டெல்லி ஏர்போர்ட்டில் ரோஹித், ஆஷிக்கிடம், “இன்னைக்கே இப்படி அவசர அவசரமா ஊருக்கு வரணும்னு என்ன கட்டாயம்? இன்னைக்கு ஈவ்னிங் பார்ட்டி அட்டென்ட் பண்ணிட்டு, லேட்டா கிளம்பிருக்கலாம். இப்போ பாரு, நாளையில இருந்து பேக் டு ஒர்க். நல்ல பார்ட்டிய மிஸ் பண்ணிட்டோம்டா.”
“நீங்க ரெண்டு பேரும் பார்ட்டிய அட்டென்ட் பண்ணுங்க, நான் மட்டும் கிளம்புறேன்னு தானே சொன்னேன்?”
“நீ ஊருக்கு வந்ததுல இருந்து ஜியா ஜியான்னு சொன்ன. இந்த ஆதர்ஷ், நடாஷா நடாஷான்னு சொல்றான். நான் மட்டும் தனியா பார்ட்டியில என்ன பண்றது அதான் கிளம்பிட்டேன். ஒரு காலத்துல இந்த மாதிரி ட்ரிப்னா நீ எப்படி இருப்ப? ஆனா இந்தத் தடவ நீ ரொம்பக் கடுப்படிச்சுட்டடா.”
“அப்போ சிங்கிள்டா, இப்போ அப்படி இல்லை கல்யாணம் ஆகிடுச்சு, ஜியா வீட்ல தனியா இருக்கா. எல்லாத்துக்கும் மேல ஊருக்கு கிளம்பும் பொழுது அவ கூடச் சண்டையோட தான் கிளம்பிருக்கேன். ஒரு மாதிரி கஷ்டமாவே இருந்துச்சு, அதான் மீட்டிங் முடிஞ்சதும் கிளம்பணும்னு சொன்னேன்.”
“ஜியாகிட்ட நாளைக்குத் தான ஊருக்கு வருவனு சொன்ன, அப்புறம் ஏன் உடனே கிளம்பணும்னு அவசரப்படுத்தின? இன்னைக்கு வர்றதுக்குப் பதிலா நாளைக்கு வந்திருப்போம். ஒரு நாள்ல என்னடா ஆகிற போது?”
“கல்யாணம் பண்ணி பாரு புரியும்.” என்று ஒரே வரியில் முடித்தவன் ரோஹித்திடம், “அவசரமா கிளம்புனதுல ஜியாகிட்ட நான் வரேன்னு சொல்லல, மொபைல்ல சார்ஜ் இல்லை. உன் மொபைல் குடு.”
“அதான் ஊருக்கே வந்தாச்சே, இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு தானே போகப் போற. அப்புறம் ஏன்டா இந்த அலப்பறை பண்ற? உங்க லவ் டார்ச்சர் தாங்க முடியலடா, இதுக்காகவே நான் சீக்கிரம் கமிட் ஆகணும்னு நினைக்கிறேன்.” என்றவனைப் பார்த்து சிரித்தவன், அவனது அலைபேசியில் இருந்து ஜியாவிற்குத் தொடர்பு கொள்ள அது சுவிட்ச் ஆஃப் என்று வந்தது.
“என்னடா ஃபோன் சுவிட்ச் ஆஃப்ன்னு வருது?”
“சார்ஜ் இல்லாம சுவிட்ச் ஆஃப் ஆகிருக்கும். வீட்டுக்கு போய் மணிக்கணக்கா பேசு. இதோ டாக்சி கூட வந்திருச்சு.” என்றவன் தள்ளி நின்று அலைபேசியில் உரையாடி கொண்டிருந்த ஆதர்ஷை, “டாக்சி வந்துருச்சு ஆதர்ஷ்.” என்று அழைக்க மூன்று பேரும் தங்களின் இல்லத்திற்குச் சென்றனர். போகும் வழியெல்லாம் ரோஹித், ஆதர்ஷை கலாய்த்து சிரித்துக் கொண்டே வர,
ஆஷிக் மட்டும் அவர்களது உரையாடலில் கலந்து கொள்ளாமல் அமைதியாகவே இருந்தான். அவனது மனம் முழுவதிலும் சொல்ல முடியாத ஒரு வலி நிரம்பியிருந்தது. மிகவும் கனமாக உணர்ந்தான்.
***
கசக்கி எறிந்த மலர் போல ஒற்றை அறையிலே தரையில் வீழ்ந்து கிடந்த ஜியா, தனக்கு நடந்ததை உணரும் முன்பே அவளது மென் கரத்தை தனது இரும்பு கரத்தால், மிக வலுவாக பற்றித் தூக்கிய சமீர், சில நொடிகள் அவளது முகத்தைப் பார்த்துவிட்டு கிட்டத்தட்ட எறிவது போல, அவளைச் சோபா மீது மிக வேகமாகத் தள்ளி விட்டான்.
“ஆ…” என்றவாறு பொத்தென்று போய் விழுந்தவளிடம் நெருங்கி வந்த சமீர், அவளது வென் பஞ்சு வதனத்தை நன்கு இறுக்கி பிடித்து,
“இன்னும் எவ்வளவு தான் பண்ணுவ? எவ்வளவு தான் நான் பொறுமையா இருக்கிறது? போலீசுக்கு போவியா ம்ம்ம்… போய் தான் பாரேன்…” என்று விழிகள் சிவக்க, நறநறவென்று பற்களைக் கடித்தவாறு கத்தியவனின் முகம், நரகாசுரனை விட மிகவும் கொடூரமாய் இருந்தது.
“சமீர் நீயா இப்படிப் பண்ற?” என்று அழுதவளைக் கண்டு சத்தமாகச் சிரித்தவன் பிறகு இறுக்கமான முகத்துடன், “ஆமா, நான் தான் என்னடி பண்ணுவ?” என்றான் தன் புருவத்தை நிமிர்த்தியவாறு. இத்தனை நாளாகத் தான் எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்திருக்கிறோம் என்பதை நினைத்த ஜியாவின் மனம் ரண வேதனையை அனுபவித்தது.
இதுவரை தான் பார்க்காத சமீர், எப்பொழுதும் சாந்தமாக இருக்கும் அவனுக்குள் இப்படி ஒரு கொடூர அரக்கன் ஒளிந்திருப்பான் என்று அவள் ஒருநாளும் நினைத்ததில்லை. முன்பு அவன் சிந்திய புன்னகை எல்லாம், இப்பொழுது சர்ப்பத்தின் விஷத்தை விடக் கொடியதாகத் தோன்றியது.
‘ஏன் இப்படி ஒரு நாடகம்? ஏன் இத்தனை பெரிய நம்பிக்கை துரோகம்?’ உள்ளத்தில் கேள்விகள் எழ, அவளது விழிகளை உறுத்து பார்த்தவன்,
“அத்தனையும் நான் எழுதின ஸ்க்ரீன் பிளே. ரைட்டரும் நானே, டைரக்டருக்கும் நானே. ஹா ஹா… புரியலையா? உன் துப்பட்டால ஆரம்பிச்சு…” என்றவாறு ஜியா தடுக்கத் தடுக்க அவளது துப்பட்டாவை பற்றியவன் மேலும் தொடர்ந்து,
“நெருப்பு பட்டதே… அந்த சீன்ல இருந்து உன்னோட வீடீயோ ஸீன் வர எல்லாம் நான் நினைச்ச மாதிரியே தான் போச்சு. ஆனா போலீஸ் ஸ்டேசன் ஸீன்ல மிஸ் ஆகிடுச்சு. நீ என்கிட்ட சொல்லாம இந்த ஊரை விட்டு போவனு நான் நினைக்கல.
உன்னை என்கூட வச்சுக்கணும்னுதான் நான் எல்லாப் பிளானையும் பார்த்து பார்த்துப் போட்டேன். நீ சொல்லாம போனதும் அவ்வளவு கோபமா ஆகிடுச்சு. நினைக்காத நாள் இல்லை ஜியா, இங்க இருந்து சொல்றேன்…” என்றவன் தன் இதயத்தைக் காட்ட, தன் முகத்தை வேறுபக்கமாகத் திருப்பிக் கொண்டவள் முகத்தைச் சுளித்தவாறு அமர்ந்திருக்க,
சமீர் ஜியாவின் அருகில் நெருங்கி வர, ஜியா விலகி விலகி போக, “ஏன் ஜியா, தள்ளி தள்ளி போற? ஓ ரொம்பக் கோபப்பட்டுட்டேன்ல, சாரி டியர்! உன்கிட்ட புடிச்சதே உன் அழகோட சேர்ந்த உன் அறிவுதான். பியூட்டி வித் ப்ரைன்ஸ்! ஆனா அந்த அறிவு எப்போலாம் என்னைத் தூக்கி சாப்பிடுதோ, அப்போதான் நான் என் கண்ட்ரோல்ல இருக்கிறது இல்லை.
இப்போ கூடக் கோபம் எல்லாம் இந்த முட்டாள் ஜீவா மேல தான். இவனோட முட்டாள் தனத்தால பாரு, உன்கிட்ட இப்படி நடந்துக்க வேண்டியதா போச்சு.” என்றவன் மேலும் தொடர்ந்து,
“சுஜித்தும் ஜீவாவும் முதன்முதலா உன்னைப் பத்தி சொல்லும் பொழுதே, உன் மேல எனக்கு ஒரு ஈர்ப்பு வந்துச்சு. ஆனா எப்போ உன்னை முதன்முதலா பார்த்தேனோ… நம்பமாட்ட, நான் க்ளீன் போல்ட். லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்!
உன் வழியிலே போய் உன்னை அடையணும்னு நினைச்சேன். எல்லாம் நல்லா போயிட்டு இருந்த அப்போதான், எனக்கு வெளிநாட்ல இருந்து அந்த ஆஃபர் வந்துச்சு. அதுக்காகச் சரியான ஆளை நாங்க தேடிட்டு இருந்த அப்போதான், மாளவிகா பத்தி சுஜித் என்கிட்ட சொன்னான். யாரோட துணையும் இல்லாத மாளவிகா தான் எங்களோட வேலைக்கு, கரரெக்ட்டா இருப்பானு நாங்க டிசைட் பண்ணினோம். அதனால தான் அவளோட கேச எடுத்துக்க நீ யோசிச்சப்ப, நான் உன்னை எடுத்துக்கச் சொல்லி வற்புறுத்தினேன்.
உனக்குச் சந்தேகம் வராம இருக்க, நான் எவ்வளவோ பண்ணினேன். கடைசியில சுஜித்தோட முட்டாள் தனத்தால எல்லாரும் மாட்டிக்கப் பார்த்தோம். அன்னைக்கு நீ அக்குவேறா ஆணிவேறா எல்லாத்தையும் எக்ஸ்பிளைன் பண்ணுணியே… சத்தியமா சொல்றேன், ஒரு செகண்ட் என் உடம்பெல்லாம் உதறிட்டு.
சொல்ல போனா உன் மேல லவ் இன்னும் ஜாஸ்தியாகிடுச்சு. உனக்கு என் மேல சந்தேகம் வர கூடாதுன்னு நினைச்சேன். பழியெல்லாத்தையும் சுஜித், ஜீவா, வருண் மேல போட்டேன். அன்னைக்கு நைட் சுஜித் வீட்டுக்குப் போனது, அவங்க என்னை அடிக்கிற மாதிரி பண்ணினது, எல்லாமே என் பிளான். மாளவிகா செத்ததுல இருந்தே சுஜித் கொஞ்சம் பயத்தோட தான் இருந்தான். அவன் பயம் எனக்குப் பெரிய ஆயுதமாகிடுச்சு.
அன்னைக்கு நைட் நடந்த கலவரத்துல நீ மயங்கிட்ட, ஆதாரத்தை வாங்கினதுக்கு அப்புறம் உன்னை விட்றணும்னு தான் நினைச்சேன். ஆனா இவ்வளவு யோசிச்ச நீ, இதுக்கு மேலயும் பண்ண மாட்டனு என்ன நிச்சயம்? அதான் உன் வாயடைக்க எனக்கு ஒரு ஆயுதம் தேவைப்பட்டுச்சு, அதான் வீடியோ எடுத்தேன். அதை ஜீவாவை வச்சு ப்ளாக்மெயில் பண்ணினேன்.
மானம் போனாலும் பரவாயில்லை, நான் போலீஸ்கிட்ட போகப் போறேன்னு நீ சென்ன அப்போ என்னடானு யோசிச்சேன். என் உயிரை யூஸ் பண்ணிக்க நினைச்சேன். சுஜித்த என்னைக் கொலை பண்ணிருவேன்னு மிரட்ட சொன்னேன், அது வொர்க் அவுட் ஆச்சு. அதுக்கப்புறம் உன்னை எமோஷனலா வீக் ஆக்கி என் கூடவே வச்சுக்கணும்னு நினைச்சேன். அங்கதான் தப்புப் பண்ணிட்டேன், நீ சொல்லாம போயிட்ட.
அப்புறம் எப்போ வருண் உன்னை ஜீவா பார்த்ததைப் பற்றி சொன்னானோ, அப்போ எனக்குக் கோபம் வந்துச்சு. ஆனா அதை மீறி சந்தோஷம் தான் வந்துச்சு. லண்டன்ல இருந்து வந்ததும் உன்னைப் பார்க்க உன் வீட்டுக்கு வந்தேன். நீ மும்பை போயிருக்கிறதா சொன்னாங்க. ஆயிஷாவை பணத்துக்காகத் தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சேன்.
அங்க உன்னை நான் பார்ப்பேன்னு நினைச்சு கூடப் பார்க்கலை, அவ்வளவு சந்தோஷப்பட்டேன். ஆனா நீ ஆஷிக்கை கல்யாணம் பண்ணிகிட்டனு தெரிஞ்சதுக்கு அப்புறம் உள்ளுக்குள்ள அவ்வளவு வெறி வந்துச்சு.
உனக்கு ஒன்னு தெரியுமா, அன்னைக்கு உன் ரிசப்ஷனுக்கு சுஜித் வந்தான்ல, அவன் உன்னை மிரட்டுறதுக்கு வந்தான் தான நீ நினைச்ச. அவன் வந்ததே என்னைப் பத்தி உன்கிட்ட சொல்லதான். நீ வருவனு நினைச்சு காத்துக்கிட்டு இருந்தான். என்னை அங்க பார்த்ததும் நடுங்கிட்டான்.
என் தலையில் உள்ள காயம் எல்லாம் என்னோட செட் அப். நான் குடுத்த அடியில உன் திசை பக்கமே வரமாட்டேன்னு ஓடிட்டான். திடீர்னு ரொம்ப நல்லவனா ஆகிட்டான் அந்தச் சுஜித், அதான் அன்னைக்கு நல்லா குடுத்து விட்டுட்டேன்.
உன்னையும் ஆஷிக்கையும் சேர விடக்கூடாதுனு, அப்போ அப்பப்போ உனக்கு ஆறுதல் சொல்ற மாதிரி பழைய விஷயத்தைப் பத்தி, உனக்கே தெரியாம உன் மனசுக்குள்ளையும் உன் மூளைக்குள்ளையும் நான் விதைச்சுட்டு இருந்தேன்.
என் திட்டப்படி நீ ஆஷிக்கை பிரிய போறேன்னு சொன்னப்போ, எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்தது தெரியுமா? உன்கூட என் லைஃப்பை ஸ்டார்ட் பண்ண போறேன்னு ரொம்பச் சந்தோஷமா இருந்தேன். ஆனா இப்போ…” என்று அவன் தொடர்வதற்குள், சமீரின் அலைபேசி சினுங்க எடுத்து பார்த்தவன், தொடு திரையில் ஆஷிக்கின் பெயர் வெளிப்பட எரிச்சல் அடைந்தவன் ஜியாவிடம் அதைக் காட்டி,
“உன் புருஷன்தான், அவன் பேரைக் கேட்டாலே எரிச்சலா இருக்கு. ஏன்டி அவனைக் கல்யாணம் பண்ணின?” என்று பற்களை நறநறக்க, அவனது கரத்தில் இருந்து அலைபேசியை வாங்க ஜியா முற்பட கொடுக்க மறுத்தவன்,
“என்ன துள்ளிட்டு இருக்க?” என்று வெறியோடு பார்க்க,
ஜியா, “என்னை விட்ரு சமீர், நான் ஆஷிக்கிட்ட போகணும்.” என்று காலில் விழாத குறையாகக் கெஞ்ச,
மறுத்தவன், “அவன் எதுக்கு, அதான் நான் இருக்கேனே?” என்று விஷமமாய் நெருங்க, ஆத்திரம் விழிகளில் தொனிக்க சமீரின் கன்னத்தில் அறைந்தவள்,
“ச்சீ…” என்று முகத்தைச் சுளிக்க, வெறி பிடித்தவன் போல உருமாறியவன் அவளை மீண்டும் மீண்டும் கடுமையாக அறைய,
“எஸ்கே வேண்டாம், அவசரப்படாத…” என்று தடுத்த ஜீவாவையும் தள்ளிவிட்ட சமீர் தரையில் சுருண்டு விழுந்தவளைப் பிடித்து, “நான் உனக்கு ச்சீயா?” என்று கொலை வெறியோடு உறுமினான்.
“ஜீவா…” என்றவாறு உள்ளே நுழைந்த வருணும் சுஜித்தும், சமீர் ஜியாவிடம் கடுமையாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
வருண், சமீரின் கோபம் அறிந்தவனாய் எதுவும் பேசாமல் தள்ளியே நிற்க, சுஜித் சமீரின் அருகில் சென்று, “விட்ரு சமீர், ஏற்கனவே பண்ணின தப்புக்கு நாம இன்னும் ஓடிட்டு இருக்கோம். வேண்டாம், அவளைப் போக விடு.” என்று எவ்வளவோ எடுத்து சொல்ல சொல்ல, சமீரின் ஆத்திரமும் கோபமும் ஏறிக்கொண்டே தான் சென்றது.
அவனது இரும்பு பிடியில் இருந்து தன்னை விடுவிக்க எவ்வளவோ முயற்சித்தவள், அவன் கோபத்தில் கேசத்தைப் பிடித்துத் தள்ளியதில், மர டேபிளில் மோதி தலையில் இருந்து குருதி வழிய தன் ஜீவனைப் பாதி இழந்தவளாய், புயலில் சிக்கிய மலர் போலத் தளர்ந்து தரையில் கவிழ்ந்தாள்.
***
வீட்டில் ஜியா இல்லாமல் போக மிகுந்த கவலை அடைந்த ஆஷிக் அவளது அலைபேசிக்கு தொடர்பு கொள்ள, அவளிடம் இருந்து எந்தப் பதிலும் வராமல் போக, சமீரிடம் தொடர்புகொள்ள அவனிடம் இருந்தும் எந்தப் பதிலும் வரமால் போக மிகுந்த ஐயம் கொண்டவன், தெரிந்த இடம் எங்கும் ஜியாவைத் தேடி அலைந்தான். ஒரு கட்டத்தில் ஜியாவைப் பற்றிய தகவல் எங்கும் இல்லாமல் போக, வேறு வழியில்லாமல் ரோஹித்துக்கும் ஆதர்ஷுக்கும் தகவல் கொடுக்க,
அவர்களும் அவனோடு இணைந்து கொண்டனர். அவளைக் காணாமல் அப்படி ஒரு ரண வேதனையை அனுபவித்தான். அவனது சிந்தனைகளே அவனை வாட்டி எடுத்தது, ‘ஒருவேளை தப்பான முடிவெதுவும் எடுத்திருப்பாளோ?’ என்று என்னும் பொழுதே அவனது கை, கால், உடல் என்று அனைத்து பாகங்களும் உதறியது. ஒரு கட்டத்தில் நண்பர்களின் வற்புறுத்துதலில் போலீசில் புகார் கொடுக்க முடிவெடுத்த ஆஷிக், அவர்களோடு அங்கே சென்றான்.
நொடிகள் கடக்க கடக்க அவனது இதயத் துடிப்பு மிகவும் அதிகமானது. வியர்வையில் குளித்தவன் போல உடல் நடுங்க போலீஸ் ஸ்டேஷனில் விடமால் வழிந்தோடிய விழிநீரை துடைத்தவாறே, வார்த்தைகள் தடுமாற அதிகாரி கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லியபடி அமர்ந்திருந்தான்.
***
எழுந்து நிற்கக் கூட முடியாத அந்த நிலையிலும், இச்சையோடு தன்னை நெருங்கிய சமீரிடம் ஜியா, “நீ என்ன நினைச்சாலும் சரி, நான் உனக்குக் கிடைக்க மாட்டேன். என் ஆஷிக்குக்கு மட்டும் தெரிஞ்சா உன்னைச் சும்மா விடாமாட்டான்.” உறுதியாகக் கூற,
‘என் ஆஷிக்குக்கு மட்டும் தெரிஞ்சா உன்னைச் சும்மா விடாமாட்டான்.’ என்ற வரி அவனைக் கொடிய மிருகமாக மாற்றியது.
“சும்மா விடமாட்டானா? அவன் என்ன பண்றான்னு நானும் பார்க்குறேன்.” என்று நறநறத்தவன்,
பாதி மயக்கத்தில் கிடந்தவளை தரதரவென்று இழுத்துக் கொண்டு, இருட்டறைக்குள் தள்ளி கதவை சாற்றிக் கொண்டான்.
சமீரின் கட்டளைக்கு இணங்க சுஜித்தை, வருணும் ஜீவாவும் ஒரு அறையில் தள்ளி தாழிட, இருளின் வேட்டை தொடங்கியது.
அரை மயக்கத்தில் கிடந்த போதும் ஜியாவின் காதைக் கிழிக்கும் அளவிற்கு வந்த சிரிப்பொலி, அந்த அறையையே அரட்டியது. நவீன பகடை ஆட்டம் ஒன்று தொடங்க போவதை அவளது மூளை எச்சரிக்க, கால்களை இழுத்துக்கொண்டு மீண்டும் எழுந்து நின்றாள். பாவம் நிற்க கூட முடியவில்லை, பார்வையில் தெளிவில்லை.
இருந்தும் தன்னை வேட்டையாட நெருங்கிய மிருகத்திடம் இருந்து, தன்னைக் காப்பாற்ற ஒரு கிருஷ்ணனாவது வருகிறானா என்று மூட துடித்த இமைகளைப் போராடி பிரித்துப் பார்த்தாள். கண்ணில் தெரிந்ததெல்லாம் எக்காள சத்தத்துடன் தன்னை நெருங்கி வந்த அந்த துஷ்டன்தான்.
கோவிந்தா நின்னைச் சரணடைந்தேன் என்று தன் இரு கரங்களையும் விரித்திருந்தால், ஒருவேளை கோவிந்தன் உதவிருப்பானோ!
கற்பகிரகத்தில் கற்பழிக்கப்பட்ட பச்சிளங் குழந்தையைப் பார்த்து, கரையாத கல்லா தனக்காக இறங்கி வரப்போகிறது என்று எண்ணியவள், தன் கைகளை முடிந்த அளவு அக்கயவனிடம் இருந்து போராடவே பயன்படுத்தினாள்.
உயிர் இல்லாத கற்சிலையை நம்புவதை விட, கல் மனம் கொண்ட அந்த அரக்கனிடம் மன்றாடலாம் என்று எண்ணியவள், அக்கயவனின் கால்களைப் பிடித்து, “உன்னை நம்புனனே சமீர், ஏன் இப்படிப் பண்ற? என்னை விட்ரு ப்ளீஸ்…” கெஞ்சினாள்.
தன் கன்னங்களைத் தடவியவாறு சமீர், கால்களில் விழுந்த ஜியாவைப் பார்த்து, “உன்னைக் கஷ்டப் படுத்தணும்னு எனக்கும் எந்த விருப்பமும் இல்லை. என் கூட வா, சொர்க்கத்தைக் காட்றேன். என்னை விட ஒரு நல்லவனை நீ பார்க்க முடியாது, அந்த அளவுக்கு உனக்கு சந்தோஷத்தை குடுக்குறேன். ஆனா ஆஷிக்தான் வேணும்னு சொன்ன, நரகத்தை விடக் கொடுமையான வேதனையை நான் உனக்குக் கொடுப்பேன்.” இலகுவாக கூறினான்.
“இல்லை… என்னால மு… டி… யாது…” என்றாள் உறுதியாக.
“ஏன்?” விழி நோக்கி அறை அதிர கர்ஜித்தான். ஜியாவின் உடல் நடுங்கியது.
“பதில் சொல்லு…” அரட்டினான்.
நா ஒட்டிக்கொள்ள வியர்த்து உடல் விறைக்க, முகத்தைச் சுளித்தாள். மீண்டும் மிருகமானான், கேசத்தைப் பற்றினான், “முகத்தைச் சுளிக்கிற? என்னைப் பார்க்க அவ்வளவு வெறுப்பா இருக்கா? ம்ம்ம்…” சீறினான்.
“ஆஷிக்கை தவிர என் மனசுல வேற யாரும் இல்லை. உனக்கு நான் எப்பொழுதும் கிடைக்க மாட்டேன். உன்னைப் பார்க்கவே அருவெறுப்பா இருக்கு. ஒரு பொண்ணை அடிக்கிறியே, நீ எல்லாம் ஒரு ஆம்பளையா? நீ ஒரு மிருகம்…” என்று உணர்ச்சி வெடிக்கக் கத்தினாள். அழ கூடத் தெம்பில்லாமல் விசும்பினாள்.
முழு மிருகமாக மாறினான், “நான் மிருகம் இல்லை… மிருகத்தை விடக் கொடுமையானவன்னு காட்றேன்.” பற்களை நறநறத்தான்.
கேசத்தை வேரோடு இன்னும் இறுக்கி பற்றியவாறு தூக்கினான். மென்மையான வதனத்தைத் தன் விரல்களால் நசுக்கினான். தரதரவென இழுத்து சென்று சுவற்றின் மீது தூக்கி எறிந்தான். எங்கே தனது மூச்சு காற்றுத் தீண்டினால் கூடத் தன்னவளின் மென் தேகம் புண்பட்டுவிடுமோ என்று, தன்னை ஒரு பூவை போலப் பார்த்து பார்த்து காதல் செய்த தன் கணவனின் பெயரை, “ஆ… ஷி… க்…” உச்சரித்தவாறு கண்கள் சொருகி தரையில் சாய்ந்தாள்.
விழிநீரைத் தவிர அனைத்து பாகங்களும் ஊமையாகி போயின. மனிதர்கள் உறங்கிப்போக, அசுரனின் வேட்டை துவங்கியது.
கதறிய வாயும் போராடிய கரங்களும் பிணைக்கப் பட்டன. உதைத்த மலர் பாதங்களைச் சுருட்டுக்கு இரையாக்கினான். தனது வன்பசிக்கு அப்பூவை உண்டான். மிகவும் கொடுமையாக வேட்டையாடினான். வெறி அடங்கியது, வேட்டை முடிந்தது. உண்ட மயக்கத்தில் தளர்ந்து அறையை விட்டு வெளியேறினான்.
மயக்கம் மெல்ல தெளிந்தது, இமைகளைப் பல சிரமத்துக்குப் பிறகு பிரித்துப் பார்த்தாள். கண்களை மெல்ல சுழற்றினாள். கிழித்தெறியப்பட்ட ஆடைகள் எங்கோ ஒரு மூலையிலே கதறிக் கொண்டிருந்தது, எழும்ப முடியவில்லை.
உயிர் போகும் வலி முதுகெலும்பின் வழியே ஈட்டியை போலக் குத்தி துளைத்தது. எழுந்து நடக்க இயலவில்லை, நெருப்பால் சுடப்பட்ட பூ பாதங்களைத் தரையில் ஊன்ற முடியவில்லை. ஆனாலும் நடந்து பார்த்தாள், முடியவில்லை.
இறுதியில் அடிவயிற்றை இறுக்கப் பிடித்துக்கொண்டு தத்தி தத்தி தவழ்ந்தாள். கிழிக்கப்பட்ட ஆடைகளைத் தன் கையில் ஏந்தினாள். ஒருவேளை இரும்பில் ஆடை அணிந்திருந்தால்? என்றது இரும்பாகி போன இதயம். அட முட்டாள் பெண்ணே! இரும்பில் ஆடையா? அதை தனது காமத்தீயால் ஒரு நொடியில் உருக்கிருப்பான் அந்தச் சதை வெறிபிடித்த அரக்கன் என்றது மழுங்கி போன அறிவு.
கண்ணீர் வழிந்தது, ஆங்காங்கே குருதி வழிந்த தன் தேகத்தை ஒருவாறாக மூடிக்கொண்டாள். வலி உயிர் போனது. நடை பிணமானாள்.
என் அங்கத்தைச் சிதைத்த உன் உறுப்பை வெட்டி வீச வேண்டும். வெறிகொண்ட உன் விழிகளைப் பிடுங்கி எறிய வேண்டும். என்னை வதைத்த உன் கரங்களைக் கூர்வாளுக்கு இரையாக்கி பெருக்கெடுத்து ஓடும் உன் குருதியில் என் தேகத்தைக் கழுவி, கொதிக்கும் தனலுக்கு உன்னை இரையாக்க வேண்டும் என்று அவளது உள்ளம் சூழ் உரைத்த மறுநொடி,
அவளது செவி கிழியும் அளவிற்கு எக்காள சத்தம். காதுகளை மூடினாள், ஆனாலும் அந்தச் சத்தம் அவளை விடவில்லை, நிமிர்ந்து பார்த்தாள், உடலே அரண்டது. இடுகாடு போலக் காட்சியளித்தது அவள் நின்று கொண்டிருந்த அறை. அதே இருட்டறை… ஆம், அவளது கற்பை விழுங்கிய அதே அறை மீண்டும் முழங்கியது.
குள்ளநரிகளின் சதியில் சிக்கி சிதைந்து போன முட்டாள் பெண்ணே கேள், ‘சூழ் உரைக்க நீ திரௌபதியும் இல்லை. என் குருதி சிந்தியாவது உன் சபதம் முடிப்பேன் என்று நெருப்பில் அடித்துச் சத்தியம் செய்ய, உன் கணவன் ஒன்றும் வேந்தனும் இல்லை. அப்படி ஒரு யுத்தம் நிகழ்ந்தாலும், அதைக் காவியமாய் ஏட்டில் எழுதி போற்றித் துதிக்க இந்த மண்ணுலகில் எந்த மாந்தரும் இல்லை. மனிதர்கள் உறங்க, தேவதைகளை வதை செய்ய விழிமூடாமல் காத்திருக்கும் அரக்கர்கள் வாழும் இடுகாட்டு பூமி இது.
பேதை என்றால் பூலோகம் தாண்டி அடி பாதாளம் வரை கூடச் சென்று, வேட்டையாட துடிக்கும் வன்புணர்ச்சி கொண்ட ஓநாய் கூட்டங்கள் வாழும் இந்த இடுகாட்டில் ஒவ்வொரு பெண்ணும் தன் மானத்தையும், தன் உயிரையும் காத்துக்கொள்ளத் தனியே தான் போராட வேண்டும். உனது யுத்தத்தையும் நீதான் நடத்த வேண்டும்.
‘இந்த நேரத்தில் இவளுக்கு அங்கு என்ன வேலை?’
‘முயன்றிருந்தால் தப்பித்திருக்கலாம்.’
‘அது என்ன ஆண் நண்பர்கள்? ஒரு ஆண் எப்படி ஒரு பெண்ணிற்கு நண்பனாக முடியும்?’
‘நடந்தது நடந்து விட்டது, அடுத்தக் கதையைப் பார்ப்போம்.’
‘இருட்டில் நடந்ததை இப்படியா வெளிச்சம் போட்டு காட்டுவது?’
‘தவறு இவள் மீதும் இருக்கும்.’ எத்தனை கேள்விகள். இதை அனைத்தையும் தாண்டி நீ போராடி வெற்றி அடைந்தாலும் உன் கழுத்தில் விழப்போவது என்னவோ, ‘பழி மாலை’ மட்டும் தான். இப்பொழுதும் நீ போராட தான் போகிறாயா? சாட்சியாக எதைக் காண்பிப்பாய்?
இந்த இருட்டு அறையையா? இல்லை சிதைக்கப்பட்ட உன் தேகத்தையா? பதில் இல்லையா, என் கேள்விக்கே?
உலர்ந்து போனாயே பெண்ணே! நீ பார்க்காத மிருகங்கள், பல மனித வேடத்தில் உன்னைக் கேள்விகளாலும் வார்த்தைகளாலும் வதைக்கக் காத்திருக்கின்றதே, அவைகளுக்கு என்ன பதில் சொல்லுவாய்?
போராடி என்ன பயன் என்று தோன்றுமே? அறிவேன் நான்
ஏன் பெண்ணாய் பிறந்தோம் என்று தோன்றுமே? அறிவேன்.
உன்னை ஈன்றவள் மீதும் கோபம் வருமே?
உன் மீதே வெறுப்பு வருமே? அறிவேன்.
இதற்கு தான் இந்த வீர முழக்கமா? மூலையில் முடங்க போகும் உனக்குச் சபதம் ஒரு கேடா? நீயும் ஒரு பெண் தானே! உன்னிடம் நான் வேறெதை எதிர்பார்க்க? நானும் ஒரு முட்டாள்தான், உன் சபதம் கண்டு ஒரு கணம் வியந்து விட்டேன், எங்கே நீதான் இந்தக் காரிருளின் விடிவெள்ளி என்று!
போ, போய் ஓர் இருட்டறையில் முடங்கிக் கொள். இல்லை, உன் உயிரை மாய்த்துக்கொள்! சீக்கிரம் ஊமையாகி விடு, அப்பொழுது தானே விழித்திருக்கும் வேட்டை நாய்களால், இன்னொரு பூவை வதைக்க முடியும் என்று, அவளை அந்த இருட்டறை எள்ளி நகையாடியது போன்ற பிரம்மை, அவள் விழி முன் வந்து மறைந்து செல்ல, ரத்தம் உலையெனக் கொதிக்க கதறி அழுதாள்.
விழிநீர் வலிய வலிய கன்றி போன முகம் நெருப்புப் பட்டது போல எரிந்தது. சுவற்றைப் பிடித்தவாறு எழுந்து நின்றாள். நிற்க முடியவில்லை. மீண்டும் கண்கள் சொருகி, சரிந்து விழ போனவளைத் தாங்கி பிடித்தது இரு கரங்கள். அதே கரங்கள்… தன் பெண்மையைச் சிதைத்த அதே கரங்கள், உதறி தள்ளினாள்.
“உன்னை ஒரு பூ மாதிரி பார்த்துக்கணும்னு நினைச்சேன், என்னைப் புயலா மாத்திட்டியே? ஏன் ஆஷிக்க கல்யாணம் பண்ணின? எனக்குக் கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது. கடைசியா கேக்குறேன், என்கூட வந்திரு.”
“செத்துப்போனாலும் உன்னை… என்னை…”
‘என்னைக்கும் நேசிக்க மாட்டேன்’ என்பது போல முகத்தைச் சுளித்தவாறு தலையைக் குறுக்கே ஆட்டினாள்.
“அப்போ செத்து போ… ஆ…” என்று தன் தலையைப் பிடித்தவாறு கத்தியவன் அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்து, அவள் எதுவும் யூகிக்கும் முன் மயக்க ஊசியை அவளது தேகத்தில் செலுத்தினான். வலியுடன் கேள்வியாய் பார்த்தவளுக்கு, பதிலாய் கிடைத்தது அரக்கன் சமீரின் அகோர சிரிப்பொலி மட்டும் தான். வெறித்துக் கூடப் பார்க்க முடியவில்லை மங்கிப்போன விழிகள். சரிந்து வீழ்ந்தாள், உயிரணுக்கள் துடித்தது.
கடவுளுக்கும் கிடைக்காத பரிசு
‘நண்பன்’ எங்கோ படித்த ஞாபகம்
நண்பன் என்று தானே நம்பி வந்தேன்,
உனக்காக உயிர் கூடத் துறப்பேன் என்றாயே!
காவலன் என்று எண்ணினேன், காமுகனாய் மாறியதேனோ?
அன்று ஆதரவாய் வருடிய கரங்கள்,
இன்று என் ஆடைகளைச் சூறையாட துடித்தது.
உறுத்தவில்லையா உன் உள்ளம்?
அன்று நான் இருக்கிறேன் என்று சூழ் உரைத்த இதழ்கள்,
இன்று என் அதரத்தை சிதைக்கச் சித்தம் கொண்டது.
கூசவில்லையா உன் மனம்?
அன்று நம்பிக்கை கொடுத்த விழிகள்,
இன்று முள்ளாய் என் மேனியை சிதைகின்றது.
வலிக்கவில்லையா உன் இதயம்?
கைகள் கூப்பிக் கெஞ்சினேன்,
கரையவில்லையா உன் கல்நெஞ்சம்?
என் குருதியை குடித்து உன் போகத் தாகத்தைத் தீர்த்த
சதை வெறியனே, ஒரு நொடி கூடவா
என் கதறலில் உன் தமக்கையைக் காணவில்லை?
என் பெண்மையை உண்டு உன் காமப்பசியைத் தீர்த்த
பிணந்தின்னியே,
ஒரு கணம் கூடவா என் சிதறலில் உன் தாயை பார்க்கவில்லை.
நீ இன்பமடைய
என் பெண்மையைக் குடித்து உன் காமவெறிக்கு பழிதீர்த்தாய்.
காற்றடைத்த வெறும் கூடாய் நடை பிணமானேன்,
நீ குளிர்காய!
என் தேகத்தை உன் காமத்தீக்கு இரையாக்கினாய்,
காற்றில் பறக்கும் வெறும் சாம்பலாய் ஆனேன்.
என்னை காக்க என் ராமன் இல்லை,
என் மானத்தைக் காக்க எந்தக் கிருஷ்ணனனும் இல்லை,
என்னைக் கவர்ந்து செல்ல ஒரு ராவணன் கூட இல்லை,
உன் காமப் பசிக்கு என் பெண்மையை உண்ண தெரிந்த உன் ஆண்மைக்கு,
உன் வயிற்று பசியைப் போக்கிய உன் தாயும் ஒரு பெண் என்பது மட்டும் எப்படி மறந்து போனது?
என்று தனலில் வீசப்பட்டது போலத் துடித்தவளின் விழிகள், ரணமாக உணர்ச்சியற்ற சதை பிண்டம் போலத் தரையில் கிடந்தாள்.
இன்று சர்வதேச பெண்கள் தினம், என் பெண்மைக்கு இறுதி அஞ்சலி. வீதியோரம் வண்ண விளக்குகள், வீரமான மேடை பேச்சுகள், பல பல விருதுகள்.
ஆண்களே பலே!
கண்ணகியை கல்லாக்கி விட்டிர்கள்
திரௌபதியை துகிலுரித்தீர்கள்
சீதையை உயிரோடு சிதையில் இட்டு இறுதியில் புதைத்தே விட்டிர்கள்
பாரத மாதா மட்டும் வெறும்
பாரதியாய் இருந்தால் அவளையும் பலியிட்டுருப்பீர்கள் அல்லவா?
கயவனே உன்னையும் கல்லால் அடித்து, சிதையில் சிதைத்து, துகிலில் தூக்கிலிட்டு, பூமியில் புதைக்க எத்துணை நொடி எடுக்கும்?
பெண்கள் தினத்தைக் கொண்டாடும் ஆண்களே கேளுங்கள்,
பெண்மையை உண்பதல்ல ஆண்மை, பெண்மையைக் காப்பதுவே ஆண்மை.
என்று அவளது தேகத்தில் இருந்து சிதறிய அவளது ஒவ்வொரு துளி ரத்தமும் கதறியது.
மீண்டும் அலறியது சமீரின் அலைபேசி. இந்த முறை ஆஷிக்கின் பெயரைப் பார்த்த சமீரின் முகத்தில் ஏளன புன்னகை. வாய்விட்டு சிரித்தவன் இரண்டு, மூன்று முறைக்குப் பிறகு அட்டென்ட் செய்து, “என்னாச்சு ஆஷிக், நிறைய மிஸ்ட் கால்ஸா இருக்கு? கொஞ்சம் வேலையா இருந்தேன் கவனிக்கல, எல்லாம் ஓகே தானே?” என்றான் மிக இயல்பாக.
“இல்… லை…” என்று ஆஷிக் தடுமாற, தன் இமைகளை மூடி ரசித்த சமீர்,
“என்னாச்சு ஆஷிக், வாய்ஸ் டல்லா இருக்கு.” என்றான் ஜியாவின் வதனத்தை உரசியவாறு. தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் அவளால் உணர முடிந்தாலும், மருந்தின் வீரியத்தால் உடல் உறுப்பெல்லாம் செயலற்று போக, விழிகள் கலங்கியவாறு சிலையெனச் செயல் அற்றுக் கிடந்தாள்.
“சமீர் ஜியாவ காணும், எங்க தேடியும்…” என்று தொடர்வதற்குள் ஆஷிக்கின் வார்த்தைகள் பின்னிக்கொள்ள,
அவனது குரலில் தெரிந்த அவனது வலியை இமை மூடி ரசித்த சமீர்,
“ஜியாக்கு என்னாச்சு?” என்று புன்னகையை மறைத்து கேட்க,
“ஜியாவ காணும், எல்லா இடமும் தேடிட்டேன் கிடைக்கல. உன்கிட்ட ஏதும் சொன்னாளா?” என்று உடைந்து அழுதான்.
“இல்லை ஆஷிக், நீ இப்போ எங்க இருக்க, நானும் வரேன்.”
“இல்லை பார்த்துக்கிறேன், தேவைப்பட்டா சொல்றேன்.”
“ஜியா வீட்டுக்கு வந்ததும் சொல்லு, ஏதும் ஹெல்ப் தேவைப்பட்டா உடனே இன்ஃபார்ம் பண்ணு.” என்றவனிடம் சரி என்பதாய் கூறிவிட்டு தன் அழைப்பைத் துண்டித்தான்.
கிழிந்த நாராகக் கிடந்தவளை வெறித்துப் பார்த்தவன் அறையை விட்டு வெளியேறி, தன்னையே கேள்வியாகப் பார்த்துக் கொண்டிருந்த தன் நண்பர்களின் அருகில் வந்து, சோபா மீது சாய்ந்து கொண்டு ஒய்யாரமாக அமர்ந்தான்.
அவனிடம் ஜீவா ஏதோ பேச வாயெடுக்க, வெளிப்புறமாகத் தாழிட்ட அறையில் இருந்து சுஜித் விடாமல் கத்தி கொண்டிருக்க, கதவைத் திறந்து விடுமாறு சமீர் தன் கண்களாலே வருணை பணிக்க, வெளியே வந்த சுஜித் மூவரையும் இறுக்கமாகப் பார்த்துவிட்டு நேரடியாக ஜியாவின் அருகே செல்ல, பேச்சு மூச்சுன்றிச் சிலையெனக் கிடந்தவளைப் பார்த்து அதிர்ந்த சுஜித் பதறியவாறே சமீரிடம்,
“என்னடா இப்படிப் பண்ணிருக்க? பேச்சு, மூச்சு இல்லாம இருக்காடா, கொன்னுட்டியாடா?” என்று ஆவேசத்துடன் சட்டையின் காலரை பற்றிக் கொண்டவாறே கேட்க, தன் மீது இருந்த சுஜித்தின் கரத்தை நிதானமாய் எடுத்து போட்டவன்,
“இல்லை, இன்னும் செத்துருக்க மாட்டா. சாகுறதுக்கு இன்னும் நாள் இருக்கு, ஸோ ரிலாக்ஸ்!” என்று அலட்சியமாகக் கூற, வேகமாக உள்ளே சென்று பார்த்த ஜீவாவும் வருணும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
“எல்லாம் முடிச்சுட்ட, உயிரை மட்டும் ஏன் விட்டு வச்சுருக்க? இவ கதைய இங்கையே முடிச்சுரு.” என்ற ஜீவாவை பார்த்துச் சத்தமாகச் சிரித்த சமீர், நொடியில் அவனைத் தன் விழிகள் சிவக்க பார்த்து,
“என்ன ஜீவா, தனியா கேம் ஆடுறியா? என்னை மாட்டிவிடப் பார்க்கிறியா?” என்று கேட்க,
“இல்லடா, அப்படி எல்லாம் இல்லை.”
“முட்டாள்! எதுக்கும் யூஸ் இல்லாத நீ எனக்கு அட்வைஸ் பண்றியா? செத்தான்னா நாம கண்டிப்பா மாட்டுவோம், கேஸ் மீடியா வரை போகும், ஆஷிக் கண்டிப்பா விடமாட்டான். இவளை ஹைவேஸ்ல எங்கையாவது தூக்கி போடுவோம். இந்நேரத்துக்கு ஆஷிக் கண்டிப்பா போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் குடுத்திருப்பான். போலீஸ் தேடும், இவளை கண்டுபிடிப்பாங்க. செக் பண்ணும் பொழுது ரேப்னு தெரிய வரும்.
ஆனா தெரிஞ்சி எதுக்கு? உணர்ச்சி எல்லாம் செத்து போய் இப்போ கிடக்குற மாதிரி தான் கிடப்பா. கண்டிப்பா ஆஷிக் மீடியாக்குத் தெரிஞ்சா கேவலம்னு குடுத்த கேச அவனே க்ளோஸ் பண்ணிருவான். இவ உயிர் பிழைக்கிறது எல்லாம் ரொம்பக் கஷ்டம். அப்படியே உயிரோட வந்தாலும், என்னன்னு என்னைப் பத்தி சொல்லுவா? சொல்லி எதுக்கு? அவ சொல்லும் பொழுது நான் அவன் வீட்டுக்கு மாப்பிள்ளையா இருப்பேன். ஆஷிக்கால ஒன்னும் பண்ண முடியாது. அதையும் மீறி கோர்ட்டு கேசுன்னு போனாலும், நான் ரேப் பண்ணினதுக்கு என்ன சாட்சி இருக்கு?
கேஸ் போட்ட வேகத்துல க்ளோஸ் ஆகிரும், அசிங்கம் அவங்களுக்குத் தான். அப்புறம் கொஞ்ச நாள் அந்த ஆயிஷா கூட வாழ்வேன், சொத்து கிடைச்சதுக்கு அப்புறம் அவளைக் கழட்டி விட்ருவேன். ஸோ நமக்குப் பிரச்சனை வராம இருக்கணும்னா இவ இருக்கணும்.” என்ற பிறகு புன்னகைத்த ஜீவா,
“செமடா, சான்ஸே இல்லை… எப்படிடா இப்படி யோசிக்கிற?” என்று பாராட்ட,
“எப்படியோ… இவளோட சாப்டர் இதோட முடிஞ்சிருச்சுன்னா அதுவே போதும்.” என்று வருண் நிம்மதி அடைய,
“இந்தப் பாவத்துல என்னால பங்கெடுத்துக்க முடியாது சமீர்.” என்றான சுஜித்.
