“பேபி எழுந்திரிங்க”
“கொஞ்ச நேரம் தூங்கறேனே”
“பேபி யுனிவர்சிட்டிக்கு லேட் ஆகுதுடா”
“ப்ளீஸ்… அபிமா… நீ சுவீட் பாய் தானே” என கொஞ்சியவள் அவன் மடியிலேயே படுக்க அவன் தான் மேற்கொண்டு அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் திணறினான்.
அவனும் அவளை ஓரிரு நாட்களாக கவனித்துக் கொண்டிருக்கிறான். அவளின் மாற்றம் அவனுக்கு வித்தியாசமாக இருந்தது.
தலையை உலுக்கியவன்
“பேபி கம் ஆன். இல்லேனா நான் உங்கள டிராப் பண்ண மாட்டேன்” என மிரட்ட அவள் அடித்து பிடித்து எழுந்தாள்.
“போடா. பேட் பாய். எனக்கு கோல்ட் காஃபி ரெடி பண்ணி வை” என ஆர்டர் போட அவன் புன்னகைத்தான்.
அவள் தனது வேலையை முடித்து வந்த போது அவள் கேட்ட கோல்ட் காஃபி ரெடியாக இருக்க அதை சுவைத்தவள்
“அபி… ஹாலோவீன் வருதே. நம்ம எப்போ பர்ச்சேஸ்க்கு போறது?” என வினவினாள்.
“இந்த வீக்கென்ட் போலாம்”
“அபி இந்த விவேக் ரொம்ப ஓவரா தான் போறான்”
“ஏன்? என்ன பண்ணான்?”
“அந்த பக்கி எனக்கு அட்வைஸ் பண்றான்”
“ஐயய்யோ…” என்று அலறியவன்
“என்ன அட்வைஸ்?” என கேட்க அவன் அருகில் வந்தவள் “சீக்ரெட்” என ரகசிய குரலில் வினவ அவளது அருகாமை அவனை ஏதோ செய்தது.
அவளை இழுத்தணைக்க துடித்த கைகளை கட்டுப்படுத்தியவன் அங்கிருந்து விலகி கிச்சனிற்குள் நுழைந்தான்.
“அபிம்மா நான் ஹெல்ப் பண்ணட்டுமா?” என்றவள் கேட்க அந்த குரலில் அவன் ஜெர்க்கானான்.
“பேபி உனக்கு என்ன வேண்டுமோ நான் செஞ்சி குடுக்கறேன். என் உயிர் எனக்கு வேணும்” என்று அலறினான்.
“அப்போ உனக்கு செஞ்சா பிடிக்காதா?” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.
“அப்டி இல்லடா. நீங்க படிச்சு முடிங்க. உங்களுக்கு சொல்லி தரேன்” என்று அவளது தலையை முட்டியபடி சமாதானப்படுத்தினான்.
“அ… அபி என் மேல கோபமா இருக்கியா?” என்று வார்த்தைகள் திக்கி திணற கேட்டாள்.
“நான் எப்டிடா உங்க மேல கோபப்பட முடியும்? யு ஆர் மை ஹார்ட் பீட் ஆச்சே” என்று தன் இதயத்தில் கை வைத்தபடி சொல்ல அவனது அன்பினில் திணறியவள் அவனை இறுக அணைத்து கொண்டாள்.
அபியின் பாடு தான் இப்போது திண்டாட்டம் ஆனது. இதுவரை இருந்த அனுபவத்தில் அவன் ஒதுங்கி இருக்க நினைக்க அவளது நெருக்கம் அபியை திண்டாட வைத்தது.
அவனுக்கு திரும்பவும் எங்கே அவள் காயப்படுத்தி விடுவாளோ என்றொரு பயம் அவனையும் அறியாமல் இருந்தது.
அதனால் அவளிடம் இருந்து மெல்ல விலகியவன் தனது வேலையை கவனிக்க செல்ல அவள் யுனிவர்சிட்டிக்கு செல்ல ரெடியாக சென்றாள்.
அவள் வருவதற்குள் தனது வேலைகளை முடித்தவன் தானும் ரெடியாக சென்றான்.
இருவரும் ரெடியாகி வந்ததும் ஜோஸ்வினியை யுனிவர்சிட்டியில் இறக்கி விட காரை நிறுத்தினான்.
அவளோ அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள்
“அபி நான் உன்கிட்ட இன்னைக்கு பேசணும்டா. சீக்கிரம் வந்திரு” என்று சொன்னவள் என்ன நினைத்தாளோ அவனது கன்னத்தில் முத்தம் வைத்து செல்ல அபி தான் திகைத்து போய் அமர்ந்திருந்தான்.
அவனுடைய மனது இதெல்லாம் உண்மை தானா என யோசிக்க ஆரம்பித்தது.
இருந்தும் அவளாக சொல்லாமல் மனதினை அலைபாய விட அவனுக்கு மனதில்லை.
ஒரு பெருமூச்சுடன் தனது ரெஸ்ட்டாரன்ட்டை அடைந்தவனை வேலைகள் உள்ளிழுத்து கொண்டது.
அவன் வேலையில் ஆழ்ந்திருக்கும் போது ஒரு போன் கால் வர அதை பேசியவன் ஆழ்ந்த யோசனையில் இருந்தான்.
மேலும் சில கால்களை பேசியவன் அங்கிருந்து புறப்பட்டான்.
காரில் செல்லும் போது சூர்யாவிற்கு கால் செய்தான்.
“சன்னி”
“எனக்கு அர்ஜென்ட்டா வொர்க் இருக்கு. நீங்க ஜோவ டிராப் பண்றீங்களா?”
“ஓகே ப்ரோ” என்று சொன்னதும் நிம்மதி அடைந்தவன் தனது வேலையை கவனிக்க வெளியே சென்றான்.
மாலையில் அபிஷேக்கிற்காக ஜோஸ்வினி காத்து கொண்டிருந்தாள்.
“வா போலாம் ஜோ”
“அபி வருவான்டா”
“அவரு கொஞ்சம் முன்னாடி தான் கால் பண்ணாரு. அர்ஜென்ட் வொர்க்னு சொன்னாரு” என்று சொல்ல மிகவும் ஏமாற்றமாய் உணர்ந்தார்கள்.
ஏனெனில் காலையில் இருந்து அவள் மனது தேடியது அவளுக்கல்லவா தெரியும்?
எத்தனை முறை என்ன பேசுவது என ஓட்டி பார்த்திருப்பாள்.
அவன் நினைப்பில் உலகமே இருண்டது போல உணர்ந்தவள் அமைதியாக சூர்யாவுடன் சென்றாள்.
வீட்டிற்கு சென்ற பின்பும் அவளுக்கு எந்த வேலையும் ஓடவில்லை. தனது யோசனையிலையே இருந்தாள்.
வழக்கமாக சரியான நேரத்திற்கு வருபவன் அன்று மிகவும் தாமதமாக வந்தான்.
அவனுக்காக வெகு நேரம் காத்திருந்தவள் அசதியில் சோஃபாவிலேயே தூங்கி விட்டாள்.
அவள் படுத்திருந்ததை பார்த்து துணுக்குற்றவன் “ஜோ” என்றழைக்க அது அவளை சென்றடைந்தது போல தெரியவில்லை.
சிறிது யோசித்தவன் அவளை ஏந்தி கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்தான்.
தூக்கத்தில் இருந்தவள் அவன் படுக்க வைக்கும் போது விழித்தாள்.
“அபி… எப்போ வந்த? எவ்ளோ நேரம் வெயிட் பண்றது?”
“இப்போ தான்ங்க ஜோ வந்தேன்” என்றவனுக்கு மிகவும் களைப்பாக இருக்க அப்படியே படுத்து விட்டான்.
“டேய் எந்திரி டா. சாப்ட வேணாம்”
“நான் சாப்டேன்ங்க ஜோ” என்றவன் தூங்க ஆரம்பிக்க அவளுக்கு ஒரு மாதிரி ஆகி போனது.
தான் இவனுக்காக சாப்பிடாமல் இருக்க அவனோ தன்னை ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை என்றதும் அவளும் அமைதியாக படுத்து உறங்க முயற்சித்தாள்.
அபிஷேக் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்று விட நடு இரவில் ஜோஸ்வினிக்கு பசி தாங்க முடியாமல் சமையலறையை உருட்ட ஆரம்பித்தாள்.
அப்போது அவள் புறம் திரும்பி படுத்த அபிஷேக் அவளை காணாமல் திகைத்தான்.
“ஜோ… ஜோ…” என்று எழுந்தவன் கத்தி கொண்டே அவளை தேட ஆரம்பித்தான்.
அவன் ஒவ்வொரு இடமாக தேட கிச்சனில் இருந்து சத்தம் வந்தது.
‘அங்க என்ன பண்றாங்க?’ என்றவன் யோசனையோடே செல்ல அவளோ ஃபிரெட்டும், ஜாமுமாக இருந்தாள்.
“ஜோ… இதென்ன இந்நேரத்துக்கு சாப்டறீங்க?”
“நீ சாப்ட ஓகே. நான் சாப்டேனானு கேட்டியா? இங்க வந்ததுல இருந்து ஒட்டுகா தான சாப்டறோம். உனக்காக வெயிட் பண்ணி நான் சாப்பிடாம போனது தான் மிச்சம். கொஞ்சம் கூட வீட்ல ஒருத்தி இருக்கானு நினக்கறதே இல்ல” என்று பொரிய ஆரம்பித்தாள்.
“ஜோ… நீங்க சாப்டலையா? சாரி ஜோ. ரொம்ப டயர்ட். அதான் படுத்துட்டேன். ப்ரட் சாப்பிடாதீங்க. ஒரு ஃபைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க” என்றவன் ஸ்பெகட்டியை எடுத்து சுடு நீரில் போட்டு உப்பும், எண்ணெயும் போட்டு வேக வைத்தான்.
அது வேக வைக்கும் போது வெங்காயம், பூண்டு, குடை மிளகாய் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக கட் செய்தான்.
ஜோஸ்வினி அவள் கட் செய்யும் லாவகத்தை வியப்போடு பார்த்து கொண்டிருந்தாள். எத்தனை தரம் பார்த்தாலும் அவனது லாவகம் அவளை வியக்க வைத்தது.
சில நிமிடங்களில் அனைத்தையும் கட் செய்து வைத்தவனை ஆச்சரியமாக பார்க்க அவளது முகத்தை பார்த்தவன் சிநேகமாக புன்னகைக்க அந்த புன்னகையில் இவளுக்கும் புன்னகை மலர்ந்தது.
அது வெந்தவுடன் ஸ்பெகட்டியை தண்ணீரில் இருந்து வடிகட்டி வைத்தவன் தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்தான்.
பிறகு வாணலியில் எண்ணெயை ஊற்றியவன் வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, குடை மிளகாய் ஆகியவற்றை மிதமான தீயில் வதக்கியவன் அரைத்த தக்காளியை ஊற்றி அதன் பச்சை வாசம் போகும் வரை இரண்டு மூன்று நிமிடங்கள் வதக்கினான்.
அதன் பிறகு தேவையான உப்பு, மிளகாய் தூள், சர்க்கரை, மிளகு தூள், சில்லி ஃப்ளேக்ஸ் ஆகியவற்றை சேர்த்து கலக்கினான்.
பின்னர் வேக வைத்த ஸ்பெகட்டியை எடுத்து இதனுடன் நன்றாக கிளறி விட்டவன் சில்லி ஷாசையும், தக்காளி ஷாசையும் கலந்து விட்டு அதன் மேல் மோஸரில்லா சீஸ் தூவி ரெஸ்ட்டான்ட்டில் ஸ்டைலில் அவளிடம் நீட்டினான்.
அவனது வேகத்தை அருகில் இருந்து பார்த்தவள் பிரமித்து போய் நின்றாள்.
“என்ன என்னையே பாக்கறீங்க?”
“யு ஆர் அமேசிங் அபி” என்றவள் முத்தமிட அவன் தான் திகைத்து போய் நின்றான்.
“ஃபர்ஸ்ட் சாப்பிடுங்க ஜோ. இனி இப்டி சாப்டாம இருக்க கூடாது” என்று சொல்ல அதை எடுத்து சுவைத்தவள் “செம அபி” என்றவள் அவசரம் அவசரமாக சாப்பிட அதை பார்த்தவனுக்கோ மனதை ஏதோ செய்தது.
“இவ்ளோ பசில ஏன் ஜோ சாப்டாம இருந்தீங்க? சாரி ஜோ. எனக்கு கில்ட்டியா இருக்கு”
“இல்லடா. உன்கிட்ட பேசலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன். அதுல எனக்கு டைம் போனதே தெரில” என்று சாப்பிட்டவள் அதற்கு பிறகு நிம்மதியாக உறங்கினாள்.
அபிஷேக் அதற்கு பிறகு இப்படி தவறு நடக்க கூடாது என்று மனதில் உறுதி எடுத்தான்.
ஆனால் காலமோ அவனுக்கு ஒத்துழைக்கவில்லை.
ஏறக்குறைய ஒரு வாரம் இதே ரீதியில் செல்ல ஜோஸ்வினி மிகவும் மனதொடிந்து போனாள்.
அவளை அவ்வப்போது கவனித்து வந்தவன் அந்த ஞாயிறன்று ஓர் முடிவிற்கு வந்தான்.
அந்த வாரத்தை ஈடு கட்டும் வகையில் அவளை வெளியே ஷாப்பிங் அழைத்து செல்லலாமென நினைத்தவன் அவளிடம் சொல்ல அவள் யோசனையுடன் அவனை பார்த்தாள்.
“பரவால்ல அபி. ஐ வில் மேனேஜ். நீ வொர்க்க பாரு” என்றாள் மெல்லிய குரலில்.
“ஜோ… சாரிங்க ஜோ. அது திடீர்னு வெளிய சுத்தற வொர்க்கா போயிடுச்சு. அதான்” என்று சமாளித்தவன்
“நாளைக்கு ஹாலோவீன் வருது. பர்ச்சேஸ் பண்ண போலாம். இங்க டிஃப்ரண்ட்டா இருக்கும்” என அவன் சொல்ல ஹாலோவீனில் அவள் மற்ற அனைத்தையும் மறந்தாள்.
“வாவ்… ஹாலோவீனா? சூப்பர் டா. போலாம்டா” என்று சந்தோஷக் குரலில் சொன்னாள்.
“சூர்யாவ வர சொல்லிடுங்க” என்றவனை விசித்திரமாக பார்த்தாள்.
“நம்ம டைம் ஸ்பென்ட் பண்றப்ப அவன் எதுக்கு கரடி மாதிரி?” என கேட்க இப்போது அபிஷேக் அவளை விசித்திரமாக பார்த்தான்.
அந்த பார்வையை அவள் தளராமல் எதிர் கொள்ள அபிஷேக் தான் ஏதோ கனவு கண்டவன் போல விழித்து கொண்டிருந்தான்.
இவர்களின் பார்வையை முடிவுக்கு கொண்டு வருவது போல அபிஷேக்கின் செல் அழைத்தது.
ஒரு முடிவுடன் அவளை பார்த்தபடி சென்றவன் போனை எடுக்க ஆதவன் வீடியோ காலில் அழைத்திருந்தான்.
“சொல்லு மச்சி”
“எப்டிடா இருக்கீங்க?”
“ஃபைன் டா”
“ஜோ என்ன பண்றா?”
“இன்னைக்கு ஷாப்பிங் போலாம்னு பிளான் பண்ணிட்டிருக்கோம். அதான் பேசிட்டு இருந்தோம் டா” என்றவன் சொல்லி கொண்டிருக்கும் போது ஜோஸ்வினி ஆதவன் குரலை கேட்டதும் அருகில் வந்தாள்.
“டேய் எரும… உன்னால போன் கூட ஒழுங்கா பண்ண முடில. எப்போ பண்ண சொன்னா எப்போ பண்ற?”
“ஹலோ எங்களுக்கு 1008 வேல இருக்கும். நீ வெட்டியா தான இருக்க. மச்சி அவள ஒழுங்கா வேல வாங்குடா. ஓவரா போறா”
“வேணாம் மச்சி. நான் அந்த ரிஸ்க்லா எடுக்க மாட்டேன்”
“ஏன்டா?”
“இவங்க நூடுல்ஸ் செஞ்சு அத என்னால் வாய்லயே வைக்க முடில. யப்பா… இனி அந்த ரிஸ்க் எடுக்க மாட்டேன்”
“டேய் அன்னைக்கு எவ்ளோ டேஸ்ட்டியா இருக்குனு சாப்ட்டு இன்னைக்கு அப்டியே ப்ளாட்ட மாத்தறியா?”
“ஜோ… என் ஃபிரண்ட் ஏதாவது திட்டினினா எனக்கு கோபம் வரும். என் ஃபிரண்ட் ரொம்ப நல்லவன். உனக்காக கூட அமைதியா சாப்ட்ருப்பான்” என சொல்ல ஜோஸ்வினி அபிஷேக்கை யோசனையாக பார்த்தாள்.
அவளை கவனித்தவன்
“சும்மா ப்ளே பண்ணேன் ஜோ. உங்களுது அன்னைக்கு செமயா இருந்தது” என சொல்ல ஆதவன் தலையிலடித்து கொண்டான்.
“நீ எல்லாம் நல்லா வருவடா” என்றவன்
“அபி” என்று பேச ஆரம்பிக்க அவனை பார்வையால் தடுத்தவன் இன்னொரு அறையினுள் சென்றான்.
“மச்சி என்னடா ஏதாவது க்ளூ கிடைச்சதா? என்னாச்சு?”
“ஆல் மோஸ்ட் கண்டுபிடிச்சாச்சுடா. அவன அரெஸ்ட் பண்றது மட்டும் தான். அதுவும் சீக்கிரம் நடந்துடும்” என்றவன்
“மச்சி ஷியாமும், ருத்ரனும் சேஃபா இருக்காங்க தானே? இங்க நான் அவனுங்களுக்கும் சேத்து தான்டா ஆப்பு வெச்சிருக்கேன். என்ன திமிர் டா? வெளிய சொல்ல கூட கூசுது” என்று பேசிக் கொண்டிருக்கும் போது ஜோஸ்வினி உள்ளே வர அப்படியே பேச்சை மாற்றினான்.
பின் அவள் அப்பால் சென்றதும் ஆதவன் பேச ஆரம்பித்தான்.
“டோன்ட் வொர்ரி டா. நான் இங்க என் ஃபிரண்டோட அண்ணாட்ட ஹெல்ப் கேட்ருக்கேன். அவனுங்க போனா வெளியவே வர முடியாது. டோன்ட் வொர்ரி” என்றவனிடம்
“அவனுங்களுக்கு அந்த தண்டனைலா பத்தாது டா. அவனுங்கள கொல்லணும்” என்று கர்ஜித்தான்.
வெளியே போனவளுக்கு ஏதோ தோன்ற ஜோஸ்வினி அந்த அறைக்கு வெளியே நின்று கேட்டாள். ஆனால் போலீஸ் என்று அவர்கள் பேசியதும் இன்னும் குழம்பினாள். அவன் ஏதேனும் தன்னிடம் மறைக்கிறானோ என்று யோசித்தாள். அதனால் அவள் அறையின் வாயிலிலேயே நிற்க ஜோஸ்வினியை கவனித்த ஆதவன் போனை கட் செய்தான்.
“விடுடா. பாத்துக்கலாம். ஜோவ பாரு பின்னாடி நிக்கறா போல” என்றதும் அதிர்ச்சியுடன் அவளை பார்க்க அவள் தனது முகத்தில் ஏதும் காட்டாமல் அமைதியாக நின்றாள்.
“சரிடா. நான் வெச்சிடறேன்” என்றவன்
“ஜோஸ்வினி கிளம்பலாமாங்க?” என கேட்க
“எதுக்கு காஃப்ஸ்னு பேசிட்டு இருந்த? ஏதாவது ப்ராப்ளமா?” என கேட்டாள்.
“நத்திங் ஜோ. நோ ப்ராப்ளம். கிளம்பலாமாங்க?” என கேட்க இருவரும் ரெடியாகி கிளம்பினர்.
வீட்டில் இருந்து குழப்பத்தில் சென்றவள் அங்கு ஹாலோவீன் சம்பந்தமாக உள்ள பொருட்களை பார்த்ததும் ஜோஸ்வினி காலையில் நடந்ததை மறந்தாள்.
அங்கு ஹாலோவீன் சம்பந்தமாக பொம்மையில் இருந்து டிரஸ் வரை அனைத்தும் இருந்தது.
அவர்கள் தங்கள் இருவருக்கும் எலும்பு கூடு போல உடை வாங்கியவர்கள் பேயை போல காட்டுவதற்கான ஸ்கெலிட்டினையும் வாங்கினார்கள்.
அவர்கள் வாங்கிய இரண்டு ஸ்கெலிட்டின்கள் கிட்டார் வாசித்து கொண்டிருந்தது.
அதே போல பேய், ரத்த காட்டேரி, மரத்தில் தொங்குவது போன்ற பயங்கர உருவங்கள் என்று எல்லாமே பயமுறுத்துவது போல இருந்தன.
எல்லாவற்றையும் பார்க்கும் போது தன்னை மீறிய பயத்தில் பிடித்த அபிஷேக்கின் கையை விடவில்லை.
அவனும் சந்தோஷமாக பார்த்து பார்த்து அனைத்தையும் வாங்கினான்.
இணைந்திருந்த அவளது கைகளை பார்த்தவன் அவளை காதலுடன் பார்க்க அவளும் புன்னகை செய்தாள்.
அவளை தோளுடன் அணைத்தவன் நெற்றியில் முத்தம் கொடுக்க அந்த கணத்தில் தன்னை மறந்து அவனையே பார்த்திருந்தாள்.
அந்த கணங்கள் அப்படியே நின்று விடாதா என்பது போல அவனை ஏக்கத்துடன் பார்த்தாள்.
ஜோஸ்வினியின் இந்த பார்வையில் அபிஷேக் தான் திணறி போனான்.
முயன்று தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன் வீட்டை நோக்கி காரை செலுத்தினான்.
இருவரும் சேர்ந்து ஹாலோவீனுக்காக வீட்டை அலங்காரம் செய்தனர்.
வீட்டிற்கு வெளியில் அவர்கள் வாங்கி வந்த கிடாருடன் இருந்த ஸ்கெலிட்டினை நிற்க வைத்தார்கள்.
அதே போல வீட்டின் முன் உள்ள தோட்டத்தில் பேய்கள் அமர்ந்து சாப்பிடுவது போல வைத்தனர்.
அதே போல வீட்டிற்கு முன் அலங்கரித்த பூசணிக்காயை வைத்தனர்.
பூசணிக்காயை கொண்டு ஹாலோவீனிற்கு எப்போதும் அலங்கரிப்பார்கள்.
ஹாலோவீன் அன்று வீட்டிற்கு வெளியே சாக்லேட்டை டேபிளிலோ, பூசணிக்காய் போன்ற பௌலிலோ அவர்களுக்கு வசதிக்கு தகுந்தபடி வைப்பார்கள்.
அவர்கள் வீட்டிற்கு வரும் சின்ன குழந்தைகள் சாக்லேட்டை எடுத்து கொள்வர். தீர்ந்ததும் திரும்ப வைப்பார்கள்.
ஹாலோவீன் அன்று சூர்யாவும் சேர்ந்து கொள்ள அன்று அவர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
ஆவி உலகத்தில் இருந்து வரும் பேய்களை இவர்கள் ஆவியை பயமுறுத்துவதற்காக அதே போன்று வேடம் அணிவது என்ற நம்பிக்கையில் இந்த ஹாலோவீன் கொண்டாடப்படுகிறது.
இவளும் ஆவி போல வேடமணிந்து மற்றவர்களை பயமுறுத்தினாள். இவள் பயமுறுத்தியதை விட பயந்தது தான் அதிகம்.
அன்றும் அவள் அபிஷேக்கை விட்டு எங்கும் நகரவில்லை. அவன் அன்று முழுவதும் அவளது அருகாமையில் மிதந்து கொண்டிருந்தான்.
ஆனால் அபிஷேக் அவள் கூடவே இருந்தாலும் அவன் அவ்வப்போது போன் வந்த போது தனியாக சென்று பேச அவளுக்கு அதற்கான காரணம் புரியவில்லை.
இந்த ஒரு வாரத்தில் அவனின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்தது. அதனால் அவள் குழம்பினாள்.
அவள் உற்று கவனித்திருந்தால் இங்கு வந்ததில் இருந்தே அலைந்து கொண்டிருப்பது அவளுக்கு புரிந்திருக்கும்.
அன்று முழுவதும் அபிஷேக்குடன் இருந்ததில் ஜோஸ்வினி சந்தோஷத்தில் மிதக்க அவளுக்கு க்கு அன்று புது நம்பரில் இருந்து போன் கால் வந்தது.
“ஹலோ”
“ஜோஸ்வினி அன்னைக்கு ரொம்ப நல்ல பொண்ணு மாதிரி ஷியாம பாக்க வந்த. நான் உன் நல்ல பொண்ணுனு நினச்சேன். ஆனா பாக்க வந்ததுகப்புறம் என் பையன் உயிரோட இருக்கானானே தெரில. என் பையன என்னடி பண்ண?”
“ஆ… ஆன்ட்டி நீங்க என்ன சொல்றீங்க?”
“போதும்டி. இனியும் நடிக்காத. அந்த அபிஷேக் என்னனா என் மகன வீடு பூந்து அடிச்சான். நீயும், அவனும் சேந்து என் மகன கொல பண்ணிட்டீங்களா?” என்று ஆவேசமாக கத்த ஜோஸ்வினிக்கு இருந்த அதிர்ச்சியில் வார்த்தை வராமல் போனது.
“ஷ்யாம் எங்களுக்கு கிடைக்கல… உங்கள கொல பண்ண கூட தயங்க மாட்டேன்” என்று சொல்லி போனை கட் செய்தாள்.
ஜோஸ்வினிக்கு இருந்த அதிர்ச்சியில் அந்த பக்கம் கால் கட் ஆனது கூட தெரியாமல் அதிர்ச்சியில் சிலையாய் அமர்ந்திருந்தாள்.
இதை ஏதும் அறியாத அபிஷேக் அடுத்த நாளுக்காக உற்சாகமாக திட்டமிட்டு கொண்டிருந்தான்.
அடுத்த நாள் அவளை மிகவும் சந்தோஷமாக தான் ஏற்பாடு செய்திருந்த கேண்டில் லைட் டின்னருக்கு அழைத்து சென்றான்.
அவனுக்கு தனது செர்ரி தன்னிடம் வந்து விட்டாள் என்ற சந்தோஷத்தில் அவளை முழுவதுமாக கவனிக்கவில்லை.
அவளை மகாராணி போல கூட்டி சென்றவன் அழகிய ரோஜா மலர்கள் உள்ள பூங்கொத்தை அவள் அருகில் ஒரு காலை முட்டிக்காலிட்டு அமர்ந்தவன்
“செர்ரி ஐ…” என்று ஆரம்பிக்க அதுவரை தனது மன உளைச்சலில் இருந்தவள் வெடிக்க ஆரம்பித்தாள்.
“என்ன தைரியம் இருந்தா என்கிட்ட புரபோஸ் பண்ணுவ? நீ ஒரு கொலைகாரன். ஷியாம ஏதோ பண்ணிட்டு என்கிட்ட நல்லவன் மாதிரி பிஹேவ் பண்றியா?. ச்சே” என்று கத்தினாள்.
அவளது கத்தலில் அந்த அறையே அதிர சுற்றிலும் உள்ளவர்கள் இவர்களை நோக்கி வர அவமானமாக உணர்ந்தான்.
“உங்களுக்கு உண்மையா ஒருத்தன் லவ் பண்ணா பிடிக்காதா? யாரோ ஒரு தேர்ட் ரேட் பொறுக்கிய தான் எப்போவும் நினப்பியாடி? நான் உன் புருஷன்டி. இதுக்கு மேல ஒரு வார்த்த பேசின நான் மனுசனா இருக்க மாட்டேன்” என்று உறுமியவன் அவளை தரதரவென இழுத்துச் சென்றான்.
