நாட்கள் வாரங்களாக நீள இருவருக்கும் இடையே உள்ள விரிசல் மட்டும் அப்படியே இருந்தது.
விழிகளும் மனதும் ஒன்றோடு ஒன்று பேசிக்கொண்டதே தவிர, இவர்கள் இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை. ஆஷிக்கிற்குத் தான் கொஞ்சமும் தகுதி இல்லை என்கின்ற எண்ணத்தில் ஜியா அவனை விட்டு முடிந்தளவு விலகிருக்கவே விரும்பினாள்.
அவனாக நெருங்க முயற்சி செய்யும் பொழுதும் அவள் இப்படி விலகியிருப்பது அவனது கோபத்தை மேலும் கூட்டியது.
‘நீ உண்மையாவே என்னைக் காதலிக்கிறியான்னு எனக்குச் சந்தேகமா இருக்கு ஜியா. ஒரே ஒரு தடவை… அப்படியெல்லாம் இல்லைன்னு என் மனசுல உள்ள எண்ணம் எல்லாத்தையும் பொய்யாக்கு.’ என்று மனதிற்குள் பொருமினான். இதற்கு மேல் பொறுத்துக் கொள்ளாதவன்,
‘அவளுக்கா எப்போ தோனுதோ அப்போ என்கிட்ட பேசட்டும். ஆனா என்ன ஆனாலும் இந்த முறை அவள் பேசாமல் தான் ஒருவார்த்தை கூடப் பேச கூடாது.’ என்பதில் மிகவும் உறுதியாய் இருந்தான்.
இதற்கு மேல் ஆஷிக்கிற்கு எந்தத் துன்பத்தையும் கொடுக்கக் கூடாது என்று முடிவெடுத்த ஜியா, கொஞ்சம் கொஞ்சமாக அவனது வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டு, அவனை விட்டு விலகிவிட வேண்டும் என்று உறுதி எடுத்தாள்.
இவ்வளவு யோசித்தவள் அவனிடம் ஒருமுறை மனதை விட்டுப் பேசியிருந்தால், இனி நடக்கப் போகும் கோர பயங்கரங்களைத் தடுத்திருக்கலாமோ?
ஆஷிக்கிடம் உண்மையைக் கூறவும் முடியாமல், அவனிடம் இருந்து விலகவும் முடியாமல், ஒரு பொய்யோடு நெருங்கவும் முடியாமல், இடையிடையே ஜீவா கொடுக்கும் சித்திரவதையைத் தாங்கிக்கொள்ளவும் முடியாமல், எதிர்க்கவும் முடியாமல் மிகவும் வேதனை அடைந்தாள்.
நிம்மதியைத்தான் கொடுக்க மறுக்கிறாய், குறைந்தபட்சம் மரணத்தையாவது கொடு என்று இறைவனிடம் வேண்டினாள். அவரிடம் வலியை தாங்க ஒரு இரும்பு இதயத்தைக் கேட்டிருக்கலாம்! சூழ்ச்சியை அறிய கூர்மையான புத்தியைக் கேட்டிருக்கலாம்! இதற்கே துவண்டு போயிருக்கும் ஜியா, இனி தன்னைச் சூழ போகும் காரிருளில் சிக்குண்டால் என்ன செய்வாள்?
இப்படி இருக்கும் சூழ்நிலையில் வேலையின் நிமித்தமாகம் ஆதர்ஷ், ரோஹித்தின் வற்புறுத்துதலாலும் ஆஷிக், தனது இந்தப் பிரிவாவது ஜியாவின் மனநிலையில் ஒருவித மாற்றத்தை ஏற்படுத்தும் என்கின்ற எண்ணத்திலும், இரு மனதோடு ஒருவித நெருடலில் அவளை விட்டு செல்ல மனமில்லாமல், இரண்டு வார பயணமாகப் பைலட்டிற்கான எழுபத்தி மூன்றாவது மாநாட்டில் கலந்து கொள்வதறக்காக லுக்சம்பர்க் என்னும் நாட்டிற்குச் சென்றான்.
அவன் அவளை விட்டுச் செல்லும் பொழுது, அவனது மனதில் சொல்ல முடியாத துயரம் வந்து ஆக்கிரமித்தது. உள்ளம் முழுவதும் ஒருவித பாரத்தோடு அவளை விட்டு செல்ல மனமே இல்லாமல் சென்றான்.
ஜியாவை விட்டுச் சென்றதில் இருந்து அவனது மனம் அவளையே தான் நினைத்துக் கொண்டிருந்தது. அழைப்பு விடுத்தாலும் ‘ஹலோ எப்படி இருக்க, சாப்டியா?’ என்று கேட்பவன் மீதி உரையாடலை மெளனமாகவே நடத்தினான்.
ஓவென்று கதறி அனைத்தையும் கூறவேண்டும் என்று பலமுறை எண்ணுபவள், அடுத்த நொடியே ஆஷிக் எப்படி நடந்துகொள்ளவான் என்பதை எண்ணி, கவலை அடைந்து அப்படியே மௌனமாகவே இருந்து விடுவாள்.
ஆஷிக் அருகில் இருக்கும் பொழுது அவனிடம் பேசாவிட்டாலும், அவனைப் பார்த்து கொண்டாவது நிம்மதி அடைபவள் இப்பொழுது, அவன் அருகில் இல்லாது போக மிகவும் நிம்மதியை இழந்து காணப்பட்டாள்.
அழுதழுது கன்றி போன முகம், சரியான உறக்கம் இல்லாமல் கருவளையத்தில் சிக்குண்டு வாடி போன விழிகள், போதிய உணவு அருந்தாமல் பாதியாய் வற்றி நலிவுற்ற தேகம் என்று ஒரு கட்டத்தில் மனதிலும் நிம்மதியை இழந்து, நடைபிணமாகவே மாறிப் போயிருந்தாள். வாழ்க்கை மீதே வெறுப்பும் விரக்தியும் வர, சமீரை சந்திப்பதையும் அவனிடம் பேசுவதையும் கூடத் தவிர்த்தவள் வீட்டிற்குள்ளே அடைந்து கிடந்தாள்.
பல யோசனைக்குப் பிறகு ஆஷிக்கை விட்டு விலகி தினம் தினம் அவனுக்கு வேதனை அளிப்பதற்குப் பதிலாய், தன்னவனை விட்டு ஒரேடியாகப் பிரிந்து செல்ல சித்தம் கொண்டவள், ரெண்டு வாரம் கழித்து அவன் இங்கே வரும் பொழுது தான் அவனது கண்ணில் படாத தூரம் சென்று விட வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
அதன் பெயரில் சமீருக்கு அழைப்பு விடுத்தவள் தன் முடிவை மூச்சு விடாமல் கூறி முடித்து அவனிடம் உதவி கேட்க, திடமாக மறுத்தவன் எவ்வளவோ காரணங்களைக் கூறி அவளது முடிவை மாற்றி விடப் போராடினான்.
“யாருக்காகவும் வேண்டாம், ஆஷிக்காகவாவது உன் முடிவை மாத்திக்கோ ஜியா.” என்று கெஞ்ச,
“அவன்கிட்ட உண்மைய சொல்லவும் முடியாம, இயல்பா வாழவும் முடியாம குற்ற உணர்ச்சியில தினம் தினம் நானும் வேதனைப்பட்டு, அவனையும் கஷ்டப்படுத்திட்டு இருக்கேன். இப்படித் தினம் தினம் அவனைக் கஷ்டப்படுத்துறதுக்கு ஒரேடியா அவனை விட்டு பிரிஞ்சி போறதுதான் சரி. என் முடிவை நான் மாத்திக்க மாட்டேன். ஒரு நண்பனா உன்கிட்ட உதவி கேட்குறேன், முடியலைன்னா சொல்லிரு.” என்று பட்டென்று பேச,
இறுதியில் சமீர், “உன் முடிவு இதுதான்னா உனக்குத் துணையா நான் இருக்கேன். என் ஃப்ரண்ட் ஒருத்தன் மலேசியால அவனோட குடும்பத்தோட இருக்கான். அவன்கிட்ட பேசி நீ அங்க தங்குறதுக்கு ஏற்பாடு பண்றேன். முதல்ல நீ அங்க போ, மத்ததெல்லாம் நான் பார்த்துக்கறேன்.” என்று ஜியாவின் முடிவிற்கு அவனும் வேறு வழியில்லாமல் துணை நின்றான்.
நாட்கள் உருண்டோட, ஜியா மலேசியா செல்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் சமீர் செய்திருக்க, மார்ச் எட்டாம் தேதி இரவு ஏழு மணியளவில் அவளுக்குப் ஃப்ளைட் டிக்கெட் புக் செய்தவன் விவரத்தை அவளிடம் கூறினான்.
“இன்னும் ஒருநாள் தான் இருக்குல, மார்ச் எட்டு நான் இந்த ஊர்ல இருக்க மாட்டேன். ஆஷிக் அடுத்தநாள் காலையில ஊருக்கு வரும் பொழுது, நான் இங்க இருக்க மாட்டேன். ரொம்ப உடைஞ்சு போயிருவான்.” என்று உடைந்து போன குரலில் கூறியவள்,
மேலும் தொடர்ந்து, “சமீர் நீ எனக்கு எவ்வளவோ உதவி செஞ்சிட்ட, கடைசியா உன்கிட்ட ஒரே ஒரு ஹெல்ப் கேட்கிறேன், செய்வியா?”
“என்ன ஜியா, உனக்குச் செய்யாம நான் யாருக்குச் செய்யப் போறேன்? சொல்லு, என்ன பண்ணணும்?”
“மார்ச் ஒன்பதாம் தேதி ஆஷிக் காலையில வீட்டுக்கு வரும்போது, நான் இல்லாட்டா அவன் ரொம்பப் பயந்துருவான். அவனுக்கு நீதான் ஆறுதலா இருக்கணும், அவனைப் பார்த்துக்கோ.” என்று விழிநீர் ததும்பக் கேட்டவளின் கோரிக்கையை மறுக்காமல் ஏற்றுக்கொண்டான்.
ஆஷிக்கின் நினைவிலே ஒவ்வொரு நொடியையும் கடந்தவள், ஏன் ஒவ்வொரு நொடியும் கணப்பொழுதில் கடந்து செல்கின்றன என்று மனதிற்குள் வருந்தினாள். மார்ச் ஏழு ஒரு எட்டு மணியளவில் தொலைக்காட்சியில் அவள் கண்ணில் பட்ட செய்தி, அவளது வாழ்க்கையையே புரட்டி போட காரணமாக அமையும் என்று அவள் நிச்சயம் நினைத்திருக்க மாட்டாள்.
திருப்பிய நியூஸ் சேனல் அனைத்திலும், “இந்த வருடம் ஆல் இந்தியா மெடிக்கல் அசோஷியேஷன் சார்பாகச் சிறந்த இளம் அறுவை சிகிச்சை நிபுணருக்கான விருதை பெறப்போவது டாக்டர் சுஜித் குமார் எம்எஸ்.” என்கின்ற செய்தி, சுஜித்தின் புகைப்படத்தோடு தலைப்புச் செய்தியாக வலம் வர. ஜியாவின் விழிகள் ஆக்ரோஷத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது.
மிகவும் கொந்தளித்துப் போனாள். அந்தக் கணமே சுஜித்தை தன் கரத்தாலே கொன்று விடத் துடித்தாள். அவன் தனக்குச் செய்த அனைத்தையும் நினைவு கூர்ந்தவளுக்கு, ஆத்திரம் தொண்டையை அடைத்தது.
அவளது கோபத்திற்குத் தூபம் போடுவது போல அந்த நேரம் பார்த்து ஜீவாவின் அழைப்பு வர, விழிகளில் கோபத்துடன் அலைபேசியை அட்டென்ட் செய்தாள். விஷம் போன்று அவன் கொட்டிய அருவெறுப்பான அதே வார்த்தைகள் செவிகளில் அமிலம் போலப் பாய்ந்தது.
ஆனால் முன்பு போலச் செவிகளை மூடிக்கொள்ளவில்லை. ஒவ்வொரு வார்த்தையையும் நிதானமாய் கேட்டாள். விழிகளில் நீர் இல்லை, அகத்தில் கலக்கம் இல்லை, முகத்திலும் அசைவில்லை, கைகள் நடுங்கவில்லை, உடல் விறைக்கவில்லை, அவன் கொட்டிய விஷம் அவளது நாடி நரம்பில் பா,ய அதைச் சமயம் பார்த்து அவனுக்குத் திருப்பிக் கொடுக்க, தன் நெஞ்சுக்குள்ளே தேக்கி வைத்தாள். தனக்குள் விறுவிறுவென்று ஏறிய கோபத்தை அடக்கியவாறே,
“நான் உனக்கு வேணுமா ஜீவா?” என்றாள் அமைதியாக, புயலை உள்வாங்கிய அமைதி.
திகைப்புற்றவன் கனவா நிஜமா என்று தனக்குத் தானே சோதனை செய்தான். இருந்தும் சில மணி நிமிடத்திற்கு அவனால் அந்தத் திகைப்பில் இருந்து மீண்டு வர முடியவில்லை. எப்பொழுதும் தன்னிடம் நெருப்பைக் கக்கும் அவளது வாயில் இருந்து இப்படி ஒரு வார்த்தைகளா?
அவன் அவளை எதிர்பார்ப்பது உண்மையாக இருந்தாலும், அவளிடம் இருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் வரும் என்று அவன் கனவிலும் எண்ணிப் பார்க்கவில்லை. பதில் பேசாமல் அமைதியாய் இருந்தான். சொல்லப் போனால் அவனுக்குப் பதில் தெரியவில்லை. ஏறிய போதை நொடியில் சர்ரென்று இறங்கியிருந்தது.
“நாளைக்கு நாம மீட் பண்ணலாமா, உன் வீட்ல?” என்றாள் மிக இயல்பாக, மொத்தமாக அடங்கிப்போனான்.
“ஜீவா லைன்ல இருக்கியா?” தன்னிலைக்கு வந்தவன்,
“ஹான்! நா… ன்… ஐ மீன் ஜியா…” எழுத்துக்கள் தடம் பிறழ தடுமாறினான்.
“உனக்கு ஓகே தானே?” என்றாள் பற்களைக் கடித்தவாறு.
“கண்டிப்பா ஜியா! உன் கையால செத்துபோணும்னா கூட எனக்கு ஓகே தான்.”
“அப்படியா? அப்போ எப்போ, எங்கன்னு டிசைட் பண்ணு.” என்றாள் விஷம புன்னகையோடு.
சிறு அதிர்விற்குப் பின் சிரித்தவன், “காமெடிய கூட எப்படிச் சிரிக்காம சொல்ற?”
“நோ, ஐயம் சீரியஸ்.”
“நம்பிட்டேன்.”
“நாளைக்கு ஈவ்னிங் பார்க்கலாம்.” வெற்று புன்னகையோடு அழைப்பிற்கு முடிவு கட்டினாள், அவனுக்கும் சேர்த்து முடிவுக்கெட்டும் எண்ணத்தில்.
எந்த தைரியத்தில் அவனைச் சந்திக்க அவன் வீட்டுக்கே வருவதாகக் கூறினோம், என்று இப்பொழுது யோசித்தவளுக்குச் சிறிது அச்சம் தோன்றினாலும், அதை விழுங்கி தின்னும் அளவிற்குக் கோபமும் ஆத்திரமும் பொத்துக்கொண்டு வந்தது.
“நான் ஏன் ஆஷிக்கை விட்டு விலகணும்? தப்பே பண்ணாம என்னை நேசிக்கிறவங்கள விட்டு நான் ஏன் ஓடி ஒழியணும்? சொல்ல போறேன், ஆஷிக்கிட்ட எல்லாத்தையும் சொல்ல போறேன். முடிவு அவனுடையது. ஒரு பொய்யோட வேணும்னா நான் ஆஷிக்கை கல்யாணம் பண்ணிருக்கலாம். ஆனா அதே பொய்யோட நான் அவனை விட்டு விலக மாட்டேன்.
என்ன நடந்தாலும் சரி சுஜித், ஜீவா, வருண் அவங்க மூணு பேருக்கும் கண்டிப்பா தண்டனை வாங்கித் தருவேன். ஆஷிக் என் வாழ்க்கை. சர்ஜெரி என்னோட கனவு. என் வாழ்க்கைய என்னை வாழவும் விடாம, என் கனவை தொடரவும் விடாம என்னை முடக்கி போட்டுட்டு, அவனுங்க மட்டும் நிம்மதியா சுத்தக் கூடாது.
டாக்டர் ரூபத்துல இருக்குற அந்த மிருங்கங்கள நான் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவேன். எந்தத் தப்பும் பண்ணாம நான் அனுபவிச்ச ஒவ்வொரு சித்திரவதைக்கும், அவங்க பதில் சொல்லி தான் ஆகணும். மாளவிகாவுக்கும் அவளோட குழந்தைக்கும் நியாயம் கிடைச்சு ஆகணும்.” ஆக்ரோஷமாக வெளிப்பட்டது வார்த்தைகள்.
“முதல்ல எப்படியாவது ஜீவா மொபைல்ல இருக்கிற விடியோவை டெலீட் பண்ணணும். அந்த விடியோவை மட்டும் நான் டெலிட் பண்ணிட்டா, அதுக்கப்புறம் அவங்க மூணு பேரும் என்கிட்ட இருந்து தப்ப முடியாது.” உறுதியோடு குருதி கொதிக்க முழங்கியவள் அறியாமாட்டாள், தன்னைத் தாக்க இருக்கும் ஆழிப்பேரலையைப் பற்றி.
மாலைப் பொழுதை காரிருள் கொஞ்சம் கொஞ்சமாய் விழுங்கிக்கொண்டிருந்த நேரம் அது.
ஏற்கனவே சமீரின் உயிருக்கு ஆபத்து வர, தான் காரணமாகி போனதை எண்ணி பார்த்து வருந்திய ஜியா, இந்தமுறை தனது இந்த முடிவை சமீரிடம் கூறாமல், தானே ஜீவாவை தனித்து எதிர்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
அதன் பேரில் ஜீவாவை சந்திக்கச் சென்றாள். ஜியாவின் வருகைக்காக ஜீவா மிக ஆர்வமாகக் காத்திருந்தான். போகும் வழியெல்லாம் சமீரிடம் இருந்து அழைப்பு வந்து கொண்டே இருக்க, பலமுறை யோசித்த பிறகு வேறு வழியில்லாமல் ஒரு கட்டத்தில் அட்டென்ட் செய்யவும் சமீர்,
“எங்க போன? ஃபோனை எடுக்க எவ்வளவு நேரம்? சரி, நீ ஏர்போர்ட் போய்டியா?” என்றவனிடம்,
நீண்ட பெரு மூச்சை வெளியிட்டவாறே ஜியா, “இல்லை ஜீவா வீட்டுக்கு போயிட்டு இருக்கேன்.” என்று கூறியவளிடம் அதிர்ச்சி தொனிக்கும் குரலில் சமீர், “வாட்!” என்று கேட்க, மூச்சு விடாமல் தன் முடிவைக் கூறியவள்,
“ஜீவா வீட்டுக்கு வந்துட்டேன் சமீர். நீ எதுக்கும் கவலைப்படாத, நீ அங்க வரவேண்டாம். ஏற்கனவே நீ எனக்காகப் பண்ணினதெல்லாம் போதும். இது என் பிரச்சனை, இதை நான் தனியாவே ஹேண்டில் பண்றேன். நான் போற காரியத்துல வெற்றி கிடைக்கணும்னு வேண்டிக்கோ.” என்று கூற,
“ஜீவா ரொம்ப ஆபத்தானவன், நீ அங்க தனியா போகாத. நீ கிளம்பி வா, நாம பேசிக்கலாம். இல்லன்னா நான் அங்க வரேன்.” என்றவன், ஜியாவிடம் இருந்து எந்தப் பதிலும் வராமல் போக, அவள் ஏற்கனவே அழைப்பை துண்டித்ததை எண்ணி மிகுந்த ஆத்திரம் அடைந்தான்.
மீண்டும் அவன் அவளுக்குத் தொடர்ப்புக் கொண்ட பொழுது, அவளது அலைபேசி சுவிட்ச் ஆஃப் செய்யப் பட்டிருந்தது. அவனது ஆத்திரம் மேலும் அதிகமானது.
ஜியாவிற்காக ஆர்வமாய் காத்திருந்த ஜீவாவின் கண்கள், எதிர்பார்த்தது போல அவளைத் தன் வீட்டின் வாசலில் கண்டதும் பூரித்துப் போனது. அசடு வழிய அவளை உள்ளே அழைத்தவன், அவள் கொண்ட உள் நோக்கம் அறியாமல் மிகவும் உபசரித்தான்.
“இப்போ கூட என்னால நம்ப முடியல…” என்று புன்னகைத்தவாறே ஜீவா கூற,
தன் பார்வையை டேபிளில் தன் முன்னால் இருந்த அவனது மொபைல் மீது படரவிட்டவாறே, “புடிக்கலையா?” என்று கோபத்தை அடக்கியவாறே கேட்க,
“இல்லை இல்லை…” உடனே மறுத்தவன் மேலும் தொடர்ந்து,
“நான் அந்த எண்ணத்துல சொல்லல. நீ என்னைத் தேடி வருவனு நான் ஒருநாளும் எதிர்பார்க்கல.” என்றான் விழிகள் மலர.
“ம்ம்ம்…” என்றாள் பொய்யான புன்னகையோடு.
“ஐயம் ரியலி சாரி ஜியா!” என்றவாறு அவளது கரத்தைப் பற்றிக் கொள்ள முயற்சித்த நேரம் நாசுக்காக ஜியா, “இப்போ எதுக்கு அது?” என்றவாறு சோபாவில் இருந்து எழுந்து நின்றாள்.
“இல்ல ஜியா, நான் இதைச் சொல்லியே ஆகணும். சத்தியமா நீன்னா எனக்கு அவ்வளவு புடிக்கும். உன்கிட்ட நான் அப்படி நடந்துக்கணும்னு ஒருநாளும் நினைச்சது இல்லை. எல்லாரும் ஃபோர்ஸ் பண்ணி உன்கிட்ட என்னைக் கடுமையா நடந்துக்க வச்சுட்டாங்க.
மாளவிகா விஷயத்துல அந்தச் சுஜித்கிட்ட எவ்வளவோ சொன்னேன். அவன் தான் மெடிக்கல் எத்திக்கிஸ்னு அதை இதைச் சொல்லி என்னை ப்ரைன் வாஷ் பண்ணிட்டான். மாளவிகாவும் அவளோட குழந்தையும் செத்து போவாங்கனு நான் நினைக்கவே இல்லை. அவங்க செத்துப் போனதும் நான் ரொம்பப் பயந்துட்டேன்.
நீ ரொம்பப் பிடிவாதமா வேற இருந்தியா, எங்க போலீஸ் கேசுனு போனா என் கேரியர் போயிருமோனு பயந்து போய், உன்கிட்ட ரொம்ப மோசமா நடந்துக்கிட்டேன். இப்போ மாதிரி நீ மட்டும் அப்போ கொஞ்சம் விட்டு குடுத்திருந்தன்னா, இவ்வளவு பிரச்சனையே வந்திருக்காது. ஆனா இப்போ நீயா என்னைப் புரிஞ்சிக்கிட்டதுல எனக்கு ரொம்பச் சந்தோஷம்.” என்றவன் அதே வக்கிர எண்ணத்தோடு அவளை நெருங்க சுதாரித்துக் கொண்டவள், தன் கையில் இருந்த ஜூஸ் கிளாஸை அவன் மீது தவறுதலாய் சிந்துவது போலச் சிந்தி,
“அச்சச்சோ! சாரி ஜீவா நான் தெரியாம…” என்று பாவமாய் பார்க்க,
“ஜியா இட்ஸ் ஓகே! நீ டென்ஷன் ஆகாத, நான் போய் வாஷ் பண்ணிட்டு வரேன்.” என்றவன் அசடு வழிந்தவாறே அங்கிருந்து சென்றான்.
அவன் சென்றது தான் தாமதம், தான் எதிர்பார்த்த நேரம் கூடி வந்ததை உணர்ந்தவள், உடனே அவனது அலைபேசியைத் தன் வசம் ஆக்கினாள்.
அலைபேசியை அன்லாக் செய்தவள் பேட்டேர்ன் லாக் போட்டிருப்பதைப் பார்த்து, எப்படி அன்லாக் செய்ய வேண்டும் என்று சில நொடிகள் சிந்தித்துச் சிறிதும் தாமதிக்காமல், மீண்டும் அலைபேசியை சைட் பட்டன் மூலமாக லாக் செய்தாள். லாக் செய்தவுடன் அலைபேசியின் கருப்பு நிற தொடுதிரையில் ஏற்கனவே உபோயகப்படுத்திய பொழுது, போட்டிருந்த பேட்டேர்ன் லாக்கின் தடம் வடிவம் மாறாமல் பதிந்திருக்க, வேகமாக அலைபேசியை அன்லாக் செய்தவள், தனது வீடியோவை டெலிட் செய்ய முனைந்த நேரம், அலைபேசியில் எஸ்கே என்னும் நபரிடம் இருந்து அழைப்பு வர, எஸ்கே யாராக இருக்கும் என்று சிந்தித்தவளின் மூளை, ‘சுஜித் குமாரின்’ பெயரை நினைவுபடுத்த, பதறியவள் சட்டென்று அழைப்பைத் துண்டித்து,
நொடி பொழுது கூடத் தாமதிக்காமல் வீடியோவை டெலிட் செய்து கொண்டிருக்க, அவள் எதிர்பாராத நேரம் அங்கு வந்த ஜீவா ஜியாவின் கையில் தனது அலைபேசி இருப்பதைப் பார்த்து, ஜியாவின் இந்தத் திடீர் மாற்றத்துக்கான காரணம் புரிந்தவனாய், விழிகள் சிவக்க அவளது அருகில் வந்தவன், வலுக்கட்டாயமாக அவளது கையில் இருந்து அலைபேசியை வாங்க முற்பட அவனைத் தள்ளிவிட்டவள், அவனிடம் இருந்து தப்பிக்க முற்பட, “ஜியா நில்லு…” என்று கோபத்தில் பற்களைக் கடித்தவாறு, அவள் பின்னால் சென்று கரத்தைப் பற்றி இழுக்க, அவனது கரத்தைக் கடித்து அவனிடம் இருந்து விடுபட்டவள், ஓடிச்சென்று கதவைத் திறந்துகொண்டு வெளியேற முற்பட,
அவளை விடாது துரத்தியவன் அவளது பின்னால் வந்து கழுத்தோடு சேர்த்து இறுக்கி அணைக்க, கடும் பாடுபட்டு பல முயற்சிக்கு பிறகு அவனிடம் இருந்து விடுபட்டவளை, மீண்டும் பிடித்திழுத்துச் சோபாவில் சாய்த்தவன், அவளது கரத்தில் இருந்த அலைபேசியை வாங்க போராடிக்கொண்டிருந்த நேரம்,
பின்னால் இருந்து வந்த இரு கரங்கள் அவனை ஜியாவிடம் இருந்து விலக்கி கன்னத்தில் ஓங்கி பளார் என்று அறைந்தது.
“சமீர்!” என்று அழைத்தவாறு சமீரின் அருகில் சென்று ஜீவாவின் அலைபேசியைக் காட்டி, “விடீயோவ டெலிட் பண்ணிட்டேன், இப்போவே போலீசுக்குப் போய்க் கம்ப்ளெயிண்ட் குடுக்கலாம்.” என்று விழியில் நீர் வழிந்தவாறு நிம்மதியோடு கூறினாள்.
அதிர்ச்சியில் உறைந்திருந்த ஜீவாவின் சட்டையைப் பிடித்துத் தூக்கி நிறுத்திய சமீர், அவன் எதிர்பார்ப்பதற்குள் மீண்டும் அவனது கன்னத்தில் அறைந்த இடத்திலே மீண்டும் மீண்டும் பொறி கலங்க அறைந்து, அவனது கழுத்தைப் பிடித்து நெறிக்க,
ஜீவா வலியில், “ஆ…” என்று கதறினான்.
சமீரை தடுத்த ஜியா, “விடு சமீர், இவனை எல்லாம் போலீஸ் பார்த்துக்குவாங்க. அவங்க லாக் அப்ல வச்சு உதைக்கும் பொழுது புத்தி தானா வரும். வா சமீர், இப்போவே போலீஸ்கிட்ட போலாம்.” என்று கூறி சமீரை அழைக்க,
சமீர், ஜீவாவின் கழுத்தில் இருந்த தன் கையின் அழுத்தத்தை இன்னும் அதிகரிக்க,
வலியில் துடித்த ஜீவா, “எஸ்கே ப்ளீஸ்டா விடு…” என்று தன்னால் முடிந்த வரை கதறினான்.
அவனது கதறல் ஜியாவின் செவியில் விழ எஸ்கே என்னும் சொல்லை அவள் கிரகித்த நேரம், அவளது கன்னத்தில் விழுந்த ஒற்றை அறையில் பொறி கலங்க தரையில் சுருண்டு வீழ்ந்தாள்.
***
