும்னா, அப்புறமா வரட்டுமா?” என்று கேட்க, 

தன் முகத்தைக் கைகுட்டையால் துடைத்தவள், “சொல்லுங்க லலிதா, என்ன விஷயம்?” என்று தன்னை நிதானப்படுத்திகொண்டு கேட்க,

அவள் தயங்கியபடி, “மேம் இது மிஸ்ஸஸ் மாளவிகாவுக்கு லாஸ்ட்டா எடுத்த டெஸ்ட் ரிப்போர்ட்ஸ்.” என்றவாறு ஜியாவிடம் மாளவிகாவின் ரிபோர்ட்ஸை நீட்ட, சுரத்தே இல்லாமல் ஆளே இல்லை, ரிப்போர்ட்ஸ்க்கு என்ன வேலை என்று கசந்த புன்னகையோடு,

“இப்படி டேபிள்ள வச்சுட்டு போங்க.” என்றுவிட்டு தன் கண்களை மூடியவளிடம்,

“அவங்களோட திங்ஸ் இன்னும் அப்படியே அவங்க ரூம்ல இருக்கு.” என்று தயங்கிய நர்ஸிடம், தன் கண்களை மூடியவாறே இடைமறித்தவள்,

“என்கிட்ட ஏன் கேட்குறீங்க?” என்று விரக்தியாகக் கேட்க, 

“இல்லை மேம், ரெண்டு நாளா நீங்க அப்செட்டா இருந்தீங்க. அதனால ரூமை இன்னும் க்ளீன் பண்ணாம வச்சுருக்கோம். நீங்க ஒருவார்த்தை சொல்லிட்டீங்கன்னா க்ளீன் பண்ணிருவோம்.”

“கோ அஹெட்!” என்றவள் மீண்டும் தன் கண்களை மூடிக்கொள்ள, 

மாளவிகாவை கண்ட முதல் நாளில் இருந்து ஒவ்வொன்றாக அவளது நினைவிற்கு வர, மனம் ஒவ்வொன்றாக அசைபோட்டதில் நன்றாக வளர்ந்திருந்த கருவில், இந்தத் திடீர் மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று அவளது மனம், அதே கேள்வியில் சுழன்று கொண்டிருக்க விடை மற்றும் கிடைத்தபாடில்லை. 

தலையே சுற்றியது. கோபத்தில் தன் மேசையில் இருந்த ஃபைலை தட்டி விட, ஃபைலோடு சேர்த்து இதர சில பொருட்களும் அங்கிருந்து சிதறி, “மே ஐ…” என்று கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்த சுஜித்தின் கால்களில் வந்து விழ, ஜியா அதைக் குனிந்து எடுக்க முற்பட அவளைத் தடுத்த சுஜித், 

“ப்ளீஸ் ஜியா வாங்க, வந்து உட்காருங்க.” என்று நாற்காலியில் அமர வைத்து, கண்ணாடி கோப்பையில் தண்ணீர் பிடித்துக் கொடுக்க அதை வாங்காதவள் ஒருவித பதற்றத்துடனே இருக்க, அதை மேசையில் வைத்தவன்,

தானே குனிந்து அனைத்து பொருட்களையும் எடுத்து மேசையில் வைத்துவிட்டு, சிதறிய பேப்பர்களையும் ஃபைலில் அடுக்கியவாறு அதை அவளிடம் நீட்ட, 

அவன் முன்பு தன் பதற்றத்தைக் காட்ட விரும்பாதவள் மிகச் சிரமப்பட்டு, தன் கைகளின் நடுக்கத்தைக் கட்டுப்படுத்தியவாறு வாங்கிக்கொண்டு, 

“என்ன விஷயம் மிஸ்டர் சுஜித்?” என்று நிதானத்துடன் கேட்க, 

“வார்டு நம்பர் டூ நாட் டூ பேஷண்ட்க்கு இன்னைக்கு டிஸ்சார்ஜ். டிஸ்சார்ஜ் சம்மரி ரெடி ஆகிடுச்சு, உங்களோடு சைன் இருந்தா போதும்.” என்றதும் ஃபைலை வாங்கி ஒருமுறைக்கு இருமுறை நன்கு ஆராய்ந்துவிட்டு சைன் போட்டு கொடுத்தவள், அவன் தன் அறையை விட்டுச் செல்லும் வரை அவனையே பார்த்து தன் புருவத்தை ஒருவித எரிச்சலோடு சுளித்தாள். 

மாளவிகாவின் ஃபைலையே பார்த்த ஜியா, ட்ரான்ஸ்பரென்ட்டான அந்த ஃபைலின் மேல் பகுதி வழியாக மங்கலாக ஏதோ வார்த்தைகள் தெரிய, அதைச் சிறிது நேரம் பார்த்தவள் ஒருவித சலிப்புடன் தண்ணீரை அருந்த முற்பட, திடீரென்று எதையோ யோசித்தவள் சட்டென்று ஃபைலை வேகமாய்ப் பிரித்து, முதல் பக்கத்தில் இருந்த பிளட் ரிப்போர்ட்டை படித்தவள் அதிர்ந்து விட்டாள். 

அதிர்ச்சியும் கோபமும் கலந்தவளாய் யாருக்கோ ஃபோன் போட்டவள், “ஆஸ்க் லலிதா டூ பீ இன் மை கேபின் ரைட் நவ்.” என்று அழுத்தமாய் கூறிய மறுநொடி, தன் அறைக்குள் நுழைந்த லலிதாவின் முகத்தில் பிளட் ரிப்போர்ட்டை காட்டி அதைப் படிக்கும்படி சொல்ல, 

லலிதாவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனால் தன் மீது எதோ ஒரு கோபத்தில் இருக்கிறார் என்று மட்டும் அவளுக்கு நன்றாகப் புரிந்திருந்தது. 

“என்னாச்சு மேடம்?” என்றவளை இடைமறித்த ஜியா, 

“எப்படி உங்களால இவ்வளவு இர்ரெஸ்பான்ஸிபிளா இருக்கு முடிஞ்சுது?” என்று சீற, 

“என்ன… என்… னா… ச்சு… மேடம்?”

“மாளவிகாவுக்கு எந்த மெடிசினும் ஒன் வீக் குடுக்க வேண்டாம்னு சொல்லிருந்தேன், அப்புறம் எப்படிப் பிளட் ரிப்போர்ட்ல மெடிசின் ட்ரேசஸ் இருக்கு?” என்று கடுகடுக்க, 

“எனக்குச் சத்தியமா தெரியாது மேடம். நீங்க சொன்ன மாதிரி நான் அன்னைக்கு எந்த மெடிசினும் குடுக்கலை.” என்று ஜியாவின் கால்களைப் பிடிக்காத குறையாகக் கெஞ்சியவளை ஜியாவால் நம்பாமல் இருக்க முடியவில்லை.

‘லலிதா இல்லைன்னா, வேறு யாரு இப்படிச் செஞ்சிருப்பாங்க? இப்படிப் பண்றதுனால என்ன லாபம்? ஒருவேளை இந்த மெடிசின் தான் மாளவிக்காவோட…’ என்று கேள்விகள் போட்டி போட்டு வந்தது. 

‘மெடிசின் ட்ரேசஸ் ஃபவுண்ட்னு மட்டும் தான் ரிப்போர்ட்ல இருக்கு. அது என்ன மெடிசின், யார் பண்ணினாங்கன்னு எப்படிக் கண்டு புடிக்கிறது?’ என்று குழம்பினாள். 

‘நோ ஜியா, இதுல குழம்புறதுல யூஸ் இல்லை திங்க்… திங்க்…’ என்று யோசித்தவள், “மாளவிகாவோட ரூம்… நோ இதைப் பண்ணினவங்க நமக்காக நான்தான்னு க்ளூவை விட்டுட்டா போவாங்க? இல்லை தான்! ஆனா எம்ப்ட்டி இன்ஜெக்சனை கையோட கொண்டு போக மாட்டாங்க.’  

அடுத்த நொடி மாளவிகாவின் அறைக்குள் நுழையவும் அங்கே ஸ்வீப்பர்கள் அறையில் உள்ளே பொருட்களை அப்புறப்படுத்திக் கொண்டிருக்க, 

அவர்களைத் தடுத்தவள் எடுத்த பொருட்களை அப்படியே வைத்துவிட்டுச் செல்லுமாறு பணிக்க, அவர்கள் மறுபேச்சுப் பேசாமல் அங்கிருந்து சென்றனர். 

அறையைச் சோதனையிட்டவளுக்குத் துல்லியமான எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. ஆனால் அவள் எதிர்பார்த்தது போல நான்கைந்து மருந்து ஊசிகள், மருந்து பாட்டில்கள், குருதி படிந்த கையுறைகளோடு சேர்த்து எதிர்பாராத ஒன்றும் கிடைத்தது. 

அது, இரெண்டு முனையில் ஒரு முனை மட்டும் பாதி உடைந்த நிலையில் இருந்த வி வடிவமுள்ள சிறு டாலர். 

சிறிதும் தாமதிக்காமல் மருந்து ஊசியில் இருந்து மருந்து பாட்டில் வரை, உறைந்தும் உறையாமலும் இருக்கும் இமியளவு திரவத்தையும் தனித் தனியே பரிசோதித்தாள். கிடைத்த நான்கு மருந்து பாட்டில்களும் மாளவிகாவிற்குத் தான் பரிந்துரைத்த மருந்து என்று ஊர்ஜிதமாக, மருந்து ஊசியில் ஐந்தில் நான்கு மட்டும் தான் மாளவிகாவிற்கு வழக்கமாகக் கொடுத்த மருந்து. 

மீதம் இருந்த ஒரு மருந்து ஊசியில் உள்ளது வேறு மருந்து, அதை ஜியா பரிந்துரைக்கவில்லை. அந்த மருந்து கலவையை மேலும் ஆராய்ந்து பார்த்தவள், அதில் வெளிநாட்டில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து ஹாஸ்ட் டிஆர் இருப்பது தெரிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தாள். 

ஏன் செய்தார்கள்? எப்படித் தடை செய்யப்பட்ட மருந்து நம் ஊரில்? என்று வரிசைகட்டி கொண்டு வந்த கேள்விகளை ஒதுக்கியவள், முதலில் யார் என்ற கேள்விக்கு விடை அறிய துடித்தாள். 

யார் அந்த ‘எக்ஸ்’ ஆணா? பெண்ணா? எப்படி தன் கேள்விக்குப் பதிலை அறிவது என்று அவள் மனம் குழம்பியது. 

தடை செய்யப்பட்ட மருந்தை இவ்வளவு தைரியமாக உபயோகப்படுத்தி இருக்கிறார்கள் என்றால், கண்டிப்பாக வெல் பிளான் பண்ணிதான் பண்ணிருப்பாங்க. அப்போ எப்படி ஊசியையும் க்ளவ்ஸையும் போட்டுட்டு போனாங்க?

விழி பிதுங்கின தடயம் என்று அவளிடம் மீதம் இருப்பது உடைந்து போன டாலர் மற்றும் ஒரே ஒரு கையுறை. அது தன்னுடையது இல்லை என்பதை உறுதிப்படுத்தியவள், கையுறை நிச்சயம் அது ‘எக்ஸ்’ உடையது தான். ஏன் என்றால் நோயாளிகளைத் தொட்டு பார்த்து, பரிசோதிக்கும் பொழுதைத் தவிர மற்ற நேரங்களில் செவிலியர்கள் யாரும் கையுறை அணிவதில்லை. லலிதாவிற்கு மாளவிகாவுக்கு நேரம் தவறாமல் மருந்து கொடுப்பது மட்டும்தான் வேலை. 

ஆகக் கையுறை ‘எக்ஸ்’ உடையது என்பது நூறு சதவிகிதம் ஊர்ஜிதமாயிற்று. ஆனால் கையுறையில் இருக்கும் இந்த ரத்த கறை யாருடையது? எப்படி வந்தது? என்னை செய்வது? ரத்த கறைக்கு விடை இல்லாவிட்டலும், கையுறையின் உட்புறத்தில் பதிந்திருக்கும் கை ரேகையை வைத்து குற்றவாளியை பிடித்துவிடலாம் என்றாலும், எத்தனை பேரின் கை ரேகையோடு ஒப்பிட்டுப் பார்ப்பது? இது எப்படிச் சாத்தியம் என்று குழம்பினாள். 

சிசிடிவி ஃபுட்டேஜ் என்று யோசித்தாலும் அங்கையும் சிக்கல். காரிடரில் இரண்டு முனையிலும் கேமரா இருக்கிறது. ஆனால் மாளவிகாவின் அறை காரிடருக்கு, நேர் நடுவே செல்லும் பாதையின் உள்ளே இருப்பதால், கேமராவால் உட்புறத்தை படம் பிடிக்க முடியாது. அதனால் யார் நேரே செல்கிறார்கள், யார் திரும்பி உள்ளே செல்கிறார்கள் என்பதை மட்டும் வரை தான் பார்க்க முடியும். யார் எந்த அறைக்குச் செல்கிறார்கள், என்பதைக் கண்டுபிடிப்பது சாத்தியம் இல்லை. 

மாளவிகாவின் அறை பக்கதில் டூட்டி மருத்துவர்களின் ஒய்வு அறை மற்றும் மெடிக்கல் லேப் இருப்பதால், அங்கே டாக்டர்ஸ், நர்ஸ் அடிக்கடி செல்வார்கள். யாரை எல்லாம் சந்தேகிப்பது? மீண்டும் குழப்பம் மிஞ்ச சோர்ந்து போனாள். 

ஆனாலும் மனம் விடாமல் யோசித்தது, ‘லலிதாவையும் என்னையும் தவிர வேற யாரும் மாளவிக்காவோட ரூம்க்கு போக வேண்டிய சான்ஸ் இல்லை. அப்போ எப்படி, “எக்ஸ்’ போயிருக்க முடியும்? போயிருந்தா கண்டிப்பா மாளவிகா சொல்லிருப்பாங்க. மாளவிகா அப்படி ஒருநாளும் சொன்னதில்லை. அப்படின்னா மாளவிகா சுயநினைவுல இல்லாத அப்போ மட்டும் தான் இதைப் பண்ணிருக்க முடியும். 

எப்பவும் நாம குடுக்குற மருந்துடைய எஃபக்ட்ல தான் மாளவிகா தூங்குவாங்க. அன்னைக்கு மருந்து குடுக்கல, அவங்க தூங்கிருக்க மாட்டாங்க. அன்னைக்கு நான் அவங்களைக் கடைசியா நைட் ஏழு மணிக்கு…’ என்ற பொழுதே மாளவிகாவை ஏழு மணிக்கு ஜியா செக் அப் செய்யப் போன பொழுது, 

“என்ன மாளவிகா நல்லா தூங்குனீங்களா?”

“எங்க டாக்டர், இன்னைக்கு மருந்து வேண்டாம்னு சொல்லிருந்தீங்களா, எப்பொழும் போல அசந்து தூங்க முடியல. ஆனாலும் வழக்கமா தூங்குறதுனால, கண்ணு அசந்திருந்தேன். எப்பவும் லலிதா ஊசி போட்டு போட்டு, இன்னைக்கும் ஊசி குத்துற மாதிரி ஒரு உணர்வு, கண் முழிச்சுட்டேன் அதுல இருந்து தூக்கம் வரல.”

“நீங்க இருக்கீங்களே…” என்று சிரித்த ஜியா,

“வலி ஏதும் இருக்கா?”

“அப்படி இல்லை, ஆனா கொஞ்ச நாளா உள்ளுக்குள்ள ஒரு மாதிரியா இருக்கு.”

“ஓ… இந்த மாதிரியான நேரத்துல அப்படித் தான் இருக்கும்…” இப்படித் தனக்கும் மாளவிகாவிற்கும் நடந்த உரையாடலைப் பற்றி யோசித்தவள், 

‘அப்படின்னா அந்தக் குற்றவாளி நான் இருக்கும் பொழுது கூட அங்க தான் இருந்திருக்கானா? மாளவிகாவை ஆப்ரேஷன் தியேட்டருக்கு கூட்டிட்டு போறவரைக்கும் உள்ளே தான் இருந்திருக்கான்.’ என்று எண்ணும் பொழுதே, ஜியாவின் கண்களில் கண்ணீரும் கோபமும் போட்டி போட்டுக்கொண்டு வந்தது. 

மாளவிகா முழிப்பானு நினைச்சுருக்க மாட்டான், அவ முழிச்சதும் என்ன செய்யிறதுனு தெரியாம பாத்ரூம்க்குள்ள போய் ஒளிஞ்சிருக்கணும். மாளவிகாவை அங்கேயிருந்து அழைச்சுட்டு போனதுக்கு அப்புறம் தான் வெளியில வந்திருப்பான். இந்த ஊசியையும் ஃக்ளவ்ஸையும் ஏன் விட்டுட்டுப் போனான்? இந்த டாலர் எப்படி உடைஞ்சிருக்கும்? கண்டிப்பா குனிஞ்சிருக்க மாட்டான். 

அப்படினா பாத்ரூமை விட்டு வெளியில வந்ததும் கோபத்துல கையைச் சுவத்துல தட்டிருப்பான். அதுல டாலர் உடைஞ்சி கீழ விழுந்திருக்கும். கையில அடிபட்டதுனால ரத்தம் வந்திருக்கு, அதனால ஃக்ளவ்ஸை கலட்டிருக்கான், டென்ஷன்ல மறந்து போய் ஊசியையும் ஃக்ளவ்ஸையும் அங்கையே விட்டுட்டான். 

ஸோ இது செயின்ல உள்ளதில்லை, ப்ரேஸ்லெட்ல உள்ள டாலர்.’ என்று தன் மனம் போனபோக்கிலே ஊகித்தவள், 

‘இனிமேல் என்ன நடந்தாலும் சரி, மாளவிகா அவளது அப்பாவி குழந்தை இவர்களின் மரணத்திற்கு நிச்சயம் நியாயம் கிடைக்க வேண்டும்.’ என்று உறுதியாய் முடிவெடுத்தாள். 

சமீரிடம் இதைப் பற்றிப் பேச எண்ணியவள் பின்பு தானே குற்றவாளியைக் கண்டறிய திட்டமிட்டாள். அதன்படி இரண்டாவது தளத்தின் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தாள். 

அதில் இன்னும் குழம்பியது தான் மிச்சம். அங்கே வி என்கின்ற எழுத்தில் பெயர் கொண்ட யாரும் அந்த நேரத்தில் அந்த வழியில் கூடச் செல்லவில்லை. 

தெளிய தெளிய குழப்பம் அதிகரித்துக் கொண்டே போக, சித்தம் கலங்க தன் தலையில் கை வைத்தவாறு குழப்பமாய் இருந்தாள். 

‘அது வி ஆகத் தான் இருக்க வேண்டுமா என்ன? வி, எம், டபிள்யூ, இசட், என்  ஏன் எஸ் வடிவத்தின் முனைகள் கூர்மையாக இருந்தால்…? இந்த உடைந்த துண்டு எழுத்தின் ஒருபகுதியாக இருந்தால்…’ என்று அவளது மனம் சரியான நேரத்தில் சரியான கேள்வியை எழுப்ப, 

குற்றவாளியைக் கண்டுபிடித்த மகிழ்ச்சி விழியில் மின்னி மறைய, அடுத்த நொடி அவனது சட்டையைப் பிடித்துக் கன்னத்தில் பளார் என்று அறைய, அவளது கரங்களும் விழிகளும் கோபத்தில் துடித்தன. சிசிடிவி ஆப்ரேட்டரிடம் அவருக்குப் போட வேண்டியதை போட்டுவிட்டு, ஃபுட்டேஜில் தனக்கு ஒரு காப்பி போட்டுக் கொண்டாள். 

***

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!