Rolex 52

51மலை உச்சி மாளிகையின் பிரம்மாண்டமான பால்கனியில், உப்புக் காற்றும் அதிகாலைப் பனியும் கலந்து வீசிக்கொண்டிருந்தன.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து விரிந்திருந்த அந்தப் பெருங்கடலை உற்று நோக்கியபடி நின்றிருந்தான் ரோலக்ஸ். அவனது வாயில் புகைந்து கொண்டிருந்தது சுவிட்சர்லாந்து சுருட்டு.

அருகில் வந்து நின்ற பைரவன், கடலையும் ரோலக்ஸையும் மாறி மாறிப் பார்த்தான். அவனது குரலில் பெருமிதமும் பிரமிப்பும் பொங்கி வழழிந்தன.

“ரோலக்ஸ்… இந்தியா முழுக்கவும் நாமதான் ராஜா. இனிமே நம்மை அசைக்க எவனாலயும் முடியாது,” என்றான்.

ரோலக்ஸ் கடலையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனது முகத்தில் எந்தவிதமான இறுமாப்பும், அகந்தையின் நிழலும் வரவில்லை. அவன் தன் சுருட்டை மீண்டும் ஒருமுறை ஆழமாக இழுத்து, புகையைச் சீராக மேலே பறக்கவிட்டான்.

மாஃபியா உலகின் உச்சத்துக்கே சென்ற பிறகும், வெற்றியின் போதை அவனது எச்சரிக்கை உணர்வை மங்கச் செய்யவில்லை.

“ஆனால்…” பைரவன் தயக்கத்துடன் இழுத்த அந்த ஒற்றைச் சொல்… ரோலக்ஸின் கூர்மையான விழிகளைத் தன் பக்கம் திருப்ப வைத்தது.

ரோலக்ஸின் பார்வை தன் மீது விழுந்ததும், பைரவனின் உடம்பில் லேசான நடுக்கம் பரவியது. அத்தனை பேரரசையும் கட்டி ஆளும் ரோலக்ஸிடம் எதையும் மறைக்க முடியாது என்பதை அவன் அறிவான்.

ரோலக்ஸ்ன் உறைந்துபோனக் கண்கள், ‘சந்துரு விஷயமா?’ என்ற கேள்வியை மௌனமாக அவனிடம் எழுப்பின.

பைரவன் “ஆமாம் … !” என அமைதியாகத் தலையசைத்தான்.

ரோலக்ஸ் தன் வாயிலிருந்த சுருட்டை மெதுவாகக் கையில் எடுத்தான். தலையைச் சற்று நிமிர்த்தி, ‘என்ன விஷயம்?’ என்பது போலத் தன் புருவங்களை உயர்த்தினான்.

அவனது கம்பீரமான கண்களை நேருக்கு நேர் பார்த்த பைரவன், விழுங்கிவிட்டுப் பேசத் தொடங்கினான், “சந்துரு இப்போ அதிகாரப்பூர்வமா போலீஸ் அதிகாரி ஆயிட்டான் ரோலக்ஸ்… அவன் காக்கிச் சட்டையைப் போட்டுட்டான். அவனால நமக்கு எப்ப வேணாலும் ஆபத்து வரலாம். அவன் உனக்கு வெறும் எதிரி மட்டும் கிடையாது… தன் தந்தையைக் கொன்னவனைக் கண்டுபிடிக்கணும்கிற தனிப்பட்ட வெறியோட அலையுறவன்.

இப்போ அவன் கையில சட்டமும் இருக்கு, சாட்சியங்களை உருவாக்கும் அதிகாரமும் இருக்கு. அவன் உன்னைப் பிடிக்கிறதுல ரொம்ப மும்முரமா களத்துல இறங்கியிருக்கான். இதனால நமக்கு மிகப்பெரிய பிரச்சனை வர வாய்ப்பு இருக்கு ரோலக்ஸ்…” என பைரவன் பதற்றத்துடன் கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் ரோலக்ஸ் அமைதியாகக் கேட்டுக் கொண்டான்.

ஆனால், அவனது முகத்தில் எந்தவிதமான பயமோ, கலக்கமோ சிறிதும் தோன்றவில்லை. அவன் பைரவனின் எச்சரிக்கையைத் தன் மனதினுள் குறித்துக் கொண்டான்,  அவ்வளவுதான்.

மீண்டும் கடலை நோக்கித் திரும்பி, சுருட்டைப் பற்றவைத்து ஒரு நீண்ட புகையை இழுத்து ஊதினான். அவனது உதடோரம், வழக்கம்போல ஒரு மெல்லிய, ஆபத்தான புன்னகை தவழ்ந்தது.

சந்துரு காக்கிச் சட்டை போட்டது அவனுக்குப் பயத்தைத்தரவில்லை, மாறாக, வேட்டை இன்னும் சுவாரசியமாகப் போகிறது என்ற எண்ணத்தையே தந்தது.

பைரவனால் ரோலக்ஸைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ‘இந்தியாவையே தன் காலடியில் வைத்திருக்கும் இந்த மாஃபியா சக்கரவர்த்திக்கு சந்துரு ஒருவன் மட்டுமே அச்சுறுத்தலாக இருக்கிறான், அவன் இப்போ போலீஸாகவும் ஆகிவிட்டான்… ஆனால் ரோலக்ஸ் ஏன் இப்படி எதையும் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்கான்ன்?’ என்று பைரவன் மனதுக்குள் திண்டாடினான்.

இருப்பினும், பைரவன் அங்கே நகராமல் இன்னமும் தன் அருகிலேயே நிற்பதை கவனித்தான் ரோலக்ஸ்.

அவன் மீண்டும் பைரவன் பக்கம் திரும்பி, ‘வேற ஏதாவது சொல்ல வேண்டுமா?’ என்று தன் கண் அசைவினாலேயே வினவினான்.

பைரவன் “ஆமாம்” என்பது போலத் தலையசைத்தான்.

‘என்ன?’ என்று ரோலக்ஸ் தலையை அசைத்துக் கேட்க, பைரவன் அடுத்த பிரச்சனையை வெளிக் கொணர்ந்தான்.

“ரோலக்ஸ்… நமக்குக் கீழே தெற்கு எல்லையைக் கவனிச்சுக்குறானே ஜாகாரெட்டி… அவனைப் பத்தின விஷயம் தான்.”

ரோலக்ஸ் அமைதியாகத் தலையசைத்து, ‘தொடர்’ என்பது போலப் பார்த்தான்.

“அவன் நமக்குக் கொடுக்க வேண்டிய மாதாந்திரக் கமிஷன், கடத்தல் பங்குகள் எல்லாவற்றையும் சரியா கொடுத்துட்டுதான் இருக்கான். ஆனா… அவனோட சமீபத்திய நடவடிக்கைகள் எதுவுமே சரியில்லை ரோலக்ஸ். நாம போட்டு வச்சிருக்கிற எல்லைக் கட்டுப்பாடுகளை மீறி சில காரியங்களைச் செய்றான். முக்கியமா… பெண்கள் விஷயத்துல அவன் நடந்துக்குற விதம் ரொம்ப கொடூரமா இருக்கு!”

பைரவனின் குரலில் கோபம் ஏறியது, “அவன் தனக்கு இருக்கிற அதிகாரத்தைப் பயன்படுத்தி, அந்தப் பகுதி குடும்பப் பெண்களையும், பள்ளி செல்லும் சிறு பெண்களையும் கடத்துறான். அவங்களோட வாழ்க்கையைச் சீரழிச்சு, அவங்களை விபச்சாரத்துல தள்ளுறான். இதனால அந்தப் பகுதியே கதறுது ரோலக்ஸ்! நீ கடத்தல் பண்ணினாலும், ஏழை எளிய மக்களுக்கும் பெண்களுக்கும் எந்தக் கெடுதலும் வரக்கூடாதுன்னு ஒரு கண்ணியமான விதியை வச்சிருக்க… ஆனா ஜாகாரெட்டி உன் பேரையும் கெடுத்து, கொடூரத்தின் உச்சத்துக்குப் போயிட்டு இருக்கான்!”

பைரவன் சொல்லி முடித்ததும், ரோலக்ஸின் முகத்திலிருந்த அந்த மெல்லிய புன்னகை முற்றிலும் மறைந்தது. அவனது கண்கள் தணல் போலச் சிவந்தன!

ரோலக்ஸ் கடத்தல்காரன்தான், மாஃபியா தலைவன்தான்… ஆனால் அவன் எப்போதுமே பெண்களின் மரியாதையையும், அப்பாவி மக்களின் வாழ்க்கையையும் சிதைப்பதை வெறுப்பவன். தன் சாம்ராஜ்யத்திற்குள் இப்படிப்பட்ட ஒரு கேவலமான மிருகம் வளர்வதை அவன் ஒருபோதும் அனுமதிக்க மாட்டான்!

அடுத்த ஒரு மணி நேரத்தில்… மலை உச்சி மாளிகையின் ரகசியக் அடித்தளக் கிடங்கில், பயத்தின் நிழல் கவிழ்ந்திருந்தது.

சுற்றிலும் ஆயுதம் தாங்கிய ரோலக்ஸின் வீரர்கள் நின்றிருக்க, நடுவில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு மண்டியிட்டு அமர வைக்கப்பட்டிருந்தான் ஜாகாரெட்டி. அவனது ஆடம்பர ஆடைகள் எல்லாம் கிழிந்து, முகத்தில் பயத்தின் வியர்வை வழிந்தோடிக் கொண்டிருந்தது.

பிரதான கதவு திறக்கப்பட… ரோலக்ஸ் மெதுவாக உள்ளே நடந்து வந்தான். அவனது கரங்களில் அந்த கனரக ஷார்ட்கன் மிளிர்ந்தது.

ஜாகாரெட்டி அலறினான், “ரோலக்ஸ் ! என்னை மன்னிச்சிடு! நான் உனக்குச் சேர வேண்டிய கமிஷனை ஒரு ரூபாய் கூடக் குறைக்காம சரியா கட்டுறேனே ! என்னை ஏன் இப்படிப் புடிச்சுட்டு வந்தீங்க?”

ரோலக்ஸ் எதுவும் பேசவில்லை. அவன் மெதுவாக நடந்து வந்து, ஜாகாரெட்டியின் முன்னால் நின்றான்.

அடுத்த நொடி, ”படார்……..!’

ரோலக்ஸ் தன் கையில் இருந்த ஷார்ட்கனின் இரும்புப் பிடியால், ஜாகாரெட்டியின் தாடையில் ஓங்கி அடித்தான்! ஜாகாரெட்டியின் பற்கள் தெறித்து ரத்தத்துடன் தரையில் விழுந்தன. அவன் அலறியபடி பின்னால் சாய்ந்தான்.

ரோலக்ஸ் அவனை விடவில்லை. அவனது சட்டையைப் பிடித்துத் தூக்கி, சுவரோடு சேர்த்து நிறுத்தினான்.

தன் கனமான பூட்ஸ் கால்களால் ஜாகாரெட்டியின் வயிற்றிலும் நெஞ்சிலும் உதைத்தான். ஜாகாரெட்டி ரத்தத்தைச் கக்கினான்.

“ரோலக்ஸ் … என்னை விட்டுடு ! வலிக்குது !” ஜாகாரெட்டி கதறினான்.

ரோலக்ஸ் அவனது தலைமுடியைப் பிடித்துத் தன் முகத்திற்கு அருகே இழுத்தான். அவனது கண்கள் ஜாகாரெட்டியின் ஆன்மாவையே சுட்டெரிப்பது போலிருந்தன.

ரோலக்ஸ் தன் விரல்களால் மிக ஆக்ரோஷமாகச் சைகை செய்தான். பைரவன் அதை உரக்க வாசித்தான், 

“நீ எனக்குத் தர்ற கமிஷன் பணம் எனக்குப் பெரிசு இல்லை! நான் கடத்தல் செய்றேன், அரசாங்கத்துக்கு எதிரா இயங்குறேன்… ஆனா அப்பாவிப் பெண்களின் கண்ணீருலயும், சிறு பெண்களின் கதறலுலயும் நான் சாம்ராஜ்யம் நடத்தலடா!”

ரோலக்ஸ் தன் ஷார்ட்கனின் முனையை ஜாகாரெட்டியின் தொண்டைக் குழியில் அழுத்தினான்.

“இன்னைக்கு உன் உயிரைப் பிச்சையா விடுறேன். அடுத்த ஒரு மணி நேரத்துல… நீ கடத்தி வச்சிருக்கிற அத்தனை பெண்களையும் பாதுகாப்பா அவங்க குடும்பத்துக்கிட்ட சேர்க்கணும்! அவங்களுக்குத் தேவையான நஷ்ட ஈட்டைக் கொடுக்கணும். இதுக்கு மேல உன் எல்லைக்குள்ள ஒரு பெண் கதறினாலோ, நீ தேவையில்லாத வேலையைச் செஞ்சாலோ… உன் உடம்புல இருந்து தலையைத் துண்டிச்சு கடல்ல தூக்கி எறிஞ்சிடுவேன்! உன் உயிருக்கு இனி எந்த உத்தரவாதமும் இல்லை!”

ரோலக்ஸ் அவனை ஓங்கி உதைத்துத் தள்ளினான். ஜாகாரெட்டி ரத்த வெள்ளத்தில் விழுந்து, உயிருக்குப் பயந்து ரோலக்ஸின் கால்களைப் பிடித்துக் கதறினான்.

“இனிமே இந்தத் தப்பைச் செய்ய மாட்டேன் ரோலக்ஸ் ! நீங்க சொன்ன மாதிரியே அத்தனை பேரையும் விடுவிச்சுடுறேன் !” என்று அலறியபடி, தன் ஆட்களின் உதவியோடு அங்கிருந்து தப்பி ஓடினான்.

ரோலக்ஸ் தன் கைகளைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தான். அவனது இந்தத் துரிதமான, நேர்மையான நடவடிக்கை, அவனது அடியாட்களுக்கு இடையே அவன் மீதிருந்த மரியாதையை இன்னும் பல மடங்கு உயர்த்தியது.

நாட்கள் தங்களின் வேகத்தில் உருண்டோடின. ஏசிபி ஷர்மாவுடனான ரோலக்ஸின் கூட்டணி, இப்போது இந்திய எல்லைகளைத் தாண்டிச் சர்வதேச அளவில் ஒரு பிரம்மாண்டமான வலையமைப்பாக மாறியிருந்தது.

ஷர்மா ஒவ்வொரு வாரமும் புதிய சர்வதேசக் கப்பல்களின் ரகசிய ஆவணங்களையும், சுங்கத் துறையின் பாதுகாப்பு வரைபடங்களையும் கொண்டு வந்து கொடுப்பான். ரோலக்ஸும் பைரவனும் இணைந்து, அந்தத் திட்டங்களை மிகத் துல்லியமாக நிறைவேற்றினர்.

அரபிக் கடல், வங்கக் கடல் என அனைத்துப் பாதைகளிலும் ரோலக்ஸின் ரகசியக் கப்பல்கள் அசைந்தாடின.

டெல்லி மத்திய அரசியலின் மாபெரும் புள்ளியான சௌத்ரியின் முழுமையான ஆதரவும், அரசாங்கத்தின் மறைமுகப் பாதுகாப்பும் ரோலக்ஸிற்கு இருந்ததால், சுங்கத் துறையோ, மத்திய புலனாய்வு அமைப்புகளோ அவனது எல்லைப் பக்கம் வரத் தயங்கின.

ரோலக்ஸ் அடிக்கடி ரகசியமாக டெல்லிக்குச் சென்று சௌத்ரியைச் சந்தித்து வந்தான். டெல்லியின் ஆடம்பரமான நிழல் உலகக் கூட்டங்களில், ரோலக்ஸ் என்ற பெயர் ஒரு சகாப்தமாகப் பேசப்பட்டது.

தென்னகத்தின் விசாகப்பட்டினத் துறைமுகத்தில் தொடங்கிய அவனது பயணம், இப்போது இந்தியாவின் தலைநகரம் வரை தன் ஆதிக்கத்தைப் பரப்பியிருந்தது. ‘கடல் அரசன்’ ரோலக்ஸின் பெயர், எல்லைகளைக் கடந்து சர்வதேச மாஃபியாக்களின் மத்தியிலும் எதிரொலிக்கத் தொடங்கியது.

ஒரு நாள் நள்ளிரவு வேளை.

மலை உச்சி மாளிகையின் பால்கனியில் தனியாக அமர்ந்திருந்தான் ரோலக்ஸ். சுற்றிலும் அடர்ந்த நிசப்தம். கடலின் அலைகள் பாறைகளில் மோதும் மெல்லிய சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.

ரோலக்ஸ் தன் கையில் இருந்த சுருட்டை ஆழமாக இழுத்து புகையை பறக்கவிட்டான்.

அவனது மனக்கண்ணில்… மாபெரும் கடத்தல் பேரரசு, டெல்லி அரசியல்வாதிகளின் நட்பு, கையில் இருக்கும் அதிகாரம் என எதுவுமே ஓடவில்லை. அவனது எண்ணங்கள் அனைத்தும் ஒரே ஒரு நபரைச் சுற்றியே சுழன்று கொண்டிருந்தன!

‘சந்துரு எப்போது வருவான்?’ என்ற எண்ணம் அவனுள் ஓடிக் கொண்டிருந்தது.

அது பயத்தினால் வந்த எண்ணம் அல்ல, மாறாக, ஒரு மாபெரும் வேட்டைக்காரன் தன் நிகரான எதிரியை நேருக்கு நேர் சந்திக்கக் காத்திருக்கும் ஒருவித விசித்திரமான எதிர்பார்ப்பு!

எப்படி பார்த்தாலும், ஒரு நாள் சந்துரு தன்னைத் தேடி வருவான்… சட்டம் ஒரு பக்கமும், மாஃபியா சாம்ராஜ்யம் மறுபக்கமும் நின்று மோதும் அந்த மாபெரும் போர்க்களம் அமையும். அந்த நாளுக்காக அவன் மனம் தயாராகிக் கொண்டிருந்தது.

அப்போது… பால்கனியின் கதவு மெதுவாகத் திறந்தது.

மயூரா மெல்லிய நடை பயின்று உள்ளே வந்தாள். அவளது முகத்தில் ஒரு விவரிக்க முடியாத பேரொளியும், புன்னகையும் மிளிர்ந்தன.

ரோலக்ஸ் அவளது வருகையை உணர்ந்து திரும்பினான். அவளது முகத்தில் இருந்த மாறுதலையும், கண்களில் வழியும் ஆனந்தக் கண்ணீரையும் கவனித்தான். அவன் தன் சுருட்டைக் கீழே போட்டு அணைத்துவிட்டு, கவலையுடன் அவளருகே வந்தான்.

‘என்ன ஆச்சு மயூரா? ஏன் ஒரு மாதிரி இருக்க?’ என்று சைகையில் கேட்டான்.

மயூரா எதுவும் பேசவில்லை. அவளது உதடுகள் மெலிதாக நடுங்கின. அவள் மெதுவாக முன்னே வந்து, ரோலக்ஸின் வலது கையைப் பற்றியவள், அந்தக் கரத்தை மெதுவாகக் கீழே கொண்டு சென்று… தன் வயிற்றின் மீது வைத்தாள்!

ரோலக்ஸின் கை அவளது மென்மையான வயிற்றைத் தொட்ட அந்த விநாடி… பிரபஞ்சமே ஒரு கணம் உறைந்துபோனது!

மயூரா தன் கண்களை மூடி, தலையசைத்து அந்த அதிற்புதமான செய்தியை அவனுக்குத் தெரிவித்தாள், அவள் கர்ப்பமாக இருக்கிறாள்! அவனது குருதியை, அவனது வம்சத்தை தன் வயிற்றில் சுமக்கிறாள்!

அந்தச் செய்தியைக் கேட்ட அடுத்த நொடி… அத்தனை பாதாள உலகத்தையும் ஆளும் அந்த அசுரனின் கண்கள் கலங்கின!

இத்தனை காலம் ரத்தத்தையும், கொடூரத்தையும், எதிரிகளின் பிணங்களையும் மட்டுமே பார்த்திருந்த அந்த வேட்டைச் சிங்கத்தின் நெஞ்சிற்குள்… முதன்முறையாக தாய்மையின், தந்தைமையின் மாபெரும் பேரன்பு வெள்ளமாகப் பெக்கெடுத்தது!

ரோலக்ஸ் மயூராவை அள்ளியெடுத்துத் தன் நெஞ்சோடு இறுக்கமாக அணைத்துக் கொண்டான். அவளது நெற்றியில் தன் உதடுகளைப் பதித்தான். அவனது கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் துளிகள் சிந்தின.

அவன் தன் மாஃபியா அரியாசனத்தைக் கைப்பற்றியபோது கூட அடையாத ஒரு மாபெரும் மகிழ்ச்சியை, இந்தத் தருணத்தில் அடைந்தான்!

மறுநாள் காலை.

மலை உச்சி மாளிகை விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்தச் சந்தோஷச் செய்தியைக் கேட்ட பைரவன், மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுவிட்டான்.

“ரோலக்ஸ்! நம்ம சாம்ராஜ்யத்துக்கு அடுத்த வாரிசு வரப்போகுதுடா! இது சாதாரண விஷயம் இல்லை… இதை நாம் பூலோகமே வியக்குற அளவுக்குக் கொண்டாடணும்!” என்று கத்தினான் பைரவன்.

ரோலக்ஸின் உத்தரவின் பேரில், துறைமுகத்தின் அத்தனை தொழிலாளர்களுக்கும், கூலிகளுக்கும், அவனது படை வீரர்களுக்கும் மாபெரும் விருந்து உபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஆடைகளும், பொற்காசுகளும் வாரி வழங்கப்பட்டன.

மாளிகையின் பிரம்மாண்டமான தர்பார் அரங்கத்தில், விளக்குகள் ஜொலிக்க… இசை முழங்கக் கொண்டாட்டங்கள் களைகட்டின.

பைரவன் அனைவருக்கும் மதுவையும் உணவையும் பரிமாறி, உரக்கச் சிரித்துக் கொண்டிருந்தான்.

ரோலக்ஸ் தன் வெண்சூட்டில், மயூராவின் தோள்களை அணைத்தபடி பால்கனியில் வந்து நின்றான். கீழே கூடி நின்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும், அடியாட்களும் ரோலக்ஸையும் மயூராவையும் பார்த்து உரக்கக் குரல் எழுப்பி வாழ்த்தினர்.

“கடல் அரசன் ரோலக்ஸ் வாழ்க! வாழ்க!” என்ற முழக்கம் அந்தப் பெருங்கடலின் அலைகளையும் தாண்டி எதிரொலித்தது.

ரோலக்ஸ் தன் கையில் இருந்த வைன் கோப்பையை உயர்த்திப் பிடித்துத் தன் மக்களுக்கு நன்றி தெரிவித்தான். அவனது முகத்தில் ஒரு முழுமையான, நிறைவான புன்னகை மிளிர்ந்தது.

ஆனால்… அந்த மாபெரும் கொண்டாட்டத்திற்கு நடுவே, கடலின் தொலைதூரத்தில் இருந்து வீசியக் காற்று, ஏதோ ஒரு புதிய புயலின் வரவை உணர்த்துவது போலக் குளிர்ந்து வீசியது.

காவல் துறையில் பொறுப்பேற்றிருக்கும் ஐபிஎஸ் அதிகாரி சந்துரு… ரோலக்ஸின் இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தை வீழ்த்தத் தன் வியூகங்களை அமைக்கத் தொடங்கியிருந்தான்!

ஒரு பக்கம் பிறக்கப்போகும் புது உயிர் தந்த மகிழ்ச்சி… மறுபக்கம் காக்கிச் சட்டையில் வரும் பழைய எதிரியின் அச்சுறுத்தல்!

வேட்டை தொடரும் ..⚓

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!