உருத்திரா ❤️ 40(final)

எபிலாக் 

மூன்று வருடங்கள் கழித்து…

ஏர்போர்ட் வருகைப் பகுதியில் ருத்ராவின் குடும்பம் மொத்தமாக கூடியிருந்தது. அவர்கள் வீட்டு குட்டி மருமகள் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்புகிறாள் அதுமட்டுமா பத்ரனின் வாரிசை தன் வயிற்றில் சுமந்துகொண்டு வருகிறாள் திகள்விழி!

படிப்பை முடிக்கும் வரை குழந்தை வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தவனை எப்படியாவது சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்று பல வழிகளில் முயற்சி செய்தும் தோற்றுப்போன திகள், கடைசியில் அவன் பிடிவாதத்தைக் கண்டு கடுப்பாகி சுற்றிக்கொண்டிருந்தாள்.

அமெரிக்காவில் ஒரு வருட மருத்துவப் பயிற்சியை திகள் தொடர்ந்த நேரத்தில், வழக்கம்போல அவளைப் பார்க்க வந்திருந்தான் பத்ரன்.

அவன் காலில் விழாத குறையாகக் கெஞ்சியும், கொஞ்சியும் பார்த்துவிட்டாள். எதற்கும் மசியாதவனைக் கடைசியில் தன்னுடைய முத்தங்களால் மயக்கிப் போட்டாள்.

அவளுடைய ஆசைக்காகக் கொஞ்சம் பாதுகாப்பை ஒதுக்கி வைத்தவன், அடுத்த ஒரு மாதம் முழுவதும் அவளுடன் அமெரிக்காவைச் சுற்றி வந்தான். அந்த நாட்களைத் தங்களுக்கான அழகான நினைவுகளாக மாற்றிக்கொண்டான்.

வழக்கம்போல அவன் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டிய நாளில் திகள் அழ ஆரம்பித்துவிட்டாள்.

“இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டுப் போங்களேன் மாமா…” என்று அவனைப் பிடித்துக்கொண்டு விடாமல் கெஞ்சியவளை ஒருவழியாகச் சமாதானப்படுத்திவிட்டு கிளம்பினான்.

ஆனால், அடுத்த மாதமே அவனைத் திக்குமுக்காட வைக்கும் செய்தியுடன் சிரித்த முகமாக ஓடிவர வைத்துவிட்டாள்.

கையில் பிரக்னன்சி கிட்டுடன் வீடியோ காலில் நின்றவளைப் பார்த்த பத்ரனுக்கு முதலில் எதுவுமே புரியவில்லை.

“மாமா…” என்று பல்லைக் காட்டியவளையும், அவள் கையில் இருந்த பொருளையும் மாறி மாறிப் பார்த்தான்.

“மாமா… நீங்க இப்படியே முழிச்சுட்டு இருந்தா எனக்கு பயமா இருக்கு கொஞ்சம் நார்மலா பாருங்களேன். ஒரு வேளை பேபி வந்தது பிடிக்கலையா?” என்று கேட்டவளின் புன்னகை கொஞ்சம் கொஞ்சமாக வாடிப்போனது.

“அதில்ல குட்டச்சி! இன்னும் ஆறு மாசம் நீ அங்கேயே இருந்தாகணும் அதான்… உடனே பேபி வரும்னு எதிர்பார்க்கல கொஞ்சம் ஷாக் ஆகிட்டேன்”

“உன்னை மாதிரியே குதிச்சு குதிச்சு சண்டை போடுற ஒரு பொண்ணு பெத்துக்குடு. இப்போ நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன்” என்றவன் முகத்தில் புன்னகை மலர்ந்ததும் திகளின் இதழ்களும் விரிந்தது.

விஷயம் இரு குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டதும் வீட்டில் சந்தோசத்திற்குக் குறைவில்லாமல் போனது. அதிலும் அபிராமி உடனே திகளைப் பார்க்க வேண்டும் என்று அடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டார்.

அடுத்த சில நிமிடங்களிலேயே ருத்ரா முதற்கொண்டு அனைவரையும் அள்ளிக்கொண்டு பாஸ்டன் செல்லத் தயாராகிவிட்டார்கள்.

விமானத்தில் ஏறியதுமே ருத்ராவின் வாண்டுகள் இரண்டும் ஒரே அழுகை!

பிளைட்டை பார்த்தாலே வாயைப் பிளந்து அழ ஆரம்பித்துவிடும் பிள்ளைகளை சமாளிப்பது நிலாவுக்கு பெரிய வேலையாக இருந்தது.

ஆதி, மதியைச் சமாதானப்படுத்த முயன்றாள் நிலா.

“டேய்… கொஞ்ச நேரம் அமைதியா இருக்கிங்களா?” என்று ஒரு கட்டத்தில் இருவரையும் சமாளிக்க முடியாமல் தலையை பிடித்துக்கொண்டாள்.

அவள் தலையை பிடித்தது தான் தாமதம்.  ருத்ராவின் இருவரையும் பார்த்த பார்வையில், அவர்களுக்கு என்ன புரிந்ததோ அழுகையை நிறுத்தி அமைதியாகப் பாட்டிகள் மடியில் அமர்ந்துகொண்டார்கள்.

தன் மஃபினை நெஞ்சோடு சாய்த்துக்கொண்ட ருத்ரா, மெதுவாக அவள் தலையை நீவிக்கொடுத்தான்.

தனக்காக மொத்தக் குடும்பமும் நேரில் வந்திருப்பதைக் கண்ட திகளின் கண்கள் கலங்கின. “மாமா…” என்றபடி பத்ரனை நெருங்கி அணைத்துக்கொண்டாள்.

“எனக்காக நீங்க எல்லாரும் இவ்வளவு தூரம் வந்திருக்கிங்க… ரொம்ப சந்தோசமா இருக்கு அபி” என உணர்ச்சிப் பெருக்கில் அவள் குரல் தடுமாறியது.

“அட இதுக்கெல்லாம் எதுக்கு தங்கம் கண் கலங்குற? நீ எங்க வீட்டுப் பொண்ணு இல்லையா?” என்று அபிராமி அவளுடைய தலையை வருடினார்.

இரண்டு குடும்பங்களும் ஒன்றாக சேர்ந்து திகளின் தாய்மையைக் கொண்டாடினார்கள்.

ஆனால், இந்தியாவுக்குத் திரும்பும் நேரம் நெருங்கியபோது பத்ரனின் முகம் மட்டும் வாடியிருந்தது.

அதை கவனித்த ருத்ரா தம்பியைத் தனியாக அழைத்துப் பேசினான்.

“நீ இங்கேயே இருந்து திகளைப் பார்த்துக்கோ பத்ரா”

“ஆனா ருத்ரா… அங்கே ஆபீஸ்ல நீ மட்டும் தனியா எப்படி எல்லாத்தையும் சமாளிப்ப?”

“அதை நான் பார்த்துக்கிறேன். இந்த மாதிரி நேரத்துல திகளுக்குத் துணையா நீ இருக்கணும். அவளுக்கு உதவியா ஆயிரம் பேரை வேலைக்கு வச்சாலும், நீ பக்கத்துல இருந்து கொடுக்கிற பாதுகாப்பையும் சந்தோசத்தையும் கொடுக்க முடியாது”

தம்பியின் தோளில் தட்டியவன் “ஆறு மாசம்தானே, முடிஞ்ச அளவுக்கு ஆன்லைன்ல வேலைகளைப் பாரு அதுவே போதும்”

இன்னும் பத்ரனின் முகம் தெளிவடையாமல் இருப்பதைக் கண்ட நிலா, “நான் ஏகராவோட ஆபீஸ் போறேன் பத்ரன். நீங்க திகளை நல்லபடியா கவனிச்சுக்கோங்க. பசங்களுக்கு இரண்டு வயசாகப்போகுது அத்தை, பாட்டி எல்லாரும் இருக்காங்க. அவங்க பார்த்துப்பாங்க, ஒருவேளை பசங்க அவங்க கிட்ட இருக்கலைனாலும் பரவாயில்லை, நாங்க ஆபீஸுக்கே தூக்கிட்டுப் போறோம்” என்று அவனைப் பார்த்து அழுத்தமாக சொன்னாள்.

“நீங்க இங்கேதான் இருக்கணும். இது எங்க எல்லாரோட முடிவு!” என்ற நிலாவின் கட்டளையை மறுக்க முடியாமல் சரியென்று தலையாட்டினான் பத்ரன்.

அவன் உன்னுடனே தங்கப்போகிறான் என்று திகளிடம் சொன்னபோது அவளுடைய முகத்தில் தோன்றிய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

ஆச்சரியத்தில் விரிந்த கண்கள், சந்தோசத்தில் மலர்ந்த உதடுகள், அவனை நோக்கி நீண்ட கைகள் என திகள் காட்டிய ஒவ்வொரு பாவனையும் 

தன்னை அவள் எந்த அளவுக்குத் தேடுகிறாள் என்று தெளிவாக புரிந்தது.

அண்ணன் சொன்னது எவ்வளவு உண்மை! அவளுக்கு உதவியாக ஆயிரம் பேரை வேலைக்கு வைத்தாலும், அவளுக்குத் தேவைப்படும்போது அருகில் நிற்கும் தன்னுடைய அருகாமைக்கு சமமாகாது என்பதை உணர்ந்தவன், திகளை இறுக்கமாக அணைத்துக்கொண்டான்.

அபிராமியோ பேரனிடம் திகளை எப்படியெல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தனியாகப் பாடம் எடுத்துவிட்டுத்தான் கிளம்பினார்.

எப்போதும் போல இந்த வித்தியாசமான குடும்பத்தை இன்னும் வித்தியாசமாகப் பார்த்தது நிலாவின் குடும்பம்.

“என்னவோ ஊர் உலகத்துல இவளுக மட்டும்தான் பிள்ளை உண்டான மாதிரி பண்றாளுக!” என்று சலித்துக்கொண்டது நிலா, திகள் மாமியார் சாம்பவி என்று நினைத்தால் அதுதான் இல்லை!

அவர்கள் அம்மா பார்வதி தான் பிள்ளைகளை முறைத்துக்கொண்டிருந்தார்.

“இவங்க தர செல்லத்துக்கு அளவே இல்ல!” என்று சலித்தபடி மகளுக்கு அறிவுரை சொல்லிவிட்டு இந்தியா கிளம்பினார் பார்வதி.

பத்ரன் திகளை தன் உள்ளங்கையில் வைத்துத் தாங்காத குறையாகப் பார்த்துக்கொண்டான்.

இதோ, ஆறு மாதங்கள் முடிந்து இந்தியா திரும்பும் நேரமும் வந்துவிட்டது.

அவர்களை வரவேற்பதற்காக மொத்தக் குடும்பமும் ஏர்போர்ட்டில் நிற்கிறது.

இன்னும் இரண்டு நாட்களில் திகளுக்கு வளைகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிளைட் அனௌன்ஸ்மென்ட் வந்ததும் அனைவரின் கண்களும் திகளையே தேடின.

சிறிது நேரத்தில் மேக்ஸி அணிந்து, வயிற்றைத் தாங்கியபடி மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தாள் திகள். அவளுடைய கைகளைப் பாதுகாப்பாகப் பிடித்துக்கொண்டு அருகிலேயே வந்தான் பத்ரன்.

அவர்களைக் கண்டதும் முகம் முழுவதும் புன்னகையுடன் குடும்பத்தினர் நெருங்கினார்கள்.

“அக்கா!” என்று மகிழ்ச்சியோடு நிலாவைக் கட்டிக்கொண்டாள் திகள்விழி.

அவளை உச்சி முதல் பாதம் வரை பார்த்த நிலா,

“என்னடி இது? வெயிட் போடாம அப்படியே இருக்க? ரொம்ப டயர்டா வேற தெரியுற. வீட்டுக்கு வந்ததும் ஒழுங்கா ரெஸ்ட் எடுக்கணும். பெரிய மனுஷி மாதிரி பேச மட்டும் தெரியும். உன்னை ஒழுங்கா கவனிச்சுக்கத் தெரியாதா?” என்று பத்ரனையும் சேர்த்துக் கடிந்துகொண்டாள்.

பின்னர் திகளின் வயிற்றை மென்மையாகத் தடவியவள்,

“எப்படியிருக்க குட்டி?” என்று வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையிடம் பேசினாள்.

“தங்கம் ரொம்ப இளைச்சுட்ட! இவனுக்கு வாய் மட்டும்தான் பேசத் தெரியும். உன்னைப் பார்த்துக்குறதை விட அப்படி என்ன முக்கியமான வேலை?” என்று பேரனைத் திட்டினார் அபிராமி.

பத்ரன் பாட்டியை முறைக்க, “அபி மாமாவைத் திட்டாத. எனக்கு வாந்தி இருந்தா அவரு என்ன பண்ணுவாரு? பாவம், என்னை ரொம்ப நல்லாதான் பார்த்துக்கிட்டாரு. வீட்டுக்குப் போகலாம் எனக்குத் தூக்கம் வருது”

அவளுடைய சோர்வைப் புரிந்துகொண்டவர்கள் அதற்கு மேல் அவளைத் தொந்தரவு செய்யாமல் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள்.

வீட்டில் வேறொரு போராட்டம் நடந்துகொண்டிருந்தது. விமலையும் பேபியையும் ருத்ராவின் வாண்டுகள் இரண்டும் ஒருவழி ஆக்கிக்கொண்டிருந்தன.

“அம்மாடி நிலா! எங்களை காப்பாத்தும்மா!” என்று கதறாத குறையாக இருவரும் நின்றிருந்தனர்.

அங்கே ஆதி, மதி இருவரும் ஆளுக்கொரு பக்கம் இருவரின் முடியை இழுத்துக்கொண்டிருந்தார்கள்.

“ஆதி! மதி!” என்று நிலா ஒற்றை அரட்டல் போட்டதுதான் தாமதம்.

இரண்டு குட்டிகளும் உடனே தங்கள் வேலையை நிறுத்திவிட்டு அப்பாவிடம் ஓடினார்கள். அவர்களை தூக்கிக்கொண்ட ருத்ரா, இருவரையும் ஆளுக்கொரு தோளில் அமர வைத்துக்கொண்டு சிரித்தான்.

“பிள்ளைய பெக்கச் சொன்னா குட்டி சைக்கோக்களைப் பெத்து வச்சு அதையும் பெரிய சைக்கோ கிட்ட டிரெயினிங் அனுப்பினா எப்படி உருப்படும்?” என்று முணுமுணுத்துக்கொண்டே நகர்ந்தான் விமல்.

அவன் சொல்வதும் ஒருவகையில் உண்மைதான். கடந்த ஆறு மாதங்களாக ருத்ராவும் நிலாவும் தனியாக அலுவலகம் செல்வதில்லை.

இரண்டு குழந்தைகளையும் தோளில் அமர வைத்துக்கொண்டு, சன்கிளாஸ் அணிந்து கம்பீரமாக அலுவலகத்திற்குள் நுழையும் ருத்ராவைப் பார்த்து அங்கே வேலை செய்பவர்களே வாயைப் பிளந்து நிற்பார்கள்.

அவர்களுக்குப் பின்னால் சிரிப்பை அடக்கிக்கொண்டு நடந்து வருவாள் நிலா.

“குடுங்க, நான் தூக்கிக்கிறேன்” என்று மகனைத் தூக்க முயன்றால், அவளை ஒரு முறை முறைத்துவிட்டு வம்பாக இரு குழந்தைகளையும் தானே தூக்கிக்கொண்டு நடப்பவனை கொஞ்சத்தோன்றும்.

ஒருகாலத்தில் சரபனுக்காக ஏழு வருடங்கள் வேலை செய்யாதவன் போல நாடகமாடியவன், இப்போது உண்மையாகவே குழந்தைகளைக் கவனித்துக்கொண்டு அலுவலக வேலைகளிலிருந்து ஒதுங்கியிருந்தான்.

நிலாவுக்கு நிர்வாகம் கற்றுக்கொடுத்த குரு ருத்ராதான்!

ஒருமுறை சொல்லிக்கொடுத்தாலே எளிதில் புரிந்துகொள்ளும் திறமை அவளுக்கு இருந்தது. நிலாவை தன் இருக்கையில் அமர வைத்து, AA Group முழு நிர்வாகத்தையும் அவள் கவனிப்பதைப் பெருமையோடு ரசிப்பான் அந்த காதல் தீவிரவாதி.

பிள்ளைகள் அதிகநேரம் அவனிடமே இருப்பதை தாண்டி, அவனுடைய குழந்தைகள் என்பதாலே ஆதிக்கும், மதிக்கும் பேச்சு அதிகம் இருக்காது. ஆனால், இருவரும் தந்தையைப் போலவே ஆழமாக முறைக்கும் பழக்கத்தை மட்டும் நன்றாகக் கற்றுக்கொண்டிருந்தார்கள்.

அதைத்தான் விமல் சொல்லிவிட்டுப் போனான்.

“குழந்தைகளை ஏன் திட்டுற? அவங்க என்ன பண்ணாங்க?” என்று சாம்பவி விமலைக் கண்டித்தார்.

“அத்தை நீங்களே அவங்களை வளர்த்துக்கோங்க. என்னால முடியாது!” என்று ஓடியேவிட்டான்.

அந்த வீட்டில் சிரிப்புக்கும் கிண்டலுக்கும் மட்டும் ஒருபோதும் பஞ்சம் இருந்ததில்லை.

திகள் வீடு திரும்பிய மகிழ்ச்சி, வீடு நிறைய சொந்தங்கள், குழந்தைகளின் சத்தம் என நாட்கள் சந்தோசமாகக் கடந்தன.

இதோ, திகளின் வளைகாப்பு நாள்!

பச்சை வண்ணப் பட்டுப்புடவையில் அழகோவியமாக அமர்ந்திருந்த திகள்விழியிடமிருந்து பத்ரனால் பார்வையைத் திருப்பவே முடியவில்லை.

அவளுடைய முகத்தில் இருந்த கர்ப்பகாலப் பொலிவும், புன்னகையும் அவன் மனதை நிறைத்தன.

“குட்டச்சி… ரொம்ப அழகா இருக்கடி! ஒரே ஒரு முத்தம் கொடு…” என்று அசடு வழிந்தவனை கண்டு சிரித்தவளோ, இதழ் முத்தத்தால் அவனை திணறவைத்த பின்னே விட்டாள்.

“பங்ஷனுக்கு டைமாச்சு இல்லை உன்னை வெளியவே விடமாட்டேன்! அவ்வளவு டெம்ட் பண்ற என்னை!” என்று அவன் போதை குரலை கேட்டதும் வெட்கம் கொண்டு அவன் மார்பில் சாய்ந்துகொண்டாள் திகள்விழி.

பட்டு வேட்டி, சட்டையில் அவளுக்கேற்ற அழகான ஜோடியாக மேடையில் திகளின் அருகே அமர்ந்திருந்தான் பத்ரன்.

அதே நேரத்தில் சிவப்புச் சேலையில் சோலையாகச் சுற்றிக்கொண்டிருந்த தன் மஃபினை சைட் அடித்துக்கொண்டிருந்தான் ருத்ரா.

அவனுடைய பார்வையைப் பார்த்த விமல், “பாஸ்! அது உங்க பொண்டாட்டி ஏதோ லவ்வரை சைட் அடிக்கிற மாதிரியே பண்றிங்களே?” என்று கேட்டான்.

அவனை ஒரு பார்வை பார்த்த ருத்ரா,

“பொண்டாட்டியா இருந்தா சைட் அடிக்கக்கூடாதுனு ஏதாவது சட்டம் இருக்கா? அவளுக்கு அறுபது வயசானாலும் இதே மாதிரிதான் சைட் அடிப்பேன்” என்று சொன்னபடி விமலை மேலும் கீழுமாக பார்த்தவன்,

“என்கிட்ட கேள்வி கேட்கிற டைமை சேவ் பண்ணி, ஒரு பொண்ணை அப்ரோச் பண்ணியிருந்தா இந்நேரம் உனக்குக் கல்யாணமாவது ஆகியிருக்கும்” என்றான்.

“ச்சே… அசிங்கம்!” என்று நெற்றியில் தட்டிக்கொண்டு நகர்ந்தான் விமல்.

ருத்ராவைப் பொறுத்தவரை அவன் இப்போது மட்டுமல்ல, எப்போதுமே அவனவளின் காதலன் மட்டுமே!

அவனுடைய பார்வையில் காதல் குறையப்போவதுமில்லை. அவளை ரசிப்பதற்கான காரணங்கள் தீரப்போவதுமில்லை.

“ஏகரா! இங்க வா பாப்பா உன்னைத் தேடுறா!” என்று நிலாவின் குரல் கேட்டதும், வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு அவளைத் தேடி ஓடினான் ருத்ரா.

வீட்டின் சந்தோசமான தருணங்களை அமைதியாக அமர்ந்து புன்னகை முகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் நடராஜன்.

தன் குடும்பத்தின் ஒவ்வொரு மகிழ்ச்சியையும் கண்களால் ரசித்துக்கொண்டிருந்தவரின் முகத்தில் நிறைவு புன்னகை.

“தாத்தா!” என்று ஓடிவந்த

கொள்ளுப்பேரனை அள்ளி எடுத்து மடியில் அமர்த்திக்கொண்டவரின் முகத்தில் இருந்த புன்னகை ஒரு நொடியும் வாடவில்லை.

ஒருகாலத்தில் எத்தனையோ சோதனைகளையும் வலிகளையும் கடந்து வந்த அந்தக் குடும்பம், இன்று குழந்தைகளின் சிரிப்பிலும் உறவுகளின் அன்பிலும் நிறைந்திருந்தது.

அந்த மகிழ்ச்சியை அமைதியாக ரசிப்பதைவிட அவருக்கு வேறு என்ன வேண்டும்?

 

வளைகாப்பு முடிந்த இரவு வீட்டிலிருந்த அனைவரும் ஒவ்வொருவராக உறங்கச் சென்றுவிட்டனர்.

சமையலறையைச் சுத்தம் செய்துவிட்டு, திகளுக்கு சீரகத் தண்ணீரை தயார் செய்து பத்ரனிடம் கொடுத்துவிட்டு, கடைசியாகத் தன்னுடைய அறைக்குள் நுழைந்தாள் நிலா.

இரண்டு குழந்தைகளையும் தூங்க வைத்துவிட்டு அவளுக்காகவே காத்திருந்த ருத்ரா, அவள் அறைக்குள் வந்ததும் ஒரு நொடியும் தாமதிக்காமல் தன்னுடைய கைகளில் அள்ளிக்கொண்டான்.

அவனுடைய கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொண்டவள், முகத்தை அவன் தோளில் புதைத்தாள்.

“ஏகரா…”

“ம்ம்ம்…”

“நம்ம காட்டு வீட்டை நான் ரொம்ப மிஸ் பண்றேன். அங்க போயே வருஷமாகப் போகுது” என்றவளுடைய குரலில் இருந்த சோர்வையும், ஏக்கத்தையும் உணர்ந்தவன், பதில் சொல்லாமல் நிலா நெற்றியில் முத்தமிட்டான்.

அன்று முழுவதும் அலைந்து திரிந்து வேலை செய்த களைப்பு அவளுடைய உடலில் அப்பட்டமாகத் தெரிந்தது.

அவளை மெதுவாகத் தூக்கிக்கொண்டு குளியலறைக்கு சென்றவன், சுடுநீரில் அவளைப் பக்குவமாக குளிக்க வைத்து, உடைமாற்றி, படுக்கையில் படுக்க வைக்க, சில நிமிடங்களிலேயே ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றுவிட்டாள்.

மறுநாள் காலை நிலா கண்களைத் திறப்பதற்கு முன்பே குளிர் காற்று அவளுடைய உடலைத் தழுவிட போர்வைக்குள் சுருண்டுகொண்டவள், மெதுவாகக் கண்களைத் திறந்து சுற்றிலும் பார்த்தாள்.

ஒரு நொடி திகைத்தவள், அப்போதுதான் தான் காட்டு வீட்டில் இருப்பதை உணர்ந்தாள்.

“நேத்துதான் சொன்னேன்… நேத்தே தூக்கிட்டு வந்துட்டான்!” என்று தனக்குள் சிரித்துக்கொண்டவளோ அவனைத் தேடி கண்களை அழையவிட்டாள்.

“மஃபின்!” என்று வெளியில் இருந்து ருத்ரா குரல் கேட்டது.

அவசரமாக எழுந்து வெளியே வந்தவளோ, அங்கே கண்ட காட்சியில் சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.

வழக்கம்போல சட்டையில்லாத உடலுடன், கையில் ஆற்று மீன்களைப் பிடித்துக்கொண்டு நடந்து வந்தான் ஏகதச ருத்ரா.

அவனுடைய இருபுறமும் மகனும் மகளும் ஆளுக்கொரு மீனை தூக்கிக்கொண்டு 

சேறு பூசிய உடல், கலைந்த தலைமுடி, முகம் முழுவதும் சிரிப்போடு “மஃபின்!” என்று இருவரும் ஒரே நேரத்தில் கத்திக்கொண்டு அவளை நோக்கி ஓடிவந்தார்கள்.

அவளுடைய உலகம் அவர்கள் தானே!

“ஏகரா!” என்ற அழைப்போடு அவன் மீது ஓடிவந்து குதித்தவளை, சற்றும் தடுமாறாமல் தன் கைகளில் அள்ளி தூக்கிச் சுற்றினான் ஏகதச ருத்ரா.

அவளுடைய சிரிப்புச் சத்தம் அந்தக் காட்டு வீட்டின் அமைதியை நிறைத்தது.

அருகில் நின்றிருந்த குழந்தைகள் இருவரும் தங்களுடைய மீன்களை மறந்துவிட்டு அப்பாவையும் அம்மாவையும் பார்த்துச் சிரித்தார்கள்.

நிலாவை தன்னிடமிருந்து இறக்காமல் அணைத்துக்கொண்டவன், அவளுடைய நெற்றியில் ஆழமாக முத்தமிட்டான்.

அவன் காதலுக்கு விளக்கவுரையும் தேவையில்லை!

அவள் காதலுக்கு முடிவுரையும் அவசியமில்லை!

காதலால் அவன் கொண்ட அத்தனை அசுரத்தனங்களும் அவளுக்கு ஏற்புடையதே!

அவனுடைய உலகத்தில் அவள் மட்டுமே அரசி!

அவளுடைய உலகத்தில் அவன் மட்டுமே எல்லாமும்!

காலங்கள் மாறலாம்… வாழ்க்கை பல திருப்பங்களை சந்திக்கலாம்… அவர்களைச் சுற்றி எத்தனை மாற்றங்கள் வந்தாலும், அவர்களுக்குள் இருக்கும் காதல் மட்டும் ஒருபோதும் மாறப்போவதில்லை.

காதலின் அசுரத்தனத்தில் அவனும், அன்பின் ஆழத்தில் அவளும் என இருவர் மட்டுமே வாழும் உலகம் அது!

முற்றும்.

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!