இந்தப் பாவத்துல என்னால பங்கெடுத்துக்க முடியாது சமீர்.” என்ற சுஜித்தைப் பார்த்து முறைத்த சமீர், தன் விழிகளை மூடி மூச்சை இழுத்து விட்டவாறு மிகவும் சிரமப்பட்டு, தன் கோபத்தை அடக்கி கொண்டு அவனது முகத்தை நிமிர்ந்து பார்த்து,
“பங்கெடுத்துக்க முடியாதா? பங்கெடுத்து தான் ஆகணும். பழசு இன்னும் ஞாபகத்துல இருக்கா? இல்லை, முதல்ல இருந்து சொல்லணுமா? நான் பண்ணின எந்தத் தப்புக்கும் சாட்சி இல்லை, ஆனா நீ பண்ணினத்துக்குப் பக்கா ப்ரூப் என்கிட்ட இருக்கு.
சொடக்கு போடுற நேரத்துல உன் இமேஜ் எல்லாத்தையும் காத்துல பறக்க வச்சுருவேன். தி பெஸ்ட் யங் டாக்டர் ஆஃப் தி இயர் டூ தௌசண்ட் எய்ட்டீன் கோஸ் டு, ‘மிஸ்டர் சுஜித் கண்ணா’ அவார்ட் குடுக்கும் பொழுது சிரிச்சு சிரிச்சு வாங்கினல?
நான் நினைச்சா உன் பேரு, புகழ் எல்லாத்தையும் தரை மட்டமா ஆக்க முடியும். ஸோ மூணு பேருக்கும் சேர்த்து சொல்றேன், என்னை மீறி எதாவது கேம் ஆடுனீங்க… அப்புறம் நான் வைக்கிற செக்ல இருந்து உங்களால தப்பவே முடியாது.” என்று தன் குரலை உயர்த்தியபடி எச்சரித்தான்.
ஜீவாவும் வருணும் சுஜித்தைப் பார்த்து முறைக்க, சுஜித் குற்ற உணர்வில் வேறு வழியின்றி இயலாமையோடு தலை கவிழ்ந்து அமர்ந்தான்.
யாரும் இல்லாத ஹைவேயில் சாலையின் ஓரமாக ஜியாவை கிடத்தியவர்கள் வந்த வேகத்தில் அங்கிருந்து செல்ல, அந்த வழியே வந்த டாக்சி ஒன்று சிறிது தூரம் போனதிற்குப் பிறகு சாலை ஓரமாக, யாரோ கிடப்பதை பார்த்து வண்டியின் வேகத்தைக் குறைத்தவாறு ஜியாவின் அருகில் வந்தது.
***
ஆதர்ஷும் ரோஹித்தும் ஒருவகையாக ஆஷிக்கை ஆசுவாசப்படுத்தினாலும், ஜியாவை இழந்து விடப் போகிறோமோ என்ற ஒருவித தவிப்பு அவனது ஆழ்மனதில் ஆழமாக ஊடுருவிருக்க, அதை எப்படிச் சொல்லுவது என்று விளங்காமல் தவித்தான்.
ஆதர்ஷும் ரோஹித்தும் அவனை எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சித்தும், அவன் சமாதானம் அடையவில்லை. உயிரற்று வெறும் கூடாய்த் திரிந்தான். பார்க்கும் பெண் எல்லாம் ஆஷிக்கின் கண்ணிற்கு ஜியாவாகவே தெரிய, மனதில் ரண வேதனை அடைந்தான். அவளிடம் சண்டையிட்ட தருணங்கள் எல்லாம் நினைவிற்கு வர, தன்னைத் தானே வருத்தி கொண்டான்.
“எங்க இருந்தாலும் என்கிட்ட வந்திரு ஜியா…!” என்று உணர்ச்சி ததும்பக் கதறினான்.
அவனது அலைபேசி விடாமல் சிணுங்க ஜியாவாக இருக்கும் என்று எண்ணி அலைபேசியை எடுத்து பார்த்தவனின் முகம், இமைக்கும் பொழுதில் சுருங்கி போகச் சட்டென்று கட் செய்தான்.
மீண்டும் அழைப்பு, “டேய் தியாக்கு என்னடா வேண்டும்? நிலைமை தெரியாம அடிச்சுட்டே இருக்கா, எனக்குக் கடுப்பா இருக்கு.” என்று ஆதர்ஷிடம் முறையிட,
அலைபேசியை வாங்கியவன், “டென்ஷன் ஆகாதடா, அவ இன்னைக்கு ஊருக்கு கிளம்புறால அதனால தான் பேசிருப்பா. என் ஃபோன்ல சார்ஜ் இல்லை, அதான் உனக்கு அடிக்கிறா நான் பேசுறேன்.” என்றவன்,
தியாக்கு தொடர்பு கொள்ள, “வாட்! எங்க? இதோ இப்போவே வரோம்.” என்று பதற்றத்துடன் ஆஷிக்கைப் பார்த்தான்.
***
ஹாஸ்பிடலில் ரத்த வெள்ளத்தில் அவசர சிகிச்சைப் பிரிவில் உணர்வற்றச் சிலையெனக் கிடந்த, ஜியாவைப் பார்த்த ஆஷிக்கின் இதயம் படப்படவென்று அடித்தது.
அடிவயிற்றில் ஆரம்பித்து மனதில் முழுவதும் சொல்ல முடியாத வலி கொடிய நஞ்சைப் போல வேகமாகப் பரவி, தொண்டைக் குழியில் வந்து நின்றது வார்த்தைகள் இன்றித் திகைத்து நின்றான்.
அறையை விட்டு வெளியே வந்த டாக்டரிடம், “ஜியா, உள்ள என் வைஃப் எப்படி இருக்காங்க? ஒன்னும் இல்லல…?” என்று வார்த்தைகள் நாவில் சிக்கிக்கொள்ளப் பதற்றத்துடன் கேட்ட ஆஷிக்கை, தன் அறையில் வந்து பார்க்குமாறு சொல்லிவிட்டு அவர் அங்கிருந்து நகர, மருத்துவரின் முகத்தில் இருந்த கலவரம் அவனுக்குள் புயலைக் கிளப்பியது.
அவரது அறைக்குச் சென்றான். அவனது முகத்தில் தொனித்த பதற்றத்தை உள்வாங்கிய மருத்துவர், சில நொடிகள் இடைவெளி விட்டு, “மிஸ்டர் ஆஷிக், உங்களுக்குக் கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆகுது?”
“ட்வென்டி நைன் டேஸ் ஆகுது, ஜியா எப்படி இருக்கா?”
“நான் சொல்ல போற விஷயம் ரொம்பக் கடினமானது. ஆனா நீங்க தாங்கிக்கிட்டு தான் ஆகணும், மனசை திடப் படுத்திக்கோங்க.” என்றவர் நீண்ட பெருமூச்சை வெளியிட்டவாறு,
“யுவர் வொய்ஃப் ஹேஸ் பீண் ப்ருட்டலி ரேப்ட்!” என்று கூற, மருத்துவரின் முகத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த, ஆஷிக்கின் முகத்தில் வியர்வைத் துளிகள் வழிந்தோடியது. உடல் விறைத்துப் போக, விரல்கள் நடுங்கியவாறு அமர்ந்திருந்தவனின் விழிகளின் விளிம்பில், கண்ணீர் எந்நேரமும் வழிந்தோட தயாராக இருந்தது.
“மிஸ்டர் ஆஷிக்!” என்று மருத்துவர் அழைக்கவும், விழிநீர் தடையின்றி வலிய மேலும் தொடர்ந்தவர்,
“அவங்களை ரொம்பச் சித்திரவதை பண்ணிருக்காங்க, உடம்பெல்லாம் பல கீறல்கள் இருக்கு. இன்டெர்னல் ப்ளீடிங் அதிகமா இருக்கு. பாடி மார்க்ஸ் வச்சு க்ளியரா என்னால இது ரேப்ன்னு சொல்ல முடியும். ஆனா செமன் ட்ரேஸஸ் எல்லாத்தையும் தெளிவா க்ளீயர் பண்ணிருக்காங்க, ஸோ ப்ரூஃப் இல்லை.
கன்டினியுஸா ரேப் பண்ணிருக்காங்க. எல்லாத்துக்கும் மேல அவங்களோட ப்ளட்ல ஒரு பயங்கரமான ஹெவி எஃபெக்ட் உள்ள போதை மருந்தை இன்ஜெக்ட் பண்ணிருக்காங்க. அதனால தான் இப்படி அவங்க எந்த உணர்ச்சியும் இல்லாம இருக்காங்க. உயிர் மட்டும்தான் இருக்கு, இந்த கண்டிஷன் தொடர்ந்தா ஷி வில் டை.
உடனே சரியான ட்ரீட்மெண்ட் குடுக்கலைன்னா உங்க மனைவி உயிரோட இருக்க மாட்டாங்க.” என்று அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் அவனது இதயத்தைக் குத்தி குத்தி ரணமாக்கியது. நரம்பெல்லாம் புடைக்க, ரத்தம் உலையெனக் கொதித்தது. விழிகள் தீ பிழம்பாக, “நோ…!” என்றவாறு அவரது டேபிளில் உள்ள பொருட்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டவன், வெறி பிடித்தவன் போல நடந்து கொண்டான்.
‘யார்? ஏன்?’ என்று அவன் மனம் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் அவனிடம் பதில் இல்லை, தலை கனத்தது.
கோபம் தலை தூக்க கண்ணில் பட்ட அனைவரையும் சந்தேகத்தோடு பார்த்தான். ஆதர்ஷ், ரோஹித், தியா, நர்ஸ் இப்படி அனைவரும் எவ்வளவோ தடுக்க, தன் நிலையை முற்றிலுமாய் மறந்தவன், ஒரு கட்டத்தில் ரோஹித்தை கீழே தள்ளிவிட்டு ஆதர்ஷையும் அடிக்கக் கை ஓங்கினான்.
அனைவரும் அதிர்ச்சியில் நிற்க, விழிகள் விரிய அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவன், ஜியா இருக்கும் அறைக்குள் அத்துமீறி நுழைந்தான். ஆஷிக்கின் அனல் பார்வை அனைவரையும் அவனிடம் இருந்து தள்ளி வைத்தது.
ஆதர்ஷ் தலையில் கை வைத்தவாறு வந்து அமர்ந்தான்.
“எப்படிடா இவனைச் சமாளிக்கப் போறோம்? ஜியாவ யாருடா இப்படிப் பண்ணிருப்பாங்க?” என்ற பொழுதே அவனது விழிகளில் இருந்து கண்ணீர் சுரக்க,
“யாரா இருந்தாலும் அவங்களுக்குத் தண்டனை கிடைச்சே ஆகணும்.” என்று ரோஹித் ஆக்ரோஷமாகக் கூற, தியா அவர்களைச் சமாதானம் செய்தவாறு, “இப்போதைக்கு ஜியா பழையபடி நார்மலாகி வரணும். இல்லனா ஆஷிக்கோட நிலைமை ரொம்ப மோசமாகிரும்.”
“ஜியா கூட வேற யாரையாவது பார்த்தியா?”
“இல்லை ஆதர்ஷ், யாரோ ரோட்டோரமா விழுந்து கிடந்த மாதிரி இருந்தது. கீழ இறங்கி பார்த்தப்போ தான், ஜியான்னே தெரியும். உடனே ஹாஸ்பிடல் வந்துட்டேன். எவ்வளவோ ட்ரை பண்ணினேன், ஃபோனை யாருமே எடுக்கலை. டாக்டர் விஷயத்தைச் சொன்னப்போ என் உடம்பெல்லாம் நடுங்கிருச்சு.” என்றவள் மேலும் தொடர்ந்து, “நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க, நீங்களே டென்ஷன் ஆனா ஆஷிக்கையும் ஜியாவையும் யாரு பார்த்துக்குங்க?” என்று அவர்கள் இருவரையும் ஆறுதல்படுத்திக்கொண்டு இருந்தாள்.
கோபத்தில் தகத்தகவென்று எரியும் விழிகளோடு உள்ளே நுழைந்தவனது கோபம் எல்லாம், கசங்கி எறியப்பட்ட மலர் போல உலர்ந்து கிடந்த தன் மனைவியைப் பார்த்ததும் மறைந்து போக, கை கால்கள் நடுங்கியவாறே, அவளது அருகில் மெல்ல மெல்ல நடந்து வந்தான்.
முகத்தில் இருந்த ஆக்ஸிஜன் மாஸ்க், கையில் பொருத்தப்பட்ட நரம்பு ஊசி, தலை, கை, கால்களில் கட்டு என்று அசைவின்றி, விழிகள் மூடிய நிலையில் கிடந்த தன்னவளைக் கண்ட நொடியே, மனதின் ஓரத்தில் கனன்று கொண்டிருந்த கோபம் எல்லாம் வந்த சுவடு தெரியாமல் மறைந்து போனது.
கன்றி போய் இருந்த வதனத்தில் தெளிவாகத் தெரிந்த ஐவிரலின் சுவடு, அவனது இதயத்தைக் கசக்கி பிழிந்தது. கழுத்து, கை, கால் என்று கண்ணில் பட்ட பாகங்களில் இருந்த கீறல்கள், அதில் காய்ந்த நிலையில் இருந்த ரத்த கறைகள் அவன் இதயத்தை ரணமாக்கியது. அவளது நெருப்பிடப்பட்ட பாதம், கலைந்த கேசம், நைந்து போன விரல்கள் அவனைச் சுக்கு நூறாக உடைத்தது. பார்த்து பார்த்து காதல் செய்த மனைவி இன்று, கிழிந்த ஓவியம் போலத் தன் கண்முன் கிடப்பதைப் பார்த்தவன் நிலை குலைந்து போனான், விரல்கள் நடுங்கிற்று.
மெதுவாய் கேசத்தை வருடியபடி, “ஜி… யா…” என்று அழைத்தான். அசைவில்லை. நெஞ்சோரத்தில் மின்னல் வந்து பாய, விழிகள் இரண்டும் நீரில் தத்தளித்தது. உள்ளத்தில் உணர்ச்சி குவியல் அடக்க முடியவில்லை கதறினான். “ஜியா…!” என்றவாறு கதறினான். அவனது எதிரொலியே அதீபயங்கரமாய் அவனது காதையேக் கிழித்தது.
ஒரு சில நொடியில் ஜியாவின் கை, கால்கள் எல்லாம் எக்கு தப்பாக அடித்துக்கொள்ள, “ஜியா என்னாச்சு?” என்றவாறு அடக்க முயற்சித்தான், முடியவில்லை. விழிகள் திறந்திருக்கக் கண்ணீர் விடாமல் வழிந்தோடியது.
“டாக்டர்!” என்று உரக்கக் கத்தினான். அவனது குரல் கேட்டு பதறியவாறு அனைவரும் உள்ளே வந்தனர். ஒரு சில நிமிடங்கள் கழித்து மருத்துவர் கொடுத்த சிகிச்சையில், ஜியா பழைய நிலைக்கு வந்தாள்.
ஆஷிக்கை அறையை விட்டு வெளியேறும்படி மருத்துவர் எவ்வளவோ கூறினார், நகரவில்லை. அவனைத் தடுத்த செக்யூரிட்டி கார்ட்ஸ் அனைவரையும் தாறுமாறாகத் தாக்கியவன், மீண்டும் சென்று ஜியாவின் அருகிலே அமர்ந்துகொள்ள ஆத்திரமடைந்த மருத்துவர்,
“உங்க மனைவிக்கு இப்போ வந்தது பேரு ஃபிட்ஸ். அவங்க இருக்கிற நிலைமையில மறுபடியும் ஃபிட்ஸ் வந்தா உயிருக்கே ஆபத்தாகிடும். ஏற்கனவே அவங்க ரொம்பப் பாதிக்கப்பட்டு இருக்காங்க. அவங்களுக்கு ரெஸ்ட் தேவை. இவ்வளவு நேரம் கழிச்சு இப்போ தான் அவங்க கண் முழிச்சே பார்த்திருக்காங்க. அப்படினா உங்களோட செயல் அவங்கள பாதிக்குதுன்னு அர்த்தம்.
உங்க வேதனையை அவங்ககிட்ட காட்டாதீங்க. அவங்களால உங்களுக்கு ரியாக்ட்தான் பண்ண முடியாது. ஆனா நீங்க பேசுறத கேட்க முடியும், நீங்க பண்றத பார்க்க முடியும். உங்க நிலைமை புரியுது, அவங்களோட நிலைமையையும் பாருங்க.
அவங்கள ரெஸ்ட் எடுக்க விடுங்க, புரிஞ்சிக்கோங்க. இப்படி நீங்க பண்ணுனீங்கன்னா அவங்க உயிருக்கே ஆபத்து வரலாம்.” இவ்வாறு எடுத்து கூற,
தன் இறுக்கத்தைத் தளர்த்தியவன் தன்னவளின் கலைந்த கேசத்தை இதமாக வருடி கொடுத்து, உச்சியில் மென்மையாய் இதழ் பதித்தான். ஜியாவின் மூடியிருந்த விழிகளில் இருந்து கசிந்த கண்ணீர் துளிகள், அவனது உள்ளதைக் கசக்கி பிழிந்தது. நெஞ்சைப் பிடித்தவாறே வேகமாக அறையை விட்டு வெளியேறினான்.
‘இப்படி நீங்க பண்ணுனீங்கன்னா அவங்க உயிருக்கே ஆபத்து வரலாம்.’ என்ற மருத்துவரின் வரிகள் அவனைப் பயமுறுத்தியது. அசைவின்றித் தரையில் அமர்ந்திருந்தான். திகிலடைந்த நிலையில் அவன் எந்த ஒரு உணர்வும் இல்லாமல் அமர்ந்திருந்த விதம் அவனது நண்பர்களை அச்சுறுத்தியது.
அருகே வந்த ரோஹித் அவனது தோள்களைப் பற்றியவாறு அவனது அருகே வந்து அமர, மனம் உடைந்து தேம்பி தேம்பி நண்பனின் தோள் மீது சாய்ந்து அழுதான்.
நொடிகள் நிமிடங்களாகக் கடந்திருந்த நிலையில் கண்ணீரைத் துடைத்தவாறு நிமிர்ந்து அமர்ந்த ஆஷிக், மூவரையும் பார்த்து எதையோ சொல்ல வாயெடுக்க, அவன் கூற வருவதைப் புரிந்து கொண்டவர்கள் அவன் எதுவும் பேசுவதற்குள் அவனை இறுக்க அணைத்துக் கொண்டார்கள்.
“யாரா இருந்தாலும் அவங்களுக்குச் சரியான பாடத்தைக் கத்து குடுக்கணும் ஆஷிக்.” என்றாள் தியா தன் விழிகள் கலங்கியபடி.
தியாவைத் தொடர்ந்து ஆதர்ஷ், ரோஹித்தும் இருவரும் ஆஷிக்கிடம், “போலீஸ்கிட்ட…” என்று தொடர்வதற்குள் அவர்களைக் குறுக்கிட்ட ஆஷிக்,
“இல்லை, இப்போதைக்கு ஜியா குணமாகி வந்தாலே போதும். அவளுக்கு எந்தப் பாதிப்பும் இருக்கக் கூடாது. முதல்ல ஜியா சரியாகி வரட்டும். அதற்கு அப்புறம் யாரா இருந்தாலும் சரி, என் ஜியாக்கு குடுத்த அதே வலிய அவங்களுக்கு நூறு மடங்கு அதிகமா குடுப்பேன். அதுவும் ஜியாவ வச்சே செய்வேன்.” என்று அமைதியோடு ஆரம்பித்தவன், இறுதியில் ஆக்ரோஷத்தோடு உறுதிகொண்டான். விழிகள் தனலைக் கக்கியது. தகுந்த சமயத்திற்கு வேண்டி பழிவாங்குவோம் என வெறியைத் தன் நெஞ்சுக் குழிக்குள்ளே அடக்கிக்கொண்டான்.
ஹாஸ்பிடலுக்கு வந்த சமீர் ஆஷிக்கிடம், “ஜியாக்கு என்னாச்சு?” என்று பொய்யான பதற்றத்தோடு கேட்க,
“ஜியாக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு, ட்ரீட்மெண்ட் குடுத்துட்டு இருக்காங்க. உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை.” என்று ஆதர்ஷ் சமீருக்குப் பதில் கூறினான்.
ஆதர்ஷ் கூறியதைக் கேட்ட சமீரின் பார்வை எல்லாம் ஆஷிக்கின் மீதே பதிந்திருந்தது. கலவரத்தோடு காணப்பட்ட ஆஷிக்கைத் தன் மனம் குளிர ரசித்தவன் மனதிற்குள், ‘செஞ்சதே நான்தான், என்கிட்டவே வா? நான்தான் அவளைச் சாகடிக்கவே இல்லையே? அப்போ உயிரோட தான் இருப்பா. ஆனா உன் நண்பன் தினம் தினம் சாகப் போறான்.’ சிரித்தவன்,
“நான் ஜியாவ பார்க்கணும்.” என்றவாறு சமீர் உள்ளே நுழைய முயல,
அவனைத் தடுத்த ஆஷிக், “யாரும் உள்ள போகக் கூடாது.” என்று முணுமுணுக்க,
“ஏன்? டாக்டர் போகக் கூடாதுன்னு சொல்லிருக்காங்களா?”
“இல்லை, நான் சொல்றேன்.”
“நான் ஜியாவோட ஃப்ரண்ட்.”
“நான் அவளோட புருஷன், அவுட்!” என்று கர்வத்தோடு கர்ஜித்த ஆஷிக்கைப் பார்த்து,
‘புருஷனா? நீயா? நான் விட்டு வச்ச மிச்சம் தான்டா அவ. உன்னை விட அதிக உரிமை எனக்குத் தான் இருக்கு.’ இவ்வாறு மனதிற்குள் எண்ணியவன் அசட்டை சிரிப்போடு ஆஷிக்கைப் பார்த்து,
“அடிக்கடி சொல்லு ஆஷிக், அப்போ தான் தெரியுது.” என்று ஏளனமாய் பேச, கோபத்தில் ஆஷிக், சமீரின் சட்டையின் காலரை பற்றிக்கொள்ள,
பதிலுக்கு முறைத்த சமீர், “புருஷன்னு சொன்னா மட்டும் போதாது. கொஞ்சமாவது அப்படி நடந்துக்கணும். அவகிட்ட சண்டை போட்டே அவளைப் பாதிச் சாகடிச்சுட்ட. இப்போ வந்து ஸீன் போடுறியா?”
“என்னடா சொன்ன?” என்றவாறு ஆஷிக், சமீரை அடிக்கக் கை ஒங்க, அதற்குள் ரோஹித்தும் ஆதர்ஷும் ஆஷிக்கைத் தடுக்க, “அவனை வெளியே போகச் சொல்லுங்க.” ஆஷிக் கர்ஜித்தான்.
“இப்போ போறேன், ஆனா மறுபடியும் வருவேன்.” என்று பதிலுக்கு முறைத்துவிட்டு உள்ளம் நெகிழ அங்கிருந்து சென்றான்.
“இவனுக்கு யார் சொன்னது?” என்று ஆஷிக் சிடுசிடுக்க,
“நான் தான் சொன்னேன், சமீர் உனக்குக் கால் பண்ணிட்டே இருந்தான், அதான் சொன்னேன்.” என்று தியா தயங்கியபடி கூறினாள்.
“ஏன்டா அவன்கிட்ட இப்படிச் சண்டை போடுற?” என்ற ஆதர்ஷைப் பார்த்து ஆஷிக்,
“தெரியலடா, ஜியாவ யாரும் பார்க்க வேண்டாம் அவ்வளவு தான். எனக்கும் ஜியாக்கும் சண்டை வர்றதுக்குக் காரணமே இவன்தான். எல்லாத்துக்கும் மேல இவன் உள்ள வந்தான்னா ஜியாக்கு ஆக்சிடென்ட் இல்லன்னு கண்டுபுடிச்சுட மாட்டான். யாரும் ஜியாவ பரிதாபமாவோ கேள்வியாவோ பார்க்கிறதுல எனக்குச் சுத்தமா விருப்பம் இல்லை.”
“வீட்ல என்ன சொல்ல போற?”
“நானா எதுவும் சொல்ல போறதில்லை. தெரிஞ்சி கேட்டா இவன்கிட்ட சொன்னதைத் தான் சொல்லுவேன். யாரும் அவளை எமோஷனலா ஹர்ட் பண்ணிற கூடாது. அம்மாவும் சரி, ஜியா சித்தியும் சரி எப்படி நடந்துக்குவாங்கன்னு தெரியலை. ஆறுதல் சொல்றேன்னு அவளைக் காயப்படுத்திற கூடாது. ஜியா பழைய மாதிரி என்கிட்ட திரும்ப வரணும்.” என்றவனின் இதயத்தில் ஜனித்த வலி விழி வழியே விழிநீராக வழிந்தோடியது.
நாட்கள் உருண்டோடின. ஆஷிக் ஒரு கணம் கூட அகலாது ஜியாவின் அருகிலே அமர்ந்து, அவளை நன்கு கவனித்துக்கொண்டான். அவளுக்கு உணவு பரிமாறுவதில் இருந்து உடைமாற்றுவது தாண்டி ஒரு மனைவிக்கு, கணவன் மட்டுமே செய்யக் கூடிய காரியத்தையும், பிறர் சங்கோஜப்படும் காரியத்தைக் கூட மனநிறைவோடு செய்தான்.
ரணப்பட்ட தேகத்திற்கு மருந்திடும் பொழுது, தன்னவளின் காயப்பட்ட மனதிற்கு மருந்திடவும் அவன் மறக்கவில்லை.
தன் வலியை மறைத்துக் கொண்டு அவள் முன்பு சிரித்தான். அவள் விழிகள் கசியும் பொழுதெல்லாம் கரம் பிடித்து, “உன் ஆஷிக் என்னைக்கும் உன் கூடவே இருப்பேன். சீக்கிரம் என்கிட்ட வாமா…” என்று கூறிக் கொண்டே இருப்பான்.
அவன் மனம் முழுவதும் ஜியா பழைய நிலைக்கு வரவேண்டும் என்கின்ற எண்ணம் மட்டும் தான் நிறைந்திருந்தது.
நாட்கள் உருண்டோடி கொண்டிருக்க ஜியாவின் உடல் நிலையில் மட்டும், எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இப்படி இருக்க ஒருநாள் உணவு வாங்க வெளியே சென்றிருந்த ஆஷிக் அறைக்குள் நுழைந்த நேரம், ஆஷிக் தடுப்பதற்குள் ஜியா படுக்கையில் இருந்து எழுந்திருக்க முயற்சி செய்து கீழே விழுந்து விட, பதறியவன் அவளை மீண்டும் படுக்கையில் படுக்க வைத்து, அவளது தேவையை அவளது கண்ணசைவிலே நிறைவேற்றினான். இந்த விஷயத்தை டாக்டரிடம் அவன் பகிர்ந்த பொழுது,
ஜியாவை பரிசோதித்தவர் அவனிடம், “இதுல பயப்படுறதுக்கு எந்த விஷயமும் இல்லை. இது ஒரு நல்ல இம்ப்ரூவ்மென்ட். கண்டிப்பா அவங்க பழைய நிலைமைக்குச் சீக்கிரமாவே வந்துருவாங்க.” என்று அவர் கூறியது ஆஷிக்கிற்கு ஆறுதலாக இருந்தது.
அவ்வப்பொழுது கை, கால்கள் அசைவது என்று ஜியாவின் உடல்நிலையில் நல்ல மாற்றம் தெரிந்தது.
ஆயிஷா, சமீரின் திருமணத் தேதியும் நெருங்கி வர, ஏற்கனவே பேசியது போலத் திருமணம் விழா டெல்லியில் நடக்க இருந்ததால், ஹாஜராவும் ஆயிஷாவும் இன்னும் ஒருவாரத்தில் ஆஷிக்கின் வீட்டிற்கு வர போகும் செய்தி வர, இதற்கு மேல் மறைக்க முடியாது என்று உணர்ந்தவன், தன் வீட்டாரிடமும் ஜியா வீட்டாரிடமும் ஜியாவுக்கு ஆக்சிடென்ட் ஆகி விட்டது என்று தெரிவித்தான். அவர்கள் அனைவரும் விஷயம் தெரிந்த மறுநாளே ஜியாவைக் காண வந்தனர்.
வீட்டுப் பெரியவர்கள் யாரும் ஆஷிக் கூறிய காராணத்தை ஏற்க சற்றும் தயாராக இல்லை. ஷங்கரும் அடிக்காத குறையாக ஆஷிக்கிடம் ஜியாவைப் பற்றிய உண்மையை மறைத்ததற்காகக் கோபம் கொள்ள, ஹாஜரா அடிக்கவே செய்து விட்டார்.
“இதை மறைக்கத் தான் ஜியா ஊருக்குப் போயிருக்கிறதா பொய் சொன்னியா? இது மறைக்க வேண்டிய விஷயமாடா?” என்று ஹாஸ்பிடலில் வைத்தே அவர் அவனிடம் ஆத்திரம் அடைந்தார். அந்த நேரம் எதேர்ச்சையாக அங்கு வந்த சமீர், எரிகின்ற நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல, “நல்லா கேளுங்க, என்னைக் கூடப் பார்க்க விடல. என்கிட்ட சின்ன ஆக்சிடெண்ட்னு சொல்லி சமாளிச்சுட்டாரு.” என்று சொல்ல,
“சமீர் உனக்குத் தெரியுமா?”
“தெரியும் அத்தை, ஆனா யாருக்கும் சொல்ல கூடாதுன்னு உங்க புள்ளை ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாரு. அதனால நான் எங்க வீட்ல கூடச் சொல்லல.” என்றவாறு சமீர், ஆஷிக்கை முறைத்து பார்த்தான்.
ஹாஜராவிற்கு ஆஷிக் மீதுள்ள கோபம் இன்னும் அதிகரித்தது. ஜியாவின் நிலையைக் கண்டு அனைவரின் உள்ளமும் கவலையில் ஆழ்ந்தது.
ஆஷிக், ஜியாவை அவளது தேவை அறிந்து கவனித்துக் கொண்ட விதம், ஆஷிக் மீது மற்றவர்கள் கொண்ட கோபத்தைக் கொஞ்ச கொஞ்சமாய் தணிக்க செய்தது. மருந்து பாதி, அன்பு பாதி என்பது போல இந்த இரண்டும் சரி பாதியாய் ஜியாவிற்குத் தட்டாமல் கிடைக்க, ஜியாவின் உடல் நிலையில் சின்னச் சின்ன மாற்றங்கள் வந்தது.
ஆயிஷாவின் திருமணத் தேதி நெருங்க நெருங்க ஆஷிக்கிற்கு வேலை பளு அதிகமாகியது. ஒரு அண்ணனாக தன் தங்கையின் திருமண ஏற்பாடுகளையும் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்க, முன்பு போல நாள் முழுவதும் ஆஷிக்கால் ஜியாவின் அருகிலே இருக்க முடிவதில்லை.
அதனால் ஜியாவை ஹாஜராவவும் திவ்யாவும் தான் பார்த்துக் கொண்டனர். அதில் ஆஷிக்குக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் அதைத் தவிர, அவனுக்கு வேறு வழியும் இல்லை.
நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் ஜியாவைக் காண வருவான். காலம் வேகமாக ஓட ஆயிஷா, சமீரின் திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்க சமீர், ஜியாவைக் காண மருத்துவமனைக்கு வந்தான். ஹாஜாராவையும் திவ்யாவையும் உணவருந்திவிட்டு வருமாறு சொல்லி, அதுவரை ஜியாவைத் தான் பார்த்துக் கொள்ளுமாறு கூறினான். அவர்களுக்கும் சிறிது ஓய்வு தேவைப்பட, அவன் கூறியதைப் போலவே உணவு அருந்த சென்றனர்.
வக்கிர பார்வையோடு ஜியாவிடம் நெருங்கிய சமீரின் முகத்தில் கோபம், வெறுப்பு, சிரிப்பு, ஆசை என்று விதவிதமான உணர்ச்சி குவியல் நொடிப்பொழுதில் மாறி மாறி வந்து மறைந்து போனது. விழிகள் மூடி உறங்கி கொண்டிருந்தவளை, தன் பார்வையாலே தீண்டியவன் தன் விரல் கொண்டு அவளது மென் வதனத்தை வருட, ஒருவித சங்கடமான உணர்வோடு தன் விழிகளைத் திறந்தவள், கண் முன்னே சமீரைக் கண்டதும் கண்களில் பயம் தொத்திக்கொள்ள, உடலை அசைக்க முடியாமல் விழிகள் கலங்க கலவரத்தோடு சிலையெனக் கிடந்தாள்.
“இதெல்லாம் தேவையா? சரின்னு ஒரு வார்த்தை சொல்லிருந்தனா இப்போ ரெண்டு பேரும் நிம்மதியா இருந்திருக்கலாம்.” என்றவன் மேலும் தொடர்ந்து, “எனக்கு நாளைக்குக் கல்யாணம். ஆல் த பெஸ்ட் சொல்ல மாட்டியா?” என்று விஷமத்தோடு சிரிக்க, அவளது இதயம் பயங்கரமாகத் துடித்தது.
கை, கால்கள் எல்லாம் திசை மாறி உதற, சத்தம் கேட்டு அருகில் இருந்த நர்ஸ் உள்ளே வர, பல மணிநேர போராட்டத்திற்குப் பிறகே ஜியா பழைய நிலைக்கு வந்தாள். அதற்குள் உணவருந்த சென்றவர்களும் அங்கே வந்துவிட, ஜியாவின் போராட்டத்தைப் பார்த்தவர்களின் இதயம் ஒரு நொடி கலங்கிவிட்டது.
“சமீர் க்ளோஸ் ஃப்ரண்ட்ன்னு சொல்றீங்க, அதான் பார்த்ததும் எமோஷனல் ஆகிட்டாங்க. அவங்கள டிஸ்டர்ப் பண்ணாதீங்க, ரெஸ்ட் எடுக்கட்டும். இப்போதைக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.” என்று மருத்துவர் கூறிய பிறகே இருவரும் நிம்மதி அடைந்தனர். மருந்தின் வீரியத்தால் மனதைத் தவிர அனைத்தும் கட்டுக்குள் இருக்க, மனதில் உள்ள எதையும் சொல்ல முடியாமல் கண்கள் மெல்ல மெல்ல சொருக, தன்னையும் மீறி நித்திரைக்குச் சென்றாள்.
தன்னை ரணமாக்கிய அந்தக் கொடூரமான இரவு, அவளது நினைவிற்கு மின்னலைப் போல வந்து அவளது உயிர் வரை சென்று தாக்க, அதீத மன அழுத்தம் காரணமாய் ஜியாவின் இதயம் வேகமாகத் துடிக்க, மூச்சு விடவே மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள்.
***
