கண்கள் 5
அஷ்வினியின் மீது படர்ந்தான் தீரன். தன் முழு உடலின் பாரமும் அவள் மீது படாமல் இருக்க, கை ஊன்றி தன் எடையைத் தாங்கிக்கொண்டவன், அவள் உடலில் பட்டும் படாமல் படர்ந்திருந்தான்.
தன் விரல்கொண்டு பெண்ணவளின் பிறை நெற்றியை வருடியவனின் கைகள், அவள் கண்கள் தொடங்கி கன்னம் வரை ஊர்ந்தன…
அஷ்வினியின் உடலோ அவன் தொடுகையை ஏற்றது.
அவன் அருகாமை அவளுக்கு ஒன்றும் புதிதல்ல என்பது போல, அவள் உடல் அவன் தொடுகைக்கு ஏங்கியது என்ன மாயமோ!
தன் விழிகொண்டு அவள் விழியை ஆராய்ந்திருந்தால், அவளது ஏக்கம் அவனுக்குப் புரிந்திருக்குமோ என்னவோ!
விதியின் பிடியில் இருவரது வாழ்க்கையின் மையப்புள்ளியாக அஷ்வினி இருக்க, புத்தியோ வேறு ஒருவனைக் கணவனாக எண்ணிக்கொண்டிருந்த போதிலும், உடல் தீரனின் தொடுகைக்கு உருகிக் குழைவதும் ஏனோ?
தன் மீது படர்ந்திருந்தவன் அசைவற்று கிடக்க, அஷ்வினியோ தன் பலம்கொண்டு அவனை விலக்க முயன்றாள். அவளால் அவனைத் தன்னிடமிருந்து பிரிக்க முடியாமல் போனது…
அந்த இருள் வேளையிலும், அவளது விழியின் ஈரத்தை உணர்ந்துகொண்ட தீரன், இதமாக அவளது கன்னத்தை வருடினான்.
அவன் தொடுகைக்கு அடிமையாகித் தன்னையே அவனுக்குப் படையலாக்கத் துணிந்த அவளது எண்ணங்களை நினைத்து அருவருத்துப்போனாள் அஷ்வினி.
‘யார் இவன்? இவனுடைய தொடுகைக்கு கோபமோ, அருவருப்போ தோன்றாமல் ஏன் என் மனது இவனது தொடுகையை ஏற்கிறது?’ என்று எண்ணியவளின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர், அவன் கைகளை நனைத்தது.
“ப்ச்… இப்போ எதுக்குடி அழுகிற? உனக்கும் என்னைப் பார்த்தா பொறுக்கி மாதிரி இருக்கா?” என்று கேட்டவனின் கண்களை இப்போது அவள் பார்த்திருந்தால், அவனது வலியை உணர்ந்திருப்பாள்.
“அடுத்தவன் பொண்டாட்டியைக் கடத்திட்டு வந்தவன் பொறுக்கி இல்லாமல் வேற என்ன?” என்றவளது வார்த்தைகள் அமிலமாக வெளிவந்தன.
ஆழ்ந்து பெருமூச்சுவிட்ட தீரன், அவள் மீதிருந்து எழுந்துகொள்ள, இதற்காகவே காத்திருந்ததைப் போல அவனை விட்டு நகர்ந்து அமர்ந்தாள் அஷ்வினி.
“ஓ… அப்போ நீங்க அடுத்தவன் பொண்டாட்டி, அப்படித்தானே?” என்றவன், அருகில் இருந்த பொருள்களைத் தூக்கிப் போட்டான்.
அவன் கோபத்தில் பயம் கொண்ட அஷ்வினியின் உடல் நடுங்கிப்போனது. இருந்தும், அதனை வெளிக்காட்டாமல் அவனைத் தைரியமாக எதிர்கொண்டவள், “ஆமா, நான் மாற்றானின் மனைவிதான். என் கணவன் கௌதம்தான். அவர் மட்டும் தான்!” என்று கோபத்துடன் கூறினாள்.
விரைந்து அவள் கழுத்தைப் பிடித்து நெரித்த தீரன், “கௌதம் உன் புருஷன்னா, அப்போ நான் யாருடி?” என்றவன், அவள் கழுத்தைப் பிடித்துச் சுவரோடு அழுத்தித் தூக்கினான்.
அந்த வலியில் அஷ்வினியின் கண்கள் எல்லாம் மேலே சொருக ஆரம்பித்தன. தன் கழுத்திலிருந்து அவனது கையை எடுக்கப் போராடினாள்.
அவனோ இன்னும் கோபம் குறையாமல், “இன்னொரு முறை அவன் பேரு உன் வாயிலிருந்து வந்தது, நான் மனுஷனா இருக்க மாட்டேன்!” என்றவன், அவளை அப்படியே தூக்கிக் கட்டிலில் எறிந்தான்.
கட்டிலில் விழுந்து, மூச்சுவிட முடியாமல் இருமியபடியே தன் கழுத்தைத் தடவிக்கொடுத்தவளுக்குக் கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை.
சிறுவயதில் இருந்தே செல்லமாக வளர்ந்த அஷ்வினிக்கு, கௌதமின் குடும்பமோ அவர்களது வாழ்க்கை முறையோ மனதில் ஏற்கனவே பயத்தை உண்டாக்கியிருந்தது. இப்போது என்னவென்றால், புதிதாக வேறு ஒருவன் தன் வாழ்க்கையில் இப்படி விளையாடுகிறானே என்று நினைத்தவளால் அழ மட்டுமே முடிந்தது.
தான் செய்த செயலை எண்ணித் தன் மீதே கோபம் கொண்ட தீரன், தன் கோபத்தைத் தணிக்கச் சுவரில் ஓங்கிக் குத்தினான்.
அதனால் உண்டான வலியை விட அவன் மனம் கொண்ட துயரம் அதிகமல்லவா? மனவலியின் முன் உடல்வலியெல்லாம் வெறும் கானல் நீராகத்தான் தோன்றும்.
அவளது வலியையும் அழுகையையும் காண முடியாமல் தவித்தவன், அவள் அருகில் வந்து அமர, அவளோ பயந்து நகர்ந்தாள்.
“நான் உன்னை ஒண்ணும் பண்ண மாட்டேன். இப்படி பயந்து என்னை மேலும் கோபப்படுத்தாத!” என்றவன், அவளது கழுத்தில் கைகொடுத்து தன்னை நோக்கி மென்மையாக இழுத்தான்.
அந்த மென்மையும் கூட அவளுக்கு அதிக வலியைக் கொடுத்தது.
“வலிக்குதா?” என்று கேட்டவனுக்கு அவளிடமிருந்து அமைதி மட்டுமே பதிலாகக் கிடைத்தது.
“உன்னைத் தாண்டிக் கேட்கிறேன், வலிக்குதா?” என்றவன், அவள் காதருகில் மீசை முடி உரசக் கேட்ட விதத்தில் பெண்ணவளின் உடல் சிலிர்த்து அடங்கியது.
தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாத தன் நிலையை எண்ணி மீண்டும் கண்ணீர் வடித்தாள் அஷ்வினி.
“சொல்லு, தேஜு! உன்கிட்டதானே கேட்கிறேன்?” என்று அவன் கூற,
வெடுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்த அஷ்வினி, “என்ன சொன்னீங்க?” என்று கேட்டாள்.
அப்போதுதான் தன்னை மறந்து அவளை அந்தப் பெயர் சொல்லி அழைத்தது ஞாபகம் வரவே, “ஒண்ணும் இல்லை!” என்றவன், மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவளை விட்டு விலகி எழுந்து நின்றுகொண்டான்.
தலையைக் கோதி, தன் உணர்வுகளுக்குக் கடிவாளமிட்டவன், அங்கிருந்து செல்ல முயன்றபோது, “ஒரு நிமிஷம்!” என்று ஏதோ அறியும் நோக்கில் அவனை நிறுத்த முற்பட்டாள் அஷ்வினி.
“என்னடி?” என்று கேட்டவனின் குரலில் கோபமோ அல்லது வெறுப்போ எதுவுமே இல்லை. மாறாக, அவனது இயலாமையுடன் அந்த வார்த்தை வெளிவந்தது.
“நீங்க யாரு? எனக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? எதுக்கு என்னைக் கடத்தி வச்சிருக்கீங்க? உங்களுக்குப் பணம் ஏதாவது வேண்டும் என்றால்கூட சொல்லுங்க. என் அப்பாகிட்ட சொல்லி உங்களுக்கு வாங்கிக் கொடுக்கிறேன். தயவுசெய்து என்னை என் வீட்டில் கொண்டுபோய் விட்டுடுங்க!” என்று கேட்டவள், கண்ணீருடன் கதறி அழுதாள் தன் இயலாமையை எண்ணி.
“ஓ… பணத்துக்காக உன்னைக் கடத்தினேன்னு நினைக்கிறியா? உனக்கு எவ்வளவு பணம் வேணும்னு சொல்லு. உனக்கு அந்தப் பணத்தை நான் கொடுக்கிறேன்!” என்று கூறியவனின் உதடுகள் அழுத்தம் பெற்றன.
“பணத்துக்காக இல்லைன்னா, பின்ன வேற எதுக்காக என்னைக் கடத்தி வச்சிருக்கீங்க? எங்க வீட்டுல இருக்க யாரையாவது பழிவாங்குறதுக்காக இப்படி எல்லாம் பண்ணுறீங்களா? ப்ளீஸ், பதில் சொல்லுங்க!”
விரக்தியாகச் சிரித்த தீரன், “உன்னால என்னைப் புரிஞ்சிக்க முடியாது. புரிஞ்சுக்கணும்னு முயற்சி பண்ணாத! இனி நீ இங்கதான் இருக்கப்போற. இதுதான் உன் வீடு. நான்தான் உன் வாழ்க்கை. இதைச் சீக்கிரமா ஏத்துக்க முயற்சி பண்ணு. அதுதான் உனக்கு நல்லது!” என்றவன், அங்கிருந்து செல்லப் பார்க்க,
“எனக்கு உங்களைப் பார்க்கணும். நீங்க ஏன் என் முகத்தைப் பார்க்கத் தயங்குறீங்க? தைரியம் இருந்தால் என்னை நேராகப் பார்த்துப் பேசுங்க!” என்று கூறியவளுக்கு எங்கிருந்துதான் தைரியம் வந்ததோ!
கட்டிலிலிருந்து எழுந்தவள், அவன் அருகில் வந்தாள்.
கைகளைக் கட்டியபடியே அவளை நெருங்கி அடியெடுத்து வந்தவன், “மேடமுக்கு என் மேல அவ்வளவு ஆசையா? என்ன? என்னைப் பார்க்க இவ்வளவு ஆர்வமா இருக்கீங்க?” என்றவன், அவளது இடையில் கைகொடுத்துத் தன்னை நோக்கி இழுக்கவும், தடுமாறிப்போன அஷ்வினி அவன் மார்பில் தலை மோதி நின்றாள்.
அவனுடைய வலிக்கு அவளது இந்த அருகாமை அவனுக்குத் தேவைப்பட்டதோ என்னவோ! எதுவும் யோசிக்காமல் அவளைத் தன் உயரத்திற்கு ஏற்ப தூக்கியவன், அவளைத் தன்னோடு சேர்த்தணைத்திருந்தான்.
இந்தத் திடீர் அணைப்பைச் சற்றும் எதிர்பாராமல் தவித்த அஷ்வினி, அவனை விலக்க முயற்சிக்க, அவனது பிடியோ இன்னும் இறுகியது.
அவன் இறுக்கத்தில் அவளுக்கு மூச்சு முட்டியது. இருந்தும், அவனைத் தன்னிடமிருந்து அவளால் விலக்க முடியாமல் போனது. அவள் மீண்டும் அவன் பிடியிலிருந்து விடுபடப் போராட, அவனோ, “ப்ளீஸ்…” என்றபடி அவளது தோளில் முகம் சாய்ந்தான். அவனது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
அவனது கண்ணீரைத் தன் தோளில் உணர்ந்த அஷ்வினியே ஒரு கணம் அதிர்ந்துபோனாள்.
சிறிது நேர அணைப்பிற்குப் பிறகு அவளைக் கீழே இறக்கிவிட்டவன், எதுவும் பேசாமல் வெளியே சென்றான்.
அஷ்வினிக்கோ நடக்கும் யாவும் ஏதோ கனவு போலத் தோன்றியது. தன் நிலையை எண்ணி நொந்துகொண்டவள், அப்படியே அந்த இருளில் சுவரில் சாய்ந்து அமர்ந்தாள்.
சிறிது நேரத்திற்குப் பிறகு சாப்பாட்டுத் தட்டுடன் மீண்டும் அறைக்குள் நுழைந்த தீரன், அறையின் கதவை அடித்துச் சாத்தினான்.
அந்தச் சத்தத்தில் மீண்டும் தன்னிலை அடைந்த அஷ்வினி எழுந்து நிற்க, அவனோ, “என்னைப் பார்க்கணும்னு சொன்ன, இல்ல? இப்போ பாரு!” என்று சொன்னவன், அறையின் மின்விளக்குகளை ஒளிரச் செய்தான்.
‘… நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால்தானே…’ என்ற பாடல் மோகினியின் அலைபேசியில் ஒலிக்க, அந்தச் சத்தத்தில் கண்விழித்த மோகினி, “ப்ச்… எவன்டா அவன் இந்த நேரத்துல?” என்று முகம் சுணங்கியபடியே அழைப்பை ஏற்றாள்.
“ஹலோ, இங்க மோகினி… அங்க யாரு?” என்று கேட்டவள், இன்னும் முழுதாகக் கண்ணைத் திறக்கவில்லை.
“யாரா? இந்த மோகினியைப் பெத்த புண்ணியவதி நான்தான்!” என்று அவளது தாய் கேலியாகச் சொல்ல,
“என்னை எந்தப் புண்ணியவதியும் பெக்கலையே… என்னைப் பெத்தது என் அம்மா பத்மாவதிதான்!” என்று அவள் தூக்கக் கலக்கத்தில் கூறினாள்.
அவளிடமிருந்து போனைப் பறித்து வாங்கினாள் தேவகி.
“ஏண்டி, என் போனைப் புடுங்குற? அவங்க ஏதோ புண்ணியவதி கதை சொல்லுறாங்க. என்னன்னு கேட்டு சொல்லு!” என்றவள், மீண்டும் படுத்துக்கொண்டாள்.
அலைபேசியை வாங்கிய தேவகி, பத்மாவதியிடம், “சொல்லும்மா?” என்று கேட்க,
“இந்த மோகினிக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி உளறுறா?”
“அதெல்லாம் ஒண்ணும் இல்லைம்மா. அந்த லூசு கனவு கண்டு பினாத்திட்டு இருக்கு.”
“சரிம்மா, நீங்க எப்போ கோவிலுக்குப் போய்ச் சேருவீங்க?” என்று பத்மா கேட்க,
“இன்னும் ஒரு இரண்டு மணி நேரம் ஆகும் போலம்மா.”
“சரிம்மா, பார்த்துப் போயிட்டு வாங்க!” என்று கூறியவர், அழைப்பைத் துண்டித்தார்.
தேவகியோ, எட்டித் தூங்கிக்கொண்டிருந்த மோகினியின் தலையில் கொட்ட, தலையைத் தேய்த்தபடியே எழுந்துகொண்டாள் மோகினி.
“ஏண்டி, இப்போ என்னை அடிச்ச?” என்று மோகினி உதட்டைப் பிதுக்கிக் கேட்க,
“அம்மாகிட்ட ஏண்டி அப்படிப் பேசின?”
“பின்ன என்னடி? உன் குடும்பத்துல உள்ள ஒருத்தரும் என்னைக் கனவு காண விட மாட்டேங்குறீங்க. சரியான நேரத்தில் என் கனவைக் கலைச்சிட்டீங்க!” என்ற மோகினி முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
“வர வர உனக்குக் கொழுப்பு கூடிப்போச்சு!” என்றபடி தேவகியும் மோகினியும் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தனர்.
அதனைச் சலிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்த கார்த்திக், “ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா? எப்போ பாரு ஏதாவது பேசிட்டு…” என்றவன், அவர்களின் பக்கம் பார்வையைச் செலுத்த, எதிரில் வரும் வாகனத்தைக் கவனிக்காமல் போனான்.
அப்போதுதான் செல்வியை ஊரில் விட்டுவிட்டுக் காரில் திரும்பி வந்துகொண்டிருந்தான் பரமன்.
கார்த்திக்கோ, எதிரில் வந்த பரமனின் வண்டியைக் கவனிக்காமல் வரவே, அவனது வண்டி பரமனின் வண்டியில் மோதியது.
இருவராலும் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போகவே, இருவரது வாகனங்களும் அருகில் இருந்த ஒரு பள்ளத்தில் ஒருசேரக் கட்டுப்பாடில்லாமல் கீழே சரிந்தன…
