ஜியாவிற்கு உள்ளே டாக்டர்கள் ட்ரீட்மெண்ட் அளித்துக் கொண்டிருக்க, வெளியே ஆஷிக் சுவற்றில் சாய்ந்துகொண்டு தன் கண்களை மூடியவாறு, சற்று முன்பு ஜியா கூறியதையே நினைத்துக் கொண்டிருந்தான்.
அவனது காதில் அவள் கடைசியாக, “என்னை விட்டு போகாத ஆஷிக்…” என்ற கதறிய வரி மட்டும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்க, இன்னும் அவனுக்கு ஜியா மீதுள்ள காதல் குறையவில்லை என்பதற்கு ஆதாரமாக அவனது கண்களில் வழிந்த நீரே சாட்சி ஆகும்.
தியா ஆஷிக்கிடம், “ஆஷிக் அதான் ஹாஸ்பிடல் வரை கொண்டு வந்து விட்டுட்டோம்ல, அவ வீட்ல உள்ளவங்ககிட்ட சொல்லிட்டு நாம கிளம்புவோம்.” என்று கூற,
ஆனால் அவள் கூறிய எதையும் தன் காதில் வாங்காத ஆஷிக், ஜியாவைப் பற்றிய கவலையிலே மூழ்கியிருந்தான்.
நண்பனின் மனதைப் புரிந்து கொண்டவனாய் ஆதர்ஷ் எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க, ஆஷிக்கின் அமைதி தியாவின் கோபத்தை மேலும் அதிகரித்தது. வெளியே வந்த டாக்டரிடம் ஆஷிக்,
“ஜியா உடம்புக்கு எந்த ஆபத்தும் இல்லையே?” என்று பதற்றம் ததும்ப கேட்டான்.
“இல்லை, அவங்க நல்லா இருக்காங்க. பேஷண்ட்டுக்கு நீங்க என்ன வேணும்?”
“நான் அவளோட ல…” என்றவனைத் தடுத்த தியா, “கூட ஒன்னா வேலை பார்க்கிறோம்.” என்று கூறி, ஆஷிக்கை கோபமாக பார்க்க அவனும் தயக்கத்துடன் ஆமாம் என்பதைப் போலத் தன் தலையை மட்டும் அசைத்தான்.
“வீட்டுக்கு தகவல் சொல்லிட்டீங்களா, பேஷண்டுக்கு சொந்தகாரங்க யாரும் வரலையா?”
“இல்லை, எதுவா இருந்தாலும் என்கிட்டயே சொல்லுங்க. அவங்க வீட்ல எல்லாரும் மும்பையில் இருக்காங்க, ஜியா உடம்புக்கு எந்தப் பிரச்சனை இல்லைல? அவங்க நல்லாதானே இருக்காங்க.” என்று ஆஷிக் மீண்டும் பதற்றமாய் கேட்க,
அதற்கு மருத்துவர், “அவங்க ரொம்ப ஸ்ட்ரெஸா இருக்காங்க. சரியா தூங்காம, சாப்பிடாம, மெண்டலி டிஸ்டர்பா இருக்காங்க. இப்போதைக்கு அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும், நான் எழுதி தர்ற மாத்திரையைக் குடுங்க. நல்லா தூங்கி ஓய்வு எடுத்தாலே எல்லாம் சரியாகிரும்.” என்று அவர் கூறிய பின்பே ஆஷிக்கிற்கு அவனது உயிர் அவனிடம் மீண்டும் வந்தது போல இருந்தது. அதுவரை வெட்டப்பட்ட கிளை போல உளர்ந்திருந்தவன், டாக்டர் ஜியாவின் உடலுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று சொன்ன பிறகே நிம்மதியடைந்தான்.
ஆதர்ஷ், “ரிலாக்ஸ் ஆகு, அதான் டாக்டர் எந்தப் பிரச்சனையும் இல்லனு சொல்லிட்டாங்கல்ல?”
“ஆமாடா, இப்போதான் நிம்மதியா இருக்கு. கொஞ்ச நேரத்துல பயம் காட்டிட்டா, சரி நீ தியாவை கூட்டிட்டு இங்க இருந்து கிளம்பு, நான் ஜியா கண் முழிச்சதும் டாக்டர்கிட்ட பேசிட்டு அவளோட வரேன்.” என்று கூற,
“சரிடா பார்த்துக்கோ, எதுவும்னா கால் பண்ணு.” என்று தன் நண்பனிடம் விடைபெற்றவன் தியாவிடம், “கம் ஆன் தியா, நான் உன்னை ட்ராப் பண்ணிடுறேன்.”
“நீ போ ஆதர்ஷ், நான் இப்போ வந்திருவேன்.” என்றவள் ஆஷிக்கைப் பார்க்க, அவனோ தியா தன்னையே பார்ப்பதை உணர்ந்து அவள் எதுவும் கூறுவதற்குள்,
“ப்ளீஸ் தியா நீ கிளம்பு, இப்போ நீ என்ன கேட்டாலும் அதுக்கு என்கிட்ட சுத்தமா பதில் இல்லை.” என்று இயலாமையோடு அவன் கூற, தன் கோபத்தைக் கட்டுப்படுத்தியவாறு தியா,
“ஆனா ஆஷிக்…”
“ப்ளீஸ்…” என்றவன் நேராக உள்ளே சென்று ஜியாவின் அருகில் அமர்ந்துகொண்டு, அவளது கையைத் தன் மார்போடு வைத்து மெல்ல அவளது கேசத்தைக் கோதி விட்டவாறு, அவளது உச்சந்தலையில் தன் இதழைப் பதித்தான்.
இதைக் கண்ட தியா, “ச்ச… போற போக்க பார்த்தா இவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்திருவாங்க போலையே? இவங்க மட்டும் ஒன்னு சேர்ந்துட்டா எல்லாமே கெட்டு போயிடும். இவங்க பிரிஞ்சதுக்கு நான் காரணம்னு மட்டும் ஆஷிக்குக்கு தெரிஞ்சா? அப்புறம் அவன் மொத்தமா என்னை விட்டு விலகிருவான். நான் எதாவது ஒன்னு பண்ணணும்.” என்று கோபமாய் கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்.
கனவில் யாரோ தன்னை நெருங்கி வருவது போலத் தோன்ற, சட்டென்று விழித்த ஜியா படுக்கையில் இருந்து எழும்ப முயற்சிக்க, அந்த நேரம் பார்த்து வெளியே சென்றிருந்த ஆஷிக் உள்ளே வர அவள் எழுந்திருக்க முடியாமல் கஷ்டப்படுவதைப் பார்த்து,
“ஏய் என்ன பண்ற?” என்றவாறு அவளது அருகில் வந்தவன்,
“என்னடி பண்ற? இதுவரை பண்ணுனதெல்லாம் போதாதா? இப்போ நீ எதுவும் பண்ண வேண்டாம், ஜஸ்ட் டேக் ரெஸ்ட் ஓகே!” என்றவாறு ஆஷிக் மீண்டும் அவளைப் படுக்க வைக்க முயற்சி செய்ய,
அவனைத் தடுத்தவள், “ஆஷிக் இங்க அது…” என்று எதோ கேட்க,
“எதுவும் சொல்ல வேண்டாம் இப்போ உனக்கு ரெஸ்ட் தேவை. மற்றது எல்லாம் அப்புறம் பேசிக்கலாம், முகம் எல்லாம் எப்படி வியர்த்திருக்குனு பாரு ரெஸ்ட் எடு.”
“இல்ல, நான்… அதுவந்து… உன்கிட்ட ஒன்னு சொல்லணும்…” என்று பதற்றமாகக் கண்களில் நீர் வழிய கூறியவளை,
ஆஷிக் ஆறுதலாய் தலையைக் கோதி, கண்களின் நீரை துடைத்துவிட்டு அவளது முகத்தைத் தன் இரு கரங்களில் ஏந்தி
“ஓகே ஓகே, சொல்லு, என்ன சொல்லணும் ம்ம்…” என்றவாறு அவளது கலைந்த கேசத்தைச் சரி செய்தவாறே, தனது புருவம் உயர்த்தி, “என்ன?” என்று கேட்க,
“அதுவந்து ஆஷிக்…” என்றவாறு சற்று நேரம் அவனது கண்களைப் பார்த்தவள்,
“நான் கொஞ்ச நேரம் உன் மேல சாஞ்சிக்கலாமா?” என்று கண்ணீர் மல்க கேட்க,
சில நொடிகள் அவளது கண்களையே உற்று பார்த்தவன் கண்ணிமைக்கும் நொடிக்குள், தன் அகன்ற கரங்களுக்குள் தன்னவளை தன் மார்போடு சேர்த்து இறுக்க அணைத்துக்கொண்டான்.
சில மணிநேரம் கழித்து ஆஷிக், ஜியாவின் கேசத்தைக் கோதி விட்டவாறே, “ஆர் யு ஓகே? எதுவா இருந்தாலும்…” என்று தொடரவும்,
அவனது மார்போடு ஒன்றியவாறே நிமிர்ந்தவள் தன் விரல் கொண்டு அவனது இதழை மூடி, “ப்ளீஸ் டோன்’ட்…” என்று கூறி மீண்டும் அவனது மார்பில் தன் தலை வைத்துச் சாய்ந்துகொள்ள, தன் இதழோரம் புன்னகைத்தவன் எதுவும் கூறாமல் அவளது தலையை மட்டும் ஆறுதலாய் வருடி கொண்டிருந்தான். அவனது அணைப்பின் ஸ்பரிசத்தில் தன் சோகத்தை எல்லாம் தற்காலிகமாய் மறந்து சிறு குழந்தையைப் போலக் கவலை இன்றி, அவனது வருடலில் தன் காயத்திற்கு மருந்து தேடிக்கொண்டிருந்தாள் ஜியா.
நொடிகள் நிமிடங்களாக நிமிடங்கள் மணிநேரமாய் கரைந்தோட, அவனது மார்பில் தன் முகத்தைப் புதைத்திருந்தவள், ஏனோ சட்டென்று அவனை விட்டு விலக, இந்தமுறை அவளது கண்களில் நீர் வழிந்தாலும் முகத்தில் ஏதோ சிறு தைரியம், ஒருவித தெளிவு.
“ஆர் யு ஓகே?” என்றவனை, நேருக்கு நேராகக் கூடப் பார்க்காதவள்,
“ம்ம்…” என்று மட்டும் கூறி அங்கிருந்து கிளம்ப,
“ஏய் பார்த்து, எங்க போற நீ? ரெஸ்ட் எடுக்கணும்.”
“நான் வீட்டுக்கு போகணும்.”
“சரி அட்லீஸ்ட் நான் ட்ராப் பண்ணவாது செய்றேன்?”
“ஆஷிக் ஐ வாண்ட் டு பீ அலோன் ப்ளீஸ்…” என்றுவிட்டு அவனை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் அங்கிருந்து வேகமாய் நடக்க,
“ஏய் நில்லு, உன்னோட ஹாண்ட் பேக், அப்புறம் மொபைல்.” என்று அவன் கூற, சட்டென்று திரும்பியவள் அவனது கையில் இருந்து அதை வாங்கிவிட்டு, அவனைச் சரியாகக் கூடப் பார்க்காமல் அங்கிருந்து சென்றாள்.
அவளது இந்த விசித்திரமான செய்கையைக் கண்ட ஆஷிக் மிகவும் குழம்பினான். அவனது உள்ளத்தில் ஆயிரம் கேள்விகள் எழ, தீவிரமாய்ச் சிந்தித்தவனுக்கு டாக்டர், ஜியா ஸ்ட்ரஸாக இருப்பது பற்றிக் கூறியது நினைவிற்கு வர, எழுந்த எல்லாக் கேள்விகளுக்கும் இதைப் பதிலாய் கூறி தன் மனதின் குழப்பத்திற்கு விடை கொடுத்தவன்,
“ஒழுங்கா தூங்கி ரெஸ்ட் எடுக்கணும், எப்பவும் என்னையே திட்டிட்டு இருந்தா இப்படித்தான். ஒரு செகண்ட்ல என் கண்ணையே வியர்க்க வச்சுட்டா…” என்று முனங்கியவன், அங்கிருந்து நேராகத் தன் இல்லத்திற்குச் சென்றான்.
இரவு ஒரு எட்டரை மணியளவில், தன் டின்னரை முடித்துவிட்டு டைனிங் டேபிளை விட்டு அகல இருந்தவளை தடுக்கும் விதமாக,
‘கனவெல்லாம் நீ தானே விழியே உனக்காக உயிரானேன்
நினைவெல்லாம் நீ தானே’ என்ற பாடல் மொபைலில் இருந்து கேட்க,
“இது என்னோட ரிங் டோன் இல்லையே?” என்றவாறு ஃபோனை எடுத்து பார்த்தவளின் கண்ணில், தியா ஃப்ரெண்ட் காலிங் என்று வர, அதை அப்படியே அட்டென்ட் செய்யமல் விட்டவளுக்கு ஸ்க்ரீன் சேவரில் ஆஷிக்கின் புகைப்படத்தைப் பார்த்த பிறகே, தான் அவசரத்தில் தவறுதலாக ஆஷிக்கின் மொபைலை எடுத்து வந்தது புரிந்தது.
மீண்டும், ‘கனவெல்லாம் நீ தானே…’ என்ற பாடல் இசைக்க, ஃபோனை கட் செய்யப் போனவளின், கைவிரலை ஏனோ அவளது உள்ளம் தடுக்க, அலையென அடித்த தன் பழைய நினைவுக்குள் தன்னையும் மறந்து சுகமாய் அடித்துச் செல்லப்பட்டாள் ஜியா.
***
பூங்காவில் உள்ள மரத்தடி ஒன்றில் ஜியா, ஆஷிக்கின் மார்போடு சாய்ந்தவாறு ஹெட் போனில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருக்க,
அப்பொழுது ஆஷிக், “ஏய் எவ்வளவு கஷ்டப்பட்டு மீட் பண்ணிருக்கோம். என்னைக் கவனிக்காம அப்படி என்ன பாட்டு கேட்டுட்டு இருக்க? அதைக் குடு.”
“இதைக் கேட்டாலும் உனக்கு அவ்வளவா புரியாது, இது தமிழ் சாங்.”
“ஓ…”
“கனவெல்லாம் நீ தானே, விழியே உனக்காக உயிரானேன்… எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்ச சாங், ரொம்ப புடிக்கும். பிடிச்ச சாங் நிறையா இருக்கு, ஆனா இது ஸ்பெஷல்.”
“அப்படியா? அப்போ நான்…” என்று தாபமாக நெருங்கி தன் இதழை வசப்படுத்த வந்த தன்னவனின் கன்னங்களைக் கிள்ளி,
“நீயும்தான், சரி உன் ஃபோனை குடு.”
“ஏன்?”
“குடு”
“இந்தா, என்ன பண்ற?”
“வெயிட், நான் கால் பண்றேன் உனக்கே புரியும்.”
“என்னடி, இந்த போரிங் சாங்க போய் என் மொபைல்ல ரிங் டோனா வச்சுருக்க?”
“ஆஷிக்…”
“சரிடா, நல்ல சாங்தான் கொஞ்சம் போரிங்கா இல்லை…”
“அதெல்லாம் தெரியாது, நமக்குக் கல்யாணம் ஆகி குழந்தை பிறந்து அவங்க எல்லாரும் வளந்து நமக்குப் பல்லெல்லாம் போயி சாகுற நிலைமைக்கு வந்தாலும், உன் மொபைல்ல இந்த சாங்தான் ரிங் டோனா இருக்கணும். யாரு உனக்குக் கால் பண்ணினாலும் உனக்கு என் ஞாபகம் வரணும், இன்க்ளூடிங் யுவர் கேர்ள் ஃப்ரண்ட்ஸ்.” என்று செல்லமாய் உத்தரவு போட்டவளைக் கண்டு புன்னகைத்து, தன் நெற்றிக் கொண்டு அவளது நெற்றியை முட்டி, “ஓகே டன்!” என்று கண்சிமிட்டியவன், அவளது கண்களை உற்று நோக்கி,
“உன் கண்ணு எதோ சொல்லுதே…”
“அப்படியா, என்ன சொல்லுது?”
“ஒரு நிமிஷம்!” என்றவன் தன் செவியை அவளது கண்களின் அருகே கொண்டு சென்று,
“ஓகே சரி.” என்று தன் தலையை ஆட்டிவிட்டு ஜியாவைப் பார்க்க,
“என்ன சொல்லுச்சு என் கண்ணு?” என்று விழி விரித்தவளைப் பார்த்து,
“அது என்ன சொல்லுச்சுன்னா…” என்று அவன் அவளை நெருங்கி வர ஜியா, ஆஷிக்கின் கரத்தில் நறுக்கென்று கிள்ள,
“ஆ…” என்று கத்தியவாறு, “வலிக்குதுடி” என்று பாவமாய் சொல்ல, அவனது மூக்கைப் பிடித்து ஆட்டியவள், அவனது இருக்கரங்களையும் எடுத்து தன் மீது போட்டுகொண்டு, தன்னவனது மார்போடு இடைவெளியில்லாமல் சாய்ந்து, தன் ஐவிரலோடு அவனது ஐவிரல்களையும் கோர்த்துக்கொண்டு,
“ஆஷிக்!”
“ம்ம்…”
“நீ தமிழ் சாங் கேட்ருக்கியா?”
“ம்ம் கொஞ்சம்… அதுவும் உன்னை லவ் பண்ணினதுக்கு அப்புறம்.”
“எது ரொம்பப் பிடிக்கும்?”
“அதிகமா கேட்டதில்லை, ஆனா ஒன்னே ஒன்னு ரொம்பப் பிடிக்கும்.”
“அது என்ன சாங்னு சொல்லு, நான் அதை என் ரிங்டோனா வைக்கிறேன்.” என்று ஆர்வமாய் நிமிர்ந்து பார்த்தவளை,
“அதை நீ ரிங்டோனாலாம் வைக்க வேண்டாம், ஜஸ்ட் அதுல உள்ள மாதிரி நடந்துக்கிட்டா போதும்.” என்றவன் கள்ள பார்வையுடன் விஷமமாய்ச் சிரிக்க,
“ம்ம் சொல்லுடா” என்றவளை தன் பக்கம் இறுக்கமாக அணைத்துக்கொண்டு அவளது காதில் மட்டும் கேட்க்குமாறு, “கட்டிப்பிடி கட்டிப்பிடிடாடா… என்ன ரெடியா இருக்கியா?” என்று கண்ணடிக்க,
“போடா பொறுக்கி” என்று செல்லமாய் முறைத்தவளைப் பார்த்து,
“நான் பொறுக்கியாடி?” என்றவாறு அவளது காதில் செல்லமாகத் தன் தாடி கொண்டு உரச,
“ஆஷிக் விடு.” என்றவாறு அவள் ஓட, அவன் அவளைப் பின்தொடர்ந்தான்.
***
அதை நினைக்கும் பொழுதே ஜியாவின் கண்களில் மகிழ்ச்சி பொங்கியது. தன் கடந்தகால நிகழ்வில் இருந்து வெளியே வந்தவள், அதை நினைத்து புன்னகைக்க அதைக் கலைக்கும் விதமாய் தியாவிடம் இருந்து மீண்டும் அழைப்பு வர சோகமான ஜியா,
“ஆஷிக் நீ உண்மையாகவே என்னைக் காதலிச்சியா? இல்லையா? உண்மையாகவே என்னை நீ காதலிச்சிருந்தா ஏன் எனக்கு அப்படி ஒரு துரோகம் பண்ணின? இந்த நிமிஷம் வர வெறும் வார்த்தைக்காக உன்னை வெறுக்கிறேன்னு சொன்னாலும், மனசுல இருந்து என்னால சொல்ல முடியலை. உன்னை என் பக்கத்துலயே வச்சுக்கணும் போல இருக்கு, உன் நெஞ்சோட சாஞ்சி அப்படியே என் மனசுல உள்ளதெல்லாம் சொல்லி அழணும். நீ என்கூட இருக்கும் போது எனக்கு அவ்வளவு நல்லா இருக்கு.” என்றவாறு தன் கண்களின் ஓரம் வழிந்த நீரை துடைத்தாள்.
***
