“பாலா… இங்க இருந்த பென்டிரைவ்ஸ் எங்க?” என்று மலர் தவிப்போடு கேட்க, “எந்தப் பென்டிரைவ்? எனக்கொண்ணும் தெரியாதே!” என்று அவனோ சற்றும் பதற்றமின்றித் தோள்களைக் குலுக்கினான்.
“பாலா… இது விளையாடுற நேரமில்ல. எடுத்த பென்டிரைவ்ஸை ஒழுங்கா என்கிட்டயே திருப்பிக் கொடுத்திரு” கோபத்தில் அவளது குரல் நடுங்கியது.
“என்ன உளர்ற? என்கிட்ட எங்க இருக்கு? நீ எங்கயாச்சும் தொலைச்சுட்டு என்மேல பழிபோட பார்க்குறியா?” அவன் கர்வமாகப் புன்னகைக்க,
“பாலா இங்க பாரு… என் டேபிள் டிராலதான் அந்தப் பென்டிரைவ்ஸ் இருந்துச்சு. அது ரொம்ப இம்பார்டண்ட். நான் அதை மேனேஜர்கிட்ட ஒப்படைக்கணும். நேத்து பார்ட்டில நடந்ததை மனசுல வச்சுக்கிட்டு, நீதான் என்மேல இருக்கிற கோபத்துல அதை எடுத்திருப்பனு எனக்கு நல்லாத் தெரியும்!” என்று மலர் தன் விரலை நீட்டி ஆக்ரோஷமாகக் கத்தினாள்.
அவளது கோபத்தைக் கண்டு கேலிப்புன்னகை உதிர்த்தவன், நாற்காலியில் இன்னும் கொஞ்சம் சாய்ந்து அமர்ந்துகொண்டு, “என்கிட்ட கேட்டா எனக்கென்ன தெரியும்? நான்தான் எடுத்தேன்னு நீயா கற்பனை பண்ணிக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பாக முடியுமா? நீ என்ன வேணும்னாலும் நினைச்சுக்கோ!” என்றான் கிண்டலாக.
அத்தனை நேரமும் அடக்கியிருந்த கண்ணீர் அவளது விழிகளைத்தாண்டி கன்னங்களில் வழிந்தோடியது.
“என்மேல உனக்கு என்ன கோபம் இருந்தாலும் என்னை திட்டு… வேணும்னா திருப்பி அடிக்கக்கூடச் செஞ்சுக்கோ. ஆனா தயவுசெஞ்சு பென்டிரைவ்ஸைக் கொடுத்திடு… வேலை போயிடும். என்னோட சம்பளத்தை நம்பி நிறைய ஜீவனுங்க இருக்கு… ப்ளீஸ் பாலா!” தன் உயர்பதவி, சுயமரியாதை எல்லாவற்றையும் கடந்து அவனிடம் கைகளைக் கூப்பிக் கெஞ்சினாள்.
மலரின் விழிகளில் இருந்து சிந்திய கண்ணீர், அவனது கல் நெஞ்சையும் கரையச் செய்தது. அவளது கோபத்தைக் கூடத் தன் அகம்பாவத்தால் எதிர்த்து நின்றவனால், ஒரு குழந்தையைப் போல அவள் உதிர்க்கும் கண்ணீரை நேருக்கு நேர் எதிர்கொள்ளவே முடியவில்லை.
நெஞ்சுக்குள் குற்ற உணர்ச்சி மேலோங்கிட, அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல் அமைதியாக அறையை விட்டு வெளியே வந்தான். அவளது அழுகுரல் காதுகளில் எதிரொலித்துக் கொண்டே இருக்க, என்ன செய்வதென்று தெரியாமல் ஆழ்ந்த யோசனையில் மூழ்கினான்.
உண்மையில், மலர் நினைப்பது போல பாலா அந்தப் பென்டிரைவ்களை எடுக்கவில்லை. அப்படியென்றால், கண்காணிப்பு கேமராவிலும் சிக்காமல் அறைக்குள் புகுந்து அதை எடுத்தது யார்? குழப்பமும் பதற்றமும் தொற்றிக்கொள்ள, நேராக ராகவ் மற்றும் ரகுவைத் தேடிச் சென்று விசாரித்தான்.
அவனது கேள்வியால் அதிர்ந்த இருவரும், “டேய் பாலா! நாங்க அதை எடுக்கவே இல்ல… சத்தியமா எங்களுக்கு எதுவும் தெரியாது!” என்று மறுத்தனர்.
அடுத்ததாக பாலாவின் சந்தேகம் ஜெகனின் மீது திரும்பியது. அவனது கேபினுக்குச் சென்று பென்டிரைவ்களைப் பற்றிக் கேட்க, அவனோ முதலில் மறுத்தான்.
பாலா மீண்டுமொரு முறை அழுத்தமாக விசாரிக்க, “இப்ப என்ன? நான்தான் அதை எடுத்தேன், போதுமா? மலரை இந்த ஆபீஸை விட்டு துரத்தணும்… அதுக்காகத்தான் இதைச் செஞ்சேன். அந்தச் சனியன் இங்கிருந்து ஒழிஞ்சாதான் இந்த ஆபீஸுக்கே நிம்மதி!” என்று தன் மனதிலிருந்த வன்மத்தைக் கக்கினான்.
அவன் கூறியதைக் கேட்டு பாலாவின் முகம் கோபத்தில் இருண்டது.
“ஜெகா… வேணாம், விளையாடாத! ஒழுங்கா அதைத் திருப்பிக் கொடுத்திரு!” என்று பாலா எச்சரிக்கும் தொனியில் கூறியதும்,
அவனைப் பார்த்து எல்லளான புன்னகை உதிர்த்தவனோ, “பாலா… இது எனக்கும் அவளுக்கும் இடையில இருக்குற தனிப்பட்ட பிரச்சினை. இதுல நீ தேவையில்லாம நடுவுல வந்து தலையிடாத!” என்றான்.
“நீ செய்யுறது தப்பு ஜெகா… உனக்கு அவ மேல என்ன கோபம் இருந்தாலும் நேரடியா மோதிக்கோ. இப்படிப் பின்னாடி நின்னு சதி பண்ணாத!” என்று பாலா சற்று நிதானமான குரலில் கூறியதும்,
“என்னடா… மலர் உன்னை அத்தனை பேருக்கு முன்னாடி அடிச்சு அவமானப்படுத்தியும், நீ அவளுக்குச் சப்போர்ட் பண்ணிப் பேசுற? என்ன… நீயும் அவகிட்ட மயங்கிட்ட போல!” என்று அவன் நக்கலாகச் சொல்லி முடிப்பதற்குள், பாலா தன் கரத்தை சுழற்றி ஜெகனின் முகத்தில் ஓங்கிக் குத்தினான்!
அவனது வாய் ஓரத்தில் ரத்தம் கசிய, ஆத்திரத்தில் பதிலுக்குப் பாலாவை அடிக்க பாய்ந்தான். தன்னை நோக்கி வந்த கரங்களை, அசாத்திய வேகத்தில் பின்புறமாகத் திருப்பி ஆக்ரோஷமாக முறுக்கினான் பாலா.
“ஆஆஅ… அம்மா! வலிக்குதுடா… பாலா என்னை விட்டுரு!” என்று வலியில் அலறித் துடித்த ஜெகன், “பென்டிரைவ்ஸ் அங்கதான் இருக்கு… என்னை விட்டுருடா!” எனக் கலங்கிய கண்களோடு அருகிலிருந்த கோப்புகள் வைக்கும் அலமாரியைக் காட்டினான்.
“ஹ்ம்ம்… அப்படி வா வழிக்கு! குட் பாய்!” என்று கேலியாக இதழ் வளைத்த பாலா, ஜெகனின் கைகளை விடுவித்து அவனது முதுகில் ஓங்கி ஒரு அடி அடித்தான். அவன் வலியோடு சுருண்டு விழ, அலமாரியைத் திறந்து அங்கிருந்த பென்டிரைவ்களை எடுத்துக்கொண்டு, சற்றும் தாமதிக்காமல் மலரின் அறையை நோக்கி நகர்ந்தான்.
அவளது கேபினுக்குள் நுழைந்த பாலா, “மலர்… இந்தா உன் பென்டிரைவ்ஸ்!” என்று அவளிடம் நீட்டியதும், அவன்தான் இத்தனை நேரமும் அதை எடுத்து ஒளித்துவைத்து தன்னை அழ வைத்திருக்கிறான் என்று உறுதியே செய்துவிட்டாள்.
தன் வேலையை கெடுக்கிறான் என்ற ஆத்திரத்திலும், தன்னை கெஞ்ச வைத்துவிட்டான் என்ற இயலாமையின் வலியிலும், அவனது கன்னத்தில் ‘பளார்’ என ஓங்கி அறைந்தாள்!
அவன் தனக்கு உதவத்தான் வந்திருக்கிறான் என்பதையோ, அங்கு என்ன நடந்தது என்பதையோ கேட்டுத் தெரிந்துகொள்ளும் மனநிலையில் மலர் அப்போது இருக்கவில்லை. பாலா மேற்கொண்டு ஏதோ பேசத் தொடங்கும் முன்னரே அவள் அறைந்ததில் அவனோ நிலைதடுமாறிப் போனான்.
தான் செய்யாத தவறுக்காகத் தொடர்ச்சியாக விழும் இரண்டாவது அறை அது! அவமானம் அவனுள் தீயாய் மூள, அவன் சுதாரித்துக்கொண்டு மலரைத் திருப்பி அடிப்பதற்காகக் கையை ஓங்குவதற்குள், அவசரமாய் அங்கிருந்து வெளியேறியிருந்தாள்.
முதல் வேலையாக மேலாளரின் அறைக்குச் சென்று அத்தனை பென்டிரைவ்களையும் அவரிடம் ஒப்படைத்தாள்.
ஒரு பெரிய பணியை முடித்த நிம்மதியில், கழிவறைக்குச் சென்று தன் அழுத முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவித் துடைத்துக்கொண்டாள். ஏமாற்றமும் வலியும் கலந்த முகத்தோடு மீண்டும் தன் இருக்கைக்குத் திரும்பியவள், அங்கே பாலா இல்லாததைக் கண்டாள்.
“இவனெல்லாம் என்ன ஜென்மமோ? செய்ற தப்பையெல்லாம் மறைமுகமா செஞ்சுட்டு, ஒன்னும் தெரியாத மாதிரி சும்மா சும்மா என்கிட்டயே வம்புக்கு வர்றான்!” என்று வாய் விட்டே புலம்பினாள். மனமும் உடலும் சோர்வடைந்திருக்க, அமைதியாய்த் தன் நாற்காலியில் அமர்ந்தவள், அப்படியே மேசையின் மேல் தலைசாய்த்துக் கண்களை மூடிக்கொண்டாள்.
“மலர்…” என்று யாரோ அழைத்திட, அரைகுறையாகக் காதில் விழுந்த சத்தத்தில், திடுக்கிட்டுச் சட்டெனக் கண் விழித்துப் பார்த்தாள். அவளுக்கு எதிரே, “ஆபீஸ் டைம் ஓவர் ஆகிடுச்சு… நீங்க இன்னும் கிளம்பலையா?” என்ற கேட்டவாறு அவளது குழுவைச் சேர்ந்த ரஞ்சனி நின்றுகொண்டிருந்தாள்.
கண்களைக் கசக்கிக் கொண்டு, “ஹ்ம்ம்… ஆமா, கிளம்பணும்…” என்று மலர் சோர்வான குரலில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “என்னோட கேப் போயிடும், நான் வர்றேன், நாளைக்குப் பார்க்கலாம்!” என்று அவசரமாக அங்கிருந்து நகர்ந்தாள் ரஞ்சனி.
மலர் தன் நாற்காலியிலிருந்து எழுந்துகொள்ள, அடுத்த
கணமே அவளது கண் முன்னால் உலகம் ஒரு நொடி சுழன்றதுபோல் இருந்தது. மீண்டும் நாற்காலியிலேயே அமர்ந்து தலையைப் பலமாகப் பிடித்துக் கொண்டாள்.
வலி தாங்க முடியாமல் கண்கள் சொருக, தன் கைப்பையிலிருந்த சில வலி நிவாரண மாத்திரைகளைத் தேடி எடுத்து வாயில் போட்டுக்கொண்டு, மேசையின் மீது நெகிழிப் புட்டியிலிருந்த தண்ணீரை எடுத்துப் பருகினாள்.
மின்தூக்கி மூலம் தரைத்தளத்திற்குக் கீழே இருக்கும் வாகன நிறுத்தத்தை அடைந்த மலர், அங்கு அலுவலக வாகனங்கள் அனைத்தும் ஏற்கனவே கிளம்பியிருந்ததைக் கண்டு சோர்ந்துபோனாள்.
அந்த இடமே ஆள் அரவமற்று வெறிச்சோடிக் கிடக்க, “போச்சு… இந்நேரம் பஸ்ஸும் போயிருக்குமே. இன்னைக்கு டாக்ஸி பிடிச்சுத்தான் ஹாஸ்டலுக்குப் போகணும் போல” என்று தனக்குள்ளேயே முணுமுணுத்தவாறு வாசலை நோக்கி நடந்தாள்.
நான்கு எட்டுகள் கூட எடுத்து வைத்திருக்க மாட்டாள்; அவளுக்குப் பின்னிருந்து வந்த வலிய கரமொன்று அவளது மணிக்கட்டைப் பலமாகப் பற்றி இழுத்து, அவளை அங்கிருந்த பெரிய சிமெண்ட் தூணின் பின்புறத்தில் கொண்டு போய் நிறுத்தியது.
திடுக்கிட்டுப் போனவள், பயமும் ஆத்திரமும் தொற்றிக்கொள்ளத் தன் கையைப் பிடித்திழுத்தவன் யார் என நிமிர்ந்து பார்க்க, அவளுக்கு எதிரே ருத்ரமூர்த்தியாய் நின்றிருந்தான் பாலா!
மலர் அறைந்ததில் பாலாவின் கன்னத்தில் அவளது கைவிரல்கள் அப்படியே படிந்திருந்தன. அழகான அவனது சிவந்த கன்னங்கள் மேலும் சிவந்திருக்க, அனல் வீசும் பார்வையுடன் அவளை வெறித்திருந்தான்.
அவனது கோப முகத்தைக் கண்டு உள்ளுக்குள் தோன்றிய நடுக்கத்தை மறைத்துக்கொண்ட மலர், ‘என்ன…?’ என்பதுபோல திமிரான பார்வையை அவனை நோக்கி வீசினாள்.
பாலா ஒரு கரத்தைச் சுவரில் பதித்து அவளை வெளியேற விடாமல் அணைபோட்டான். மற்றொரு கரத்தால் அவளது கை மணிக்கட்டுகளை இறுகப் பிடிக்க, வலி தாளாமல் முகம் சுருங்கினாள். “ஸ்ஸ்.. ஆஆ.. பாலா என் கையை விடு வலிக்குது…” என்று கத்தியவாறு, தனது கைகளை விடுவிக்க முயன்றும் அவனது பிடி அசையவில்லை.
“ஏன்டி என்னை அடிச்ச?! எவ்ளோ தைரியம் இருந்தா அத்தனை பேர் முன்னாடி என்மேல கை வச்சிருப்ப? இப்போவும் என்ன ஏதுன்னு கேட்காம நீ பாட்டுக்கு அறைஞ்சிட்டுப் போற? என்னடி நினைச்சிட்டுருக்க உன் மனசுல?!” என்று அவளை எரித்துவிடுவது போலக் கூர்மையாக நோக்கினான்.
அவனது பிடியிலிருந்து தன் கைகளை விடுவிக்கப் போராடியபடியே, “தப்பு பண்ணா அடிக்கத்தான் செய்வாங்க… நீ பண்ண வேலைக்கு உன்னை கம்ப்ளைன்ட் பண்ணாம விட்டு வச்சிருக்கிறதே பெரிய விஷயம்!” அவளும் பதிலுக்குச் சீறினாள்.
“நான் தப்பு பண்ணேன்னு நீ உன் கண்ணால பார்த்தியாடி? நான்தான் அந்தப் பென்டிரைவ்ஸை எடுத்தேன்னு உனக்கு யார் சொன்னது?!” பாலா கட்டுக்கடங்காத ஆத்திரத்தில் உறுமினான்.
அவளது புருவம் ஒருநொடி உயர்ந்து பின் இயல்பு நிலைக்குத் திரும்பியது. அவன் கேட்பது நியாயம்தான், ஆனால் அதைக் கேட்கும் முறை இதுவல்லவே!
“இங்க வந்ததுல இருந்து நீதான்டா என்கிட்ட பிரச்சினை பண்ணிக்கிட்டே இருக்க. என் வேலையைக் கெடுக்கிறதே பொழப்பா வச்சிருக்க. இத்தனை நாள் யாரும் என்கிட்ட வம்பு பண்ணதில்லை. இப்போ உன்னைப் பார்த்துதான் எல்லாரும் பழகியிருக்காங்க. அப்படி என்னடா என்மேல உனக்கு வன்மம்?” அவள் தன் பக்க நியாயத்தை எடுத்துரைக்க, யோசனையில் நெற்றி சுருங்க, தனது பிடிகளைத் தளர்த்தினான்.
அவள் கூறுவதும் சரிதான். பாலாதான் நடந்த அத்தனைப் பிரச்சினைகளுக்கும் முதன்மைக் காரணியாக இருந்திருக்கிறான்.
தன் சிவந்த மணிக்கட்டுகளை வருடிக் கொண்டவள், “உன்மேல தப்பு இல்லைனா அதைப் பொறுமையா என்கிட்ட வந்து சொல்லியிருக்கணும், நிரூபிச்சிருக்கணும். அதை விட்டுட்டுச் சில்லியா, பொறுக்கி மாதிரி பிஹேவ் பண்ற!” என்றாள்.
அவளுடைய வார்த்தைகளில் அவனது கோபம் ஏகத்துக்கும் எகிறியது.
“என்னை அடிச்சது மட்டுமில்லாம, பொறுக்கின்னு வேற சொல்றியா?” என்று பாலா அவளது பின்னங்கழுத்தை அழுத்தமாகப் பிடித்தான்.
“உண்மையைத் தானடா சொன்னேன். விடுடா வலிக்குது! நீ பண்றதெல்லாம் சரியா? எத்தனை டி போடுற… ஏதாவது ஒரு நல்ல குணம் இருக்கா உன்கிட்ட? செய்றது அத்தனையும் கேவலமான வேலை!” மலர் ஆத்திரத்திலும் வலியிலும் நிதானமிழந்து கத்தினாள்.
அதில் எரிச்சலானவன், “நானும் போனா போகுதுனு விட்டா, என்னடி ரொம்பப் பேசுற… ஓவரா துள்ளுற?” என்று அவளது தாடையை அழுத்திப் பிடிக்க, அவளால் மேற்கொண்டு பேச முடியாமல் மூச்சு முட்டியது. பாலாவின் தீண்டலில் மிரண்டு விழித்தவள், அவனது அகன்ற மார்பினில் அடித்து அவனிடமிருந்து விலகத் துடித்தாள்.
அவனது செய்கைகளில் அவளது உடலில் ஒருவித அச்சம் படர, ஏதாவது செய்துவிடுவானோ என்று உள்ளுணர்வும் எச்சரித்தது.
‘தவறு செய்தவனே திமிறிக்கொண்டு நிற்க, நான் என்ன செய்தேன் அவனிடம் பணிந்து போவதற்கு?’ என்று அவளது சுயமரியாதை மேலோங்கி நிற்க,
“அப்படித்தான்டா பேசுவேன்… பொறுக்கி மாதிரி இப்படித் தனியா இருக்கப் பொண்ணுகிட்ட வம்பு பண்ற. உனக்கு எப்படி மரியாதை தரமுடியும்?” என்று வீறுகொண்டு எழுந்தாள்.
“வேணாம்டி… வாயை மூடு! அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. பொறுக்கி என்ன பண்ணுவான்னு தெரியுமா? நீ தாங்கமாட்ட” எனக் குரலுயர்த்திக் கர்ஜித்தான்.
“என்னடா பண்ணுவ பொறுக்கி நாயே?!” என்று பாலாவை அடிக்க மலர் மீண்டும் கையை ஓங்கியதும், அவனுள் எஞ்சியிருந்த பொறுமையும் பறந்தோடியது. கோபம் தலைக்கேற, ஓங்கிய கரத்தை முறுக்கி, அவளது முதுகைச் சேர்த்து அவளை அப்படியே அந்தத் தூணில் சாய்த்தான்.
‘தெரியாமல் அவனுடன் மோதிவிட்டோமோ!’ என உள்ளுக்குள் கிலி தோன்ற, அவனிடமிருந்து வெளியேறத் திமிறினாள். அவனது முன்பக்கம் மொத்தமும் அவளை அழுத்தியிருக்க, அவளது உடல் கூசியது.
“விடுடா பொறுக்கி… உன்னை என்ன பண்றேன் பாரு… போலீஸ்ல…” அதற்குப் பிறகான அவளது வார்த்தைகள் அவனால் உடைத்து விழுங்கப்பட்டன.
ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்தவன், ஒரு கரங்கொண்டு அவளது இடையை இறுக்கி… மற்றொரு கரத்தால் அவள் கழுத்தை இறுகப் பற்றி… மூர்க்கமாக மலரின் இதழ்களைத் தன் இதழ்களால் சிறைப்பிடித்தான்.
கோபத்தில் சிவந்து விரிந்திருந்த அவனது விழிகள், மோகம் ஏற ஏற… இமைகளை மூடிக்கொண்டன. அவள் கழுத்தில் இருந்த விரல்கள்… மெல்ல அவளது கன்னத்தைப் பற்றி வருடியது.
அவளது இதழ்களின் இதமான சூடு அவனுள் ஒரு புதிய சிலிர்ப்பை ஏற்படுத்தியது. இதுவரை தான் காணாத புது உணர்வொன்று உள்ளத்தைத் தாக்கியிருக்க, பாலா அந்த முத்தத்தில் தன்னை முழுவதுமாகத் தொலைத்திருந்தான்.
இதை எதிர்பாராத மலரோ, உயிரே போனது போல் விழி உறைந்து, அப்படியே திகைத்துப்போய் சிலையெனச் சமைந்துவிட்டாள். அவளது விழிகளிலிருந்து நிற்காமல் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடியது.
காதல் மலரும்🌹
