இறுதி அத்தியாயம்- 38

காதல் -38 
 

 

மிகப் பெரிய திருமண மண்டபத்தில்  பிரம்மாண்டமாக திருமண ஏற்பாடு செய்யப்பட்டு மும்மரமாக வேலைகள் நடந்து கொண்டு இருக்க, உறவினர்கள் அனைவரும் வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்க, ஒரு பக்கம் நாதஸ்வரம், மேளம் சத்தம் கேட்க, இன்னொரு பக்கம் வயசு பெண்கள் கூட்டங்கள் இருக்க.. அவர்கள் பின்னால் வாலிப ஆண்கள் கூட்டங்கள் அரட்டை அடிக்க, குழந்தைகள் ஒரு பக்கம் விளையாடிக் கொண்டு இருக்க,

“பொண்ணை அழைத்துக் கொண்டு வாங்கோ” என்று ஐயர் சொல்ல, வெட்கத்துடன் தலைக்குனிந்து பட்டு புடவை உடுத்தி கழுத்தில் மாலை அணிவித்து இருந்தவளின் மேனியில் தங்க நகைகள் மேலும் அவளுக்கு அழுகு சேர்க்க, வெட்கத்துடன் தன்னவன் அருகில் வந்து அமர்ந்தாள் கீதா.

என்ன தான் மணமேடையில் அமர்ந்து ஐயர் சொல்லும் மந்திரத்தை திரும்ப சொன்னாலும் அவன் கண்கள் தன்னவளின் வருகையை ஏதிர் நோக்கி காத்திருந்தது.

அவன் அருகில் வந்து அமர்ந்ததும் கீதாவின் கரத்தில் கிள்ளி கண்ணடித்தவன் “ஐ லவ் யூடி மை டியர் பொண்டாட்டி” என காதலுடன் இன்பா கூற, ஏற்கனவே வெட்கத்தில் கீதாவின் முகம் சிவந்து இருக்க, இன்னும் அந்திவானமாய் சிவந்து போனது.

திருமண ஆடையில் கம்பீரமாக மணமேடையில் அமர்ந்து தன்னை வைத்த கண் வாங்காமல் பார்த்த ராஜாவின் நெருக்கம், அவளுக்குள் நாணம் குடி கொண்டது.

வெட்கத்துடன் அமர்ந்து இருப்பவளிடம் “ஏய் திரும்பவும் சொல்லுடி”. என இன்பா கீதாவை பார்த்து கேட்க, அவள் வெட்கத்தில் முடியாது என்று தலையை ஆட்டினாள்.

இருவரின் மனதிலும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்து மணமேடையில் அமர்ந்து இருந்தனர்.

பின்னே இருக்காதா எத்தனை இன்னல்களுக்கு பிறகு தன் காதலில் வெற்றி பெற்று இருக்கிறார்கள் இருவரும் அந்த மகிழ்ச்சி இருக்க தானே செய்யும்.

ஐயரோ மந்திரம் சொல்வதில் கண்ணாக இருந்தவர் “திரும்ப சொல்லுங்கோ” என சொல்ல “அது தான் நானும் சொல்ல செல்றேன் ஐயரே” என்று இன்பா தன்னவளை பார்த்துக்கொண்டு கூறினான்.

சட்டென அவர்க ஏறிட்டு பார்த்த ஐயரோ தன் நெற்றியில் தட்டிக் கொண்டு “அட அபிஷ்டு நீங்க மந்திரத்தை திரும்ப சொல்லுங்கோனு சொன்னேன்” என கூற, இம்முறை இப்போது வெட்கப்பட ஆரம்பித்தது என்னவோ இன்பராஜா தான்.

ராஜாவை பார்த்துக் கொண்டு இருந்த சூரியாவோ ” டேய் மச்சி உனக்கு வெட்கப்பட எல்லாம் தெரியுமாடா” என்று சூர்யா கேட்டதும்,

அவனுடன் ராம், பரத் மற்றும் அருணும் சேர்ந்துக் கொண்டு கலாய்த்தனர். அவர்களை முறைத்து விட்டு மீண்டும் தன் பணியை தொடர்ந்தான் ராஜா. அதான் தன்னவளை சைட் அடிப்பது..

அதற்குள் ஐயர் “கெட்டிமேளம் கெட்டிமேளம்” என்று சொல்லிவிட்டு திருமாங்கல்யத்தை எடுத்து நீட்ட, இன்பா அதை வாங்காமல் கீதாவையே வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான்.

அனைவரின் சிரிப்பு சத்தத்தில் இன்பா திரும்பி பார்க்க அசடு வழிந்துக்கொண்டு தாலியை வாங்கியவன் தன்னவளின் அருகில் எடுத்து சென்றவன் தலை குனிந்து இருக்கும் கீதாவின் சிவந்த முகத்தை பார்த்து அடக்கப்பட்ட சிரிப்புடன் “ஐ லவ் யூ சொன்னா தான்டி தாலி கட்டுவேன்” என்று பொய்யாக மிரட்டினான்.

ராஜாவின் குரலில் தெரிந்த குறும்புத்தனத்தை உணர்ந்தவள்
வெட்க்கப்பட்டு தலை குனிந்தபடியே
“ஐ..லவ்..யூ.. இன்பராஜா” என்று சொன்ன அடுத்த நொடி அவள் கழுத்தில் மூன்று மூடிச்சு போட்டான் இன்பராஜா.

நாத்தனார் முடிச்சை கூட வேற யாரையும் போட விடாமல் தானே மூன்று முடிச்சிகளை போட்டு கீதாவை தன்னுள் பாதியாக தன்னவளாய் ஆக்கி கொண்டான்.

பின் அவள் நெற்றியில் குங்குமம் இட்டு தாலியில் குங்குமம் வைத்து முன் உச்சியிலும் குங்குமத்தை வைத்து விட்டு தன்னவளின் பாதங்களை மென்மையாக பிடித்து மெட்டியை அணிவித்து கீதாவின் விரலில் இன்பாவின் விரல் கோர்த்து அக்னியை வலம் வந்து அதன் சாட்சியாகவும் திருமணத்திற்கு வந்து இருக்கும் அனைவரின் சாட்சியாகவும் இவர்கள் திருமணம் இனிதே நடைப்பெற்று முடிந்தது.

தன் மகனின் திருமணத்தை கண் குளிர பார்த்து மகிழ்ந்தார் வசந்தா. அவர் காலில் விழந்து ஆசிர்வாதம் வாங்கி, அடுத்து ரவி மற்றும் விஜயாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டார்கள். தன் தங்கையின் மகள் வாழ்க்கை பல இன்னலுக்கு பிறகு நல்லப்படியாக அமைந்ததை எண்ணி மகிழ்ந்தார் ரவி.

கீதாவை அணைத்துக் கொண்டு ஆசியை வழங்கி கண்கலங்கினார். கீதாவும் கண்கலங்க அவளின் கையை பிடித்து அழக்கூடாது என்று செய்கை காட்டினான் இன்பா. தன்னவன் செய்கையில் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

பின் தினேஷ் தனு வந்து வாழ்த்து கூறி விட்டு மீதி இருக்கும் கல்யாண வேலையை செய்ய போய்விட்டார்கள். பாவம் இவர்கள் இருவர் தான் ஓடி ஓடி திருமண வேலையை செய்கிறார்கள். இவர்களும் புதுமண தம்பதிகள் தான் தினேஷ்கும் தனுக்கும் திருமணம் ஆகி ஒரு மாதம் தான் ஆகிறது.

என்ன தான் வேலைகளை செய்ய அத்தனை பேரும் இருந்தாலும் தன் அத்தையின் மகள் கீதாவின் கல்யாணத்தில் தானே எல்லா வேலையையும் இழுத்து போட்டு செய்வேன் என்று உறுதியாக தினேஷ் கூறி விட யாராலயும் எதுவும் செய்ய முடியாமல் போனது.

சூர்யா மட்டும் இவர்கள் பேச்சை கேட்காமல் அவர்களுக்கு துணையாக பாதி வேலையை செய்ய ஆரம்பித்தான். அதன் பிறகே ராம் பரத் அருண் இவர்களுடன் சேர்ந்துக் கொள்ள அனைத்து வேலையும் சரியாக செய்து முடித்தார்கள்.

புகழ் பெற்ற பிஸ்னஸ்மேன்களும் இன்பராஜா மற்றும் கீதாவின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு போக,

சூர்யா தன் நண்பனை கட்டிபிடித்து வாழ்த்து சொல்லி அவர்கள் இருவருக்கும் விலை உயர்ந்த வைர மோதிரத்தை அணிவித்தான்.

பின் பரத்தும் தன் நண்பனை கட்டிக் கொள்ள இன்பாவும் பரத்தைக் கட்டிக்கொண்டான். பரத் இன்பாவின் கையில் ஹனிமூன் டிக்கெட்டை கொடுத்தான். அதன் பின் ராம் அவர்களுக்கு தங்க சாங்கலி அணிவித்து கட்டிக் கொண்டு போக, அருண் தயங்கி நிற்பத்தை பார்த்த இன்பா அருகில் அழைத்து கட்டிக்கொண்டான்.

“ஏன் அருண் தயங்கி நிக்குற? இங்க எல்லாரும் கொடுக்கும் பரிசை பார்த்து தயங்குற தெரியுது. என்ன பரிசு கொடுக்கிறோம் என்று முக்கியம் இல்லை அருண் மனசால கொடுக்கிறோமா என்பது தான் முக்கியம். நான் தேவையில்லைனு சொன்னா கூட அவங்க கட்டாயப்படுத்தி கொடுக்க தான் செய்வாங்க” என்று அவன் தயக்கத்தை போக்க முயன்றான் ராஜா.

அருணோ “இல்லை சார், எல்லாரும் விலை உயர்ந்த பரிசு கொடுத்தாங்க. ஆனா நான் வெறும் தங்க மோதிரம் தான் வாங்கினேன்” என்று சொல்ல கீதாவும் இன்பாவும் ஒரே நேரத்தில் தங்கள் கை விரலை நீட்டினர்.

அருண் மகிழ்ச்சியாக இன்பாவுக்கு மோதிரம் அணிவித்து இன்னொரு மோதிரத்தை இன்பராஜாவின் கையில் கொடுத்து கீதாவுக்கு போட்டு விடுமாறு சொல்ல அவனும் தன் மனைவிக்கு போட்டு விட்டான்.

அவர் அவர்கள் வந்து போட்டோ எடுத்துக்கொண்டு போக, அவன் நண்பர்களும் சேர்ந்து போட்டோ எடுக்க, அதுவரை அங்கு நடக்கும் மகிழ்ச்சியை ரசித்துக் கொண்டு இருந்த ஒருத்தியின் கரத்தைப்பிடி இழுத்து கொண்டு வந்து சூர்யாவின் அருகில் நிற்க வைத்தாள் கீதா.

சட்டென விலக போனவளை கைப்பிடித்து நிறுத்தி “போட்டோவிற்க்கு போஸ் கொடு” என்று சூரியா சொல்ல, தன் இரு விழிகளால் சூர்யாவை நோக்கினாள்.

அவனின் சிறு புன்னகை அவளுக்குள் ஏதோ ஒன்று செய்ய மகிழ்ச்சியாக போட்டோ எடுத்துக் கொண்டார்கள்.

பரத்தும் அருணும் கீதாவை தன் நண்பனின் மனைவி என்றே பார்த்தனர். இருவரையும் நினைத்து இன்பராஜா பெருமைப்பட்டான்.

அன்றைய சடங்குகள் அனைத்தும் நல்ல விதமாக முடிய, அந்த இரவு பொழுதில் கேலியும் கிண்டலுமாய் கீதாவை அலங்கரித்தனர்.

கரத்தில் பால் சொம்புடன் படபடப்புடனும் வெட்கத்துடனும் தன்னவன் அறைக்கு நுழைந்தாள் கீதா.

மெதுவாக தலையை நிமிர்த்தி ராஜாவை தேடி பார்த்தவளுக்கு ஏமாற்றமாகி போனது. ஏதேதோ எதிர்ப்பார்புடன் முதலிரவு அறைக்குள் வந்தவள் தன் பின்னால் இருந்து தன்னை கட்டி அணைப்பான் இல்லை என்றால் தன்னை சீண்டுவான் என்று ரொம்ப ஆசையோடு வந்தவள் இன்பாவை பார்த்ததும் ஏமாற்றம் வர தானே செய்யும். நல்லா ஏசியை ஆன் செய்து இழுத்து போர்த்திக் கொண்டு தூங்குபவனை கண்டவளுக்கு என்ன தான் செய்ய முடியும்.

“பாவம் காலையில் இருந்து ரொம்ப களைப்பாக தான் இருந்தான். அவன் முகத்தை பார்க்கும் போது தெரிந்தது. பாவம், தூங்கட்டும் ஆனா என் சந்தேகத்திற்கு யாரு பதில் சொல்லுவா. இவன் தானே சொன்னான் இன்னும் ஒரு மாசத்துல நம்ம கல்யாணம் அது முடிஞ்சதும் உன் சந்தேகத்திற்கு பதில் சொல்றேனு சொன்னானே” என்று தனக்கு தானே பேசிக்கொண்டு பால் சொம்பை அருகில் இருக்கும் மேசையில் வைத்துவிட்டு இன்பாவின் அருகில் அமர்ந்து அவன் நெற்றிமுடியை கோதிவிட்டு தன் இதழ் பதித்து தன்னவனுக்கு சரியாக போர்த்திவிட்டவள் அவன் அழகை ரசிக்க ஆரம்பித்தாள்.

“நம்ம கல்யாணம் ஒரு தடவை இல்லடா இரண்டு முறை நடந்துடுச்சு. எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? நான் நினைச்சு கூட பார்க்கல திரும்பவும் நம்ம சேருவோம்னு. என் ஞாபகம் எல்லாம் மறந்து உன்னை தவிக்க விட்டுடேன்டா. ஆனா எனக்கு பழைய ஞாபகம் வந்துடுச்சுன்னு எப்படிடா கண்டு புடிச்ச, என்ன தான் பரத் உனக்கு துரோகம் பண்ணி இருந்தாலும் நீ எப்படிடா அவனை மன்னிச்ச. நான் கூட ரொம்ப பயந்துட்டேன்டா பரத்தை நீ பார்க்கும் போது என்ன பண்ணுவியோன்னு. அதுனால தான் எனக்கு ஞாபகம் வந்ததை கூட உன்கிட்ட சொல்லாம மறைச்சேன். ஆனா என்னைய கட்டுப்படுத்த முடியாமல் தான்டா அன்னிக்கு உன்னை கை நீட்டி அடிச்சேன். ஆனா அதெல்லாம் நீ பெருசா எடுத்துக்காமல் என் பின்னாடியே வந்து என்னை சமாதானம் பண்ண. இப்போ பாரு நம்ம எதிர்பார்த்த நேரம் வந்தும் நீ நல்லா தூங்கிட்டு இருக்க போடா” என்று மீண்டும் தன்னவனின் நெற்றியில் இதழ் பதித்தவள் மிகுந்த மகிழ்ச்சியோடு “எனக்கு இப்போ ரொம்ப.. ரொம்ப.. ரொம்ப .. சந்தோஷமா இருக்கு. இந்த சந்தோஷத்திலே இப்பவே நான்” என கீதா சொல்ல வாய் திறக்க, அதுவரை தூங்குவது போல் நடித்து தன் மனைவியின் செயலை ரசித்தவன் அவள் கடைசியாக என்ன சொல்ல வருகிறாள் என்று தெரிந்து அவள் வாயை பொற்றினான் ராஜா.

“ஏய் கீத்துமா இனிமேல் நீ அந்த வார்த்தையை மட்டும் சொல்லவே கூடாது. நீ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால யோசிக்க கூட முடியாதுடி செல்லம்” என்று கலங்கி போய் கூறினான்.

அவனின் திடீர் செய்கையில் முதலில் அதிர்ந்தவள் இன்பாவின் கரத்தை தட்டி விட்டு “அடப்பாவி நீ தூங்கலையா நடிச்சிட்டு இருந்தியா?” என்று கீதா கூறியதும் தான் தன் நடிப்பு உடைந்து விட்டதே என்று உணர்ந்தவன் “ஈஈஈ”  என்று இளிக்க, அருகில் இருந்த தலையணையை எடுத்து இன்பாவை அடித்தாள். 

அவனோ கீழே இறங்கி கட்டிலை சுற்றி ஓட கீதா இன்பாவை துரத்த தன்னவளின் கையில் அகப்படாமல் தப்பித்துக் கொண்டே இருந்தான். ஒரு கட்டத்தில் கீதா காலை பிடித்துக்கொண்டு கத்த, பதறிபோய் அவள் அருகில் வந்தவனை காதைப் பிடித்து திருகி,

“ஏன்டா என்னை ஏமாற்றின? ம் சொல்லுடா எதுக்கு தூங்குறது போல நடிச்ச”

“ஸ்ஸ் ஆஆ வலிக்குதுடி” என்று காதை தேய்த்துக் கொண்டே, “பின்ன என்னடி பர்ஸ்ட் நைட்னா பசங்க தான் பொண்ணுங்களை ரசிக்கணுமா என்ன?. மாற்றமா இருக்கட்டும்னு தான் உன்னைய என்னை ரசிக்க வச்சேன்” என்று தன்னவளை தன் பக்கம் இழுத்து கொண்டான்.

“போடா நான் எவ்வளவு ஆசையா வந்தேன் தெரியுமா? நான் உள்ள வந்ததும் நீ என் பின்னால இருந்து கட்டி பிடிப்ப, அப்படியே என்னை தூக்கி சுற்றுவனு நினைச்சேன். எல்லாம் நிராசையா போச்சுடா” என்று உதட்டை பிதுக்கிக் கொண்டு கூறியவளின் அழகில் மொத்தமாக தன்னை தொலைத்தவன்,

“சாரிடி செல்லம்,  சாரிடி.. இப்போ என்ன நீ ஆசைப்பட்டது எல்லாம் நடக்கும்டி வா. நம்ம முதல இருந்து முதல் ராத்திரியை ஆரம்பிக்கலாம்” என இன்பா சொல்ல கீதா திருத்திருவென முழித்தாள்.

“என்னடி புரியலயா. நீ பால் சொம்பை எடுத்துட்டு கதவ திறந்து வா” என இன்பா சொன்னான்.

அவளோ “போடா முடியாது முதல இருந்த எதிர்பார்ப்பு இப்போ இருக்காதுடா” என்று கீதா முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு சொல்ல, அதன்பின் தன்னவன் கெஞ்சலில் பால் சொம்பை எடுத்துக்கொண்டு கதவு திறந்தவள் முன்,

“ப்பாஆஆ” என்று பேய் உடையில் ராம் கத்த, அவன் கத்தியதில் ராமை பேய் என்று நினைத்து இவளும் கத்திக்கொண்டு பால் சொம்பை ராமின் மேல் அடித்து இன்பாவின் பின்னால் போய் ஒளிந்துக்கொண்டாள்.

அவளுக்கு மேல் இன்பா பயத்தில் உறைந்து நிற்க, கீதா தான் அவனை நினைவுக்கு அழைத்து வந்தாள்.

“அய்யோ..பேய்..பேய்..” என இன்பா கூச்சலிட,

“டேய் வீணாபோனவனே பேய் எல்லாம் இல்லடா, நான் தான்” என்று தலையை தேய்த்துக் கொண்டு கூறினான் ராம்.

“அட கரடிக்கு பிறந்தவனே, அறிவு இல்லை உனக்கு. நான் கூட உண்மையான பேய் தானு நினைச்சிட்டேன்டா. பன்னி, பிசாசு எருமைமாடு, நாயே பேயே” ..என்று மேலும் சில பல வார்த்தையில் திட்டி தீர்த்தவன், கோபம் குறையாமல் மேலும் திட்ட வாய் திறக்க,

ராம் காதை பொற்றிக்கொண்டு, “போதும்டா போதும் நிறுத்து. கொஞ்சம் மூச்சை விட்டு திட்டுடா. ஏன்டா ஒரு ஆண்மகன் பேயிக்கு பயப்படலாமாடா. அந்த பொம்பள பொண்ணே பயப்படாம இருக்கு. நீ என்னடானா” என்று நண்பனை கேலி செய்ய, அதற்குள் தூங்காமல் இருந்த மற்ற நண்பர்கள் அங்கு வந்தனர்.

ராஜாவின் அறையின் முன் பேய் வேடத்தில் நின்ற ராமை குழப்பத்தோடு “டேய் நீ என்னடா இங்க பண்ற. அதுவும் பேய் உடையில்” என்று சூர்யா கேட்டான்.

சூரியாவை அங்கே எதிர்ப்பார்க்காத ராமோ எப்படி சமாளிப்பது என்று தெரியாமல்  பல்லை காட்டிக்கொண்டு “சும்மா மச்சான். எல்லாரையும் பயமுறுத்தலாம்னு வந்தேன்டா. ஆனா இந்த டைம்ல இவங்க வெளியே வருவாங்கணு நினைக்கலடா மச்சி”. என்று ராம் சொல்ல,

சூர்யா அவன் தலையில் கொட்டி “லூசாடா நீ? ஒழுங்கா மூடிக்கிட்டு வா” என்றான்.

ராமோ “மச்சான் நான்”  என்று சொல்ல வந்தவனை அனைவரும் முறைக்க வாயை மூடிக்கொண்டவன் அப்படி இருந்தும் ராம் அடங்காமல்,

“ஆமா ராஜா நீங்க இந்த டைம்ல எதுக்கு வெளியே வந்திங்க. அதுவும் பால் சொம்புடன்? ஓ பால்ல சக்கரை பத்தலயா?” என்று முட்டாள் தனமாக கேட்க,

சூர்யாவும் பரத்தும் அவர்கள் தலையில் அவர்களே அடித்துக்கொள்ள, அருண் சுவற்றில் முட்டிக்கொண்டான்.

கீதா அவர்கள் முன் நிற்க முடியாமல் சங்கடத்துடன் மீண்டும் அறைக்குள் புகுந்துக்கொள்ள, இன்பராஜா எதையோ சுற்றும் முற்றும் தேடினான்.

அதை பார்த்த ராமோ “என்ன மச்சி தேடுற சொம்பயா?” என்று கேட்டுக்கொண்டே சொம்பை எடுக்க,

“இவனுக்கு நாக்குல சனி மச்சி”. என்று பரத் சூர்யாவிடம் சொல்ல, அதற்குள் இன்பா ஒரு கயிறை எடுத்து வந்தான்.

ராம் குழப்பமாக “ஏன்டா இப்போ கயிறுலாம்” அவன் பேசிக்கொண்டே இருக்கும் போது,

“சூர்யா பரத் அருண் இவனை பிடிங்க” என்று இன்பா சொல்ல அவ்வாறே மூவரும் ராமை பிடித்தனர்.

இன்பாவோ ராமின் இரண்டு கால்களையும் கட்டி மாடிபடியில் ஒரு முனையை கட்டி விட்டு ராமை தலை கீழாக தொங்கவிட்டான்.

இதை சற்றும் எதிர்பார்க்காத ராமோ “அடப்பாவிங்களா, நான் என்னடா பண்ணேன். ஏன்டா இப்படி சித்ரவதை செய்றிங்க. என்னை அவுத்து விடுங்கடா. தலையெல்லாம் சுத்துது. டேய் வாந்திலாம் வர மாதிரி இருக்குடா” என்று ராம் கத்திக்கொண்டு இருந்தான்.

அவன் கத்தியது எல்லாம் செவுடன் காதுக்குள் சங்கு ஊதின மாதிரி தான் இவன் போடும் சத்தம் அவர்கள் காதில் விழுந்தால் தானே, அதற்கு முதலில் அவர்கள் அங்கு இருந்த தானே.. ராமை தொங்க விட்ட அடுத்த நொடி அவர்கள் வேலையை பார்க்க சென்று விட்டார்கள்.

தன் அறைக்கு வந்தவன் கீதாவை தேட, அவளோ பால்கனியில் இருக்கும் சோபாவில் சாய்ந்து நிலாவை ரசித்துக் கொண்டு இருந்தாள்.

அவள் அருகில் வந்து இவனும் சாய்ந்துக் கொண்டு “சாரி செல்லம், அந்த ராம் இப்படி சொதப்புவான்னு நினைக்கலடி” என்று தன்னவளின் கையை எடுத்து தன் கையோடு வைத்துக் கொண்டு அவளை சமாதானம் செய்தான்.

கீதாவோ இன்பாவின் நெஞ்சில் தலையை சாய்ந்துக் கொண்டு “நான் என்ன கேட்டாலும் உண்மையை சொல்லுவியா இன்பா” என்று கேட்க,

இன்பராஜாவும் “கண்டிப்பா சொல்லுவேன்” என்றான்.

“நான் என்னடா பெருசா கேட்க போறேன். இந்த ஒரு மாசமா கேட்கிறது தான். எப்படி நீ எனக்கு  பழைய ஞாபகம் வந்துடுச்சுனு தெரிஞ்சிக்கிட்ட. பரத்தை எப்படி மன்னிச்ச, இது இரண்டுத்துக்கும் பதில் வேணும்” என்று அவள் மனதில் அரித்துக் கொண்டு இருந்த கேள்வியை கேட்டாள்.

“அடிப்பாவி இப்ப கேக்கிற கேள்வியா இது? ஏன்டி இன்னிக்கு நமக்கு பர்ஸ்ட்நைட். இங்கே என்ன நடக்கணுமோ அது நடக்காம மீதி எல்லாம் நடக்குது. எல்லாம் என் நேரம்” என்று முறையிட்டவன் கீதாவின் உம்மென்று இருக்கும் முகத்தை பார்த்தவன், அவளை தன் நெஞ்சோடு மேலும் இறுக்கிக் கொண்டு,

“இப்போ என்ன உனக்கு பதில் தெரிய வேண்டும் அவ்வளவு தானே? சொல்றேன் கேளு.. என்று இன்பா சொல்ல கீதா கேட்க ஆரம்பித்தாள்.

—————————————————

ஒரு மாதத்திற்கு முன் கொடைக்கானலில்,

இன்பாவை கண்ணத்தில் அடித்து விட்டு அழுதுக்கொண்டே காரில் ஏற போனவளை ஓடி சென்று கையை பிடித்து நிறுத்தினான் இன்பா…

அவனை முறைத்துக் கொண்டே “என் கையை விட போறிங்களா? இல்லையா? என்று கேட்டாள்.

“விட முடியாதுடி. ஏற்கனவே உன் கையை விட்டதுக்கு நான் பட்ட பாடு போதும் இனிமேலும் முடியாது” என்று தீர்க்கமாக கூறினான்.

“ஹலோ யாரு நீங்க எதுக்கு என் கையை பிடிக்கிறிங்க” என்று கீதா கையை உதற, அவன் பிடி மேலும் அதிகமானது. அதில் முகம் சுருங்கியவள் “இப்ப கையை விடல அப்புறம் கத்தி ஊரை கூப்பிடுவேன்” என்று கீதா சொன்னதை கேட்டவன்,

“ம் கூப்பிடு” என்று அவன் கூலாக சொன்னான்.

அவளோ அவனுக்கு மட்டுமே கேட்கும் குரலில் “காப்பாத்துங்க, யாராவது காப்பாத்துங்க” என்று சொன்னவனை பார்த்த இன்பராஜா சிரித்தே விட்டான்.

அதை கடுப்புடன் பார்த்தவள் “இப்போ எதுக்கு சிரிக்கிறிங்க. என்ன பார்த்தா காமெடி பண்ற மாதிரியா இருக்கு”

“பின்ன என்னடி கத்தி ஊர கூட்டுவேன்னு சொன்ன?. நீ கத்தின மாதிரியே தெரியலையே, ஏதோ பக்கத்துல இருக்கிறவங்களை கூப்பிடுற மாதிரி இருக்கு” என்று மேலும் அவளை சீண்டினான்.

அவள் முறைத்துக் கொண்டே “நான் சத்தமா எல்லாம் கூப்பிட வேண்டாம். கொஞ்சம் பின்னாடி திரும்பி பாருங்க” என கீதா சொல்லவும்,

“என்ன இருக்கு பின்னாடி” என்று திரும்பிப் பார்த்துவிட்டு “ஓ! இவன் தானா” என்று மறுபடியும் கீதாவை பார்த்தான்.

அலச்சியமாக கூறிய இன்பாவை கீதா குழப்பத்துடன் பார்க்க,

“என்ன பார்க்கிற அவன் என் நண்பன் பரத் தான்”  என்று சொல்வும் மீண்டும் குழப்பத்தின் உச்சிக்கே போனாள் பேதையவள்.

பரத்தை பார்த்தால் கண்டிப்பாக கொலைவெறியோடு அவனை அடிப்பான் என்று தான் நினைத்துக் கொண்டு இருந்தாள். ஆனால் இங்கே நடப்பதே வேறு அல்லவா.

முந்தினம் இரவு இன்பா தன்னவளை பார்க்க அவள் இருக்கும் இடத்திற்கு சென்று கீதாவை பார்த்து கையை பிடித்து பேசிக்கொண்டு இருக்கும் போதே அவள் முழித்துக் கொண்டாள்.

‘இவன் தானே காலையில் கோவிலில் பார்த்தது. இவன் எதுக்கு இங்க வந்து இருக்கான். ஆனா இவனை பார்த்த ஏன் என்னையும் அறியாமல் என் மனம் அவனிடம் செல்கிறது. அப்படி என்ன தான் சொல்றான்னு கேட்போம்’ என்று தூங்குவது போல் நடிக்க ஆரம்பித்தாள்.

இன்பராஜாவுக்கு தெரியாதா என்ன, தன்னவள் தூங்குகிறாளா? இல்லையா? என்று. அவளின் நடிப்பை உணர்ந்தவனுக்கு  மனதில் சட்டென்று யோசனை வர இது தான் நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்து இருவரும் முதல் முதன்முதலில் சந்தித்ததில் இருந்து நடந்த அனைத்தையும் சொல்லிக் கொண்டு போக, கீதாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய பழைய ஞாபகம் வர ஆரம்பித்தது.

அவள் இழந்த அனைத்து நினைவுகளும் கீதாவின் கண்முன் வந்த போக, ஒருக்கட்டத்தில் தன் கண்ணீரை தடுக்க முடியாமல் திண்டாடினாள்.

அதை இன்பாவுக்கு தெரிய கூடாது என்று நினைத்து திரும்பிபடுத்து தன் கண்ணீரை துடைத்துக்கொண்டாள். அப்பொழுதே இன்பாவுக்கு புரிந்துவிட்டது. ஆனாலும் தெளிவாக உறுதிப்படுத்திக் கொள்ள அவள் காதில் நாளை கோவிலுக்கு வருமாறு சொல்லிவிட்டு சென்றான். இன்பா போனதும்,

உள்ளுக்குள்ளே கதறியவள் ‘என்னை மன்னிச்சிடுடா, எனக்காக நீ எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க. நீ என் மேல வச்சு இருக்கிற காதலை சொல்ல சொல்ல.. எனக்கு எல்லாம் ஞாபகம் வந்துடுச்சுடா. ஆனா இதை உன் கிட்ட சொல்ல தைரியம் தான் என் கிட்ட இல்லை. இந்த ஆறுமாசமா பரத் வீட்டுல இருந்து இருக்கேன். நீ என்னை சந்தேகப்பட மாட்ட. ஆனா ஊர் உலகம்? அந்த கடவுள் சீதையவே சந்தேகப்பட்ட உலகம் இது! நான்லா எம்மாத்திரம்,

நீ பரத்தை பார்க்கும் போது என்ன நடக்குமோ தெரியலடா. அவன் மேல இருக்குற கோபம் அது உன் கண்ணை மறச்சிடுச்சுனா அப்புறம் என் நிலைமை? எனக்கு என்ன பண்றதுன்னு தெரிலடா’ என்று பல யோசனையில் இருந்தவள் பின் நாளை இன்பாவை சந்தித்து நடந்ததை எடுத்து கூறி புரிய வைக்க வேண்டும் என்று முடிவு செய்தாள்.

கீதாவை பார்த்து விட்டு தான் இருக்கும் இடத்தை நோக்கி சென்றுக் கொண்டு இருக்கும் போது அவர்களுக்கு முன்னால் வந்து நின்றான் பரத்.

இன்பாவிற்க்கு கோபம் தலைக்கேற அதை கட்டுப்படுத்த முடியாமல் பரத்தை காட்டுத்தனமாக அடித்தான்.

மூவருமே அவனை தடுக்காமல் அமைதியாக இருந்தனர். இவ்வளவு ஏன் பரத்தே அமைதியாக தன் நண்பனிடம் அடி வாங்கிக் கொண்டு இருந்தான். பரத்தின் அமைதியை கண்ட சூர்யாவிற்கு ஏதோ ஒன்று உறுத்தவும், இன்பாவை தடுத்து நிறுத்தினான்.

“இப்போ ஏன்டா என்னை தடுத்த” என்று இன்பா கோபத்துடன் கேட்க,

“அவனை தடுக்காத மச்சி” என்று பரத் கூறியதை கேட்ட இன்பாவுககு கோபம் அதிகமாக மீண்டும் பரத்தை அடிக்க கை ஓங்கினான்.

நண்பனின் கரத்தை பிடித்து “கொஞ்ச நேரம் அமைதியா இரு ராஜா” என சூர்யா அவனை சமாதானம் செய்ய, ராமும் அருணும் சேர்ந்து இன்பாவை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

பின் பரத்திடம் “எதற்காக நீ உன் நண்பனுக்கே நம்பிக்கை துரோகம் செய்த? ஏன் கீதாவை கடத்திக்கிட்டு வந்த? இதெல்லாம் நினைக்கும் போது உன் மேல செம கோபம் வருது. ஆனா உன் அமைதி இதுக்கு பின்னாடி ஏதோ ஒரு காரணம் இருக்குற மாதிரி இருக்கு. என்ன காரணம் ஒழுங்கா சொல்லு” என்று கேட்டவனை பார்த்த பரத் அமைதியாக இருந்தான்.

சூர்யாவோ “இப்போ என்ன நடந்ததுனு நீ சொல்லி தான் ஆகணும் பரத். உனக்கு வேற வழி இல்லை” என்றா.

பரத்திற்கும் இதற்கு மேல் மறைத்து எந்த பலனும் இல்லை என்ற எண்ணம் தோன்ற நடந்த அனைத்தையும் கூறினான்.

பரத் கூறி முடித்து சிறிது நேரம் அமைதியாக இருக்க, இன்பாவுக்கு பரத் மேல் இருந்த கோபம் மொத்தமும் கணேஷ் மேல் திரும்பியது.

அங்கு இருக்கும் காவல் அதிகாரிக்கு போன் செய்து நடந்ததை கூறி கணேஷையும் இந்துவையும் வெளியவே வராத படி செய்ய சொல்லிவிட்டு தன் நண்பனை கட்டிக் கொண்டான்.

“சாரிடா மச்சி உண்மையான காரணம் தெரியாம அவசரப்பட்டுட்டேன்” என்று பரத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு மன்னிப்பு கேட்டான். சூர்யாவும் ராமும் வந்து பரத்தை கட்டிக்கொண்டார்கள்.

இத்தனை நாட்களாக தான் செய்த பாவத்திற்கான பரிகாரம் என்று நினைத்து நிம்மதி அடைந்தான் பரத். இது அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த அருணையும் சூர்யா கட்டிபிடித்து விடுவித்தான்.

அதன் பின் தான் மறுநாள், கீதாவை பார்த்து பாடி ஆடி அவளை சீண்டினர். பின் அவளை சமாதானம் செய்து இன்பாவின் வீட்டிற்கு இருவரையும் தனியாக காரில் அனுப்பிவிட்டு பரத் மட்டும் தனக்கு வேலை இருப்பதாக சொல்லி கொடைக்கானலில் இருக்க, மற்ற மூவரும் பேருந்தில் வருவதாக கூறினர்.

ஊருக்கு வந்ததும் தன் மகனுக்கும் மருமகளுக்கும் ஆரத்தி எடுத்து வலது காலை எடுத்து வைக்க சொல்லி உள்ளே அழைத்து சென்றாள் வசந்தா.

“என் வீட்டு மகாலஷ்மி மா நீ” என வசந்தா சொல்ல, அதற்குள் ரவி விஜயம் தினேஷ் மற்றும் தனு அவள் அப்பா அங்கு வர அந்த இடமே மகிழ்ச்சியில் நிரம்பியது. 

பிறகு இன்பாவுக்கும் கீதாவுக்கும் முறைப்படி திருமணம் நடத்த வேண்டும் என்று சொல்ல, கீதாவோ முதலில் தன் அத்தான் திருமணம் நடக்க வேண்டும் என்று உறுதியாக சொல்ல மற்றவர்கள் சரி என்று ஒப்புக்கொண்டு அடுத்த ஒரு வாரத்தில் அவர்கள் திருமணத்தை நடத்தி முடித்தனர்.

பின் இருபத்து ஐந்து நாளில் இன்பராஜா கீதா திருமணத்தை நடத்தினர். இந்த ஒரு மாதத்தில் எவ்வளவோ கேட்டும் இன்பா தன்னவளுக்கு எப்படி நினைவு  வந்தது அவனுக்கு தெரியும் என்று கூறவில்லை.

    —————————————-

நடந்ததை கூறிமுடித்தவன்
“அவ்வளவு தான்டி போதுமா” என இன்பா சொல்லி முடித்துவிட்டு கேட்க, அவள் கண்கள் கலங்கி இருந்தது.

“ஏய் கீத்துமா இப்ப ஏன்டி அழுகுற. நீ அழுதது போதும்டி இனிமேல் நீ  அழக் கூடாது” என்றதும் தன்னவன் நெஞ்சில் சாய்ந்து அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

அதுவரை மனைவியின் அருகாமையில் தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி அமைதியாக இருந்த இன்பா கீதாவை தன் இரு கைகளால் தூக்கிக் கொண்டு மஞ்சத்தில் கிடத்தியவன்,

மென்மையாக அவள் நெற்றில் இதழ் பதித்தவன், அடுத்து கண்களில் இதழ் பதித்து, பின் இதழோடு இதழ் பதித்தான்.

கணவனின் பரிசத்தை கண்ணை மூடி அனுபவித்துக் கொண்டு இருந்தவளிடருமிருந்து எந்த எதிர்ப்பும் வராமல் போக, அடுத்த கட்டத்திற்குள் நுழைந்தான் இன்பராஜா.

மென்மையாக தன்னவளை கொஞ்சம் கொஞ்சமாக முழுவதுமாக தனக்குள் பாதியாய் ஆக்கிரமித்துக் கொண்டான். இருவரும் ஒருவரில் ஒருவர் கலந்து தன் காதலை வெளிப்படுத்தினர். அந்த நிலவும் கூட இவர்களின் காதலை கண்டு வெட்கப்பட்டு மறைந்து கொண்டது.

என் அன்பே எந்தன் ஆருயிரே😘 
நீ இல்லாத வாழ்வும் வெறுமையடி😘.. 
உன் கார்குழலும் அந்த மழை துளியும் 😘 
என்னை தழுவிடும் போது உந்தன்😘 ஞாபகமே..😘

நீயன்றோ இனி நீயன்றோ..😘 
என் வாழ்கையும் இனி நீயன்றோ..😘 
நீயன்றோ இனி நீயன்றோ..😘 
என் சுவாசமும் இனி நீயன்றோ..😘

இதற்கு மேல் நமக்கு இங்கு என்ன வேலை. அவர்களை தொந்தரவு செய்யாமல் போய் விடலாம்.😍😉

முற்றும்….

ஆ.. அப்புறம் ஒரு விசயம், சூர்யாவின் கரத்தை பிடித்துக்கொண்டு போட்டோ எடுத்துக்கொண்ட பெண் யார் என்று அடுத்த கதையில் சொல்கிறேன். அதுவரை காத்திருங்கள். இன்னொரு முக்கியமான விசயம். ராம் கட்டை அவிழ்த்து அவனை காப்பாற்றியது வேற யாரும் இல்லை அவளே தான்.

என் அடுத்த கதையின்  நாயகனாக  சூரியா..சந்திரசூரியாவாகா மாறி தன் வாழ்க்கை பயணத்தை தொடர்வான் அப்பெண்ணுடன். 

(என் அடுத்த நாவலின் பெயர் நான் உன்னை காதலிக்கிறேன்!)

நன்றி முற்றும்!!!!!!.

திக்ஷிதா லட்சுமி.. 
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page