Rolex 15

15

கடல் அலைகளின் ஓயாத இரைச்சலும், கப்பல் பிளந்து செல்லும் நீரின் வேகமும் ஒருவிதமான நிசப்தத்தை அந்த நற்பகல் நேரத்தில் உருவாக்கிக் கொண்டிருந்தன. மரணத்தின் வாசலைத் தொட்டுத் திரும்பிய அந்த வெள்ளை வேந்தன், இப்போது அலைகளைக் கிழித்துக்கொண்டு ஒரு புதிய திசையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தான்.

கப்பலின் முனையில், காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுத்து நிமிர்ந்து நின்றிருந்தான் ரோலக்ஸ். அவனது கட்டுடலில் குண்டு துளைத்த காயங்கள் இன்னும் ஆறவில்லை,  வெள்ளை நிறக் கட்டுகள் ஆங்காங்கே ரத்தத்தின் கறை படிந்து தெரிந்தன. ஆனால், அந்த வலியை ஒரு பொருட்டாகவே அவன் மதிக்கவில்லை. நெஞ்சை நிமித்தி, கடலை ஆளும் கடலரசன் போல அவன் நின்றிருந்த அந்தத் தோரணை, பார்பவரைப் பிரமிக்க வைத்தது.

அப்போது, கைகளில் சாருவை ஏந்தியபடி மெல்ல அவனருகே வந்தாள், மயூரா. தன் தந்தையைக் கண்டதும் அந்தச் சிறுவன் கைகளை அசைத்துத் தாவ, ரோலக்ஸ் தன் காயம்பட்ட கைகளின் வலியையும் மீறி, தன் புதல்வனை வாரி அணைத்துத் தன் தோளோடு சேர்த்துக்கொண்டான்.

குழந்தை விளையாட்டாகத் தந்தையின் மார்பில் தட்டும்போது, கட்டப்பட்டிருந்த காயங்களில் அடிபட்டு அவனுக்கு வலித்துவிடுமோ என்று பதறிய மயூராவின் கைகள், குழந்தையை விட்டு விலகாமல், அவனது காயத்தைப் பாதுகாக்கும் அரணாக அங்கே இருந்தது.

தன் மனைவியின் கண்களில் இருக்கும் அந்தத் தவிப்பை கவனித்த ரோலக்ஸ், ஒரு சிறு இமைத் துடிப்பில், “நான் பார்த்துக்கிறேன்… பயப்படாதே!” என்று மௌன மொழியில் அவன் சொல்ல, மயூராவோ பிடிவாதமாக அவனது அருகிலேயே நின்று கொண்டாள். அவளது அந்த அக்கறையும், மாறாத காதலும் ரோலக்ஸின் உள்ளத்தில் ஒரு மென்மையை உருவாக்க, மெல்லச் சிரித்துக்கொண்டே, குழந்தையை மற்றொரு கைக்கு மாற்றிக் கொண்டவன். காயப்பட்ட தனது கையைத் தன் மனைவியின் தோள்மீது போட்டு, அவளைத் தன் மார்போடு இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

அந்த அணைப்பில் மயூராவுக்கு ஒரு பெரும் ஆறுதல் கிடைத்தது. அவனது அகன்ற மார்பில் முகம் புதைத்து, அந்தக் கணத்தை அவள் ரசித்தாள்.

கடல் அலைகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ரோலக்ஸின் நினைவுகள், மெல்லப் பின்னோக்கிச் சென்றன. சில மாதங்களுக்கு முன்பு, தனது அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தபோது நடந்த அந்த நிகழ்வு அவன் மனக்கண்ணில் நிழலாடியது.

அன்றும் இதே போன்ற ஒரு நற்பகல் பொழுது. தனது பிரம்மாண்டமான கோட்டையின் பால்கனியில், மயூராவுடனும் குழந்தையுடனும் அவன் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது, உள்ளே நுழைந்தான் பைரவன். இன்று ரத்த வெறி பிடித்த அரக்கனாகத் தெரியும் அதே பைரவன், அன்று சாதாரண உடையில் இருந்தான். அவனது முகத்தில் அடர்த்தியான மீசை இல்லை, மாறாக, ஒரு மெல்லிய புன்னகை இருந்தது. அவன் ரோலக்ஸை நெருங்கி வந்து ஏதோ ஒரு ரகசியத்தைச் சொல்ல எத்தனித்தான்.

ஆனால் உள்ளே நுழைந்த பைரவனைப் பார்த்த, மயூரா மலர்ந்த முகத்துடனே, “வாங்​க அண்ணா!” என்று அன்போடு அவள் அழைக்க, பைரவனும் இன்முகத்துடன் தலையசைத்தான். ஆனால், அவனது கண்கள் மட்டும் மயூராவிடமோ, ரோலக்ஸிடமோ நிலைக்கவில்லை. அவை நேராக மயூராவின் கையிலிருந்த குழந்தை சாருவின் மீதுதான் நிலைபெற்றன. அந்தப் பிஞ்சு முகத்தைப் பார்க்கும்போது பைரவனின் கண்களில் ஒருவித ஏக்கம் மின்னியது.

மயூராவும் அதைக் கவனித்தாள். “சாருவை வச்சுக்கோங்க அண்ணா… நான் உங்களுக்குக் காபி கொண்டு வர்றேன்,” என்று கூறிவிட்டுத் தன் குழந்தையை அள்ளி அவனிடம் கொடுத்தாள்.

ஒரு நந்தவனத்தில் பூத்த பிஞ்சு மலரை வாங்குவது போன்ற அதீத ஆசையுடன் சாருவை ஏந்திக் கொண்டான் பைரவன். அவனது தோளில் அணைத்து, அந்த மழலையின் கன்னங்களில் முத்தங்களை மழையாகப் பொழிந்தான்.

மயூரா அங்கிருந்து நகர்ந்ததும், சூழல் மெல்ல கனக்கத் தொடங்கியது. பைரவன் நிதானமாக ரோலக்ஸின் அருகே வந்து அமர்ந்தான். தன் அசுர பலம் கொண்ட கரங்களால் பைரவனின் முழங்கையை மென்மையான  அழுத்ததுடன் பற்றினான்.

பைரவன் மெல்லத் திரும்பி ரோலக்ஸைப் பார்த்தான். ரோலக்ஸின் கூர்மையான கண்கள் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டன, “போன வேலை என்ன ஆச்சு?”

சாருவின் கவனம் சிதறக்கூடாது என்பதற்காக அவனது முகத்தை வேறு பக்கம் திருப்பிய பைரவன், ரோலக்ஸைப் பார்த்து, தன் கைவிரலைத் தொண்டைக்கு அருகே கொண்டு சென்று, ஒரு கோடு கிழிப்பதைப் போலக் காட்டியவன்.

“அவன் கதை முடிஞ்சது!” என ஒரு செய்கை செய்தான். 

பைரவனின் பதிலைக் கேட்டதும் ரோலக்ஸிற்குள் ஒரு நிம்மதி பிறந்தது. ஆனால், அந்த நிம்மதியில் ஒரு வெற்றியாளனின் சந்தோஷம் இல்லை. மாறாக, ஒருவிதமான சலிப்பும், வெறுப்பும் கலந்தே இருந்தது. துரோகிகளையும் எதிரிகளையும் அழித்து அழித்து அவனது உள்ளம் மரத்துப் போயிருந்தது.

ரோலக்ஸின் முகத்தில் ஏற்பட்ட அந்தச் சிறு மாற்றத்தை பைரவன் கவனித்தான். “என்ன?” என்பது போல அவன் புருவங்களை உயர்த்திக் கேட்க, ரோலக்ஸ் ஒன்றும் இல்லை என்பது போலத் தலையசைத்தவன், சாருவின் தலையை வாஞ்சையுடன் தடவிவிட்டு மெல்ல எழுந்து பால்கனியின் விளிம்பில் வந்து நின்றான்.

அங்கிருந்து பரந்து விரிந்து கிடக்கும் அந்தத் துறைமுகத்தை தன் சாம்ராஜ்யத்தை அளவிடுவது போலப் பார்த்துக் கொண்டிருந்தான்.

பால்கனியின் விளிம்பில் நின்றிருந்த ரோலக்ஸின் மௌனம், அவனது மனது ஏதோ ஒரு புரியாத இருண்ட குகைக்குள் அலைந்து கொண்டிருந்தது. ரோலக்ஸின் இந்த மாற்றத்தை கவனித்த பைரவன், ரோலக்ஸின் அருகே சென்றான்.

“என்ன ரோலக்ஸ்? என்ன ஆச்சு உனக்கு? ஏன் இப்படிப் பாறை மாதிரி நிக்கிற?” என்று பைரவன் வினவ, மெல்லத் திரும்பி அவனைப் பார்த்த ரோலக்ஸின் கண்கள் எப்போதும் போல அதிகாரத்தைக் காட்டவில்லை,  மாறாக, ஒருவிதமான தவிப்பை வெளிப்படுத்தின.

“என்னன்னு சொல்லத் தெரியல பைரவா… ஆனா உள்ளுக்குள்ள ஏதோ ஒன்னு உறுத்திக்கிட்டே இருக்கு. முதல் முறையா எனக்குப் பயமா இருக்கு!” என ரோலக்ஸின் இந்த சைகை மொழி பைரவனை நிலைகுலைய வைக்க, பைரவன் வியப்பின் உச்சத்துக்கே சென்றான்.

எதிரிகள் உலகமே அஞ்சும் ஒரு வெள்ளை வேந்தன், மரணத்தைக் கண்டு கண்ணிமைக்காத ஒரு வீரன், இன்று ‘பயம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதா? அவன் ரோலக்ஸின் தோள்களைத் தன் பலமான கரங்களால் பற்றி உலுக்கினான். “ரோலக்ஸ்… உன்னை நான் இப்படிப் பார்த்ததே கிடையாது. எமனே எதிரில் வந்தாலும் ஏறி மிதிக்கிற ஆளு நீ. என்னாச்சு உனக்கு? எதை நினைச்சுப் பயப்படுற?”

ரோலக்ஸ் மீண்டும் ஒருமுறை அங்கே விளையாடிக்கொண்டிருந்த சாருவின் தலைமுடியை வாஞ்சையுடன் கோதிவிட்டான். அவனது பார்வை இப்போது தன் மகனின் மீது நிலைத்தது.

“பயமா இருக்கு பைரவா… ஆனா என் உயிரைப் பத்தி எனக்குக் கவலை இல்லை. இந்தச் சாரு, மயூரா… இவங்க ரெண்டு பேரையும் நினைச்சுதான் என் நெஞ்சு பதறுது. நாம செஞ்சது எல்லாமே தப்பு பைரவா. அரசாங்கத்துக்கு எதிரா நிக்கிறோம், தொழில்ல ஆயிரக்கணக்கான எதிரிகளைச் சம்பாதிச்சு வச்சிருக்கோம். யாரு, எப்போ, எந்தப் பக்கத்துல இருந்து நம்மைக் குத்துவாங்கன்னு தெரியாது.”

ஒரு கணம் நிறுத்தி, பைரவனின் கண்களை உற்றுப் பார்த்தவன். “இப்போ கூட நீ முடிச்சிட்டு வந்த அந்த வேலை ஒரு குழந்தை சம்பந்தப்பட்டதுதான். நாளைக்கு அதே விதி நம்ம சாருவுக்குத் திரும்பாதுன்னு என்ன நிச்சயம்?”

ரோலக்ஸ் சொல்லச் சொல்ல, பைரவனின் கைகள் அவனது கைகளை இறுகப் பற்றிக்கொண்டன. “ரோலக்ஸ்! தயவுசெஞ்சு அமைதியா இரு. ஏன் இப்படி அமங்கலமாப் பேசுற? சாருவுக்கும் மயூராவுக்கும் ஒன்னும் ஆகாது. இந்த பைரவன் உயிரோட இருக்கிற வரைக்கும், எவனாவது இவங்களை நெருங்குனா, அவன் உடம்புல ஒரு எலும்பு கூட மிஞ்சாது! இது என் சத்தியம்!” என்று ஆவேசமாகவும் பைரவன் சொல்லவும்…

தன் குடும்பத்தின் மீது பைரவன் வைத்திருக்கும் அந்த அதீத அன்பையும் அக்கறையையும் கண்ட ரோலக்ஸின் உள்ளம் நெகிழ்ந்தது. ஒரு மெல்லிய புன்னகையுடன் நண்பனின் தோளில் தட்டிக் கொடுத்தவன். “சொல்ல முடியாது பைரவா… நாம இருக்குற நிலைமை அப்படி. விதி எப்ப வேணா நம்மகிட்ட விளையாடலாம். ஆனா ஒன்னு… எனக்கு அப்புறம் இவங்களைப் பார்த்துக்க நீ இருக்கிறன்ற நம்பிக்கை மட்டும் தான் இப்போ எனக்கு மருந்தா இருக்கு!”

“ரோலக்ஸ்… உனக்கு என்னதான் ஆச்சு? நீ பயந்துட்டியா? எதற்கும் கலங்காத உன் கண்கள்ல இப்படி ஒரு பயத்தை நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லையே! ஏன் திடீர்னு மரணத்தைப் பத்திப் பேசற?” என்று பைரவன் பதற்றத்துடன் வினவ.

ஒரு நிமிடம் அமைதியாகத் தூரத்தில் தெரிந்த கடற்பரப்பைப் பார்த்த, ரோலக்ஸ். பின், மிகவும் நிதானமாகப் பைரவன் பக்கம் திரும்பி, அவனது தோள்களில் தன் கரங்களை வைத்தான். “பைரவா… சில விஷயங்களை இப்போவே உன்கிட்ட பேசிடுறது நல்லதுன்னு எனக்குத் தோணுது. நான் ஏற்கனவே யோசிச்சு வச்ச ஒரு திட்டத்தை உன் கிட்ட சொல்லணும்.”

“பைரவா… இந்தக் கடத்தல் உலகத்துல நான் ஒரு ஜாம்பவானா இருக்கலாம். ஆனா, நானும் ஒரு சாதாரண மனுஷன் தான். விதி யாரையும் விடுறது இல்ல. எனக்கு எப்போ வேணா, எது வேணா நேரலாம். இதுல எந்த மாற்றமும் இல்ல. ஒரு நண்பனா உன்கிட்ட நான் கேட்குறது ஒன்னுதான்…”

“ரோலக்ஸ்! என்ன வார்த்தை இதெல்லாம்? என்ன செய்யணும்னு சொல்லு… உனக்காக உயிரைக் கொடுக்கவும் நான் தயார்!” என்று பைரவன் ஆவேசமாகச் சொல்ல,

மெலிதாகச் சிரித்தான், ரோலக்ஸ். “தெரியும் பைரவா… எனக்காக நீ எதையும் செய்வ. ஆனா, நான் உன் உயிரைக் கேட்கல. ஒருவேளை என் உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்துச்சுன்னா… நீ என் உயிரைக் காப்பாத்தப் போராட வேண்டாம். அங்கிருந்து தப்பிச்சுப் போயிடு.”

குழப்பத்துடன் பார்த்த பைரவன், “ரோலக்ஸ்… என்ன சொல்ற? எனக்கு ஒன்னும் புரியலையே?”

“புரியும்படி சொல்றேன் பைரவா… எனக்கு ஏதாவது விபரீதம் நடந்தா, நீ எதைப் பத்தியும் யோசிக்காம மயூராவுையும் சாருவையும் கூட்டிக்கிட்டு, யாருக்கும் தெரியாத ஒரு இடத்துக்குப் போயிடு. இந்த ரத்தக் காடு, அதிகாரம், பணம் எதுவுமே வேண்டாம். ஏழையா இருந்தாலும் பரவாயில்லை, ஒருவேளை சாப்பாடு சாப்பிட்டாலும் நிம்மதியாத் தூங்கி எழட்டும். அவங்க ரெண்டு பேரோட அமைதியான வாழ்க்கை மட்டும்தான் எனக்கு முக்கியம். இதை எனக்காகச் செய்வியா?”

ரோலக்ஸின் இந்த வேண்டுகோள் பைரவனை அதிர வைத்தது. “ஏன் இப்படிப் பேசுற ரோலக்ஸ்? உனக்கு என்னதான் ஆச்சு?”

“தெரியல பைரவா… கொஞ்ச நாளா என் மனசு சரியில்ல. ஏதோ தப்பா நடக்கப்போற மாதிரியே உள்ளுணர்வு சொல்லுது. அதனால்தான் இந்த முன்னெச்சரிக்கை பிளான்…”

“ரோலக்ஸ்… அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. நீ வீணா மனசைக் குழப்பிக்காதே…” என்று பைரவன் அவனுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, கோட்டையின் அமைதியைக் கிழித்துக்கொண்டு கீழே ஒரு சத்தம் கேட்டது.

“வவ்… வவ்… வவ்…!”

போலீஸ் ஜீப்பின் அலறல் சத்தம் கோட்டையின் வாசலில் வந்து நின்றது. அந்தச் சத்தம் கேட்ட அடுத்த நொடி, பைரவன் சட்டென்று திரும்பி கீழே பார்த்தான். அங்கே வந்து நின்றிருந்தது ACP ஷர்மா !.

“ரோலக்ஸ்… ACP ஷர்மா வந்திருக்கான்!” என்று பைரவன் எச்சரிக்கையாகச் சொல்ல, ரோலக்ஸ் மாடியிலிருந்து குனிந்து பார்த்தான்.

கீழே, பான்பராக் மென்றுகொண்டிருந்த ACP சர்மா, தலையைத் தூக்கி மாடியில் நின்றிருந்த ரோலக்ஸைப் பார்த்தான். அந்தப் பார்வையில் அதிகாரமோ, கடமையோ இல்லை, மாறாக ஒருவிதமான நமுட்டுச் சிரிப்பு இருந்தது. வாயிலிருந்த பான் எச்சிலை ஒருபுறம் ஒதுக்கியவன், ஒரு நையாண்டி கலந்த புன்னகையுடன், மரியாதை செய்வது போலத் தன் கையைத் தூக்கி அசைத்தான்.

ரோலக்ஸ் எந்தச் சலனமும் இன்றி, “மேலே வா” என்பது போல ஒரு சிறிய செய்கை காட்டிவிட்டுப் பைரவன் பக்கம் திரும்பினான்.

“சரி, நான் சாருவை மயூராகிட்ட கொடுத்துட்டு வர்றேன்,” என்று கூறிவிட்டுப் பைரவன் அங்கிருந்து வேகமாக நகர, அதே சமயம் ACP மாடிக்கு வந்து சேர்ந்தான்.

வாசலில் நுழையும் சர்மாவும், வெளியேறும் பைரவனும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் கடந்தனர். அந்த ஒரு நொடிப் பார்வையில் ஓராயிரம் ரகசியங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. அது ஒரு பழைய பகைமையின் எச்சரிக்கையா? அல்லது புதிய சதித்திட்டத்தின் சமிக்ஞையா? அந்த மர்மம் அவர்களது உள்மனதைத் தவிர எவருக்கும் புரியவில்லை.

நேராக நடந்த சர்மா, துறைமுகத்தைப் பார்த்தபடி நின்றிருந்த ரோலக்ஸின் தோள்களில் அதிகாரப்பூர்வமாகத் தன் கைகளை வைத்தான்.

சட்டென்று அலைகளின் ஓசை ரோலக்ஸை நிகழ்காலத்திற்குக் கூட்டி வந்தது. அதே போன்ற ஒரு கனமான கை இப்போது அவனது தோளில் விழுவதை உணர்ந்தான். திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தால், அங்கே நின்றிருந்தது எட்வர்ட்!

ரோலக்ஸின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை மலர்ந்தது. மரணத்திலிருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் மீட்டெடுத்த அந்த மனிதனை ஒரு நன்றியுணர்ச்சியுடன் ஏறெடுத்தான். 

“ரோலக்ஸ்… உன்கிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும்.” அவனின் குரலில் இருந்த தீவிரம் மயூராவிற்குப் புரிந்தது. அவள் எவ்விதக் கேள்வியும் இன்றி, ரோலக்ஸின் மார்பில் சாய்ந்திருந்த சாருவை மெல்ல வாங்கிக்கொண்டாள். தன் கணவனையும் எட்வர்டையும் ஒருமுறை பார்த்துவிட்டு, குழந்தையுடன் அறைக்குள் நகர்ந்தாள்.

மயூரா குழந்தையுடன் அறைக்குள் சென்றதை உறுதி செய்த எட்வர்ட், ரோலக்ஸின் கண்களை நேருக்கு நேர் நோக்கியவன், “ரோலக்ஸ்… உன் உடம்புல மட்டும் ஆறு தோட்டாக்கள் பாய்ந்திருக்கு. சாதாரண மனுஷனா இருந்தா இந்நேரம் ஆவி போயிருக்கும். ஆனா நீ பலசாலி… உனக்கு ஆயுசு ரொம்பவே கெட்டி! விதியின் கணக்கு இன்னும் முடியல, உன்னுடைய கடமை இன்னும் பாக்கி இருக்கு,” என்று எட்வர்ட் வியப்புடன் கூறினான்.

தன் மரணத்தையே வென்று வந்த கர்வமும், அதிகாரத்தின் மிடுக்கும் கலந்த ஒரு மெல்லிய புன்னகை ரோலக்ஸின் உதடுகளில் ஊசலாடியது,  “ஆனா நான் இப்போ சொல்ல வந்த விஷயம் வேற… !”

“உன் உடம்புல இருந்து எடுக்கப்பட்ட அந்த ஆறு குண்டுகள்ல, நாலு குண்டுகள் கள்ளச் சந்தை துப்பாக்கியோடது. ஆனா, மீதி இருக்கிற இரண்டு தோட்டாக்கள் இந்திய அரசாங்கத்துக்குச் சொந்தமானவை!”

எட்வர்ட் சொன்னதைக் கேட்டதும் ரோலக்ஸின் கண்கள் விரிந்தன. ஒரு நிழல் உலக தாதாவின் மீது பாயும் குண்டுகள் ரவுடிகளுடையதாக இருப்பது இயல்பு. ஆனால், அரசாங்கத் துப்பாக்கி தன் மீது பாய்ந்தது என்றால்… யாரோ ஒரு அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவன் தன் முதுகில் குத்தியிருக்கிறான்!

அவனுக்குப் பின்னால் இருக்கும் ஒரு கருப்பு ஆடு யார்? ரோலக்ஸின் மூளை மின்னல் வேகத்தில் கணக்குப் போடத் தொடங்க, எட்வர்ட் மேலும் தொடர்ந்தான்,

“ரோலக்ஸ், அந்த அரசாங்கக் குண்டுகளை ஆய்வுக்காக அனுப்ப வேண்டிய இடத்துக்கு அனுப்பிட்டேன். கூடிய சீக்கிரம் அந்தத் தோட்டாக்கள் யாருடைய துப்பாக்கியில இருந்து சீறி வந்ததுன்ற உண்மை தெரிஞ்சுடும்.”

தன் கைகளைக் கோபத்துடன் மடக்கினான் ரோலக்ஸ். “பதில் வரட்டும்… அதுக்கப்புறம் இருக்கு என் வேட்டை! ” என்று அவனது கண்கள் அனலாய்த் தெறித்தன.

அதனை புரிந்துக் கொண்ட எட்வர்ட், “வேணாம் ரோலக்ஸ்!, உன்னுடைய வேட்டை இதோட போதும். ஸ்காட்லாந்துக்கு நான் உன்னைக் கூட்டிட்டுப் போறதே வேற ஒரு பெரிய லட்சியத்துக்காகத்தான். அங்க போய் நீ என்ன செய்யணும்னு நானே சொல்றேன். அதுவரைக்கும் எதையும் போட்டு உன் மனசைக் குழப்பிக்காதே.”

எட்வர்ட்டின் குரலில் இருந்த அந்த ஆழமான உறுதி ரோலக்ஸைச் அடக்க, “இந்தக் குண்டு சம்பந்தமான விஷயத்தை நான் டீல் பண்ணிக்கிறேன். நீ இப்போதைக்கு அமைதியா இரு,” என்று எட்வர்ட் அவன் தோளைத் தட்டிக் கொடுத்தான்.

நன்றியோடு அவனைப் பார்த்தான் ரோலக்ஸ். ஆனால், ஒரு சந்தேகம் அவனுக்குள் இருந்தது. .. “உனக்கு எப்படிச் செய்கை மொழி இவ்வளவு நுணுக்கமாத் தெரியுது?” என ரோலக்ஸ் கேட்க

மௌனமாக்கினான் எட்வர்ட் .

வேட்டை தொடரும் ..⚓

❤️ Loading reactions...
2 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!