அத்தியாயம் 5

தாபத்தின் உச்சத்தில் பாலாவின் பிடிகள் தளர, மலர் அவனிடமிருந்து சட்டென்று விலகி ஓடினாள். பாலா தன்னை அறியாமலேயே அவளைப் பிடிக்கப் பாய்ந்தான். அவசரத்தில அவனது கை பட்டு, அவளுடைய மேலாடையின் தோள்பட்டைப் பகுதி கிழிந்தது. 

அவளது முதுகும் உள்ளாடையும் வெளியே தெரிய, பதற்றமடைந்தவள் தன் மேலாடையைக் கைகளால் மூடி, இறுக்கமாகப் பிடித்தவாறு அப்படியே முழங்காலிட்டு அமர்ந்து அழத் தொடங்கினாள். பயத்தில் மலரின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

“பாலா… ப்ளீஸ் என்னை விட்டுடு, எதுவும் செஞ்சிடாத!” என்று அவள் கதறி அழ, அந்த சத்தத்தில் சுயம் மீண்ட பிறகே, தான் செய்த தவறு பாலாவுக்குப் புரிந்தது. அவனையுமறியாமல் அவனது விழிகளில் இருந்து கண்ணீர் தாரையாக வழிந்தது. கண்ணீரே அறியாதவன் அழுகிறான்!

பாலா அவ்வளவு மோசமானவன் அல்ல; பெண்களை மதிப்பவன். எந்தவொரு பெண்ணையும் இதுவரை தவறான பார்வை கூடப் பார்த்திராதவன். துரதிர்ஷ்டவசமாகக் கோபத்தில் நிதானத்தை இழந்தவன், மலரின் வார்த்தைகளால் மேலும் ஆத்திரமடைந்து கண்மூடித்தனமாக நடந்துகொண்டான்.

மலர் அச்சத்தில் நடுங்கியவள், பின்னால் திரும்பிப் பார்க்கவே இல்லை. மேலாடையின் கிழிந்த பகுதியை இடது கையால் இறுக்கிப் பிடித்து, தன் கைப்பையைக் கொண்டு அதை மறைத்துக் கொண்டாள். ஆடை விலகிவிடக் கூடாது என்பதில் முழு கவனமாக இருந்து கொண்டே அங்கிருந்து எழுந்து ஓடினாள். 

வழியில் வந்த ஆட்டோவை மறித்து ஏறி, நேராக விடுதிக்குச் சென்றவள், அறைக்குள் நுழைந்து கதவை சாத்தினாள். அறைக்குள் தஞ்சமடைந்த பிறகே, அவளுக்குப் போன உயிர் திரும்ப வந்தது போல இருந்தது.

மலர் அங்கிருந்த நிலைக்கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தாள். அவனது முத்தத்தின் அத்துமீறலால் அவளது உதடுகளும், தொடர் கண்ணீரால் கண்களும் சிவந்திருந்தன. அவன் இறுக்கமாகப் பற்றியதில் கன்னங்கள் வீங்கிக் காணப்பட்டன.

குளியலறைக்குள் நுழைந்தவள், கோபத்தையெல்லாம் தன் ஆடையின் மீது காட்டினாள். லேசாகக் கிழிந்திருந்த மேலாடையை ஆத்திரத்தோடு முழுமையாகக் கிழித்தெறிந்தாள். வாளியில் இருந்த குளிர்ந்த நீரை அள்ளி அள்ளித் தலையில் ஊற்றிக் கொண்டாள். 

பாலா முத்தமிட்ட உதடுகளை, வலி எடுக்கும் வரை அழுத்தித் தேய்த்துக் கழுவினாள். அவன் தொட்ட அத்தனை இடங்களையும், கதறி அழுதபடியே தேய்த்துத் துடைத்தாள். 

நடுக்கம் எடுக்கும் வரை குளித்தவள், வெளியே வந்து ஆடையை உடுத்திக் கொண்டாள். ஈரத் தலையைக் கூடத் துவட்டாமல் அப்படியே மெத்தையில் சாய்ந்தாள். அவளது கண்ணீர் அந்த அறை முழுக்க ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடியது.

ஆத்திரத்தில் மதிமயங்கி நின்ற பாலா, தான் செய்த விபரீதத்தை உணர்ந்ததும் தன் மீதே கடும் அருவருப்புக் கொண்டான். ஒரு நெடிய பெருமூச்சோடு தன் தலைமுடியை அழுந்தக் கோதியவன், ஆத்திரம் தாளாமல் தன் வலக்கை முஷ்டியால் அங்கிருந்த தூணில் குத்தினான்.

ஓங்கி… ஓங்கி… இன்னும் ஓங்கி… என்று தொடர்ந்து குத்திக் கொண்டே இருந்தான். தவறிழைத்த தவிப்பில் உள்ளுக்குள் உண்டான வேதனையால், கையின் வலி அவனது மூளைக்கு எட்டவே இல்லை. அவனது விரல் கணுக்களிலிருந்து கிழிந்து ரத்தம் சொட்ட ஆரம்பித்தது.

அன்று காலைப்பணி என்பதால் அதை முடித்துவிட்டு, அனன்யா மாலை விடுதி அறைக்குத் திரும்பியிருந்தாள். அங்கே, கண்கள் கலங்கிப்போய் வெறித்தவாறு அசைவற்றுப் படுத்திருந்த தோழியைக் கண்டு திடுக்கிட்டாள். 

“என்னாச்சுடி மலர்? ஏன் இப்படிப் படுத்திருக்க?” என்று கவலையோடு அனன்யா வினவியதும், அவளிடமிருந்து மௌனமே பதிலாக வர, பதற்றத்துடன் அவளது தோள்களைப் பற்றி உலுக்கினாள்.

சிந்தனை கலைந்த மலர் அனன்யாவைக் கண்டதும் பாய்ந்து அவளைக் கட்டியணைத்துக் கொண்டாள். ஓவெனப் பெருங்குரல் எடுத்து அழுது தீர்த்தபடியே, நடந்த விபரீதங்கள் அனைத்தையும் கொட்டித் தீர்த்தாள். 

நடந்ததைக் கேட்டு ஆத்திரமடைந்த அனன்யா, “இதுக்கு எதுக்குடி நீ அழுதுட்டு இருக்கணும்? தைரியமா இரு… வா, இப்பவே போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் அவன் மேல கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு வரலாம்!” என்று அவளைத் தேற்றினாள்.

“வேணாம்டி… போலீஸ், கம்ப்ளைன்ட்னு போனா எங்க கம்பெனியோட பேரே கெட்டுப் போயிடும். அதை நம்பி இருக்கிற எத்தனையோ பேரோட வேலை பாதிக்கப்படும். நான் இதைப் பத்தி நேரடியாவே எம்.டி கிட்டயும், மேனேஜர் கிட்டயும் கம்ப்ளைன்ட் பண்ணிக்கிறேன். அதுதான் சரி வரும்” என மறுப்போடு தலையசைத்தாள்.

“அப்போ சரி… விடு, அழுதுகிட்டே இருக்காத. சாப்பிடப் போலாமா? உனக்குப் பிடிச்ச பிரியாணி வாங்கித் தர்றேன், வா” என்று அனன்யா எழுந்து அவள் கரத்தை பற்றி அழைக்க, “எனக்கு எதுவும் வேணாம், பசிக்கவே இல்ல. நான் தூங்குறேன், என்னை இப்படியே விட்டுடு” என்றாள் மலர் விரக்தியுடன். 

அவளது அதீத அமைதியும் சோர்வும் அனன்யாவிற்குள் லேசான பயத்தை வரவழைத்தது. அவளை இந்த நிலையில் தனியாக அறைக்குள் விட்டுவிட்டு, ஹோட்டலுக்குச் சென்று உணவு வாங்கி வரவும் மனமில்லை.

வெளியே இயல்பாகப் பேசுவது போல் காட்டிக் கொண்டாலும், மலரின் மனமெங்கும் தீராத ரணமே நிறைந்திருந்தது. ‘நான் என்ன தவறு செய்தேன்? எதற்காகப் பாலா என்னிடம் அப்படி அநாகரிகமாக நடந்து கொண்டான்? அலுவலகப் பணிகளைச் சரியாகச் செய்கிறேன்; அதற்கு ஏன் எனக்கு இத்தனை பெரிய தண்டனை?’ என உள்ளுக்குள் வெதும்பினாள்.

மலரைத் தனியே விடத் துணியாத அனன்யா, விடுதியின் காவலாளியை அழைத்து அவரிடம் பணம் கொடுத்து, அருகிலிருந்த உணவகத்திலிருந்து இட்லி வாங்கி வரப் பணித்தாள். 

உணவு வந்ததும், மலருக்கு ஊட்டி விட்டுத் தானும் சாப்பிட்டாள். உணவுக்குப் பின் அவளுக்கு மாத்திரைகளை எடுத்துத் தந்து, அவளைத் தன் மடியில் கிடத்தி, மென்மையாகத் தட்டிக் கொடுத்து அப்படியே உறங்க வைத்தாள்.

மறுநாள் விடிந்ததும் அனன்யா மலரை எழுப்ப முயன்றாள். அவளோ, காய்ச்சலின் உக்கிரத்தில் உடல் கொதிக்க, அரை மயக்கத்தில் முனகிக் கொண்டிருந்தாள். 

பதறிப்போன அனன்யா அவளைத் தட்டி எழுப்பி தண்ணீர் பருகக் கொடுத்தாள். தாமதிக்க நேரமில்லை என்பதை உணர்ந்து, உடனடியாக வாடகை வண்டியை வரவழைத்து, தான் பணிபுரியும் மருத்துவமனைக்கே அவளை அழைத்துச் சென்று அவசரச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தாள்.

அதே வேளையில், பாலா தன் காயம்பட்ட கையில் கட்டுடன் அலுவலகத்திற்குள் நுழைந்தான். நேற்று நடந்த சம்பவத்திற்காக மலரிடம் மன்னிப்புக் கேட்டுவிட வேண்டும் என்று அவனது உள்மனம் தவித்தது. அவளது வருகைக்காகவே விழிகள் ஏங்கக் காத்திருந்தான். 

கடிகார முட்கள் நகர்ந்ததே தவிர, மலர் அன்று அலுவலகப் பக்கம் வரவே இல்லை. நேரம் செல்லச் செல்ல பாலா உள்ளுக்குள் பீதியடைந்தான். ‘தன் செயலால் மனம் உடைந்தவள், ஏதேனும் விபரீதமான முடிவை எடுத்திருப்பாளோ?’ என்ற எண்ணம் தோன்ற கலங்கிப் போனான்.

பாலா தன் டீம் மேட் ரஞ்சனியிடம் சென்று, “டீம் லீட் வரலையா?” என்று நேரடியாக விசாரித்ததும், “மலரைக் கேக்குறீங்களா? அவங்க இன்னைக்கு லீவு” என்று பதில் தந்தாள்.

“எதுக்கு லீவு?” பாலா பதற்றத்துடன் வினவ, “அவங்களுக்கு வைரஸ் ஃபீவர்னு இப்பதான் அவங்க ஃப்ரெண்ட் போன் பண்ணி இன்ஃபார்ம் பண்ணாங்க” என்றாள்.

“ஓ அப்படியா… அவங்க ஃப்ரெண்ட் நம்பர் தர்றீங்களா?” பாலா சட்டெனக் கேட்க, அவளுக்குத் தூக்கி வாரிப்போட்டது. சமீபத்தில் பார்ட்டியில் நடந்த பிரச்சனை அலுவலகத்தில் உள்ளவர்களுக்குத் தெரியுமே. 

“அவங்க நம்பர் உங்களுக்கு எதுக்கு?” ரஞ்சனி அவனைச் சந்தேகமாகப் பார்க்க, “மலருக்கு ஃபீவர் எப்படி இருக்குனு கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்னுதான் வேறொன்னுமில்ல…” என மழுப்பினான்.

“சரி, நம்பர் நோட் பண்ணிக்கோங்க” என்று அந்த எண்ணைக் கொடுத்தாள்.

அலைபேசி எண்ணை வாங்கிப் பதிவு செய்து கொண்டவன் உடனே அழைக்கவில்லை. நேற்று நடந்த சம்பவங்கள் மனதை அழுத்திக் கொண்டிருக்க, ‘மலரிடம் என்னவென்று பேசுவது? எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவளிடம் மன்னிப்பு கேட்பது?’ என்று தன்னையே நிந்தித்துக் கொண்டான்.

அன்று அவனுக்கு வேலையில் துளியும் கவனம் செல்லவில்லை. மலரை நேரில் பார்த்து மன்னிப்புக் கேட்டால் மட்டும்தான் தன் பாவம் தீரும் என அவன் உள்மனம் உரைத்தது. 

ஒருவருக்கு மனசாட்சி அளிக்கும் தண்டனையை விடப் பெரிய தண்டனை இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லை. பாலா அப்படி ஒரு நரக வேதனையைத்தான் அனுபவித்துக் கொண்டிருந்தான்.

மலர் இரண்டு நாட்களாக அலுவலகத்திற்கு வரவில்லை. அந்த இரண்டு நாட்களின் ஒவ்வொரு நொடியும் பாலாவிற்கு உயிர் போய் உயிர் வந்துகொண்டிருந்தது. 

அன்று எதிர்பாராத திருப்பமாக ஜெகன் ஆவேசத்தோடு பாலாவுக்கு முன்னால் வந்து நின்றான்.

‘என்ன விஷயம்?’ என்பது போல் பாலா அவனை ஏறிட்டுப் பார்க்க, எதிர்பாராத நொடியில் ஜெகன் அவனது முகத்தில் ஓங்கி குத்தினான். அவன் இதழோரம் ரத்தம் கசிய, முகமோ ஆத்திரத்தில் சிவந்தது.

“என்னடா… மலரை நீ வச்சிருக்கியா? அவளுக்கு ஏத்துக்கிட்டு சண்டைக்கு வர்ற? நீ பண்ணதெல்லாம் மட்டும் சரியா? அவ ப்ராஜெக்ட்ல எர்ரர் பண்ண… அவளை வேலையை விட்டுத் துரத்தணும்னு நினைச்ச! அதையே நான் செஞ்சா என்னடா பிரச்சனை உனக்கு?” என்று கத்தியவாறு ஜெகன் மீண்டும் அவனை அடிக்கப் பாய்ந்தான். 

பாலாவின் முகத்தில் ரத்தம் வடிவதைக் கண்டு ராகவ், ரகு, சசி மூவரும் ஓடிவந்து ஜெகனைத் தடுத்து திருப்பி அடித்தனர். அடுத்த சில நிமிடங்களில் அலுவலகமே களேபரமானது.

“ஸ்டாப் இட்!” என்று கத்தியவாறே நெடுமாறன் அங்கே வந்தார். அவரது அதிகாரக் குரல் அங்கிருந்த சலசலப்பை அடக்கியது.

“இங்க என்ன பிரச்சனை?” என்று அவர் வினவ, பாலா திட்டமிட்டுச் செய்த ப்ராஜெக்ட் குளறுபடிகளிலிருந்து, ஜெகன் பென்டிரைவ்களைத் திருடியது வரை அத்தனை உண்மைகளும் அவரிடம் விவரிக்கப்பட்டன. உடனடியாகக் கண்காணிப்புக் கேமரா காட்சிகள் சோதிக்கப்பட்டு, யார் மீது தவறு என்ற உண்மை அறியப்பட்டது; ஜெகனின் துரோகம் அப்பட்டமாக நிரூபிக்கப்பட்டது.

ஆத்திரமடைந்த மேலாளர் ஜெகனை நோக்கி விரல் நீட்டி, “நீ செஞ்ச இந்த துரோகத்துக்கு உன்னை நேரா போலீஸ்லதான் ஒப்படைச்சிருக்கணும். கம்பெனியோட பெயர் கெட்டுப் போகக் கூடாதுங்கறதுக்காக சும்மா விடுறோம். யூ ஆர் டிஸ்மிஸ்டு! இப்பவே வெளில போ!” என்று கூறி வேலையை விட்டு நீக்கினார்.

பாலாவின் புறம் திரும்பியவர், “நீங்க மலரோட வேலையை கெடுக்கல. இங்கேயே இருந்துக்கிட்டு இந்த கம்பெனியோட வளர்ச்சியைத் தடுக்குறீங்க. இனிமே இப்படி நடந்துக்கிட்டா விளைவுகள் வேற மாதிரியிருக்கும்” என்று அவனை எச்சரித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். 

மறுநாள் மலர் அலுவலகத்திற்கு வந்தாள். மனதில் இருந்த வலிகளும், மருத்துவமனைச் சிகிச்சைகளும் அவளை மிகுந்த சோர்வாக்கியிருந்தன. பாலா அவளது கேபினுக்குச் சென்றவன், அனுமதி கேட்காமலே உள்ளே நுழைந்தான். 

அவனை நிமிர்ந்து நோக்கியவள், அச்சத்தோடும் அதிர்ச்சியோடும் நாற்காலியில் அமர்ந்தவாறே பின்னே நகர்ந்தாள்.

“மலர்… பயப்படாத! நான் உன்கிட்ட சாரி கேட்கத்தான் வந்தேன்” பாலாவின் குரல் உடைந்து தழுதழுத்தது. 

“ஆரம்பத்துல நான் ஒரு தப்பு பண்ணினது உண்மைதான். அதுக்கப்புறம் நடந்த மத்த எல்லா விஷயத்தையும் ஜெகன்தான் பண்ணியிருக்கான். அன்னைக்கு நீ என்னை அறைஞ்ச ஆத்திரத்துல, என்னையே அறியாம உன்கிட்ட மிருகம் மாதிரி மோசமா நடந்துக்கிட்டேன். இப்ப நினைச்சாக் கூட எனக்கே கேவலமா இருக்கு இனிமே உன்னை கஷ்டப்படுத்த மாட்டேன், தொந்தரவு பண்ணமாட்டேன். என்னை மன்னிச்சிடு மலர்” என்று மனதார மன்னிப்பு வேண்டினான். 

எதற்கும் கலங்காத அவனது விழிகளிலிருந்து வெளிவரத் துடித்த கண்ணீரை அடக்கிக் கொண்டான்.

மலர் எந்தவொரு உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல், அமைதியாகவும் அழுத்தமாகவும் அவனைப் பார்த்தாள். அவளது இதழ்கள் மௌனம் காக்க, விழிகள் மட்டும் கண்ணீரை உதிர்த்துக் கொண்டிருந்தன.

நேற்று அலுவலகத்தில் நடந்த அத்தனையும் ரஞ்சனி ஏற்கனவே மலருக்கு அலைபேசியில் அழைத்துக் கூறிவிட்டாள். பாலா நிரபராதி என்ற உண்மை அவளுக்குத் தெரிந்திருந்தது. 

அவளிடமிருந்து எந்தவொரு பதிலும் வராமல் போகவே, அதற்கு மேல் அங்கே நிற்க விரும்பாமல், பாலா வெளியே செல்ல எத்தனித்தான்.

🌹காதல் மலரும்🌹

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!