காதல் 10

இரவு ஒரு பத்து மணி அளவில் ஆஷிக், ஆதர்ஷ் வீட்டின் காலிங் பெல்லை அழுத்த,

கதவைத் திறந்த ஆதர்ஷ், “டேய் ஆஷிக், இங்க என்னடா பண்ற?”

“ஏன் வர கூடாதா?”

“இல்லடா, தியா கூட மூவி போறேன்னு சொன்னியே, அதான் கேட்டேன்.”

“ஆமா போனேன், அப்புறம் வந்துட்டேன் இப்போ என்ன? உள்ள வரலாமா இல்லை இங்கையே விசாரிச்சுட்டு இருக்கப் போறியா?” என்று அவனை இடித்துவிட்டு உள்ளே வந்து சோபா மீது அமர்ந்துகொண்டு ஆதர்ஷிடம்,

“டேய் நான் உன்கிட்ட ஒன்னு கேக்க போறேன்?”

“இது பத்தாவது தடவ…”

“என்ன?”

“நான் உன்கிட்ட ஒன்னு கேட்க போறேன்னு நீ சொல்றது’ முடியலடா என்னால…”

“ஜியா என்னை விட்டுட்டு போனதுக்கு அப்புறம் இத்தனை நாள்ல நான் பொண்ணுங்க கூடச் சுத்திருக்கேன், ஆனா ஜஸ்ட் ஃப்ரண்ட்லியா. டேய்…” என்று ஆதர்ஷைத் தட்டியவன்,

“அமைதியா இருக்காத, ஆமானு சொல்லுடா. அப்போதான் எனக்குச் சொல்ல வரும்.”

“ஆமா”

“இதுவரை நான் யார்கூடயும் கமிட் ஆகல.”

“ம், டேய் விஷயத்தைச் சொல்லுடா.”

“சொல்றேன், நான் இன்னும் யாரையும் கல்யாணமும் பண்ணிக்கல.”

“அட ச்ச… சொல்லி தொலையேன்டா…”

“ஜியா இருக்காள்ல…” என்று ஆரம்பிக்க,

“மறுபடியும் முதல்ல இருந்தா?” என்று கலங்கியவன், சட்டென்று டைனிங் டேபிளில் இருந்த கத்தியை எடுத்து ஆஷிக்கின் கழுத்தில் வைக்க,

“என்னடா பண்ற?”

“என் பொறுமையை நீ ரொம்பச் சோதிக்குற, டர்ன் அரௌண்ட் ட்ரிப் பாத்துட்டு செம டயர்டுல இருக்கேன். என்னைக் கொலைகாரனா ஆக்காத. சொல்ல வந்ததை ரெண்டு நிமிஷத்துல சொல்லு.” என்று கெடு விதிக்க,

ஆஷிக் நடந்த எல்லாவற்றையும் கூறி முடிக்க, “இதுல என்னடா இருக்கு?”

“நான் இன்னும் கல்யாணம் பண்ணல, அவ மட்டும்…”

“நீ பண்ணலனா அவ ஏன்டா பண்ண கூடாது? ஏய் வெயிட் பண்ணு, அவதான் உனக்கு வேண்டாமே அப்புறம் என்ன வெங்காயத்துக்கு இதெல்லாம் கேக்க? வா, வந்து படு எனக்குத் தூக்கம் வருது.”

“டேய் இந்த ஒரு கேள்விக்கு மட்டும் ஆமா இல்லைனு பதில் சொல்லிட்டு போடா.”

“ஆ… என்ன?”

“கல்யாணம் ஆகிருக்குமா, இல்லையா?”

“என்கிட்ட கேக்குற?”

“சொல்லுடா”

“ஒன்னு பண்ணு, நேரா அவ வீட்டுக்குப் போய் குழந்தைங்க இருக்காங்களா, இல்லையானு நீயே பார்த்துட்டு வா.”

“செம ஐடியாடா! வாடா ஒரு எட்டுப் போய் பார்த்துட்டு வந்திருவோம்.” என்று கூற,

கடுப்பான ஆதர்ஷ், “வாடா…” என்றவாறு அவனை ஹாலில் தள்ளி கதவை சாத்திவிட்டு, தான் சென்று படுத்துக்கொண்டான். 

“டேய் கதவைத் திறடா.”

“நீ எவ்ளோ தட்டினாலும் நான் திறக்கமாட்டேன்.” என்று கூறிவிட்டு, தலையணையை வைத்து தன் காதை மூடியவாறு தூங்க,

“டேய், உனக்கு அவ்ளோ ஆகிப்போச்சா? என்னைக்காவது உனக்கும் என் உதவி தேவைப்படும்டா, அப்போ உன்னைப் பார்த்துக்கிறேன். எனக்கு யார் உதவியும் தேவை இல்லை.” என்றவன் தன் காரில் ஏறி அமர, அப்பொழுதுதான் அவனுக்கு ரோஹித்தின் ஞாபகம் வர அவனுக்குக் கால் செய்தான்.

கடைசி ரிங்கில் எடுத்தவன், “என்னடா இந்த நேரத்துல?” என்று தூக்க கலக்கத்தில் கேட்க,

“சந்தீப் சாருக்கு கால் பண்ணினேன், அவரு அட்டென்ட் பண்ணலை. பத்து நிமிஷத்துல அவரைக் கூட்டிட்டு ஆபிஸ்க்கு வா.” என்றதுடன் தன் ஃபோனை துண்டிக்க,

“இப்பவா?” என்றவனுக்கு அங்கிருந்து எந்தப் பதிலும் வராமல் இருக்கவே, அவன் தன் காலை துண்டித்தது தெரிய தன்னை நொந்துகொண்டவாறு, பாதித் தூங்கியும் தூங்காமலும் சந்தீப்பை அழைத்துக்கொண்டு ரோஹித் அங்கே சென்றான். குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தவன் அவர்களைக் கண்டதும்,

“என்ன இது இவ்வளவு பொறுப்பில்லாம இருக்கீங்க? பத்து நிமிஷத்துல வர சொன்னா பதினைஞ்சு நிமிஷம் கழிச்சு வந்திருக்கீங்க. சார் நீங்களாவது கொஞ்சம் பொறுப்பா இருக்க வேண்டாம்?” என்றவனைப் பார்த்து ரோஹித் முறைக்க,

சந்தீப் அவனிடம், “ஏன்பா கேட்கமாட்ட? என்னை விஷயம்பா? சொல்லு, இந்த நேரத்துல வர சொல்லிருக்க?”

“நம்மகிட்ட வேலை பார்க்குறவங்களோட ஸ்டாப் பயோடேட்டா வேணும்.” என்று கூற, 

“அதை வச்சுட்டு நீ என்னடா பண்ண போற?” என்ற ரோஹித்திடம், “உன் நண்பனுக்கு இதுகூடத் தரமாட்டியாடா? நட்புனா என்னனு தெரியுமா? நீ என் தளபதிடா!” என்று கூற, 

ரோஹித், “டேய் போதும்டா, தூக்கம் வேற கண்ணைக் கட்டுதுடா. என்னால முடியலை, சார் அவன் கேட்டதை எடுத்துட்டு வாங்க.” என்று சந்தீப்பிற்கு உத்தரவு கொடுக்க,

அவர் வாட்ச்மேனின் உதவியோடு அத்தனை ஃபைல்ஸையும் கொண்டுவந்து கொடுக்க, ஆஷிக்கோ சற்று எரிச்சல் அடைந்தான். இத்தனையும் பார்க்கும் அளவுக்குப் பொறுமைசாலியாக இருந்திருந்தால், இவன் இந்த ராத்திரி இப்படி எல்லாருடைய தூக்கத்தையும் கெடுத்திருக்க மாட்டானே? 

சந்தீப்பின் முன்னால் எதுவும் கூற முடியாதவன், அவர்களைப் பார்த்து அசடு வழிய, அவர்களுக்கும் இவனது செய்கை ஒன்றும் புரியாமல் போக இவனையே உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தனர். நேரடியாகத் தனக்கு வேண்டியதைக் கூற முடியாமல் ஒவ்வொரு ஃபைலாகப் பார்க்க, அவன் தேடிய எதுவும் கிடைக்காமல் போக, 

“என்ன சார் இது, பாதி ஜென்ஸ் ப்ரொஃபைலா இருக்கு.”

“நம்மளோடது ஏர்லைன்ஸ்பா, இங்க பொண்ணுங்க ரிஷப்ஷனிஸ்ட் அப்புறம் ஏர் ஹோஸ்டர்ஸ் மட்டும்தான் லேடிசா இருப்பாங்க. மத்தவங்க எல்லாரும் ஜென்ஸ்தான இருப்பாங்க.”

“இல்ல ரிஷப்ஷனிஸ்ட், ஏர்ஹோஸ்டர்ஸ் இவங்க எல்லாரையும் தாண்டியும் வேலைப் பார்ப்பாங்கள்ல, நல்லா யோசிங்க.”

“ஆமா பாத்ரூம் கிளீன் பண்றவங்க…”

“என்ன பாத்ரூம் ச்சீ… என்ன சார் நீங்க?” என்று அவன் எரிச்சல் அடைய,

“சார் எக்ஸாக்ட்டா என்ன வேணும்னு சொன்னீங்கனா எங்களுக்கு ஈஸியா இருக்கும்.”

“டாக்டர்ஸ்…” என்று மெல்லமாகக் கூற, தன் நண்பன் யாரைப் பற்றி கூறுகிறான் என்பதைப் புரிந்துகொண்ட ரோஹித் கேலியாக ஆஷிக்கைப் பார்க்க ஆஷிக், ரோஹித்தைப் பார்த்து அசடு வழிந்தவாறு நிற்க, சந்தீப் அவன் கேட்ட ஃபைலை எடுத்து வந்து கொடுக்க, ஒவ்வொன்றாகப் பேருக்கு புரட்டியவன் ஜியாவின் ப்ரொஃபைல் வந்தவுடன் நேராக அவளது பெயரைப் பார்க்க, வெறும் ஜியா என்று மற்றும் இருக்க, பின்பு பெர்சனல் டீடைல்ஸ் பக்கம் பார்க்க, அவளுக்கு மட்டும் எதுவும் இல்லாமல் இருக்க, 

“என்ன பர்சனல் டீடெயில்ஸ் எதுவும் இல்ல?”

“அது அவங்க இப்போதான் ஜாயிண்ட் பண்ணினாங்க, நாளைக்குத் தரேன்னு சொன்னாங்க.” என்று சந்தீப் கூற,

எரிச்சலோடு சோபா மீது அமர்ந்தான். பின்பு அங்கிருந்து எழும்பியவன் ஃபைலை எடுக்க, “தம்பி விடுங்க, நான் பார்த்துக்கிறேன்.” என்று கூற, 

“சரி சார்” என்று கூறிவிட்டு அங்கிருந்து நடையைக் கட்ட,

அப்பொழுது சந்தீப், “ஆஷிக்!” என்று அழைக்க,

“ம்ம் சொல்லுங்க சார்.”

“ஜியா மேடம்கு இன்னும் கல்யாணம் ஆகலை, அவங்க இன்னும் சிங்கிள்தான். கிரீன் வில்லா ரெஸிடென்ஷியல் அபார்ட்மெண்ட்லதான் இருக்காங்க.”

“இதையெல்லாம் ஏன் என்கிட்ட சொல்றீங்க?”

“தெரியும் தம்பி, இதுதான்னா ஃபோன்லையே கேட்டிருக்கலாம்.” என்று அவர் கூற, “சாரி அங்கிள்” என்று அசடு வழிந்தவன், தன்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ரோஹித்திடம், 

“பார்த்தியாடா, என்கிட்ட கல்யாணம் ஆகிட்டுனு பொய் சொல்லிருக்கா. ஆனா நான்தான் கண்டுபுடிச்சுட்டேனே…” என்று கண்சிமிட்ட, 

அவனைப் பார்த்து முறைத்த ரோஹித், “கொஞ்சமாவது உனக்கு மனசாட்சி இருக்காடா? அவளுக்குக் கல்யாணம் ஆகிட்டானு தெரிஞ்சிக்கவாடா எங்க எல்லாருடைய தூக்கத்தைக் கெடுத்த? டேய் இன்னைக்கு அவ உன் கூடத் தானே டெல்லி ஃப்ளைட்ல வந்தா, பேசஞ்சர் லிஸ்ட்டை பார்த்திருப்ப தானடா, ஏன்டா சாகடிக்கிற?” என்று புலம்பிய ரோஹித்தின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளியவன், 

“சாரிடா செல்லம், கோபப்படாதடா.” என்று கொஞ்ச, ரோஹித் ஆஷிக்கிடம்,

“கொஞ்சினதெல்லாம் போதும், என்னடா நடக்குது?” என்று கேட்க, அவன் கேட்ட எதையும் தன் காதில் வாங்காதது போல, 

“சரிடா நாளைக்குப் பார்ப்போம், நல்லா தூங்கு பாய்.” என்று கூறி, ரோஹித்தைப் பார்த்து கண்சிமிட்டியவாறே அங்கிருந்து கிளம்பினான். 

அவன் சென்றதும் ரோஹதித், ‘நீ சந்தோஷமா இருக்கிறத பார்க்கும் பொழுது எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்குடா. ஆனா, மறுபடியும் நீ கவலைப்படுற மாதிரி எதுவும் நடத்துற கூடாது. இதே சந்தோஷம் எப்பவும் நிலைக்கணும்டா.’ என்று தன் மனதிற்குள் ஆஷிக்கை நினைத்து கவலை கொண்டிருக்க, ஆனால் ஆஷிக்கோ இது எதைப் பற்றியும் யோசிக்காமல், புன்னகை தன் முகத்தில் தாண்டவம் ஆட, ஜியாவிற்குக் கல்யாணம் ஆகாததை எண்ணி சந்தோஷமாக இருந்தான். 

காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது, அவள் கூறிய வார்த்தைகள் எல்லாம் அவனுக்கு நினைவிற்கு வர, “ரெண்டு குழந்தைங்களா? ம்ம்… கிரீன் வில்லா ரெஸிடென்ஷியல் அபார்ட்மெண்ட் தானே, இதோ வரேன்டி…” என்றவன், சில மணி நேரத்தில் அபார்ட்மென்டின் வாயிலை அடைந்தான்.

ஆஷிக் அபார்ட்மென்டின் உள்ளே செல்வதைப் பார்த்த வாட்ச்மேன், “சார் இந்த நேரத்துல எங்க போறீங்க, நீங்க யாரு?”

“நான் இந்த அபார்ட்மெண்ட்…” என்று அவன் முடிப்பதற்குள்,

“நீங்க இந்த அபார்ட்மெண்ட் இல்லையே?” என்றவரிடம்,

“ஆமா, இல்லை… நான் இந்த அபார்ட்மெண்ட் இல்லை. நான் பக்கத்து அபார்ட்மெண்ட்.” என்று உள்ளே செல்ல போனவனை தடுத்தவர், 

“சார் எங்க போறீங்க? யாரை பார்க்கணும்?”

“ஜியா… ஜியாவ பார்க்கணும்.”

“அவங்களை எல்லாம் இப்போ பார்க்க முடியாது. காலையில…” என்பதற்குள் ஆஷிக் அவனுக்கு ரெண்டாயிரம் ரூபாய் நோட்டை நீட்டி, “இப்போதும் நான் காலையிலதான் வரணுமா?”

“இல்ல சார், இது உங்க அபார்ட்மெண்ட். எப்ப வேணும்னாலும் வரலாம்.” என்று அசடு வழிய,

“சரி அவங்க எந்த ப்ளாக்?”

“இது உள்ள போறதுக்கு மட்டும்தான் சார்.” என்று அவன் தலையைச் சொரிய, அவன் என்ன எதிர்பார்க்கிறான் என்பதை உணர்ந்த ஆஷிக், மறுபடியும் இன்னொரு ரெண்டாயிரம் ரூபாய் நோட்டை நீட்ட, 

“பி பிளாக், டவெல்த் ப்ளோர், நம்பர் 75.” என்று ஒப்பிக்க, 

அவன் ஆஷிக்கைப் பார்த்து, “சார் அடிக்கடி வாங்க.” என்று கூற, இவன் சிரித்தவாறே உள்ளே சென்றான். 

ஜியாவின் இல்லத்தில்…

“என்ன டாக்டர் சொல்றீங்க, நான் ப்ரக்னென்டா இருக்கேனா? இது எப்படி முடிஞ்சிது?” என்ற பெண்மனி மயங்கி விழ, சிறிது நேரத்தில் பெட்டில் மயக்க நிலையில் இருந்த பெண் கண் முழித்து, 

“ஏன் இப்படிப் பண்ணுனீங்க?” என்ற கேட்டுவிட்டு மீண்டும் மயக்க நிலையை அடைய, யாரோ இருவர் ஜியாவைப் பின்னால் இருந்து தள்ளிவிட்டனர். 

அங்கே வந்த ஆஷிக் அவளது வீட்டின் காலிங் பெல்லை அழுத்த ஜியா, “நோ, என்னை விட்ருங்க.” என்று பயத்தில் கத்த, 

முகமெல்லாம் வியர்த்த நிலையில் இருந்தவளுக்கு அப்பொழுதான் தான் கண்டது அனைத்தும் கனவு என்று புரிய, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் தன் அருகில் இருந்த தண்ணீரை எடுத்து அருந்திக்கொண்டிருக்க, காலிங் பெல்லின் சத்தம் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. 

சத்தத்தைக் கேட்டவள் சுவற்றில் இருந்த கடிகாரத்தைப் பார்க்க, அது சரியாக மணி பன்னிரெண்டை காட்டியது. 

“இந்த நேரத்துல யாரா இருக்கும்?” என்றவாறு கதவின் அருகில் சென்றவள், 

“வரேன்…” என்றவாறு சிறு தயக்கத்துடன் கதவை லேசாகத் திறந்தவள், செக்யூரிட்டி லென்ஸ் வழியாகப் பார்க்க, 

ஆஷிக், “ஹாய்!” என்று புன்னகைக்க,

“நீயா?” என்று ஜியா எரிச்சல் அடைய,

“ஆமா நான்தான்…” என்ற ஆஷிக்கிடம் கோபமாய்,

“என்ன வேணும்?” என்று ஜியா கேட்டாள். 

“உன் குழந்தைங்களைப் பார்க்கலாம்னு வந்திருக்கேன்.”

“இப்போவா? அவங்க தூங்குறாங்க.”

“நான்தான பார்க்க போறேன்.”

“ஆஷிக், நான் திறக்க மாட்டேன், வெளியவே கிட.” என்று கதவை மூட போனவளைப் பார்த்து,

“சரி, இப்போ நீ திறக்கலைனா நான் கத்தி ஊரை கூட்டுவேன். உனக்கு ஓகேனா எனக்கும் ஓகே.” என்று கத்த,

உடனே ஜியா கதவைத் திறந்து ஆஷிக்கை உள்ளே இழுத்து கதவை சாற்றினாள். 

“என்ன வேணும் உனக்கு?”

“ஜியா, சாரி சாரி… மிஸ்ட்டரஸ் ஜியா கார்த்திக் சரியா? உங்க குழந்தைங்களை எங்க? தூங்கிட்டாங்களா?”

“இப்போ நீ வெளிய போகப்போறியா, இல்லையா?” என்று அவள் கூற, அதைப் பொருட்படுத்தாதவன் மேலும் முன்னேற, தன் கரங்கள் கொண்டு அவனைத் தடுக்க, புன்னகைத்தவன் சட்டென்று அவளைப் பார்த்து கண்ணடித்துவிட்டு, அறையின் கதவைத் திறக்க மெத்தை வெறுமையாகய் இருந்ததைக் கண்டு, 

“என்ன குழந்தைங்க நைட் ஸ்டடி பண்ண போயிருக்காங்களா?”

“அது வந்து… அவங்க…”

“அவங்க…”

“எப்படி எப்படி… பெரியவன் ஃபர்ஸ்ட் படிக்கிறான், சின்னப் பொண்ணு LKG செம… ஆனா பேபி, ஞாபகம் இருக்கா லவ் பண்ணும் போது நீ பையன் மட்டும் போதும்னு சொன்ன, நான்தான் பையன், பொண்ணு ரெண்டு பேரும் வேணும்னு சொன்னேன். கடைசில என் டெசிஷன்கு மாறிட்ட போல?”

“ஷட் அப்!”

“ஓகே ஜியா, நீ இந்த மாதிரியெல்லாம் ட்ராமா பண்ணி என்ன ப்ரூவ் பண்ணணும்னு நினைக்கிற? நீ இந்த மாதிரியெல்லாம் சொன்னா நான் ஜெலஸ் ஆவேன்னு நினைக்கிறியா?”

“நான் நினைக்கிறது என்ன, அதான் உன் முகத்திலேயே தெரியுதே?”

“ஸோ, உனக்கு என்னைப் பத்தி எந்தக் கவலையும் இல்லைனு சொல்ற?”

“கண்டிப்பா.”

“அப்படினா என் கண்ணைப் பார்த்து சொல்லு, நான் நம்புறேன்.”

“ஆஷிக் எனக்கு உன்னைப் பத்தி எந்தக் கவலையும் இல்லை, நான் எப்பவோ மூவ் ஆன் பண்ணிட்டேன்.” என்று ஜியா அவனது கண்ணைப் பார்த்து கூற,

ஆஷிக், “நான் நம்ப மாட்டேன்.”

“லுக், நீ மூவ் ஆன் பண்ணலனா நான் ஒன்னும் பண்ண முடியாது.”

“பொய் சொல்ற, நீ மூவ் ஆன் பண்ணல. நீ மூவ் ஆன் பண்ணிருந்தா, இன்னும் ஏன் கல்யாணம் பண்ணிக்காம தனியாவே இருக்க?”

“யார் சொன்னாங்க, தனியா இருக்கேன்னு? எனக்குக் கல்யாணம் ஆகல, ஆனா எனக்குப் பாய் ஃப்ரெண்ட் இருக்காங்க. நான் மூவ் ஆன் பண்ணிட்டேன்ங்கிறது உண்மைதான். அதை நீ ஏத்துக்கிட்டுதான் ஆகணும்.” என்று அவள் செல்ல போக அவளது கரம் பிடித்திழுத்தவன், 

“உன் லைஃப்ல வேற ஒருத்தன் இருக்கான்னு நீ சொல்றத நான் நம்பணும், நல்லாவே பொய் சொல்ற. ஆனா அதை கொஞ்சம் உன் கண்ணுக்கும் சொல்லிக் குடு. பாவம், அதால பொய் சொல்ல முடியலை. இப்பவும் உன் கண்ல எனக்கான காதலை நான் பார்க்குறேன். எப்படி உனக்கான காதல் என் கண்ல தெரியுதோ, அதே மாதிரி.”

“முட்டாள் தனம்…”

“இல்லை, இதுதான் உண்மை. ரெண்டு பேருமே உண்மையா காதலிச்சோம்னு உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும். என்னால மூவ் ஆன் பண்ண முடியலைனா உன்னாலையும் பண்ண முடியாது.”

“உண்மை அதுவும் உன்கிட்ட? ஆஷிக், நான் மூவ் ஆன் பண்ணிட்டேன்.”

“அப்படியா? இத்தனை வருஷம் கழிச்சு என்னைப் பார்க்கும் போது உனக்கு ஒன்னுமே தோனலை?”

“இல்லை”

“நான் உன்னைச் சுத்தி சுத்தி வரும் போது உனக்கு எதுவும் தோனலை?”

“இல்லை”

“உன்கிட்ட நெருக்கமா வரும் போது கூடவா?”

“இல்லை… இல்லை… எத்தனை தடவை சொல்றது, எனக்கு எந்தப் பீலிங்ஸும் இல்லை.” என்றாள் அழுத்தமாக.

“அப்படியா? அப்போ நிரூபிச்சு காட்டு.”

“சரி, என்ன பண்ணணும்?”

“பத்து நிமிஷம் நீ என் கண்ணை மட்டும் பார்க்கணும்.”

“சரி” என்று அவள் அவனது கண்ணையேப் பார்க்க,

அவன் ஒவ்வொரு அடியாக அவளை நோக்கி முன்னேறி வர, தனக்குள் ஏற்பட்ட படபடப்பை அவள் வெளிகாட்டாமல் நின்ற இடத்திலே நிற்க, இருவருக்கும் இடையே நூலளவு இடைவெளி மட்டுமே இருந்தது. 

“இப்போ கூட உனக்கு எதுவுமே தோனலையா?”

“இல்லை…” என்றாள். ஆனால் முன்பை விட இந்த முறை அழுத்தத்தில் சிறிது தளர்வு. 

அவன் மெல்ல அவளது கரத்தைத் தன் கரம் கொண்டு கோர்க்க, அவளது பார்வை சற்று கீழே செல்ல, ‘நோ, லுக் இன் டூ மை ஐஸ்.’ என்று அவன் செய்கை செய்ய,

இவளது இதயத் துடிப்பின் வேகம் இன்னும் அதிகரிக்க, கோர்த்த அவளது கைகளை மெல்ல தன் இதழால் ஒற்றி எடுத்தவன், 

முன்னால் கிடந்த அவளது கேசத்தை ஒதுக்கிவிட்டு மெல்ல அவளது கழுத்தின் மிக அருகில் சென்று இதழ் பதிக்க, அவ்வளவுதான், அவனது காதுக்கு கேட்கும் அளவிற்கு அவளது இதயத் துடிப்பின் வேகம் கூடியது.

“இப்பவும் ஒன்னும் தோனலையா?” என்ற அவனது கேள்விக்குப் பதில் சில நொடிகள் கழித்து அதுவும் மெல்லமாக விட்டு விட்டு, “இல்… லை…” என்று வர, 

லேசாய் புன்னகைத்தவன் மேலும் அவளை நெருங்க, அவளை அறியாமலே அவளது கால்கள் பின்னோக்கி சென்று சுவற்றின் மீது மோதி நிற்க, தன் இருக்கரங்களைச் சுவற்றின் மீது வைத்து ஜியாவின் முன்னால் வந்து நின்றவன், 

தன் விரல் கொண்டு அவளது முகத்தில் வருட, ஆஷிக்கின் வருடலால் ஏற்பட்ட ஸ்பரிசத்தில் மேனி சிலிர்த்தவள், தன் இரு கண்களையும் மூட,

“நோ, ஐஸ் ஓபன்.” என்ற ஆஷிக், 

மெல்ல தன் இதழை குவித்து அவளது கன்னத்தை நோக்கி ஊத, மேனி சிலிர்த்தவள் தாபமாய், “ஆஷிக்!” என்று மென்மையாகக் கூற, இவளது பெண்மையின் மென்மையில் தன் ஆண்மையைத் தொலைத்து மெல்ல கிறங்கியவன், அவளது கன்னங்கள் உரசியவாறு அவளது காது மடல்களில் அவளுக்கு மட்டும் கேட்குமாறு, “என்ன?” என்று கிசுகிசுக்க, 

“பத்து நிமிஷம்…” என்று அவள் கூறியதில் லேசாக சிரித்தவன்,

“இன்னும் தர்ட்டி செகண்ட்ஸ் இருக்கு.” என்று கூறி அவளது கன்னங்களை உரசியவாறே,

“இன்னும் உனக்கு எதுவும் தோனலையா?” என்றவனது கேள்விக்கு அவளிடம் இருந்து எந்தப் பதிலும் வராமல் போக, புன்னகைத்தவாறே மெல்ல அவளது இதழ் நோக்கி குனிய, அதைத் தடுக்க நினைத்த அவளது மூளையை, அவளது உணர்வுகள் வெல்ல தன் கண்களை மட்டும் இறுக்கமாக மூடிக்கொண்டாள். 

சிறிது நேரம் அதை ரசித்தவன், அவளது மூக்கின் நுனியை தன் விரல் கொண்டு தட்ட, சட்டென்று தன் கண்களைத் திறந்தவள் அவனைப் பார்க்க, 

“பத்து நிமிஷம் முடிஞ்சிருச்சு, எனக்கான பதிலும் கிடைச்சிருச்சு.” என்று கண்சிமிட்டிய ஆஷிக்கை, ஜியா வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்க, இருவரின் விழிகளும் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொள்ள, அவர்களது மோன நிலையைக் கலைக்கும் விதமாய் ஜியா வீட்டின் கதவை ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு தம்பதியர் தட்டினர். 

***

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!