Rolex 33

33

அன்று இரவு அந்தப் பழைய வீட்டின் உள்ளே நிலவொளி ஜன்னல் வழியாக ஊடுருவி, தரையில் ஒரு நீண்ட கோடாகப் பதிந்திருந்தது. பைரவனும் மயூராவும் தீவிரமான விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களின் குரல்கள் அந்த அறைக்குள் மெல்லிய ரீங்காரமாய் ஒலித்தன.

ஆனால், ரோலக்ஸ் அந்தப் பேச்சில் கலக்கவில்லை. அவன் ஜன்னல் அருகில் சென்று நின்றான். அவனது காதுகளுக்கு எந்த ஒலியும் கேட்காது என்றாலும், அந்தச் சூழலின் அதிர்வுகளை அவன் தன் உடல் முழுவதும் உணர்ந்தான். பைரவனும் மயூராவும் பேசும் வார்த்தைகள் அவனுக்குத் தேவையில்லை, அவர்களின் முகபாவனைகளை வைத்தே அவர்கள் எதைப்பற்றிப் பேசுகிறார்கள் என்பதை அவன் தன் மனத்திரையில் ஓடவிட்டுக் கொண்டிருந்தான். தான் பிடிவாதமாக இருக்க வேண்டியதில்லை, இவர்களுக்காக, இந்தச் சூழலுக்காகத் தான் மாற வேண்டும் என்று எண்ணியபடி, ஜன்னல் வழியாகப் பௌர்ணமி நிலவை வெறித்துப் பார்த்தான்.

அவன் கண்கள் நிலவில் இருந்தாலும், அவனது ஆறாவது அறிவு ஏதோ ஒரு ஆபத்தை முன்னரே எச்சரித்தது. திடீரென, அந்த ஜன்னலுக்கு வெளியே இருந்த அடர்ந்த செடி புதர்களில் ஒரு லேசான அசைவு. காற்று வீசாத அந்த அமைதியான இரவில், அந்தச் செடிகள் மட்டும் ஏதோ ஒரு மர்மமான காரணத்திற்காக அசைந்தன. ரோலக்ஸின் இமைகள் மின்னல் வேகத்தில் துடித்தன. அவன் கண்கள் நிலவை விட்டுவிட்டு, அந்தச் செடி புதர்களை நோக்கி நிலை குத்தின.

ஏதோ ஒன்று சரியாக இல்லை. அந்த அசைவுகளில் ஒரு செயற்கையான தன்மை இருந்தது. ரோலக்ஸ் சட்டெனத் திரும்பினான். அவனது முகம் ஒரு நொடியில் மாறியது. ஒரு வேட்டைக்காரனின் கழுகுக் கண்கள் அந்த அறைக்குள் இருந்த பைரவனை ஊடுருவின.

“நீ எங்க இருந்து வர இப்ப?” என்று தன் கைகளால் வேகமான சைகை மொழியில் கேட்டான் ரோலக்ஸ். அவனது உடல்மொழியில் இருந்த பதற்றமும், அவசரமும் பைரவனை ஒரு கணம் உறைந்து போக வைக்கவும் 

பைரவன், ரோலக்ஸின் சைகையைப் புரிந்துகொண்டு, “ஹார்பர்ல பாபி கோடையில் இருந்து தான் வரேன். ஏன், என்ன ஆச்சு?” என்று அதே வேகத்தில் கத்தினான்.

ரோலக்ஸ் சைகையிலேயே, “எந்த வழியா வந்த? எப்படி வந்த?” என்று மீண்டும் துருவினான். பைரவன் தான் வந்த வழியையும், யாரும் பார்க்கக்கூடாது என்பதற்காக மிக ரகசியமாகத் தான் வந்த பாதையையும் விளக்கினான்.

அதைக்கேட்ட ரோலக்ஸின் முகம் ரத்தமில்லாமல் வெளுத்தது. அவன் உடனே மயூராவின் பக்கம் திரும்பி, அவள் தலையில் ஒரு தட்டு தட்டி, கீழே இருந்த கட்டிலுக்கு அடியில் ஒளியுமாறு சைகை செய்தான். மயூரா ஒன்றும் புரியாமல் பயத்துடன் கட்டிலுக்கு அடியில் புகுந்தாள். அடுத்த நொடி, ரோலக்ஸ் பாய்ந்து சென்று பைரவனின் இடுப்பில் இருந்த துப்பாக்கியை மின்னல் வேகத்தில் உருவினான்.

இருவரும் கண்களை நேருக்கு நேர் சந்தித்தனர். அந்தப் பார்வையில் இருந்த தீவிரத்தை உணர்ந்த பைரவன், தான் கொண்டு வந்திருந்த மற்றொரு துப்பாக்கியை தன் கால் உறையிலிருந்து வெளியே எடுத்தான்.

“உன்னைத் தொடர்ந்து யாரோ வந்திருக்காங்க. இப்போ சுற்றிலும் நம்ம எதிரிங்க. யாரு, என்னன்னு யோசிக்க நேரமில்லை, சுடு!” என ரோலக்ஸ் சைகையில் சொன்ன அடுத்த நொடி, அந்த அமைதியான இரவு சிதறியது.

அந்தச் செடி புதர்களில் மறைந்திருந்த எதிரிகள், தங்களுக்குள் ஒரு சங்கேத ஒலியை எழுப்ப, துப்பாக்கிச் சூடு தொடங்கியது. ‘தடதடதட’ என ரவைகள் சுவரைத் துளைத்து அறைக்குள் பாய்ந்தன. ரோலக்ஸ் தரைதட்ட விழுந்து, ஒரு மேசையின் பின்னால் மறைந்தான். அவனுக்குக் கேட்கும் திறன் இல்லை, ஆனால் அவனது பார்வை ஒரு ரேடார் போலச் செயல்பட்டது.

எதிரிகளின் துப்பாக்கி முனையில் இருந்து வரும் அந்தச் சிறிய நெருப்புப் பொறி, காற்றைக் கிழித்து வரும் தோட்டாவின் வேகம், சுவரில் பட்டுத் தெறிக்கும் சிமெண்ட் துகள்கள், இவை அனைத்தையும் அவன் கண்கள் ஒரு நிழற்படக் கருவியாகப் படம் பிடித்தன.

ரோலக்ஸ் எழுந்து நின்று சுடவில்லை. அவன் தரையோடு தரையாக நகர்ந்தான். அவனது நகர்வுகள் ஒரு பூனையின் அமைதியையும், ஒரு புலியின் வேகத்தையும் கொண்டிருந்தன. பைரவன் இடது பக்கம் இருந்து சுட, ரோலக்ஸ் வலது புறத்தில் இருந்த ஒரு தூணின் மறைவில் நின்றான்.

ஒரு எதிரி புதருக்குப் பின்னால் இருந்து எட்டிப் பார்த்துச் சுட்டான். ரோலக்ஸ்க்கு சத்தம் கேட்கவில்லை என்றாலும், அந்த எதிரி தன் துப்பாக்கியை நகர்த்திய அந்த நுணுக்கமான அசைவை வைத்தே, அவன் சுடப்போகும் திசையை யூகித்தான். அந்த வினாடி, ரோலக்ஸ் தன் தலையைச் சாய்த்து ரவையிலிருந்து தப்பித்து, அப்படியே திரும்பிய வேகத்தில் சுட்டான். குண்டு நேராக எதிரியின் நெற்றியில் பாய்ந்தது. அவன் சுருண்டு விழுந்தான்.

பதினைந்துக்கும் மேற்பட்ட எதிரிகள். அந்த அறைக்குள் இருந்த மரச்சாமான்கள் எல்லாம் சுக்குநூறாகிக் கொண்டிருந்தன. ரோலக்ஸின் காதுகளுக்கு அந்தத் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்கவில்லை. ஆனால், அறையின் அதிர்வுகளை அவன் தன் பாதங்கள் மூலம் உணர்ந்தான். தரை அதிரும் ஒவ்வொரு முறைக்கும் ஒரு எதிரி அங்கு நகர்கிறான் என்று அர்த்தம்.

திடீரென, ஒரு எதிரி பின்புறம் இருந்து தாக்கும் நோக்கத்தில் மெதுவாக நகர்ந்து வந்தான். ரோலக்ஸ் அதை அவன் நிழல் தரையில் விழுவதைக் கண்டு கண்டுகொண்டான். துப்பாக்கியை மறைத்துவிட்டு, மின்னல் வேகத்தில் திரும்பி, அந்த எதிரியின் கையைத் திருகி, அதே துப்பாக்கியால் அவனைச் சுட்டான்.

மற்றொருவன் ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே குதித்தான். பைரவன் அவனைத் தாக்கும் முன்னே, ரோலக்ஸ் தன் காலால் ஒரு மேசையைத் தட்டி அவனைத் தடுத்து, தன் துப்பாக்கியால் அவனது மார்பைப் பார்த்துக் குறி வைத்தான்.

‘டமார்’ என்ற சத்தம் அடுத்த நிமிடம் அவன் சுருண்டு விழுந்தான்.

இது ஒரு போர். ரோலக்ஸின் கண்கள் ஒருபோதும் ஒரே இடத்தில் நிலைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் யாராவது அசைந்தால், அந்த அசைவை அவன் தன் மூளையில் கணக்கிட்டான். யாருமே அவனை ஏமாற்ற முடியவில்லை. அவன் காது கேளாதவன் என்பதால், எதிரிகளின் சத்தம் அவனைத் திசை திருப்பவில்லை. அதுவே அவனுக்கு ஒரு மிகப்பெரிய பலமாக இருந்தது. எதிரிகள் ஒருவரை ஒருவர் சங்கேத சத்தங்கள் மூலம் தொடர்பு கொண்டாலும், ரோலக்ஸ் அவர்களின் உடல் மொழியையும், துப்பாக்கி முனைகளின் அசைவையும் வைத்தே அனைவரையும் வீழ்த்திக் கொண்டிருந்தான்.

பைரவன், ரோலக்ஸின் இந்த அசாத்தியமான வேட்டையைப் பார்த்து வியந்து நின்றான். ரோலக்ஸ் ஒரு இயந்திரம் போலச் செயல்பட்டான். கடைசி மூன்று எதிரிகள், தப்பிவிடலாம் என்று கருதி பின்னோக்கி ஓட முயன்றனர். ரோலக்ஸ், எந்தத் தயக்கமும் இன்றி, தன் துப்பாக்கியை உயர்த்தி, மிகத் துல்லியமாக மூன்று முறை சுட்டான். மூன்று பேரும் கீழே விழுந்தனர்.

அறை மீண்டும் அமைதியானது. ஆனால், அந்த அமைதி ரத்தத்தின் வாடையாலும், துப்பாக்கித் தூளின் நெடியாலும் நிறைந்து இருந்தது.

ரோலக்ஸ் மெதுவாக எழுந்து நின்றான். அவனது சட்டையில் ரத்தக்கறை படிந்திருந்தது. அவன் மீண்டும் அந்த ஜன்னல் அருகே சென்று நின்றான். இப்போது நிலவு இல்லை, மேகங்கள் அதை மறைத்திருந்தன. அவன் முகத்தில் எந்தப் பதற்றமும் இல்லை. பைரவன், சுருண்டு கிடந்த எதிரிகளின் உடல்களைப் பார்த்தபடியே, “இவர்கள் யார்? ஏன் வந்தார்கள்?” என்று சைகையில் கேட்டான்.

ரோலக்ஸ் அந்த ஜன்னல் வழியாக வெளி உலகத்தைப் பார்த்தான். அவனது கண்கள் ஏதோ ஒன்றை ஆராய்ந்தன. அவன் கை சைகையில் சொன்னது, “இவர்கள் வெறும் ஆரம்பம்தான். போர் இன்னும் முடியவில்லை. இவர்களுக்குப் பின்னால் இன்னும் பெரிய சக்திகள் இருக்கின்றன.”

பைரவன் மௌனமானான். கட்டிலுக்கு அடியில் இருந்த மயூரா மெதுவாக வெளியே வந்தாள். அந்த அறைக்குள் நிலவிய அந்தப் பதற்றமான சூழலில், ரோலக்ஸ் மட்டும் அந்த நிலவை மீண்டும் ஒருமுறை பார்த்தான். அவனது பார்வையில் ஒரு தீர்க்கமான முடிவு இருந்தது, யாராக இருந்தாலும், எத்தகையத் தடையாகவும் இருந்தாலும், தன் இலக்கை அடைந்தே தீருவது என்பதுதான் அந்த முடிவு.

கையில் இருந்த துப்பாக்கியை இடுப்பில் சொருகிவிட்டு, ரோலக்ஸின் கண்கள் பைரவனைப் பார்த்தது. அவனது கைகள், “யார் இவங்க? ஏன் வந்தாங்க?” என்று சைகையில் பைரவனிடம் கேட்டன.

ஒரு பெருமூச்சை விட்ட பைரவன், சுருண்டு கிடந்த ஒருவனின் சட்டையைத் தூக்கிப் பார்த்தான். அவனின் முக ஜாடையை வைத்து ஒரு முடிவுக்கு வந்தவன், ரோலக்ஸிடம், “அனேகமாக இவங்க ஜெகாவோட ஆளுங்களா தான் இருப்பாங்க ரோலக்ஸ். வேற யாரும் இந்த அளவுக்கு நம்மள துரத்த மாட்டாங்க,” என்று சைகையில் விளக்கினான்.

ரோலக்ஸ் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல், மௌனமாக அந்த இருளான அறையில் நடந்து சென்று அந்த பழைய கட்டிலில் அமர்ந்தான். அவன் கண்களில் ஒருவித சோர்வு இருந்தாலும், மூளை மின்னல் வேகத்தில் அடுத்த கட்டத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தது. அவனது அமர்வைப் பார்த்த மயூராவின் கண்களில் பயமும், அதே சமயம் ரோலக்ஸ் மீதான எல்லையற்ற ஏக்கமும் கலந்திருந்தது.

“நான் எங்க போனாலும் எப்படியோ என்னைத் தேடித் தான் வர்றாங்க. இப்படி இருக்குறப்ப, நான் எங்க போய் நிம்மதியா வாழ்றது? அவங்ககிட்ட இருந்து மறைஞ்சு ஓடிக்கிட்டே இருக்கணுமா? நீங்க முன்னாடியே சொன்ன மாதிரி, எல்லாத்தையும் விட்டுட்டு எங்கயாவது போய் வாழணும்னு நினைச்சாலும், அது சாத்தியமில்லைன்னு புரியுது. ஓடிக்கிட்டே தான் இருக்கணும் போல இருக்கு.”

“இப்படியே போற வர்ற இடத்துல எல்லாம் இவங்க துரத்திட்டே தான் இருப்பாங்க. இதுதான் வாழ்க்கை. இதுக்குள்ளயேதான் நம்ம சுத்திட்டு இருக்கணும் போல,” என்று அவன் சொல்லும்போது, அவனது கண்களில் ஒருவிதமான கையறு நிலை தெரிந்தது.

மயூரா என்ன சொல்வது என்று தெரியாமல், உதடுகளைக் கடித்தபடி மௌனமாக அமர்ந்திருந்தாள். ரோலக்ஸ் குனிந்த தலையை நிமிர்த்தி அவளைப் பார்த்தான். தான் ஒரு ரவுடி, அடியாள் என்று தெரிந்துதான் அவள் தன்னை முழுமையாக நம்பி காதலித்தாள். தான் இப்போது எடுத்திருக்கும் இந்த முடிவுகள், அவளது வாழ்வை மேலும் சிக்கலாக்குகிறது என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். அவள் பயப்படுவதில் நியாயம் இருக்கிறது.

நடுக்கத்துடனிருந்த அவளது மெல்லிய விரல்களை, ரோலக்ஸ் தன் கரங்களால் மென்மையாகப் பற்றினான். அவளது கண்கள் கலங்கியிருந்தன. அவன் அவளைக் கண்களாலேயே கேட்டான், “என்ன பயமா?”

மயூரா தன் பயத்தை மறைக்க முயன்று, புன்னகைக்க முயற்சி செய்தாள். உடல் நடுங்கினாலும், அந்த நடுக்கத்தை அவனிடம் காட்டிக்கொள்ளாமல் அவனது கைகளைத் தன் இரு கரங்களால் இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள்.

“இது என்ன கேள்வி? எல்லாம் தெரிஞ்சு தானே நான் உங்க கூட வந்தேன்? அப்புறம் என்ன பயம் எனக்கு?” என்று அவள் சொன்னாலும், அவளது கண்கள் அவள் சொல்லும் பொய்க்குச் சாட்சி சொல்லிக் கொண்டிருந்தன.

ரோலக்ஸ் அவளது கைகளை மென்மையாக மேலே உயர்த்தி, அவளது தலைமுடியை வருடினான். ஒரு அடியாளாக உலகுக்குத் தெரிந்தாலும், மயூராவிடம் அவன் காட்டும் இந்த மென்மை முற்றிலும் வேறானது. அவன் மீண்டும் அவளது கண்களை உற்றுப் பார்த்தான். அந்தப் பார்வையில், “அப்புறம் ஏன் இந்த நடுக்கம்?” என்ற கேள்வி இருந்தது.

மயூரா அவனைப் பார்த்தபடி, “இது பயம் இல்ல ரோலக்ஸ். ஆனா, அடுத்து என்ன செய்யப் போகிறோம்னு தெரியல… எப்படி வாழ்க்கை நகரப்போகுதுன்னு தெரியல. அந்த ஒரு தயக்கம் தான், வேற ஒன்னும் இல்ல.”

ரோலக்ஸ் அவளது கைகளை மேலும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, அவளுக்குத் தன் பிடியின் மூலமாகத் தைரியத்தை ஊட்டினான். பின்பு அவன் சட்டெனத் திரும்பி, பைரவனிடம் தனது அடுத்த திட்டத்தைப் பேசத் தொடங்கினான்.

“நமக்கு எதிரி யாருன்னு நல்லாவே தெரியும். அதப் பார்த்து பயந்து ஓடினாலோ, ஒளிஞ்சுகிட்டு இருந்தாலோ, நாம பயந்துட்டே தான் இருக்கணும். ஆனா, அவனுக்கு நாமதான் அவனுடைய எதிரினு தெரியாத வரைக்கும், நாம அவனுக்கு முன்னாடியே இருந்தா என்ன? அது நமக்கான பாதுகாப்பு மட்டுமல்ல, அவனுடைய அடுத்தடுத்த நடவடிக்கைகளை நாம பக்கத்துல இருந்தே கவனிக்கலாம். அப்போ ஓடி ஒளிய வேண்டிய அவசியமே இருக்காது,” என்று அவன் சைகையில் வேகமாக விளக்கினான்.

பைரவனுக்கு ரோலக்ஸின் திட்டம் புரியவில்லை. “அதுக்கு என்ன பண்ணலாம்னு இருக்க ரோலக்ஸ்?” என்று குழப்பத்துடன் கேட்டான்.

“பாபி கூடவே இருக்கிறதுதான் நல்லது. வேற வழியே இல்லை.” என ரோலக்ஸ் சைகையில் சொன்னான்

“அப்போ அவன் கிட்டயே கையாள இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டயா?” என பைரவன் அதிர்ச்சியுடன் கேட்டான்

அவன் இப்படிக் கேட்டதும், மயூரா பிடிச்சுக்கொண்டிருந்த ரோலக்ஸின் கைகள் லேசாகத் தளர்ந்தன. அவனது பிடியில் ஒரு தயக்கம் தெரிந்தது. ஆனால், ரோலக்ஸ் மிகவும் நிதானமாக இருந்தான். அவன் அவளது கைகளை மென்மையாகத் தட்டிவிட்டு, மீண்டும் பைரவனின் கண்களைப் பார்த்தான். அவன் ‘இல்லை’ என்பது போலத் தலையை ஆட்டினான்.

“அப்போ எப்படி?” என்று பைரவன் புரியாமல் பார்த்தான்.

ரோலக்ஸ் தன் பேன்ட் பாக்கெட்டில் கைவிட்டு, ஏற்கனவே தான் வைத்திருந்த அந்த பேட்ஜை வெளியே எடுத்தான். அதைக் காட்டியபோது அவன் உதட்டில் ஒரு மர்மமான மெல்லிய சிரிப்பு அரும்பியது. அவன் உதடு மட்டும் அசைய, ஒரு வார்த்தையைச் சொன்னான்…

“கூலி.”

பைரவனுக்கு விஷயம் சட்டெனப் புரிந்தது, “கூலியா? அதாவது, இப்போ நமக்கு இருக்கிற ஒரே பாதுகாப்பு அதே ஹார்பர்ல கப்பல்ல இருந்து வர்ற ஸ்டாக்க எடுக்குற வேலை மட்டுமில்லாம, பாபியோட நடவடிக்கைகளையும் அவன் கூடவே இருந்து கவனிக்க, அந்த பழைய கூலி வேலையையே ஒரு மறைமுகப் பாதுகாப்பா பயன்படுத்திக்கலாம்னு சொல்றியா?”

ரோலக்ஸ் உறுதியாகத் தலையசைத்தான். அந்தப் பழைய கூலி வேலை, இப்போது அவர்களுக்கு ஒரு கவசமாக மாறப்போகிறது. எதிரியின் கூடாரத்திலேயே அமர்ந்து கொண்டு, அவனையே வேவு பார்க்கும் ரோலக்ஸின் இந்த மாஸ்டர் பிளான், பைரவனை வியக்க வைத்தது.

மென்மையாகச் சிரித்த ரோலக்ஸ்ன் முகம் இப்போது தெளிவாக இருந்தது. ஒரு வேட்டைக்காரன், தன் இரையைத் தேடித் துரத்துவதை விட, இரையே தேடி வரும் இடத்திற்குப் போய் அமர்ந்து கொள்வது எவ்வளவு புத்திசாலித்தனமானது என்பதை பைரவன் உணர்ந்துகொண்டான். ரோலக்ஸ் அவனிடம் கை கொடுத்தான். அந்தத் தற்காலிக அமைதி, அடுத்த பெரிய புயலுக்கான முன்னேற்பாடாக இருந்தது.

இனி ஓட்டம் இல்லை, இனி ஒளிதல் இல்லை, இனி இருப்பது நேருக்கு நேர் மோதல் மட்டுமே. அவர்களின் அடுத்த யுத்தம் காத்திருந்தது.

 

வேட்டை தொடரும் ..⚓

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!