2
அறை முழுவதும் மல்லிகைப் பூக்களின் வாசம் ஆக்கிரமித்திருக்க, மணக்கோலத்தில் தேவதையாய் அமர்ந்திருந்தாள் யாழினி. அவளது மேனியில் தவழ்ந்த அந்தப் பட்டுப்புடவை, மயில் தோகையின் வர்ணங்களை அப்படியே வாரிக்கொண்டு வந்து நெய்தது போல மின்னியது. ஒவ்வொரு முறை அவள் அசையும் போதும், புடவையின் சரிகைகள் விளக்கொளியில் வைரங்களாய் ஜொலித்தன.
மெல்லத் தன் கரங்களை உயர்த்தியவள், மணிக்கட்டை அலங்கரித்த Gana’s Collection வளையல்களை ஒவ்வொன்றாகக் கழற்றத் தொடங்கினாள். அந்த வளையல்களில் பதிக்கப்பட்டிருந்த வண்ணக் கண்ணாடி கற்கள், அவளது கைவிரல் அசைவுகளுக்கு ஏற்பப் பல வண்ணங்களைப் பிரதிபலித்தன.
மையிட்ட மான்விழித் ததும்ப, அந்த வளையல்களின் நேர்த்தியை ரசித்தவள், மென்மையான வருடல் ஒன்றை அதற்கு பரிசாக அளித்துவிட்டு, அருகில் இருந்த வெல்வெட் பெட்டியில் அவற்றை ஒவ்வொன்றாக அடுக்கி மூடினாள்.
அடுத்ததாக, தன் கழுத்தை ஆபரணமாய் தழுவிக்கொண்டிருந்த அந்த முத்தாரத்தின் மேல் அவள் கவனம் திரும்பியது. முத்துக்களின் மென்மையும், அதன் நடுவே கம்பீரமாக வீற்றிருந்த லட்சுமி உருவம் பொறித்த டாலரும் பார்ப்பவர் கண்களைப் பறித்தன.
“என்ன ஒரு நேர்த்தி!” என்று மனதிற்குள் வியந்தவள், அருகிலேயே அமர்ந்து இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தன் தங்கை சுவாதியை நோக்கித் திரும்பினாள்.
“ஹேய் சுவாதி! இங்க பாரேன்… இந்த முத்துமாலை பார்க்குறதுக்கு அப்படியே அச்சு அசல் ஒரிஜினல் முத்து மாதிரியே இருக்குல்ல? அந்தப் பளபளப்பும், கோர்வையும் எவ்ளோ அழகா இருக்கு! நிஜமாவே இந்த Gana’s Collectionல ஒவ்வொரு நகையையும் செதுக்கியிருக்காங்கடி,” என வியப்பு குறையாமல் கூறியவள்.
சுவாதி பதில் பேசும் முன்னே, “உன்னோட கல்யாணத்துக்கும் கண்டிப்பா நாம இங்கேயே தான் ஆர்டர் கொடுக்கணும். இந்த வளையல், இந்த மாலைன்னு ஒவ்வொன்னும் அவ்வளவு சூப்பரா இருக்குல்ல?”
என அவள் சொல்லும் போதே, முத்துப்பற்கள் வரிசையாகத் தெரிய அந்தப் பெரிய கண்ணாடியைப் பார்த்து இதழ் விரியச் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் மணப்பெண்ணுக்கே உரிய ஒரு தனித்ததொரு பெருமிதமும், அழகும் போட்டி போட்டன.
தன்னுடைய அழகைத் தானே ரசித்துக் கொண்டிருந்த யாழினியின் கண்கள், கண்ணாடியில் அவளது பிம்பத்திற்குச் சற்றுத் தள்ளி, அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த சுவாதியின் முகம் தெரிந்தது.
சுவாதியின் கண்கள் ஏதோ ஒரு மெல்லிய ஏக்கத்திலோ சொல்லத் துடிக்கும் ரகசியத்தில் தேங்கி நின்றதைக் கண்ட யாழினி, திரும்பி அவளை நேரில் பார்க்காமல் மாறாக, கண்ணாடியில் தெரிந்த சுவாதியின் பிம்பத்தைப் பார்த்தே, அழகாகத் தன் புருவங்களை உயர்த்தி, கண்களால்
“என்ன?” என்பது போல ஜாடை காட்டினாள்.
சிவந்த மருதாணியிட்ட தன் பிஞ்சு விரல்களை மடக்கி, ஒரு தூணினைப் போலத் தன் முழங்காலில் ஊன்றி, அதன் மேல் தன் வட்ட வடிவ நிலவு முகத்தைத் தாங்கி அமர்ந்திருந்தாள் சுவாதி. அவளது மையிட்ட மான்விழிகள் அம்பு போலப் பாய்ந்து யாழினியைத் துளைத்துக் கொண்டிருந்தது.
தங்கையிடமிருந்து எந்தப் பதிலும் வராமல் போகவே, மெல்லச் சுழல் நாற்காலியில் ஒரு சுழன்று அவளை எதிர்கொண்ட, யாழினி.
“என்னடி அப்படிப் பார்க்கிற? என் அழகில் மயங்கிட்டியா?” என்று யாழினி கிண்டலாகக் கேட்க, சுவாதியின் பொறுமை எல்லை கடந்தது.
தாடையைத் தாங்கியிருந்த கையைத் தன் மெல்லிய இடையில் வைத்துக் கொண்ட சுவாதி, நாவல் பழம் போன்ற தன் இதழ்களைச் சுருக்கித் தன் அதிருப்தியை வெளிப்படுத்தியவள்.
“ஏய்! உனக்கு இந்த நிமிஷத்துல என்ன தோணுதுன்னே எனக்குப் புரியலடி. உனக்கு இந்த இந்தக் கல்யாணத்துல விருப்பம் இருக்கா இல்லையா? விடிஞ்சா உனக்குத் தாலி கட்டப் போறாங்க… ஆனா நீ என்னடான்னா, எந்தக் கவலையும் இல்லாம பாட்டுப் பாடிக்கிட்டு, நகைகளை ரசிச்சுக்கிட்டு, அலங்காரம் பண்ணிக்கிட்டு இருக்க! என்னடி நினைச்சுட்டு இருக்க உன் மனசுல?” என்று அம்பு போன்ற வார்த்தைகளைத் தொடுத்தாள் சுவாதி. அவளது குரலில் நிஜமான கோபமும், அக்காவைப் பற்றிய கவலையும் கலந்திருந்தது.
ஆனால் யாழினியோ, இந்த ஆவேசப் பேச்சை ஒரு கவிதை போலக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தவள்,
“அச்சோ… சுவாதி! கோபத்துல உன் முகம் அப்படியே கோவைப் பழம் மாதிரி எவ்ளோ அழகா சிவந்து போயிருக்கு பாரேன். என் தங்கச்சி அழகைப் பார்த்து எனக்கே கண்ணு பட்டுடும் போல இருக்கே!” என்று கொஞ்சிய யாழினி, சட்டென்று தன் விழி ஓரத்தில் இருந்த மையை எடுத்து சுவாதியின் காதோரம் ஒரு திருஷ்டிப் பொட்டாக வைத்தாள்.
அத்தோடு விடாமல், இரு கைகளையும் சுவாதியின் தலைக்கு மேல் குவித்து, “படக்… படக்…” என்று சத்தம் வரும்படி தன் கை விரல் கணுக்களை நெட்டி முறித்துத் திருஷ்டி கழித்தாள்.
“பார்த்தியா சுவாதி… எவ்ளோ சத்தம் வருதுன்னு! உனக்கு எவ்ளோ கண்ணு பட்டிருந்தா இப்படி நெட்டி உடையும்? இப்போ பாரு உன் முகம் எவ்ளோ தெளிவா இருக்கு,” என யாழினி சொல்ல, சுவாதிக்கு எரிச்சல் இன்னும் கூடியது.
“யாழினி! என் கேள்விக்கு பதில் சொல்லு. விளையாடாத… ஏன் இப்படி எதையுமே சீரியஸா எடுத்துக்காம இருக்க?” என்று கரகரப்பான குரலில் சுவாதி மீண்டும் வினவினாள்.
மல்லிகைச் சரம் போன்ற தன் மென்மையான விரல்களால் சுவாதியின் தாடையைப் பற்றியவள், பிஞ்சுப் பிள்ளை போல இருக்கும் அவளது முகத்தை இடமும் வலமுமாக ஆட்டிவிட்டு, ஒரு குறும்புச் சிரிப்பை உதிர்த்தாள். பதில் ஏதும் சொல்லாமல், மீண்டும் தன் மெல்லிய குரலில்
“”கனா காண்கிறேன் கனா காண்கிறேன்
கண்ணாளனேஒரே பந்தலில் ஒரே மேடையில்
இருவருமேகனா காண்கிறேன் கனா காண்கிறேன்..” முணுமுணுத்தபடி கண்ணாடியின் முன் அமர்ந்து கொண்டாள்.
தன் கேள்விகள் யாவும் காற்றில் கரைந்து போவதைக் கண்டு சுவாதி கொந்தளித்துப் போனாள். மீண்டும் ஏதோ ஆவேசமாகப் பேச வாயெடுத்த அந்த நொடி, அறையின் கதவு மெல்லத் திறக்கப்பட்டது.
கையில் ஒரு தட்டுடன், முகத்தில் ஒருவிதப் பதற்றமும் பாசமும் சுமந்து உள்ளே நுழைந்தாள் அவர்களின் அம்மா ராஜேஸ்வரி.
கையில் வைத்திருந்த பழ தட்டை மேஜையில் வைத்துவிட்டு, யாழினியை அப்படியே மேலிருந்து கீழாகப் பார்த்து மெய்சிலிர்த்துப் போனாள்.
“அச்சோ என் தங்கம்… உன்னைப் பார்க்க என் கண்ணே பட்டுடும் போல இருக்குடி! அவ்வளவு அழகா இருக்க!” என்று உணர்ச்சி வசப்பட்டவள், தன் இரு கரங்களால் யாழினியின் முகத்தை அள்ளிப் பிடித்து கன்னங்களில் முத்தங்களை மழையாகப் பொழிந்தாள்.
“மண்டபத்துக்கு உன்னை அழைச்சிட்டு வந்த உன் நாத்தனார்கள் எல்லாம் உன் அழகைப் பார்த்து மெச்சிப் பேசிட்டு இருக்காங்கடி. அப்படி ஒரு ராஜகுமாரி மாதிரி இருக்கேனு சொல்றாங்க!”
தன் தாயின் ஆரவாரமான பேச்சைக் கேட்ட யாழினி, எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல், ஒரு சின்ன மெல்லிய புன்னகையை மட்டும் பதிலாகத் தந்து அமைதி காத்தாள்.
ராஜேஸ்வரி விடவில்லை, “இப்பதான் மாப்பிள்ளை அவர் அப்பாக்கு போன் பண்ணி பேசி இருக்காரு … அவரு பெங்களூர்ல இருந்து பிளைட் ஏறிட்டாராம், சீக்கரம் இங்க வந்துடுவாரு. எல்லாம் நல்லபடியா நடக்குதுடி!”
என ராஜேஸ்வரி பேசிக்கொண்டே போக, யாழினியின் முகத்தில் மீண்டும் அந்த மர்மமான சிரிப்பு வந்து ஒட்டிக்கொண்டது. அந்தச் சிரிப்பில் இருப்பது வெட்கமா, சந்தோஷமா, அல்லது விதியைப் பார்த்துச் சிரிக்கிறாளா என்று கண்டுபிடிப்பது எவருக்கும் அசாத்தியமான காரியமாக இருந்தது.
ஆனால், அருகிலிருந்த சுவாதிக்கோ இது எதையுமே ஜீரணிக்க முடியவில்லை. அவள் தன் அக்காவையும் தாயையும் மாறி மாறி முறைத்தபடி இருந்தாள்.
அவளது பார்வையின் தீவிரத்தைக் கவனித்த ராஜேஸ்வரி, “என்னடி அப்படிப் பார்க்கிற? உன் அக்காவே அமைதியா இருக்கா… நீ தேவையில்லாம எதாவது பிரச்சனையை கிளப்பணும்னு நினைச்சே, அப்புறம் நான் பத்திரகாளி ஆகிடுவேன்! நேரம் ஆகுது, ரெண்டு பேரும் சீக்கிரம் டிரஸ் மாத்திட்டுப் படுத்துத் தூங்குங்க,” என்று மிரட்டலாகக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
அம்மா வெளியேறியதும், சீட்டில் இருந்து விர்ரென்று எழுந்தாள் சுவாதி. தன் அக்கா காட்டிக்கொள்ளும் அந்தப் போலித்தனமான அமைதி அவளைத் துளைத்தது. சூட்கேஸில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நைட்டியை வெடுக்கென்று எடுத்தவள், ஆத்திரத்தில் அதைத் தரையில் எறிந்தாள்.
“நீ பாடிட்டே இருடி யாழினி! விடிஞ்சா என்ன ஆகப்போகுதுன்னு எனக்குத் தெரியல… ஆனா ஏதோ தப்பா நடக்கப்போகுதுன்னு மட்டும் என் மனசு சொல்லுது!” என்று சாபம் விடுவது போலக் கூறிவிட்டு, நயிட்டியை மாற்றிக்கொண்டு கட்டிலில் ‘தொப்’ என்று விழுந்தவள் மறுபக்கம் பார்த்தபடி படுத்துக்கொண்டாள்.
சுவாதி படுத்த பின், மெல்லத் தன் இருக்கையை விட்டு எழுந்தாள் யாழினி. தன்னை அலங்கரித்த அந்தப் பட்டுப் புடவையையும், நகைகளையும் ஒவ்வொன்றாகக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு சாதாரண நைட்டிக்கு மாறினாள். அறையின் விளக்குகளை ஒவ்வொன்றாக அணைத்துவிட்டு, இருளில் சுவாதியின் அருகில் சென்று படுத்தாள்.
அறையில் இப்போது நிலவின் வெளிச்சம் மட்டும் ஜன்னல் வழியாக ஊடுருவிக் கொண்டிருந்தது. தூங்குவது போலப் பாவனை செய்த சுவாதியின் மீது தன் ஒரு கரத்தைப் போட்டு அணைத்துக் கொண்டாள் யாழினி.
இருட்டில் யாழினியின் கண்கள் திறந்தே இருந்தன. மின்விசிறியின் சுழற்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் எண்ணங்கள், மெல்ல மெல்ல நிகழ்காலத்தை விட்டு நழுவி, பல மாதங்களுக்குப் பின்னால்…
அதாவது அவளது கடந்த கால நினைவுகளின் ஆழத்திற்குள் மூழ்கத் தொடங்கியது.
அன்று ஒரு மேகமூட்டமான மாலைப் நேரம். ஆகாயம் மெல்லத் தன் கண்ணீரைச் சிதறவிடத் தொடங்கியிருந்தது. பூங்காவின் அந்த மரத்தடியில், மழையின் சத்தத்தையும் மீறி இரு இதயங்களின் வாக்குவாதம் பலமாக ஒலித்துக் கொண்டிருந்தது.
“இப்போ என்ன தான் சொல்ல வர சந்துரு ? உன் முடிவு தான் என்ன ?” யாழினியின் குரலில் கோவமும் வலியும் கலந்து வந்தது.
“இங்க பாரு யாழி… நான் திரும்பத் திரும்பச் சொல்றேன். எனக்கு உன்னைத் தவிர வேற யாரும் தேவையில்லை, நீ மட்டும் தான் என் பொண்டாடி, உனக்கும் நான் மட்டும்தான் வேணும்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனா, உங்க அப்பா முன்னாடி வந்து நின்னு என்னால உன்னை பொண்ணு கேட்க முடியாது!”
சந்துருவின் வார்த்தைகள் மழையை விடக் குளிர்ச்சியாகவும், அதே சமயம் ஈட்டி போலவும் யாழினியைத் தைத்தன.
“ஏன் சந்துரு இப்படி ஈகோ பார்க்கிற? எங்க அப்பா வயசுல பெரியவர். ஒரு மரியாதைக்கு வந்து அவர்கிட்ட முறைப்படி பொண்ணு கேட்டா உனக்கு என்ன குறைஞ்சிடப் போகுது? என் காதலுக்காக இதைக் கூட உன்னால பண்ண முடியாதா?” என்று ஆதங்கத்துடன் கேட்டாள் யாழினி.
அவளது கைகளை அழுத்தமாகப் பற்றிக்கொண்ட சந்துரு, “எனக்கு நீ வேணும் யாழி. அதுக்காக எதை வேணாலும் செய்யத் துணிஞ்சவன் நான். இப்பவே சொல்லு, உன்னைத் தூக்கிட்டுப் போய் தாலி கட்ட நான் ரெடி. ஆனா, உங்க அப்பாகிட்ட பேசி காரியத்தை சாதிக்கலாம்னு நினைக்கிறது வெறும் கனவு.”
“ஏன் முடியாதுங்கிற? ஒரு முறை முயற்சிதான் பண்ணிப் பாரேன்…”
கசப்பாகச் சிரித்தவன். “என்னடி பேசச் சொல்ற? உங்க அப்பன் பயங்கரமான கிரிமினல் லிஸ்ட்… ஒரு தேர்ந்த நாடகக்காரன்! அது உனக்குத் தெரியுமா? டிராமா போட்டே ஆளைக் கவுக்கிற வித்தை அந்த ஆளுக்கு அத்தனை அற்புதம்.”
யாழினி புரியாமல் புதிராக அவனை நோக்க, சந்துருவே மேலும் தொடர்ந்தான்..
“நான் வந்து பேசினா, ஒன்னு என்னை பிரைன்வாஷ் பண்ணி ஓட வைப்பாரு. இல்லைனா, நான் வந்ததும் உன்னை பிரைன்வாஷ் பண்ணி மாத்தப் பார்ப்பாரு. இது ரெண்டுமே வேலைக்காகலைனா, நம்ம ரெண்டு பேர் எதிரிலும் சம்மதிக்க சரி சொன்னா மாதிரி நடிச்சு, கடைசியில கல்யாணத்தை நிக்க வைக்க ஒரு மாஸ்டர் பிளான் போடுவாரு. அதுதான் உன் அப்பன்!”
“உங்க அப்பான்றதுனால அவருக்கு ஒரு மரியாதை கொடுக்கிறேன், அவ்வளவுதான். அதுக்காக உன்னை விட்டுக்கொடுக்க முடியாது. நான் அவர் கால்ல விழுந்து கூடப் பொண்ணு கேட்கத் தயார். ஆனா, அதுக்கப்புறம் அவர் என்ன பண்ணுவாருன்னு யோசிச்சியா? நம்ம விஷயத்தைத் தெரிஞ்சுக்கிட்டு, நம்ம வாழ்க்கையைச் சிதைக்க எந்த எல்லைக்கும் போவாரு. அதனாலதான் சொல்றேன்… யாருக்கும் தெரியாம உன்னைத் தூக்கிட்டுப் போக நான் ரெடி.”
சந்துருவின் குரலில் ஆவேசம் கூட, அவனின் ஒவ்வொரு வார்த்தையும் யாழினியின் மனதில் கீறல்களை ஏற்படுத்தின. தன் தந்தை மீதான பிம்பமும், காதலியின் தவிப்பும் அவளைப் பிழிந்தெடுத்தன. கண்களின் ஓரத்தில் ஒரு துளிக் கண்ணீர் எட்டிப் பார்த்தது.
நிமிர்ந்து அவன் கண்களை ஆழமாகப் பார்த்தவள், “தூக்கிட்டுப் போக வேண்டாம் சந்துரு… கூட்டிட்டுப் போ. எல்லார் முன்னாடியும் கூட்டிட்டுப் போ… அது போதும். ‘இவன் தான் என் புருஷன்’னு சத்தமாச் சொல்லிட்டு, உன் கை பிடிச்சு உன் பின்னாலேயே வர்றேன்!”
அந்த வார்த்தைகளில் உறுதி இருந்தது. ஆனால், அந்த உறுதி அன்று அந்தப் பூங்காவிலேயே உறைந்து போனது. அதற்குப் பிறகு அவளைச் சந்திக்க சந்துரு வரவில்லை… அவளும் அவனைத் தேடிப் போகவில்லை.
இப்போது, விடிந்தால் அவளுக்கு வேறொருவனுடன் திருமணம். அமைதியாகப் படுத்திருக்கும் யாழினியின் இதயம் மட்டும் ஒரு மந்திரத்தைப் போலத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தது:
“அவன் வருவானா? சொன்னது போல எல்லார் முன்னாடியும் வந்து என் கை பிடிப்பானா?”
அவளது ஒரு கை அனிச்சையாகத் தன் வயிற்றில் இருந்த சுவாதியின் கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டது. இருளில் யாழினியின் கண்கள் மின்னின… அது நம்பிக்கையிலா அல்லது வழியப் போகும் கண்ணீரிலா என்பது அந்த இரவுக்கே வெளிச்சம்.
அவள் சந்துருவின் வருகைக்காகக் காத்திருக்கிறாளா, அல்லது தந்தையின் ‘மாஸ்டர் பிளானை’ முறியடிக்கப் போகிறாளா?
வேட்டை தொடரும் ..⚓
