5
அதிகாலைப் பொழுதின் குளிர்ச்சியை விரட்டியபடி, மணமேடையில் ஹோம குண்டத்துத் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. ஐயரின் கணீர் என்ற மந்திர உச்சாடனம் மண்டபம் முழுவதும் எதிரொலித்தது.
மெரூன் நிறப் பட்டுப்புடவையில், தேவதையாய் அமர்ந்திருந்தாள் யாழினி. ஐயர் சொல்லச் சொல்ல, ஒவ்வொரு முறையும் நெய்யையும் சமித்துக்களையும் அள்ளி யாகத் தீயில் இடும்போது, அவளது முகத்தில் எந்தச் சலனமும் இல்லை, ஒருவிதமான இயந்திரத்தனமான அமைதி மட்டுமே குடிகொண்டிருந்தது.
மேடைக்குச் சற்றுத் தள்ளி, ராஜேஸ்வரியும் சிதம்பரமும் தன் மகள் ஒருவழியாகக் கரைசேர்ந்துவிட்டாள் என்ற நிம்மதியில், ஆனந்தக் கண்ணீர் மல்க கைகளைக் கூப்பி நின்றிருந்தனர்.
ஆனால், அதே மேடைக்குக் கீழே நின்று கொண்டிருந்த சுவாதியின் நிலை வேறாக இருந்தது. அவள் தன் அக்காவையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தப் பார்வையில் அக்காவின் மீதான கோபமும், அவள் ஏன் இப்படி எதையுமே எதிர்க்காமல் இருக்கிறாள் என்ற ஆதங்கமும் கலந்திருந்தது.
யாழினி எதேச்சையாகத் நிமிர்ந்து தன் தங்கையைப் பார்த்தாள். சுவாதியின் கனல் தெறிக்கும் பார்வைக்கு மருந்தாக, ஒரு மெல்லிய, பொருளற்ற புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு மீண்டும் யாகத் தீயை நோக்கினாள். இது சுவாதியை இன்னும் ஆத்திரமடையச் செய்தது.
சுவாதியின் முகபாவ மாற்றங்களை மேடையின் ஓரத்தில் நின்றிருந்த அவளது தந்தை சிதம்பரம் கவனித்துக் கொண்டே இருந்தார். மகளின் எண்ணவோட்டத்தைப் புரிந்துகொண்டவர், தன் விழிகளாலேயே அவளைச் சுட்டெரிப்பது போல ஒரு பார்வை பார்த்தார்.
அந்தப் பார்வையின் வீரியம் தாங்காமல், சுவாதி சட்டென்று தன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டாள். தன் தந்தையை மீறி ஒரு சிறு துரும்பைக் கூட அசைக்க முடியாது என்பது அவளுக்கு மீண்டும் ஒருமுறை உறைத்தது.
நிம்மதியடைந்த சிதம்பரம், அடுத்துத் தன் பார்வையை மண்டபத்தைச் சுற்றியிருந்த அந்தச் சஃபாரி ஆட்களின் பக்கம் திருப்பினார். ஒவ்வொருவரும் ஒரு வேட்டை நாயைப் போல விழிப்புடன் அங்கும் இங்கும் நோட்டமிட்டுக் கொண்டிருந்தனர். அதில் ஒருவனை மட்டும் அவர் தீர்க்கமாகப் பார்த்தார்.
சிதம்பரத்தின் பார்வையில் இருந்த அழுத்தம் அந்த ஆளை உணர வைக்கவும், அவன் உடனே திரும்பிப் பார்க்க, சிதம்பரம் மிக நிதானமாகத் தன் தலையை அசைத்து ‘கிட்டே வா’ என்பது போலச் சைகை காட்டினார்.
அவன் வேகமாக மணமேடைக்கு வந்து சிதம்பரத்தின் பின்னால் பணிவுடன் நின்றான். சிதம்பரம் யாகத்தைப் பார்ப்பது போலவே பாவனை செய்து கொண்டு, மிகத் தாழ்ந்த குரலில் அவனிடம்…
“அந்த பையன் எக்காரணத்தைக் கொண்டும் உள்ளே வரக்கூடாது. ஒருவேளை அவன் கண்ணுல பட்டா, அங்கேயே அவன் கதையை முடிச்சிடுங்க. எல்லாப் பக்கமும் ஆளுங்களை எச்சரிக்கையா இருக்கச் சொல்லு… சின்னத் தப்பு கூட நடக்கக் கூடாது. புரிஞ்சுதா?”
அவர் சொல்லும்போதே அவரது கண்கள் ஒரு கிரிமினல் வேகத்துடன் மின்னின. அந்த ஆள் பயபக்தியுடன் தலையசைத்துவிட்டு நகர முயன்றவனை கண்களால் நிறுத்தியவர் …
“அந்த ஏரியா இன்ஸ்பெக்டரை உடனே வந்து என்னைப் பார்க்கச் சொல்லு,” என்று கட்டளையிட்டார். அவரது குரலில் இருந்த அந்த அதட்டல், கர்வத்தைப் பிரதிபலித்தது. அந்த அடியான் சற்றும் தாமதிக்காமல், தன் இடுப்பில் இருந்த வாக்கி-டாக்கியை ஆன் செய்து, ரகசியக் குறியீடுகள் மூலம் மற்ற ஆட்களை எச்சரித்துவிட்டு, இன்ஸ்பெக்டரை நோக்கி விரைந்தவன், அவரிடம் சிதம்பரம் அழைப்பதை தெரிவித்தான்.
சிறிது நேரத்திலேயே, சாதாரண உடையில் இருந்த இன்ஸ்பெக்டர் மணமேடைக்கு வந்து சிதம்பரத்தின் அருகில் நின்றார். அவரை ஒருமுறை மேலிருந்து கீழாகப் பார்த்த சிதம்பரத்தின் முகத்தில் கடும் அதிருப்தி ரேகைகள் படர்ந்தன.
“என்னய்யா இது வேஷம்? போலீஸ்னா ஒரு மிடுக்கு வேணாமா? எதுக்கு இப்படிச் சாதாரண டிரெஸ்ஸைப் போட்டுக்கிட்டு வந்து நிக்கிற?” என்று எரிச்சலுடன் கேட்டார் சிதம்பரம்.
இன்ஸ்பெக்டரோ குழப்பத்துடன், “ஐயா… கல்யாண மண்டபத்துல கூட்டத்தோடு கூட்டமா இருந்தாத்தான் யாருக்கும் சந்தேகம் வராதுன்னு நினைச்சேன்,” என்று இழுக்க…
குறுக்கிட்ட சிதம்பரம். “ம்ம்ம் ! யூனிஃபார்ம்ல நீ இங்க நின்னாதான், வர்றவன் மனசுல ஒரு பயம் இருக்கும். அந்தச் பையன் எதாவது பிளான் போட்டிருந்தாலும், போலீஸைப் பார்த்தா ஒதுங்கிப் போவான். எனக்கு என்னமோ மனசுக்குள்ள ஒரு சந்தேகம் குடைஞ்சுக்கிட்டே இருக்கு. அவன் வந்தாலும் வரலாம்… உடனே போய் யூனிஃபார்மை மாத்திட்டு வா!” என்று விரட்ட.
இன்ஸ்பெக்டர் மறுபேச்சின்றி அங்கிருந்து நகர்ந்து, ஒதுக்கப்பட்ட ஒரு அறைக்கு விரைந்தார்.
சிதம்பரத்தின் கண்கள் யாகத் தீயில் எரியும் சமித்துக்களைப் போலவே, மனதிற்குள் சந்துருவின் மீதான வன்மம் எரிந்து கொண்டிருந்தது.
இன்ஸ்பெக்டரை அனுப்பிவிட்டு, மணமேடையில் அமர்ந்திருந்த தன் மகள் யாழினி மீது சிதம்பரத்தின் பார்வை நிலைத்தது. அவள் எந்தவித எதிர்ப்பும் காட்டாமல், ஐயர் சொல்லும் மந்திரங்களுக்கு ஏற்ப மிக அமைதியாக யாகம் செய்து கொண்டிருந்தாள். அந்த அமைதி சிதம்பரத்திற்கு ஒருபுறம் நிம்மதியைத் தந்தாலும், மறுபுறம் ஒரு பெரும் புதிராக இருக்க, அவரது மனதிற்குள் எண்ணங்கள் அலைமோதின…
‘உண்மையிலேயே யாழினிக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதம் தானா? இல்லை, இது புயலுக்கு முன்னாடி வர்ற அமைதியா? என் ரத்தம் தானே அவளுக்கும் ஓடுது… நான் வச்ச பொறியில அவ சிக்கிட்டான்னு நான் நினைக்கிறதா? இல்லை, எனக்கே தெரியாம அவ எனக்கு ஒரு மாற்றுப் பொறியை வச்சிருப்பாளா?’
சிதம்பரம் ஒரு தேர்ந்த வேட்டைக்காரனைப் போலத் தன் பார்வையை மண்டபத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் செலுத்தி நோட்டமிட்டுக் கொண்டே இருந்தார். அவரது கண்கள் எதையோ தேடிக் கொண்டிருந்தன…
யாக குண்டத்தில் எரியும் தீயின் செந்நிறக் கதிர்கள் யாழினியின் முகத்தில் பிரதிபலித்தன. அவளது பார்வை அந்த நெருப்பிலேயே நிலைத்திருந்தது. மண்டபத்தின் வாசலில் ஆயிரம் சலனங்கள் இருந்தாலும், அவள் ஒருமுறை கூடத் தலைநிமிர்ந்து அந்த பக்கம் பார்க்கவில்லை.
சந்துரு வருவான் என்ற நம்பிக்கை அவளுக்கு இருக்கிறதா? அல்லது வராமல் போனால் என்ன செய்வது என்ற அச்சம் இருக்கிறதா? அவளுக்கே விடை தெரியாத கேள்விகள் அவை. ஆனால், அவளது இந்த அசாத்திய அமைதிக்குக் காரணம், அவள் மனதிற்குள் ரகசியமாகத் தழுவிக் கொண்டிருக்கும் அந்த ஒற்றை வாக்குறுதிதான்.
“இங்க பாரு யாழி… இந்த ஜென்மத்துல நீ தான் என் பொண்டாட்டி, நான் தான் உன் புருஷன். இதை எவனாலயும் மாத்த முடியாது, புரியுதா? எது நடந்தாலும் சரி, எந்த நேரத்திலயும் நான் வந்து உன் கையைப் பிடிப்பேன்!”
சந்துருவின் அந்த அதிகாரமும் காதலும் கலந்த வார்த்தைகள், அவளுக்குள் ஒரு ஜபம் போல ஓடிக்கொண்டிருந்தன. யாகத்தில் அவள் இடும் ஒவ்வொரு பொருளும், சந்துருவின் பெயரையே அந்தத் தீயில் அர்ச்சனை செய்தன.
அடுத்த சில நிமிடங்களில், “மாப்பிள்ளையை அழைச்சிட்டு வாங்க!” என்ற ஐயரின் குரல் மண்டபம் முழுவதும் எதிரொலித்தது. அந்தக் கட்டளை மாப்பிள்ளை அறைக்குச் சென்றது.
கதவு திறக்கப்பட, பட்டு வேஷ்டி மற்றும் பட்டுச் சட்டையில் ஒரு பக்கம் மணமகன் ராஜேஷ் நின்றிருந்தான். ஆனால், அவனுக்கு இணையாக அனைவரையும் அதிர வைத்தது முத்துவின் தோற்றம்.
சிறைச்சாலை அழுக்குகளைக் களைந்துவிட்டு, இப்போது பட்டு வேஷ்டி, பட்டுச் சட்டை எனத் தார் பாய்ச்சிக் கட்டியிருந்தான் முத்து. கச்சிதமாகச் சவரம் செய்யப்பட்ட முகம், முறுக்கி விடப்பட்ட மீசை, நேர்த்தியாக வாரப்பட்ட தலைமுடி என ஒரு பக்கா மாப்பிள்ளை தோழனாக அவன் உருமாறியிருந்தான். அவனது கண்களில் மட்டும் அந்தப் பழைய கிரிமினல் வேகம் குறையாமல் மின்னியது.
ராஜேஷுக்கு உடல் நடுங்கியது. “இவன் என் கூடவே மேடைக்கு வர்றானே… அங்கே என் அப்பா, மாமனார், அப்புறம் என் வருங்கால மனைவி என எல்லாரும் இருப்பாங்களே! இவன் அங்கே எதாவது விபரீதம் செஞ்சிட்டா என் கதி என்ன?” என்று அவன் உள்ளுக்குள் பதபதத்தான்.
முத்து அவனது எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொண்டவன் போல, ஒரு கூர்மையான பார்வையை அவன் மீது வீசியவன். “என்ன யோசனை மாப்பிள்ளை சார்? கிளம்புங்க… முகூர்த்த நேரம் ஆகுதுல்ல?” என்று கண்களாலேயே ‘நட’ என உத்தரவிட்டான்.
ராஜேஷ் வேறு வழியின்றித் தலையசைத்துவிட்டு முன்னால் நடக்க, முத்து அவனது தோளைத் தழுவியபடி, ஒரு நெருங்கிய நண்பனைப் போல மாப்பிள்ளை தோழனாக அவனை அரவணைத்துக்கொண்டு மேடையை நோக்கி நகரத் தொடங்கினான்.
மாப்பிள்ளையுடன் மணமேடையில் ஏறிய முத்து, ராஜேஷை மணமகன் இருக்கையில் அமர வைத்தான். ஐயரோ, மாப்பிள்ளை வந்துவிட்டான் என அடுத்த மந்திரத்தைத் தொடங்க ஆயத்தமானார். ஆனால், அடுத்த நொடி நிகழ்ந்தது எவருமே எதிர்பாராத ஒரு மின்னல் வேகத் தாக்குதல்!
முத்து சற்றும் தாமதிக்காமல், யாகத் தீயின் முன்னே அமர்ந்திருந்த யாழினியின் மணிக்கட்டைத் தன் இரும்புப் பிடியால் பற்றியவன். “வா போலாம்!” என இழுத்தான்..
அவன் குரலில் இருந்த அதிகாரம் யாழினியை ஒரு நிமிடம் நிலைகுலைய வைத்தது. அவள் எதிர்ப்புக் காட்டக்கூட அவகாசம் தராமல், அவளை மேடையை விட்டு வெளியே இழுக்கத் தொடங்கினான்.
மேடையின் ஓரத்தில் நின்றிருந்த அந்தச் சஃபாரி ஆசாமி ஒருவன், முத்துவின் செயலைக் கண்டு ஆவேசத்துடன் பாய்ந்து வந்தவன். “யார்டா நீ? கையை விடுடா!” என்று கத்தியபடி அவன் தன் முஷ்டியை ஓங்க, முத்துவின் எதிர்வினை ஒரு சிறுத்தையின் பாய்ச்சலைப் போல இருந்தது.
யாழினியின் கையைப் பற்றியிருந்த இடது கையை விடாமலேயே, தன் வலது கையைச் சுழற்றி அந்த ஆளின் தாடையில் ஓங்கி ஒரு குத்து விட்டான் முத்து.
“டமார்” அந்த அடியில் அவனது பற்கள் சிதற, அவன் அந்தரத்தில் சுழன்று அப்படியே மேடையின் பின்பக்கம் சரிந்து விழுந்தான்.
இதைப் பார்த்ததும் அங்கிருந்த மற்ற சில அடியாட்களும் ஒரே நேரத்தில் முத்துவை நோக்கிப் பாய்ந்தனர். மண்டபமே அலறல் சத்தத்தில் அதிர்ந்தது.
ஒருவன் முத்துவின் முதுகில் தாக்க முயல, முத்து அப்படியே யாழினியைத் தன் அணைப்பிற்குள் சுழற்றினான். யாழினி அவனது மார்போடு ஒட்டிக்கொள்ள, முத்துவின் வலது கால் மின்னல் வேகத்தில் சுழன்று அந்த அடியாளின் மார்பில் ‘தடால்’ என்று இறங்கியது.
அவன் பறந்து போய் ஒரு பூச்சட்டியில் மோதி விழுந்தான்.
“டேய்… இவனை விடாதீங்கடா!” என்று சிதம்பரம் கத்த, அடுத்த இருவர் முத்துவின் இரு பக்கமும் சூழ்ந்தனர்.
ஒரு விசித்திரமான புன்னகையை உதிர்த்த முத்து. இடது கையில் யாழினியின் பிடியை இன்னும் இறுக்கிக் கொண்டான். ஒருவன் ஓங்கிய கம்பியை முத்து தன் வெறும் கையால் தடுத்துப் பிடித்து, அப்படியே அவனைத் தன் பக்கம் இழுத்து முழங்காலால் அவனது வயிற்றில் ஒரு இடி இடித்தான். மற்றொருவன் பின்னால் இருந்து தாக்க வர, முத்து தன் தலையாலேயே அவன் முகத்தில் ஒரு முட்டு முட்டினான். மூக்கிலிருந்து ரத்தம் பீறிட அவன் நிலைகுலைந்தான்.
“யாருடா நீ? எதுக்கு இவளைக் கூட்டிட்டுப் போற?” என்று ஒருவன் மூச்சிரைக்கக் கேட்க…
“நான் யாருன்னு தெரிஞ்சுக்க உனக்கு ஆயுசு பத்தாதுடா! ” என அவனை எட்டி உதைத்துக் கொண்டே சொன்னான்
யாழினியின் முகத்திலோ பயமோ கவலையோ பதற்றமோ ஏதும் இல்லை, அவளைப் பாதுகாக்கும் கவசமாக அவன் அங்கே நின்று கொண்டிருந்தான். ஒரு கையால் அவளை அரவணைத்து, மறு கையால் ஒரு பெரும் படையையே சிதறடித்துக் கொண்டிருந்தான் அவன். ஒவ்வொரு அடியும் மரண அடியாக விழ, மேடையில் இருந்த குத்துவிளக்குகளும், பூக்களும் சிதறித் தெறித்தன.
அடியாட்கள் ஒவ்வொருவராக ரத்த வெள்ளத்தில் சரிய, அவனோ யாழினியை இழுத்துக்கொண்டு மேடையை விட்டு இறங்கினான்.
திருமண மண்டபமே ஒரு நிமிடம் உறைந்து போனது. எதிரில் வந்த சஃபாரி ஆட்களைச் சருகுகளைப் போலத் தூக்கி எறிந்தான், அவனது ஒவ்வொரு அடியும் இடியென இறங்க, சிதம்பரத்தின் கோட்டை சரிந்து கொண்டிருந்தது.
தன் கௌரவம் மண்ணோடு மண்ணாவதைக் கண்டு ஆத்திரத்தில் துடித்த சிதம்பரம், தன் பட்டு வேட்டியைக் கக்கத்தோடு மடக்கிக் கட்டிக்கொண்டு மேடையிலிருந்து கீழே குதித்து பாய்ந்து வந்து அவனின் தோள்பட்டையைத் தன் இரும்புப் பிடியால் பற்றி நிறுத்தினார்.
“டேய்! எவனடா நீ? என் பொண்ண இப்படி இழுத்துட்டுப் போக உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா, என் முன்னாடியே இப்படிச் செய்வ?” என்று கர்ஜித்தார் சிதம்பரம்.
அதே நேரம், சீருடை அணிந்து மிடுக்காக வந்திருந்த அந்த இன்ஸ்பெக்டரும் தன் கைத்துப்பாக்கியை எடுத்தபடி முத்துவின் முன்னால் வந்து நின்றான்.
“யாருடா நீ? அந்த பொண்ணு கையை விடுடா முதல்ல!” என்று அதிகாரக் குரலில் அதட்டினான் இன்ஸ்பெக்டர்.
அத்தனை களேபரங்களுக்கும் நடுவே, அவன் அமைதியாக நின்றிருந்தான். அவனது பிடியில் சிக்குண்டு கிடந்த யாழினி, மெல்லத் தன் தலையை நிமிர்த்தி அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டரையும், தன் தந்தையும் நேருக்கு நேர் பார்த்தாள்.
அவளது கண்களில் இப்போது பயமில்லை, ஒருவிதமான நிமிர்வும், பெருமிதமும் மட்டுமே இருந்தது. தனது உதடுகளை மெல்ல நனைத்துக்கொண்டவள், அழுத்தமான குரலில் .…
“சந்துரு… சந்திரசேகர் IPS! என்னுடைய புருஷன்!” … என அழுத்தம் நிறைந்த குரலில் உரிமையுடன் சொன்னாள்
அந்த ஒற்றைப் பெயர் மண்டபத்தில் வீழ்ந்த இடி போல அதிர்வை ஏற்படுத்தியது. யாழினியின் தந்தையின் கைகள், அவனது தோள்பட்டையிலிருந்து தானாகவே நழுவி கீழே விழ, ஆணவத்தில் நிமிர்ந்து நின்ற அவரது தோள்கள் சட்டென்று தளர்ந்து போயின.
எதிரில் நின்றிருந்த இன்ஸ்பெக்டரோ, ஒரு நிமிடம் நிலைகுலைந்து போனார். தன் உயர் அதிகாரிக்கு முன்னால் துப்பாக்கியை நீட்டிய குற்ற உணர்ச்சியிலும், பயத்திலும் அவரது உடல் நடுங்கியது. சந்துருவின் ஐபிஎஸ் அதிகாரம் அங்கே இருந்த அனைவரின் அதிகாரத்தையும் ஒரே நொடியில் மௌனமாக்கியது.
சந்துரு மெல்லத் தன் தலையை நிமிர்த்தித் தன் மீசையை முறுக்கி விட்டபடி சிதம்பரத்தைப் பார்த்தவன்.
“என்ன மாமனாரே… நான் சொன்னது ஞாபகம் இருக்கா? ‘எல்லார் முன்னாடியும் வந்து உன் பொண்ணு கையைப் பிடிப்பேன்னு’ சொன்னேன்ல… இதோ பிடிச்சிட்டேன். இப்போ சொல்லு… !” என்று ஒரு கம்பீரமான சிரிப்புடன் கேட்டான்.
சிதம்பரம் பேச வார்த்தைகளின்றித் திகைத்து நிற்க, யாழினி சந்துருவின் கைகளைத் தன் கைகளால் இன்னும் பலமாகப் பற்றிக்கொண்டாள். அந்தப் பிடி, இனி எவராலும் பிரிக்க முடியாத ஒரு பந்தத்தின் சாட்சியாக அங்கே நிலைத்து நின்றது.
வேட்டை தொடரும் ..⚓
