Rolex 26

அத்தியாயம் 26

பாபியின் குடோன் அறைக்குள் நிலவிய அந்த நிசப்தம், எந்த நேரத்திலும் வெடிக்கக் காத்திருக்கும் ஒரு வெடிகுண்டைப்போலத் தகித்துக் கொண்டிருந்தது. பாபி தன் இரும்புக்கரங்களால் பைரவனின் சட்டையைப் பற்றி உலுக்கி, ரோலக்ஸ் எங்கிருக்கிறான் என்று வினவியபோது, பைரவனின் மூளை ஒரு நொடியில் பல நூறு கணக்குகளைப் போட்டது. உண்மையைச் சொன்னால் அடுத்த அடியிலேயே ரத்த ஆறு ஓடும், பொய் சொன்னால் அது பாபியின் அசுரத்தனமான புத்திக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடாது.

பைரவன் மெதுவாகத் தன் கைகளை உயர்த்தி, பாபியின் கைகளைத் தன் சட்டையிலிருந்து விலக்கினான். அவனது முகத்தில் ஒருவிதமான தயக்கத்தையும், பயத்தையும் போலியான ஒரு நாடகமாக வரவழைத்துக் கொண்டான்.

மெல்லப் பாபியின் அருகில் இன்னும் சில அடிகள் நெருங்கிச் சென்ற பைரவன், குரலைத் தாழ்த்திப் பேசத் தொடங்கியவன். “தலைவா… நான் சொல்றதைத் தப்பா எடுத்துக்காதீங்க. ரோலக்ஸ் இப்போ இந்த விசாகப்பட்டினத்துலேயே இல்ல… அவன் ஊர்ல இல்ல தலைவா. உங்ககிட்ட உடனே சொல்ல முடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலை அவனுக்கு ஏற்பட்டுடுச்சு. அதனாலதான், இங்க நம்ம தர்மா இறந்த விஷயம் கூட இன்னும் அவனுக்குத் தெரியாது…” என்று மிகவும் விசுவாசமான தொனியில் சொல்லி நிறுத்தினான்.

பாபியின் முகத்தில் இருந்த துக்கம் மறைந்து, ஒரு பெரிய கேள்விக்குறி அவனது கண்களில் குடியேறியது. கையில் இருந்த மதுக் கோப்பையை மேஜை மீது ‘டேங்’ என்ற சத்தத்துடன் வைத்தவன், பைரவனை ஒரு விசித்திரமான பார்வையோடு பார்த்தான்.

“என்னடா சொல்ற? ரோலக்ஸ் ஊர்ல இல்லையா? தர்மா செத்த விஷயமே அவனுக்குத் தெரியாதா? இங்க என் தம்பியோட சடலம் விழுந்து கிடக்கு, இந்த ஒட்டுமொத்தத் துறைமுகமே கொதிச்சுப் போயிருக்கு… ஆனா என் ராஜ்ஜியத்தோட தளபதியான ரோலக்ஸ் இங்க இல்லன்னு சாதாரணமா சொல்ற? அவன் அப்படி எங்கதான் போனான்? எனக்குத் தெரியாம அவனுக்கு என்னடா வேலை?” என்று பாபி அதட்டலான குரலில் கேட்டான்.

பைரவன் தன் கைகளைக் கட்டிக்கொண்டு, தலையைக் குனிந்தபடி, “தலைவா… ரோலக்ஸுக்குக் கல்யாணம் ஆயிடுச்சு!” என்றான் 

“என்ன…!!!”

பாபி கேட்ட அந்த ஒற்றை வார்த்தை அந்தப் பெரிய அறையின் சுவர்களில் முட்டி மோதி எதிரொலித்தது. அவனுக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. கண்கள் அகல விரிய, வாயடைத்துப் போய் பைரவனையே வெறித்துப் பார்த்தான். உலகத்தையே நடுங்க வைக்கும், ரத்த வெறி பிடித்த, எந்த ஒரு பெண்ணின் மீதும் ஆசையோ பாசமோ காட்டாத அந்த இரும்பு மனிதன் ரோலக்ஸுக்குக் கல்யாணமா? அதுவும் இந்த இக்கட்டான சூழ்நிலையிலா? பாபியின் மூளைக்கு இது எட்டவே இல்லை.

“ஆமாம் தலைவா… நீங்க கேக்குறது நிஜம்தான்,” என்று பைரவன் கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினான். “அன்னைக்கு… உங்க முன்னாடியே வந்து உங்க அதிகாரத்தையே எதிர்த்து, உங்களை மிரட்டிப் பேசினானே அந்த வீரமாலு (சந்துருவின் தந்தை)… அவனைக் கொடூரமா கொலை செஞ்ச நம்ம ரோலக்ஸ், அதுக்கப்புறம் போலீஸ் குடைய ஆரம்பிச்சதால, நீங்க சொன்னது போல சட்டம் நம்ம பக்கம் வர்ற வரைக்கும் ரோலக்ஸ் தலைமறைவா இருக்க வேண்டியதாயிடுச்சு.”

பாபி மெல்லத் தலையசைத்தான். “ஆமாம்… நான்தானே அவனைத் தனிமையில ஒரு பழைய துறைமுகம் பக்கம் பதுங்கியிருக்கச் சொன்னேன். அதுக்கும் இந்தக் கல்யாணத்துக்கும் என்னடா சம்பந்தம்?” என்று கேட்டான்.

பைரவன் தன் முகத்தில் ஒரு சோகமான புன்னகையை வரவழைத்துக் கொண்டு தொடர்ந்தான். “அங்கதான் தலைவா விதியே விளையாடிடுச்சு. ரோலக்ஸ் அங்கே தனியா, யாருமில்லாம பதுங்கியிருந்த அந்த நாட்கள்ல, அவனோட சிறுவயது காதலியான மயூராவுக்கு மட்டும் அவன் இருக்குற இடம் தெரிஞ்சிருக்கு. அவங்க ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்தே உருகி உருகிக் காதலிச்சவங்க. ரோலக்ஸ் தலைமறைவா இருந்தப்போ, அவனுக்கு யாரும்மா சாப்பாடு கொடுக்கிறது? அந்த மயூராதான் யாருக்கும் தெரியாம, நள்ளிரவு நேரத்துல அந்தப் பாழடைந்த இடத்துக்கு போய், அவனுக்குச் சாப்பாடு கொடுத்து, அவனை பார்த்துக்கிட்டா. அவங்க ரெண்டு பேருக்கும் இடையில அந்தத் தனிமையில காதல் இன்னும் பலமாகிடுச்சு.”

பாபி எதையும் பேசாமல் அமைதியாகக் கேட்கத் தொடங்கினான். அவனது துக்கத்தின் வேகம் சற்றே குறைந்து, இந்தக் கதையின் மீது அவனது கவனம் திரும்பியது.

“ஆனா சில நாட்களுக்கு முன்னாடி, அந்தப் பொண்ணோட வீட்ல அவளோட சம்மதம் இல்லாம வேற ஒரு பெரிய இடத்துல கல்யாணம் பேசி முடிச்சுட்டாங்க தலைவா. அவங்க வீட்ல பண்ணின வற்புறுத்தலையும் கொடுமையையும் தாங்க முடியாம, அந்த மயூரா அன்னைக்கு நள்ளிரவு வீட்டை விட்டு ஓடி நேரா நம்ம ரோலக்ஸ் இருக்குற இடத்துக்கே வந்துட்டா. ‘என்னை நீங்க கல்யாணம் பண்ணிக்கலைனா நான் செத்துடுவேன்’னு சொல்லி அழுது அடம் பிடிச்சா. ரோலக்ஸுக்கும் வேற வழி தெரியல. தன் உயிர் மேல் ஆசை வச்சிருக்கிற பெண்ணை அவனால கைவிட முடியல. அவனோட சூழ்நிலையும் அப்படி…”

பைரவன் ஒரு பெருமூச்சை விட்டுவிட்டுப் பாபியின் கண்களைப் பார்த்தான். “அதனாலதான் தலைவா, அன்னைக்கு ராத்திரி யாருக்கும் தெரியாம, ரொம்ப அவசர அவசரமா ரோலக்ஸ் அந்த மயூராவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டான். அவளோட கழுத்துல தாலி கட்டிட்டான். கல்யாணம் முடிஞ்ச அடுத்த அஞ்சாவது நிமிஷமே, அந்தப் பொண்ணோட குடும்பத்தாரும் அவங்க ஆட்களும் இவங்களைத் தேடி வர ஆரம்பிச்சதால, அவங்க கையை விட்டுத் தப்பிக்கிறதுக்காக ரோலக்ஸ் அவளைக் கூட்டிக்கிட்டு இந்த ஊரை விட்டே தூரமா ஓடிட்டான். அவசரத்துல உங்ககிட்ட கூட அவனால சொல்ல முடியல தலைவா. இதுதான் நிஜம்.

அவனுக்கு இங்க நம்ம தர்மாவுக்கு இப்படி ஒரு நிலைமை நடந்ததே தெரியாது. தெரிஞ்சிருந்தா அவன் கண்டிப்பா ஓடி வந்திருப்பான்,” என்று பைரவன் தன் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு, ஒரு முழுமையான நாவலைப் போலக் கதையைக் கூறி முடித்தான்.

பாபி அந்த வார்த்தைகளைக் கேட்டு மெதுவாகத் தன் சோபாவில் போய் அமர்ந்தான். அவனது மனதில் இருந்த சந்தேகம் ஓரளவிற்குக் குறைந்தது. ரோலக்ஸ் போன்ற ஒரு அசுரன் காதலுக்காக ஊரை விட்டு ஓடியிருக்கிறான் என்பதை அவனால் முழுமையாக ஜீரணிக்க முடியாவிட்டாலும், பைரவன் சொன்ன அந்த வீரமாலு கொலையும் தலைமறைவு என்ற காரணங்கள் அவனுக்குப் பொருத்தமாகப் பட்டன.

“காதல்… கல்யாணம்…!” பாபி கசப்புடன் சிரித்தான். “தன் தம்பி மாதிரி இருக்குற தர்மா இங்க பிணமாகிக் கிடக்கும்போது, அவன் ஒரு பொண்ணோட கையைப் பிடிச்சுட்டு ஊர் சுத்தப் போயிருக்கான்! இருந்தாலும்… ரோலக்ஸ் மேல எனக்குக் கோபம் வரல பைரவா. அவனுக்கும் ஒரு வாழ்க்கை இருக்குல்ல… ஆனா, இப்போ எனக்கு அவனோட பலம் தேவைப்படுதே! தர்மாவைக் கொன்ன அந்த நாய் இன்னும் இந்த ஊர்லதான் சுத்திக்கிட்டு இருக்கான். அவனைக் கண்டுபிடிக்க ரோலக்ஸால மட்டும்தான் முடியும்.”

பைரவன் உள்ளுக்குள் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். பாபி தற்போதைக்குத் தன் பொய்க் கதையை நம்பிவிட்டான் என்பதும், ரோலக்ஸ் மீது அவனுக்கு எந்தச் சந்தேகமும் வரவில்லை என்பதும் அவனுக்குப் புரிந்தது.

பாபி தன் கையில் இருந்த துப்பாக்கியை மேஜை மீது வைத்துவிட்டுப் பைரவனைப் பார்த்தான். “சரி… கல்யாணம் பண்ணிட்டுப் போனவன் அப்படியே போயிட முடியாது. இப்போ அவனுக்குப் பொண்டாட்டி முக்கியம்.. , இந்த சாம்ராஜ்யம் முக்கியம்… பாபி, மெதுவாகத் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். 

அவனது மூளை, தம்பியாகக் கருதிய தர்மாவின் மரணத்தில் இருந்த துக்கத்திற்கும், தன் வலது கரமாக விளங்கும் ரோலக்ஸின் இந்தத் திடீர் மாற்றத்திற்கும் இடையே ஒரு தார்மீகப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது. பாபி சில நிமிடங்கள் அமைதியாக இருந்துவிட்டு, ரோலக்ஸின் சூழ்நிலையைக் கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பார்த்தான்.

‘அந்தப் பெண்ணிற்காகத் தானே இத்தனை காலமா அந்த ரோலக்ஸ் வாழ்ந்து கொண்டிருக்கிறான்? இந்த ரத்த பூமியிலும், உலகத்தையே மிரட்டும் அந்த அசுரனுக்குள்ளும் மயூரா என்ற ஒரு பெண்ணுக்காக மட்டும்தானே ஈரமான இதயம் ஒன்று துடித்துக் கொண்டிருக்கிறது?’ என்று பாபி தனக்குள் நினைத்துக் கொண்டான். அவனது மனதில் இருந்த ஆக்ரோஷம் சற்றே தணிந்து, ஒருவிதமான முதிர்ச்சியான அமைதி குடியேறியது.

மெதுவாகப் பைரவனின் பக்கம் மீண்டும் திரும்பிப் பார்த்தான் பாபி. அவனது கண்களில் இருந்த அந்த ரத்த வெறி இப்போதைக்கு மறைந்திருந்தது. “சரி பைரவா… நீ சொல்றதும் ஒரு வகையில நியாயம்தான். ஆனா… இப்போ அவங்க ரெண்டு பேரும் எங்க இருக்காங்க? எந்த ஊர்ல பதுங்கியிருக்காங்கன்னு உனக்குத் தெரியுமா?” என்று மெல்லிய குரலில் கேட்டான்.

பைரவன் தன் முகத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல், மிகவும் யதார்த்தமாகத் தன் தோள்களைக் குலுக்கினான். “இல்ல, தெரியல தலைவா… இப்போதைக்கு அவங்க ரெண்டு பேரும் இந்த ஊரை விட்டு, இந்த மாநிலத்தை விட்டே வெளியே எங்கேயோ போயிட்டாங்க. எனக்கோ இல்ல நம்ம ஆட்களுக்கோ போன் பண்ணினா போலீஸ் Trace  பண்ணிடுவாங்கன்னு ரொம்ப ஜாக்கிரதையா இருக்கான். இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு, இங்க இருக்கிற சூழ்நிலை எல்லாம் முழுசாத் தணிஞ்சதுக்கு அப்புறம்தான் ஊருக்கு வரதா என்கிட்ட கடைசியாப் பேசும்போது சொல்லி இருந்தான் தலைவா.

மயூரா அப்பாவோட கண்ணுல படாம இருக்குறதுக்காகவும், ரோல்க்ஸ்க்கு எந்தப் பிரச்சனையும் வராம இருக்குறதுக்காகவும் தான் இவங்க இந்த மாதிரி ஒரு ரகசிய வழியைப் பயன்படுத்தியிருக்காங்க,” என்று பைரவன் தன் பொய்க் கோட்டையை இன்னும் பலமாகத் தளமிட்டுக் கட்டினான்.

பாபி சோபாவின் கைப் பிடியை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு, ஆழமாக ஒரு பெருமூச்சை விட்டான். “சரி… அவங்க எடுத்த முடிவும் ஒரு வகையில நல்லது தான் பைரவா. கொஞ்ச நாள் அவங்க இந்த விசாகப்பட்டினம் ஊரு பக்கம் வராம இருக்குறதே எல்லாருக்கும் நல்லது. அந்த மயூராவோட அப்பா சாதாரண ஆள் கிடையாது. அவனே ஒரு பெரிய போலீஸ்காரனா இருக்குற நாள்ல, தன் பொண்ணைக் கடத்திட்டுப் போயிட்டான்னு சொல்லி நம்ம சாம்ராஜ்யத்தையே நோண்ட ஆரம்பிச்சிடுவான். சட்டத்தைக் கையில வச்சுக்கிட்டு, ரோலக்ஸை Encounter பண்றதுக்கோ இல்ல அவனுக்கு ஏதாவது ஒரு பெரிய ஆபத்தை உண்டாக்குறதுக்கோ நிறைய வாய்ப்பு இருக்கு. அதைவிட அவன் அந்தப் பொண்ணோட எங்கையாவது அமைதியா இருக்குறதுதான் நல்லது,” என்று பாபி தனக்குள்ளேயே ஒரு சமாதானத்தை உருவாக்கிக் கொண்டான்.

பைரவன் கைகளைக் கட்டிக் கொண்டு, “ஆமா தலைவா… நீங்க சொல்றது நூறு சதவீதம் உண்மை. அதான் அவங்க ரெண்டு பேரும் யாருடைய கண்ணுலயும் படாம, ரொம்ப மறைவா இருக்கணும்னுதான் இந்த ஊரை விட்டே வெளியே போயிட்டாங்க…” என்று ஆமோதித்தான்.

“ம்ம்ம்… சரி…” பாபி தன் கையில் இருந்த காலி மதுக் கோப்பையை மேஜை மீது வைத்தான். “கொஞ்ச நாள் ஆகட்டும்… அங்கே நிலைமை எல்லாம் சரியாகட்டும், அதுக்கப்புறம் அவன் தன் பொண்டாட்டியைக் கூட்டிக்கிட்டு இங்க வரட்டும். நான் அவனுக்குப் பாதுகாப்பா இருக்கேன்.

ஆனா பைரவா… எனக்கு இன்னொரு முக்கியமான சந்தேகம். இங்க நம்ம தர்மா இறந்த விஷயம்… இது அந்த ரோலக்ஸுக்குத் தெரியுமா? அவனுக்கு இந்தத் தகவல் போயிருக்குமா?” என்று பாபி கூர்மையாகக் கேட்டான்ான்.

பைரவன் சற்றும் பதற்றமடையாமல், “இல்ல தலைவா… கண்டிப்பா அவனுக்குத் தெரியாது. தர்மா இறந்ததா நமக்குத் தகவல் கிடைச்ச அந்த நள்ளிரவு நேரத்துக்கு முன்னாடியே, ரோலக்ஸ் அந்தப் பொண்ணைக் கூட்டிக்கிட்டு இந்த விசாகப்பட்டின எல்லையைத் தாண்டிக் கிளம்பிட்டான். அவனோட போன், சிம் கார்டு எல்லாவற்றையும் அவன் தூக்கிப் போட்டுட்டான். அதனால அவனுக்கு இந்த உலகத்துல என்ன நடக்குதுன்னே தெரியாது. அவனோட உலகம் இப்போ அந்த மயூரா மட்டும்தான் தலைவா,” என்றான்.

பாபி சில நொடிகள் யோசித்துவிட்டு, பைரவனின் தோளில் தன் கனத்த கையை வைத்தான். அவனது முகத்தில் ஒரு அக்கறை தெரிந்தது. “சரி பைரவா… அப்போ அவனுக்கு இந்த விஷயம் இப்போதைக்குத் தெரியவே வேண்டாம். அவன் எங்க இருந்தாலும், எப்படியோ வெளியே இருந்தாலும்… உன்னை அவன் ஏதோ ஒரு ரகசிய வழியில தொடர்பு கொள்ள கண்டிப்பா வாய்ப்பு இருக்கு. அப்படி அவன் உன்கிட்ட பேசினா… இங்க தர்மா செத்துட்டான் அப்படின்ற இந்தத் துக்கமான விஷயம் எதையும் அவன்கிட்ட சொல்லிடாதே!” என்றான் பாபி.

பைரவன் புரியாமல் பாபியைப் பார்த்தான். “ஏன் தலைவா சொல்றீங்க?”

பாபி ஒரு கசப்பான சிரிப்பை உதிர்த்தான். “ஏன்னா… எனக்கு ரோலக்ஸோட குணம் நல்லா தெரியும் பைரவா. தர்மா அவனுக்கு எவ்வளவு நெருக்கமானவன்னு அவனுக்குத் தெரியும். இங்க தர்மா கொடூரமா கொல்லப்பட்டு சடலமாகிக் கிடக்கிறான் அப்படின்ற விஷயம் மட்டும் ரோலக்ஸோட காதுக்குத் தெரிஞ்சா… அவன் அந்தப் பொண்ணையும், அவனோட காதலையும் அப்படியே அந்த இடத்துல விட்டுட்டு, என் தம்பியோட மரணத்துக்குப் பழி வாங்க உடனே இங்க ஓடி வந்திடுவான். அப்படி அவன் அவசரப்பட்டு இங்க வந்தா, அந்தப் போலீஸ்காரங்க அவனைக் குறி வச்சுத் தூக்கிடுவாங்க. அப்பறம் அவனோட உயிருக்கே அது மாபெரும் ஆபத்தாய் முடிஞ்சுடும். என் தம்பி தர்மாவைத்தான் நான் இழந்துட்டேன்… என் சாம்ராஜ்யத்தோட தூணான ரோலக்ஸையும் என்னால இழக்க முடியாது. அதனால அவன் வராம இருக்குறதே நல்லது,” என்று பாபி தன் பாசத்தை வாரி இறைத்தான்.

பாபி இப்படி உருகி உருகிப் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த பைரவனுக்கோ… உள்ளுக்குள் சிரிப்பதா அல்லது அழுவதா என்றே தெரியவில்லை! அவனது நெஞ்சு துடித்தது, மூளை குழம்பியது.

‘பாபி… நீ எவனுக்காக உருகி, எவனோட உயிருக்கு ஆபத்து வந்துடும்னு பயந்து, உண்மையை மறைக்கச் சொல்றியோ… அதே ரோலக்ஸ் தான்டா உன் தம்பி தர்மாவை அந்தப் பாழடைந்த மாளிகையில வச்சு, ஒரு மிருகத்தைப் போல அடிச்சு, அவனோட எலும்புகளை எல்லாம் நொறுக்கிக் கொலை பண்ணுனதே! நீ யாரை உன்னோட விசுவாசினு நினைச்சுப் பாதுகாக்குறாயோ… அவன் தான் உன்னோட ஒட்டுமொத்தப் பேரழிவிற்கும் காரணமானவன்!’ என்று பைரவன் தன் உள்மனதிற்குள் நினைத்துக் கொண்டான். அவனது உதடுகளில் ஒரு கசப்பான புன்னகை வந்து மறைந்தது. பாபியின் இந்த அதீத பாசமும், அறியாமையும் அவனுக்கு ஒருபுறம் வேடிக்கையாக இருந்தாலும், மறுபுறம் இந்தத் துரோக நாடகம் எந்த நிமிடத்தில் அம்பலமாகுமோ என்ற பயமும் அவனுக்குள் இருந்தது.

“சரிங்க தலைவா… நீங்க சொன்னபடியே நான் நடந்துக்கிறேன். ரோலக்ஸ் என்கிட்ட பேசினாலும், நான் இங்க இருக்குற எந்தப் பிரச்சினையையும் அவன்கிட்ட சொல்ல மாட்டேன். அவனோட உயிருக்குத் தான் என்னோட முதல் பாதுகாப்பு,” என்று பைரவன் தன் கைகளைக் கூப்பிக் கூறினான்.

பாபி சோபாவிலிருந்து மெதுவாக எழுந்து, மேஜையின் கீழே இருந்த ஒரு ரகசிய இரும்புப் பெட்டியைத் திறந்தான்.

அங்கிருந்து புதிய ஐநூறு ரூபாய் நோட்டுகள் அடங்கிய, ரப்பர் பேண்ட் போடப்பட்ட தடிமனான சில பணக்கட்டுகளைத் தன் கைகளில் எடுத்த பாபி நேராகப் பைரவனின் அருகில் வந்து, அந்தப் பணக்கட்டுகளை அவனது கைகளில் பலமாகத் திணித்தான்.

“சரி பைரவா… இந்தா, இந்த பணத்தை முதல்ல புடி,” என்று பாபி அந்தப் பணத்தை அவனிடம் கொடுத்தான். அவனது குரலில் தர்மாவை இழந்த துக்கத்தின் வடுக்கள் இருந்தாலும், ரோலக்ஸ் மீது அவனுக்குள் இருந்த அந்த மாபெரும் விசுவாசமும் நம்பிக்கையும் அவனது வார்த்தைகளில் அப்பட்டமாகத் தெரிந்தன.

பைரவன் அந்தப் பணக்கட்டுகளைத் தன் கைகளில் வாங்கியபடி, புரியாமல் பாபியின் முகத்தைப் பார்த்தான். “தலைவா… இது எதுக்கு?” என்று மெல்லிய குரலில் கேட்டான்.

பாபி பைரவனின் தோளைப் பற்றிக் கொண்டு, “ரோலக்ஸ் புதுசா ஒரு பொண்ணோட கழுத்துல தாலி கட்டியிருக்கான். இப்போதைக்கு அவங்க ரெண்டு பேரும் எந்த ஊர்ல, எந்த நிலைமையில இருக்காங்கன்னு தெரியல. புதுசா ஒரு வாழ்க்கை வரும்போது அவனுக்குச் செலவுகளுக்கு நிறையப் பணம் தேவைப்படும் பைரவா. அவன் உன்னைத் தொடர்பு கொள்ளும்போது, இது என்னோட அன்பளிப்புன்னு சொல்லி அவன்கிட்ட இதைக் கொடு. அவனோட செலவுக்கு இது கண்டிப்பா இப்போதைக்குத் தேவைப்படும். அவசரப்பட்டு அவங்களை இப்போதே இந்த விசாகப்பட்டினத்துக்கு வரச் சொல்ல வேண்டாம். கொஞ்ச நாள் கழிச்சே அவன் தன் பொண்டாட்டியோட இங்க திரும்பட்டும். அதுவரைக்கும் அவங்க நிம்மதியா இருக்கட்டும்,” என்றான் பாபி.

பாபி ஒரு ஆழமான பெருமூச்சை விட்டுவிட்டு, மீண்டும் பைரவனின் முகத்தை நேருக்கு நேர் பார்த்தான். அவனது கண்கள் இந்த முறை மிகவும் தீவிரமாக மாறின. “பைரவா… தர்மா இறந்தது என் உடம்போட ஒரு பக்கத்தையே வெட்டி எறிஞ்ச மாதிரி இருக்குடா. இந்த சாம்ராஜ்யத்தோட ஒட்டுமொத்த நெட்வொர்க்கையும், அந்த கறுப்புச் சந்தை வர்த்தகத்தையும் ஒற்றைக் கையால நிர்வகிச்சவன் நம்ம தர்மா. இப்போ அவன் இல்லன்ற அந்தப் பெரிய இடத்தை யாராலயும் அத்தனை சாதாரணமா நிரப்பிட முடியாது. ஆனா… எனக்கு ஒரே ஒருத்தன் மேல மட்டும்தான் முழு நம்பிக்கையிருக்கு. இனி என் தம்பியா, தர்மா இருந்த அந்த உன்னதமான இடத்துல… இனிமேல் நம்ம ரோலக்ஸ் தான் உட்காரப் போறான்! அவன்தான் அந்தச் சிம்மாசனத்துக்கு எல்லா வகையிலயும் சரியான ஆளு.”

பாபியின் வார்த்தைகள் அந்தப் பெரிய அறையின் சுவர்களில் மோதி எதிரொலித்தன. “எனக்கு எல்லாமே இனி ரோலக்ஸ்தான் பைரவா… அவன்தான் என் தம்பி, அவன்தான் என் தளபதி, அவன்தான் என்னோட ஒட்டுமொத்த ராஜ்ஜியமும்! அவன் திரும்பி வந்ததும் இந்த விசாகப்பட்டினத்தோட முக்கால்வாசி அதிகாரத்தை நான் அவன் கைகள்லயே ஒப்படைச்சிடப் போறேன். இனிமேல் ரோலக்ஸுக்குத்தான் சொந்தம். இந்த விஷயத்தை நீ அவன்கிட்ட கண்டிப்பா சொல்லணும்,” என்று பாபி தன் மனதில் இருந்த மாபெரும் திட்டத்தைக் கொட்டித் தீர்த்தான்.

‘விதியே… நீ எவ்வளவு பெரிய சூதாட்டக்காரன்!’ என்று பைரவன் தனக்குள்ளேயே நினைத்துக் கொண்டான்.

இவ்ளோ விசுவாசமாக இருந்த பைரவன் ஏன் ரோலக்ஸ்க்கு எதிரி ஆக்கினான்?

வேட்டை தொடரும் ..⚓

❤️ Loading reactions...
2 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!