கண்கள் 7
ரம்யமான அந்த இரவில், அஷ்வினி தன் அறையில் தூங்கிகொண்டிருக்க… திடீரென தன் மீது பாரத்தை உணர்ந்தவள், சட்டென கண் விழித்து பார்த்தாள்…
அங்கு தீரனோ அவளை ஒரு கையால் அணைத்தபடி, தலையணையில் முகம் புதைத்து குப்பற படுத்திருந்தான்…
அவன் செயல் உணர்ந்து திடுக்கிட்டு போய் எழ முயற்சித்தவளால்,அவன் பிடியில் இருந்து ஒரு இன்ச் கூட நகர முடியாமல் போனது…
அந்நிலையில் அவனது கோர முகம் வேறு அவள் நினைவில் வந்து போக பதறி , அலற தொடங்கினாள், அஷ்வினி “ஆஆஆ ” என்று கத்த, விழித்துக்கொண்டான் தீரன்.
“ப்ச்… இப்போ எவன் செத்தான்னு இப்படி கத்தி தொலைக்கிற” என்று சலித்தபடியே கண்மூடி தீரன் கேட்க…
அவன் குரல் கொடுத்த சத்தத்தில் பெண்ணவள் உடல் முழுவதும் வியர்த்து நடுங்கியது…
அவள் அமைதியாக இருக்கவே,
அவனோ மீண்டும் அவளது இடையில் கைகொடுத்து தன்னோடு சேர்த்தணைத்து கொண்டு தூக்கத்தை தொடர்ந்தான்…
அவளோ உதடுகள் நடுங்க… ” தள்ளி போங்க, எனக்கு பயமாயிருக்கு ” என்று கூற…
” நான் இருக்கும் போது உனக்கு என்னடி பயம் ” என்றவன், நெருங்கி படுத்து அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்தான்…
அவனது இந்த திடீர் செயலில் “ஹான்..” என்று விக்கித்து படுத்திருந்தவளின் குரல் அவன் செவியை எட்டும் முன்… தனது நாசியினால் அவளது கழுத்தில் குறுகுறுப்பு மூட்டினான்.
அவன் செயலை தவிர்த்து, பதில் பேச முடியாமல் தவித்தவள் உடலை
நெளித்து கொண்டிருந்தாள்…
” கொஞ்சம் நேரம் நெளியாமல் இருடி, தூக்கம் வருது, நிம்மதியா தூங்கி ரெண்டுவாரம் ஆச்சு ” என்றவன் தூங்க முயல, அவள் விட்டால் தானே…
“என்னை விடுங்க ” என்று அவள் உதடுகள் முணுமுணுத்தாலும், உடலோ அவன் தொடுகைக்கு இசைந்து கொண்டுதான் இருந்தது…
அவன் ஸ்பரிசத்தை உணர்த்தவளுக்கு அவன் அந்நியன் என்ற எண்ணம் துளி கூட மனதில் தோன்றாமல் போனது…
தன் உணர்வுகளை எண்ணி தன்னை, தானேவெறுத்த அஷ்வினி ,
ஒருகட்டத்தில் கண்ணீர் வடிக்க தொடங்கினாள்…
அவளது கண்ணீரை அவன் உணர்ந்த நேரம்… “ப்ச்… உன்னை என்ன தாண்டி பண்ணுறது? ப்ளீஸ் தேஜு… இப்போ உன்கிட்ட ஆர்க்யூ பண்ண எனக்கு விருப்பம் இல்லை, நான் உன் அனுமதி இல்லாமல் உன்னை எதுவும் பண்ண மாட்டேன். நிம்மதியா தூங்கு ” என்றவன் கட்டிலில் இருந்து எழுந்து, தனது அறையை நோக்கி சென்றான்…
என்றும் போல இன்றும் அவனது இரவுகள் அவனது தூக்கத்தை திருடி கொண்டது. ஒரு கையில் மதுக்குவளையை, வைத்திருந்தவன் மறுகையில் சிகெரட்டை புகைத்துக்கொண்டிருத்தான்…
” கண்ணை படைத்த இறைவன் என் பெண்ணை படைக்காமல் இருந்திருக்கலாம்… ” என்று என்றோ கேட்ட பாடல் வரிகள் இன்று அவன் நினைவில் வந்து போக இதழ்கள் புன்னகைத்தாலும், மனதின் வலியை கண்கள் பிரதிபலித்தது…
*****
காரில் அனைவரும் உறங்கிக்கொண்டிருக்க திடீரென ” க்க்கூர்… க்க்கோர்” என்று சத்தம் வந்தது…
அந்த சத்தத்தில் முதலில் திடுக்கிட்டு எழுந்த பரமன் ” என்னடா ஏதாவது காட்டு மிருகம் வந்துடுச்சா ” என்றவன் காரில் இருந்து வெளியே வந்து பார்த்தான்… அங்கு மிருகங்களின் நடமாட்டம் இருப்பதற்கான சூழல் சிறிதும் இல்லாமல் இருக்கவே மீண்டும் காரில் வந்து அமர்ந்தான்…
மீண்டும் மீண்டும் ” க்கூர்… க்கூர்” என்று சத்தம் வந்தது , அவனோ உடனே அருகில் அமர்ந்திருந்த கார்த்திக்கை எழுப்பினான்…
” என்ன ப்ரோ? ” என்று மெல்ல கண்விழித்து கேட்டான் கார்த்திக்.
” ஏதோ சத்தம் கேட்குது சார், ஏதோ கொடூரமான மிருகமாக இருக்கும் போல ” என்ற பரமன் அந்த சத்தத்தை உன்னிப்பாக கவனித்தான்..
கார்த்திக்கோ பின்னால் திரும்பி பார்த்தவன் சலிப்பாக தலையாட்டியபடியே ” பிரதர் பயப்பட ஒன்னும் இல்ல இது எங்க மோகினி குறட்டை சத்தம் தான்… எங்களுக்கு பழகிடுச்சு, உங்களுக்கு புதுசா இருப்பதால் பயந்து போய்ட்டீங்க, சொல்ல போனால் அதுவும் ஒரு கொடிய மிருகம் தான், என்ன ரெண்டு கால் ரெண்டு கை கொண்ட மிருகம்.நீங்க தூங்குங்க பிரதர் ” என்ற கார்த்திக் தன் தூக்கத்தை தொடர்ந்தான்…
அப்போது தான் பரமன் பின்னால் இருந்த மோகினியை பார்க்க… அவளோ வாயை பிளந்து, ” க்கூர் க்கூர் ” என்று குறட்டை விட்டுக்கொண்டிருந்தாள்… அதனை கண்ட பரமனின் இதழ்கள் தன்னை மறந்து தானாக விரிந்து கொண்டது…
எவ்வளவு கட்டுப்படுத்தி தூங்க முயன்றும் அவளது குறட்டை சத்ததில் பரமனால் தூங்க முடியாமல் போனது… மாறி மாறி அமர்ந்தவன் விடியும் நேரத்தில் தான் மெல்ல கண்ணயர்ந்தான்.
காலை பொழுது கதிரவன் அழகாக ஒளிர்ந்து கொண்டிருந்த நேரமது, வனப்பகுதில் நிறைந்திருந்த, மரங்களின் இலை வழியே, மெல்லிய ஒளி அந்த கானகத்தின், உலர்இலை நிறைந்த தரையில் விழுந்தது…
காரில் உறங்கிக்கொண்டிருந்த பரமனின் முகத்தில் சூரிய ஒளி படவே, கண்களை சுருக்கி மெல்ல கண்விழித்தான்…
அதன் பிறகு கார்த்திக் கண்விழித்து, தேவகியைஎழுப்பினான்.
எழுந்து கொண்ட தேவகி ” மோகினி எழுந்திரு ” என்று அவளை எழுப்ப…
அவளோ ” நேத்து எல்லாம் நான் சரியாவே தூங்கல யாரோ குறட்டை விட்டுட்டே இருந்தாங்க அந்த சத்தத்தில் என் தூக்கமே போயிடுச்சு ” என்று சலித்து கொண்ட மோகினி மீண்டும் தேவகியின் மடியில் படுத்து தூக்கத்தை தொடர்ந்தாள்…
கார்த்திக்கும், பரமனும் ஒருவரை ஒருவர் பார்த்து மெல்ல புன்னகைத்து கொள்ள… தேவகியோ தலையில் அடிக்காத குறையாக அவளை எழுப்பி வெளியே அழைத்துவந்தாள்…
தங்களது வண்டியில் இருந்து எடுக்க முடிந்த பொருட்களை மட்டும் கையில் எடுத்துக்கொண்டான் கார்த்திக்…
” இப்போ என்ன பண்ண போறோம்? ” என்று தேவகி கேட்க…
” என்ன வேணாலும் பண்ணலாம் ” என்று கார்த்திக் தேவகி காதோரம் கூற, அவளோ அவனை அனலென முறைத்தாள்…
” இந்த காட்டு பாதையிலே ஒரு நாலு மணி நேரம் நடந்தால், எங்க பாஸ் வீடு வந்திடும், அப்புறம் அங்க இருந்து சுலபமா மெயின் ரோட்டுக்கு போயிடலாம் ” என்று பரமன் கூற..
கார்த்திக்கோ ” நாங்க இங்க குலதெய்வம் கோவிலுக்கு வந்தோம், கோவிலுக்கு போகாமல் வீட்டுக்கு போனால் வீட்டுல இருக்கவங்க வருத்தப்படுவாங்க சோ… கோவிலுக்கு போய்ட்டு போய்டலாமே ” என்று கூறினான்..மோகினியும், தேவகியும் அதற்கு சம்மந்தமாக தலையசைத்தனர்…
” குலதெய்வம் கோவில் எங்க? ”
” இங்க தான் ப்ரோ முப்டாரி அம்மன் அப்படின்னு சொன்னாங்க, போன்ல சிக்னல் வேற காட்டமாட்டேங்குது”
“இங்க நெட்ஒர்க் கிடைக்காது பிரதர், அந்த கோவில் எங்க இருக்குன்னு எனக்கு தெரியும் ,அதுக்கும் எப்படியும் எங்க பாஸ் வீட்டுக்கு போய் தான் போக முடியும், அங்க சிக்னல் கிடைக்கும், அப்போ நீங்க உங்க வீட்டுக்கு இந்த விஷயத்தை சொல்லிக்கலாம், அங்க கார் இருக்கும் சோ அங்க போய் பார்த்துக்கலாம் ” என்று பரமன் எடுத்து கூறி அவர்களை தீரனது வீட்டிற்கு அழைத்து செல்ல தயாரானான்…
எல்லாரும் நடந்து சென்றுகொண்டிருக்க பின்னால் வந்த மோகினியோ ” ஹெலோ ஆத்மா ” என்று பரமனை அழைக்க… அவனோ அவளை கேள்வியாக திரும்பி பார்த்தான்.
“உங்களை இப்படி சொல்லுறதுல உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே ? ” என்று மோகினி கூற. அவனோ அவளை புன்னகையுடன் பார்த்து ‘ இல்லை ‘ என்று தலையசைத்தான்…
அவளது செயலை ஒரு மார்க்கமாக பார்த்த கார்த்திக், தேவகியிடம் ” மேடம் உங்க தங்கச்சி ட்ராக் மாறுற மாதிரி இருக்கே ” என்றான்…
” அவளை என்ன உன்னை மாதிரின்னு நினைச்சியா? அவள் சொக்கதங்கம் ” என்று தேவகி முறுக்கி கொண்டாள்.
‘ கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு பைத்திய குடும்பத்தை கொடுத்த, ஒரு நல்லது சொல்ல முடியல ‘ என்று கடவுளை குறை சொல்ல, அவன் மனசாட்சியோ ‘ அது நீயே தேடிக்கொண்டது ராசா… அதுக்கு கடவுள் எப்படி பொறுப்பாக முடியும் ‘ என்று அவனை எதிர் கேள்வி கேட்டது…
அந்த அடர்ந்த வனப்பகுதியில் … ஒவ்வொருவரும் வெவ்வேறு மனநிலையில் நடந்து வந்துகொண்டிருந்தனர்.
பரமன், தேவகி, மோகினி, கார்த்திக் அனைவரும் பேசிக்கொண்டே நடக்க.. ஒருவரை ஒருவர் நல்ல முறையில் புரிந்து பேசத்தொடங்கினர். மோகினி பரமனை ஆத்மா என்று அழைக்க… மற்ற இருவரும் அவனை அதே போல அழைத்தனர். பரமனும் அதற்கு எந்த வித மறுப்பும் கூறவில்லை…
நீ போகும் பாதையில் ரயில்லு போகுதே மானே…. ” டக்கு டக்கு டக்கு தீம் ”
நீ நடந்து போகையில் பதம் நோகுமே முள்ளை போட்டு தாறேன்…
நீ நடந்து வாடி மானே…
என்று முன்னால் செல்லும் தேவகியை பார்த்து பாடியபடியே நடந்துவந்துகொண்டிருந்தான் கார்த்திக்…
அப்போது ஏதோ ஒன்று அவனது காலினை தீண்டுவதை உணர்ந்தவன் ” ஆஆஆ ” என்ற கத்தியபடியே கீழே அமர்ந்தான்…
அவன் சத்தம் கேட்டு, தேவகியை தவிர மற்ற இருவரும் அவன் அருகில் வந்து ” என்ன ஆச்சு கார்த்திக் ” என்று கேட்க… தேவகியோ கைகளை கட்டியபடியே அவனை அழுத்தமாக பார்த்தபடி எந்த வித பதட்டமும் இல்லாமல் நின்றுகொண்டிருத்தாள்…
‘ கல்நெஞ்சகாரி கொஞ்சமாவது பாசம் இருக்க பாரு ‘ என்று ஆதங்கப்பட்டவன்… அருகில் நின்ற பரமனிடம் ” யோவ் ஆத்மா, ஏதோ கடிச்சிடுச்சுயா… ஊருக்குள்ள ஒரு நல்ல பொம்பளை டாக்டரா இருந்தால் அவங்க கிட்ட என்னை அழைச்சிட்டு போய் வைத்தியம் பார்த்து என் உயிரை காப்பாத்துங்கயா? ” என்றான் அப்பாவியாக…
” அது என்ன பொம்பளை டாக்டர்… ஆம்பளை டாக்டர் வைத்தியம் பார்த்தால் நீ பொழைக்க மாட்டியோ ” என்று கேட்ட தேவகி அவனை தீபார்வை பார்க்க… அவனோ ” இங்க பாரு நான் உன்கிட்ட பேசல. நான் என் ஆத்மா கிட்ட பேசுறேன் ” என்றவன் பரமனின் முகம் பார்க்க.. அவனோ தேவகியையும், கார்த்தியையும் மாறி மாறி பார்த்தபடியே நின்றுகொண்டிருந்தான்…
” ஆத்மா அவன் சும்மா டிராமா பண்ணுறான், அவனை அப்படியே விட்டுட்டு வா ” என்றவள் முன்னே செல்ல… கார்த்திக்கோ … ஆத்மாவின் கரம் பற்றியவன் ” யோவ் ஆத்மா அவள் பேச்சை கேட்காதய்யா… சுடுகாட்டு செலவு மிச்சம்ன்னு சொல்லி என்னை இங்கேயே குழி வெட்டி புதைக்கலாம்ன்னு பிளான் பண்ணுறாள்…. ” என்று அவன் கூறி முடிக்கும் முன் தேவகி எறிந்த செருப்பு அவன் முகத்தில் விழுந்தது…
அதிர்ந்து போய் அவன் எழுந்து நிற்க, தேவகி எதையோ பேச வாய் எடுத்த நேரம்,ஓலை பாம்பு ஒன்று கார்த்திக்கின் காலுக்கு இடையில் புகுந்து செல்ல… அதனை பார்த்த கார்த்திக் ” அம்மா பாம்பு …” என்றபடி ஓடி சென்று தேவகியை அணைத்துக்கொண்டான்.
அவளோ அவனை தன்னில் இருந்து வலுக்கட்டாயமாக பிரிக்க… அவனோ அவள் கண்டிப்பாக திட்ட போகிறாள் என்பதை உணர்ந்தவன் மயக்கம் வந்தது போல் நடித்து மீண்டும் அவள் மீதே சாய்ந்தான்…
அப்போது மீண்டும் தன்னுடைய காலில் ஏதோ ஒரு மெல்லிய வலி ஏற்பட்டதை உணர்ந்தவன் காலினை பார்க்க… அங்கே பாம்பு கடித்ததை போன்று தடம் உண்டாகி இருந்தது…
” அய்யோ பாம்பு கடிச்சிடுச்சு ” என்று கார்த்திக், தேவகியின் தோளினை பற்றி உலுக்கியவன், அப்படியே அமர்ந்து கொண்டான்…
அந்த காயத்தை ஆராய்ந்த பரமன் தன்னுடைய கர்ச்சீப்பை எடுத்து காயம் பட்ட இடத்துக்கு மேலே கட்டியவன் சில மூலிகை இலைகளை கசக்கி அந்த காயத்தில் வைத்தான்.
” ஒன்னும் இல்லை கார்த்திக் ஓலை பாம்பு தான் விஷம் எல்லாம் ஏறாது இன்னும் கொஞ்சம் தூரம் தான், அங்க போய் பாரத்துக்கலாம்” என்று பரமன் கூறினான்…
ஆனால் கார்த்திக்கோ இன்னும் பயம் தெளியாமல் கத்திகொண்டே இருந்தான்.
“யோவ் ஒரு ஓலை பாம்பு கடிச்சதுக்கு எதுக்கு இப்படி ஒப்பாரி வைக்கிற” என்று தேவகி கார்த்திகை கேவலமாக பார்க்க..
அவனோ அழுதபடியே ” ஓலையோ , கோழையோ பாம்பு, பாம்பு தானே மேடம்… பைத்தியம் மாறி பேசறீங்க… ” என்றான்…
” யாரு நான் பைத்தியமா? இதுக்கு போய் அழுகுறியே நீ எல்லாம் ஆம்பளையா?” என்று அவள் கேட்க. அனைவரும் அதிர்ந்தனர். அவள் பேச்சின் தோரணையை கண்டு.
ஆனால் கார்த்திக்கோ… “இந்த சந்தேகம் மத்தவங்களுக்கு வந்தா கூட பரவாயில்லை உங்களுக்கு வரலாமா மேடம்… உங்களுக்கு தான் நல்லாவே தெரியுமே…” என்றவன் கண்ணீரை துடைத்தபடியே அவளை பார்த்து கண்ணடித்தான்…
” உன்னை கல்யாணம் பண்ண பாவத்துக்கு இன்னும் என்ன எல்லாம் நான் அனுபவிக்க போறேனோ ? ” என்று தலையில் அடித்துக்கொண்டாள் தேவகி…
