47
பாபியின் பேரரசைத் தங்களின் கட்டுக்குள் கொண்டுவந்து, கடல் கடந்து ஒரு புதிய பாதாள உலகத்தையே ரோலக்ஸும் பைரவனும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த வேளையிலும், ரோலக்ஸின் மனதின் ஒரு மூலையில் அந்த ஒற்றைச் சாட்சியின் முகம் வீற்றிருந்தது. அன்று கடலலையின் ஓரத்தில் நின்று கொண்டு பைரவனிடம் அவன் சொன்ன வார்த்தைகள் வெறும் ஊகம் அல்ல, அது அவனது ஆழமான கணிப்பு.
அதனாலேயே, ஆரம்பத்திலிருந்தே பைரவனிடம் ஒரு ரகசியக் கட்டளையிட்டிருந்தான் ரோலக்ஸ். “சந்துரு எங்கே போனான், என்ன செய்கிறான் என்பதை மட்டும் என் கண்ணும் காதுமாக இருந்து கவனித்துக்கொண்டே இரு பைரவா,” என்பதே அது.
பைரவனும் சளைக்கவில்லை. விசாகப்பட்டினத்தின் முடுக்கிலிருந்து ஆந்திர எல்லை வரை, எல்லை தாண்டித் தப்பிச் சென்ற அந்த இளைஞனின் ஒவ்வொரு அசைவையும் ரகசியமாக மோப்பம் பிடித்துக் கொண்டே இருந்தான். காற்றோடு காற்றாக, வந்தச் செய்திகளாக, ஒற்றர்கள் மூலமாகத் தகவல்கள் பைரவனின் கைக்கு வந்து சேர்ந்துகொண்டே இருந்தன.
அன்று மாலை, ரோலக்ஸின் தங்குமிடத்தில் இருள் மெல்லப் படர்ந்துகொண்டிருந்தபோது, பைரவன் அவசரமாக உள்ளே நுழைந்தான். அவனது முகத்தில் ஒரு விசித்திரமான வியப்பும் திகைப்பும் கலந்திருந்தன.
“ரோலக்ஸ்…” என்ற பைரவனின் குரல் சற்றே தாழ்ந்து ஒலித்தது. “நீ அன்னைக்குக் கடற்கரையில சொன்னியே… அது அச்சுப்பிசகாமல் அப்படியே நடந்திருக்குடா. அந்த கொலையை நேர்ல பார்த்துட்டு பயந்து ஓடுனானே அந்த வீரமாலுவோட மகன் சந்துரு… அவன் சும்மா ஒளிஞ்சு பிழைக்கலடா! அவன் நேரா போலீஸ் ட்ரைனிங்ல சேர்ந்து, இப்போ IPS அதிகாரி ட்ரைனிங் கீழ இருக்கான்! சீக்கிரமே அதிகாரியா களத்துல இறங்கப் போறான்!” என்றான்
இந்தத் தகவலைக் கேட்டதும், ரோலக்ஸின் கம்பீரமான முகத்தில் ஒரு மெல்லிய, ஆபத்தான புன்னகை தவழ்ந்தது. அவனது கண்களில் ஆச்சரியமில்லை, மாறாகத் தான் கணித்தது அப்படியே பலித்துவிட்டதே என்ற கர்வமும் திருப்தியும் மட்டுமே இருந்தன.
அவன் தன் கைகளை அசைத்து, அன்னைக்குக் கடற்கரையில் சொன்ன அதே வார்த்தைகளை மீண்டுமொருமுறை பைரவனுக்குச் சைகையில் உணர்த்தினான்…
“நான் அன்னைக்கே சொன்னேன்ல பைரவா… அவன் அவனோட அப்பாவைப் போல போலீஸ் ஆகணும்னு ஆசைப்பட்டவன். கண்டிப்பா ஒரு நாள் காக்கிச் சட்டை போட்டு, துப்பாக்கியோட என் முன்னாடி வந்து நிப்பான்னு. அவன் வர்றான்… தன் வேட்டைக்காக அவன் தயாராகிறான்!” என்றான்
இன்று நள்ளிரவு, துறைமுகத்தின் ஒதுக்குப்புறமான பாதையில் அந்தப் போலீஸ் ஜீப் சரேலென வந்து பிரேக் அடித்து நின்றபோது, அதில் இருந்தது சந்துருதான் என்று பைரவன் உறுதியாக நம்பினான். அவனது மனதில் பயத்தின் அலை வீசியது.
“ரோலக்ஸ்! சந்துரு தான் வந்திருக்கான்! தன் தந்தையைக் கொன்ன உன்னைப் பிடிக்காம விடமாட்டான். ரோலக்ஸ்… இங்கிருந்து ஓடிடு! தப்பிச்சுடு!” என்று பைரவன் பதற்றத்துடன் எச்சரித்தான்.
ஆனால், ரோலக்ஸ் அசையவில்லை. அவன் ஒரு இரும்பு மனிதனைப் போல, புயலுக்கு நடுவே அசையாமல் நிற்கும் சிங்கத்தைப் போலக் கம்பீரமாக நிமிர்ந்து நின்றான். அவனது கண்கள் அந்த ஜீப்பின் முகப்பு விளக்குகளை அலட்சியமாகச் சந்தித்தன.
ஜீப்பின் கதவு திறந்ததும், உள்ளிருந்து கம்பீரமான நடைபோட்டு வெளியே வந்தவனைக் கண்டதும் பைரவனின் பதற்றம் ஒரு கணம் திகைப்பாக மாறியது.
ஜீப்பில் இருந்து இறங்கியவன் சந்துரு அல்ல! அவன் அசிஸ்டன்ட் கமிஷனர் சீருடையில் இருந்த ஒரு வடஇந்திய அதிகாரி. தோள்களில் பளபளக்கும் நட்சத்திரங்களும், முகத்தில் ஒருவிதமான அலட்சியமான அகந்தையும் குடியிருந்தது ACP ஷர்மா.
தங்களின் எதிர்பார்ப்பு வீண் போனபோதிலும், இது என்னடா புதுப் பிரச்சனை, நடுநிசியில் ஒரு புது ஏசிபி வந்து நிற்கிறானே என்ற குழப்பமும் பதற்றமும் பைரவனின் மனதை அரித்தன. ஆனால், ரோலக்ஸின் கண்களிலோ முகத்திலோ எந்தவிதமான மாற்றமும் இல்லை. அவன் அதே குளிர்ந்த, கொடூரமான கம்பீரத்தோடு நின்றிருந்தான்.
ஷர்மா மெதுவாகச் சிரித்துக்கொண்டே இருவரையும் நோக்கி நடந்து வந்தான். தன் வாயில் அடக்கி வைத்திருந்த பாண்யை தார்ச் சாலையில் ஆக்ரோஷமாகத் துப்பினான். அந்தச் சிவப்பு நிறச் சாறு ரோலக்ஸின் காலணிகளுக்குச் சில அங்குலங்கள் தள்ளி விழுந்தது.
“ரோலக்ஸ்… பைரவன்…” என ஷர்மா அந்த பெயர்களை மிகவும் அழுத்தமாக, நக்கலாக உச்சரித்துவிட்டு மீண்டும் ஒருமுறை உரக்கச் சிரித்தான்.
பைரவன் ஒன்றும் புரியாமல் அவனது முகத்தை ஆழமாக உற்றுப் பார்த்தான். ஆனால், ரோலக்ஸ் எந்தச் சலனமும் இல்லாமல் அந்தப் போலீஸ் அதிகாரியைத் தன் கழுகுப் பார்வையால் துளைத்துக் கொண்டிருந்தான். எந்தவொரு சாதாரண மனிதனையும் நடுங்க வைக்கும் அந்த ரோலக்ஸின் குளிர்ந்த பார்வை, ஒரு நிமிடம் அந்த வடஇந்திய அதிகாரி ஷர்மாவையும் உள்ளுக்குள் அசர வைத்தது.
‘கேள்விப்பட்டது உண்மைதான்… இவன் சாதாரண ஆள் கிடையாது. மிருகத்தை விட கொடூரமானவன்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் ஷர்மா.
ஷர்மா தன் பதற்றத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல், ரோலக்ஸை நெருங்கி வந்து தன் கோட் பையிலிருந்து ஒரு அதிநவீன ஸ்மார்ட்போனை எடுத்தான். அதன் திரையைத் தட்டி, ரோலக்ஸின் முகத்திற்கு நேரே காட்டினான்.
அதில் ஒரு வீடியோ பதிவு ஓடத் தொடங்கியது .…
அந்த மொபைல் திரையில் ஓடிய காட்சிகளைப் பார்த்த அடுத்த விநாடி, பைரவனின் இதயம் நின்று நிதானித்தது.
ஆம் .. அன்று இரவு துறைமுகத்தின் இருண்ட சாலையில், குணாவும், அவனது அடியாட்களுக்கும் ரோலக்ஸிற்கும் இடையே நடந்த அந்த உக்கிரமான சண்டை, ரோலக்ஸ் தன் கைகளாலேயே குணாவின் அடியாட்களை மிருகத்தனமாகக் கொன்றது, பின்னர் குணாவின் நெற்றியில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது, அதற்குப் பின் பைரவனும் ரோலக்ஸும் சேர்ந்து அந்தப் பிணங்களைத் தூக்கிச் சென்று நிலத்தடிச் சுரங்கத்தில் போட்டது வரை… அத்தனையும் மிகத் துல்லியமாக ஏதோ ஒரு ரகசியக் கேமராவில் படமாக்கப்பட்டிருந்தது!
அதனைப் பார்த்த பைரவன் ஒரு நிமிடம் நிலைகுலைந்து போனான். அவனது கண்கள் பயத்தில் விரிந்தன. பாபிக்கு விஷயம் தெரிந்தால் கூடத் தப்பித்துவிடலாம், ஆனால், சட்டத்தின் கையிலும் காவல் துறையின் கையிலும் இவ்வளவு பெரிய ஆதாரத்தோடு மாட்டிக்கொண்டால், ஒட்டுமொத் சாம்ராஜ்யமும் அழிந்துவிடுமே என்ற மரண பயம் பைரவனின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. அவன் ஷர்மாவைத் திகிலுடன் பார்த்தான்.
ஆனால், ரோலக்ஸ்?
அவன் முகத்தில் ஒரு சின்ன நடுக்கம் கூட இல்லை. தன் கொலைக் குற்றத்திற்கான ஆதாரம் தன் கண்முன்னே ஓடிக் கொண்டிருக்கும் போதும், அவன் ஷர்மாவை அதே அலட்சியமான, கொடூரமான பார்வையோடு பார்த்தான்.
அவனது கண்கள் ஷர்மாவிடம் ஒரு கேள்வியை மட்டுமே கேட்டன, ‘இதைக் காட்டி என்ன செய்துவிடப் போறா? இதற்கான விலை என்ன?’
அவனது பார்வையில் சட்டத்தைக் கண்டோ, காக்கிச் சட்டையைக் கண்டோ அஞ்சாத ஒரு மாபெரும் பாதாள உலக அதிபனின் கர்வம் மட்டுமே நிறைந்திருந்தது.
ரோலக்ஸின் அந்த அஞ்சா நெஞ்சத்தைக் கண்டு ஷர்மா தனக்குள்ளேயே வியந்தான். அவன் மொபைலைத் தன் பைக்குள் வைத்துவிட்டு, தன் கைகளைச் சட்டைப் பைக்குள் திணித்துக் கொண்டு ரோலக்ஸை நெருங்கினான்.
“ரோலக்ஸ்… நீ இதைப் பார்த்து எல்லாம் பயந்து நடுங்குற ஆள் இல்லைனு நல்லாவே கேள்விப்பட்டேன். இதோ இப்போ நேரிலே பார்த்துட்டேன் … உண்மையவே நீ இந்த துறைமுகத்தின் சிங்கம்!” ஷர்மாவின் குரலில் இப்போது நக்கலுக்குப் பதிலாக ஒரு தீவிரமான வியாபாரியின் நிதானம் வந்தது.
“இந்த வீடியோவை வச்சு உன்கிட்ட நான் எந்த பிளாக்மெயிலும் பண்ணப் போறதில்லை. உன்னை ஜெயில்ல தள்ளுறது என் நோக்கமும் இல்லை. ஆனா… நீ செஞ்ச இந்த உன்னதமான கொலைங்களுக்கான ஆதாரம் என் கைவசம் பத்திரமா இருக்கு. இதுக்காக நீ எனக்குப் பணிந்து போகணும்னு நான் ஆசைப்படல…”
ஷர்மா சற்று நிதானித்து, ரோலக்ஸின் கண்களை நேருக்கு நேர் பார்த்தான்.
“ஆனா நான் கேக்க வர்றது ஒன்னே ஒன்னுதான்! அடுத்த வாரம் சவுத் ஆப்பிரிக்காவிலிருந்து ஒரு பெரிய சரக்குக் கப்பல் சென்னைத் துறைமுகத்துக்கு வருது. அதுல வர வேண்டிய சில முக்கியமான அதிநவீனப் பொருட்கள் மும்பைக்குப் போகக் கூடாது. அதில் இருக்கும் முக்கிய சில சரக்குகள், டெல்லியில இருக்குற ஒரு முக்கியமான இடத்துக்குப் பாதுகாப்பா அனுப்பணும்! இந்த வேலையை அரசாங்கத்தாலயோ, போலீஸாலயோ செய்ய முடியாது. உன்னைப் போன்ற ஒரு பாதாள உலக மாஃபியாவால மட்டும்தான் செய்ய முடியும்!”
ஷர்மா தன் குரலை இன்னும் அழுத்தமாக்கினான். “அந்த விஷயத்தை மட்டும் நீ எனக்குச் சரியா செஞ்சு கொடுத்தா… டெல்லியில இருக்குற மத்திய அமைச்சர்களோட நேரடி நட்பும் ஆதரவும் உனக்குக் கிடைக்கும்! அதை வச்சு நீ இன்னும் பிரபலம் ஆகலாம்… உன் தாதா கூட்டத்தை இந்தியா முழுமைக்கும் பெருக்கலாம்!”
என்ற சர்மா, மேலும் … “இந்த வேலையை நான் பாபி கிட்ட சொல்லியிருந்தா, அவன் சாதாரணமா செஞ்சிருப்பான். ஆனா, அந்தப் போதை முட்டாளை நான் நம்பல! உன்னை நான் முழுசா நம்புறேன். இந்த வேலையை நீதான் எனக்கு முடிச்சுக் கொடுக்கணும், இதில் உனக்கும் ஒரு பங்கு இருக்கு!” என கண்ணடித்தான்
ஷர்மாவின் வார்த்தைகளில் உத்தரவு இல்லை, அதே நேரம் கெஞ்சலும் இல்லை. ‘எனக்கான காரியத்தை நீ செய்தால், உனக்கான பாதுகாப்பு அரணாக நான் இருப்பேன்’ என்ற ஒரு புதிய அதிகாரப் பரிமாற்றமும், சர்வதேச மாஃபியா ஒப்பந்தமும் அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருந்தன.
ஷர்மா பேசி முடித்ததும் அங்கே ஒரு நீண்ட நிசப்தம் நிலவியது. கடலின் உப்புக் காற்று அவ்விருவருக்கும் இடையே வீசியது.
ஷர்மா அமைதியாக ரோலக்ஸின் பதிலுக்காகக் காத்து நின்றான். ரோலக்ஸ் தன் கையில் இருந்த ரோலக்ஸ் கடிகாரத்தைப் பார்த்தான். அவனது மூளை இந்த புதிய வாய்ப்பின் ஆபத்துகளையும் லாபங்களையும் கணக்குப் போட்டது. டெல்லி அமைச்சர்களின் ஆதரவு கிடைத்தால், இந்தியாவில் அவனை யாராலும் அசைக்க முடியாது.
ஆனால், பைரவன் உடனே ரோலக்ஸின் அருகில் வந்து, அவனது கையைப் பிடித்து அழுத்தினான்.
“ரோலக்ஸ்! வேண்டாம்டா!” என்ற பைரவன் ரகசியமாக, அதே சமயம் அழுத்தமாகச் சொன்னான். “இந்த போலீஸ்காரனுங்களை நம்பவே முடியாது! இவனுங்க சுயநலப் பிசாசுங்க. தனக்கான வேலை முடிஞ்சதும், இந்த வீடியோவை வச்சே நம்மைச் சிக்க வைக்கப் பார்ப்பான். இவனுங்களுக்குப் பணிஞ்சு போனா, நாளைக்கு நம்ம சாம்ராஜ்யமே இவன் கைக்குள்ள போயிடும். இது பெரிய ஆபத்துடா… யோசி!”
பைரவனின் எச்சரிக்கை நியாயமானதுதான். காவல் துறையையும் அரசியலையும் நம்பி மாஃபியா உலகத்தில் இறங்கியவர்கள் பலர் அழிந்துபோயிருக்கிறார்கள்.
பைரவன் பேசி முடித்ததும், ரோலக்ஸ் தன் பார்வையை மெதுவாகப் பைரவனின் பக்கம் திருப்பினான். அவனது ஆழமான கண்கள் பைரவனை உற்றுப் பார்த்தன. அந்தப் பார்வையில், அவனது உதடுகளில் அந்த மெல்லிய, ஆபத்தான புன்னகை மீண்டும் அரும்பியது.
ரோலக்ஸ் மீண்டும் ஷர்மாவை நோக்கித் திரும்பினான். ரோலக்ஸின் முடிவு என்னவாக இருக்கும் ?
வேட்டை தொடரும் ..⚓
