காதல் கணம்-14

காதல் கணம் 14

“ஷிவா அத்தானா? இவர் எங்க இங்க? சாயங்காலம் ஆறுமணிக்குப்போனா அவரை தனியா சந்திக்கலாம்னு தானே திட்டம்போட்டு இப்போ வந்தேன்? முருகா, என்ன இது சோதனை?’ என்று புத்தகக்கடையின் வாசலிலேயே பேயறைந்தவள் போல் நின்றிருந்தாள் ஷ்ரதா.

அவளை கவனித்துவிட்ட சிவனேஸ்வரன், “என்ன ஷ்ரதா? நீயெங்க இங்க?” என்று அருகில் கூப்பிட்டான்.

இப்போது எப்படி சமாளிப்பது என்று கருவிழியை வல விளிம்புக்கும் இட விளிம்புக்கும் உருட்டியவள், “அது? அது? ஹான்! ரொம்பப் போரடிச்சதா அதான் கதை புக் ஏதாவது வாங்கிட்டுப் போகலாம்னு வந்தேன் அத்தான்.” என்று தேடிக் காரணத்தை கண்டுபிடித்தாள்.

“தனியாவா வந்த?” -அவள் ஆமாம் என்றால், தானே அவளை தனது பைக்கில் கொண்டுபோய் விடலாம் என்ற ஆர்வம் அவனிடம்.

“ஆமாத்தான், லீவுல அப்பா புது ஸ்கூட்டி வாங்கித் தந்தாங்க. அதுல தான் வந்தேன்.” என்று இடையிடையே வீசியைப் பார்த்துக்கொண்டே பதில் சொல்லிக்கொண்டிருந்தாள் ஷ்ரதா.

சிவனேஸ்வரனிடமிருந்து ஏமாற்றமாய் ‘ஓ’ வந்தது.

பின், “ரிசல்ட் பார்த்தேன். முன்ன சொன்ன மாதிரி இன்ஜினீயரிங்கே அப்ளை பண்ணிடு ஷ்ரதா. மாமாக்கிட்ட பேசினேன். அவர் சிவில் என்ஜினீயரிங் சேர்ப்போம்னு சொன்னாரு. உனக்கு சிவில் ஓகே தானே ஷ்ரதா?” என்று கேட்டதும்,

‘சிவிலோ? தவிலோ? என்னவாவது படிக்கிறேன். சும்மா கேள்விக்கேட்டு கழுத்தறுக்காதீங்க ஷிவா அத்தான்’ என்று மனசாட்சிக்கு விரோதமில்லாமல் அகவுலகில் பதிலளித்தவள், புறவுலகிலோ விரோதமாக, “ஓகே அத்தான்” என்றாள்.

இருவரையும் கவனித்துக் கொண்டிருந்த வீசி, “ஸ்டோரி புக்ஸ் அந்தப் பக்கம்” என்று கைக்காட்டினான்.

அவளும் இப்போது என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டே கதைப்புத்தகங்கள் இருக்கும் கட்டிற்குள் சென்றாள். அப்போது தான் அவள் சிப்பி மூளைக்குள் அந்த யோசனை முத்து முளைத்தது.

இங்கு நண்பர்கள் இருவரும் புதிதாக சந்தையில் இறக்குமதி ஆகியிருந்த பைக்குகளை உரையாடலிலேயே உதிரிபாகங்கள் ஆக்கிக்கொண்டிருக்க, இருபது நிமிடங்கள் கழித்து வெளியே வந்தவள், தான் தூக்கிக்கொண்டு வந்த புத்தகங்களை வரிசை மாற்றாமல் நோட்டில் தலைப்பெழுதிக்கொள்ளச் சொன்னாள். வீசியும் பொறுப்பாய் எழுதி வைத்துக்கொண்டான்.

சிவனேஸ்வரன், “இவ்வளவு புக்ஸையும் வாசிச்சிருவியா நீ?” என்று திகைப்பாய் கேட்டபோது,

“ம், வாசிச்சிருவேன் அத்தான்” என்று முறுவலித்தவள், திடீரென ஞாபகம் வந்தவள் போல் வீசியிடம், “ஒரு புக் மட்டும் மேல உயரத்துல இருக்கு. எடுத்துக் கொடுக்க வர்றீங்களா?” என்றாள்.

வீசிக்கு முன் சிவனேஸ்வரன் எழவும் ஷ்ரதா பதற்றமாக, “நீங்க உட்காருங்க அத்தான். நாமெல்லாம் முதலாளிங்க. வேலைக்காரங்க இருக்கும்போது நாம வேலை செய்யக்கூடாது. அவரு எடுத்துத் தருவாரு.” என்று அவனைத் தடுத்தாள்.

ஷ்ரதாவின் ‘நாமெல்லாம் முதலாளிங்க’ என்ற வார்த்தைகளில் சிவனேஸ்வரன் ஜிவ்வென்று மேகங்களுக்கிடையே பட்டமான அதேவேளையில், வீசி ‘வேலைக்காரங்க’ என்ற பதத்தில் முகம் கருத்துப்போனான்.

‘காட்டிட்டா அவ பணக்காரப் புத்தியை.” என்றே வெறுப்பாக  அவளை பின் தொடர்ந்தான்.  

மூன்றாம் கட்டுக்குள் அவன் நுழைந்த உடனேயே, தன் தோளில் தொங்கிய பையிலிருந்து டைரிமில்க் சாக்லேட்டை எடுத்து நீட்டினாள்.

அவன் விளங்காமல் பார்த்தபோது, “மேத்ஸ்ல நான் நூத்தியெழுபது மார்க் சார். நீங்க தான் அதுக்கு காரணம். ஸோ..” என்று அவன் கையைப் பிடித்து சாக்லேட்டை வைத்தாள்.

அவன் வேண்டாவெறுப்பாய் முகத்தைத் திருப்பினான். அவளுக்கு அதற்கு காரணம் புரியாமல் இல்லை.

“வேலைக்காரன்னு அலட்சியமா பேசிட்டதுக்கு சாரி. எனக்கு  உங்கக்கூட எப்படி தனியா பேசறதுன்னு தெரியல. அதான் அப்படி வெடுக்குன்னு பேசிட்டேன். அப்புறம் இப்போ நான் எடுத்துட்டுப்போற புக்ஸ் லிஸ்ட்டை நிதானமா ஒரு தடவை வாசிச்சிப் பாருங்க. என் மனசு உங்களுக்குப் புரியும்” என்றுவிட்டு கைக்கெட்டும் உயரத்தில் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு கல்லாப்பகுதிக்கு சென்றுவிட்டாள்.

விதிர்த்துப் போயிருந்தவன் தலையை கோதிக்கொண்டு வெளியே வந்தான். பின், புத்தகங்கள் அனைத்தையும் அவள் எடுத்துச் செல்வதற்கு வசதியாக தாம்புப்போட்டு இறுக்கமாகக் கட்டினான்.

இறுதியில் இரண்டு கட்டு புத்தகங்களையும் ஸ்கூட்டியில் அவள் கால் வைக்கும் பகுதியில் சென்று ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிவிட்டு, சிவனேஸ்வரனின் அருகில் வந்து நின்றான்.

ஷ்ரதா கிளம்பும் முன்பு வாசலில் நின்ற சிவனேஸ்வரனுக்கு ‘டாட்டா’ காட்டிவிட்டுப் போனாள்.

வீசி மீண்டும் கல்லாவில் வந்து உட்கார்ந்தபோது சிவனேஸ்வரன் ஷ்ரதாவை பற்றித்தான் வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தான்.

இடையில், “சாரிடா வீசி, ஷ்ரதா ஒரு குழந்தை மாதிரி. தெரியாம பேசிட்டா. அவ பேசினது எதையும் நீ மனசுல வச்சிக்காத” என்று அவள் பேசியதற்கும், தான் மன்னிப்புக் கேட்டான்.

வீசி அந்த மன்னிப்பை காதில் ஏற்றிக்கொள்ளவில்லை. தன் கையருகிலிருந்த கனத்த நோட்டில் தான் தன் கண்களை ஓடவிட்டுக் கொண்டிருந்தான்.

அவள் எடுத்துச் சென்ற புத்தக தலைப்புகள் எல்லாம் வரிசையாக, ஒன்றன் கீழ் ஒன்றாக இவ்வாறு எழுதப்பட்டிருந்தன.

‘என்னவென்று நான் சொல்ல
இமையோரம் உன் நினைவு

தீயாக உன்னைக் கண்டேன்

காதலாகி கசிந்துருகி 
மாறியது நெஞ்சம்

தன்னந்தனிமையிலே 
சொல்லத்தான் நினைக்கிறேன்
உன்னை விட ஓர் உறவா?

விடிகின்ற வேளையிலே 
கனா கண்டேன்
உன்னோடு நான் 
நிலா வெளியில் 
நிழலோடு நிழலாக 
நதியோரம் நடந்த போது 
நேசம் மட்டும் நெஞ்சினிலே.

ஓரவிழி பார்வையிலே 
பூவே மயங்காதே 
சொன்னது நீதானா?

உயிரே உன்னைத்தேடி 
அலை பாயுது மனசு

கன்னத்தில் முத்தமிட்டால் 
வானம் வசப்படும்

காத்திருந்தேன் காற்றினிலே
பூகோலம் போட வா
மனதோடு பேச வா

நீயின்றி நான் இல்லை

எண்ணியிருந்தது ஈடேற 
காற்றோடு தூது விட்டேன்

வைகறையே வந்துவிடு
உன் மனதை தந்துவிடு’

அனைத்தும் சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் முத்துலெட்சுமி ராகவனுடையது.

சிவனேஸ்வரன் இன்னும் அவனுக்கு முன்னால் உட்கார்ந்து ஷ்ரதாவை பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தான்.

“ஷ்ரதா ஒரு தேவதை வீசி. அவளை மாதிரி ஒரு அழகை நிச்சயமா எங்கேயும் பார்க்க முடியாது. யோசிச்சிப்பாரு! அந்த அழகு மொத்தமும் எனக்கே எனக்கு சொந்தம்” என்று கனவு கண்டு கொண்டிருந்தான்.

என்ன தான் ஷ்ரதா இப்படி தைரியமாக தன் காதலை வெளிப்படுத்திவிட்டாலும், வீசி என்ன சொல்வானோ? எப்படி நினைப்பானோ? என்று தான் பயந்துகொண்டிருந்தாள்.

அந்த பயத்தில் அவனை சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தைக்கூட அவள் நடைமுறைபடுத்தவில்லை. வீட்டிற்கு எடுத்து வந்திருந்த புத்தகங்களின் கதைமாந்தர்களுடனே கற்பனையில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்.

புத்தகங்களை வாசித்து முடித்ததும் அவனை நேரில் சந்திக்கத் துணிவின்றி, ஏதோ புத்தகம் வாங்கச் செல்வதாக பேச்சுவாக்கில் கூறிய தாரிணியிடமே அவற்றை கடைக்கு கொடுத்தனுப்பினாள்.

ஆனால், தாரிணி ஷ்ரதாவிடம் சொன்னபடியே வெறும் புத்தகம் வாங்க மட்டும் கடைக்குச் செல்லவில்லை!

தேர்வு முடிவுகள் வெளியான சூட்டுடனே தன் அப்பாவின் கைங்கரியத்தால் பொறியியல் கல்லூரியில் எளிதாக இடம் கிடைத்துவிட்டது ஷ்ரதாவிற்கு.

அந்த நாட்களில் அவளும் வீசியும் சந்திக்க முயற்சிக்கவில்லை எனினும், விதி அவர்களை சந்திக்க வைத்தது. அதற்கு சிவனேஸ்வரனுக்கு பதில் மதுபாலாவையும் பயன்படுத்தியது.

ஆம், அப்போது தான் மதுபாலாவுக்கு ஏழாம் மாதம் நடந்து கொண்டிருந்தது. வீட்டில் அனைவரும் வளைகாப்பு செய்ய  திட்டமிட்டிருந்தார்கள்.

வீசி இந்த விழாவிற்கு நிச்சயம் வருவான் என்பதால் விழாவன்று மிகுந்த கவனமெடுத்து தன்னை அலங்கரித்தாள் ஷ்ரதா. அவள் எதிர்பார்த்தபடியே வீசியும் விழாவில் பங்கு பெற்றான்.

அவனுடன் இரட்டைச் சகோதரன் போல் அவன் ஆதர்ச நண்பன் சிவனேஸ்வரன் திரிந்தது தொந்தரவாகத் தான் இருந்தது ஷ்ரதாவிற்கு. யூடியூபில் விரும்பிப் பார்க்கும் வீடியோவிற்காக விளம்பர தொல்லைகளை சகித்தல் போல அவனை சகித்துக் கொண்டிருந்தாள் அவள்.

அன்றையநாளின் நாயகியான மதுபாலா பெண்மையின் முழுமையை எட்டி மொத்த அழகும் முகத்தில் திரள மினுங்கிக் கொண்டிருந்தாள். அபிராமியைப் போலவே நல்ல நிறம் அவள். அவளின் அழகே கல்லூரியில் அரியருடன் வலம் வந்துக் கொண்டிருந்த அருண்மொழியை அவளை திரும்பிப் பார்க்கவும், திரும்ப திரும்ப பார்க்கவும் வைத்தது.

இந்த மகிழ்ச்சியான வைபவத்தில் வீசியின் முகம் என்னவோ வாட்டமாகவே காணப்பட்டது. ஷ்ரதா இதை கவனித்துக்கொண்டு தான் இருந்தாள்.

அவனது அந்த முகவாட்டத்திற்கு காரணம், ‘வளைகாப்பு முடிந்த பின் மதுபாலாவுக்கு பிரசவம் எங்கள் வீட்டில் தான் நடக்க வேண்டும்’ என்று அருண்மொழி அதிரடியாக அறிவித்ததே.

இதை ‘அண்ணா சொன்னது சரி தான். இங்க தான் சகலவிதமான வசதிகளும் அண்ணிக்கு கிடைக்கும்’ என்று நம்பிக் கொண்டிருக்கும் ஷ்ரதா அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்.

நல்லநேரம் துவங்கியதுமே முதலில் மாமனார் வீட்டின் சார்பில் வைரவளையல்கள் அணிவிக்கப்பட்டது. அடுத்து விஜயாதித்தனின் தங்கை கோகிலா வந்து மரகதம் பதிக்கப்பட்ட காப்புகளை தோரணையாக அணிவித்துவிட, அபிராமி இந்த அசௌகரியமான சூழ்நிலையை எப்படி சமாளிப்பதென கைகளைப் பிசைந்தபடி நின்றிருந்தார்.

அக்கணம் சட்டென்று மதுபாலாவின் அருகில் வந்த வீசி, தன் சட்டைப்பைக்குள் இருந்து ஒரு டப்பாவை எடுத்தான். அனைவரும் அவன் திறந்த டப்பாவின் உள்ளிருந்த போகன்வில்லா பேப்பரையே ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அவன் அந்த பேப்பரை விரித்து, “இது நான் என் சம்பளத்துல உனக்காக வாங்கினதுக்கா.” என்று அந்த ஒரு ஜோடி வெள்ளி வளையலையும், அவற்றின் கொக்கி நீக்கி தன் அன்னையின் உதவியுடன் அவளுக்கு மாட்டிவிட்டான்.

அவன் அன்பில் மதுபாலாவின் கண்களிரண்டும் ஆனந்தப்புயலை பெய்தன. குழந்தையும் மகிழ்ச்சியாக இருப்பதை அவளால் உணர முடிந்தது.

வளையலை அணிவித்துவிட்டு நகரப்போனவனை, “வருண்” என்று கீழே குனியச்சொல்லி அவன் நெற்றியில் முத்தமிட்டாள் மதுபாலா.

ஷ்ரதா, ‘என்ன ஒரு பாசப்பிணைப்பு இவர்களுக்குள்!’ என்று புல்லரித்துப்போன வேளை, அருண்மொழி அவர்களை பொறாமையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த சாங்கியத்தோடு வீசியும் அபிராமியும் பிரகாஷ் சக்கரவர்த்திக்கு அருகில் வந்து நின்று கொண்டார்கள்.

ஈகோவாதியான விஜயாதித்தனுக்கோ வீசி சபையில் கதாநாயகன் ஆனது பிடிக்கவில்லை. தனது சொந்தக்காரர்களிடம் பேசுவது போல் வீசியின் குடும்பத்திற்கு கேட்கும்படியாகவே உரக்கப் பேசினார்.

“என்னவோ சம்பளத்துல வாங்கினதுன்னு பையன் சொல்றான். சம்பளத்துல வாங்கினதோ? இல்ல, அப்பங்காரன் வேலைப் பார்க்கற கடைலயிருந்து திருடிட்டு வந்ததோ? யாருக்குத் தெரியும்? எந்தப் பாவமும் என் பேரப்புள்ளையை அண்டாம இருந்தா சரி தான்” என்று அபாண்டமாக வம்பு பேசினார்.

ரோசத்தில் அவர்களை உண்டில்லை என்றாக்கப் புறப்பட்டவனை, அபிராமி கைப்பிடித்து வெளியே இழுத்துச் சென்றார்.

கொட்ட கொட்ட குனிவதால் தான் விஜயாதித்தன் கொட்டிக்கொண்டே இருக்கிறார் என்பதை தெளிவாக புரிந்துகொண்ட வீசி, “விடுங்கம்மா. என்னை விடுங்கம்மா.” என்று திமிறியபடியே வந்தான்.

“தயவு செஞ்சு நான் சொல்றதை கேளு வருண். உன் தாத்தா மாதிரியே நீயும் பிடிவாதக்காரனா இருக்காதடா. நம்ம தகுதிக்கு மீறின இடத்துல வந்து சம்பந்தம் வச்சிருக்கோம். நாம தான் பொறுத்துப் போகணும்.” என்றார்.

வீசியோ கோபத்தில் காட்டுக்கத்தலாகக் கத்தினான்.

“எதுக்குமா இந்த ரவுடி குடும்பத்துல வந்து நம்ம அக்காவை கட்டிக் கொடுத்தீங்க?” என்றான்.

“அய்யோ! கத்திப் பேசாத வருண். யார் காதுலயாவது விழுந்திறப் போகுது. மதுபாலாவை பத்தி தெரிஞ்சுமா நீ இப்படியெல்லாம் பேசுற? இந்தக் கல்யாணம் அவ விருப்பப்பட்டது. அவ விருப்பத்துக்கு மாறா நாம நடந்திருந்தா என்ன நடந்திருக்கும்னு தான் உனக்கு தெரியுமே?”

“ம்மா, நம்மளை அவங்க திருடங்கன்னு பட்டம் கட்டுறாங்கம்மா. உங்க ரத்தம் கொதிக்கல? முதலாளிங்க அவங்க மத்தவங்க வயித்துல அடிச்சி சம்பாரிச்சா, நாமளும் அப்படித்தான் இருப்போம்னு நினைக்கிறது எந்த விதத்துலம்மா நியாயம்? சுத்த அபத்தம்மா இது” என்று வெடித்தான் கன்னிவெடியாய்.

“அவங்க சொல்லிட்டா நாம அப்படித்தான்னு ஆகிடுமா வருண்? ரோட்டுல ஒரு ரூபா கிடந்தாக்கூட அதை கோவில் உண்டியல்ல எடுத்துப்போட்டு, உரியவங்கக்கிட்ட சேர்த்துருன்னு வேண்டுற சாதி நாம. நம்ம மனசுக்குத் தெரியும் வருண், நாம எப்படின்னு. உன்னைப் பத்தி நீ என்ன நினைக்கிறியோ அதான் நீ. கண்ணு தெரியாத நாலு பேர் தடவிப் பார்த்து சொன்ன மாதிரியா யானை இருக்குது. அது அதுவா பிரம்மாண்டமா இருக்குது. நீயும் யானை மாதிரி இருக்கணும் வருண். இப்படி சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் நிதானம் தவறக்கூடாது. உன் கோபத்தை நீ கட்டுப்படுத்தணும். அவங்க சுபாவம் அப்படி தான்னு அனுசரிச்சுப் போகத் தெரியணும்.” என்று அவன் கன்னங்களைத் தாங்கி புத்திக் கூறினார் அபிராமி.

வீசியின் கோபமானது சற்றும் தணியவில்லை. தன் அன்னைக்காக அப்போதைக்கு மட்டும் பாகனின் அங்குசத்திற்கு கட்டுப்படும் யானை போல் கோபம் குறைந்தவனாக நடித்தான்.

மீண்டும் அவன் இயல்பாகி அபிராமியோடு உள்ளே நுழைந்தபோது சபையில் எதையோ பேசி சத்தம்போட்டு சிரித்துக் கொண்டிருந்தார் விஜயாதித்தன்.

அந்நேரம் ஷ்ரதாவின் முகம் திகிலடைந்து காணப்பட்டதை எல்லாம் வீசி பார்த்திருக்க வாய்ப்பில்லை.

காதல் கணம் கூடும்…

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!