அபி தனது வீட்டிற்கு வந்தவள், மாமியார் கூப்பிடுவதை கூட கண்டுகொள்ளாமல் தனது அறைக்கு சென்று, பொருட்கள் அனைத்தையும் தூக்கி எறிந்தவள். கழிவறைக்குள் சென்று குளித்துவிட்டு வந்து, மெத்தையில் அமர்ந்தவள், மனதில் மால் வாசலில் நடந்த நிகழ்வே வந்து நின்றது.
டாக்ஸிக்காக காத்துக் கொண்டிருந்தவள், ஏதோ சத்தம் கேட்டு திரும்பிப் பார்க்க, அங்கே இவள் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் சிரித்து, சந்தோஷமாக அவளுக்கு பிடித்த பொருட்களை அதே மாலில் வாங்கிக் கொடுத்தவன்,
அவளை அழைத்துக் கொண்டு செல்வதற்காக இருவரும் அருகில் சென்று கொண்டிருக்கும்போது, சிரித்து பேசிக்கொண்டே சென்ற சத்தத்தைக் கேட்டுத் தான் இவள் திரும்பிப் பார்த்தாள்.
தனது கணவன் வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அபி, அடுத்து அவர்கள் செய்த விஷயத்தை கண்டு இன்னும் அதிர்ச்சியுற்றாள். தனது கையில் இருந்த ஒரு மிகப்பெரிய பிராண்ட் பேக்கைப் பார்த்த அந்தப் பெண், “இப்போதான் வந்த லேட்டஸ்ட் கலெக்ஷன் மாடல் இது. நான் கேட்ட உடனே வாங்கிக் கொடுத்துட்ட. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, சந்துரு,” என்றவள், அவன் இதழில் இதழ் பொருத்தி முத்தமிட்டு அவனுக்கு ஆச்சரியம் கொடுத்தாள்.
அதை கண்டு அபிக்கு காலடியில் பூமி நழுவுவது போல இருந்தது. அவனும் அவள் முத்தத்தில் கரைந்தவன், சில நிமிடங்கள் கழித்து அவளிடமிருந்து பிரிந்து, அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
டாக்ஸி டிரைவர் இரண்டு முறை கால் செய்து, மூன்றாவது முறை அருகில் நின்றிருந்த பெண்மணி அவளை பிடித்து உலுக்கியவுடன் தான் நினைவு வந்து, போனை அட்டெண்ட் செய்து, அவரிடம் பல திட்டுக்களையும் வாங்கிக் கொண்டு அதே கேபில் ஏறினாள். அவள் வீட்டிற்கு அருகில் இருந்த கோவில் வாசலில் இறங்கி, நடை பிணம் போல் கோவிலுக்குள் நுழைந்து, சாமியின் கருவறைக்கு வந்து நின்று, எதுவும் வேண்டாமல் தெய்வத்தை வெறித்த விழிகளுடன், பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதற்கு நேர் மாறாக அவள் உள்ளம் உலைகலனாக கொதித்தது. “ஏற்கனவே என் காதலனிடம் இருந்து என்ன பிரிச்சுட்டு, அப்பா அம்மாவை விட்டுட்டு இவ்வளவு தூரம் தள்ளி வந்து இருக்கேன். இவ்வளவு நாள் ஒரு குழந்தையை இழந்துட்டு, இப்போதான் குழந்தை வந்திருக்குன்னு சந்தோஷம்கூட முடியல. அதுக்குள்ளேயும் என் புருஷன் எனக்கே துரோகம் பண்றாரு. இப்படி அடி மேல அடி கொடுத்துட்டே இருப்பியா? நானும் மனுஷிதானே! என் மேல உனக்கு கருணையே வராதா?” என்று மனதளவில் பேசிக் கொண்டிருந்தாள்.
மிகவும் சோர்வாக உணர்ந்ததால், அப்படியே நடந்து அங்கு இருந்த ஒரு தூணை பிடித்து அமர்ந்தாள். கர்ப்பகால மயக்கம் அவளை தாக்க, தட்டு தடுமாறி தனது பையில் இருந்த தண்ணீரை திறந்து, மேலே பாதியும் வாய்க்குள் பாதியும் கொட்டிக் கொண்டாள்.
இருந்தும் மனது கேளாமல், கடைசி நம்பிக்கையாக கணவனுக்கு போன் செய்தாள். இரண்டு முறை போன் ரிங் முழுதும் அடித்து கட்டாகிவிட்டது. மூன்றாவது முறை முதல் ரிங்கிலேயே எடுத்தவன், “பிஸியா இருக்கேன், கட் பண்ணி விடுறேன். மறுபடியும் மறுபடியும் கூப்பிடாதே,” என்றான்.
“எங்க இருக்கீங்க?” என்று கேட்டவளுக்கு, “ ஆபீஸ்ல தான் இருக்கேன். என்ன புதுசா கூப்பிட்டு எங்க இருக்கேன்னு விசாரிக்கிற ? ஒழுங்கா உன் வேலையை பார்,” என்றவன், மறுபக்கம் “என்ன பேபி, எவ்வளவு நேரம் ஃபோன் பேசிட்டு இருப்ப?” என்ற வேறு ஒரு பெண் குரல் கேட்க, “ஷ்… ஷ்… அமைதியா இரு,” என்று சொல்லி, “சரி, நான் போன் வைக்கிறேன்,” என்று காலைக் கட் செய்தான்.
அனைத்தையும் கேட்டவள், அவன் தன்னை ஏமாற்றியதை உறுதி செய்து கொண்டாள். கண்களில் கண்ணீர் வழிந்தது; துடைக்கக்கூட மனமில்லாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.
அந்த கோவில் திடீரென்று பரபரப்பாகி, அனைவரும் என்னவென்று பார்த்துக் கொண்டிருக்க, அமைச்சர் ஈஸ்வரன் பாடிகார்ட்களுடன் தரிசனம் செய்ய கோவில் உள்ளே நுழைந்தார்.
திடீர் வருகை என்பதால் யாரும் பதட்டம் அடையாமல் இருக்க, அமைச்சர், “அனைவரும் சாமி கும்பிடலாம். நீங்க எல்லாம் உங்க வேலையைப் பாருங்க. யாரும் பதட்டம் அடைய வேண்டாம்,” என்று சொல்லிவிட்டு, ஒவ்வொரு சன்னதியிலும் தரிசனம் செய்ய ஆரம்பித்தார்.
கால் மணி நேரம் அனைத்து இடங்களிலும் தரிசனம் செய்தார்; அதை அருகில் இருந்து ஒருவர் வீடியோவும் எடுத்துக் கொண்டார். “மக்களுடன் மக்களாக இணைந்து சாமி கும்பிடும் மினிஸ்டர்” என்று உடனே அது ட்ரெண்டிங் ஆனது.
அப்படி இருக்கையில், அதையெல்லாம் கவனிக்காமல், அபி ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாள்.
அவளுக்கு அருகில் ஒரு அம்மா வந்து, அவளுக்கு பேச்சு கொடுத்து, “மனசுல இருக்கிற கவலை எல்லாம் போக, அம்மனுக்கு வேண்டிக்கிட்டு விளக்கு ஏத்து,” என்று சொன்னவுடன், அவளும் வெளியே போய் விளக்கு வாங்கி வந்து ஏற்றினாள்.
அவ்வாறு குனிந்து ஏற்றும் போது, அவளுடைய சேலை விலகி இடுப்பு தெரிந்தது. அப்பொழுது அங்கிருந்து சென்ற அமைச்சர் அதை கண்டு, அவள் நிமிரும் போது சேலை வழியாக மார்பு பகுதியும் சற்று தெரிந்தது. அதனால் அவருக்கு ஆசை ஏறி, கோவிலில் இருப்பதை மறந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவள் வேகமாக நிமிர்ந்து தடுமாற, அமைச்சர் அவளை தாங்கி பிடித்து, சாக்காக அவளது இடுப்பில் கை விரல்களை அழுத்தினார். மற்றவர்களுக்கு அவர் உதவி செய்தது போலத் தோன்றினாலும், அவரது நோக்கம் வேறுபட்டது.
“உடம்பு சரியில்லையா? ஹாஸ்பிட்டல் போணுமா?” என்று நல்லவர் போல அவளது நெற்றி, கன்னம் தொட்டு கேட்டார்.
அது அவளுக்கு அசௌகரியமாக இருந்ததால், அவரது கையை தள்ளி, “இல்லங்க ஐயா, நான் நல்லா தான் இருக்கேன்,” என்று சொல்லி அங்கிருந்து விலகினாள்.
அங்கிருந்த சிலர், “நம்ம ஐயாவுக்கு எவ்வளவு நல்ல மனசு,” என்று பேசினர்.
அமைச்சர் அவளை திரும்பிப் பார்த்தபடி, “எப்படியாவது அவள் வேண்டும்,” என்று கூட்டாளிகளிடம் சொல்லிவிட்டு கிளம்பினார்.
இந்த சம்பவமும் சமூக வலைதளங்களில் “மயக்கத்தில் இருந்த பெண்ணை காப்பாற்றிய அமைச்சர்” என்று ட்ரெண்ட் ஆனது.
ஆனால் அபிக்கு அது மிகக் கேவலமாகத் தோன்றியது.
அனைத்தையும் நினைத்து பார்த்தவள், மாமியார் வந்து திட்ட, அவள் எதிர்த்து பேசினாள்.
பின்னர் இரவு உணவு செய்து முடித்து அறைக்கு வந்தபோது, கணவன் அங்கே இருந்தான். அவனைப் பார்த்து கோபமாக, “மால்ல என்ன செய்தீங்க?” என்று கேள்வி கேட்டாள்.
அவன் மறுத்தாலும், அவள் பார்த்ததை சொல்ல, வாக்குவாதம் ஏற்பட்டது.
மாமியாரும் வந்து சேர்ந்தார். “ஆண்கள் இப்படித்தான் இருப்பாங்க, அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்,” என்று கூற, அபி கடுமையாக எதிர்த்து பேசினாள்.
இறுதியில், “போலீஸில் கம்ப்ளெயின்ட் பண்ணுவேன்,” என்ற அவளது வார்த்தை இருவருக்கும் பயத்தை ஏற்படுத்தியது.
அதன்பின், அபி தினமும் வேலைக்கு சென்று கொண்டிருந்தாள். யாரும் அவளிடம் அதிகமாக பேசவில்லை.
இரண்டு மாதங்கள் கழித்து, அபி ஐந்தாவது மாத கர்ப்பிணி ஆனாள்.
அவளது பெற்றோர் வந்து சென்ற போது, உண்மையை மறைத்தாள்.
அவர்களைப் பார்த்ததும் கட்டி அணைத்து அழுதாள். “ஒன்னும் இல்ல, ரொம்ப நாள் கழிச்சு பார்த்ததால்தான்,” என்று சமாளித்தாள்.
சிறிய விழாவுடன் நிகழ்ச்சி முடிந்தது. பெற்றோர் திரும்ப செல்லும் போது, அவள் அழுகையை பார்த்து அழைத்து செல்வதற்கு சந்துருவிடம் அனுமதி கேட்க, வேலைக்கு பயந்த மாமியார் தான் மருமகளை நன்றாக பார்த்துக் கொள்வதாக சொல்ல அவளும் தங்கி இருப்பதாகவே கூறினாள். அதன்பின் நாட்கள் அமைதியாக சென்றன.
இதற்குள் நாம் இந்த நான்கு வருடம் கரண் என்ன செய்தான் என்று பார்த்துவிட்டு வரலாம்.
பிபிஏ முடித்து, எம்பிஏக்காக நியூயார்கில் இருந்த ஒரு பிரபல கல்லூரியில் சேர்ந்தவன், படித்துக் கொண்டே பார்ட்-டைம் வேலை செய்து, தனது செலவுகளை அவனே பார்த்துக் கொண்டான். அவன் கணக்கில் அவன் தாயின் சொத்தில் இருந்த காசுகள் அனைத்தும் அப்படியே இருந்தது. அதை செலவு செய்ய அவனுக்கு மனம் வரவில்லை. அதனால் தனது செலவுகளை அவனே பார்த்துக் கொண்டான்.
வெற்றிகரமாக மூன்று வருடங்கள் படித்து முடித்தவன், மூன்றாவது வருடம் ஆரம்பத்திலேயே தனது படிப்பிற்கு சம்பந்தப்பட்ட ஒரு ஸ்டார்ட்அப் கம்பெனியில் சேர்ந்து பகுதி நேரமாக வேலை பார்க்க ஆரம்பித்தான்.
அவனுடைய வேலை பார்க்கும் திறன் அலாதியாக இருந்தது. அதை கண்டு அந்த கம்பெனி முதலாளி அவனை முழுநேர ஊழியராக சேர்த்துக் கொண்டார்.
ஆனால், “அலுவலகம் வந்து வேலை பார்க்க முடியாது” என்று அவன் சொன்னதினால், “பரவாயில்லை, படித்துக் கொண்டே மிச்ச நேரங்களில் அலுவலகத்திற்கு வா. அல்லது லேப்டாப்பில் வேலை செய்து அனுப்பு. குறுகிய காலத்தில் இவ்வளவு உழைப்பை நான் யாரிடமும் பார்த்ததில்லை. உன்னுடைய கற்றுக் கொள்ளும் திறன் அபாரமாக இருக்கிறது,” என்று அவரே பாராட்டினார்.
அதை எல்லாம் அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், மூன்றாம் வருடம் முடியும் போது மிகப்பெரிய பதவிக்கு உயர்ந்திருந்தான். அது யாருக்கும் தெரியாது; யாரோ ஒருவர் வேலை செய்கிறார் என்று மட்டும் தெரியும். ஏனெனில் அவன் தனது விவரங்களை மறைக்காமல் சொன்னாலும், தன்னை சாதாரண ஊழியராகவே நடத்த வேண்டும் என்று கூறியிருந்தான்.
நான்காவது வருடத்தில், அந்த கம்பெனியின் அசிஸ்டன்ட் மேனேஜிங் டைரக்டர் பதவியை ஏற்கும் அளவிற்கு உயர்ந்திருந்தான். அவன் முதல் நாள் வேலைக்கு வந்து தனது இருக்கையில் அமர்ந்தபோது, அந்த பதவிக்காக காத்திருந்த இரண்டு நபர்கள் அவனை பார்த்து பொறாமை அடைந்தனர். ஆனால் அதற்கு மாறாக, கம்பெனியில் இருந்த இளம் பெண்கள் மிகவும் உற்சாகமடைந்தனர். அடுத்த ஆறு மாதங்களில், அவன் கம்பெனிக்கு பல புதிய ப்ராஜெக்ட்களை கொண்டு வந்து, வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்தினான். கம்பெனி எம்டி அவரே முன்வந்து, “இந்த கம்பெனியை நீயே நடத்துப்பா; எனக்கு வயசு ஆகிறது,” என்று கூறினார்.
அதற்கு அவன், “நான் உங்கள் பதவியில் இருக்கிறேன்; ஆனா கம்பெனியை முழுமையாக எடுத்து நடத்த முடியாது. எனக்கு எதிர்காலம் இந்தியாவில்தான் இருக்கிறது,” என்று தெளிவாக கூறி, ஆக்டிங் மேனேஜிங் டைரக்டராக அந்த பொறுப்பை தொடர்ந்து செய்ய ஆரம்பித்தான்.
அங்கே அவனுக்கு கிடைத்த ஒரு நம்பிக்கையான நண்பன் தான் வினோதன். அவனும் ஒரு அமெரிக்காவில் வாழும் இந்தியர். அனாதையாக வளர்ந்து, படித்து முடித்து, ஒருவரின் உதவியால் நியூயார்க் வந்து இந்த கம்பெனியில் சேர்ந்தவன்.
ஆரம்பத்தில் தடுமாறிக் கொண்டிருந்த அவனுக்கு, கரண் வந்தவுடன் பேச்சுத் துணையாக ஒரு தமிழன் கிடைத்ததால் நெருக்கம் ஏற்பட்டது. கரண் அவனை தவிர்க்க முயன்றாலும், வினோதன் தொடர்ந்து பேசிப் பேசிப் பழகி, இரண்டு வருடங்களில் நெருங்கிய நண்பனாக மாறினர். தற்போது அவனுக்கு அசிஸ்டென்டாகவும் வேலை செய்கிறான்.
ஒருநாள், துக்கத்தை தாங்காமல் அதிகமாக குடித்த கரண், தனது வாழ்க்கையின் உண்மைகளை அனைத்தும் வினோதனிடம் கூறினான். அதன்பிறகு வினோதன் அவனுக்கு இன்னும் நெருக்கமானவன் ஆனான்.
அசிஸ்டன்ட் ஆக மட்டுமே அவன் இருக்கக் கூடாது அவனும் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் அவன் உழைப்புக்கு தகுந்த மதிப்பு அளிக்கும் வகையில் ஒரு பதவிக்கு வினோதனை உயர்த்தினான்.
ஜெனிபர் என்ற ஒரு பெண்ணையும் தனது அசிஸ்டென்டாக சேர்த்துக் கொண்டான். அவளும் ஏழு, எட்டு மாதங்களாக அவனுடன் வேலை செய்து வருகிறாள். ஆரம்பத்தில் தடுமாறினாலும், பின்னர் அவன் குணத்தை புரிந்து கொண்டு, அவனுக்கு ஏற்றபடி அனைத்தையும் செய்து வருகிறாள்.
ஒரு நாள், தனது அறையின் பால்கனியில் நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தவன், எப்போதும் போல அபியை நினைத்துக் கொண்டிருந்தான்.
அவள் வேறு ஒருவரின் மனைவியாக இருந்தாலும், அவர்களுடைய புகைப்படத்தை எப்போதும் பார்த்துக் கொண்டிருப்பான்.
அப்பொழுது அவன் செல்போனில் “தேவன்” என்ற பெயர் தோன்றியது. இந்தியாவில் இருந்து அழைப்பு வந்ததை கண்டு சிரித்தவன், அட்டெண்ட் செய்து, காதில் வைத்தான்.
“கரண், எப்படிடா இருக்க?” என்றான் தேவன்.
“ம்,” என்று ஒற்றை எழுத்தில் பதில் அளித்தான் கரண்.
அதை கண்டு மனம் நொந்தாலும், “உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். அதுக்குத்தான் கால் பண்ணினேன்,” என்றான் தேவன்.
மறுபக்கம் அமைதி நிலவியபோது, “அபி பிரெக்னண்டா இருக்கா,” என்றான் தேவன்.
அதை கேட்டவுடன், கையில் இருந்த சிகரெட்டை அழுத்திப் பிடித்தான் கரண். எதுவும் பேசாமல் இருந்தான். தேவன் தொடர்ந்து, அபிக்கும் அவள் கணவனுக்கும் இடையிலான பிரச்சனைகளை எல்லாம் கூறினான்.
அதை கேட்டவுடன், கரண் பால்கனியின் இரும்புக் கம்பியை வேகமாக குத்தினான். “அந்த பொறம்போக்குக்கு எவ்வளவு திமிர் இருந்தா என் அபியை ஏமாற்றுவான்! இனிமே அவ அவன்கிட்ட இருந்து கஷ்டப்படக் கூடாது,” என்றான்.
“நீ என்ன பண்ண போற? கிளம்பி வந்து அவளை உன்னோட கூட்டிக்கிட்டு போறியா? நீ கூப்பிட்டா வந்துருவாளா ?” என்று தேவன் கோபமாக கேட்டான்.
“நான் அப்படி சொன்னேனா? அவங்க அப்பா அம்மாவிடம் விஷயத்தை சொல்லு. ஏன், அவ சொல்லலையா?” என்றான் கரண்.
“அவ சொல்ல மாட்டாளே. அப்பா அம்மா கஷ்டப்படுவாங்கன்னு நினைக்கிறா,” என்று தேவன் கூறி, மற்ற குடும்ப விஷயங்களையும் சொன்னான்.
“சரி, அவளை கவனிச்சுக்கோ. அடுத்தடுத்து என்ன நடக்குது எனக்கு சொல்லு. நான் சீக்கிரம் இங்க வேலை முடிச்சுட்டு வர முயற்சி பண்றேன். அவ என் கூட இல்லையென்றாலும் பரவாயில்லை; அவ நிம்மதியா வாழணும். முக்கியமா, வயித்துல இருக்குற குழந்தை முக்கியம்,” என்றான் கரண்.
“சரி டா, எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்,” என்று கூறி தேவன் அழைப்பை துண்டித்தான்.
காரில் அமர்ந்து கொண்டிருந்த தேவன், வேலை முடித்து சோர்வாக வந்த அபியை பார்த்து மனம் வருந்தினான்.
அவன் வேலை விஷயமாக கோயம்புத்தூர் வந்திருந்தான். அபி தனது கணவனை மாலில் பார்த்த நாள், அவனும் அங்கே இருந்தான். நண்பர்களுக்கும் குடும்பத்திற்கும் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தபோது, சந்துரு மற்றொரு பெண்ணுடன் நடந்து சென்றதை கவனித்தான்.
‘இந்த முகம் எங்கோ பார்த்த மாதிரி இருக்கே’, என்று நினைத்தவன், திடீரென நினைவுக்கு வந்து, அபியின் திருமண புகைப்படத்தை போனில் பார்த்து, அவனே அபியின் கணவன் என்பதை உறுதி செய்தான்.
அதன்பிறகு, அவர்களை பின்தொடர்ந்தான். அவர்கள் நடத்தை, நெருக்கம் அனைத்தையும் கண்டு அவனுக்கு கோபம் வந்தது.
மாலில் அந்த பெண் சந்துருவுக்கு முத்தம் கொடுத்த காட்சியை அபி ஒரு பக்கம் பார்த்திருந்தால், மறுபக்கம் தேவனும் பார்த்தான்.
பின்னர் அபி கோவிலுக்கு சென்றதும், அவளையும் கவனித்து, அவள் வீட்டிற்குச் சென்றதையும் பார்த்தான். அனைத்தையும் தெரிந்து கொண்டவன், அங்கேயே ஒரு நண்பன் மூலம் பிரைவேட் டிடெக்டிவ் வைத்து, அபி–சந்துரு பற்றிய விவரங்களை கொடுத்து, அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கச் சொன்னான்.
அதன்பின் சென்னை சென்றடைந்தான். அந்த டிடெக்டிவ், அவர்கள் இருவரையும் தொடர்ந்து கண்காணித்து, புகைப்படங்கள் மற்றும் தகவல்களை தேவனுக்கு அனுப்பிக் கொண்டிருந்தான். அதை தான் இன்று மனம் தாங்காமல் கரணிடம் கூறினான்.
இன்னும் இவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது என்பதை அறியாமல், ஒரு வாரம் கடந்து சென்றது. கரண் ஒருவேளை முன்பே வந்து அபியை பார்த்திருந்தால், அவளுக்கு நேரப் போகும் அந்த சம்பவம் நடந்திருக்காமல் தவிர்ந்திருக்கலாமோ என்னவோ.
