அத்தியாயம் 2
“நீ ஏன் டி வர்ணி அந்த ஆளு படம்” என்று சொல்லும் போதே யாழினி தன் தலையை தேய்த்துக் கொண்டு இருந்தாள். வேற என்ன அந்த ஆளுனு சொன்னதும் தலையில் கொட்டு விழுந்து இருக்கும்.
“சரி டி ஏன் அவரு படத்தை இப்படி விரும்பி பார்க்கிற?”
“அதான் எனக்கே தெரியல டி, இவரு படம் மட்டும் தான் பார்க்க பிடிக்குது வேற யார் படமும் பார்க்க பிடிக்கல” என சொல்லிவிட்டு கையை அலம்பிக் கொண்டு உமாவை பார்த்து நன்றாக திட்ட வாய் திறக்க இன்று தன் ஆளு படம் பார்க்க வேண்டும் என்ற காரணத்தால் கோபமாக முறைத்து பார்த்தபடியே சென்றாள்.
அதன் பின் கடகடவென தன் துணிகளை அலசிப்போட்டு விட்டு தன் கப்போர்டை சுத்தம் செய்து முடிக்கவும் அவள் எதிர்ப்பார்த்த படம் போடவும் சரியாக இருந்தது.
“ஏய் வாடி வர்ணிகா சீக்கிரம் உன் ஆளு படம் போட்டாச்சு” என்று யாழினி குரல் கொடுத்த அடுத்த பத்து வினாடியில் டிவி முன் அமர்ந்தாள்.
அந்த ஆசிரமத்தில் இருந்த சிறுவர்களில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் அமர்ந்து டிவியை பார்த்துக் கொண்டு இருக்க இவளோ, “எப்போடி அவன் வருவான்?” என்று யாழினியை படம் பார்க்க விடாமல் தொல்லை செய்துக் கொண்டு இருந்தாள்.
“இங்க பாரு டி, நிம்மதியா ஒரு படம் பார்க்க விடுறீயா? உன் ஆளு வர இன்னும் நேரம் இருக்கு. அதோ பாரு டி அந்த ஹீரோவ, எவ்வளவு ஹாண்ட்ஸ்மா இருக்கான்னு” என்று தன் தோழியின் முகத்தை திருப்பிக் காட்ட
அவளோ அந்த படத்தில் வரும் ஹீரோவை பார்க்காமல் சட்டென்று தன் முகத்தை திருப்பிக் கொண்டு, “இங்க பாரு யாழு நான் படம் பார்க்குறதே அவனுக்காக தான். இந்த படத்துல வர ஹீரோ எவ்வளவு ஹாண்ட்ஸமா இருந்தாலும் சரி எனக்கு அவன் மட்டும் தான் ஹாண்ட்ஸம்” என்று சொன்னாள்.
யாழினியோ, “ஆனாலும் இது எல்லாம் ஓவர் டி, எல்லாரும் படத்துல வர ஹீரோவ தான் சைட் அடிப்பாங்க. ஆனா நீ மட்டும் தான் டி ரொம்ப இல்ல இல்ல ரொம்ப ரொம்ப வித்தியாசமானவள். படத்துல வர பாட்டுக்கு பின்னாடி டான்ஸ் ஆடுறவனை சைட் அடிக்கிற” என யாழினி சொல்ல வர்ணிகாவோ,
“அட அதான் டி என்னனே தெரியல இவனை பார்த்தாவே என்னைய நான் மறந்து போய்டுறேன் டி, அன்னிக்கு கூட ஒரு நாள் தூரத்துல இவன் பைக்ல போனத பார்த்துட்டு எதை பத்தியும் யோசிக்காமல் ஆட்டோ பிடிச்சு இவன் பின்னாடியே போனேன் தெரியுமா?”
“ஆனா அவனை பாதி வழியிலேயே மிஸ் பண்ணிட்டேன். அன்னிக்கு மட்டும் எனக்கு ஐநூறு ரூபாய் நஷ்டம் தெரியுமா?” என இவள் யாழினியிடம் கூற
மொத்த ஆசிரமம் ஆளுங்களும், “அடிப்பாவி! ஐநூறு ரூபாயை வெட்டியா செலவு பண்ணிட்டு வந்து இருக்கியா நீ?” என்று வார்டன் கேட்டு தன் கையில் இருந்த தடியால் அவளை இரண்டு அடி போட அவளோ துள்ளி குதித்து ஆட்டம் காட்ட சரியாக டிவியில் அவளை கவர்ந்தவனின் முகம் வர முன்னால் நின்று நடனம் ஆடுபவனை காணாமல் பின்னால் நின்று நடனம் ஆடுபவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு அப்படியே உறைந்து நிற்க வார்டன் அடித்த அடிக் கூட அவளுக்கு வலிக்கவில்லை.
“அடியே இப்படி எருமைமாடு மேல மழை பெய்ந்த மாதிரி நின்னுட்டு இருக்க வலிக்கவேயில்லையா?”
“இல்ல வார்டன், வேணும்னா இன்னும் இரண்டு அடி கூட போடுங்க. ஆனா இந்த பாட்டு முடிக்கிற வரை என் கால் இந்த இடத்தை விட்டு நகராது” என்று சொல்லுபவளை பார்த்த வார்டன் தலையில் அடித்துக் கொண்டு, “ஏன்டி நாளைக்கு கல்யாணம் பண்ணிட்டு உன் புருஷன் முன்னாடி இப்படி தான் நின்னுட்டு அந்த பையன பார்த்துட்டு இருப்பியா?” என கேட்க,
அவளோ, “நான் ஏன் வார்டன் எவனோ ஒருத்தனை கட்டிக்கணும் இதோ டான்ஸ் ஆடுறானே இவனை தான் கட்டிக்க போறேன்” என்று சொல்ல சரியாக மின்தடை ஏற்பட அனைவரும் இவளை பார்த்து சிரித்தனர்.
“போடி போக்கத்தவளே, நீ சொன்னது நடக்காதுனு அந்த கடவுளுக்கு கூட தெரிஞ்சி இருக்கு. பாரு நீ சொன்னதும் கரண்ட் கூட கட்டாயிடுச்சு” என அவளை கேலி செய்து விட்டு அனைவரும் கலைந்தனர்.
விடிந்ததிலிருந்து அவள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி ஒரே வினாடியில் தொலைந்து போனதை பார்த்த யாழினி தன் தோழியின் அருகில் வந்து, “கவலைப்படாத டி” என சொல்ல,
வர்ணிகாவோ, “ச்சீ லூசு நான் எங்கடி கவலைப்பட்டேன்? பாரு சிரிச்சிட்டு தானே இருக்கேன். இவங்க சொல்லிட்டா நடந்துடுமா? எனக்கு அவன் தான் அவனுக்கு நான் தான். இது அந்த கடவுளால கூட மாத்த முடியாது” என கூறிவிட்டு தனது அறைக்குச் சென்று அவன் போட்டோவை எடுத்து பார்த்தவள்
“பார்த்தியாடா எல்லாரும் கை தட்டி சிரிக்கிறாங்க. நான் பகல் கனவு காண்றேனாம் நீயே சொல்லுடா, நீ என்னை தானே கல்யாணம் பண்ணிப்ப” என்று அவன் முகத்தை வருடி கேட்டாள்.
அந்த புகைப்படமோ மெல்லிய புன்னகையுடன் இவளை பார்த்துக் கொண்டு இருந்தது.
அப்படியே சிறிது நேரம் இருக்கும் வேலையை முடித்து விட்டு நாளைக்கு ஆபிஸ்க்கு எடுத்து போக வேண்டிய ப்ராஜெக்ட்டை ஒரு தரம் சரி பார்த்து அதை பத்திரப்படுத்தி வைத்தாள்.
இந்த ப்ராஜெக்ட்டுக்காக இவள் உழைப்பு கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் காலம். அதை நாளை சரியான நேரத்திற்கு டீம் கிட்ட ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணமே இப்போது அவளுக்குள் இருக்க காலையில் நடந்ததை மறந்து போனாள்.
மறு நாள் காலை சீக்கிரமாகவே எழுந்தவள் குளித்து முடித்து அவசரம் அவசரமாக கிளம்பி வழக்கம் போல் உப்புமாவை சாப்பிட்டு தன் ஸ்கூட்டியில் யாழினிக்காக காத்திருந்தாள்.
ஹாரன் அடித்தபடி, “யாழினி அடியே யாழி வா டி நேரமாச்சு. இன்னிக்கு அந்த டீன் கிட்ட ப்ராஜெக்ட் சப்மிட் பண்ணனும்” என்று கீழே இருந்து கத்த, யாழினியோ தன் கை பையை எடுத்துக் கொண்டு தோளில் ஷாலை போட்ட படி.
“இப்போ எதுக்கு இப்படி கத்திகிட்டு இருக்க? அதான் நான் வந்துட்டே இருக்கேன்ல” என்று தன் தோழியை திட்டிக் கொண்டே அவளை பார்த்தவள்,
“என்னடி இப்படி கிளம்பி வந்து இருக்க?” என கேட்க.
வர்ணிகாவோ தன்னை ஒருதரம் பார்த்து விட்டு, “ஏன் டி நல்லா தானே இருக்கேன்.” அவள் சொன்னதை கேட்டவள் தலையில் அடித்துக் கொண்டு.
“அடியே கிறுக்கி ஆபிசுக்கு எதுக்கு டி பாவாடை தாவணி போட்டு வர? போடி போய் சுடி போட்டு வா. இல்லைனா இன்னிக்கு உன்னை பார்க்கிறவனுங்க எல்லாரும் க்ளீன் போல்ட்” என கூறி சிரித்தாள் யாழினி.
வர்ணிகாவோ, “ஒழுக்கமா மூடிகிட்டு ஏறு. எனக்கு இன்னிக்கு இந்த டிரெஸ் தான் போட்டு போக ஆசை அதான்டி” என சொல்ல.
யாழினியோ, “அடியே யாராவது ஐடி கம்பெனிக்கு பாவாடை தாவணியில் போவாங்களா? சொல்றதை கேளு கிறுக்கி. ஒழுங்கா போய் சுடி போட்டு வா டீன் பார்த்தா கழுவி கழுவி ஊத்துவான் டி” என்று யாழினி எவ்வளவு கெஞ்சியும் உடையை மாற்றாமல் அதே உடையோடு கிளம்பினாள்.
தன் வாழ்க்கையை மாற்ற கூடிய இன்றைய நாளை அறியாமல்.
தன் வண்டியை கொஞ்சம் வேகமாக ஓட்டியவளை மெல்ல போக சொல்லி யாழினி கத்திக் கொண்டு இருக்க. அவளோ அதை காதில் வாங்காமல் நேரத்திற்கு போக வேண்டும் என ஸ்கூட்டியில் வேகம் எடுத்தாள்.
“கிறுக்கி கொஞ்சம் மெதுவா போடி எனக்கு என் உயிர் ரொம்ப முக்கியம் டி என்றவளிடம்,
“அப்போ என் உயிர் முக்கியம் இல்லையா உனக்கு?” என கேட்டாள்.
“இதை வேற சொல்லி தான் தெரிஞ்சிப்பியா கண்டிப்பா இல்லைடி எனக்கு என் உயிர் தான் முக்கியம்” என யாழினி சொல்ல,
“அப்போ எதுக்கு டி என் கூட ஸ்கூட்டில வர? கீழே இறங்கி பஸ் பிடிச்சி வா அப்போ தான் உன் கொழுப்பு கரையும்” என்று சொல்லிக் கொண்டே சட்டென்று ஸ்கூட்டியை நிறுத்த,
அவள் பின்னால் வந்த கார் இவள் திடீரென வண்டியை நிறுத்துவாள் என எதிர் பார்க்காததால் ட்ரைவர் காரை சடன் ப்ரேக் போட.
அது அவள் ஸ்கூட்டியில் மோத இரு பெண்களும் பேலன்ஸ் செய்ய முடியாமல் தடுமாறிக் கீழே விழுந்தனர்.
யாழினியின் கால் ஸ்கூட்டியில் சிக்கிக் கொள்ள வர்ணிகாவோ எதிர்பக்கம் விழ விழுந்த வேகத்தில் அவளோட தாவணி ஸ்கூட்டி செயினில் மாட்டிக் கொண்டு எடுக்க முடியாமல் தவித்தாள்.
கார் சடன் ப்ரேக் போடவும் அதற்கு பின்னால் வந்த மற்ற வண்டிகளும் ஒன்றுக்கு ஒன்று மோதிக் கொண்டு ஹாரன் விட்டப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டையிட்டுக் கொண்டு இருந்தனர்.
இந்த காரின் ட்ரைவர் பதற்றத்துடன் கீழே இறங்கி வந்து இரு பெண்களுக்கும் உதவி செய்தப்படி.
“அம்மாடிங்களா வண்டியை பார்த்து ஓட்டிட்டு வர மாட்டீங்களா? இப்படியா சடன் பிரேக் போடுவீங்க? உங்க பின்னாடி வண்டி வருதா இல்லையானு பார்த்து ஓரம் கட்டி தானே நிறுத்தணும்?” என அந்த நாற்பது வயது ஒட்டிய ட்ரைவர் கூற.
தன் மீது தான் தவறு என்று வர்ணிகா அமைதியாகி இருக்க… யாழினி தான் வலியில் துடித்துக் கொண்டு இருந்தாள்.
ஸ்கூட்டியை தூக்கி நிறுத்தி விட்டு யாழினியை மெல்ல எழுப்பி சாலையோரம் உட்கார வைத்து விட்டு அடுத்து வர்ணிகாவை தூக்க போக… அவளோ வண்டியோடு ஒட்டிக் கொண்டு அமர்ந்து இருந்தாள். அதற்குள் அங்கே கூட்டம் கூட ட்ராபிக் போலீஸ் வந்து விசாரிக்க ரோட்டில் நின்ற சில பேர் தங்கள் போனில் லைவ் வீடியோவாக எடுக்க ஆரம்பித்தனர்.
பாவம் அவள் பாவாடை கிழிந்து தாவணி மாட்டிக் கொண்டு இருப்பதால் அவளால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது.
யாழினியோ தான் இருக்கும் நிலையிலும், “நான் அப்பவே சொன்னேன் சுடி போட்டுவா, வண்டியை மெதுவா ஓட்டுடினு… சொல்ற பேச்சை கேட்கிறியாடி நல்லா அனுபவி” என திட்டிக் கொண்டு இருக்க அந்த காரின் ட்ரைவரோ அவளிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தார்.
“அம்மாடி என் முதலாளி ரொம்ப முக்கியமான மீட்டிங் போகணும் டா. இப்பவே இரண்டு நிமிடம் தாமதம் அதற்கே அவர் என்னை என்ன செய்வாரோ. நீ வேற இப்படி அடம்பிடிச்சிட்டு நடுரோட்டுல முடங்கி உட்கார்ந்துட்டு இருக்க. அங்க பாரு எல்லாரும் போன்ல படம் பிடிக்க ஆரம்பிச்சிட்டாங்க எழுந்துடு தாயி நேரம் ஆகுது என் முதலாளி ரொம்ப கோபக்காரர்” என்று தன் முதலாளியை நினைத்து அவர் பயந்து கூறினாலும் அந்த பெண் பிள்ளையை நினைத்து கவலைக் கொண்டார்.
அவள் எதற்காக அப்படி தன்னை தானே சுற்றிக் கொண்டு அமர்ந்து இருக்கிறாள் என புரிந்துக் கொண்டாலும் இப்போதைக்கு அவரால் எதுவும் செய்ய முடியாமல் போனதை நினைத்து வேதனை அடைந்தார்.
யாழினியும் தன் தோழியின் நிலைமை நினைத்து கவலைக் கொள்ள சுற்றி இருப்பவர்களை அனல் பார்வை பார்த்தாள்.
“உங்களால உதவி செய்ய முடியலைனாலும் இப்படி பெண்கள் மானத்தை வீடியோவாக எடுத்து போட்டு லைக் வாங்காதீர்கள்” என்று தன் இருக்கரம் கூப்பி வேண்டினாள்.
ஆனால் அவர்களோ இவள் சொல்வதை காது கொடுத்து கூட கேட்கவில்லை.
வர்ணிகாவோ தன்னை பல பேர் படம் எடுப்பதை பார்த்து கண்ணீர் சிந்தினாள்.
‘இப்படி பட்ட நிலைமையிலும் ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்காமல் அவர் அவர்கள் செல்போனில் படம் பிடித்துக் கொண்டு இருக்கிறார்களே ச்சே என்ன உலகம் இது. ஒரு பெண்ணின் மானத்தை காக்க ஒருத்தர் கூடவா இல்லை’ என அவள் நினைத்து குமறிக் கொண்டு இருந்த சமயம்…
காருக்கு சொந்தமானவன் தனக்கு நேரம் வீணாவதை நினைத்து கோபத்துடன் காரில் இருந்து கம்பீரமாக இறங்கியவனை பார்த்த அனைவரும் வாயை பிளந்தனர்.
