54
காலத்தின் ரதச் சக்கரங்கள் தட தடவென உருண்டோடின.
அந்த மலை உச்சி மாளிகையில் சாரு என்னும் அந்தப் பிஞ்சு மொட்டு, தன் குட்டி அடியெடுத்து வைத்து வளரத் தொடங்கியது. அகில உலக அண்டர்வேர்ல்ட் மாஃபியாவையே நடுங்க வைக்கும் அந்த மாளிகையில், இப்போது எந்த நேரமும் ஒரு பிஞ்சு குழந்தையின் சிரிப்பொலியும், கொஞ்சல் சத்தமுமே நிறைந்திருந்தன.
அந்தக் குழந்தையுடன் தன் பெரும்பாலான நேரத்தைச் செலவிட்ட பைரவன் ஒருவன் இருந்தான்
இரவு நேரங்களில் ரோலக்ஸ் தன் ரகசியக் கடத்தல் திட்டங்களில் மூழ்கியிருக்கும்போது, சாருவை தன் தோள்களில் சுமந்துகொண்டு மாளிகையின் பால்கனியில் உலாவுவது பைரவனின் வழக்கமானது. குழந்தைக்கு நிலவைக் காட்டிச் சோறூட்டுவதும், அதன் பிஞ்சு விரல்களைப் பிடித்து நடை பயிற்றுவிப்பதும் பைரவனின் தினசரிப் பணியாக மாறியது.
ஒரு நாள் மாலை.
மயூரா பூட்டிய அறைக்குள் பைரவனிடம் மிகவும் தயக்கத்துடன் ஒரு விஷயத்தைப் பேசத் தொடங்கினாள்.
“பைரவா… நீயும் ரோலக்ஸும் தோளோடு தோள் நின்று இந்தச் சாம்ராஜ்யத்தை உருவாக்கினீங்க. இப்போ எல்லாமே கைக்கு வந்துடுச்சு. உனக்கும் வயசாகுது… நீ ஏன் ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு, உனக்குன்னு ஒரு குடும்பத்தை உருவாக்கக் கூடாது? ரோலக்ஸ் கிட்ட நான் இதைப் பத்திப் பேசவா?” என்று சைகையில் வினவினாள்.
மெலிதாகப் புன்னகைத்த பைரவனின் கண்களில் ஒரு உறுதியான ஒளி மிளிர, “தங்கச்சி… எனக்குன்னு தனியா ஒரு குடும்பம், பொண்டாட்டி, குழந்தைன்னு எதுவுமே தேவையில்லை. இந்தச் சாருப் பயல்தான் என் பையன்! நீதான் என் தங்கச்சி! என் ரோலக்ஸ் தான் என் உலகம்! ரோலக்ஸ் இந்த உலகத்துக்கே ராஜாவா வாழணும்… அவனுக்கு எந்த ஆபத்தும் வராம காக்குறதுதான் என் வாழ்க்கையோட ஒரே லட்சியம். அதுக்காக என் உயிரைக் கொடுக்கவும் நான் தயாரா இருக்கேன்! எனக்குன்னு வேற ஒரு வாழ்க்கை இந்த உலகத்துல கிடையவே கிடையாது!” என பைரவனின் குரல் நெகிழ்ச்சியில் தழுதழுத்தது.
பைரவன் அந்த வார்த்தைகளைச் சத்தியம் செய்வது போல அழுத்தமாகக் கூறினான். அந்தக் கணத்தில்… கதவோரம் நின்று இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ரோலக்ஸின் கண்கள் கலங்கின.
ரோலக்ஸ் மெதுவாக உள்ளே வந்தான். தன் வாழ்நாளில் யாரிடமும் காட்டாத உணர்ச்சிப் பெருக்கோடு, தன் ஆருயிர் நண்பன் பைரவனை ஓங்கி இறுக்கமாகத் தழுவிக் கொண்டான்!
இரு மாபெரும் அசுரர்களின் மெளனமான அணைப்பில், அந்த மாசற்ற நட்பு விண்ணை முட்டும் அளவிற்கு ஜொலித்தது.
சாருவுக்குத் தன் தாய் மயூராவிற்கும், தந்தை ரோலக்ஸிற்கும் அடுத்தபடியாக மிகவும் பிடித்த ஒரே ஜீவன் பைரவன்தான். அவனைக் கண்டாலே குழந்தை ஓடிவந்து அவனது கழுத்தைக் கட்டிக்கொள்ளும்.
ரோலக்ஸும் தன் மகனுக்கு மிகப்பெரிய பாதுகாப்பாக பைரவனே இருப்பான் என்று தீர்க்கமாக நம்பினான். சுற்றிலும் ஆயிரம் எதிரிகள் இருக்கும் இந்த நிழல் உலகத்தில், தன் ரத்தத்தை விட பைரவனின் விசுவாசத்தையே ரோலக்ஸ் பெரிதாக மதித்தான்.
அன்று நள்ளிரவு, மாளிகையின் ரகசியத் தர்பார் அறையில் பைரவன் ஒரு முக்கியச் செய்தியோடு வந்து நின்றான். ரோலக்ஸ் தன் சுருட்டைப் புகைத்தபடி, வரைபடங்களை ஆராய்ந்து கொண்டிருந்தான்.
“ரோலக்ஸ்… நம்ம ஆட்கள் தமிழ்நாட்டு எல்லையில இருந்து ஒரு தகவல் கொண்டு வந்திருக்காங்க, சந்துரு… இப்போ தமிழ்நாட்டு எல்லைக் காவல் பொறுப்பை அதிகாரப்பூர்வமா ஏத்துக்கிட்டான். நம்ம எல்லைப் பாதைகள், ரகசியக் கடத்தல் வழிகள் எல்லாத்தையும் அவன் தீவிரமாகக் கண்காணிக்க ஆரம்பிச்சிருக்கான்.” என்றான்
ரோலக்ஸ் தன் கையிலிருந்த சுருட்டை மெதுவாக வாயிலிருந்து எடுத்தான். அவன் முகத்தில் எந்தப் பதற்றமும் வரவில்லை. ‘இருக்கட்டும், விடு’ என்பது போலத் தன் தோள்களை மெல்ல உயர்த்தி, அலட்சியமாக ஒரு சைகை செய்தான்.
ஆனால் பைரவன் அமைதியடையவில்லை. “ரோலக்ஸ்… அவன் சாதாரண போலீஸ் இல்லை. நம்மளைப் பத்தின அத்தனை விபரங்களையும் திரட்டிட்டு வர்றான். நாம ஏன் தேவையில்லாம அவனைப் பக்கத்துல அனுமதிக்கணும்? நாம ஷர்மா கிட்ட சொல்லி, டெல்லியில இருக்கிற மந்திரியோட ஆதிக்கத்தைப் பயன்படுத்தி சந்துருவை வேற ஏதோ வடமாநிலத்துக்கு தூரமா டிரான்ஸ்ஃபர் பண்ண வச்சிடலாமே?” என்று யோசனை கூறினான்.
ரோலக்ஸின் கண்கள் நொடிநேரத்தில் உறைந்துபோயின. அவன் தன் கையை உயர்த்தி, ‘வேண்டாம்!’ என்று உறுதியாக மறுத்தான்.
தன் எதிரியைப் பின்வாசல் வழியாகத் துரத்துவது ஒருபோதும் ரோலக்ஸின் பாணி அல்ல! சந்துரு நேருக்கு நேர் வரட்டும்… அவனது காக்கிச் சட்டையின் அதிகாரத்தை இந்த மாஃபியா சக்கரவர்த்தி தன் சொந்த மண்ணில் வைத்துச் சந்திக்கத் தயாராகவே இருந்தான்.
அதேநேரம்… பைரவன் ஏசிபி ஷர்மா மீது தனக்கிருக்கும் சந்தேகத்தை மீண்டும் வெளிப்படுத்தினான். “ரோலக்ஸ்… எனக்கு அந்த ஷர்மா மேல முழு நம்பிக்கை வரலை. அவன் அதிகாரத்துக்காகவும் பணத்துக்காகவும் மட்டும்தான் நம்ம கூட இருக்கான். அரசாங்கத்துல இருக்குறவன் எப்போ வேணாலும் நிறம் மாறுவான். அவன்கிட்ட நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்,” என்று எச்சரித்தான்.
அமைதியாகத் தலையசைத்த ரோலக்ஸ்க்கு, ஷர்மா ஒரு சுயநலவாதி என்பது நல்லவே தெரியும். ஆனால், டெல்லி அரசியலின் பலத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் வரை ஷர்மாவைத் தூரத்திலேயே வைத்துப் பழகுவதே ராஜதந்திரம் என்பதை அவன் பைரவனுக்குத் தன் புருவ அசைவில் உணர்த்தினான்.
வருடங்கள் அதிவேகமாக உருண்டோடின. சாரு இப்போது சுட்டித்தனமாக ஓடிப்பிடித்து விளையாடும் சிறுவனாக வளர்ந்திருந்தான்.
அன்று காலை.
விசாகப்பட்டினத் துறைமுகத்தை அடுத்துள்ள ஒரு கிராமத்தில் இருந்து, ஒரு ஏழைத் தந்தை கதறியபடி ரோலக்ஸின் மாளிகை வாசலில் வந்து விழுந்தார்.
அவரது பத்து வயதுச் சிறுமியை, அந்தப் பகுதியில் இருந்த ஒரு கொடூரமான தாதா கடத்திச் சென்று, சீரழித்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டான் என்ற செய்தி ரோலக்ஸிற்கு வந்தது. அந்தத் தந்தையின் நெஞ்சைப் பிளக்கும் கதறல்… ரோலக்ஸின் உள்ளிருந்த மிருகத்தைக் கிளறிவிட்டது!
ரோலக்ஸின் கண்கள் ரத்தச் சிவப்பாக மாறின. அவன் தன் வழக்கமான நேர்மையின் கோட்டை மீறிய அந்த அரக்கனை மன்னிக்கத் தயாராக இல்லை.
அவன் பைரவனைப் பார்த்தான். ஒற்றைச் சைகை! ‘அவனோட தலையைக் கொய்துட்டு வாடா!’ என்றான் ..
பைரவன் தன் ஏகே-47 துப்பாக்கியோடு புறப்பட்டான். அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள்… அந்த கொடூரத் தாதாவின் தலை துண்டிக்கப்பட்டு, அவனது உடலை ரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்டுத் திரும்பினான் பைரவன்.
பைரவன் தன் உடம்பில் தெளித்திருந்த எதிரியின் ரத்தக் கரைகளைத் துடைத்துவிட்டு, அவசரமாக மாளிகைக்குள் நுழைந்தான்.
அங்கே மேல் மாடியில், சாரு தன் பொம்மை காரை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். பைரவனைக் கண்டதும், “மாமா மாமா!” என்று கத்தியபடி ஓடிவந்து அவனது கால்களைக் கட்டிக்கொண்டான்.
பைரவன் சிரித்துக்கொண்டே குழந்தையைத் தூக்கித் தன் மார்போடு அணைத்து, அவனது கன்னத்தில் முத்தமிட்டான்.
ஆனால்… பால்கனியில் இருந்து இந்தச் காட்சியைக் பார்த்துக் கொண்டிருந்த ரோலக்ஸின் நெஞ்சிற்குள்… ஒரு மெல்லிய, உறைந்த பயம் ஊடுருவியது!
தன் கை ரத்தக் கறையால் நனைந்திருக்கிறது… தன் சாம்ராஜ்யம் பிணங்களின் மீது நிற்கிறது… தன் நண்பன் பைரவன் கூடக் கொடூரமானக் கொலைகளைச் செய்துவிட்டு வந்து தன் மகனைக் கொஞ்சுகிறான்!
மயூரா அன்று கேட்ட கேள்வி ரோலக்ஸின் நினைவுக்கு வந்தது, ‘நாளைக்கு நம்ம குழந்தைக்கு ஒரு ஆபத்து வந்தா என்ன பண்ணுவ?’
இந்த ரத்தமும் வன்முறையும் நிறைந்த உலகம், என்றாவது ஒருநாள் தன் பிஞ்சு மகன் சாருவின் உயிரைப் பறித்துவிடுமோ என்ற அசாத்தியமான தவிப்பு ரோலக்ஸின் இதயத்தை முதன்முறையாக உலுக்கியது!
அதே நேரம், மாளிகையின் பிரம்மாண்டமான முன்றிலில், ஏசிபி ஷர்மாவின் போலீஸ் வண்டி வந்து நின்றது.
மேலே பால்கனியில் நின்றிருந்த பைரவன், காரில் இருந்து இறங்கிய ஷர்மாவைப் பார்த்ததும் ரோலக்ஸிடம் வந்தவன், “ரோலக்ஸ்… அந்த ஷர்மா வந்திருக்கான். எனக்கு என்னவோ இவன் வருகை சரியா படலை. இவன் விஷயத்துல நீ ரொம்ப தூரமாவே இரு!” என்று மீண்டும் எச்சரித்தான்.
ரோலக்ஸ் தன் வெண்சூட்டின் பொத்தான்களைப் போட்டுக் கொண்டு திரும்பி நின்றான்..
வழக்கம் போல பாணை மென்றுகொண்டே ஏசிபி ஷர்மா சிரித்த முகத்துடன் உள்ளே நுழைந்தான். பழைய தோழமையுடன் ரோலக்ஸின் தோள்களைத் தட்டிப் பேசினான்.
“ரோலக்ஸ்! எப்படி இருக்க? உன் சாம்ராஜ்யம் இந்தியாவையே ஆட்டுவிக்குதுன்னு டெல்லியில ஒரே பேச்சுதான்!” என்று புகழ்ந்தான் ஷர்மா.
ரோலக்ஸ் அமைதியாகத் தலையசைத்து, அவனுக்கு மதுவைப் பரிமாறச் சொன்னான்.
ஷர்மா ஒரு மடக்கு மதுவை அருந்திவிட்டு, தன் உண்மையான விஷயத்திற்கு வந்தான்.
“ரோலக்ஸ்… டெல்லி அமைச்சர் சௌத்ரிடம் இருந்து ஒரு முக்கியமான தகவல் வந்திருக்கு. அந்தமான் வளைகுடாவை ஆளும் டேனியல் உனக்கு அடங்கிட்டான் தான்… ஆனா சர்வதேச அளவில் அவனுக்கு பெரிய மாஃபியா கனெக்ஷன்ஸ் இருக்கு. சௌத்ரி என்ன நினைக்கிறார்னா… நீயும் டேனியலும் முழுமையாகக் கைகோர்த்துச் செயல்பட்டா, ஆசிய கண்டத்தின் ஒட்டுமொத்தக் கடல் பாதையையும் நாம ஆளலாம்!”
ரோலக்ஸ் தன் புருவங்களை உயர்த்த, ஷர்மா தொடர்ந்தான் “அதுக்காக, நடுக் கடலில் ஒரு மாபெரும் சொகுசுக் கப்பலில் பிரம்மாண்டமான ‘அண்டர்வேர்ல்ட் பார்ட்டி’ ஏற்பாடு செய்யப்பட்டிருக்கு. ஆசியாவின் முக்கியத் தாதாக்கள் அனைவரும் தங்கள் குடும்பங்களோடு அங்க வர்றாங்க. நீயும் உன் மனைவி மயூரா, குழந்தை சாருவோட அங்க வரணும்னு அமைச்சர் விரும்புகிறார்! குடும்பங்களோடு சந்திக்கும் போதுதான்… அந்த நட்பு இன்னும் ஆழமாகும், சந்தேகங்கள் தீரும்னு அமைச்சர் சொல்றாரு.”
ரோலக்ஸ் யோசித்தான். குடும்பத்துடன் நடுக்கடலுக்குச் செல்வது ஆபத்தானதுதான். ஆனால், சௌத்ரியின் வார்த்தையை மீறினால் அரசியல் ஆதரவு இழக்க நேரிடும்.
மேலும், டேனியலைத் தன் முழுமையானக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இது ஒரு நல்ல வாய்ப்பு என்று கருதிய ரோலக்ஸ்… அந்தப் பார்ட்டிக்குச் செல்லச் சம்மதித்துத் தலையசைத்தான்.
திட்டமிட்டபடி, அந்த நள்ளிரவு வேளையில்… விசாகப்பட்டினத் துறைமுகத்தில் ஒரு பிரம்மாண்டமான சொகுசுக் கப்பல் மிதந்து கொண்டிருந்தது.
கப்பல் முழுதும் விளக்குகளால் ஜொலித்தது. ஆனால், அதன் பாதுகாப்பு அசாத்தியமானதாக இருந்தது.
ரோலக்ஸ் தன் கம்பீரமான வெண்சூட்டில், மனைவி மயூரா, மகன் சாருவை அழைத்துக் கொண்டு கப்பலை நோக்கி வந்தான். அவனுடன் அதிநவீன தானியங்கித் துப்பாக்கிகள் ஏந்திய பத்து அனுபவமிக்கப் பாதுகாப்பு வீரர்களும் அணிவகுத்தனர்.
ஆனால்… அவர்கள் கப்பலில் ஏறும் தருணத்தில், ரோலக்ஸிற்கு ஒரு அவசர ரகசியத் தகவல் வந்தது!
குஜராத் எல்லையில் அவர்கள் அனுப்பிய பல கோடி மதிப்புள்ள ஆயுதக் கன்டெய்னர் ஒன்றைச் சுங்கத் துறை அதிகாரிகள் வளைத்துவிட்டனர் என்ற செய்தி அது!
ரோலக்ஸின் கண்கள் சுருங்கின. அந்த ஆயுதச் சரக்கு டெல்லி அமைச்சருக்கு உரியது. அது கைமாறாவிட்டால் மாபெரும் பிரச்சனை வெடிக்கும். உடனே ரோலக்ஸ் பைரவனைப் பார்த்தான்.
“பைரவா… நீ உடனே குஜராத் எல்லைக்குப் புறப்பட்டுப் போ! அந்தச் சரக்கைப் பாதுகாப்பா மீட்டு டெல்லிக்கு அனுப்பு!” என்று சைகையில் உத்தரவிட்டான்.
பைரவனின் நெஞ்சு தூக்கி வாரிப்போட்டது!
“ரோலக்ஸ்! என்ன பேசுற நீ? இந்த நேரத்துல உன்னையும் தங்கச்சியையும் குழந்தையையும் தனியா விட்டுட்டு நான் எப்படிப் போவேன்? என் மனசு ஏதோ தப்பா சொல்லுதுடா! நான் வரலை… வேற யாரையாவது அனுப்பு!” என்று பைரவன் பதற்றத்தில் துடித்தான்.
அவனது உள்ளுணர்வு… ஏதோ ஒரு கொடூரமான ஆபத்து ரோலக்ஸைச் சூழப்போகிறது என்று எச்சரித்துக்கொண்டே இருந்தது!
அந்த நள்ளிரவில், தன் உயிரினும் மேலான நண்பனையும், தங்கச்சியையும், பிஞ்சு குழந்தையையும் தனியாக விட்டுச் செல்ல பைரவனின் மனம் சம்மதிக்கவில்லை. அவனது நெஞ்சுக்குள் ஒரு பெரிய மனப்போராட்டமும் தவிப்பும் வெடித்தன.
அப்போது அங்கே வந்த ஷர்மா, பைரவனின் தோளைத் தொட்டான். ” பைரவா… ஏன் தேவையில்லாம பயப்படுற? ரோலக்ஸ் கூடத் தான் நானும் இருக்கேனே! அதுமட்டும் இல்லாம பத்து அதிநவீன ஆயுதம் தாங்கிய வீரர்கள் கூட வர்றாங்க. நடுக்கடல்ல டேனியலோட பாதுகாப்பு வேற இருக்கு. நான் ரோலக்ஸைப் பத்திரமா பார்த்துப்பேன். நீ போய் அந்த டெல்லி சரக்கைக் கவனி!” என்று உத்தரவாதம் அளித்தான் ஷர்மா.
பைரவன் ஷர்மாவின் கண்களை உற்றுப் பார்த்தான். அவனது வார்த்தைகளில் உண்மை இருக்கிறதா அல்லது நச்சரவம் ஒளிந்திருக்கிறதா என்று அவனால் கணிக்க முடியவில்லை.
ரோலக்ஸ் பைரவனின் கையைப் பிடித்துத் தட்டி, ‘நான் பார்த்துக்கிறேன்… நீ புறப்படு!’ என்று கட்டளையிட்டான்.
வேறு வழியில்லாமல்… கனத்த இதயத்தோடும், அசாத்தியமானப் பயத்தோடும் பைரவன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான். அவனது கண்கள் கப்பலையே பின்னோக்கிப் பார்த்தவாறு இருந்தன.
பிரம்மாண்டமான அந்தக் கப்பல்… சைரன் ஒலியுடன் நடுக்கடலை நோக்கித் தன் பயணத்தைத் தொடங்கியது.
கப்பலின் மேல்தளத்தில் ரோலக்ஸ் தன் மனைவி மயூராவையும், மகன் சாருவையும் அணைத்தபடி நின்றிருந்தான். பக்கத்திலேயே ஷர்மாவும், துப்பாக்கி ஏந்திய வீரர்களும் நின்றிருந்தனர்.
சுற்றிலும் அடர்ந்த க இருள்… அடியில் ஆழமான பெருங்கடல்!
அந்த நள்ளிரவில் மிதந்து செல்லும் சொகுசுக் கப்பல்… ரோலக்ஸின் வாழ்நாளின் மாபெரும் ஆபத்துக்கான மேடையாக மாறக் காத்துக் கொண்டிருந்தது!
வேட்டை தொடரும் ..⚓
