57
கொல்கத்தாவின் அந்த ரகசிய வீட்டின் குளிரூட்டப்பட்ட அறையில், விளக்குகளின் ஒளி மங்கலாக ஊசலாடிக் கொண்டிருந்தது. ஜன்னல் கண்ணாடிகளில் வீசிய மழையின் சாரல் சொட்டுச் சொட்டாக வழிந்தோடி, அந்த இரவின் சோகத்தை மேலும் கூட்டிக் காட்டியது.
“அப்போ… ரோலக்ஸ்?!”
பைரவனின் குரல் உடைந்து, தொண்டைக்குள்ளேயே உறைந்து வெளிப்பட்டது. அவனது விழிகள் அகல விரிந்து நிலைகுத்தி நின்றன. தன் வாழ்நாளின், ஆருயிர் நண்பனாக மதித்த ரோலக்ஸ்… நடுக்கடலில் எமனுடன் போராடிக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணமே அவனது உடலை ஒரு கணம் நடுங்கச் செய்தது. அவனது உள்ளம் ஒரு பெரும் சுமையால் அழுத்தப்பட்டது.
கணேஷ் தன் தடிமனான கரங்களால் பைரவனின் தோள்களைப் பிடித்துப் பலமாக உலுக்கினான். அவனது முகத்தில் வியர்வையும் பதற்றமும் கலந்திருந்தன.
“தெரியாது பைரவா! ரோலக்ஸ் இன்னும் உயிரோடு இருக்கானா இல்லையா எதுவுமே எனக்குத் தெரியாது!”
கணேஷின் குரலிலும் ஒருவிதத் தவிப்பு அப்பட்டமாகத் தெரிந்தது. அவன் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுத் தொடர்ந்தான், “ஆனா… எனக்கு ஆழமான நம்பிக்கை இருக்குடா! ரோலக்ஸ் யாராலும் அவ்வளவு சீக்கிரம் சாய்க்க முடியாத ஒரு மாபெரும் சிங்கம்! அதுக்கப்புறம் அவன் கிட்ட இருந்து எந்தவிதமான தகவலும் வரலைங்கிறதுதான் எனக்கும் பயத்தைக் கொடுக்குது. ஆனா நாம பொறுத்திருந்து பார்ப்போம்… எதுக்கும் அவசரப்பட வேண்டாம். ரோலக்ஸ் ஏற்கனவே சாட்டிலைட் செய்தியில சொன்னதுபோல… நீ அவனுக்கு எதிராகவே செயல்படுவது போல உலகத்தை நம்ப வைக்கணும் பைரவா!”
பைரவன் அதிர்ச்சியுடன் தன் தலையை நிமிர்த்தினான். அவனது கண்கள் சிவந்திருந்தன.
“நீ இப்பவே விசாகப்பட்டினம் திரும்பு,” கணேஷ் தீர்க்கமான குரலில் கூறினான்.
“அங்க என்ன நடக்குதுங்கிறதை நீ ரோலக்ஸுக்கு எதிரியா மாறின மாதிரி காட்டிட்டு உள்ளிருந்து கவனி. அவனுக்கு எதிராகச் சதி செஞ்சவங்க யாருன்னு நாம துல்லியமா கண்டுபிடிக்கணும். நீயும் ரோலக்ஸுக்கு எதிரி போலவே நடந்துகிட்டா மட்டும்தான் அந்த வஞ்சகர்களை வெளியே கொண்டுவர முடியும். ‘ரோலக்ஸ் இறந்து விட்டான்’ அப்படின்னு அதிகாரப்பூர்வமா தகவலைப் பரப்பு! அந்த மரணத்துக்கு நீயே காரணம்ங்கிற மாதிரியும் ஒரு பொய்யான பிம்பத்தை உருவாக்கு! இது ரோலக்ஸ் ஓட உத்தரவு பைரவா!”
கணேஷ் சொல்லி முடித்ததும், பைரவன் பேச்சற்று அமர்ந்திருந்தான். தன் உயிரினும் மேலான நண்பனுக்குத் துரோகி பட்டம் சுமப்பதா? அவனது சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டாட்டம் போடுவதா? அந்த எண்ணமே அவனது ஆன்மாவை எரித்தது.
நெஞ்சம் கொதித்து வெடித்தாலும், ரோலக்ஸுடைய சொல்லை மீறுவது அவனது ரத்தத்திலேயே இல்லை. நெடுநேர மௌனத்திற்கும் ஆழ்ந்த யோசனைக்கும் பிறகு, இருவரும் தங்கள் அடுத்தகட்ட வியூகங்களை ரகசியமாகத் திட்டமிட்டு ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
நாட்கள் அதிவேகமாக உருண்டோடின.
கொல்கத்தாவிலிருந்து புறப்பட்ட பைரவன் மீண்டும் விசாகப்பட்டினத்திற்குத் திரும்பினான். ரோலக்ஸ் விட்டுச் சென்ற அந்தப் பிரம்மாண்டமானக் கடத்தல் சாம்ராஜ்யத்தின் ஆட்சிப் பொறுப்பைத் தன் கைக்குக் கொண்டு வந்தான். ‘ரோலக்ஸ் வீழ்ந்துவிட்டான், இனி இந்தச் சாம்ராஜ்யத்தின் ஒரே அதிபதி பைரவன் தான்’ என்று நிழல் உலகத்தையே அதிர வைத்தான். ஊடகங்களும், மற்ற மாஃபியா கும்பல்களும் பைரவன் தான் ரோலக்கைக் கொன்றான் என்று நம்பத் தொடங்கின.
விசாகப்பட்டினத்தின் நள்ளிரவுக் கடல் அலைகள், இருண்ட பாறைகளில் மோதி ஆக்ரோஷமாகச் சிதறிக் கொண்டிருந்தன. கடல் காற்றின் உப்புத் தன்மையோடு, இப்போது ரத்தத்தின் வாடையும் கலந்து வீசத் தொடங்கியிருந்தது.
சில வாரங்களுக்கு முன்பு வரை, அந்தத் துறைமுக நகரம் ரோலக்ஸ் என்ற ஒற்றைச் சிங்கத்தின் கர்ஜனைக்குக் கட்டுப்பட்டு அமைதியாகக் கிடந்தது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழ். கொல்கத்தாவில் இருந்து தனது உயர் அதிகாரிப் பதவியை விசாகப்பட்டினத்திற்குத் தடாலடியாக மாற்றிக் கொண்டு வந்து சேர்ந்தான் கணேஷ். வெளியுலகைப் பொறுத்தவரை அவன் ஒரு நேர்மையான அதிகாரி. ஆனால், நிழல் உலகைப் பொறுத்தவரை அவன் ரோலக்ஸின் சாம்ராஜ்யத்தைப் பாதுகாக்க வந்திருக்கும் ஒரு கண்ணுக்குத் தெரியாத கவசமாக இருந்தான்.
கணேஷ் விசாகப்பட்டினத்தில் காலடி எடுத்து வைத்த அதே நேரத்தில், நிழல் உலகச் சாம்ராஜ்யத்தின் மத்திய சிம்மாசனத்தில் முடிசூடா மன்னனாக கம்பீரமாக அமர்ந்திருந்தான் பைரவன். ‘ரோலக்ஸ் வீழ்ந்துவிட்டான், அவனது வீழ்ச்சிக்குப் பைரவனே காரணம்’ என்ற செய்தி காட்டுத்தீ போலப் பரவியிருந்தது. பைரவன் இப்போது ஒரு துரோகியாக, அதே சமயம் அசைக்க முடியாத புதிய சர்வாதிகாரியாக அந்த நகரத்தின் மாஃபியா உலகத்தை ஆண்டு கொண்டிருந்தான்.
ஆனால், வெளியே இரும்புக் கவசமிட்ட அரக்கனாகக் காட்சியளித்த பைரவனின் மனதிற்குள், ஒரு கொடூரமான தவிப்பும், எரியும் எரிமலை போன்ற ஆத்திரமும் அனுதினமும் தகதித்துக் கொண்டிருந்தன.
பைரவன் ரோலக்ஸின் சிம்மாசனத்தில் அமர்ந்ததை அந்த நகரத்தின் மற்ற சிறு சிறு கடத்தல் கும்பல்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. காசி என்பவனின் தலைமையில் முப்பதுக்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய கூலிப்படையினர் பைரவனை வீழ்த்தத் திட்டம் தீட்டினர்.
அன்றைய நள்ளிரவு, விசாகப்பட்டினம் துறைமுகத்தின் Warehouse ல் அடைமழை கொட்டிக் கொண்டிருந்தது. பைரவன் தன்னந்தனியாகத் தன் கருப்பு நிற ஜீப்பில் அங்கு வந்து இறங்கினான். மழையில் நனைந்தபடி அவன் நடந்து வரும்போதே, காசியின் ஆட்கள் அவனை நாலாபுறமும் சூழ்ந்து கொண்டனர். ஒவ்வொருவர் கையிலும் துப்பாக்கிகளும், பளபளக்கும் வீச்சரிவாள்களும் இருந்தன.
முன்னால் வந்து நின்ற காசி , கேலியாகச் சிரித்தான். “என்ன பைரவா… உனக்குச் சோறு போட்ட உன் முதலாளி ரோலக்ஸையே நடுக்கடல்ல காவு கொடுத்துட்டு, இன்னைக்கு நீ சிம்மாசனத்துல உட்கார்ந்துட்டியா? எசமானனுக்கே துரோகம் பண்ண நாய்தானேடா நீ! உன்னை எல்லாம் உயிரோட விடக் கூடாது…” என்று காசி கொக்கரித்தான்.
துரோகி… நாயே… இந்த வார்த்தைகள் பைரவனின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல் இருந்தது. தான் ஒரு துரோகி அல்ல, தன் நண்பனுக்காக தன் உசுரையே கொடுக்கும் விசுவாசி என்பதை எப்படி இந்த நாய்களுக்குப் புரிய வைப்பான்? அவனது கோபம் எல்லை மீறியது.
பைரவன் மெல்லத் தலையை நிமிர்த்தினான். அவனது கண்கள் மழையிலும் சிவந்து கொழுந்துவிட்டு எரிந்தன. அவன் தன் இடுப்பில் சொருகி இருந்த இரண்டு பெரிய கத்திகளை மெதுவாக உருவினான். இரும்பும் இரும்பும் உரசும் அந்தச் சத்தம் அந்த அமைதியான இரவில் மரணத்தின் அழைப்பு மணியாக ஒலித்தது.
“என் ரோலக்ஸ் பத்திப் பேச… உனக்குத் தகுதியில்லைடா…” என்று மனதிற்குள் முணுமுணுத்த பைரவன், அடுத்த நொடி ஒரு பசியெடுத்த சிறுத்தையைப் போல அவர்கள் மீது பாய்ந்தான்.
முதல் அடியிலேயே காசியின் வலது கை அடியோடு துண்டிக்கப்பட்டு அந்தரத்தில் பறந்தது, வலியால் அவன் அலறுவதற்குள், பைரவனின் இடது கை கத்தி அவனது தொண்டையைக் கிழித்துச் சென்றது. ரத்தம் பீறிட்டு மழையோடு மழையாகத் தரையில் ஓடியது.
“அவனைச் சுடுங்கடா!” என்று பின்னாலிருந்த ஒருவன் கத்துவதற்குள், பைரவன் சுழன்று அடித்தான். மழையின் சத்தத்தையும் மீறித் துப்பாக்கிகள் வெடித்தன. தோட்டாக்கள் பைரவனின் தோள்பட்டையை உரசிக் கொண்டு சென்றன. ஆனால் அவன் அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அவனது ஒவ்வொரு அசைவிலும் மரணத்தின் வேகம் இருந்தது. ஒருவனை எட்டி உதைத்துக் கீழே தள்ளி, அவனது நெஞ்சில் கத்தியால் ஓங்கி இறக்கினான். இன்னொருவனின் துப்பாக்கியைப் பிடுங்கி, அவனது தாடையிலேயே ஓங்கி அடித்தான், அவனது பற்கள் சிதறி ரத்தத்துடன் கீழே விழுந்தன.
பைரவன் அந்த முப்பது பேரையும் ஒருவர்பின் ஒருவராகச் சரித்தான். கிடங்கு முழுவதும் ரணகளமானது. மனித உறுப்புகளும், குருதியும் அந்த மழைநீரில் கலந்து ஒரு ரத்த ஆற்றையே உருவாக்கிக் கொண்டிருந்தன.
ஐந்து நிமிடங்களில்… அந்த முப்பது பேரும் பிணங்களாகக் கிடக்க, நட்ட நடுவில் ரத்தம் சொட்டச் சொட்ட ஒரு மரண தேவனாய்ச் சிலையென நின்றிருந்தான் பைரவன். அவனது மூச்சுக் காற்று ஆக்ரோஷமாக வெளிப்பட்டது.
பைரவனின் ஆட்கள் அப்போதுதான் அங்கு வந்தனர். அவர்கள் இந்தக் கொடூரமான காட்சியைக் கண்டு மிரண்டு போய் நின்றனர்.
“இந்தக் குப்பைகளை அப்புறப்படுத்துங்க. அந்த ஏசிபி ஷர்மா… அவன்தான் எல்லாத்துக்கும் காரணம். அந்தத் துரோகி ஷர்மா எங்கே போனான் என்று தெரியாமல், அவனை நர வேட்டையாட நகரம் முழுவதும் சல்லடை போட்டுத் தேடுங்க. அவன் எங்கிருந்தாலும், பாதாளத்துல ஒளிஞ்சிருந்தாலும் உயிரோட இழுத்துட்டு வாங்கடா!” என்று கட்டளையிட்டான் பைரவன்.
அவனுக்குத் தெரியாது… நடுக்கடலிலேயே ரோலக்ஸின் கரங்களால் ஷர்மா கொடூரமாகக் கொல்லப்பட்டு, அவனது உடலை அலைகள் விழுங்கிப் பல நாட்களாகிவிட்டன என்ற உண்மை!
இப்பொழுது பைரவனுக்கும் எதிரிகள் பயந்து நடுங்கினார்கள். ஆனால் அவனது மனதிற்குள் பயம் வேரூன்றி இருந்தது. அது தன் உயிருக்கான பயம் அல்ல, தன் உசிரான ரோலக்ஸுக்கான தவிப்பு!
ரோலக்ஸ் உயிரோடு இருக்கிறானா இல்லையா? அந்தப் பிரம்மாண்டமான சொகுசுக் கப்பல் நடுக்கடலில் என்ன ஆனது? தனக்கு தங்கச்சியாக, விளங்கிய மயூரா எங்கே? துள்ளி விளையாடும் அந்தப் பிஞ்சு மகன் சாரு எங்கே? அவர்கள் அந்த ஆழமான இருண்ட கடலில் மூழ்கி விட்டார்களா? இல்ல யாராவது காப்பாற்றினார்களா?
எதுவும் தெரியாமல், காரிருளில் திசைகாட்டி இன்றித் தொலைந்த மாலுமியைப் போல, பைரவன் ஒவ்வொரு இரவும் தூக்கமின்றித் தவித்துக் கொண்டிருந்தான். அவனது கண்களை மூடினால்… கடலின் அலறல் சத்தமும், குழந்தை சாருவின் அழுகுரலும் கேட்பது போலவே ஒரு மாயை அவனைச் சித்திரவதை செய்தது. அவன் சாப்பிட்டு நாட்கள் பல ஆகிவிட்டன. கணேஷும் எவ்வளவு சொல்லியும், பைரவனின் மனதை அமைதிப்படுத்த முடியவில்லை.
அன்று நள்ளிரவு 2:00 மணி.
விசாகப்பட்டினத்தின் அந்த மலை உச்சி முழுவதையும் அடர்ந்த பனிமூட்டம் சூழ்ந்திருந்தது. ஒரு காலத்தில் விளக்குகளால் ஜொலித்து, நூற்றுக்கணக்கான பாதுகாவலர்களுடன் கம்பீரமாக நின்றிருந்த ரோலக்ஸின் அந்தப் பிரம்மாண்ட மாளிகை, இப்போது இருளில் மூழ்கி, ஒரு பேய்க்கோட்டை போல அமைதியாகக் காட்சியளித்தது.
பொறுமை முற்றிலுமாக இழந்த பைரவன், யாருக்கும் தெரியாமல், தன் கருப்பு நிற உடையில் அந்தப் பூட்டிய மலை உச்சி மாளிகைக்குள் ரகசியமாக நுழைந்தான். மாளிகையின் பிரம்மாண்டமான இரும்புக் கதவுகளைத் திறந்து உள்ளே காலடி வைத்ததும், அவனது நெஞ்சம் கனத்தது. அந்த மாளிகை முழுவதும் ரோலக்ஸின் ஞாபகங்களாகவே, ஒரு அழுத்தமான மெளனமாக நிறைந்திருந்தது.
வரவேற்பறையில் இருந்த விலையுயர்ந்த சோபாக்களில் மெல்லிய தூசு படிந்திருந்தது. சுவரில் மாட்டியிருந்த ரோலக்ஸ், மயூரா, சாருவின் பெரிய குடும்பப் புகைப்படம் இருளில் மங்கலாகத் தெரிந்தது. பைரவன் மெல்ல நடந்து சென்று அந்தப் புகைப்படத்தைத் தொட்டான். அவனது கரடுமுரடான, ரத்தம் தோய்ந்த கைகள் நடுங்கின.
“ரோலக்ஸ் … எங்க இருக்க? என்னை இப்படி அநாதையா விட்டுட்டுப் போயிட்டீயே … உங்களுக்காகப் பழிசுமந்து, இந்தச் சிம்மாசனத்துல நரக வேதனை அனுபவிச்சிட்டு இருக்கேன் டா. ஒரு வார்த்தை… ஒரே ஒரு வார்த்தை நீ உயிரோட இருக்கீங்கன்னு சொன்னா போதும்… இந்த உசுரு நிம்மதியா அடங்கிடும்…” என கதறினான்
கொடூரமான கொலைகளைச் செய்த அந்த அசுரனின் கண்களிலிருந்து, முதல் முறையாகச் சுடு கண்ணீர் வழிந்து அவனது தாடையைத் நனைத்தது. தரையில் சாரு விளையாடிய ஒரு சிறிய சிவப்பு நிறப் பொம்மை கார் கிடந்தது. அதை எடுத்துக் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு ஒரு சிறு குழந்தையைப் போல விக்கி விக்கி அழுதான் அந்த நிழல் உலக தாதா.
பின்னர் தன்னைச் சுதாரித்துக் கொண்ட பைரவன், மாளிகையின் அடித்தளத்தில் இருந்த அந்த ரகசிய அறைக்குச் சென்றான். அது ரோலக்ஸ் மட்டுமே பயன்படுத்தும் கட்டுப்பாட்டு அறை. அதன் கதவில் இருந்த டிஜிட்டல் திரையில், பாஸ்வேர்டை அடித்தான் பைரவன். அது குழந்தை சாருவின் பிறந்த தேதி.
பீப்… என்ற சத்தத்துடன் கதவு தானாகத் திறந்தது…
உள்ளே பல வகையான கணினிகளும், தகவல் தொடர்புச் சாதனங்களும் உறங்கிக் கிடந்தன. பைரவனின் கண்கள் அங்குள்ள ஒரு குறிப்பிட்ட இரும்புப் பெட்டியைத் தேடின. ஒரு மூலையில் இருந்த அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தான்.
உள்ளே… அலெக்ஸ், ரோலக்ஸிடம் கொடுத்த அந்த அதிநவீன Micro Transmitter பாதுகாப்பாக இருந்தது. அது எப்பேர்ப்பட்ட சிக்னல் தடைகளையும் மீறி, உலகின் எந்த மூலையிலிருந்தும் Morse Code மூலமாகச் சிக்னல்களைப் பெறக்கூடிய ஒரு அசாத்தியமான கருவி.
தன் கையில் இருந்த அந்தக் குட்டிச் சாதனத்தை உற்றுப் பார்த்தான் பைரவன். அது வெறும் இயந்திரம் அல்ல, அதை மிகவும் கவனமாகத் தன் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டு, அந்த மாளிகையை விட்டு வெளியேறினான்.
தன் இல்லத்திற்கு அந்தக் கருவியை எடுத்து வந்த பைரவன், அதைத் தன் படுக்கைக்கு அருகே உள்ள மேஜையில் பத்திரமாக வைத்தான்.
‘என்றாவது ஒருநாள்… என் ரோலக்ஸ் இந்த டிரான்ஸ்மிட்டர் வழியாகத் தனக்கு மோர்ஸ் கோடு முறையில் தான் உயிரோடு இருப்பதை உணர்த்திச் செய்தி அனுப்புவான்…’ என்ற அந்தப் பிரபஞ்சத்தின் ஒரே ஒரு நம்பிக்கைத் துளியைத் தன் நெஞ்சில் ஆழமாக ஏந்தி, அந்தச் சிறிய கருவியின் அருகிலேயே தூக்கத்தைத் துறந்து தவமாய் காத்துக்கொண்டிருந்தான் பைரவன்.
பைரவனின் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை!
அன்று அதிகாலை வேளையில்… மேஜை மீது இருந்த அந்த மைக்ரோ டிரான்ஸ்மிட்டர் திடீரெனச் சிறிய பச்சை நிற வெளிச்சத்துடன் மின்னத் தொடங்கியது!
பீப்… பீப்… பீப்-பீப்-பீப்… ஒலி கேட்ட பைரவன் படுக்கையிலிருந்து பதறி அடித்து எழுந்தான். அவனது கரங்கள் நடுங்கின. அந்த Morse Code அவசரமாகத் தாளில் எழுதத் தொடங்கினான்.
அது ரோலக்ஸின் செய்தி! எட்வர்டின் கப்பலில் இருந்த சக்திவாய்ந்த ரேடியோ சிக்னல் மூலமாக… ரோலக்ஸ் இந்த மைக்ரோ டிரான்ஸ்மிட்டருக்குத் தன் ரகசியச் செய்தியை அனுப்பியிருந்தான்!
அந்தச் செய்தியை மொழிபெயர்த்த பைரவனின் முகத்தில், இத்தனை நாட்களாக மறைந்திருந்த மாபெரும் நிம்மதியும் புன்னகையும் வந்து படிந்தன!
ரோலக்ஸ் உயிருடன்தான் இருக்கிறான்! ஆனால், செய்தி மிகத் தெளிவாகவும் சுருக்கமாக இருந்தது,
“நான் உயிரோடுதான் இருக்கிறேன்! ஆனால்… நான் இப்போது எங்கே இருக்கிறேன், என்ன செய்கிறேன் என்ற எந்தத் தகவலும் யாருக்கும் தெரிய வேண்டாம்! இதை முற்றிலும் ரகசியமாக வை!”
பைரவனுக்கு அது மட்டுமே போதுமாக இருந்தது!
தன் ஆருயிர் நண்பன் உயிரோடு இருக்கிறான் என்ற ஒரே ஒரு உண்மை அவனது நரம்புகளில் புதுத் தெம்பைப் பாய்ச்சியது!
‘ரோலக்ஸ் உயிரோடு இருப்பதே போதுமே… அவன் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும்! இங்கு இருக்கும் பிரச்சனைகள், எதிரிகள் அனைவரையும் நான் தீர்த்து வைத்துவிட்டு மீண்டும் அவனிடம் தகவல் கொடுப்பேன். அதுவரை இந்தத் துரோகி நடிப்பும், இந்தச் சாம்ராஜ்யத்தின் ஆட்சியும் தொடரட்டும்!’ என்று மனதிற்குள் பிரதிக்கினை எடுத்துக்கொண்டான் பைரவன்.
அதே நேரத்தில்… ரோலக்ஸ் தன் ரகசியச் சாட்டிலைட் வழியில் கணேஷுடனும் தொடர்ச்சியான தொடர்பில் இருந்தான்.
விசாகப்பட்டினத் துறைமுகத்தில் பைரவனின் ஆட்சி நடப்பதையும், தமிழ்நாட்டிலிருந்து சந்துரு விசாகப்பட்டினம் எல்லைக்கு வந்து தீவிரமாகக் கண்காணிப்பு வளையத்தை இறுக்குவதையும் ரோலக்ஸ் துல்லியமாக அறிந்துகொண்டான்.
ஆனால்… கணேஷும் பைரவனும் ஒரே நகரத்தில், ஒரே துறைமுகப் பகுதியில் இருந்தபோதிலும்… ரோலக்ஸின் உத்தரவுப்படி ஒருவருக்கு ஒருவர் எந்தத் தகவலையும் பரிமாறிக்கொள்ளாமல் விலகியே இருந்தனர்.
தான் எங்கே இருக்கிறேன் என்ற உண்மையை ரோலக்ஸ் இப்போது வரை அவர்கள் இருவரிடமும் முழுமையாகத் தெரிவிக்கவில்லை.
உண்மையில்… மயூரா ஆசைப்பட்டதைப் போல, இந்தச் கொடூரமான நிழல் உலகத்தை விட்டு விலகி, உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு சாதாரண உழைப்பாளியைப் போலத் தன் குடும்பத்தோடு வாழத் தொடங்கலாம் என்ற எண்ணத்திலேயே ரோலக்ஸ் இருந்தான்.
ஆனால்… அவன் ஏன் எட்வர்டின் கப்பலில் பின்னால் சென்றான்? எதற்காகத் தான் இந்த ‘மாஃபியா’ என்ற கொடூரமான ஆயுதத்தைக் கையில் எடுத்தானோ… அந்த சங்கிலியின் முதல் முடிச்சு, இவனை மீண்டும் அதே போர்க்களத்திற்கு இழுத்து வந்திருந்தது!
இந்தக் கேள்விகளுக்கான விடைகள் அனைத்தும் எட்வர்டின் சாம்ராஜ்யத்தோடும் அதிகார பீடத்தோடும் பிணைக்கப்பட்டிருந்தன!
இதோ… காரணத்தை அறிந்து கொள்ளும் அந்த மாபெரும் உண்மைக்கு அருகே ரோலக்ஸ் நெருங்கிவிட்டான்!
ரகசியத்தின் கதவுகள் திறக்கப்பட… ‘கடல் அரசன்’ ரோலக்ஸின் அடுத்த வேட்டை தொடங்கக் காத்துக் கொண்டிருந்தது!
வேட்டை தொடரும் ..⚓
