44
பங்களாவின் இரும்புக் கோட்டையைத் தாண்டி, இருண்ட தார்ச் சாலையில் ரோலக்ஸ், பைரவனின் பைக்குகள் சிறுத்தைகளைப் போலச் சீறிப் பாய்ந்தன. நள்ளிரவு மழை பெய்து ஓய்ந்திருந்ததால், சாலையின் இருபுறமும் இருந்த சோடியம் விளக்குகளின் மஞ்சள் வெளிச்சம் தார்ச் சாலையில் உருகிய தங்கம் போலப் படர்ந்திருந்தது. காற்றில் உப்பின் வாடையும், வரப்போகும் ஏதோ ஒரு மரணத்தின் வாடையும் கலந்திருந்தது. ரோலக்ஸின் சட்டையின் உள்ளே பாபியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சர்வதேசக் கடத்தல் பாதைகளின் ரகசிய வரைபடங்களும், சிக்னல் குறியீடுகளும் அவனது நெஞ்சோடு ஒட்டிப் பாதுகாப்பாக இருந்தன.
அவர்கள் துறைமுகத்தின் வடக்கு எல்லையை ஒட்டிய வளைவில் திரும்பிய போது, திடீரெனப் பின்னால் இருந்து நான்கு அசாத்தியமான SUV கார்கள் ஹெட்லைட்களை அணைத்தபடி, வெறும் பார்க்கிங் விளக்குகளின் மங்கலான வெளிச்சத்தில் இவர்களைத் துரத்தத் தொடங்கின.
காரின் டயர்கள் தார்ச் சாலையில் உராய்ந்து எழுப்பிய சத்தம் அந்த நள்ளிரவின் அமைதியைக் கிழித்தது.
“ரோலக்ஸ்! பின்னாடி பாரு! பாபியோட ஆளுங்கதான். நாம பங்களாவை விட்டு வர்றதை யாரோ பாத்து பாபிகிட்ட சொல்லியிருக்காங்க போல! வண்டியை வேகமா ஓட்டு!” என்று பைரவன் அவசர செய்கை செய்தான்.
ரோலக்ஸ் தன் கண்ணாடியில் பின்னால் வந்த வாகனங்களின் வேகத்தைக் கணித்தான். அவனது முகம் மாறவில்லை. பாபிக்குத் தான் போதையில் உளறியது நினைவுக்கு வந்து, தன் அடியாட்களை ஏவிவிட்டானோ என்றுதான் அவனும் முதலில் நினைத்தான். பைக்கின் ஆக்சிலேட்டரை முழுமையாக முறுக்கினான். எஞ்சின் கர்ஜித்துக் கொண்டு வேகம் எடுத்தது. கார்களும் தங்களின் எஞ்சின் பலத்தைக் காட்டி இவர்களை நெருங்கின.
பாங்! பாங்! டுமீல்….!.
திடீரென, முன்னால் சென்ற காரின் ஜன்னல் வழியே ஒருவன் துப்பாக்கியை நீட்டிச் சுடத் தொடங்கினான்.
தோட்டாக்கள் ரோலக்ஸின் பைக்கின் பின் சக்கரத்தைத் தழுவிச் சென்றன. ரோடு முழுக்க இரும்புத் துண்டுகளும் கல் துகள்களும் சிதறின. ரோலக்ஸ் ஒரு நொடியில் தன் பைக்கை இடதுபுறமாகச் சறுக்கச் செய்து, சாலையோரம் இருந்த ஒரு பாழடைந்த சுமை தூக்கும் லாரிகளுக்கு இடையே புகுந்து திருப்பினான். கார்களும் இவர்களைப் பின்தொடர்ந்து அந்த இருண்ட பகுதிக்குள் நுழைந்தன.
இனி ஓடிப் பயன் இல்லை என்பதை உணர்ந்த ரோலக்ஸ், பைக்கை ஒரே பிரேக்கில் நிறுத்தினான். பைக்கின் டயர் தார்ச் சாலையில் கருகிய ரப்பரின் வாடையை உமிழ்ந்தது. அவனுக்கு இணையாகப் பைரவனும் வண்டியை நிறுத்திவிட்டு, தன் இடுப்பில் இருந்த கனமான அரிவாளை உருவினான். கார்கள் இவர்களைச் சூழ்ந்து கொண்டு நின்றன. கதவுகள் படபடவெனத் திறக்க, கைகளில் இரும்புத் தடிகள், கத்திகள் மற்றும் துப்பாக்கிகளுடன் ஆட்கள் இறங்கினர்.
ஆனால், காரின் முகப்பு விளக்குகளின் வெளிச்சத்தில் முன்னால் வந்து நின்ற அந்த உருவத்தைப் பார்த்ததும் ரோலக்ஸின் புருவங்கள் சுருங்கின. அவனது கண்கள் ஆச்சரியத்திலும் கூர்மையிலும் விரிந்தன.
முன்னால் நின்றது பாபியின் ஆட்கள் இல்லை. நெற்றியில் பாபி அடித்த அடி தையல் போடப்பட்டு, முகமெல்லாம் ரத்தக் கறையோடும் வெறியோடும் நின்றிருந்தான் குணா!
தன் கையில் இருந்த பளபளக்கும் கத்தியை ஆட்டியபடி குரூரமாகச் சிரித்த குணாவின் முகத்தில் பாபியால் அடிபட்ட அவமானமும், ரோலக்ஸை வீழ்த்திவிட வேண்டும் என்ற வெறியும் ஒன்றாகக் கலந்திருந்தன.
“என்ன ரோலக்ஸ்? பாபியோட ஆளுங்கன்னு நினைச்சியா? பாபி இப்போ போதையில கிடக்கான். ஆனா நான் முட்டாள் இல்லைடா!” என்று குணா கத்தினான்.
பைரவன் அதிர்ச்சியோடு ரோலக்ஸைப் பார்த்தான். “ரோலக்ஸ்… இவனுக்கு விஷயம் தெரிஞ்சுடுச்சு! நாம பாபியோட தங்கத்தை அள்ளுனதும், இப்போ அவனோட ரகசிய ஆவணங்களை எடுத்ததும் இவனுக்குத் தெரிஞ்சுருக்கு. குணா நம்ம எல்லா ரகசியத்தையும் கண்டுபிடிச்சுட்டான். இவனை இப்போவே இங்கேயே தீர்த்துக்கட்டலனா, நாளைக்கு விடியறதுக்குள்ள பாபிகிட்ட எல்லாத்தையும் போட்டுக்கொடுத்து நம்ம சதி மொத்தத்தையும் காலி பண்ணிடுவான்!” என்று பைரவன் அவசர செய்கையில் சொன்னான்.
ரோலக்ஸ் ஒரு நிமிடம் தன் கண்களை மூடி யோசித்தான். அவனது மூளை ஒரு கம்ப்யூட்டரைப் போல வேலை செய்தது. குணாவுக்கு விஷயம் தெரிந்துவிட்டது என்றால், அவனும் அவனது இந்த அடியாட்களும் உயிருடன் திரும்பக் கூடாது. வேறு வழியே இல்லை. இந்த நள்ளிரவுத் துறைமுகச் சாலைதான் இவர்களின் சவக்கடலாக மாறப் போகிறது.
ரோலக்ஸ் தன் கண்களைத் திறந்தான். அவனது கண்களில் இப்போது எந்தவித இரக்கமும் இல்லை. வெறும் பசி கொண்ட ஒரு வேங்கையின் கொடூரம் மட்டுமே இருந்தது. அவன் மெதுவாகத் தன் இடுப்பில் இருந்த அந்த வெள்ளை நிறத் துப்பாக்கியை உருவினான். ஆனால், அதைச் சுடுவதற்குப் பயன்படுத்தப் போவதில்லை. அதன் இரும்புப் பிடியால் இவர்களின் மண்டைகளை உடைக்கப் போகிறான்.
“டேய்! அவனுங்களை வெட்டிச் சாயுங்கடா! அந்த ஆவணங்களை எடுங்க!” என்று குணா கத்தவும் .…
அடுத்த நொடிக் கலவரம் வெடித்தது. குணாவின் அடியாட்கள் பத்துப் பேர் ஒரே நேரத்தில் ரோலக்ஸ், பைரவன் மீது பாய்ந்தனர்.
முதல் அடியாள் ஒரு பெரிய இரும்புத் தடியோடு ரோலக்ஸின் தலையை நோக்கிக் வீசினான். ரோலக்ஸ் தன் உடலைச் சற்றே பின்னோக்கி வளைத்து அந்த அடியைத் தவிர்த்தான். இரும்புத் தடி காற்றில் சுழன்று சென்ற வேகத்தில் எழுந்த சத்தம் அடங்குவதற்குள், ரோலக்ஸ் தன் வலது காலால் அவனது முட்டியில் ஓங்கி உதைத்தான்.
“கிராக்…! என அவனின் எலும்பு உடையும் சத்தம் கேட்டது … ”
அவன் அலறிக்கொண்டு கீழே விழும்போதே, அவனது கையில் இருந்த இரும்புத் தடியைப் பறித்த ரோலக்ஸ், அதைக்கொண்டு அடுத்ததாக வந்தவனின் தாடையில் ஓங்கி அடித்தான். அவனது பற்கள் காற்றில் தெறித்து விழுந்தன.
மறுபுறம் பைரவன் தன் அரிவாளைச் சுழற்றி இருவரை வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்தான். ரத்தம் தார்ச் சாலையில் மழையோடு கலந்து ஆறாக ஓடியது.
ரோலக்ஸ் இப்போது முழுமையாக ஒரு காட்டு மிருகமாக மாறியிருந்தான். அவனது கண்மூடித்தனமான தாக்குதல்கள் பார்ப்பவர்களை மிரளச் செய்தன. ஒருவன் அவனது முதுகில் கத்தியால் குத்த வர, ரோலக்ஸ் அதைத் தன் உள்ளுணர்வால் அறிந்து, சட்டென்று திரும்பி அவனது கையைப் பிடித்து முறுக்கினான். கையை அப்படியே பின்னோக்கித் திருப்பி, அவனது சொந்தக் கத்தியாலேயே அவனது வயிற்றைக் கிழித்தான். குடல்கள் சரிந்து விழ அவன் தரையில் சாய்ந்தான்.
மற்றொருவன் துப்பாக்கியை நீட்டியபோது, ரோலக்ஸ் புலிப் பாய்ச்சலாக அவன் மீது பாய்ந்து, அவனது மணிக்கட்டை உடைத்தான். துப்பாக்கி கீழே விழ, அவனது தலையை அங்கே நின்றிருந்த லாரியின் இரும்புக் கதவில் ஓங்கி முட்டினான்.
டமார்…!
அவனது மண்டை ஓடு உடைந்து, ரத்தம் லாரியின் கதவில் விசிறியடித்தது போலப் படர்ந்தது. ரோலக்ஸின் வெள்ளை நிறச் சட்டையில் இப்போது அடியாட்களின் ரத்தக் கறை முழுமையாகப் படிந்து, அவன் ஒரு யமராஜனைப் போலக் காட்சியளித்தான். அவனது வேகம், அவனது அசாத்தியமான உடல் பலம், எதிரிகளை அவன் தூக்கி வீசிய விதம் ஆகியவை குணாவின் அடியாட்களைப் பயத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றன. எஞ்சியிருந்த நாலு பேரும் ரோலக்ஸின் அடிக்குத் தாளாமல் பின்வாங்க முயன்றனர். ஆனால் ரோலக்ஸ் அவர்களை விடவில்லை. ஒருவனின் கழுத்தை நெரித்துக் கொன்றான், மற்ற இருவரின் நெஞ்சில் தன் முழங்காலால் பாய்ந்து அவர்களின் விலா எலும்புகளை நொறுக்கினான்.
இறுதியாக, அங்கே குணா மட்டுமே எஞ்சியிருந்தான். அவனது கைகள் நடுங்கின. தன் கண்முன்னே தன் பத்து அடியாட்களையும் வெறும் ஐந்தே நிமிடங்களில் பிணமாக்கிய ரோலக்ஸை அவன் பேய் போலப் பார்த்தான்.
குணா மெதுவாகப் பின்னோக்கி ஓட முயன்றான். ஆனால், ரோலக்ஸ் ஒரே பாய்ச்சலில் அவனது சட்டையைப் பிடித்து இழுத்துத் தரையில் தூக்கி வீசினான். குணா தார்ச் சாலையில் விழுந்து புரண்டான்.
மெதுவாக அவனது அருகில் சென்ற ரோலக்ஸ், அவனது கையில் இருந்த வெள்ளை துப்பாக்கியின் முகப்பு குணாவின் நெற்றியில் பதிந்தது. குணா உயிருடன் இருந்தால் தங்களின் ஒட்டுமொத்த சதித் திட்டமும், தங்களின் எதிர்காலமும் அழியும் என்பதை ரோலக்ஸ் நன்றாகவே அறிந்திருந்தான். குணாவின் கண்கள் மரண பயத்தில் விழித்தன.
ரோலக்ஸ் தன் விரலால் துப்பாக்கியின் Trigger அழுத்தினான்.
…பாங்..!
குணாவின் நெற்றியைத் துளைத்துக் கொண்டு தோட்டா பாய்ந்தது. அவனது உடல் ஒருமுறை துடித்துவிட்டு பின் அடங்கியது. அந்த நள்ளிரவுச் சாலையில், மழையின் ஈரத்தில் குணாவும் அவனது ஆட்களும் பிணங்களாகக் கிடந்தனர்.
சண்டை முடிந்து அந்த இடமே மயான அமைதியில் மூழ்கியிருந்தது. ரோலக்ஸ் தன் துப்பாக்கியை உறைக்குள் வைத்தான். அவனது மூச்சு பலமாக வந்து போய்க்கொண்டிருந்தது.
குணாவின் பிணத்தின் அருகில் வந்த பைரவன், “ரோலக்ஸ், இவனுங்களை இப்படியே இங்க விட்டுட்டுப் போனா விடிஞ்சா போலீஸ் வந்துடும். பாபிக்கும் சந்தேகம் வரும். நாம ஒரு காரியம் பண்ணுவோம். யாருக்கும் தெரியாம இவங்க எல்லாரையும் தூக்கிட்டுப் போய், நேத்து நாம காலி பண்ணுனோம் பாரு… அந்தப் பழைய நிலத்தடி சுரங்கக் கிடங்கு… அங்கே போட்டுடுவோம். பாபியோட தங்கம் காணாமல் போனதுக்கு குணாதான் காரணம்னு பாபி ஏற்கனவே நம்புறான். இப்போ இவங்க பிணமும் அங்கே கிடந்தா, பாபியோட சந்தேகம் நூறு சதவீதம் உறுதியாயிடும்,” என்றான் ஒரு தந்திரமான புன்னகையுடன்.
ரோலக்ஸ் பைரவனைப் பார்த்துத் தன் தலையை அசைத்தான். அவனது சைகை அந்தத் திட்டத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டதைக் காட்டியது.
இருவரும் சேர்ந்து மிகுந்த எச்சரிக்கையுடன் குணாவும் அவனது பத்து அடியாட்களின் பிணங்களையும் ஒவ்வொன்றாக எடுத்து, அவர்கள் கொண்டு வந்த SUV கார்களின் பின்னால் ஏற்றினர். சாலையிலிருந்த ரத்தக் கறைகளை மழையின் தண்ணீர் இயற்கையாகவே கழுவிச் சென்றுவிட்டதால், அங்கே எந்த ஆதாரமும் மிஞ்சவில்லை.
அவர்கள் கார்களை ஓட்டிக்கொண்டு மீண்டும் அந்தப் பழைய கிழக்கு எல்லை நிலத்தடி சுரங்கக் கிடங்கிற்கு வந்தனர். அந்த இருண்ட, வெறிச்சோடிய கிடங்கின் நடுவே குணாவின் பிணத்தையும் அவனது ஆட்களின் பிணங்களையும் தூக்கிப் போட்டனர்.
அங்கே அவர்கள் சில தந்திரமான வேலைகளையும் செய்தனர். குணாவின் கைகளில் ஒரு வெற்று மரப்பெட்டியின் துண்டையும், அவனது அடியாட்களின் பைகளில் சில தங்க முலாம் பூசப்பட்ட உடைந்த துண்டுகளையும் வேண்டுமென்றே போட்டு வைத்தான் பைரவன். அது, குணா அந்தத் தங்கத்தைத் திருடிக்கொண்டு ஓட முயன்றபோது அவனது ஆட்களுக்குள் ஏற்பட்ட மோதலில் அனைவரும் செத்துவிட்டார்கள் என்பதைப் போல ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கியது.
அனைத்தையும் கச்சிதமாக முடித்துவிட்டு, விடியற்காலைப் பொழுது புலருவதற்குள் அவர்கள் தங்களின் தங்குமிடத்திற்குத் திரும்பினர்.
மறுநாள் காலை. பாபியின் பங்களா மீண்டும் ஒரு பெரும் புயலைச் சந்தித்தது. குணாவும் அவனது ஆட்களும் நிலத்தடி கிடங்கில் பிணமாகக் கிடக்கிறார்கள் என்ற செய்தி பாபியின் காதுகளுக்கு வந்ததும், அவன் தன் அடியாட்களுடன் அங்கே ஓடி வந்தான். அவனுடன் ரோலக்ஸும் பைரவனும் ஒன்றும் தெரியாத விசுவாசிகளைப் போலப் பின்தொடர்ந்தனர்.
கிடங்கிற்குள் குணாவின் பிணத்தையும், அவனது கையில் இருந்த அந்த மரப்பெட்டியின் துண்டையும் பார்த்த பாபி, ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்று கத்தினான்.
“நான் நினைச்சது நிஜம்தான்டா! இந்த நாய் குணாதான் என் தங்கத்தையும் ஆயுதங்களையும் கடத்தியிருக்கான்! கடத்திட்டு அவனோட ஆளுங்களுக்குள்ளே பங்கீடு செய்றதுல சண்டை வந்து ஒருத்தரை ஒருத்தர் வெட்டிட்டுச் செத்திருக்கானுங்க! துரோகி! என் தங்கத்தை எங்கேடா ஒளிச்சு வச்சே?!” என்று குணாவின் பிணத்தை உதைத்துக் கத்தினான் பாபி.
குணாவும் அவனது ஆட்களும் தான் தங்கத்தைக் கடத்தினார்கள் என்று பாபி முழுமையாக நம்பியதைக் கண்டு, பின்னால் நின்றிருந்த ரோலக்ஸின் உதட்டில் ஒரு குரூரமான, அசாத்தியமான புன்னகை மீண்டும் அரும்பியது. பைரவனும் தன் சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு, பாபியின் பக்கத்தில் போய் நின்றான்.
“அண்ணே… குணா செத்துட்டான். ஆனா அவன் கடத்துன தங்கம் எங்கேன்னு தெரியலையேண்ணே. நாம இப்போதைக்கு அமைதியா இருக்கணும். இல்லைனா போலீஸ்க்கு விஷயம் தெரிஞ்சிடும்,” என்று பாபியின் காதை ஓதினான் பைரவன்.
“ஆமாடா பைரவா… நீ சொல்றதும் சரிதான். இப்போதைக்கு இந்த விஷயத்தை மூடி மறைக்கணும். ரோலக்ஸ்… இனிமே நீதான் என் வலது கை. இந்தத் துறைமுகத்தோட மொத்தப் பொறுப்பும் உன்கிட்டதான்,” என்று பாபி ரோலக்ஸின் கைகளைப் பிடித்துக் கூறினான்.
ரோலக்ஸ் தன் தலையை மெதுவாக அசைத்தான். அவனது கண்கள் பாபியைப் பார்த்துச் சிரித்தன.
பாபி தன் ஒட்டுமொத்த பலத்தையும், ரகசியங்களையும், அதிகாரத்தையும் தன் கைகளாலேயே ரோலக்ஸிடம் ஒப்படைத்துவிட்டான் என்பதை அறியாமல் தன் சாம்ராஜ்யத்தின் இழப்பை நினைத்துப் புலம்பிக் கொண்டிருந்தான். ஆனால் ரோலக்ஸ், தன் நெஞ்சில் இருந்த ஆவணங்களையும், தன் கட்டுப்பாட்டில் இருந்த புதிய தங்கக் கிடங்கையும் நினைத்து, ஒரு மாபெரும் சர்வதேச மாஃபியா சக்கரவர்த்தியாகத் தன் அரியாசனத்தில் அமர்வதற்கான முதல் அடியை எடுத்து வைத்தான்.
துறைமுகத்தின் அலைகள் கரையில் மோதும் சத்தம், ரோலக்ஸின் புதிய சாம்ராஜ்யத்தின் வருகையை உலகிற்கு அறிவிப்பது போலப் பலமாக ஒலித்தது.
வேட்டை தொடரும் ..⚓
